இந்த சங்கீதம் காலையில் ஏற்றெடுக்கப்பட்ட ஒரு ஜெப விண்ணப்பம் (வச. 3). அப்சலோமினால் ஏற்பட்ட நெருக்கடியான சூழலின் சமயத்தில் இந்த சங்கீதம் எழுதப்பட்டிருக்கக்கூடும். ஆனாலும் அதை உறுதி செய்யும்படியான குறிப்புகள் நேரிடையாக காணப்படவில்லை.
தாவீதினுடைய எதிரிகள் பற்றிய விவரணங்கள், வசனங்கள் (4-6) மற்றும் (9-10) பகுதிகளில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்புகள் மூலம் தாவீது எருசலேமிலிருந்து தப்பிச் செல்வதற்கு முந்தைய காலகட்டத்தில் இது எழுதப்பட்டிருக்கலாம். "அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே வீழ்ச்சியடையட்டும்" எனும் 10வது வசனம் (NIV), நிச்சயமாகவே அந்த நேரத்திலிருந்த பெரிய சூழ்ச்சியையும், சதியையும் புலப்படுத்துகிறது.
வசனம்-7இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆலயம் என்பதற்கான எபிரேய வார்த்தை, தேவனுடைய வீடு எனப் பொருள்படும். இதே வார்த்தை: யாத். 23:19, உபா. 23:18, யோசுவா 6:24, 1-சாமுவேல் 1:9, 3:3, 3:15 ஆகிய பகுதிகளில் தேவனுடைய கூடாரத்திற்கும் பயன் படுத்தப்பட்டுள்ளன. ஆகவே இந்த சங்கீதத்தை சாலமன் ஆலயத்தைக் கட்டிய காலத்திற்குப் பின்பாக எழுதப்பட்டது எனக் கருத வேண்டியதில்லை.
இந்த சங்கீதத்தின் தலைப்பில் நெஹிலோத் எனும் இசைக் கருவியில் பாடலை பாடும் படியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது "புல்லாங் குழல்" போன்றதொரு கருவியைக் குறிக்கிறது.
தண்டிக்கப்பட வேண்டும் என ஜெபிப்பது சரியா?
சங்கீதம் 5:10 இல் ஏற்றெடுக்கப்படும் "பழி வாங்கும் ஆண்டவரே'' எனும் ஜெப விண்ணப்பங்களின் காரணமாக இது "நீதி கோரும் சங்கீதங்களில்" ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் போலவே சங். 12, 35, 37, 58, 59, 69, 79, 83, 109, 139, 140 ஆகிய சங்கீதங்களிலும், கர்த்தர் பாவிகளை அழிப்பதற்காகக் கோபமாகக் காத்திருப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கீதங்களை எழுதிய ஆசிரியர்களும், பாவிகள் பயங்கரமான முறையில் பழிவாங்கப்பட வேண்டும் என விரும்பும் நபர்களாகக் காட்சி தருகிறார்கள்.
ஆகையால் கர்த்தரை மன்னிக்க விரும்பாத ஒரு "கொடிய கொடுமைக்காரர்" என்றோ, சங்கீதக்காரர்களை பழி வாங்க விரும்பும் ''மிருகங்கள்'' எனவோ தவறாக முடிவு செய்துவிடக் கூடாது. அதற்கு முன்பாக பல உண்மைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இதைப் புரிந்து கொள்ள, இந்த சங்கீதத்தில் விவரிக்கப்பட்ட பொல்லாத மனிதர்களிலிருந்து துவங்கலாம். அவர்கள் இறைவனுக்கு எதிராகவும், சில சந்தர்ப்பங்களில் இறைவனால் அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவுக்கு எதிராகவும் கலகம் செய்தவர்கள் (5:10).
யூதர்கள் உடன்படிக்கையின் மக்கள். அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியும் வரை பாதுகாப்பதாகத் தேவன் வாக்களித்திருந்தார் (லேவி. 26; உபா. 27-29). ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையில், இஸ்ரவேலை ஆசீர்வதித்தவர்களை ஆசீர்வதிப்பதாகவும், அவர்களைச் சபித்தவர்களைச் சபிப்பதாகவும் கர்த்தர் வாக்குறுதி அளித்தார் (ஆதி. 12:1-3).
யூதர்கள் பொல்லாத தங்கள் எதிரிகள் மீது கர்த்தர் நீதியைச் செலுத்தும்படி ஜெபித்த போது, அந்த உடன்படிக்கையின் வாக்குறுதியை நிறைவேற்றும்படி மட்டுமே கேட்டார்கள்.
ஆக "கர்த்தர் அன்பு நிறைந்தவர்" மட்டுமல்ல (1 யோவான் 4:8, 16), அவர் பரிசுத்தமானவர். அவர் ஒளி (1யோவான் 1:5). ஆகவே பாவத்திற்கு உரியத் தண்டனை தீயவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
ஆதியாகமம் 3-ல் நிகழ்ந்த மனிதனின் பாவ வீழ்ச்சிக்குப் பின்னர், உலகில் உண்மை-பொய்; நீதி-அநீதி, சரி-தவறு; இவற்றிற்கு இடையே இடைவிடாத ஒரு போர் நடந்து வருகிறது. இந்த போரை நாம் கண்டும் காணாது போல இருந்து கொண்டு நடுநிலை வகிக்க முடியாது.
யூதர்கள் கோபத்துடன் கசப்பான முறையில் எதிரிகளைச் சபித்தார்கள். அது அவர்களுக்கு விரோதமாக எதிரிகள் செயல்பட்டார்கள் என்பதற்காக கிடையாது. அது போல வெளிப்படையாக அநீதியாக நடந்து கொண்டார்கள் என்பதற்காக மட்டும் வெறுக்கவில்லை. அவர்களது கோபத்துக்கான காரணம் நீதி மற்றும் அநீதியை அவர்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டார்கள் என்பதே. கர்த்தர் பாவத்தை வெறுக்கிறார் என்பதால் அவர்களும் பாவச் செயல்களை வெறுத்தனர் என இந்த சங்கீதத்தின் விளக்கவுரையில் சி.எஸ். லூயிஸ் எழுதியுள்ளார்.
இந்த சங்கீதத்தில் காணப்படும் "கர்த்தாவே பழி வாங்கும்'' என ஏற்றெடுக்கப்படும் ஜெப விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளவர்கள் எரேமியா (11:18ff.; 15:15; 17:18; 18:19ff.; 20:11ff.), யோவான் ஸ்நானன் (மத். 3), ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து (மத். 23), பரலோகத்தின் இரத்த சாட்சிகள் (வெளி. 6:9-11).., இவர்களது ஜெப விண்ணப்பங்களையும் மனதில் கணக்கிட்டு சிந்தனை செய்ய வேண்டும். இந்த தேவனுடைய ஊழியர்கள் ஆவியானவரால் நிரப்பப்பட்டு, கர்த்தருடைய சித்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாடுபட்டவர்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
இன்றைய நமது பிரச்சனை எது என்பதை சி.எஸ். லூயிஸ் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறார்: நாம் நம்மைச் சுற்றி நிகழும் பாவ மற்றும் தெய்வீகமற்ற தீய செயல்களைக் கண்டு வருத்தப்படும் அளவுக்குத் தீமையை வெறுக்கவில்லை. இன்றைக்குப் பல கட்டவிழ்த்து விடப்பட்ட ஊடக தீமையாலும், வன்முறையாலும் தாக்கப்பட்டு, நாம் இருளுக்குள் வாழப் பழகிவிட்டோம்.
இந்த சங்கீதத்தை தாவீது அப்சலோமிடம் இருந்து தப்பியோடிய போது வனாந்தரத்தில் வைத்து எழுதியிருந்தால், அவர் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பிக்கிறார்: எந்த ஆபத்து அல்லது அசௌகரியம் நிறைந்த சூழ்நிலை வாழ்வில் இடைப்பட்டாலும், ஆண்டவருடன் உள்ள காலை ஜெப நேரத்தை அது தடுக்கக் கூடாது.
இந்த சங்கீதத்தில் தாவீது நமது அனுதின ஜெப ஐக்கியத்தை ஊக்குவிக்க உதவும் மூன்று மதிப்புமிக்க அறிவுரைகளை கற்றுக் கொடுக்கிறார்.
1. கர்த்தரைச் சந்திக்க ஆயத்தப்படு (வ. 1-3):
பிரதமர் அல்லது ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கு நமக்கு அழைப்பு இருந்தால், அதற்கு எவ்வளவு முன்னேற்பாட்டுடன் தயாராக இருப்போம். ஆனால் இன்றைக்குப் பல விசுவாசிகள் தங்கள் காலை ஜெப நேரத்திற்கு எந்தவித ஆயத்தமும் தேவையில்லை என்பது போல அலட்சியமாக இருப்பது வேதனை தருகிறது.
தாவீது இறைவனுடன் திறந்த மனதுடன் ஜெபித்தார். அவரது உள்ளான வலியை ஒப்புக்கொண்டார் ("தியானம்" என்பதை "வேதனையுடன் முனகுவது" என்றும் மொழிபெயர்க்கலாம்). தேவ உதவி வேண்டி அழுதார். அவர் இஸ்ரேலின் ராஜாவாக இருந்தாலும், கர்த்தரையே தன் ராஜாவாக அறிக்கையிட்டார் (யாத். 15:18). அவர் இதயம் உடைந்து இருந்தது. ஆனாலும் கர்த்தருக்குத் தனது பெருமூச்சுகளும், வேதனைகளும் தெரியும் என்பதை அவர் அறிந்திருந்தார் (ரோமர் 8:26).
நாம் "மேன்மையான சுதந்திரம் உடையவர்களாக" தைரியத்துடன் கிருபையுள்ள சிங்காசனத்திற்கு வரலாம் (எபி. 4:16 10:19, 35 ). ஏனென்றால் பிதா நம் இதயங்களையும் நம் தேவைகளையும் அறிந்து நம்மை ஏற்றுக் கொள்பவர்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்தைப் போலவே (மாற்கு 1:35), தாவீதும் அனுதினமும், காலை தோறும் தேவனது சந்திப்பைத் தவறாது கடைப் பிடித்தார். இதற்கு இடையூறாகக் குறுக்கிட எதையும் அவர் அனுமதிக்கவில்லை. (சங். 55:18, 59:17; 88:14; 92:3.)
தாவீது தினமும் காலை தோறும் ஜெபிப்பதில் மாத்திரம் உண்மையுள்ளவர் அல்ல. அதை ஒழுங்காகவும் முறையாகவும் செய்தார். வசனம் 3 இல் குறிப்பிடப்படும் "உமக்கு நேரே வந்து" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை, பலிபீடத்தின் மீது பலியிடப்படும் விலங்குகளின் துண்டுகளை வரிசையாக அடுக்கி வைப்பதை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும் (லேவி. 1:8). பலி பீடத்தின் மீது கட்டைகளை அடுக்குதல் (ஆதி. 22:9), கர்த்தருடைய சன்னிதியில் உள்ள மேசையின் மீது அப்பங்களை அடுக்கி வைப்பது (லேவி. 24:8) மற்றும் விருந்தினர்களுக்கு முன்பாக மேஜை மீது பரிமாறுவதற்கு ஏதுவாக உணவுகளை வரிசைப்படுத்து வைப்பதையும் (சங். 23:5) குறிப்பிட இந்த சொல்லே பயன் படுத்தப்படுத்தப் பட்டுள்ளது.
தாவீது தனது ஜெபத்தில் ஒருபோதும் கவனக்குறைவாக இருந்ததில்லை. அவர் எல்லாவற்றையும் ஒழுங்கும் கிராமுமாகச் செய்தார். "நான் ஆயத்தமாகிக் காத்திருப்பேன்" எனும் இந்த வார்த்தைக்கு ஒரு இராணுவ அர்த்தமும் உள்ளது. ஒரு சிப்பாய் தனது தளபதியிடம் இருந்து உத்தரவுகளைப் பெறுவதற்காகப் பணிவுடன் முன் நிற்பது மற்றும் களத்தில் ஒரு இராணுவம் போர் வரிசையில் ஆயத்தமாக நிற்பதையும் இது குறிக்கிறது. கடந்த காலங்களில் பல வீரர்கள் தாவீதிடம் தங்கள் கட்டளைகளைப் பெறுவதற்காக அவர் முன்பாக காத்திருந்தனர். ஆனால் தாவீது முதலில் தன்னை இறைவனிடம் ஒப்படைத்தார். அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்னர் தலைவர்கள் அதிகாரத்தின் கீழ் கட்டுப்பட்டு இருக்க வேண்டும். "நான் ஆயத்தமாகிக் காத்திருப்பேன்" என்பது கர்த்தர் வந்து என்னை ஆசீர்வதிப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் வாஞ்சையை வெளிப்படுத்துகிறது.
கர்த்தருடனான நமது தினசரி காலை ஜெப வேளைகளில், பலிபீடத்திற்குப் பலிகளைக் கொண்டுவரும் ஆசாரியர்களைப் போலவும், தளபதியிடம் கடமைக்காக அறிக்கை செய்யும் வீரர்களைப் போலவும் வர வேண்டும்.
2. கர்த்தரைப் பிரியப்படுத்து (வ. 4-6):
கர்த்தர் துன்மார்க்கத்தில் மகிழ்ச்சியடைவதில்லை. அவரால் பாவத்தைக் கண்டும் காணாமல் நடுநிலை வகிக்க முடியாது. ஆகவே கலகம் செய்யும் பாவிகளால் அவரது சமூகத்தில் நுழைய முடிவதில்லை (சங். 15:1ff.; 24:3-6). அவருக்குப் பயப்படுபவர்கள் மீது பிரியமாயிருக்கிறார் (147:11). தேவனுடைய நாமத்தைத் துதித்து ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துபவர்கள் மீது பிரியமாயிருக்கிறார் (69:31). கர்த்தரைப் பிரியப்படுத்த நமக்கு விசுவாசம் இருக்க வேண்டும் (எபி. 11:6). அவருடைய குமாரனுக்குக் கீழ்ப்படிந்து காணப்பட வேண்டும். ஏனெனில் அவர் குமாரனில் பிரியமாக இருக்கிறார் (மத். 3:17).
வசனங்கள் 5-6 மற்றும் 9-௧௦ பகுதிகளை வாசிக்கும் போது, பின் விளைவுகளைப் பற்றி எந்த விதமான கவலையும் இல்லாத, வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் செயல்படும் ஒரு கூட்டத்தைப் பார்க்கிறோம். இது நரகத்திற்குச் செல்லும் மக்கள் கூட்டம் (வெளி. 21:8).
ஆண்டவர் காணாமல் போன பாவிகளையும் நேசிக்கிறார் (யோவான் 3:16). அவருடைய ஒரே மகனை "உலகின் இரட்சகராக" அனுப்பினார் (1 யோவான் 4:14, 1 தீமோ. 2:3-4; 2 பேதுரு 3:9) . உலகத்தின் பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரித்தார் (1 யோவான் 2:1-2). இரட்சிப்புக்கான அவரது அழைப்பு கொடுக்கப்பட்டது. அனைவரும் அவரை நம்புவார்கள். அவரிடத்திற்கு வருவார்கள் (மத். 11:28-30; வெளி. 22:17). இவை கடவுளின் அருள் மற்றும் அன்பின் பரந்த பரிமாணங்கள் (எபே. 3:18-19).
ஆனால் அதே சமயம் அவரது உண்மையான அன்பின் பரிபூரண மகிமை, அவர் பாவத்தை வெறுக்கிறார் என்பதையும் உள்ளடக்கியது. அவர் பாவிகளைத் தண்டிக்கிறார் என்ற உண்மையை மறுக்க முடியாது. அவர் ஒரு போதும் பாவத்தில் மகிழ்ச்சி அடைவது இல்லை. பாவம் செய்பவர்களால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது (வ. 4). அவர்கள் அவருக்கு முன்பாக நிற்க முடியாது (வ. 5; சங். 1:5-6). அவர் கொலைகாரர்களையும் பொய்யர்களையும் வெறுக்கிறார். அவர்கள் அவருடைய குமாரனை நம்பவில்லை என்றால் அவர்களை அழிக்கிறார் (வச. 6). ஆகவே வசனம் 5 இல் குறிப்பிடப்பட்ட ''அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்'' என்ற கருத்தை நீர்த்துப்போகச் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நீங்கள் அதை சங். 11:5, 45:7, 7:11 ஆகிய பகுதிகளிலும் காணலாம்.
உண்மையில், கர்த்தர் தம்மை நேசிப்பவர்கள், அவர் விரும்புவதை நேசிக்கவும், அவர் வெறுப்பதை வெறுக்கவும் எதிர்பார்க்கிறார் (97:10; 119:113; 139:21; நீதி. 6:16-17; ஆமோஸ் 5:15; ரோ. 12: 9)
"தீமையின் சாரம் (Evil abstract)" எனும் விளக்கம், அகராதிகள் மற்றும் தத்துவ புத்தகங்களைத் தவிர வேறு எங்கும் இல்லை. தீமை என்பது வெறும் கருத்து அல்ல; அது இந்த உலகில் ஒரு பயங்கரமான சக்தி. அது உயிர்களை அழிக்கிறது. மக்களை நரகத்தில் தள்ளுகிறது.
கடவுள் தீமையை வெறுப்பது உணர்ச்சிப்பூர்வமானது மாத்திரம் அல்ல; அது அவரது நீதி. அது அவருடைய புனிதத்தன்மையின் வெளிப்பாடு. கடவுளின் பரிசுத்த பிரசன்னத்தில் அவருடன் பங்கு பெற விரும்பினால், இந்த விழுந்துபோன உலகில் தீமையைக் காணும் போது அவரைப் போலவே அதே விதமாக நாமும் கோபமும் அன்பும் நிறைந்த வேதனையை உணர வேண்டும்.
3. கர்த்தருக்கு ஒப்புவி (வ. 7-12):
"ஆனால் நானோ (But as for me)" என்று தாவீது எழுதியபோது, ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்த பொல்லாத கூட்டத்தினருடன் தாவீது தன்னை வேறுபடுத்திக் காட்டினார். தாவீது ஜெபிக்க வந்திருந்தார், அவருக்கு மூன்று விண்ணப்பங்கள் இருந்தன.
a. வழிகாட்டுதலுக்காக ஜெபித்தார் (வ. 7-8).
தாவீது லேவி கோத்திரத்தைச் சார்ந்தவர் கிடையாது. ஆகவே உண்மையில் ஆசாரியர்களைப் போல அவரால் பரிசுத்த சன்னிதிக்குள் நுழைய முடியாது. ஆனாலும் அவர் அந்த சொற்றொடரை இறைவனிடம் அணுகுவதை விவரிக்கப் பயன்படுத்தினார். தாவீது வனாந்தரத்திலிருந்தார். ஆனால் ஆசாரியர்களும் லேவியர்களும் கூடாரத்தில் காட்டிய அதே பயபக்தியுடன் கர்த்தரிடம் வந்தார்.
எங்கள் பெரிய கர்த்தரின் ஆராதனையில், அழகு மற்றும் வளைந்து கொடுக்கும் தன்மைக்கு இடமில்லை. விசுவாசிகள் தேவனின் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கும், தேவ பிரசன்னத்தில் வழிபடுவதற்கும் ஜெபிப்பதற்கும் இயேசுவின் இரத்தத்தினாலே வழி உண்டானது (எபி. 10:19-20), மேலும் இந்த பாக்கியத்தை இலகுவாகக் கருதுவது அந்த தியாகத்தை மலிவாகக் கருதுவதாகும். தாவீது தனக்குக் கடவுளிடமிருந்து வழிகாட்டுதல் தேவை என்பதை அறிந்திருந்தார், ஏனென்றால் அவர் பிளவு பட்ட ராஜ்யத்தை மீண்டும் ஒன்றாக இணைக்க வேண்டியிருந்தது.
b. நீதிக்காக ஜெபித்தார் (வச. 9-10).
தாவீது தனது அதிகாரிகளுக்கு முதலாவதாக எதிரிகளைக் கொல்லும்படி கட்டளையிடவில்லை; மாறாக, அவர் அவர்களை இறைவனிடம் ஒப்படைத்தார். அப்சலோம் கொல்லப்பட்ட அந்த சோகமான போரின் போது, "அன்றைய தினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப் பார்க்கிலும், காடு விழுங்கிய ஜனம் அதிகம்" (2 சாமு. 18:8).
"அவர்கள் தங்கள் ஆலோசனைகளாலேயே விழும்படி செய்யும்" (வச. 10) எனும் தாவீதின் ஜெபத்திற்குப் பதிலளிக்கப்பட்டது. அவர்கள் தாவீதுக்கு எதிராகக் கலகம் செய்ததால் இந்த தண்டனை அளிக்கப்படவில்லை அவர்கள் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்ததே மிகப் பெரிய பாவமாக கருதப்பட்டது.
ஆம். "கர்த்தர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்" (சங். 33:5; 36:6; 58:11; 97:2; ஏசா. 30:18; லூக்கா 18:7-8; ரோ. 1:32). பாவிகளைத் தண்டியும் எனும் ஜெபத்தை வெறுப்பவர்கள் “உமது நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத். 6:9-10) என நேர்மையாக ஜெபிக்க முடியாது.
ரோமர் 3:13 இல், பவுல், "அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறை" என்று மேற்கோள் காட்டினார். முழு உலகமும் கடவுளுக்கு முன்பாக குற்றவாளிகள் என்பது நம் அனைவரையும் உள்ளடக்கியது (ரோமர் 3:19) ! தாவீதின் எதிரிகளைக் கர்த்தர் நடத்திய விதத்திற்கு வருத்தப்படுவதற்குப் பதிலாக, அவருடனான நம்முடைய சொந்த உறவை நாம் ஆராய வேண்டும்!
c. ஆசீர்வாதத்திற்காக ஜெபித்தார் (வ. 11-12):
தாவீது மகிழ்ச்சியடைந்தார். அது உடன்படிக்கை மக்களில் உள்ள சில தீயவர்கள், கர்த்தரால் நியாயந் தீர்க்கப்பட்டதற்காக அல்ல, இஸ்ரேலின் தேவன் மகிமைப்படுத்தப்பட்டார் என்பதற்காக மகிழ்ச்சியடைந்தார். அவருடைய ராஜா நியாயப்படுத்தப்பட்டார்.
கர்த்தரின் மாபெரும் இரட்சிப்பின் திட்டம் இஸ்ரவேலுடன் இணைந்திருந்தது. ஒரு வேளை தாவீதின் வம்சம் அழிக்கப்பட்டிருந்தால், கர்த்தரின் கருணையுள்ள மேசியா குறித்த உடன்படிக்கை என்னவாகும்? (2 சாமு. 7:8).
தேவனுடனான நமது ஐக்கியத்தின் விளைவு, அவருடைய குணாதிசயங்களிலும், அவருடைய வாக்குறுதிகளிலும், ஜெபத்திற்கு அவர் அருளும் பதில்களிலும் மகிழ்ச்சியாக இருப்பதே. அவருடைய சொந்த மக்களில் சிலர் அவருக்கு எதிராகக் கலகம் செய்திருந்தாலும், கர்த்தர் அவர்களை ஆசீர்வதித்துப் பாதுகாக்க வேண்டும் என்று தாவீது ஜெபித்தார்! இது நம் ஆண்டவர் சிலுவையில் ஜெபிப்பதைப் போலவும் (லூக்கா 23:34) ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படுகையில் வேண்டுவதைப் போலவும் இருக்கிறது (அப். 7:60).
கவனிக்கவும்: வசனம் 11 விசுவாசத்தையும் அன்பையும் வலியுறுத்துகிறது. வசனம் 12 எதிர்கால நம்பிக்கையின் உறுதியை அளிக்கிறது. வசனம் 12 இல் உள்ள கேடகம் என்பது கதவு போன்ற பெரிய செவ்வகக் கவசம், சங். 3:3 இல் சொல்லப்பட்ட சிறிய சுற்றுக் கவசம் அல்ல. கர்த்தர் தாவீதை முழுமையாகப் பாதுகாக்கிறவர்.
தாவீது தனக்கு உதவி செய்யும் படி வேண்டத் தொடங்கினார். ஆனால் இறுதியாகத் தனது எதிரிகள் உட்பட அனைத்து தேவ மக்களுக்கும் ஆசீர்வதிக்கும் படியாக ஜெபித்து முடித்தார். அதுவே நமது ஜெப தியானத்திலும் முடிவு விண்ணப்பமாக இருக்க வேண்டும்.