திங்கள், 21 நவம்பர், 2022

சங்கீதம்: திருப்பாடல்கள் முன்னுரை

சங்கீதம் (திருப்பாடல்கள்)  - அறிமுகம்.




தேவ பிள்ளைகள் அதிகமாக நேசிக்கும் ஒரு புத்தகம் சங்கீதம். இது ஈடு இணையற்றதொரு பிரார்த்தனை நூல். நம்மைப் பக்தி வழி நடத்தும் பாடல்கள் அடங்கிய ஓர் தொகுப்பு. 

இந்த நூலின் எபிரேய தலைப்பு தெஹ்லிம் (tehillim). இதன் பொருள் துதிகளின் புத்தகம். (The Book of Praises). 

இதன் கிரேக்க மொழி பெயர்ப்பில் (Septuagint)  ''Psalomos'' என்கிற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இந்த வார்த்தையின் அர்த்தம் "ஒரு தந்தி இசைக்கருவியின் துணையுடன் பாடப்படும் பாடல்''.

வேதப் புத்தகம் இலத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப் பட்ட போது (Vulgate), அதன் கிரேக்கத் தலைப்பைப் பின்பற்றி ''Psalmorum'' எனும் இலத்தீன் வார்த்தையைப் பயன்படுத்தினார். இதன் அர்த்தமும் “தந்தி கொண்ட கருவியிலிருந்து மீட்டுவது''. 

பின்னர் வேதாகமம் இலத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யப் பட்ட போது, அரசர் ஜேம்ஸ் (The King James) ''Psalms'' எனும் இந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டார். 

நமக்குத் தமிழில் ''சங்கீத புத்தகம்/திருப்பாடல்கள்'' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

எழுதியவர்கள் (Writers):

ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு சங்கீதங்களில், அதை எழுதியவர்களது பெயர்கள் அதன் தலைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவற்றுள் தாவீது ராஜா எழுபத்து மூன்று சங்கீதங்களை எழுதியுள்ளார். அவர் ''தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரேலின் சங்கீதங்களை இன்பமாய் பாடினவர்" என வேதம் குறிப்பிடுகிறது (2 சாமு. 23:1). 

தேவாலயத்தில் இசைக்கருவிகள், பாடகர்கள் குழுவுடன் கர்த்தரைத் துதித்து ஆராதனை ஊழியத்தைச் செய்யும் முறையை தாவீது ஏற்படுத்தினார்(1 நாளா. 15:16; 16:7; 25:1). 

தேவாலயத்தில் இசைக் கலைஞர்களாகப் பணியாற்றிய கோகாத்தியர்/கோராகியரின் புத்திரர்கள் பதினோர் சங்கீதங்களை எழுதியுள்ளனர் (சங். 42-49, 84, 85, 87, 1 நாளா. 6:33; 15:17; 2 நாளா. 20:19).

ஆசாப் பன்னிரண்டு சங்கீதங்கள் எழுதியுள்ளார் (சங். 50, 73–83).

சாலமன் ராஜா இரண்டு (சங். 72 மற்றும் 127).

எஸ்ராகியனாகிய ஏத்தான் ஒன்றை எழுதினார் (சங். 89).

மோசே ஒரு ஜெப சங்கீதத்தை எழுதியுள்ளார் (சங். 90). 

இருப்பினும், அனைத்து வேத அறிஞர்களும் சங்கீதங்களின் தலைப்புகளில் சுட்டிக் காட்டப்பட்டவர் தான் அந்தப் பாடலை எழுதியவர் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை.

புத்தகத்தின் அமைப்பு (Organization):

மோசேயின் ஐந்து ஆகமங்களைப் பின்பற்றி சங்கீதப் புத்தகம், ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 
பாகம் I. ஆதியாகமம்       = சங்கீதம்: 1—41, 
பாகம் II. யாத்திராகமம்    = சங்கீதம்: 42—72, 
பாகம் III. லேவியராகமம்  = சங்கீதம்: 73—89, 
பாகம் IV. எண்ணாகமம்     = சங்கீதம்: 90—106, 
பாகம் V. உபாகமம்              = சங்கீதம்: 107—150. 

மேலே குறிப்பிடப்பட்ட முதல் மூன்று பாகங்களிலும், அதன் இறுதி அதிகாரத்தின் கடைசி வசனங்கள் ஒவ்வொன்றும் இரண்டு முறை "ஆமென், ஆமென்" என சொல்லி முடிவடைகிறது (சங். 41:13/ 72: 19/ 89:52). 

நான்காவது பிரிவில் "ஆமென்" மற்றும் "அல்லேலூயா" என்ற வசனத்துடன் நிறைவடைகிறது (சங். 106:48) . 

ஐந்தாவது இறுதி பாகம் "ஹல்லேலூயா" என்ற வார்த்தையுடன் முடிவடைகிறது (சங். 150:6).

சங்கீத புத்தகம் பல நூற்றாண்டுகளாக எழுதப்பட்ட பாடல்கள் அடங்கிய ஒரு தொகுப்பு. இந்த தேவ வார்த்தை நிறைந்த பாடல்களை இயற்றவும், அதை  தொகுக்கவும் பரிசுத்த ஆவியானவர் வெவ்வேறு கால கட்டத்தில் பற்பல தேவ மனிதர்களை மற்றும் தீர்க்கதரிசிகளை வழிநடத்தினார்.

முதல் பாகத்தில் உள்ள நாற்பதொரு சங்கீதங்களில், முப்பத்தேழு சங்கீதங்களை தாவீது எழுதியுள்ளார். இது தொகுப்பின் ஆரம்பம். 

எசேக்கியா ராஜாவின் காலத்திலிருந்த தீர்க்கதரிசிகள் குழு, பல விலையேறப் பெற்ற பழைய ஏற்பாட்டுக் கையெழுத்துப் பிரதிகளை நகலெடுத்துப் பாதுகாத்தது. சங்கீத புத்தகங்களின் பாகங்கள் II மற்றும் III பகுதிகளை இந்த "எசேக்கியாவின் மனிதர்களால்" தொகுக்கப்பட்டிருக்கலாம் (நீதி. 25:1) . எசேக்கியாவும் ஒரு புனிதமான கவிதையை எழுதியவர் (ஏசா 38: 9-20). 

பாகங்கள் IV மற்றும் V பகுதிகள், அறிஞரான எஸ்ராவின் காலத்தில் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கலாம் (எஸ்ரா 7:1-10). 

நமது நவீன பாடல்களைப் போலவே ''தொகுப்புகளுக்குள் தொகுப்பாக'', "ஆரோகன சங்கீதம்" (120-134), ''ஆசாப்பின் சங்கீதம்'' (சங். 73-83), ''கோராவின் புத்திரர்களின் சங்கீதங்கள்'' (42-49), மற்றும் "அல்லேலூயா சங்கீதங்கள்" (111-113, 115-117, 146-150) எனப் பல உட் தொகுப்புகளும் உள்ளன.

கவிதை அமைப்பு (Poetry):

ஹீப்ரு கவிதை ''சந்தங்களை'' (Rhyming) அடிப்படையாகக் கொண்டது அல்ல. அது "சிந்தனை வரிகளை"  (Thought lines) அடிப்படையாகக் கொண்டது. 

சங்கீதம் 24:1-3 இல் உள்ளதைப் போல, இரண்டாவது வசனம் முதல் வசனத்தின் பொருளை வெவ்வேறு வார்த்தைகளில் திரும்பத் திரும்ப அழுத்தமாகச் சொன்னால் அது இணையான இணை நிலை பாடல் அமைப்பு (synonymous parallelism) எனப்படும். 

சங்கீதம் 1:2 மற்றும் 37:9 இல் உள்ளதைப் போல, இரண்டாவது வசனம் முதல் வசனத்தின் பொருளில் முரண்பட்டால், அது முரண்பாடான இணை நிலை பாடல் அமைப்பு (antithetic parallelism) எனப்படும்.

சங்.19:7-9 இல் உள்ளதைப் போல, இரண்டாவது வசனமானது முதல் வசனத்தை விளக்கி விரிவுபடுத்திச் சொல்லும் போது, பாடலாசிரியர் செயற்கையான இணைச்சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். இது (synthetic parallelism) எனப்படும்.

சங். 29:1 இல் உள்ளதைப் போல, இரண்டாவது வரி முதல் வரியினுடைய பொருளை நிறைவு செய்யும் போது, ​​அது உச்சக்கட்ட இணை நிலை (climactic parallelism) என வகைப்படுத்தப்படும்.

சங். 93 :1-2 இல் உள்ளதைப் போல, இரண்டாவது வசனம், முதல் வசனத்தின் எண்ணத்தை மீண்டும் கூறுகிறது. அதே எண்ணத்தைச் சங்கீதம் 103:19 இல் வாசிக்கிறோம். இவ்விதம் திரும்பத் திரும்ப ஒரே பொருள் தரும் வரிகள் கொண்டுள்ள சங்கீதங்கள் இணைத் தன்மை (iterative parallelism) என வகைப்படுத்தப்படும்.. 

இந்த தொழில்நுட்ப வகைப் படுத்துதலை நீங்கள் பிரசங்கத்தில் சொல்லி விளக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் ஒரு சங்கீதத்தை வாசிக்கும் போது அது எந்த வகைப் பாடல் எனப்  புரிந்து படிக்கும் போது, அந்த சங்கீதத்தின் தெளிவான அர்த்தத்தையும், அது எதைக் கற்றுத் தர விரும்புகிறது எனும் சிறந்த புரிதலையும் உங்களுக்கு அளிக்கும். 

சங்கீதம் 103:3இல், கர்த்தர் ஒவ்வொரு நோயையும் குணப்படுத்துவதாக  வாக்குறுதி அளிக்கிறார். இந்த வசனத்தின் இணையான இணைச்சொல் சங். 41:4இல் உள்ளது. இங்கு நோய் என்பது பாவத்தைக் குறிக்கிறது. இவ்விதமாக ஒரு வசனத்தின் இணையான இணைச்சொல்லைப் புரிந்து வாசிக்கும் போது தான் உண்மையான பொருளைப் புரிந்து கொள்ள முடியும். 

சங்கீதங்கள் பல விதமான உணர்வுகளின் பின்னணியில் எழுதப்பட்டவை. ஆனாலும், ஒரு தேவ மனிதரால் இக்கட்டான சூழலில் எழுதப்பட்டதொரு புலம்பல் சங்கீதத்தை, வெறும் அந்தச் சூழலுக்காக மட்டுமே எழுதப்பட்ட பாடல் என எடுத்துக் கொள்ளக் கூடாது. அது தீர்க்கதரிசனமாகக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்தை முன் குறித்துச் சுட்டிக்காட்டும் மேசியாவின் சங்கீதங்களும் எனப் புரிந்து கொள்ள வேண்டும். 

பொதுவாகச் சங்கீதங்கள் துதி மற்றும் நன்றியின் வெளிப்பாடாக இயற்றப்பட்டவை. அவற்றுள் அரசர்கள் இயற்றிய சங்கீதங்கள், ஞான சங்கீதங்கள், மனஸ்தாபப்பட்டு ஏறெடுக்கப்பட்ட புலம்பல் சங்கீதங்கள், எதிரியின் மீது கடவுளின் கோபம் வெளிப்பட வேண்டி ஜெபிக்கும் சங்கீதங்கள், உறுதிமொழி மற்றும் நம்பிக்கையின் சங்கீதங்கள் எனப் பல விதமான உணர்வு பின்னணியில் எழுதப்பட்டுள்ளன. 

இந்த வகைகளில் ஒவ்வொன்றையும் குறித்து, சங்கீத புத்தகத்தை ஆராய்ந்து கற்றுக் கொள்ளும் போது இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்வோம்.

மதிப்பு (Value):

சங்கீதங்களின் புத்தகத்திலிருந்து, நானூற்றுக்கும்  மேற்பட்ட மேற்கோள்கள் அல்லது குறிப்புகள் புதிய ஏற்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தும், சங்கீதப் புத்தகத்திலிருந்து பல வசனங்களை மேற்கோள் காட்டினார் (மத். 5:5/சங். 37:11; மத். 5:36/சங். 48:2; மத். 6:26/சங். 147:9; மத். 7:23/சங். 6:8; மத். 27:46/சங்.22:1; யோவான் 15:25/சங். 69:4). 

ஒரு புதிய அப்போஸ்தலரைத் தேர்ந்தெடுக்க எருசலேம் தேவாலயத்தில் சீடர்கள் கூடி ஜெபித்தனர். அப்போது ​​கர்த்தர் சங்கீதப் புத்தகத்திலிருந்து அவர்களை வழிநடத்தினார் (அப். 1:20/சங். 69:25; 109:8). 

சபையின் துவக்கக் காலத்தில், தேவாலய தலைவர்கள் சங்கீதங்களைப் பயன்படுத்தி அவர்களது போதனையை உறுதிப்படுத்தினர் (அப்போஸ்தலர் 2:31/சங். 16:10). துன்புறுத்தல் காலங்களில் ஊக்கம் (அப். 4:23-31/சங். 2) பெற்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கீதங்களைப் பாடுவது அவர்களது வழிபாட்டின் ஒரு பகுதியாக இருந்தது (எபே. 5:19; கொலோ. 3:16; 1 கொரி. 14:26). இன்றும் சங்கீத புத்தகம் தேவாலயத்தின் வழிபாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. 

சங்கீதக்காரர்களின் பார்வையில் தேவ மக்களின் வரலாற்றைப் படிப்பது பயனுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது: படைப்பு (8) கர்த்தருடைய  சத்தம் (29), முற்பிதாக்கள் (47:4, 47:9, 105:9, ), யோசேப்பு (105:17), வனாந்தர பயணம் (114), வனாந்தர அலைவுகள் (68:7, 106), சிறைபிடிப்பு (85, 137) என இஸ்ரவேலரின் வரலாறு சங்கீதங்கள் வழியாக உறுதிப்படுத்தப்படுகிறது.

சங்கீதங்கள் முதன்மையாகக் கர்த்தருக்கும் அவரது படைப்புகளுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றிக் குறிப்பிடுகிறது. குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அவரை விசுவாசித்தவர்கள் இடையில் காணப்பட்ட ஆழமான உறவைப் பாடுகிறது. கர்த்தர் ஒரு சக்திவாய்ந்த கடவுளாகவும், அதே சமயம் கனிவான இதயம் கொண்ட தந்தையாகவும் பார்க்கப்படுகிறார். அவர் தமது உடன்படிக்கையைக் காப்பாற்றி, தாம் வாக்குத்தத்தம் அளித்த மக்களை அன்புடன் பாதுகாக்கிறார். 

அத்துடன், சங்கீதங்கள் அவரைப் பின்பற்றுபவர்களின் உணர்வுகளையும், அவர்கள் விசுவாசம், சந்தேகங்கள், வெற்றிகள், தோல்விகள் மற்றும் கர்த்தர் வாக்களித்த மகிமையான எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளையும் வெளிப்படுத்துகின்றன. 

இந்தப் புத்தகத்தில் பல தரப்பட்ட மக்களைப் பல விதமான சூழ்நிலைகளில் சந்திக்கிறோம். கடவுளிடம் கூக்குரலிடுவது, அவரைப் புகழ்ந்து போற்றுவது, தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு அறிக்கையிடுவது, அவரை முழு இதயத்துடன் அர்ப்பணித்து வணங்குவது எனப் பல உணர்வு நிலைகள் வெளிப்படுகின்றன. 

சங்கீத புத்தகத்தில், நீங்கள் படைப்பின் கடவுளைச் சந்திக்கின்றீர்கள். மலைகள், பாலைவனங்கள், சூரிய ஒளி, புயல்கள், கோதுமை, பருப்பு, மரங்கள், பூக்கள் ஆகிய படைப்புகளிலிருந்து பல ஆன்மீக உண்மைகளைக் கற்றுக்கொள்கிறீர்கள். 

குதிரைகள், கழுதைகள், நாய்கள், நத்தைகள், வெட்டுக்கிளிகள், தேனீக்கள், சிங்கங்கள், பாம்புகள், செம்மறி ஆடுகள், பறவைகள், மிருகங்கள்,மற்றும் புழுக்கள் போன்ற அனைத்து வகையான உயிரினங்களிலிருந்தும் நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். 

முழு உள்ளத்துடன் கர்த்தரைத் தேடவும், எல்லாவற்றையும் உண்மையாக  அறிக்கையிடவும் சங்கீதங்கள் நமக்குக் கற்பிக்கின்றன. ஆசீர்வாதத்தைக் கொடுப்பதற்காக மட்டுமல்ல, அவர் சர்வ வல்லவர் என்பதை உணர்ந்து விசுவாசிக்கவும், கீழ்ப்படியவும் சங்கீதங்கள் படிப்பிக்கின்றன. 

சோதனைகளை எவ்வாறு எதிர் கொள்வது மற்றும் அவற்றை எப்படி வெற்றிகளாக மாற்றுவது என்பதையும் அவை நமக்குக் காட்டுகின்றன. மேலும் நாம் தோல்வியுற்றால், எப்படி மனந்திரும்பி கடவுளின் கிருபையான மன்னிப்பைப் பெறுவது என்பதையும் கற்றுத் தருகின்றன. 

சங்கீதப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள கர்த்தர் அறிந்து கொள்ள முடியாத உன்னதமான இடத்தில் வாசம் செய்பவர். ஆனால் அவர் உள்ளத்திலும் இருக்கிறார். நம் அறிவுக்கு எட்டாத மிகவும் உன்னதமான இடத்தில் வாசம் செய்தாலும், தனிப்பட்ட முறையில் நமது உலக வாழ்க்கைப் பயணத்தில் நம்முடன் இருக்கிறார். அவர் “உன்னதமான கடவுள்” ஆனால் அதே வேளை “இமானுவேல்'' - ஆக நம்முடன் கூடவும் இருக்கிறார்.”


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படம்:  இணையத்திலிருந்து நன்றியுடன் …,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக