செவ்வாய், 6 டிசம்பர், 2022

சங்கீதம் 2

மேசியாவின் வருகை.



முதலாம் சங்கீதம் கடவுளின் திருச் சட்டத்தின் முக்கியத்துவத்தை கற்றுத் தருகிறது. ஆண்டவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அதை முழு மனதுடன் கடைப்பிடியுங்கள் என்பது அதன் மையக்கருத்து. இரண்டாவது சங்கீதம் ஒரு தீர்க்க தரிசனம். அது மேசியாவின் வருகையை முன்னறிவிக்கிறது. 

முதலாம் சங்கீதத்தில் சுட்டிக்காட்டப்படும் மக்கள் தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் இரண்டாம் சங்கீதத்தில் குறிப்பிடப்படுபவர்கள் திருச் சட்டத்தை எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள். முதலாம் சங்கீதம் யார் பாக்கியவான்? எனத் தொடங்குகிறது. இரண்டாம் சங்கீதம் யார் பாக்கியவான்? எனக் கூறி  நிறைவடைகிறது. 

முதலாம் சங்கீதத்திலிருந்து எந்தவொரு வசனமும் புதிய ஏற்பாட்டில் மேற்கோள்களாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதே சமயம் இரண்டாம் சங்கீதத்திலிருந்து பதினெட்டு முறை அதன் வசனங்கள் மேற்கோள்களாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது (மத். 3:17; 7:23; 17:5; மாற்கு 1:11; 9:7; லூக்கா 3:22; 9:35; யோவான் 1:49; அப்போஸ்தலர் 4:25-26; 13:32; பிலி. 2:11; எபி. 1:2, 5; 5:5; வெளி. 2:26-27; 11:18; 12:5; 19:15). 

இது ஓர் மேசியாவின் சங்கீதம் (Messianic Psalm). மேசியாவின் சங்கீதம் என்பது மோசே மற்றும் தீர்க்கதரிசிகளால் இயேசுவைக் குறித்து சொல்லப்பட்ட தீர்க்க தரிசன வசனங்கள் அடங்கிய சங்கீதங்கள் (லூக்கா 24:27, 44). பிற மேசியாவின் சங்கீதங்கள் (சங்; 8, 16, 22, 23, 40, 41, 45, 68, 69, 102, 110, 118). 

இது ஓர் இராஜரீக சங்கீதம் (Royal Psalm). மற்ற இராஜரீக சங்கீதங்கள் (18, 20, 21, 45, 72, 89, 101, 110 மற்றும் 144). 

இந்த சங்கீதம் தாவீதால் எழுதப்பட்டது எனப் பேதுரு குறிப்பிடுகிறார் (அப் 4:25-26). தாவீது ராஜாவாக முடிசூட்டப்பட்ட போது பெலிஸ்தர், மோவாபியர், சோபாவின் ராஜா, சீரியர், அம்மோன் புத்திரர், அமலேக்கியர் அதை எதிர்த்தனர். அவர்களது கிளர்ச்சியை இந்த சங்கீதம் குறிப்பிடுகிறது (2சாமுவேல் 5:17-25, 8:1-14, மற்றும் 10:1-19).

எனினும் இந்த இரண்டாம் சங்கீதம் மற்றும் 2 சாமுவேல்-7:1-17; ஆகிய இரண்டு வேதப் பகுதிகளும், தாவீது மற்றும் அவரது சந்ததிகளைக் கடந்து, வரப் போகும் மேசியாவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. சங்கீதம் 2: 6-9 இல், கர்த்தர் தாவீதுடன் ஒரு உடன்படிக்கை செய்கிறார். இந்த உலகைப் பாவத்திலிருந்து மீட்க இரட்சகர் அருளப்படுவார். அவர் என்றென்றும் நிலைத்து நிற்கப் போகும் தேவனுடைய ராஜ்யத்தை நிறுவுவார். தேவ சிங்காசனத்தில் வீற்றிருந்து என்றென்றும் அரசாளுவார். இந்த தீர்க்க தரிசனம் இயேசு கிறிஸ்தில் நிறைவேறியது (மத். 1:1).

கர்த்தர் இஸ்ரேல் மக்களை அவருடைய தீர்க்கதரிசிகள் மற்றும் நியாயாதிபதிகள் மூலம் நேரிடையாக ஆளுகை செய்தார். ஆனால் இஸ்ரவேலரோ, கர்த்தருக்கு விரோதமாக எழும்பி, புற இன மக்களைப் போல தங்களுக்கும் ஒரு ராஜா வேண்டும் என சாமுவேலிடம் முறையிட்டார்கள் (1சாமு. 8). இவ்விதம் கேட்பார்கள் எனக் கர்த்தர் அறிவார். இதை ஆபிரகாமுக்கு முன்னறிவித்திருந்தார் (ஆதி. 17:6, 16; 35:11; எண். 24:7, 17). இஸ்ரேலின் ராஜா எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனும் கட்டளையும் கொடுக்கப்பட்டது (உபா. 17:14-20). 

சவுல் இஸ்ரேல் தேசத்தின் முதல் அரசராக அபிஷேகம் செய்யப்பட்டார். ஆனாலும் அவர் இஸ்ரேல் ராஜ்யத்தை நிறுவ நியமிக்கப்படவில்லை. ஏனெனில் இஸ்ரவேலை ஆளுகை செய்பவர், ''யூதா கோத்திரத்திலிருந்து''  வருவார் என முன்னறிவிக்கப்பட்டது (ஆதி. 49:10). சவுல் பென்யமின் கோத்திரத்தைச் சேர்ந்தவர். கர்த்தர் தாவீதை தெரிந்து கொண்டார். அவர் வம்சத்திலிருந்து மேசியா பிறக்க வேண்டும் என்பது கடவுள் சித்தம் (2 சாமு. 7). 

சில சங்கீதங்கள் மனத் திரையில் காட்சியாகப் பார்க்க முடியும்  (114, 130, 133). சில சங்கீதங்கள் உணர்வுப்பூர்வமானது. (22, 129, 137, 142), ஆனால் இது பேசும் சங்கீதம். இந்த சங்கீதத்தில் நான்கு குரல்கள் பேசுகின்றன. அதைக் கேட்க வேண்டும்.

1.  தேசங்கள் - சதியின் குரல் (Conspiracy; வச: 1–3):

''கர்த்தர் அவர்களுக்குச் செய்த சகல நன்மைகளையும் அனுபவித்த பின்னரும், ​​ஜனங்களால் அவருக்கு விரோதமாக எப்படி கலகம் செய்ய முடிகிறது?” 

இந்தக் கேள்வியை தாவீது ஆச்சரியத்துடன் கேட்டார்! இந்தக் கேள்வி பதிலை எதிர்பார்த்துக் கேட்கப் படவில்லை. ஏனென்றால் இந்தக் கேள்விக்கு உண்மையில் பதில் இல்லை. கர்த்தர் ஜனங்களின் அடிப்படைத் தேவைகளைச் சந்தித்தார் (அப். 2:46-47). வழிநடத்தினார். பாதுகாத்தார். மன்னிப்பையும் நித்திய ஜீவனையும் கொடுப்பதற்கு ஒரு இரட்சகரையும் அனுப்பினார் (அப்போஸ்தலர் 17:24-31; தானி 4:32). 

இருந்த போதிலும், பாபேல் கோபுர காலம் தொடங்கி (ஆதி. 11), கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பின்னரும் (அப்போஸ்தலர் 4:18-31); அர்மகெதோன் போர் வரை (வெளி. 19), அனைத்தையும் படைத்த தேவ சித்தத்திற்கு எதிராகவே, மனுகுலம் செயல்படுகிறது. தேவனுக்கு விரோதமாகச் செயல்பட்ட மனுகுலத்தின் பயனற்ற முட்டாள்தனமான கலகங்களை வேதாகமம் முழுவதும் வாசிக்க முடிகிறது.

ராஜாக்களும், சிறு ஆட்சியாளர்களும் தங்கள் சொந்த இச்சையை நிறைவேற்ற விரும்பி, கர்த்தர் ஏற்படுத்திய உடன்படிக்கையை மீறினார்கள். அதை உடைக்க சதி செய்தார்கள். ''பிடிவாதமாகத் திமிறி எழும்பி; உடலைக் கட்டிய கயிறுகளை அறுத்து; நுகத்தடியை உடைக்க முயலும் அடங்காத விலங்கைப் போல''; அவர்கள் செயல் படும் காட்சியை வேதம் காண்பிக்கிறது (எரே. 5:5; 27:2). ஆனாலும் இத்தகைய கலக முயற்சி பயனற்றது. ஏனென்றால் கடவுளுக்கு அடிபணிந்து அவருடைய சித்தத்தைச் செய்வதே உண்மையான விடுதலை. கட்டுப்பாடற்ற சுதந்திரம் அராஜகம் (Freedom without authority is anarchy). அராஜகம் அழிக்கிறது. 

"அதிகாரம் படைப்பாற்றலை அழிக்கிறது (All authority destroys creativity)" என்று சுவரில் எழுதப்பட்ட ஓர் வாசகத்தை வாசித்தேன். என்னவொரு முட்டாள்தனம். ஒரு இசைக் கலைஞராக இருந்தாலும் சரி, விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும் சரி, ஒரு ஒழுங்கு முறைமைக்குக் கீழ்ப்படிந்து, கட்டுப்பாட்டுடன் பயிற்சி செய்யும் போது தான் அவர்களது படைப்பாற்றல் வெளிப்படுகிறது. எந்த அளவிற்கு அவர்கள் ஒப்புக் கொடுக்கிறார்களோ அந்த அளவிற்கு மேம்பட்டுப் பிரகாசிக்கின்றனர். நீதி, உண்மை மற்றும் தேவ சட்டத்தின் அதிகாரத்திற்கு அடிபணிந்து நடக்காமல், உண்மையான படைப்பாற்றல் வெளிப்பட முடியாது. "ஒவ்வொரு ஆன்மாவின் முதல் கடமை அதன் சுதந்திரத்தை அல்ல, அதன் எஜமானரைக் கண்டு பிடிப்பதாகும். (The first duty of every soul is to find not its freedom but its Master)" என்கிறார் பிரிட்டிஷ் இறையியலாளர் P. T. Forsythe.

மேசியா என்பது எபிரேய வார்த்தை. அதன் பொருள் "அபிஷேகம் செய்யப்பட்டவர்''. அதுவே கிரேக்க மொழியில் "கிறிஸ்து" எனச் சொல்லப்படுகிறது. பழைய ஏற்பாட்டில்; ராஜாக்கள் அபிஷேகம் செய்யப்பட்டனர் (1 சாமு. 10:1; 2 இரா 11:12). தீர்க்கதரிசிகள் அபிஷேகம் செய்யப்பட்டனர் (2 இரா 19:16). ஆசாரியர்கள் அபிஷேகம் செய்யப்பட்டனர் (யாத். 28:41). 

தேசங்கள் கலகம் செய்வது "கடவுளுக்கு எதிராக இல்லை; உண்மையில்  அவர்கள் கடவுளின் குமாரனாகிய இயேசு கிறிஸ்தை எதிர்த்து கலகம் செய்கிறார்கள். "இவர் எங்களை ஆளுகைச் செய்யக் கூடாது" எனும் ஒரு விஷயத்தில் அவர்கள் ஒத்த மனநிலையுடன் ஒற்றுமையாகச் செயல்படுகின்றனர் (லூக்கா 19:14). 

இந்த உலகம் தம்மை வெறுக்கும் என்பதைக் கிறிஸ்து அறிந்திருந்தார். அவரைப் பின்பற்றுபவர்களையும் வெறுக்கும் என்றும் கூறினார் (யோவான் 7:7; 12; 15, 18-19, 24-25; மத். 24:9; லூக்கா 21:17). 'சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்" என்ற சொற்றொடருக்கு "எதிர்ப்புக்குத் தயாராகுங்கள்" என்று பொருள். இறைவன் மற்றும் கிறிஸ்துக்கு எதிரான இந்த மீறலின் விளைவுகள் ரோமர் 1:18 இல் விவரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் தரிசன சங்கீதம் இனிமையானது அல்ல. இது ஒரு எச்சரிப்பின் சத்தம். 

2. தந்தையாகிய கடவுள் - இகழ்ச்சியின் குரல் (Mockery; வச: 4–6):

பரலோகம் ஓர் அமைதி நிறைந்த இடம். ஆனால் பூமி இதற்கு முற்றிலும் மாறுபட்டது. இங்கு எப்போதும் ஆரவாரம், கூச்சல், கலகம், சப்தம். இந்த சங்கீதத்தில் குறிப்பிடப்படும் மக்கள் ஆண்டவருக்கு விரோதமாகக் கொந்தளிக்கிறார்கள். ஆனால் மனிதன் தனக்கு எதிராகக் கலகம் செய்வதால் கடவுள் கவலைப்படவில்லை. பயப்படுவதும் இல்லை. அவர் இகழ்ச்சியாகச் சிரிக்கிறார் (சங். 37:7-13; 59:1-8). 

கடவுளின் பார்வையில் மாம்சமான யாவும் புல்லைப் போலவும், உதிர்ந்து போகும் பூவைப் போலவும் இருக்கிறது. தண்ணீர்களை தமது கைப்பிடியால் அளப்பவருக்கு வலிமை மிகுந்த நாடுகள் ஒரு சிறிய நீர்த் துளி (ஏசா. 40:6-8, 12-17). 

இன்றைக்கும் தேவன் கிருபையோடு ஜாதிகளிடம் பேசுகிறார். தம்முடைய குமாரனை விசுவாசிக்கும் படி அவர்களை அன்புடன் அழைக்கிறார். 

ஆனால் அவர் தம் கோபத்துடன் பேசி, பயங்கரமான நியாயத்தீர்ப்பை உலகத்திற்குக் கொடுக்கும் நாள் ஒன்று வரப் போகிறது  

அந்த நாளில் பாவத்தின் கோரத்தைச் சிலுவையில் தேவன் பரிகரித்தார் எனும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தங்களைப் பற்றியும், தங்கள் பாவங்களைப் பற்றியும் கடவுள் அளிக்கும் நியாயத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும் (வெளி. 6; 12-17). 

இஸ்ரவேலரின் எதிரிகள் கர்த்தரால் தோற்கடிக்கப்பட்டனர். கர்த்தர் தாவீதுக்கு வெற்றிக்கு மேல் வெற்றியை அருளினார். சீயோனில் தாவீதுக்கு கர்த்தர் அரியணையைக் கொடுத்தார். ஆனால் இது முடிவானதல்ல. இனி வரப் போகிற ஒரு பெரிய முடிசூட்டு விழாவின் அறிமுக காட்சி மட்டுமே. 

நித்தியமாக அரசாளப் போகும் ராஜா வர இருப்பதாகக் கடவுள் அறிவிக்கிறார். அவர் இப்போது மகிமையின் சிம்மாசனத்தில் தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார் (மாற்கு 16:19; 1 கொரி. 15:25; எபே.1:19-23). இயேசு கிறிஸ்து மெல்கிசேதேக்கின் வரிசையின்படி ராஜாவாகவும், ஆசாரியாராகவும் இருக்கிறார் (எபி. 5:5-6; 7:1). இப்போது இஸ்ரேலில் ராஜா இல்லை (ஓசியா. 3:4). ஆனால் பரலோக சீயோனில் ஒரு ராஜா இருக்கிறார் (எபி. 12:22-24). 

இந்த சங்கீதத்தில் மேசியாவாக வெளிப்படும் இயேசு கிறிஸ்தை அடையாளம் கண்டு கொள்ள தவறினால், மீட்பின் செய்தியை, அவருடைய மரணத்தை (வ. 1-3, அப் 4:23-28), உயிர்த்தெழுதலை (வ. 7, அப் 13:33), பரத்திற்கு ஏறி சிம்மாசனத்தில் மகிமையோடு அமர்ந்து இருப்பதை  (வ. 6), அவரது இரண்டாம் வருகை மற்றும் நீதியான ஆட்சி (வ. 8-9, வெளி. 2:9, 27; 12:5) என அனைத்தையும் முற்றிலும் இழந்து விடுவோம்.

3. குமாரனாகிய கடவுள் - வெற்றியின் குரல்  (Victory; வச. 7-9)

கிறிஸ்து ராஜாவாகச் சிம்மாசனத்தில் அபிஷேகம் செய்யப்பட்டார். இது ஓர் இறையாண்மை அறிவிப்பு (Sovereign decrees). இது எல்லோரும் ஒன்றாக கூடிப் பேசி, ஓர் ஒருமித்த கருத்தைக் எட்டி அல்லது வாக்களித்து பெரும்பான்மை பெற்றதன் அடிப்படையிலோ அறிவிக்கப் படவில்லை. 

"தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்'' என ஆண்டவர் அறிவிக்கிறார். கடவுள் தனது படைப்பை ஆள்கிறார் எனக் கலகம் செய்பவர்களுக்கு இந்த ஆணையின் மூலமாகத் தெரிவிக்கப் படுகிறது. கடவுளின் கட்டளைகள் நியாயமானவை

வசனம் 7 - இல் கிறிஸ்தின் உயிர்த்தெழுதல் குறிப்பிடப்படுகிறது, அவர் கல்லறையிலிருந்து "உயிர்த்தெழுந்து" மகிமையில் வெளிவந்தார். (ரோம். 1:4-5).

கீழ் தேசத்துப் பாரம்பரியத்தில், அரசர்கள் கடவுளின் மகன்களாகக் கருதப்பட்டனர், ஆனால் உண்மையில் இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் (சங் 89:26–27; 2 சாமு. 7:14. ). நம்முடைய கர்த்தருடைய ஞானஸ்நானத்தின்போது, ​​பிதா இந்த சங்கீதத்தின் 7ஆம் வசனத்தைக் குறிப்பிட்டு, இயேசுவை அவருடைய அன்பான குமாரன் என்று அறிவித்தார் (மத். 3:17; மாற்கு 1:11; லூக்கா 3: 22; எபி. 1:5; 5:5.).

உலக தேசங்கள் அனைத்தின் மீதும் முழுமையான அதிகாரத்தைக் குமாரனுக்குப் பிதா வாக்களித்துள்ளார். அவர் உலகின் அனைத்து ராஜ்யங்களையும் ஒரு நாள் ஆட்சி செய்வார். சாத்தான் தன்னை வணங்கினால் அதற்கு  ஈடாக இதே ஆளுகையைத் தருவதாகக் கூறினான். ஆனால் இயேசு அதற்கு மறுத்துவிட்டார் (மத். 4:8-11). 

கிழக்கத்தியப் பாரம்பரியத்தில் அரசர்கள் போருக்குச் செல்வதற்கு முன் களிமண் ஜாடிகளை உடைக்கும் சடங்கில் கலந்து கொண்டனர். களி மண் பானைகள் எதிரி இராணுவத்தை அடையாளப்படுத்தும். இதன் மூலம்  எதிரிகளைத் தோற்கடிக்கக் கடவுள்கள் நமக்கு உதவுவார்கள் எனும் நம்பிக்கை அடைந்தனர். 

இயேசுவுக்கு அத்தகைய உத்தரவாதம் தேவையில்லை. அவர் தனது எதிரிகளை முற்றிலுமாக அடித்து நொறுக்குகிறார். கிறிஸ்தின் ஆட்சி நீதி நிறைந்தது. உறுதியானது. அவரை எதிர்த்தால் மண் பானைகளைப் போல அவர்கள் அடித்து நொறுக்கப் படுவார்கள். “நொறுக்கிப் போடுவார்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தைக்கு “மேய்ப்பவர்” என்றும் பொருள் கொள்ளலாம். (வெளி. 2;27, 12;5, 19:11; தானி. 2:42-44). 

இயேசுவே கடவுள். இயேசுவே அரசர். இயேசுவே வெற்றியாளர்.

4.  பரிசுத்த ஆவியானவர் - கிருபையின் குரல் (Grace Opportunity: வ. 10-12);

பரலோகத்தில் சிம்மாசனத்தின் மீது அமர்ந்து நியாயத் தீர்ப்பு செய்யும் அதிகாரம் குமாரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பிதாவின் ஆணை. வாக்களிக்கப்பட்ட உடன்படிக்கை. இப்போது மக்கள் ஞானத்துடன் செய்ய வேண்டியது கிறிஸ்திடம் சரணடைந்து அவரை விசுவாசிப்பதாகும். இன்றைக்கும் பரிசுத்த ஆவியானவர் மனுகுலத்துடன் பேசுகிறார். மனந்திரும்பி இரட்சகரிடம் திரும்பும்படி பாவிகளிடம் மன்றாடுகிறார்.

வசனங்கள் 10 மற்றும் 11 இல், ஆவியானவர் முதலில் ராஜாக்கள் மற்றும் தலைவர்களிடம் பேசுகிறார். பின்னர் வசனம் 12 இல், அவர் "அனைவரையும்" குறிப்பிட்டு, குமாரனை நம்பும்படி அவர்களைத் தூண்டுகிறார். 

உலகத் தலைவர்களிடம் ஆவியானவர் தம் முறையீட்டைத் தொடங்குகிறார், ஏனென்றால் அவர்கள் உலகை ஆளும் விதத்திற்காக கடவுளிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் (ரோமர். 13). உண்மையில் மக்கள் அறியாமை நிறைந்தவர்கள். அவர்கள் கடவுளுக்கு எதிராக எழும்பினர். ஏனென்றால் அவர்களை அவ்விதம் செயல்படும்படி அவர்களின் தலைவர்கள் தூண்டினர்.  அவர்கள் இந்த உலகத்தின் ஞானத்தைப் பின்பற்றுகிறார்கள். கடவுளிடமிருந்து வரும் ஞானத்தைப் பின்பற்றுவதில்லை (1 கொரி. 1:18-31). அவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை நினைத்துப் பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால் நித்திய உண்மையைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. 

அவர்கள் எப்படிக் கற்றுக்கொள்ள முடியும்? கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்பிக்கப்பட வேண்டும் (வ. 10). இந்த வார்த்தைக்கு "எச்சரிக்கை" என்றும் பொருள். தம்முடைய கோபம் வெளிப்படு முன் பாவிகளை இரட்சிக்கக் கர்த்தர் விரும்புகிறார். எவ்வளவு கிருபையுள்ளவர்!

ஆவியானவர் மனதிற்கு அறிவுறுத்தியவுடன், அவர் விருப்பத்திற்கு வேண்டுகோள் விடுத்து, கலகக்காரர்களை இறைவனுக்குச் சேவை செய்யவும் பாவத்திற்குச் சேவை செய்வதை நிறுத்தவும் அழைக்கிறார் (வச. 11). உண்மையான விசுவாசிகள் தங்கள் இதயங்களில் பயம் மற்றும் மகிழ்ச்சி இரண்டையும் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன என்பதை அறிவார்கள்.  அன்பு பாவ பயத்தை நீக்குகிறது (1 யோவான் 4:18) ஆனால் தேவ பயத்தை பூரணப்படுத்துகிறது. நாங்கள் எங்கள் தந்தையை நேசிக்கிறோம், ஆனால் அவருடைய அதிகாரத்தை மதிக்கிறோம். 

இறுதியாக முழு மனதுடன் ராஜாவுக்கு அடிபணிந்து அன்பு செலுத்தும்படி அன்பு வேண்டுகோள் வைக்கிறார். பண்டைய உலகில், ஆட்சியாளர்கள் தங்கள் ராஜாவின் கை அல்லது கன்னத்தில் முத்தமிட்டு அவருக்குக் கீழ்ப்படிதலைக் காட்டுவார்கள். தோட்டத்தில் வைத்து யூதாஸ் இயேசுவை முத்தமிட்டார். ஆனால் அது அன்பின் வெளிப்பாடு அல்ல, துரோகம். 

இங்கு ஆவியானவர் முத்தமிட அழைப்பது சமர்ப்பணம் மற்றும் ஒப்புரவின்  அடையாளம். ஆவியானவர் ஒரு எச்சரிக்கை மற்றும் ஆசீர்வாத வார்த்தையுடன் இந்த சங்கீதத்தை நிறைவு செய்கிறார். 

எச்சரிப்பின் செய்தி; இந்த அன்பான ராஜாவும் கோபமடைவார். அறிவிப்பின்றி திடீரென அவருடைய பரிசுத்த கோபத்தை வெளிப்படுத்தலாம் (1 தெச. 5:1-4). அந்த கோபத்தின் கருப்பொருள் தந்தை (வச. 5) மற்றும் மகன் (வ. 9, 12) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முதலாம் சங்கீதம் "ஆசீர்வதிக்கப்பட்டவர்" என்று துவங்குகிறது. இரண்டாம் சங்கீதம் தேவனுடைய குமாரனில் நம்பிக்கை வைக்கும் அனைவருக்கும் வாக்குறுதி அளிக்கப்பட்ட ஆசீர்வாதத்துடன் நிறைவடைகிறது. 

அந்த வாக்குறுதி இன்னும் உள்ளது (யோவான் 3:16-18; 20:31).


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக