சங்கீதம்-1: இரண்டு மனிதர்கள் - இரண்டு வழிகள்.
தெய்வீக நியாயத்தீர்ப்பு.
சங்கீத புத்தகத்தின் முதல் திருப்பாடல் ஓர் ஒப்பற்ற ஆபரணம். இந்த சங்கீதம் முதலாவதாக அமைந்து இருப்பது தற்செயலான நிகழ்வு அல்ல. ஆவியானவரால் மிகுந்த ஞானத்துடன் துவக்கப் பாடலாக வைக்கப்பட்டு இருக்கிறது.
ஏனெனில் இப்பாடல், வேதாகமத்தின் மையக் கருப் பொருளான இரண்டு வழிகளைச் சுட்டிக்காட்டுகிறது. ஒன்று ஆசீர்வாதத்தின் பாதை. மற்றது அழிவின் பாதை. அத்துடன் தெய்வீக நியாயத் தீர்ப்பைக் குறித்தும் எச்சரிக்கை செய்கிறது.
முதலாம் சங்கீதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள காட்சிகள் பழைய ஏற்பாட்டின் பல சம்பவங்களை நமக்கு நினைவூட்டுகிறது. ஆதியாகமத்தில்; தேவ மக்கள் கடவுளுடன் சஞ்சரிப்பதை நீங்கள் காண்கிறீர்கள் (ஆதி. 5:21-24; 6:9; 17:1). ஏதேன் தோட்டத்திற்குள் நதிகள் பாய்ந்த செல்வது (ஆதி. 2:10-14), கனி தரும் மரங்கள் (ஆதி. 2:8-9) எனக் காட்சிகள் விரிகிறது.
யாத்திராகம புத்தகத்தில் கர்த்தருடைய நியாயப் பிரமாணம் மோசேக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவர் உபாகமத்தில் அவற்றைச் சட்டங்களாக அறிவித்தார். சங்கீதப் புத்தகம்; பிரமாணங்கள், ஆகமங்களையும் இவை இரண்டையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. அத்துடன் கர்த்தரின் வார்த்தைகளை இரவும் பகலும் தியானித்து அதற்குக் கீழ்ப்படிவதன் மூலம் ஆசீர்வாதத்தைக் கண்டடைவது எனும் சத்தியத்தை நினைவூட்டுகிறது (யோசுவா 1:8).
இரண்டு மனிதர்கள், இரண்டு வழிகள்:
சங்கீதம் இரண்டு வழிகளை முன்வைக்கிறது; ஆசீர்வாதத்தின் வழி மற்றும் சாபத்தின் வழி. இதில் எந்த வழியில் செல்வது என்பதைத் தேர்வு செய்யும் உரிமை (பொறுப்பு) இஸ்ரேல் மக்கள் கரத்திலிருந்தது (உபா. 30:15, 19).
இந்த இரண்டு வழிகளை கிறிஸ்துவும் குறிப்பிடுகிறார் (மத். 7:13-14). நீங்கள் எதன் மீது வீட்டைக் கட்டப் போகிறீர்கள்? கற்பாறையின் மீதா? அல்லது மணல் மீதா? எனும் உருவகத்தைப் பயன்படுத்தி இந்தக் கேள்வியை எழுப்பினார் (மத். 7:24-27).
இந்த "இரண்டு மனிதர்கள்" என்ற கருத்தைச் சுற்றியே வேதாகமம் முழுவதும் பல சம்பவங்கள் விரிந்திருக்கும்: "முதல் ஆதாம்" மற்றும் "கடைசி ஆதாம்" (ரோ. 5:12-19; 1 கொரி. 15:45). காயீன் - ஆபேல், இஸ்மவேல் - ஈசாக்கு, ஏசா மற்றும் யாக்கோபு, ஏலி - சாமுவேல், சவுல் - தாவீது, இறுதியாகக் கிறிஸ்து மற்றும் அந்திக் கிறிஸ்து என உச்சம் பெறுகிறது.
முதலாம் சங்கீதம் ஒரு ஞான பாடல். கடவுளின் வார்த்தை எவ்வளவு முக்கியம் என இது வலியுறுத்துகிறது. அதைத் தியானித்துக் கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்குக் கடவுளின் ஆசீர்வாதம். அதை எதிர்த்து கலகம் செய்பவர்கள் மீது கடவுளின் இறுதி நியாயத் தீர்ப்பு.
ஞான சங்கீதங்கள் என சங்கீதங்கள்: 10, 12, 15, 19, 32, 34, 37, 49, 50, 52, 53, 73, 78, 82, 91, 92, 94, 111, 112, 119, 227, 127, மற்றும் 139 குறிப்பிடப்படுகின்றன.
இந்த ஞான சங்கீதங்கள் உலகில் உள்ள தீமையுடன் யுத்தம் செய்கின்றன. குறிப்பாக, அவருடைய சட்டத்தை நிராகரிக்கும் துன்மார்க்கரின் வாழ்வில், கடவுள் ஏன் செழிப்பை அனுமதிக்கிறார்? எனும் கேள்விக்கு அவை விடை காண முயல்கிறது.
இந்த சங்கீதம் இரண்டு வழிகளைச் சித்தரிக்கும் போது, அது உண்மையில் மூன்று விதமான நபர்களை அடையாளம் காண்பிக்கிறது. அவர்கள் இறைவனின் ஆசீர்வாதத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என விவரிக்கிறது.
1. ஆசீர்வாதத்தை அடைய வேண்டிய நபர் (வ. 1–2):
கர்த்தர் இஸ்ரவேலுடன் உடன்படிக்கை செய்தார். அவர்கள் நியாயப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்தால் ஆசீர்வாதம். கீழ்ப்படியாமைக்கு வரும் பலன் நியாயந்தீர்ப்பு (லேவி. 26; உபா. 28).
யாக்கோபின் மகன்களில் ஒருவரின் பெயர் ஆசேர் (ஆதி. 30:12). இதன் பொருள் பாக்கியவான். இது ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தை. இந்த வார்த்தை பன்மைத் தன்மை உடையது. “ஓ மகிழ்ச்சியே! ஆசீர்வாதமே!"
இங்கே ஆசீர்வதிக்கப்பட்ட நபர் கர்த்தரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தார். எனவே ஆண்டவர் அவரை ஆசீர்வதித்தார். கடவுளின் ஆசீர்வாதத்தை நாம் விரும்பினால், நாமும் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
a. நாம் வார்த்தையால் வழி நடத்தப்பட வேண்டும் (வ. 1).
இஸ்ரேல் ஜனம் தேவனால் தனித்துவமாகப் பிரித்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம். அவர்கள் மற்ற தேசத்து மக்களுடன் சேர்ந்து வாழலாம் ஆனால் அவர்களால் கறை படக்கூடாது (எண். 23:9; யாத். 19:5-6; உபா. 32:8-10; 33:28).
இன்று நாமும் அப்படித்தான். நாம் தேவனால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். நாம் உலகில் இருக்கிறோம். ஆனால் உலகம் நமக்குள் இல்லை (யோவான் 17:11-17). உலகத்துடனான நட்பைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேதம் போதிக்கிறது (யாக்கோபு 4:4). உலகத்தால் கறைபடாதபடி வாழ்வதற்கும் (யாக்கோபு 1:27), உலகப் பொருட்களில் மயங்கி வீழ்ந்து விடாதபடி விலகி வாழவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேதம் போதிக்கிறது (1யோவான் 2:15-17).
இந்த அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை மறுரூபமாதல் என வேதம் சொல்கிறது (ரோமர் 12:1-2). அதே சமயம் மனந்திரும்பாவிட்டால், உலகத்துடன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவோம் என எச்சரிக்கிறது (1 கொரி. 11:32).
தீய வழி வஞ்சனையானது. அது கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக் கொள்ளும். லோத்து சோதோமை நோக்கிப் பார்த்தார். அதனால் கவரப்பட்டார். சோதோமை நோக்கிக் கூடாரம் போட்டார். விரைவில் சோதோமுக்குள் சென்றார் (ஆதி. 13:10-12; 14:12).
லோத்து இரட்சிக்கப்பட்ட மனிதராக இருந்தாலும் (2 பேதுரு 2:6-8), ஆண்டவர் சோதோம், கொமோரோ நகரங்களை அழித்தபோது தன்னிடம் இருந்த அனைத்தையும் இழந்தார் (ஆதி. 18:17-33, 19).
பாவம் படிப்படியாக நம்மைக் கீழ்ப்படியாமைக்கு அழைத்துச் செல்லும் (நீதி. 4:14-15; 7:6-27). நீங்கள் தவறான ஆலோசனையைப் பின்பற்றினால், தவறான தோழர்களுடன் நிற்பீர்கள். பின்னர் தவறான கூட்டத்தில் அமர்ந்திருப்பீர்கள்.
இயேசு கைது செய்யப்பட்டபோது, பேதுரு கிறிஸ்துவின் ஆலோசனையைப் பின்பற்றாமல் தோட்டத்திலிருந்து தப்பி ஓடினார் (மாற் 14:50;). பின்னர் பிரதான ஆசாரியரின் முற்றத்திற்குள் நுழைந்தார் (யோவான் 18:15). அங்கு அவர் எதிரியுடன் நின்றார் (யோவான் 18:16). இறுதியில் அவர்களுடன் அமர்ந்தார். (லூக்கா 22:55). இதன் விளைவாக மூன்று முறை கிறிஸ்துவை மறுதலித்தார்.
ஒன்றை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். தேவ பக்தியற்றவர்கள் விருப்பத்துடன் தீய செயல் புரிபவர்கள். அது தவறு எனத் தெரிந்திருந்தாலும் தொடர்ந்து அதைத் துணிகரமாக வேண்டுமென்றே செய்கின்றனர்.
பாவிகள் கடவுள் எதிர்பார்க்கும் தராதரங்களைக் குறித்துக் கவலைப் படுவதில்லை. அவர்கள் கர்த்தரின் கிருபையை தவறவிட்டவர்கள். அகந்தை மற்றும் பெருமை மிக்கவர்கள். தேவனின் சட்டங்களை அலட்சியம் செய்கிறார்கள். புனிதமானதைக் கேலி பேசுகிறார்கள். (நீதி. 1:22; 3:34; 21:24).
பரிசுத்தமான விஷயங்களைப் பார்த்துச் சிரிப்பதும், புனிதமான சட்டங்களை மீறுவதும் பொழுதுபோக்காக மாறும் போது, மக்கள் உண்மையில் இழிவான கீழ்நிலையை அடைந்து விட்டனர்.
b. நாம் வார்த்தையில் மகிழ்ச்சியடைய வேண்டும் (வ. 2).
முதல் வசனத்தில் உள்ள எதிர்மறையிலிருந்து இரண்டாம் வசனத்தில் நேர்மறைக்கு நகர்கிறோம்.
தேவ வார்த்தையைத் தியானிப்பதும், அந்த வார்த்தையில் மகிழ்ச்சியடைவதும் ஒன்றாக இணைந்தே இருக்கும் (சங். 119:15-16, 23-24, 47-48, 77-78). ஏனென்றால் எதை நாம் விரும்புகிறோமோ, அதைப் பற்றியே சிந்திக்கிறோம். அவற்றையே மகிழ்ச்சியுடன் பின்தொடர்கிறோம்.
எபிரேய மொழியில் “தியானம்” என்றால் “வாயில் முணுமுணுப்பது'' அல்லது ''மனதுக்குள் வாசிப்பது” என்று பொருள்படும். கடவுளின் வார்த்தை அவர்களின் வாயை விட்டு பிரியாமல் உள்ளது (யோசு. 1:8).
வேத வார்த்தையை ஆர்வத்துடன் வாசித்து, சிந்திக்கும் போது, அது நமக்கு தேவ சத்தியத்தைக் கற்றுத் தரும். நாம் கற்றுக் கொண்ட சத்தியத்தில் நிலைத்திருப்பது அதைவிட மிக முக்கியம் (1 யோவான் 2:14, 24).
வேதம் அவருடைய வார்த்தை. வேதத்தை நாம் மதிக்கும் விதம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளை வாழ்வில் கடைப்பிடிக்கும் தன்மையில் வெளிப்படுத்துகின்றது.
கடவுளின் மக்களாகிய நாம் உணவை விடக் கடவுளின் வார்த்தையை அதிகமாக விரும்ப வேண்டும் (119:103; யோபு 23:12; எரே. 15:16; மத். 4:4; 1பேதுரு 2:3). அதுவே நம் உறக்கத்திலும், விழிக்கும் போதும் உடனிருக்க வேண்டும் (119:55, 62, 147-148, 164). அதுவே நம் செல்வம் (119:14, 72, 127, 162). அதுவே நம் நண்பன் (சங். 119:24, 51, 95, 119).
ஒரு ஆசீர்வாதமான வாழ்க்கையை அடைய; முதல் வசனத்தில் குறிப்பிடப் படும் சொற்கள் முடிவுற்ற கட்டளை வினைச்சொற்களாக (Perfect Tense) உள்ளன.
''நடவாமலும்'', ''நில்லாமலும்'', ''உட்காராமலும்'' எனும் சொற்கள், நடக்கக் கூடாது. நிற்கக் கூடாது. உட்காரக்கூடாது எனும் முடிவுற்ற செயல்களைக் குறிப்பிடுகிறது.
அதே நேரத்தில் "தியானமாயிருக்கிற மனுஷன்" எனும் வினைச்சொல் (Imperfect Tense) முடிவுறாத தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டியதொரு செயலாகவும் வலியுறுத்துப் படுகிறது.
2. ஆசீர்வாதமாக இருக்கும் நபர் (வ. 3):

