சனி, 25 மார்ச், 2023

நூல் அறிமுகம்

அப்போஸ்தலர் யாக்கோபு எழுதிய பொதுவான நிருபம்-

நூல் அறிமுகம்:


வேதாகமத்திலிருந்து ஒரு புத்தகத்தை முதன்முறையாக கற்றுக் கொள்ளத் துவங்குவது என்பது, அறிமுகமற்ற ஒரு புதிய இடத்திற்குப் பயணம் செல்லத் தயாராவதைப் போன்றது; 

''நீங்கள் எங்குச் செல்ல விரும்புகிறீர்கள், எதற்காகச் செல்கிறீர்கள், எதைப் பார்க்க வேண்டும், எவற்றை அறிய வேண்டும் என விரும்புகிறீர்கள்'' போன்றவற்றைத் தெளிவாகத் திட்டமிடுதல் அவசியம். 

முதன் முறையாக பிரிட்டனுக்குப் பயணம் செல்வதற்கு நாங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, ​​பயணப் புத்தகங்களைப் படிக்கவும், வரைபடங்களை ஆராய்ந்து பார்க்கவும், பல மணி நேரங்கள் செலவிட்டோம். அங்குச் சென்ற போது, ''எதற்காக இந்தப் பயணம்?, எதைத் தேடுகிறோம்?, அதை எப்படிக் கண்டுபிடிப்பது?'' போன்ற கேள்விகளுக்கான பதில் எங்களுக்குத் தெரியும். ஆகையால் அந்தப் பயணத்தை மிகவும் இரசித்தோம். 

அது போலவே, ஒரு நூலை ஆய்வு செய்து கற்றுக் கொள்ளத் தொடங்குவதற்கு முன்பாக, சில கேள்விகள் எழுப்பி கற்கத் துவங்குவது மிகச் சிறந்த வழியாகும். ஆகவே யாக்கோபின் நிருபத்தினை ஆய்ந்து கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக, இந்த நான்கு முக்கியமான கேள்விகளுக்கான பதிலை அறிந்து கொள்வது அதற்கு மிக உதவியாக இருக்கும். 

I. யார் இந்த யாக்கோபு ?

இந்த நூலின் ஆசிரியர் எனத் தன்னை குறிப்பிடும் யாக்கோபு என்பவர் யார்? 

முதல் வசனத்தில் ''தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துக்கும் பணியாளனாகிய யாக்கோபு" என இவர் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் (யாக்கோபு 1:1a). ''யாக்கோபு'' இஸ்ரேலில் ஒரு பிரபலமான பெயர். பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள "யாக்கோவ்" என்பதன் ஒரு வடிவம். புதிய ஏற்பாட்டு வரலாற்றிலும் இதே பெயரைப் பலர் கொண்டிருந்தனர்.

a. யாக்கோபு-செபதேயுவின் மகன்:

முதலாவது நாம் பார்க்க இருக்கும் யாக்கோபு ஒரு மீனவர் (மத். 4:17- 22). இவரை ஆண்டவர் சீடராகத் தெரிவு செய்து, தன்னோடு ஊழியம் செய்யும்படியாக அழைத்தார். ஆண்டவரது அழைப்பை எற்று, கிறிஸ்தின் முதன்மையான சீடராக பின் தொடர்ந்தார். இவரை ''செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபு'' என வேதம் குறிப்பிடுகிறது. யோவான் இவரது சகோதரர். இவ்விருவரும் தீவிர மன எழுச்சியுடன், ஆவேசமாகப் பேசுவதன் காரணமாக "இடி முழக்கத்தின் மக்கள்" என்று கிறிஸ்தால் பிரியத்துடன் அழைக்கப் பட்டார்கள் (மாற்கு 3:17; லூக்கா 9:51-56). 

இந்த யாக்கோபுவே, கிறிஸ்துக்காக இரத்த சாட்சியாக உயிரைக் கொடுத்த முதல் பிரதான சீடராவார். இவர் ஏரோதுவால் கி.பி 44இல் கொல்லப்பட்டார் (அப். 12:1-2). ஆகவே இந்த நிருபத்தை இவர் எழுதியிருக்க வாய்ப்பு இல்லை.

b. யாக்கோபு-அல்பேயுவின் மகன்:

இரண்டாவதாக நாம் பார்ப்பது "அல்பேயுவின் குமாரன்" என அழைக்கப்பட்ட யாக்கோபு. இவரும் ஆண்டவரது சீடர்களில் ஒருவர் ஆவார் (மத். 10:3; அப்.1:13). இவரைப் பற்றி மிகக் குறைவாகவே வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மத்தேயுவையும் (லேவி) "அல்பேயுவின் குமாரன்" என்கிற அடையாளத்துடன்  வேதம் குறிப்பிடுவதால், இவர்கள் இருவரும் சகோதரர்களாக இருந்திருக்கக் கூடும் என சில வேத அறிஞர்கள் ஊகிக்கிறார்கள் (மாற்கு 2:14). எனினும் நாம் படிக்கப் போகும் இந்நிருபத்தை, இவர் எழுதியதற்கு ஆதாரமாக எந்தக் குறிப்பும் இல்லை. 

c. யாக்கோபு-யூதாவின் சகோதரர்:

மூன்றாவதாக நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படும் யாக்கோபு, ஆண்டவரது மற்றொரு சீடராகிய யூதாவின் சகோதரர் ஆவார். 

ஆண்டவரது சீடர்களில் இருவர் யூதா என்ற பெயருடன் இருந்தனர். அவர்களில் ஒருவர் யூதாஸ் ஸ்காரியோத் எனவும், மற்றவர் "யாக்கோபின் சகோதரனாகிய யூதா'' எனவும் அழைக்கப்பட்டனர் (லூக்கா 6:16). 

இந்த யூதா, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு என மற்ற நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படுகிறார் (மத். 10:3/மாற். 3:18). யூதாவின் சகோதரராகிய இந்த யாக்கோபைக் குறித்தும் வேதத்தில் அதிகமான குறிப்புகள் இல்லை. 

d. யாக்கோபு-நம்முடைய கர்த்தரின் சகோதரன்:

இவரே இந்த நிருபத்தை எழுதிய ஆசிரியராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவர் தன்னை ''ஆண்டவரின் சகோதரர்'' என அறிமுகம் செய்து கொள்ளும் வழியை விரும்பவில்லை. மாறாக "தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு" எனத் தன்னை தாழ்மையுடன் அறிமுகம் செய்து கொள்கிறார். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்க்கு சகோதர சகோதரிகள் இருந்ததாக வேதம் கூறுகிறது (மத்.13:55-56, மாற்கு 6:3). அவர்களில் ஒருவரது பெயர் யாக்கோபு. ஆண்டவர் ஊழியம் செய்த காலத்தில் அவரது சகோதரர்கள் அவரை விசுவாசிக்கவில்லை (யோவான் 7:1-5; மாற்கு 3:31-35). ஆனாலும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னர், அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் சீடர்களுடன் இனைந்து மேல் வீட்டு அறையில் ஜெபித்தார்கள் (அப் 1:14). 

அப்படியென்றால், எந்த நிகழ்வு அவர்களை அவநம்பிக்கையிலிருந்து விசுவாசத்திற்கு மாற்றியது?

இதற்கான குறிப்பை 1-கொரிந்தியர் 15:7இல் பவுல் குறிப்பிடுகிறார். ஆம், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு யாக்கோபுக்குக் காட்சி தந்தார். இந்த தரிசனம் யாக்கோபை மாற்றியது எனப் புரிந்து கொள்ள முடியும். அவர் இந்த தரிசனத்தை மற்ற சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்டார். இயேசு கிறிஸ்தே உண்மையான இரட்சகர் என்று ஏற்றுக் கொண்டார். 

பின்னர் யாக்கோபு எருசலேம் தேவாலயத்தின் முதன்மையான தலைவராக உயர்ந்தார். பவுல் அவரை "திருச்சபையின் தூண்" என அழைத்தார் (கலா. 2:9). அப்போஸ்தலர் 15ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள தேவாலய சிறப்பு கூடுகையில், இவர் தலைமையேற்று, அதை நெறிப்படுத்தினார். 

பேதுரு சிறையிலிருந்து விடுதலையானபோது, ​​அதை யாக்கோபுக்கு அறிவிக்கும்படி சிறப்புச் செய்தியாளரை அனுப்பினார் (அப். 12:17); பவுல் எருசலேமுக்குச் சென்றபோது, ​​யாக்கோபுக்கு வாழ்த்துக்களையும், புறஜாதி யாரிடமிருந்து சிறப்பு “அன்பு காணிக்கையையும்” கொண்டு வந்தார் (அப். 21:18-19).

யாக்கோபு மரணம் அடைந்த விதத்தைக் குறித்த எந்தவித குறிப்பும் வேதாகமத்தில் இல்லை. ஆனால் கி.பி 62 இல் அவர் இரத்தசாட்சியாக மரித்தார் என்று பாரம்பரியம் கூறுகிறது. கிறிஸ்தைக் குறித்து யாக்கோபு வல்லமையாகச் சாட்சி கொடுத்தார். அதை எருசலேமிலிருந்த சமயத் தலைவர்கள் மிகவும் வெறுத்தார்கள். ஆகவே அவர்கள் எருசலேம் தேவாலயத்திலிருந்து அவரை கீழே தள்ளிவிட்டு, பின்னர் அடித்துக் கொன்றதாக நம்பப்படுகிறது. 

அவரது இரட்சகர் தம்மைச் சிலுவையில் அறைந்து கொலை செய்தவர்களுக்கு ஜெபித்ததைப் போன்றே, இவரும் "அப்பா, பிதாவே, அவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று, அவர்களுக்கே தெரியாது" எனக் கூறி  ஜெபித்ததாகக் கூறப்படுகிறது.

யாக்கோபு எப்படிப்பட்ட மனிதர்? அவர் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே எருசலேம் தேவாலயத்தின் தலைமை பொறுப்பை அடைந்தார். ஆகவே நிச்சயமாக அவர் ஒரு ஆழ்ந்த ஆவிக்குரிய மனிதராக இருந்திருக்க வேண்டும். அவருடைய முக்கியத்துவம் அப்போஸ்தலர் 15ம் அதிகாரத்தில் காணப்படுகிறது. அந்த சிறப்பு கூடுகைக்குத் தலைமை வகித்தார். அனைத்து பிரிவினரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதித்தார். பின்னர் வேதத்தின் வார்த்தைகள் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்ததன் மூலம் சபையில் அமைதியைக் கொண்டு வந்தார். அவர் ஒரு திருமணமானவர் என்று பவுல் குறிப்பிடுகிறார் (1கொரி. 9:5). 

யாக்கோபு, ஒரு ஜெப வீரர். இந்த நிருபத்தில் பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை விளக்குவதில் அது வெளிப்படுகிறது. அவர் மிகவும் பிரார்த்தனை செய்தார் என்றும், அதனால் அவரது முழங்கால்கள், வயதான ஒட்டகத்தைப் போலக் கடினமாகத் தேய்ந்து இருந்ததாகவும் பாரம்பரியம் சொல்கிறது.

யாக்கோபு யூத பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்டவர். மோசேயின் நியாய பிரமாணத்தின் சட்ட விதிகள் குறித்த அவரது அறிவு, இந்த நிருபத்தில் தனித்துத் தெரிகிறது. அவர் பவுலிடம் எருசலேம் தேவாலயத்தில் உள்ள கிறிஸ்தவ நியாயப் பிரமாண வாதிகளைச் சமாதானப்படுத்த உதவுமாறு கேட்டுக் கொண்டார்(அப். 21:18-25). 

யாக்கோபின் நிருபத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டளை சொற்கள் உள்ளன. யாக்கோபு அவற்றைக் கடைப்பிடிக்குமாறு பரிந்துரைக்கவில்லை, மாறாக  கீழ்ப்படியுமாறு கட்டளையிட்டார்! 

இந்த நிருபத்தில், அவர் பழைய ஏற்பாட்டை ஐந்து முறை மட்டுமே மேற்கோள் காட்டினார். ஆனால் பழைய ஏற்பாட்டின் போதனைகளிலிருந்து பல குறிப்புகள் இந்த நூலில் உள்ளது. 

யாக்கோபு அவிசுவாசியாக இருந்த காலத்திலும் கூட, ​​ஆண்டவர் கற்பித்த உபதேசங்களைக் கவனத்துடன் கேட்டு மனதில் பதித்து வைத்து இருக்க வேண்டும்; ஏனெனில், அவருடைய இந்த நிருபத்தில், நமது ஆண்டவரின் மலைப்பிரசங்கத்திற்கு இசைய ஏராளமான குறிப்புகள் உள்ளன. இந்த பத்திகளை ஒப்பிடு வாசித்துப் பாருங்கள்:

யாக்கோபு 1:2—மத்தேயு 5:10–12

யாக்கோபு 1:4—மத்தேயு 5:48

யாக்கோபு 1:5—மத்தேயு 7:7–12

யாக்கோபு 1:22—மத்தேயு 7:21–27

யாக்கோபு 2:11—மத்தேயு 5:27

யாக்கோபு 4:3—மத்தேயு 6:5

யாக்கோபு 4:4—மத்தேயு 7:24

யாக்கோபு 4:11-12—மத்தேயு 7:1-5

யாக்கோபு 5:1–3—மத்தேயு 6:19–21

எருசலேம் தேவாலயத்திலிருந்து ஆதி கிறிஸ்தவர்களை, மிகவும் கடினமான ஒரு கால கட்டத்தில் யாக்கோபு  வழி நடத்தினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது ஒரு மாற்றத்தின் காலமாக இருந்தது. அத்தகைய நேரங்கள் எப்போதும் கடினமும் வருத்தமும் தருபவை. எருசலேமிலிருந்த யூத கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டுச் சட்டத்தை இன்னும் கடைப்பிடித்தனர். ஆலயமும் அதன் சடங்குகளும் இன்னும் முழு செயல்பாட்டிலிருந்தன (அப். 21:20). 

மேலும் கிருபையின் செய்தியைக் குறித்த வெளிச்சமானது இன்னமும் முழுமையாக வெளிப்படவில்லை. ஒரு வேளை ரோமர், கலாத்தியர் மற்றும் எபிரேயர் நிருபங்களைப் படித்த நாம், இந்த ஆரம்பக்கால விசுவாசிகளை, சடங்காச்சார கிறிஸ்தவர்கள் என எளிதாக நியாயந்தீர்க்க வாய்ப்புள்ளது. ஆனால் நாம் அவ்வாறு செய்யக்கூடாது. அவர்கள் இரட்சிக்கப்பட்ட மக்கள். ஆனால் இன்னும் அவர்கள் நியாயப் பிரமாண சட்டத்தின் நிழலிலிருந்தனர். யாக்கோபு அவர்களைக் கர்த்தரது கிருபையின் பிரகாசமான வெளிச்சத்திற்கு நேராக வழி நடத்தினார். 

அத்துடன் ஆன்மீக அனுபவம் மற்றும் அறிவு அளவுகளில் பவுலுக்கும் எருசலேம் தேவாலயத்தை வழி நடத்தியவர்களுக்கும் வேறுபாடுகள் இருந்த போதிலும், அவர்களுக்கிடையில் போட்டியோ, கருத்து முரண்பாடோ இல்லை (கலா. 2:1-10).

II. யாருக்கு யாக்கோபு எழுதினார்?

“ சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரத்தாருக்கும் வாழ்த்துக்கள்” என முதல் வசனம் குறிப்பிடுகிறது (யாக்கோபு 1:1).  "பன்னிரண்டு கோத்திரங்கள்" என்ற சொல், பல தேசங்களில் வாழ்ந்த இஸ்ரேலின் மக்களைக் குறிக்கிறது (அப் 26:7). 

ஆகவே யாக்கோபு இதைப் பாலஸ்தீனத்திற்கு வெளியே வாழும் யூத கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். பல யூதர்கள் தங்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு வெளியே வாழ்ந்தது, தேசத்தின் ஆன்மீக வீழ்ச்சிக்குச் சான்றாகும். கர்த்தர் அவர்களைச் சிதறடிக்க வேண்டியிருந்தது (உபா. 4:25-27). பெந்தெகொஸ்தே நாளில், பேதுரு அந்த திரளான யூத சபையில் பிரசங்கித்த போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் பேசினார் (அப். 2:9-11).

யாக்கோபு தனது கடிதத்தைக் கிறிஸ்தவ யூதர்களுக்கு அனுப்பினார். குறைந்தபட்சம் பத்தொன்பது முறை அவர்களை "சகோதரர்கள்" என்று அழைத்தார். இது "மாம்சத்தில் உள்ள சகோதரர்கள்" (சக யூதர்கள்) மட்டுமல்ல, "கர்த்தருக்குள் சகோதரர்கள்" என்பதையும் குறிக்கிறது. 

யாக்கோபு மறு பிறப்பு (யாக்.1:18) உபதேசத்தில் மிகவும் தெளிவாக இருந்தார். சபை ஐக்கியத்தில் இல்லாத பொல்லாத மனிதர்களையும் யாக்கோபு  குறிப்பிடுகிறார் (உதாரணம்: பணக்காரர்கள் யாக்.5:1-6).

யாக்கோபு 1:1 இல் ''சிதறியிருக்கிற'' எனும் வார்த்தை ஒரு சுவாரஸ்யமான சொல்லாகும். பாலஸ்தீனத்திற்கு வெளியே வாழும் யூதர்களை அடையாளம் காண "சிதறல்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இதன் கிரேக்க வார்த்தையானது "விதைகளைச் சிதறடித்தல்" என்ற கருத்தைக் கொண்டுள்ளது. யூத விசுவாசிகள் துன்புறுத்தலின் முதல் அலையில் சிதறடிக்கப்பட்டபோது (அப். 8:1-4), அது உண்மையில் பல இடங்களில் வசனங்களை விதைத்தது; அந்த விதையின் பெரும்பகுதி பலனைத் தந்தது (அப். 11:19-21).

ரோமானியர் பேரரசு முழுவதும் சிதறிக் கிடந்த கிறிஸ்தவ யூதர்களுக்குத் தேவைகளும், பிரச்சனைகளும் ஏராளமாக இருந்தது. அவர்கள் யூதர்களாக இருப்பதால் புறஜாதிகளால் நிராகரிக்கப்பட்டார்கள். கிறிஸ்தவர்களாக இருந்ததால், சொந்த இனமக்களுடைய நிராகரிக்கப்பையும் எதிர் கொண்டார்கள். இந்த நிருபம், விசுவாசிகளில் பெரும்பாலோர் ஏழைகள் என்றும், அவர்களில் சிலர் பணக்காரர்களால் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

III. யாக்கோபு  ஏன் எழுதினார்?

வேதத்தில் ஒவ்வொரு நூலிற்கும், அதற்கான சொந்த சிறப்பு மையக் கருத்து, பயன் மற்றும் நோக்கம் (இலக்கு) உள்ளது (Theme, Purpose, Objective & Goal)

பவுல் ரோமர் புத்தகத்தை ஏன் எழுதினார்? அது ரோமானிய யூத கிறிஸ்தவர்களுக்குக் கிருபையின் சத்தியத்தை அறிமுகம் செய்யவும், அத்துடன் தனது வருகைக்கு அவர்களை ஆயத்தப்படுத்தவும் எழுதினார். 

கொரிந்துவில் உள்ள சபையில் காணப்பட்ட சில பிரச்சனைகளைச் சரி செய்வதற்காக முதலாம் கொரிந்து நிருபம் எழுதப்பட்டது. 

இரட்சிக்கப்பட வேண்டும் எனில் விருத்த சேதனம் செய்வது கட்டாயம், போன்ற தவறான சடங்காச்சார போதனைகளுக்கு எதிராக அந்த சபை மக்களை எச்சரிப்பதற்காக, கலாத்தியர் நிருபம் எழுதப்பட்டது.

அப்படியென்றால் யாக்கோபு நிருபம் எதற்காக எழுதப்பட்டது?

இந்த புத்தகத்தை நீங்கள் வாசிக்கும்போது, ​​​​அதில் யூத கிறிஸ்தவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், சபை ஐக்கியத்திலும் பல சிக்கல்களை எதிர் கொண்டதைக் காண முடியும். 

முதலாவது அவர்கள் கடினமான விசுவாச பரீட்சைகளை (Test & Trails) கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதேவேளை இச்சை நிறைந்த பாவ சோதனைகளையும் (Temptations) எதிர்கொண்டனர். 

இரண்டாவதாகச் சபையின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று சாட்சியில்லாத வாழ்க்கை. பலர் தாங்கள் விசுவாசிகள் என அறிக்கை செய்தனர். ஆனால் தாங்கள் கூறுவது போல வாழத் தவறினர். விசுவாசிகளில் ஏழை பணக்காரர்கள் வேறுபாடு காணப்பட்டது. செல்வந்தர்கள் ஏழைகளைக் கொள்ளையடித்தனர். 

மூன்றாவதாக, அவர்கள் தேவாலயத்தில் உள்ள பொறுப்புகளுக்கு, குறிப்பாகப் போதக ஊழியங்களுக்குப் போட்டியிட்டனர். நாவடக்கம் இல்லாதது ஓர் கடுமையான பிரச்சனையாக இருந்தது. 

நான்காவதாக,சபையில் சண்டைகள் மற்றும் பிளவுகளை உருவாக்கும் அளவிற்கு கூட பேசினார்கள். ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர். சபையில் ஐக்கியம் இல்லை.

இறுதியாக, உலக பொருட்கள் மீதான பற்று என்பது மற்றொரு பெரும் பிரச்சனையாக இருந்தது. சபை மக்களில் சிலர் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் இருந்தார்கள். அதனால் உடல்ரீதியாக நோய் வாய்ப்பட்டு இருந்தனர். சிலர் கர்த்தரையும் சபையையும் விட்டும் விலகிச் சென்றனர்.

இந்தப் பிரச்சினைகளின் பட்டியலை நாம் மதிப்பாய்வு செய்து பார்க்கும் போது, ​​சராசரி உள்ளூர் சபையைச் சூழ்ந்திருக்கும் இன்றைய பிரச்சினைகளிலிருந்து, இவை மிகவும் வேறுபட்டதாக உங்களுக்குத் தோன்றுகிறதா? 

இன்றைக்கும் கூட, ஒரு காரணத்திற்காக அல்லது இன்னொரு காரணத்திற்காகத் துன்பப்படுபவர்கள், நம் தேவாலயங்களில் இருக்கிறார்கள் அல்லவா?

பேசுவது ஒன்று, செய்வது ஒன்றாக இருக்கும் விசுவாசிகள், இன்றும் நமது சபையில் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள் இல்லையா? 

உலகப்பிரகாரமான மதிப்பை நாடி வாழ முற்பட முயலும் மக்கள், சபைக்கு இன்றைக்கும் ஒரு தீவிரமான பிரச்சனை தானே? 

நாவை அடக்க முடியாத கிறிஸ்தவர்கள், இப்போதும் சபையில் இருப்பதைப் பார்க்கிறோம் இல்லையா? 

இன்றைக்கும் சபையில் காணப்படும், அதேவிதமான சிக்கல்களைத் தான் யாக்கோபு நிருபமும் கையாள்கிறது. ஆனால் இந்த நிருபம் சபையின் பலவிதமான பிரச்சனைகளைப் பற்றி மாத்திரம் விவாதிக்கவில்லை. இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு மூல காரணத்தைப் பற்றி விளக்குகிறது. அது ''ஆன்மீக முதிர்ச்சியின்மை'' (Spiritual Immaturity)

இந்த அடிப்படைக் கருப்பொருளைப் பற்றிய குறிப்பை 'பூரண'' என்ற வார்த்தை நமக்குத் தருகிறது. யாக்கோபு  ''பூரண'' என்ற வார்த்தையை இந்த நூலில் பலமுறை பயன்படுத்துகின்றார். இது "முதிர்ந்த, அல்லது முழுமையான (Complete)" என்று பொருள்படும் ஒரு வார்த்தை (யாக். 1:4, 17, 25; 2:22; 3:2 ).

ஆதிக் கிறிஸ்தவ சபை விசுவாசிகள், முதிர்ச்சியாகச் செயலாற்ற வேண்டிய தேவை இருந்தது.  ஆகவே கிறிஸ்தவ வாழ்க்கையில் முதிர்ச்சி அடைய, விசுவாசிகள் கடைப்பிடிக்கத் தேவையான அவசியமான குணங்களைப் பற்றி இந்த நிருபம் போதிக்கிறது. 

"ஒரு பரிபூரண மனிதன்" (யாக். 3:2) என யாக்கோபு குறிப்பிடுவது, ஒரு  பாவமற்ற மனிதனை (Not a Sinless) குறிக்கவில்லை. மாறாக முதிர்ச்சியுள்ள, சமநிலையில் வளர்ந்த ஒரு மனிதனைக் குறிக்கிறது (Matured & Balanced).

இன்றைக்கும் சபையின் மிகப்பெரிய தேவைகளில் ஒன்று ஆன்மீக முதிர்ச்சியாகும். பல சபைகள் பெரியவர்களுக்கான பட்டறைகளுக்குப் பதிலாகக் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கங்களாக இருக்கின்றன. அங்கத்தினர்கள் தங்களுக்குத் தேவையான திடமான ஆவிக்குரிய உணவை உண்ணும் அளவுக்கு முதிர்ச்சியடையாததால், அவர்களுக்குப் பால் ஊட்டப்பட வேண்டியதாக இருக்கிறது (எபி. 5:11-14). 

இந்த நிருபத்தில் சொல்லப்பட்ட சிக்கல்களைக் கவனமாகப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் சிறு குழந்தைகளின் சிறப்பியல்பான குணங்கள் என்பதை நீங்கள் காணலாம்:

சிரமங்களில் பொறுமையின்மை—1:1–4

பேசினாலும் உண்மையாக வாழவில்லை - 2:14.

நாவின் கட்டுப்பாடு இல்லை - 3:1.

சண்டை மற்றும் ஆசை - 4:1.

"பொம்மைகளை" சேகரிக்கும் ஆசை (பொருள் மீதான பற்று) - 5:1.

எனது கால் நூற்றாண்டுக்கும் மேலான ஊழிய அனுபவத்திற்குப் பிறகு, ஆன்மீக முதிர்ச்சியின்மையே, நமது சபைகளில் முதன்மையான பிரச்சனை என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

ஆண்டவர் தனது ஊழியத்தைத் தொடர மன முதிர்ச்சி நிறைந்த ஆண்களையும், பெண்களையும் தேடுகிறார். ஆனால் அவர் காணக்கூடியதெல்லாம் ஒருவரோடொருவர் கூட பழக முடியாத சிறு குழந்தைகளாகும்.

இந்த நிருபத்தின் ஐந்து அதிகாரங்கள் முதிர்ச்சி அடைந்த கிறிஸ்தவர் உறுதியாக பின்பற்ற வேண்டிய ஐந்து பண்புகளைப் பரிந்துரைக்கின்றன. 

1. சோதனையில் பொறுமை (Patient in Testing).

    a. விசுவாச பரீட்சை (Test/Trails on Outside-1:1-12).

    b. பாவ சோதனை (Temptations on the Inside-1:13-27).

2. சத்தியத்தை கைக்கொள்ளுதல் (Practice the Truth).

    a. விசுவாசம் மற்றும் அன்பு (Faith & Love-2:1-13).

    b. விசுவாசம் மற்றும் நற்செயல் (Faith & Work).

3. நாவடக்கம் (Power over Tongue).

    a. உபதேசம் (Exhortation-3:1-2).

    b. விளக்க காட்சிகள் (Illustrations-3:3-12).

    c. பயன்பாடுகள் (Applications-3:13-18).

4. சமாதான காரணர் (Peace Maker).

    a. மூன்று போர்கள் (Three Wars-4:1-3).

    b. மூன்று எதிரிகள் (Three Enemies-4:4-7).

    c. மூன்று அறிவுரைகள் (Three Admonitions-4:8-17).

5. சிக்கல்களில் பிரார்த்தனை (Prayerful in Troubles).

    a. பொருளாதார சிக்கல் (Economic Troubles-5:1-9).

    b. உடல் சார்ந்த சிக்கல் (Physical Troubles-5:10-16).

    c. தேசிய பிரச்சனைகள் (National Troubles-5:17-18).

    d. சபை சார்ந்த பிரச்சனைகள் (Church Troubles-5:19-20).

இது, இந்த நூலைக் கற்றுக் கொள்வதற்கு உதவும் ஒரு அணுகுமுறை மட்டுமே. இதைப் போன்று வேறு விதமான வழிகளிலும் படிக்க இயலும். 

இந்த நிருபத்தின் ஒவ்வொரு அத்தியாயங்கள் ஆராயப்படும்போதும், ​​ஆன்மீக முதிர்ச்சியையும், அதை எவ்விதம் அடையலாம் என்பதும் வலியுறுத்தப்படும்.

யாக்கோபின் நிருபம் தர்க்கரீதியாக எபிரேயர் நிருபத்தைப் பின்பற்றுகிறது, ஏனெனில் எபிரேய நிருபத்தின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்று ''ஆன்மீக பரிபூரணம்'' (Spiritual Perfection). பரிபூரணம் (Perfection) என்ற வார்த்தை எபிரேய நிருபத்தில் குறைந்தது பதினான்கு முறை காணப்படுகிறது. 

முக்கிய வசனம் எபிரேயர் 6:1-2—“பூரணராகும்படி கடந்து போவோமாக” அதாவது “ஆன்மீக பரிபூரணம்”. எபிரேய நிருபத்தை எழுதியவர் கிறிஸ்தில் இருக்க வேண்டிய பரிபூரண இரட்சிப்பை விளக்கினார். 

இந்த முழுமையான இரட்சிப்பைக் கட்டியெழுப்பவும், ஆவிக்குரிய முதிர்ச்சியை அடையவும் யாக்கோபு சபை மக்களுக்கு அறிவுறுத்தினார். கிறிஸ்தின் பரிபூரண கிருபை இல்லாமல் விசுவாசிகள் முழுமையடைய முடியாது.

IV. இந்த நூலைக் கற்றுக் கொள்வதிலிருந்து நாம் எவ்வாறு அதிகப் பலன்களைப் பெறுவது?

இந்த நூலின் மையக் கருத்து ''ஆன்மீக முதிர்ச்சி'' (Spiritual Maturity) என்பதால், கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம்? எனும் கேள்வியுடன் தொடங்க வேண்டும். 

அதாவது, நம் சிந்தனை மற்றும் இருதயத்தின் மனோபாவங்களை (Mind & Heart Attitudes) தற்பரிசோதனை செய்வதிலிருந்து தொடங்க வேண்டும். 

அதற்குக் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய ஐந்து இன்றியமையாத தேவை  உள்ளது (Five Essentials)

1. மறு பிறப்பின் அனுபவம் (Born Again):

முதல் தேவை, நாம் மீண்டும் பிறந்த அனுபவம். ஆன்மீகப் பிறப்பு இல்லாமல் ஆன்மீக முதிர்ச்சி இருக்க முடியாது. இந்த நிருபத்தில் யாக்கோபு புதிய பிறப்பைக் குறித்துக் குறிப்பிடுகிறார்: "அவர் சித்தங்கொண்டு நம்மைச்  சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்" (யாக். 1:18). 

இதற்கு இணையான மற்றுமொரு தேவ வசனம்; “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.” (1-பேதுரு 1:23).

ஒரு குழந்தை பிறப்பதற்குத் தாயும், தந்தையும் இன்றியமையாததாக இருப்பது போலவே, ஒரு ஆன்மீகக் குழந்தை பிறப்பிற்கும் பெற்றோர்கள் உண்டு: அது கர்த்தரின் வார்த்தை மற்றும் தூய ஆவியானவர் (Word of God & Spirit of God). கர்த்தருடைய வார்த்தை  (Word of God ) அழிவில்லா வித்து என வேதம் குறிப்பிடும் இரண்டு வசனங்களை நாம் ஏற்கனவே வாசித்தோம். 

யோவான் 3:5-6 இல் உள்ள வசனங்கள், தேவனுடைய ஆவியைக் குறிப்பிடுகிறது (Spirit of God). (இங்கே "ஜலத்தினாலும்" என்பது உடல் பிறப்பைக் குறிக்கிறது என்பது எனது நம்பிக்கை. அனைத்து குழந்தைகளும் "ஜலத்தினால் பிறந்தவை." 'யோவான் 3:4 ன் அடிப்படையில், நிக்கோதேமு  மறு பிறப்பை, உடல் பிறப்பின் அடிப்படையில் நினைத்தார்.)

அப்படியானால், எப்படி ஒரு நபர் "மறுபடி பிறந்தார்" என அறிந்து கொள்ள முடியும்? 

தேவனுடைய ஆவியானவர், இயேசு கிறிஸ்தை விசுவாசிக்கும் ஒரு பாவியின் இருதயத்தில், கர்த்தரின் வார்த்தையை (அழிவில்லா வித்து) விதைப்பதன் வழியாக, அவனுக்குள் (அவளுக்குள்), ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்குகிறார். இந்த மறு பிறப்பு ஒரு அதிசயம். 

ஆவியானவர், ஒருவர் செய்த பாவத்தை உணர்த்துவதற்குத் தேவ வார்த்தையைப் பயன்படுத்துகிறார். பின்னர் இரட்சகரை வெளிப்படுத்துகிறார். நாம் விசுவாசத்தினால் இரட்சிக்கப்படுகிறோம் (எபே. 2:8-9).விசுவாசம் தேவனுடைய வார்த்தையிலிருந்து வருகிறது (ரோ. 10:17).

2. தற்பரிசோதனை (Honestly Examine Ourselves).

மறுபிறப்பை அடைந்தவன் தனது செயல்களின் நோக்கங்களை நேர்மையாக ஆராய வேண்டும். யாக்கோபு எழுதியவற்றிலிருந்து அதிகமானவற்றை கற்றுக் கொள்வதற்கு இன்றியமையாத இரண்டாவது அவசியம்: வேத வார்த்தையின் வெளிச்சத்தில் நம் வாழ்க்கையை நேர்மையாக ஆராய வேண்டும். 

யாக்கோபு வேதத்தை ஒரு கண்ணாடியுடன் ஒப்பிடுகிறார் (யாக் 1:22). நாம் தேவ வார்த்தையைப் படிக்கும்போது, ​​நமது உள்ளத்தை ஒரு தெய்வீகக் கண்ணாடியின் வழியாகப் பார்க்கிறோம். நாம் உண்மையில் எவ்விதம் இருக்கிறோமோ அவ்விதமாகவே அதில் வெளிப்படுகிறது. முதன்முறையாகக் கண்ணாடியைப் பார்த்த பழமையான ஆதி மனிதர்களது கதைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அவன் தான் பார்த்த தனது உருவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து கண்ணாடியை உடைத்தான்! பல கிறிஸ்தவர்களும் அதே தவற்றைச் செய்கிறார்கள்: அவர்கள் தங்களைத் தாங்களே நியாயந்தீர்க்க வேண்டியிருக்கும் போது, ​​போதகர் அல்லது வேதத்தை விமர்சிக்கிறார்கள். 

ஆனால் யாக்கோபு நம்மை எச்சரிக்கிறார். நாம் பார்ப்பதில் நேர்மையாக இருக்க வேண்டும். வெறுமனே கண்ணாடியில் உருவத்தைப் பார்த்துவிட்டு விலகிச் செல்லக்கூடாது. தேவனுடைய வார்த்தை கண்ணாடி மட்டுமல்ல, அது ஒரு X-ray அல்லது Scanner போன்றது. கர்த்தருடைய வார்த்தை உயிருள்ளது. ஆற்றல் வாய்ந்தது. எந்த கூர்மையான ஆயுதத்தை விட நுட்பமானது. அது ஆன்மாவையும், ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; உடல் மச்சையையும், எலும்பையும் அவ்வாறே பிரித்து ஊடுருவுகிறது. உள்ளத்தின் நோக்கங்களையும் சீர் தூக்கிப் பார்க்கிறது. ஆண்டவரது பார்வைக்கு மறைவாய் ஒன்றும் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும் (எபி. 4.12)

3. கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிதல் (Obey to God's Words).

தற்பரிசோதனை நம்மை மூன்றாவது இன்றியமையாததற்கு நேராக வழி நடத்துகிறது: தேவ வார்த்தை, நமக்குக் கற்பிப்பதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்காக என்ன விலை கொடுத்தாலும் சரி. 

"இறை வார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாகவும், இருக்க வேண்டும்" (யாக். 1:22). 

திருமறை ஆய்வு வகுப்பில் கலந்து கொள்வதும், பாடத்தைப் பகிர்ந்து கொள்வதும், அதைப் பற்றி விவாதிப்பதும் எளிதானது. ஆனால் அன்றாட உலக வாழ்க்கையில், நாம் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்தி வாழ்வது மிகக் கடினமான சவால். ஆசீர்வாதம் நிறைந்த வாழ்க்கை, தேவ வார்த்தையைப் படிப்பதில் வருவதில்லை, மாறாக அந்த வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அதைக் கடைப் பிடிப்பதில் வருகிறது. நாம் கீழ்ப்படியத் தயாராக இல்லாவிட்டால், கர்த்தர் நமக்குக் கற்பிக்கக் கடமைப்பட்டவர் அல்ல (யோவான் 7:17).

4. கடினமான விசுவாச சோதனைகளை எதிர் கொள்ளுதல் (Extra Trails & Tests on Faith).

நான்காவது இன்றியமையாதது, சில கூடுதல் சோதனைகள் மற்றும் விசுவாச பரீட்சைகளை எதிர் கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சியில் நாம் தீவிரமாக இருக்கும் போதெல்லாம், எதிரியும் நம்மை வீழ்த்துவதில் ஆதிக தீவிரம் காட்டுகிறான். 

அதற்கு உங்களுக்கு இன்னும் பொறுமை அதிகம் தேவை என்று உணரலாம். மேலும் சோதனைகளுக்குத் தயாராக இருங்கள், ஏனெனில் "துன்பங்களைத் தாங்கிக் கொள்வது பொறுமையைக் கொடுக்கும்" (ரோமர். 5:3). வேதாகம கற்றலின், உண்மையான தேர்வுகள் வகுப்பறையில் வைத்து நடப்பவை அல்ல, அவை வாழ்க்கைப் பள்ளியில் வருகின்றன.

பொறுமையில் வளர்வதற்கு ஆசைப்பட்ட ஒரு மனிதரைக் குறித்து சமீபத்தில் படித்தேன். அவர் தனது வாழ்க்கையில் சிறிய காரியங்களிலும் பொறுமையற்று நிதானம் இழப்பவராக இருந்தார். அந்த முதிர்ச்சி அடையாத தனது குணத்தை அறிந்திருந்தார். அவர் பொறுமையில் வளர விரும்பினார். “ஆண்டவரே, பொறுமையில் வளர எனக்கு உதவுங்கள். என் வாழ்க்கையின் இந்தப் பகுதியில் அதிக சுயக்கட்டுப்பாடு இருக்க வேண்டும்'' என மனப்பூர்வமாக ஜெபித்தார். 

அன்றைய நாள் காலை வேலைக்குப் புறப்பட்டு சென்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் செல்ல வேண்டிய ரயிலைத் தவறவிட்டார். அடுத்த ஐம்பது நிமிடங்கள் சமூகத்தின் பல அவலநிலைகளைப் பற்றிக்  குறை கூறி சக பயணிகளிடம் புகார் செய்தார். அடுத்த ரயில் வந்தது. அப்போது தான் கடந்த ஐம்பது நிமிடங்களாக எவ்வளவு முட்டாள்தனமாகப் பேசினோம் என்பதை உணர்ந்தார். "இறைவன், நான் பொறுமையில் வளர கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கொடுத்தார், ஆனால் நான் செய்ததெல்லாம், குறைகள் பேசி எனது  பொறுமையின்மையை வெளிப்படுத்தியதுதான்!" என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

இந்த வேத ஆய்வில் தொடர்வது தேவையற்றது என்று நீங்கள் முடிவு செய்யும் நேரம் வரலாம். சாத்தான் சோம்பல் உணர்வுகளைத் தூண்டி, இவையெல்லாம் வீணான வேலை. வேதத்தைப் படித்து ஒன்றும் ஆவப் போவதில்லை எனச் சோர்வுற வைக்கக்கூடும். 

வேதத்தை கற்றுக் கொள்வதைத் தொடராதே! என நீங்கள் பின்வாங்க வேண்டிய அளவுக்கு விஷயங்களை உங்களுக்குக் கடினமாக்கலாம். அந்த சோர்வின் நேரம் வரும்போது, உண்மையில், ​​நீங்கள் சொந்த வாழ்க்கையில் ஒரு புதிய மற்றும் அற்புதமான ஆசீர்வாதத்தின் விளிம்பில் இருப்பீர்கள். இதுவே முதிர்ச்சியின் புதிய படியாகும். சாத்தான் சோர்வை அளித்தாலும், பரலோகத்தில் உள்ள உங்கள் தந்தை தனது சர்வ வல்லமையுள்ள கையை உங்கள் மீது வைத்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்!

முதிர்ச்சி அடைவது என்பது எப்போதும் எளிதானது அல்ல. உடல் அளவில் முதிர்ச்சி அடைவதும்  கூட எளிதான அல்லது ஒரு இனிமையான அனுபவமாக இருப்பது இல்லை. சிறுவயதிலிருந்து இளமைப் பருவத்துக்கு மாறுவதும் கடினமான ஆற்றை நீந்திக் கடப்பது போலத் தான். அதைக் கடந்து செல்லும் இளைஞருக்குப் பல விரக்திகள் மற்றும் தோல்விகளை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளன. ஆனால் அவர் அதில் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தால் (வளர்ந்து), இறுதியில் அவர் முதிர்ச்சியடைந்த ஒரு அற்புதமான வாழ்க்கையில் நுழைகிறார். 

உடல் வளர்ச்சியைப் போலக் கிறிஸ்தவ வளர்ச்சியும் தானாகவே நிகழ்வது இல்லை. கிறிஸ்தவ முதிர்ச்சி என்பது நாம் தொடர்ந்து உழைக்க வேண்டிய ஒன்று. எனவே இடையில் விட்டுவிடாதீர்கள்! பிறப்பில் துன்பம் உண்டு, முதிர்ச்சியடைவதிலும் துன்பங்கள் உள்ளது (கலா. 4:19).

5. ஆவிக்குரிய வளர்ச்சியை வேதத்துடன் ஒப்பிட்டு மதிப்பிடுதல் (Evaluate Your Growth by comparing with Word of God).

இறுதியாக, நமது ஆன்மீக வளர்ச்சியைக் கடவுளுடைய வார்த்தையால் நாம் அளவிட வேண்டும். மற்ற கிறிஸ்தவர்களது வாழ்க்கையுடன் ஒப்பிட்டு நம்மை அளவிடாமல், தேவனுடைய வார்த்தை மற்றும் தேவனுடைய குமாரன் வாழ்வுடன் ஒப்பிட்டுப் பார்த்து நிதானிக்க வேண்டும் (எபே. 4:13).

யாக்கோபு புத்தகத்தின் அடிப்படையில் ஒரு சில கேள்விகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அவை உங்களது தனிப்பட்ட மதிப்பீட்டிற்கு உதவக்கூடும். இந்தப் புத்தகத்தைத் தியானிக்கும் எந்த நேரத்திலும் அந்த கேள்விகளைக் கேட்டு அதற்கு விடையை நேர்மையுடன் கண்டு பிடிக்கத் தயங்க வேண்டாம், ஏனென்றால் அத்தகைய விடைகளை உங்கள் ஆன்மீக ஆரோக்கியத்திற்கு நல்லது.

வயது கூடுவதால் முதிர்ச்சி வளராது. வயதுக்கும் முதிர்ச்சிக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு கிறிஸ்தவர் பத்து அல்லது இருபது வருடங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பதால் அவர் கர்த்தரில் முதிர்ச்சியடைந்தவர் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. 

முதிர்ச்சி அடைந்த கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியானவர்கள். அவர்கள் பிறருக்குப் பயன் தருபவர்கள். மற்றவர்களை ஊக்குவிப்பவர்கள். தாங்கள் வாழும் பகுதியில், சபையில் பிறரை முன்னேற்றம் அடைவதற்கு உதவுபவர்கள்.

நாம் யாக்கோபை இனைந்து படிக்கும்போது, ​​கர்த்தரின் உதவியோடு ஒன்றாகக் கற்றுக்கொண்டு இனைந்து முதிர்ச்சியில் வளர்வோம்.

These are few questions to assist us to examine our hearts to see how much mature we really are.

1. Am I becoming more and more patient in the testing's of life?

2. Do I play with temptation or resist it from the start?

3. Do I find joy in obeying the Word of God, or do I merely study it and learn it?

4. Are there any prejudices that shackle me?

5. Am I able to control my tongue?

6. Am I peacemaker rather than a troublemaker? Do people come to me for spiritual wisdom?

7. Am I a friend of God or friend of the world?

8. Do I make a plans without considering the will of God?

9. Am I selfish when it comes to money? Am I unfaithful in the paying of my bills?

10. Do I naturally depend on prayer when I find myself in some kind of trouble?

11. Am I the kind of person others seek for prayer support?

12. What is my attitude toward the wandering brother? Do I criticize and gossip or do I seek to restore him in love?

Don't just grow old - grow up!

நாம் உண்மையில் எவ்வளவு முதிர்ச்சியடைந்துள்ளோம் என்பதைப் பார்க்க நம் இதயத்தின் விருப்பங்களை/சிந்தனைகளை ஆராய உதவும் சில கேள்விகள் இவை.

1. வாழ்க்கையின் சோதனைகளில் நான் மிகவும் கூடுதல் பொறுமையுடன் இருக்கிறேனா?

2. நான் பாவ தூண்டுதல் வரும் போது, அதற்கு இணங்கி சொகுசு உணர்வுகளை இச்சித்து அதனுடன் விளையாடுகிறேனா, அல்லது ஆரம்பத்திலிருந்தே அதன் விளைவுகளுக்கு அஞ்சி, அதை எதிர்த்து, அந்த இடத்தை விட்டு விலகி ஓடுகிறேனா?

3. கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேனா, அல்லது அதை வெறுமனே படித்துக் கற்றுக்கொள்ள விரும்புகிறேனா?

4. என்னைக் கட்டிப்போடும், முன் முடிவான தப்பெண்ணங்கள் ஏதேனும் எனது சிந்தையில் நம்பிக்கையாகப் பதிவாகி உள்ளதா?

5. நான் என் பேச்சைக் கட்டுப்படுத்த முடியுமா?

6. நான் பிரச்சனை செய்பவனாக இல்லாமல் சமாதானம் உருவாக்குபவனாக இருக்கிறேனா? ஆன்மீக ஞானத்தை விரும்பி கேட்பதற்காக மக்கள் என்னிடம் வருகிறார்களா?

7. நான் தேவனின் நண்பனா அல்லது உலகத்தின் நண்பனா?

8. நான் இறைவனது விருப்பத்தைக் கருத்தில் கொள்ளாமல் ஒரு திட்டத்தைச் செய்கிறேனா?

9. பண விஷயத்தில் நான் சுயநலவாதியா? நான் செலுத்த வேண்டிய பண பற்றுக்களை ஒழுங்காகத் திரும்பச் செலுத்துகிறேனா?

10. நான் ஒருவித பிரச்சனையில் சிக்கும்போது, இயல்பாகவே ஜெபிக்கும் பழக்கத்தைச் சார்ந்திருக்கிறேனா?

11. மற்றவர்கள் என்னிடம் ஜெபித்துக் கொள்ளுங்கள் எனக் கேட்பதுண்டா?

12. வாழ்வில் எவ்வித பிடிப்பும் இன்றி அலைந்து திரியும் சகோதரனிடம், என் அணுகுமுறை என்ன? நான் அவனை விமர்சித்து கிசுகிசுக்கிறேனா அல்லது  அன்பில் மீட்டெடுக்க முற்படுகிறேனா?

வெறும் வயது கூடுவதால் பயனில்லை - முதிர்ச்சியில் வளருவோம்!


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக