சனி, 8 ஜூலை, 2023

யாக்கோபு 3: 13-18

 அத்தியாயம் எட்டு:

ஞானத்தை அடைவது எங்கனம்?

Where to Get Wisdom?


யூத மக்களுக்கு ஞானத்தை அடைவது மிக முக்கியமான காரியம். அறிவு இருந்தால் மட்டும் போதாது, அந்த அறிவை சரியாகப் பயன்படுத்த ஞானம் அவசியமானது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்

இவ்வுலகின் மிகச் சிறந்த புத்திசாலிகள், கிட்டத்தட்ட மேதைகளாக இருந்தவர்கள் கூட, தமது வாழ்க்கையின் அன்றாட மிக எளிய பணிகளைக் கூட தனித்துச் செய்ய இயலாது தவித்திருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்களால் கடினமான கணினி சூத்திரங்களை நிரல் படுத்த முடியும், ஆனால் தங்கள் சொந்த வாழ்க்கையைத் திறம்பட நிர்வகிக்க முடியாது! ஆக அறிவு வேறு, ஞானம் வேறு.

ஞானம் என்பது அனுபவம், அதன் மூலம் அடையும் அறிவு, சரீர சிற்றின்பத்தை விடப் பட்டறிவு பேசும் மெல்லிய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து செயல்படும் புத்தி ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. 

ஞானமே முக்கியம். ஞானத்தைச் சம்பாதி. ஆகவே, ஞானத்தைப் பெற உனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் பயன்படுத்து. அப்போது நீ ஞானத்தை அடைவாய்” (நீதி. 4:7). 

சபையில் போதகர்களாக உபதேசிக்க விரும்பிய விசுவாசிகளுக்கு யாக்கோபு எச்சரித்தார் (யாக் 3:1). ஏனெனில் சபையில் விசுவாசிகள் முன்பாக நின்று வெறும் ஆவேச வார்த்தைகள் பேசுவது மட்டும் போதாது; அவர்களுக்கு எவ்வகையிலாவது பயன்படும் நல்ல கருத்துக்களைச் சொல்ல வேண்டும். இங்குதான் ஆவிக்குரிய ஞானம் தேவைப்படுகிறது. 

அறிவு விஷயங்களைப் பிரித்து, ஆராய்ந்து பார்க்க உதவுகிறது, ஆனால் ஞானமானது விஷயங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புப் படுத்தி, குறிப்பாக வேதத்தின் சத்தியங்களை அன்றாட வாழ்க்கையுடன் இணைத்துப் பார்த்து, புரிந்து கொள்ள உதவுகிறது. 

பல நல்ல கருத்துக்களைச் சொல்லும் போதகர்களையும், ஆசிரியர்களையும் நாம் அனைவரும் கேள்விப் பட்டிருக்கிறோம், ஆனால் அவர்களிலும் கூட பலர், கர்த்தருடைய இதயத்தின் சத்தத்தைக் கேட்காமல், தேவசத்தியத்தை அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்திப் பேசத் தவறி விடுகிறார்கள். யாக்கோபு எழுதியது இந்த வகையான "ஞானம் இல்லாத வெற்று அறிவு" குறித்தே. 

இந்த தியான பகுதியில், உண்மையான ஞானம் மற்றும் தவறான ஞானம் குறித்து மூன்று எதிரெதிர் அம்சங்களை, அதன் வேறுபாடுகளை யாக்கோபு விளக்கி உள்ளார்.

I. தோற்றுவாய் வேறுபாடுகள் (Contrast in Origin - 3:15, 17)

உண்மையான ஞானம் உன்னதத்திலிருந்து வருகிறது. தவறான ஞானம் கீழிருந்து வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறைவனிடம் இருந்து வரும் ஒரு "பரலோக ஞானம்" உள்ளது. தேவனிடமிருந்து வராத, "மனிதனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தவறான உலக ஞானமும்" உள்ளது. ஒரு வேளை உலக ஞானம் சில நேரத்தில் எவ்வளவு வெற்றிகரமாகத் தோன்றினாலும் கூட,  இறுதியாகக் கர்த்தரிடமிருந்து வராத எதுவும் தோல்வியில் தான் முடிவடையும்.

திருமறையில் மனித ஞானத்தின் முட்டாள்தனத்திற்குப் பல எடுத்துக் காட்டுகள் உள்ளன.

பாபேல் கோபுரத்தின் கட்டுமானம். அது ஒரு புத்திசாலித்தனமான செயலாகத் துவங்கியது, ஆனால் இறுதியில் தோல்வியிலும், குழப்பத்திலும் முடிவடைந்தது (ஆதி. 11:1-9). 

கானானில் பஞ்சம் வந்தபோது, ஆபிரகாம் எகிப்துக்குச் செல்ல தீர்மானித்தது அந்த நேரத்தில் புத்திசாலித்தனமான தீர்வாகத் தோன்றியது, ஆனால் முடிவு வேறு விதமாக இருந்தது (ஆதி. 12:10 20). 

இளம் தாவீது, கோலியாத்துடன் போரிட முன் வந்த போது, அவனுக்குத் தனது சொந்த கவசத்தை அணிவிப்பது புத்திசாலித்தனம் என்று சவுல் ராஜா நினைத்தார், ஆனால் கர்த்தரின் திட்டம் வேறுவிதமாக இருந்தது (1 சாமு. 17:38). 

திரளான மக்கள் கூட்டத்தின் உணவுத் தேவையை, அவர்களே பூர்த்தி செய்யும்படியாக, அந்த இடத்தை விட்டு அனுப்பிவிடுவது தான் புத்திசாலித்தனம் என்று சீடர்கள் நினைத்தார்கள்; ஆனால் சில அப்பங்களையும், மீன்களையும் எடுத்து திரளான மக்களுக்கு இயேசு உணவளித்தார். 

அப்போஸ்தலர் 27 இல் "ரோமானிய கப்பல் பயண நிபுணர்கள்" பவுலின் ஆலோசனைக்கு  உடன்படாமல், அந்த துறைமுகத்தை விட்டு வெளியேறி ரோமுக்குப் பயணம் செய்வது தான் புத்திசாலித்தனம் என்று நினைத்தனர்,  ஆனால் தொடர்ந்து வந்த கடும் புயல் நிபுணர்களின் ஆலோசனையை விடத் தேவ மனிதனது ஞானம் தான் சிறந்தது என்பதை நிரூபித்தது. அதனால் அவர்கள் வருத்தப்பட்டார்கள். துயரமான வாழ்க்கை அனுபவத்தை அடைந்தார்கள்!

மனித ஞானம் எங்கிருந்து தோன்றுகிறது? இந்த ஞானம் பரத்திலிருந்து இறங்கவில்லை, மாறாகப் பூமிக்குரிய ஆசை, சிற்றின்ப மோகம், தீய தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய இச்சைகளிலிருந்து புறப்படுகிறது (யாக். 3:15). ஆக விசுவாசிக்கு மூன்று எதிரிகள் உள்ளனர்: உலகம் (கீழ்ப்படியாமை), மாம்ச இச்சை (உடலும், உள்ளமும் விரும்புபவற்றைச் செய்வது) மற்றும் சாத்தான் (ஆகாயத்து அதிகாரப் பிரபு), (எபே. 2:1-3). இந்த எதிரிகளை "லௌகிக சம்பந்தம், ஜென்ம சுபாவம், பேய்த்தனம்" என்ற சொற்களால் யாக்கோபு சுட்டிக் காட்டுகிறார்.

"இந்த உலகத்தின் ஞானம்" என ஒன்று உள்ளது (1 கொரி. 1:20-21). உலக அறிவையும், உலக ஞானத்தையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்த உலகில் ஏராளமான அறிவு உள்ளது. நிச்சயமாக; நாம் அனைவரும் அதன் மூலம் பயனடைகிறோம், ஆனால் அதில் ஞானம் வெளிப்படவில்லை. மனிதன் பிரபஞ்சத்தின் இரகசியங்களைத் திறக்கிறான், ஆனால் அவற்றைக் கொண்டு எப்படிச் செயல்படுவது என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஏறக்குறைய அவன் கண்டுபிடிக்கும் அல்லது திட்டமிடும் அனைத்தும் அவனுக்கு எதிராகவேத் திரும்புகின்றன. 

ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே, ஹென்றி டேவிட் தோரோ எச்சரித்தார், நாங்கள் "மேம்பட்ட வழிமுறைகள் வழியாக, மேம்படுத்தப்படாத நோக்கங்களை அடைகிறோம் (Improved means to unimproved ends)".

நான் பேருந்தில் அல்லது பெருநகர் ரயிலில் பாஸ்டன் நகரத்திற்குள் செல்லும் போதெல்லாம்,  ஒரு பிரபல சீன அறிஞரை மகிழ்விக்கும் மனிதரை அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. அவர் தனது ஆசிய நண்பரை ரயில் நிலையத்தில் சந்தித்து சுரங்கப்பாதைக்கு விரைந்தார். அவர்கள் சுரங்கப்பாதை நிலையம் வழியாக ஓடுகையில், அவர் தனது விருந்தினரிடம், “இந்த ரயிலை ஓடிப் பிடித்தால், மூன்று நிமிடங்களை மிச்சப்படுத்துவோம்!” என்று மூச்சிரைத்தார். அதற்குச் சீன தத்துவஞானி பொறுமையாக , "நாம் சேமிக்கும் அந்த  மூன்று நிமிடங்களில் என்ன முக்கியமான காரியத்தைச் செய்ய வேண்டும்?"

உலகம் அதன் ஞானத்தால் கர்த்தரை அறியவில்லை. அந்த ஞானத்தால் கர்த்தரின் நற்செய்தியை நிராகரிக்கிறது. 

"அழிந்து போகிறவர்களுக்குச் சிலுவையைப் பற்றிய உபதேசம் பைத்தியமாகத் தோன்றுகிறது" (1 கொரி. 1:18). 

இவ்வுலக ஞானத்தில் மயங்கும் எவரும், 1 கொரிந்தியர் புத்தகத்தின் முதல் இரண்டு அதிகாரங்களைப் படித்து, கர்த்தருடைய ஞானத்தையும், மனித ஞானத்தையும் பற்றி பவுல் எவ்வளவு விரிவாகச் சொல்லியிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். 

மனிதனின் ஞானம் கர்த்தரின் பார்வைக்குப் பைத்தியமாக இருக்கிறது (1 கொரி. 1:20), கர்த்தரின் ஞானம் மனிதனுக்குப் பைத்தியமாகத் தோன்றும் (1 கொரி. 2:14). 

மனிதனின் ஞானம் காரண காரியங்களை ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவிலிருந்து வருகிறது. கர்த்தரின் ஞானம் தேவ வெளிப்பாட்டால் ஆவியிலிருந்து தோன்றுகிறது (1 கொரி. 2:10). 

மனிதனின் உலக ஞானம் ஒன்றுமில்லாமல் அவமாகப் போகும் (1 கொரி. 1:19), கர்த்தருடைய ஞானம் என்றென்றும் நிலைத்திருக்கும்.

உலகம் கர்த்தரிடமிருந்து விலகியதால், அது தன் ஞானத்தை இழந்து விட்டது. மனிதனின் ஒவ்வொரு அறிவு முன்னேற்றமும், பிரச்சனைகளை மேலும், மேலும் பெரிதாக்குகிறது. 

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தத்தைப் பற்றிய அறிவே அறிவு” (நீதி. 9:10).

"அவர்கள் கண்களுக்கு முன்பாக தேவபயம் இல்லை" (ரோமர். 3:18).

இந்த தவறான உலக ஞானத்திற்கு மற்றுமொரு ஆதாரம் உள்ளது: அது "சிற்றின்ப மோகம்", அதாவது ஜென்ம சுபாவம். கிரேக்க வார்த்தையான ''Psukikos,''  இது ''Psuke'' எனும் வேர்ச் சொல்லிருந்து வந்தது. அதன் பொருள் "உயிர்" அல்லது "ஆன்மா". நமது ஆங்கிலச் சொல்லான சைக்காலஜி (Psychology) இதிலிருந்து தான் உருவானது. 

1 கொரிந்தியர் 2:14 இல்; 15:44, 46, "Psukikos - ஆன்மா" என்பதற்கு நேர்மாறாக "ஜென்ம சுபாவம்" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. யூதா 19 இல் இது "ஜென்ம சுபாவத்தார்" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கர்த்தரால் அருளப்பட்ட தெய்வீக இயல்புக்கு மாறாக, மனிதனுக்குள் குடி கொண்டு இருக்கிற வீழ்ந்து போன பாவ இயல்பைப் பற்றிய முக்கிய குறிப்பாக இது இருக்கிறது. கர்த்தரின் தேவ பிரசன்னத்திலிருந்து முற்றிலும் விலகி மனிதனின் இயல்பில் தோன்றும் ஒரு ஞானம் உள்ளது.

ஆனால் இந்த “கீழிருந்து வரும் ஞானம்” தீய தன்மைகளை உள்ளடக்கியது. ஒருவேளை இதன் சிறந்த மொழிபெயர்ப்பு "பேய்த்தனம்". ஆதியாகமம் 3 இல் சாத்தான் ஏவாளை வெற்றிகரமாக ஏமாற்றியதிலிருந்து தொடங்கி, முழு திருமறையிலும் இந்த "சாத்தானின் ஞானம்" தேவ ஞானத்திற்கு எதிராகப் போராடும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது. 

கர்த்தரைப் போல் அவள் இருப்பாள் எனச் சொல்லி  சாத்தான் ஏவாளை நம்ப வைத்தான். அந்த மரம் அவளைப் புத்திசாலியாக்கும் என்று சொன்னான். அந்த நிகழ்விலிருந்து, தொடர்ந்து மக்கள் சாத்தானின் பொய்களை நம்பி, தாங்களே கடவுள்களாக மாற முயன்றனர் (ரோமர் 1:18-25). சாத்தான் தந்திரமானவன்; அவன் பழைய பாம்பு! 

கர்த்தரின் ஞானத்தை நீங்கள் அறியாவிட்டால், உங்களைக் கவர்ந்து, குழப்பமடையச் செய்ய வைக்கும் யுக்தி சாத்தானிடம் உள்ளது.

பூமிக்குரிய ஆசை, சிற்றின்ப மோகம் மற்றும் பிசாசின் தீய தன்மைகள் இவற்றை உள்ளடக்கிய ஞானத்திற்கு மாறாக, யாக்கோபு "பரத்திலிருந்து வரும் ஞானத்தை" குறித்து விவரித்தார் (யாக். 3:17). 

"நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி ஜோதிகளின் பிதாவினிடத்த்திலிருந்து இறங்கி வருகிறது" (யாக். 1:17). 

கிறிஸ்தவர் தனக்குத் தேவையான அனைத்திற்கும் பரலோகத்தை நோக்கிப் பார்க்கிறான். 

நம்முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிறது (பிலி. 3:20),.

நம்முடைய தந்தை பரலோகத்தில் இருப்பது போல (மத். 6:9). 

நம்முடைய பொக்கிஷங்கள் பூமியில் அல்ல, பரலோகத்தில் உள்ளன (மத். 6:19). 

நாம் உன்னதத்திலிருந்து மறுபடியுமாகப் பிறந்தவர்கள் (யோவான் 3:1-7). 

இயேசு கிறிஸ்துவை நம்பிய விசுவாசியின் வீடு பரலோகத்தில் உள்ளது (யோவான் 14:1-6).

நம்முடைய நம்பிக்கை பரலோகத்தில் உள்ளது. நமது பாசத்தையும் கவனத்தையும் மேலானவற்றின் மீது வைக்கிறோம், பூமிக்குரிய விஷயங்களில் அல்ல (கொலோ. 3:1-4). 

கிறிஸ்தவர்களின் ஞானம் என்ன? அவர் இவ்வுலகின் தத்துவங்களை நோக்குகிறாரா? இல்லை! முதலாவது, இயேசு கிறிஸ்துவை அறிவதே நமது ஞானம், நீதி, பரிசுத்தம், மீட்பு (1 கொரி. 1:24, 30). 

இயேசு கிறிஸ்துவில் "ஞானம் மற்றும் அறிவின் அனைத்து பொக்கிஷங்களும் அடங்கியிருக்கிறது" (கொலோ. 2:3). 

உண்மையான ஞானத்தை நோக்கிய முதல் படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வது.

தேவனுடைய வார்த்தையே நமது ஞானமும் கூட. “இதோ, நான் உங்களுக்கு நியமங்களையும் நியாயங்களையும் கற்பித்தேன்.… ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு செய்யுங்கள்; இதுவே ஜாதிகளின் பார்வையில் உன் ஞானமும் விவேகமுமாயிருக்கிறது” (உபா. 4:5-6). 

வேதவசனங்கள் நம்மை "இரட்சிப்புக்கு ஞானமுள்ளவர்களாக" ஆக்க வல்லது (2 தீமோ. 3:15).

விசுவாச ஜெபத்தின் மூலம் நாம் ஞானத்தை அடைகிறோம். உங்களில் ஒருவருக்கு ஞானம் குறைவாக இருந்தால், அவர் கர்த்தரிடம் கேட்கட்டும் என்று யாக்கோபு 1:5 குறிப்பிடுகிறது. 

கர்த்தரின் பரிசுத்த ஆவியானவர் "ஞானம் மற்றும் தெளிவையும் நமக்கு அளித்து பிதாவை வெளிப்படுத்துகிறார் (எபே. 1:17). நாம் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து ஜெபிக்கும்போது, அவர் நம்மை ஞானமான பாதைகளில் வழிநடத்துகிறார்.

உண்மையான ஆவிக்குரிய ஞானத்தின் தோற்றுவாய் கர்த்தர். வேறு எந்த மூலத்திலிருந்தும் நீங்கள் ஞானத்தைப் பெறுவது சிக்கலைக் கேட்பதாகும். உலக ஆசை, மாம்ச இச்சை, பிசாசின் வேலையைப் பூர்த்தி செய்யும் உலக ஞானத்தைப் பெற வேண்டிய அவசியமில்லை. கர்த்தரிடமிருந்து உங்கள் ஞானத்தைப் பெறுங்கள்!

II. வெளிப்படும் பண்புகளில் மாறுபாடு (Contrast in Operations - 3:13–14, 17)

கர்த்தர் அருளும் ஞானம் உன்னத்திலிருந்து வருகிறது. ஆகவே ''பூமிக்குரிய ஆசை, சிற்றின்ப மோகம், பிசாசின் தீய தன்மைகள்" மீது நாட்டம் தரும் உலக ஞானத்திலிருந்து அது வேறுபட்ட வழியில் செயல்படுகிறது. இவ்விரண்டு ஞானங்களும்  முற்றிலும் வேறுபட்ட இரண்டு இடங்களிலிருந்து தோன்றுவதால், அவை எதிரெதிர் வழிகளில் தான் செயல்பட வேண்டும்.

தவறான ஞானத்தின் அடையாளங்கள் என்ன?

கசப்பான வைராக்கியம் - பொறாமை (Envy - வ.14).

இந்த வார்த்தைக்குள் சுயநல நோக்கம், பொறாமை என்ற உணர்வுகள் அடங்கி உள்ளது. இதை யாக்கோபு 3:1 உடன் இணைத்துப் பாருங்கள். விசுவாசிகள் ஆவிக்குரிய மதிப்புமிக்க பதவிகளை அடைவதை லட்சியமாகக் கொண்டு இருக்க வேண்டாம் என்று யாக்கோபு எச்சரித்தார். 

உலக ஞானம் கூறுகிறது, “உன்னை நீயே உயர்த்திக்கொள்'. நீங்கள் மற்ற மனிதர்களைப் போலவே நன்றாக இருக்கிறீர்கள், ஒருவேளை அவர்களை விடச் சிறப்பாக இருக்கலாம்! அதிக சத்தம் எழுப்பி அழும் குழந்தைக்குத் தான் பால் கிடைக்கும்''. வருந்தத்தக்க வகையில், கர்த்தருடைய ஜனங்களிடையேயும் சுயநலம், உலகப்பிரகாரமான முன்னேற்றம் அடைய வேண்டும் எனும் ஆசை அதிகமாக உள்ளது. பரலோக ராஜ்யத்தில் யார் பெரியவர் என்று அப்போஸ்தலர்கள் கூட சண்டை போட்டனர்.

ஆவிக்குரிய வைராக்கியம் என்ற போர்வையில் சுயம் (ego) பயணம் செய்வது மிக எளிது. மனிதர்கள் தங்களைப் புகழ்வதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக மதச் சடங்குகளை, பாரம்பரியங்களை பரிசேயர்கள் பயன்படுத்தினார்கள் (மத். 6:1-18).  

நல் வைராக்கியம் (சங்கல்பம்) தேவை. நாம் கர்த்தருடைய காரியங்களில் வைராக்கியமாக இருக்க வேண்டும், ஆனால் அதே சமயம் நம்முடைய நோக்கங்கள் கர்த்தருக்குப் பிரியானவையாக இருப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த உலகத்தின் ஞானம் மனிதனை உயர்த்துகிறது, ஆனால் கர்த்தரின் மகிமையைத் திருடுகிறது. 

1 கொரிந்தியர் 1:17ல், பவுல் கர்த்தரின் ஞானம் மற்றும் இந்த உலகத்தின் ஞானத்தைப் பற்றி விவாதித்தார், மேலும் கர்த்தர் எப்படிச் செயல்படுகிறார் என்பதையும் விளக்கினார்: 

"மாம்சமான எவனும் அவர் முன்னிலையில் பெருமைப் பாராட்டக்கூடாது" (1 கொரி. 1:29). 

மகிமைப்படுகிறவன் கர்த்தருக்குறித்தே மேன்மை பாராட்டக்கடவன்” (1 கொரி. 1:30) என்ற அறிவுரையுடன் இந்த பகுதியை முடித்தார்.

கர்த்தருக்காக நாம் பாராட்டும் வைராக்கியம் ஆவிக்குரியதா அல்லது மாம்சமா? 

மற்றவர்கள் வெற்றி பெறும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோமா அல்லது இரகசியமாகப் பொறாமையும், விமர்சனமும் உள்ளதா? 

மற்றவர்கள் தோல்வியடையும் போது நாம் கவலையாக உணர்கிறோமா அல்லது மகிழ்ச்சி அடைகிறோமா? 

உலகத்தின் ஞானம் சபைக்குள் வரும்போது, ​​மாம்சப் பிரயோகம் பெருமளவில் இருக்கிறது. மனிதனது பெயர் மகிமைப்படுகிறது. எச்சரிக்கையுடன் இருங்கள்!

விரோதம் (Strife - வ.14 ).

இந்த வார்த்தைக்கு "குழு ஆவி (party spirit)" என்று பொருள். ஒரு அரசியல்வாதி வாக்குகள் பெறுவதற்காகப் பிரச்சாரம் செய்வதை விவரிப்பதற்கு, இந்த வார்த்தை கிரேக்கர்களால் பயன்படுத்தப்பட்டது. 

உலக ஞானம் கூறுகிறது, உங்களால் முடிந்த அளவு ஆதரவைப் திரட்டுங்கள்! தேவாலயத்தில் உள்ளவர்களிடம் கேளுங்கள்! அவர்கள் எந்த பக்கம் நிற்கிறார்கள்?, ''உங்களுக்கு ஆதரவாகவா அல்லது எதிராகவா?" தனது மகிமையைத் தேடும் இத்தகைய ஆவி தேவாலயத்தில் போட்டியையும், பிளவையும் மட்டுமே நிச்சயமாக உருவாக்குகிறது. “சண்டையாலோ, வீண் பேச்சினாலோ எதுவும் செய்ய வேண்டாம்; ஆனால் மனத்தாழ்மையில் ஒவ்வொருவரும் தங்களைவிட [முக்கியமான] சிறந்தவர்களாக மதிக்கட்டும்” (பிலி. 2:3).

பெருமை பேசுதல் (Boasting - வ.14).

கர்வம் பெருமை பேச விரும்புகிறது. மனித ஞானத்தை விடப் பெருமை எதுவும் இல்லை. கர்த்தருக்கு மகிமை செலுத்தும் படியாகத் தேவ ஆசீர்வாதங்களைச் சாட்சி பகர வழி உள்ளது, ஆனால் மனிதர்களுக்குப் புகழைக் கொடுக்கும் அணுகுமுறையும் உள்ளது. விசுவாசிகளிடையே பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பாராட்டுக் கொள்ளும் போக்கைப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது. 

2 கொரிந்தியர் 10 ல், பவுல் தனது ஊழியத்தைப் பற்றி உயர்த்திப் பேச வேண்டிய கட்டாயத்திலிருந்தபோது, ​​​​கர்த்தருக்கு மகிமையைக் கொடுப்பதில் மிகக் கவனமாக இருந்தார். “நிச்சயமாக, தங்கள் சொந்தச் சாட்சிகளை எழுதிய பரிசுத்தவான்கள் போன்ற அதே நிலையில் நம்மைச் சேர்த்துக் கொள்ளவோ ​​அல்லது அவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்கவோ நாம் துணியக்கூடாது! 

அவர்கள் செய்ததெல்லாம், அவர்களுடைய சொந்த தர நிலைகள் அல்லது தங்கள் சொந்த வட்டத்திற்குள் உள்ள ஒப்பீடுகள் மூலம் தங்களை தாங்களே அளவிடுவதுதான், ஆனால் அது துல்லியமான மதிப்பீட்டை உருவாக்காது, நீங்கள் உறுதியாக இருக்கலாம்” (2 கொரி. 10:12).

கர்த்தரின் ஞானம் செயல்படும் போது, ​​பணிவு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வைத் தூண்டி செயல் படுகிறது. எல்லா மகிமையையும் கர்த்தருக்கே அளிக்க வேண்டும் என நீங்கள் விரும்புவீர்கள். பிற கிறிஸ்தவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்க உங்களுக்கு விருப்பமில்லை, ஏனென்றால் நீங்கள் கிறிஸ்துவை மட்டுமே பார்க்கிறீர்கள் - மேலும் அவருடன் ஒப்பிடுகையில், நாம் அனைவரும் செல்ல வேண்டிய தூரம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது!

வஞ்சகம் (Deceit - வ.14 ).

"உண்மைக்கு எதிராகப் பொய் சொல்லாதே." யாக்கோபு வரிசைப் படுத்தியதைப் புரிந்து கொள்வது கடினமாக இல்லை. 

முதலாவதாகச் சுயநல நோக்கம். அது குழுவை உருவாக்கும். பின்னர் போட்டி மனப்பான்மை மற்றும் விரோதத்திற்கு வழிவகுக்கும். "குழு வெற்றி பெற" நாம் பெருமை பேசுவதை நாட வேண்டும். பொதுவாகப் பெருமை பேசுவதில் பல பொய்கள் உள்ளடங்கி உள்ளது! 

ஒரு மனிதனின் வாழ்க்கையை இறைவன் செய்தித்தாள் குறிப்புகளில் படிக்கவில்லை; அதை அவனது இதயத்தில் வாசிக்கிறான். 

"ஆகையால், கர்த்தர் வருமளவும், காலத்திற்கு முன்பாக எதையும் நியாயந்தீர்க்காதீர்கள், அவர் இருளின் மறைவானவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவார், இருதயத்தின் ஆலோசனைகளை வெளிப்படுத்துவார்; (1கொரி 4:5).

உண்மையான ஆன்மீக ஞானத்தின் அத்தாட்சிகளுக்குத் திரும்புவது என்னே ஒரு நிம்மதி.

சாந்தம் (Meekness - வ.13).

சாந்தம் பலவீனம் அல்ல; அது ஒருவர் தன்னை தானே கட்டுப்படுத்தும் சக்தி. சாந்தகுணமுள்ளவர் சுயநலத்துடன் தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள மாட்டார். இந்த  கிரேக்க வார்த்தை கால் உடைந்த குதிரையைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது, அதனால் அந்த குதிரையின் சக்தி அதன் கட்டுப்பாட்டிலிருந்தது. சாந்தகுணமுள்ளவன் கர்த்தரின் மகிமையை மட்டுமே தேடுகிறான், மனிதர்களின் புகழைப் விரும்புவதில்லை. சாந்தம் என்பது ஆவியின் கனி (கலா. 5:23); அதை மனிதனால் உற்பத்தி செய்ய முடியாது. சிலர் சாந்தமானவர் எனத் தவறாக நினைக்கும் தவறான பணிவு உள்ளது, ஆனால் அது போலியானது.

"ஞானத்திற்குரிய சாந்தம்" என்ற சொற்றொடர் சுவாரஸ்யமானது (யாக்.3:3). சாந்தம் என்பது சக்தியைச் சரியாகப் பயன்படுத்துதல், ஞானம் என்பது அறிவை சரியாகப் பயன்படுத்துதல். இவை இரண்டும் இணைந்து ஒன்றாகச் செல்கின்றன. 

உண்மையான ஞானமுள்ள நபர் தனது அன்றாட வாழ்வில் தான் கர்த்தரின் குழந்தை என்பதைக் காட்டுவார். அணுகுமுறையும் செயலும் ஒன்றாகச் செல்கின்றன (Attitude and action go together).

தூய்மை (Purity - வ.17).

"தூய்மை" என்பது முதலாவதாகப் புனிதத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. கர்த்தர் பரிசுத்தமானவர்; ஆதலால் மேலிருந்து வரும் ஞானம் தூய்மையானது. இந்த வார்த்தையின் பின்னணியில் உள்ள நோக்கம் "கற்பு, அசுத்தத்திலிருந்து விடுபட்டது." 

யாக்கோபு இந்த வார்த்தையை மீண்டும் யாக். 4:8-ல் பயன்படுத்தினார் - "உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்" அல்லது, "உங்கள் இருதயங்களைத் தூய்மைப்படுத்தவும்." 

கர்த்தரின் ஞானம் வாழ்க்கையின் தூய்மைக்கு நம்மை வழி நடத்துகிறது. மனிதனின் ஞானம் பாவத்திற்கு வழி நடத்தும். 

ஒரு ஆன்மீக தூய்மை உள்ளது, அது இறைவனுடன் ஏற்படும் தூய்மையான உறவால் விளைகிறது (2 கொரி. 11: 3). ஒரு நபரை ஆவிக்குரிய விபச்சாரியாக மாற்றும் உலகியல் உள்ளது (யாக். 4:4).

சமாதானம் (Peace - வ.17).

மனிதனின் ஞானம் போட்டி, விரோதம் மற்றும் போருக்கு வழிவகுக்கிறது (யாக். 4:1-2); ஆனால் கர்த்தரின் ஞானம் அமைதிக்கு வழிவகுக்கிறது. இது புனிதத்தின் அடிப்படையிலான சமாதானம், சமரசத்தின் அடிப்படையில் அல்ல. எத்தனை பெரிய விலை கொடுத்தாலும், தேவ சமாதானத்தை வாங்க முடியாது. தேவாலயத்தின் தூய்மையை விடத் தேவாலயத்தின் அமைதி முக்கியமானது அல்ல. தேவாலயம் தூய்மையாகவும், கர்த்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகவும் இருந்தால், அமைதி இருக்கும். 

"நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றென்றும் அமைதியும் நிச்சயமுமாயிருக்கும்" (ஏசா. 32:17). 

பாவங்களைத் துடைத்து, அவைகள் இல்லை என்று பாசாங்கு செய்வதன் மூலம் தேவாலயம் ஒருபோதும் அமைதி பெற முடியாது. மனிதனின் ஞானம் கூறுகிறது, “பாவத்தை மறை! விஷயங்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்! ” கர்த்தரின் ஞானம் கூறுகிறது, "பாவத்தை ஒப்புக்கொள்,அறிக்கை செய். தேவ சமாதானம் விஷயங்களை இணைத்து ஒன்றாக வைத்திருக்கும்!"

இனிமையாக (Gentleness - வ. 17).

மத்தேயு அர்னால்ட் இதை "இனிமையான நியாயம் (Sweet reasonable)" என்று அழைக்க விரும்பினார். இது சமரசம் இல்லாத மிதமான தன்மை, பலவீனம் இல்லாத மென்மை என்ற பொருளைக் கொண்டுள்ளது. மென்மையான நபர் வேண்டுமென்றே சண்டைகளை ஏற்படுத்துவதில்லை, ஆனால் அமைதியைக் காக்கும் பொருட்டு அவர் உண்மையைச் சமரசம் செய்வதில்லை. கார்ல் சாண்ட்பர்க் விவரித்தார் ஆபிரகாம் லிங்கன் "மிருதுவான இரும்பு மனிதர் (Velvet Steel)". இது மென்மையின் நல்ல விளக்கம்.

இணக்கம் (Compliance - வ.17).

கர்த்தரின் ஞானம் ஒரு விசுவாசியை, பிறர் ஏற்றுக் கொள்ளக்கூடியவராக, அவருடன் இணைந்து பயணிக்க, ஒன்றாக வேலை செய்ய விருப்பமானவராக அவரை மாற்றுகிறது. மனித ஞானம் ஒருவரைக் கடினமானவராக, பிடிவாதம் பிடித்தவராக மாற்றுகிறது. 

இணக்கமான நபர் ஒரு கேள்வியின் அனைத்து விதமான பதில்களையும் கேட்கத் தயாராக இருக்கிறார், ஆனால் அதே வேளை அவர் தனது சொந்த நம்பிக்கைகளைச் சமரசம் செய்து கொள்ள மாட்டார். அவர் மாற்றுக் கருத்துடன் உடன்படாதவராக இருந்தாலும், இணக்கமானவர்.

 "கேட்பதற்குத் துரிதமானவர், பேசுவதற்குப் பொறுமையானவர், கோபத்திற்குத் தாமதமானவர்" (யாக். 1:19). பிடிவாதம் என்பதை உறுதியான நம்பிக்கை என்றும், அவர்கள் தங்கள் சொந்த வழியில் நடப்பவர்கள் எனப் பலர் நினைக்கிறார்கள். கர்த்தருடைய ஞானம் செயல்படும் போது, ​​ஆண்டவர் வெளிப்படுத்தும் அனைத்தையும் கேட்கவும், சிந்திக்கவும், ஜெபிக்கவும், கீழ்ப்படியவும் முழு மனதுடன் தயாராக இருக்க வேண்டும். "வற்புறுத்தலுக்கு உடன்படாத இணங்குதல்" என்பது இந்த வார்த்தையின் மற்றொரு மொழிபெயர்ப்பு.

கருணை (Mercy - வ.17).

"இரக்கத்தாலும்" என்பது, கர்த்தரின் ஞானத்தைப் பின்பற்றுபவர் கருணையால் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படுகிறார் எனப் பொருள். 

"உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்" (லூக்கா 6:36). 

கர்த்தர் தம்முடைய கிருபையால் நமக்குத் தகுதி அற்றதை தந்தருளியுள்ளார், நாம் தகுதி உடையதை இரக்கப்பட்டுக் கொடுப்பதில்லை. நல்ல சமாரியன் பற்றிய நமது ஆண்டவரின் உவமை இரக்கத்தின் அர்த்தத்தை விளக்குகிறது (லூக்கா 10:25-37). ஒரு சமாரியன் யூத அந்நியரைப் பராமரிப்பது கருணையின் செயலாகும். கர்த்தரின் சித்தத்தைச் செய்வதன் மூலம் கிடைக்கும் ஆசீர்வாதத்தைத் தவிர, வேறு எதுவும் அந்த சமாரியன் பெற முடியாது. பாதிக்கப்பட்டவராலும் அவருக்கு எதுவும் திருப்பிச் செலுத்த முடியாது. அதுதான் கருணை.

நற்கனி (Good fruits - வ. 17)

விசுவாசமாக இருப்பவர்கள் பலனளிக்கிறார்கள். கர்த்தரின் ஞானம் வாழ்வை வெறுமையாக்காது; அதை முழுமையானதாக ஆக்குகிறது. ஆவியானவர் தேவனுடைய மகிமைக்காக அதிக கனிகளை உற்பத்தி செய்கிறார் (யோவான் 15:1-16 ஐப் பார்க்கவும்). லூக்கா 10:25-37 இல் உள்ள நியாய சாஸ்திரி, நித்திய ஜீவனைக் குறித்து விவாதிக்கத் தயாராக இருந்தார், ஆனால் அவர் அண்டை வீட்டாராக இருந்து மற்றவருக்கு உதவ விரும்பவில்லை. கர்த்தரின் ஞானம் நடைமுறைக்குரியது; அது வாழ்க்கையை மாற்றுகிறது. கர்த்தரின் மகிமைக்கு ஏதுவான நல்ல செயல்களை உருவாக்குகிறது.

அலைபாயாத மனம்- பட்சபாதமில்லாதது (Decisiveness - வ.17)

இந்த வார்த்தை அலைபாயாத தீர்க்க மனதைக் குறிக்கிறது. இது "ஊசலாடும் மனதிற்கு" எதிரானது (யாக். 1:6). நீங்கள் உலக ஞானத்தின் மீது சார்ந்திருக்கும் போது, ​​உங்கள் மனதை மாற்ற அல்லது ஒரு புதிய கண்ணோட்டத்திலிருந்து பார்க்க, ஒரு பக்கத்திலிருந்தும் மற்றொரு பக்கத்திலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்படுவீர்கள். ஆனால் கர்த்தரின் ஞானம் உங்களிடம் இருக்கும் போது, ​​நீங்கள் தடுமாற வேண்டியதில்லை; உங்களால் தீர்க்கமாக இருக்க முடியும். பயப்பட மாட்டீர்கள். ஏனெனில் மேலிருந்து வரும் ஞானம், உன்னதத்தின் வல்லமையைக் கொண்டு வருகிறது.

மாயமற்றது - நேர்மை (Sincerity - வ.17).

புதிய ஏற்பாட்டில் "மாய்மாலம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம் "முகமூடி அணிந்தவர் அல்லது நடிகர்" எனும் பொருள்படும். மனிதனின் உலக ஞானம் செயல்படும் போது, ​​நேர்மை இன்மை மற்றும் பாசாங்குத்தனம் இருக்கலாம், ஆனால் கர்த்தரின் ஞானம் செயல்படும் போது, ​​அன்புடன் சத்தியத்தைப் பேசும் திறந்த தன்மையும், நேர்மையும் இருக்கும் (எபே. 4:14-15). கர்த்தருடைய விசுவாசிகள் பாசாங்கு செய்து மறைத்துப் பேசுவதை எங்குக் கண்டாலும், அது இந்த உலகத்தின் ஞானம் அவர்களின் வாழ்க்கையை ஆளுகிறது என்பதை உறுதியாக நீங்கள் நம்பலாம். "மத அரசியல்" என்பது கர்த்தருக்கு அருவருப்பானது. "நம்பிக்கை என்பது சூழ்ச்சி செய்யாமல் வாழ்வது."

கர்த்தரின் ஞானம் செயல்படுவதற்கும், உலக ஞானம் செயல்படுவதற்கும் இடையே மிகவும் வித்தியாசம் உள்ளது. ஆலய பொறுப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் யாக்கோபு எழுதியவற்றின் வெளிச்சத்தில் தங்கள் சொந்த வாழ்க்கையையும், அவர்களின் ஊழியங்களையும் மதிப்பீடு செய்வது ஆசீர்வாதமானதாக இருக்கும். உள்ளூர் தேவாலயம் ஒரு அமைப்பாக இருந்தாலும், சமயச்சார்பற்ற வணிகங்களை வெற்றிபெறச் செய்யும் "(மாடிசன் அவென்யூ - Madison Avenue)" முறைகளை அது சார்ந்திருக்க முடியாது. கர்த்தரின் வழிகளும், எண்ணங்களும் நம்மை விட மிக உயர்ந்தவை! 

நாங்களோ உலகத்தின் ஆவியை அல்ல, தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவற்றை அறியும் படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றிருக்கிறோம்” (1 கொரி. 2:12).

III. வெளிப்படும் விளைவுகளில் மாறுபாடு (Contrast in Outcomes - 3:16, 18)

ஒன்றின் ஆரம்பம் அதன் முடிவைத் தீர்மானிக்கிறது. முதல் கோணல் முற்றிலும் கோணல்! உலக ஞானம் உலக விளைவுகளை உண்டாக்கும்; ஆவிக்குரிய ஞானம் ஆன்மீக கனிகளைத் தரும்.

உலக ஞானம் சிக்கலை உருவாக்குகிறது (வச. 16). பொறாமை, சண்டை, குழப்பம், தீய செயல்கள். அந்தச் சபையில் கர்த்தர் செயல்பட்டதாகத் தெரியவில்லை. யாக்கோபு 4 இல், விசுவாசிகளிடையே இருந்த "போர்களையும் சண்டைகளையும்" குறித்துப் பேசுகிறார். 

தவறான சிந்தனை தவறான வாழ்க்கையை உருவாக்குகிறது. உலகம் இப்படிப்பட்ட குழப்பத்தில் இருப்பதற்கு ஒரு காரணம், மனிதர்கள் கர்த்தரின் ஞானத்தை ஏற்க மறுத்ததே ஆகும்.

இங்கு "கலகம் (வ.16)" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைக்கு "நிலையற்ற தன்மையிலிருந்து உருவாகும் சீர்கேடு" என்று பொருள். இதே வார்த்தை யாக்கோபு 1:8 இல் "நிலையற்றது" என்றும், யாக். 3:8 இல் "அடங்காதது" என்பவற்றுடன் தொடர்புடையது. நீங்கள் 2 கொரிந்தியர் 12:20ஐ வாசித்தால், ஒரு குழப்பம் நிறைந்த சபை எப்படி இருக்கும் என்பதற்கான விளக்கத்தைப் பெறுவீர்கள். கடைசி நாட்களில் உலகத்தில் ஏற்படவிருக்கும் கட்டுக்கடங்காத கலவரங்களைப் பற்றி விவரிக்க ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார் (லூக்கா 21:9).

பொறாமை, போட்டி, கட்சி மனப்பான்மை - ஆகிய இவை அனைத்தும் குழப்பத்திற்குப் பங்களிக்கின்றன. இந்த உண்மைக்கு  ஆதியாகமம் 11 இல் உள்ள பாபேல் கோபுர கட்டுமானம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. மனிதனின் பார்வையில், கோபுரத்தைக் கட்டுவது ஒரு புத்திசாலித்தனமான விஷயம், ஆனால் தேவனது பார்வையில், இந்த திட்டம் முட்டாள்தனமானது மற்றும் பாவமானது. முடிவு? கலகமும் குழப்பமும். இன்றும் கூட, "பாபேல்" என்ற சொல்லை "குழப்பம்" என்று அர்த்தப்படுத்துகிறோம்.

குழப்பம் "ஒவ்வொரு தூர் செயல்களுக்கும்" களம் அமைக்கிறது (யாக். 3:16). இங்கே தூர் செயல் என்றால் "பயனற்றது, கணக்கில்லை" என்று பொருள். இது 1 கொரிந்தியர் 3:12-ல் உள்ள “மரம், வைக்கோல், தாளடி” ஆகியவற்றை நமக்கு நினைவூட்டுகிறது. இந்த உலக ஞானத்தில் செயல்படும் ஒரு ஊழியம் மிகப் பெரியதாகவும் வெற்றிகரமானதாகவும் தோன்றலாம், ஆனால் நியாயத்தீர்ப்பு நாளில் அது எரிந்து போக கூடும். "ஆகையால், நேரத்திற்கு முன் எதையும் நியாயந்தீர்க்காதீர்கள்" (1 கொரி.4:5). சிமிர்னாவில் உள்ள தேவாலயம் தன்னை ஏழை என்று நினைத்தது, ஆனால் அது பணக்காரரானது என்று கர்த்தர் கூறினார்; லவோதேக்கியாவிலுள்ள "பணக்கார தேவாலயம்" ஏழை என ஆண்டவரால் அறிவிக்கப்பட்டது (வெளி. 2:9; 3:14-22).

நமது உள்ளூர் தேவாலயங்களில் நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், தேவ வார்த்தையின் மூலம் ஊழியங்களை அளவிடுவது மனிதர்களின் உலக ஞானத்தால் அல்ல. 

கிறிஸ்தவர்களிடையே பல சண்டைகள், தேவாலயத்தில் பல பிளவுகள், தூய்மையின்மை மற்றும் அமைதி இல்லாதது, இவை எல்லாம் ஏதோ ஒரு தவறு நிகழ்கிறது என்று நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. ஒருவேளை அந்த "ஏதோ" என்பது கர்த்தரின் ஞானம் இல்லாததாக இருக்கலாம்.

தேவ ஞானம் ஆசீர்வாதத்தைத் தருகிறது (God's blessing produces blessing - வ. 18). 

நீதியின் கனிகள்; யாக்கோபு இந்த வார்த்தையை மீண்டும் பயன்படுத்தினார். மனிதன் உருவாக்கும் பலன்களுக்கும், கர்த்தர் அளிக்கும் கனிகளுக்கும் இடையில் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது

கனிகள் என்பது ஓர் உயிரின் விளை பொருளாகும். பழங்களுக்கு உள்ளே மேலும் அதிக கனிகளை உருவாக்கும் மரங்களுக்கான விதைகள் உள்ளன. பொதுவாக விதைதான் விதைக்கப்படுவது, ஆனால் யாக்கோபு இங்குக் கனியானது சமாதானத்தைக் கடைப் பிடிப்பவர்களாலே விதைக்கப்படுகிறது என்கிறார். நாம் கர்த்தர் நமக்கு அளிக்கும் பலனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, ​​அவர்கள் அதில் உண்டு திருப்தி அடைகிறார்கள். பின்னர் அவர்களும் பலனைத் தருகிறார்கள்.

கிறிஸ்தவ வாழ்க்கை என்பது விதைத்து அறுவடை செய்யும் வாழ்க்கை. ஒவ்வொரு வாழ்க்கையும் விதைத்து அறுவடை செய்யும் வாழ்க்கை. நாம் விதைப்பதைத்தான் அறுவடை செய்கிறோம். கர்த்தருடைய ஞானத்திற்குக் கீழ்ப்படிகிற கிறிஸ்தவர் நீதியை விதைக்கிறார், பாவத்தை அல்ல; அவர் அமைதியை விதைக்கிறார், போரை அல்ல. நாம் வாழும் வாழ்க்கை மற்றவர்களின் வாழ்க்கையில் நீதியையும் அமைதியையும் கொண்டு வரவும் இறைவனது பெயர் உயர்த்தப்படவும் உதவுகிறது.

நாம் எப்படியாக இருக்கிறோமோ, அப்படித் தான் வாழ்கிறோம், எப்படி வாழ்கிறோமோ அதைத்தான் விதைக்கிறோம். ஆக நாம் எதை விதைக்கிறோம் என்பதை நாம் வாழும் வாழ்க்கையேத் தீர்மானிக்கிறது. 

நாம் கர்த்தரின் ஞானத்தில் வாழ்ந்தால், நீதியையும் அமைதியையும் விதைத்து, கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம். நாம் மனிதனது உலக ஞானத்தில் வாழ்ந்தால், பாவத்தையும், கலகத்தையும் விதைத்து, "குழப்பத்தையும், எல்லா தூர்ச் செயல்களையும்" அறுவடை செய்வோம்.

நாம் கர்த்தரின் சபையில் ஒரு பிரச்சனையாக இருப்பது நல்லதல்ல. கர்த்தர் வெறுக்கும் பாவங்களில் "சகோதரர்களிடையே விரோதத்தை" விதைப்பது ஒன்று (நீதி. 6:16-19ஐ வாசித்துப் பார்க்கவும்). 

லோத்து உலக ஞானத்தைப் பின்பற்றி, ஆபிரகாமின் குடும்பத்தில் கஷ்டத்தைக் கொண்டுவந்தான்; ஆனால் ஆபிரகாம் கர்த்தரின் ஞானத்தைப் பின்பற்றி அங்கு அமைதியைக் கொண்டுவந்தார். லோத்தின் முடிவு "ஒன்றுக்கும் பயனற்ற செயல்களுக்கு" வழிவகுத்தது. சோதோம் மற்றும் கொமோராவின் அழிவில் அவர் அடைந்த அனைத்தும் எரிந்து சாம்பலாயின. கர்த்தரின் ஞானத்தில் ஆபிரகாம் பல முடிவுகளை எடுத்ததால், அது அவருடைய சொந்த வீட்டாருக்கும், இறுதியில் முழு உலகத்திற்கும் ஆசீர்வாதங்களை அடைவதற்கு வழிவகுத்தது (ஆதி.13ஐ வாசித்துப் பார்க்கவும்).

ஞானத்தைக் கண்டடைகிறவன் பாக்கியவான், புத்தியைப் பெறுகிறவன் பாக்கியவான்” (நீதி. 3:13).


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக