கர்த்தருக்குப் பிரியமானவன்.
தாவீது தனது மகன் அப்சலோமுக்குத் தப்பி ஓடிய துயரமான சூழ்நிலையில், மூன்று மற்றும் நான்காவது சங்கீதங்கள் எழுதப்பட்டது. இந்த இரண்டு சங்கீதங்களின் வசனங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
அநேகர் (வ. 4:6/3:2),
மகிமை (வ. 4:2/3:3),
கூப்பிட்டேன்(வ. 4:1/3:4),
படுத்து நித்திரை செய்வேன் (வ. 4:8/3:5).
மூன்றாம் சங்கீதம் காலையிலும், நான்காம் சங்கீதம் மாலையிலும் ஜெப விண்ணப்பங்களாக ஏறெடுக்கப்பட்டன (3:5, 4:8).
இந்த சங்கீதத்தின் தலைப்பில், "நெகினோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும் படி இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்'' எனும் குறிப்பு முதல் முறையாகக் காணப்படுகிறது. இதே போன்ற குறிப்பு, ஐம்பத்து மூன்று சங்கீதங்களின் தலைப்புகளில் காணப்படுகிறது.
இராகத்தலைவன் எனக் குறிப்பிடப்படுபவர், தேவனுடைய கூடாரத்திலும் பின்னர் ஆலயத்திலும் புனித ஆராதனையை நடத்துவதற்காக தாவீதால் நியமிக்கப்பட்ட, 288 இசை நிபுணர்கள் மற்றும் 4000 இசைக் கலைஞர்கள் அடங்கிய சங்கீத குழுவிற்குத் தலைவராகவும், பாதுகாவலராகவும் இருந்தவர் (1நாளா. 6:31-32; 15:16-22; 23:5, 25:1, 7).
நெகினோத் (சங். 4, 6, 54, 55, 61, 67, 76) என்கிற எபிரேய வார்த்தையின் அர்த்தம் "கம்பியை உடைய வீணை போன்ற வாத்திய கருவிகள் துணையுடன்" இனைந்து பாடப்படும் பாடலைக் குறிக்கிறது (1 நாளா. 25:1, 3, 6).
ஒரு துயரமான அனுபவத்தை, கர்த்தரைத் துதிக்கும் ஜெப பாடலாகப் பாடி, தேவனைத் துதித்து மகிமைப்படுத்துவதன் மூலம், அந்த துயரத்தை மேற்கொள்வது ஒரு அற்புதமான விஷயம். தாவீது அதைச் செய்கிறார். நாம் ஒரு நெருக்கடியான சூழலை எதிர் கொள்ளும் போது, எப்படி எதிர் வினையாற்ற வேண்டும் என்பதற்கு இது ஓர் சிறந்த படிப்பினை.
1. கர்த்தரையே நோக்கிப் பார்த்தார் (வச.1):
"எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தை கேட்டருளும்" என தாவீது உணர்ச்சி மிகுந்து வேண்டுகிறார். இது ஒரு தீவிரமான ஜெபமாகும். அதாவது "நான் கூப்பிடுகையில் எனக்குப் பதில் தர வேண்டும்!" என உரிமையோடு ஜெபிக்கிறார்.
நெருக்கடியான சூழலில் கர்த்தரையே நோக்கிப் பார்ப்பதும், அவரது ஒத்தாசைக்காக ஜெபிப்பதும், அதற்கான பதிலைப் பெறக் காத்திருப்பதும் தாவீதின் வழக்கம் (சங். 18:6; 50:15; 55:16; 145:18.).
தாவீது தமது இளமை நாட்களில் வனாந்தரங்களில் மறைந்து வாழ்ந்த காலங்களில், ஊரிம் மற்றும் தும்மீம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேவ சித்தத்தைத் தெரிந்து கொண்டார். ஆசாரியரோடும் கலந்தாலோசித்தார். ஆனால் இப்போது அப்சலோமின் கலகத்தின் போது அப்படி ஆலோசிக்க முடியவில்லை. எனவே தேவனிடம் நேரிடையாக முறையிட்டார்.
"என் நீதியின் தேவனே" என ஜெபிப்பது, தேவன் மட்டுமே நீதியுள்ளவர் என்பதைக் குறிக்கிறது. அவர் எனக்குச் சிறந்ததைச் செய்வார் எனும் தாவீதின் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. அத்துடன் அவரது நீதி கர்த்தரிடமிருந்து தான் வந்தது. ஆகவே மனிதர்கள் அல்ல, தேவன் தாம் அவரை நியாயம் தீர்க்க முடியும்.
கர்த்தர் தாம் அவரை ராஜாவாக அழைத்தவர். அவர் கீழ்ப்படியாமையின் காரணமாகக் கர்த்தரால் தண்டிக்கப்பட்டார். ஆனால் கர்த்தர் அவருடைய பாவங்களை மன்னித்தார். தேவனால் மட்டுமே ஒருவரைக் குற்றமற்றவர் என நியாயப்படுத்த முடியும்.
இந்த விண்ணப்பத்தில், தான் கடந்து வந்த நெருக்கமான ஒவ்வொரு நேரத்திலும், கர்த்தர் தம்மை விடுவித்ததை நினைவு கூர்கின்றார். அவரால் மட்டுமே இப்போதும் தம்மை விடுவிக்க முடியும் என ஜெபிக்கிறார்.
மன அழுத்தம் என்பது மனதை இறுக்கமான நிலைக்குத் தள்ளி, தனிமைப் படுத்தி, செயல்பட முடியாதபடி செய்து, ஒரு மூலையில் முடக்கி வைத்து விடும். ஆனால் கடினமான சூழ்நிலைகளில் மத்தியிலும், தேவன் "அவருக்கு விசாலமான இடத்தை உண்டாக்கி" ஆவிக்குரிய வளர்ச்சி அடையச் செய்தார் (சங். 18:19, 36; 25:16; 31:8; 118:5; 119:32).
நற்செயல்கள் செய்வதன் மூலமாகக் கிடைப்பது கர்த்தரின் கிருபை அல்ல. தமது நற்செயல்கள் மூலமாகக் கர்த்தரின் உதவியைப் பெறத் தனக்குத் தகுதி கிடையாது என்பதும் தாவீதுக்கு நன்கு தெரியும். அதனால் தான் தேவனின் கருணை மற்றும் தயவிற்காக ஜெபித்தார்.
கர்த்தரின் கிருபை, ''தகுதி இருப்பவர்களுக்கு, உரிமையானதைக் கொடுப்பதில் வெளிப்படுவது இல்லை. மாறாக, தகுதியற்றவர்களை, தகுதிப் படுத்துவதில் வெளிப்படுகிறது''.
2. எதிரிகளை எதிர்கொண்டார் (வச. 2–3):
அந்தஸ்தில் உள்ள முக்கிய மனிதர்கள் தாவீதிக்கு எதிராகத் திரண்டார்கள். அவர்கள் அப்சலோமை ராஜாவாக்கிய போது தாவீது அந்த இடத்தில் இல்லை. அவர் தனக்கு எதிராகத் திரும்பியவர்களைப் பார்த்துப் பேசினார். அவர்களை "மனுப் புத்திரரே" என அழைத்தார்.
அவர்கள் அப்சலோமினால் வசீகரிக்கப்பட்டனர். மக்களைத் தவறான அழிவின் பாதையில் நடத்திச் சென்றனர். தாவீது அவர்களின் எண்ணத்தையும் அப்சலோம் அவர்களை எப்படி ஏமாற்றினான் என்பதையும் புரிந்து கொண்டார்.
தாவீது அடைந்த உயர்வு சுயமாகச் சம்பாதித்தது அல்ல. அந்த மகிமை கர்த்தரால் அருளப்பட்டது (3:3). கலக கும்பல் மன உற்சாகத்துடன் மாயையைப் பின் தொடர்ந்தார்கள். அவர்கள் மனம் மயங்கி பாவம் செய்தனர். ஆனாலும் அவர்கள் செய்த பாவங்களுக்கு விலை செலுத்தியே தீர வேண்டும் .
ஒருவர் பொய்யை நம்பி, வீண் விஷயங்களைப் பின்பற்றினால், வழி தவறி தவறான பாதையில் நடப்பார். இறுதியில் அது அவரை அழிவில் கொண்டு போய் சேர்க்கும்.
கலகக்காரர்கள் ராஜாவை மட்டும் பதவியிலிருந்து தூக்கி எறியவில்லை; அவரை அரியணையில் அமர்த்திய கர்த்தராகிய ஆண்டவரைத் தூக்கி எறிந்தனர்.
அப்சலோம் தேவ மனிதனாக ஒரு போதும் நடந்து கொண்டதில்லை. அது நிச்சயம். அவர் இஸ்ரவேலை ஆளுவதற்குக் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப் பட்டவரும் அல்ல. கலகம் செய்தவர்கள் அப்சலோமின் முகஸ்துதி மற்றும் பொய்யான வாக்குறுதிகளுக்கு மயங்கி செவியைச் சாய்த்தபோது, அவர்கள் ஒரு பொய்யான கடவுளைப் பின்பற்றினர் (2 சாமு. 15:1-6).
தாவிது கலகம் செய்தவர்களுடன் சமரசம் செய்ய முயலவில்லை; அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது அவருக்கு நன்கு தெரியும். ஆகவே அவர் அவர்களை நிராகரித்தார்.
3. பின்பற்றியவர்களை வழி நடத்தினார் (வ. 4–5):
இந்த வசனங்களில், தாவீது தம்மைப் பின்பற்றிய மக்களிடம் பேசுகிறார். அவர்களில் சிலர் மிகக் கோபமாகக் கொந்தளித்து உணர்ச்சி மிகுந்து பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மனம் பற்றியெரிந்தது.
தாவீது ஆறு அறிவுரைகளை அவர்களுக்குக் கொடுத்தார். இன்றும் ஆத்திரமூட்டும் சூழலை எதிர் கொள்ளும் போது இவை நமக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
a. கர்த்தருக்கு மட்டும் பயந்து நடுங்குங்கள் (4a).
கர்த்தருக்குப் பயப்படும் விசுவாசிகள் வேறு எதற்கும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அப்சலோமைப் பின் பற்றினவர்கள் கர்த்தருக்கு முன்பாகவும் பயப்படவில்லை. அவரால் அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவையும் உதாசீனம் செய்தனர்.
b. பாவம் செய்யாதீர் (4b).
பரிசுத்தமற்ற கோபம் (Sinful Anger) தீமையான வார்த்தைகளுக்கும், கொடூரச் செயல்களுக்கும், கொலைக்கும் கூட வழிவகுக்கிறது (மத். 5:21-26).
பவுல் இந்த வசனத்தை எபேசியர் 4:26ல், மேற்கோள் காட்டினார். "கோபமாக இரு, ஆனால் பாவம் செய்யாதே" என (nkjv) மொழிபெயர்ப்பில் வாசிக்கலாம். இது எல்லா கோபமும் பாவம் அல்ல என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. ஒவ்வொரு விசுவாசியின் இதயத்திலும் பாவத்திற்கு எதிரான ஒரு பரிசுத்த கோபம் (Holy Anger) உள்ளது (மாற்கு 3:5).
ஆனாலும் பரிசுத்தமற்ற கோபத்தினால் பாவகுற்றம் செய்து விடாதபடி எச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும்.
c. உங்கள் மனதைச் சோதித்துப் பாருங்கள் (4c).
மற்றவர்களின் குற்றங்களைப் பார்த்துக் கோபப்படுவதும், நம்முடைய சொந்த பாவங்களைக் கண்டும் காணாமல் இருப்பதும் மிக எளிது (மத். 7:1-5). உண்மையில், தாவீதும் இதைச் செய்தார். ஆனால் அவர் குற்றவாளி என உணர்த்தப்பட்டார். அதை அறிக்கையிட்டார்(2 சாமு. 12:1-7).
சிலர் இந்த வசனத்தை "உங்கள் சொந்த மனதுடன் பேசுங்கள்" (சங். 10:6, 11, 13) எனப் பொருள் சொல்கின்றனர்.
படுக்கையில் மற்றவர்கள் செய்கிற பாவச் செயல்களை யோசித்து நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, உங்கள் சொந்த இருதயத்தில் ஒப்புக்கொள்ள வேண்டிய பாவங்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை ஆராய்ந்து மனதைத் தூய்மையாக்குவது நல்லது.
d. அமர்ந்திருங்கள் (4d).
"நீங்கள் உங்கள் மனதோடு பேசிய விஷயங்களுக்காக வருந்துங்கள்." என Amplified Bible மொழிபெயர்ப்பில் உள்ளது. மற்றொரு மொழிபெயர்ப்பானது உங்கள் சொந்த இதயத்தில், "பாவம் செய்யாதே" எனச் சொல்லுங்கள் என்கிறது.
மனதின் சிந்தனைகளை நேர்மையான ஆராய்வது, நம்முடைய பாவங்களைக் கர்த்தரிடம் அறிக்கையிடவும், அவருடைய கிருபையான மன்னிப்பைப் பெறவும் நம்மை வழி நடத்த வேண்டும் (1 யோவான் 1:9).
e. பொருத்தனை நிறைவேற்றுங்கள் (5a).
இப்போது வனாந்தரத்தில் அவர்களால் கர்த்தருக்கு நீதியின் பலிகளைச் செலுத்த முடியவில்லை. ஆனால் எருசலேமுக்குத் திரும்பும்போது அதைச் செய்வோம் என்று பொருத்தனை செய்தார்கள். இதைத்தான் யோனாவும் செய்தார் (யோனா 2:9).
அப்சலோம் மக்களைக் கவருவதற்காக நேர்மையற்ற மற்றும் பாசாங்குத்தனமான பலிகளைச் செலுத்தினார் (1 சாமு. 15:22). ஆனால் கர்த்தர் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. (சங். 50:14–15)
f. தேவனை விசுவாசியுங்கள் (5b).
அப்சலோம் தனது தலைமைத்துவம், இராணுவம், புத்திசாலித்தனமான உத்தி, மக்களிடம் அவனுக்கிருந்த பிரபலம் ஆகியவற்றையே நம்பினான். ஆனால் அவன் கர்த்தரை நம்பவில்லை. இறுதியில் அவனது திட்டங்கள் தோல்வி அடைந்தது.
தாவீது ஒரு சிறந்த இராணுவ நிபுணத்துவம் பெற்ற ராஜா மட்டுமல்ல, அவர் ஒரு அன்பான மேய்ப்பராகவும் இருந்தார். தனது மக்களைக் கவனித்து, அவர்கள் ஆண்டவருடன் நடக்க வேண்டும் என்று விரும்பினார்.
தனது மக்களின் இராணுவத் திறமையைவிட, கர்த்தருக்குப் பயந்து அவருக்குக் கீழ்ப்படிவதே மிகவும் முக்கியமானது என்பதை தாவீது அறிந்திருந்தார். ஏனென்றால் கர்த்தரை நம்பி கீழ்ப்படிகிறவர்களுக்கு வெற்றி நிச்சயம் (சங். 51:16-19).
4. கர்த்தரில் மகிழ்ந்து களி கூறுங்கள் (வ. 6–8):
மக்களில் பலர் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை தாவீதின் தலைவர்கள் அவருக்குத் தெரிவித்தனர். அவரைப் பின் பற்றியவர்களில் பலர் நம்பிக்கை இழந்து சோர்ந்து இருப்பதை அவர் அறிந்திருந்தார் (சங். 3:2).
"எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார்?"என தாவீதைப் பின்பற்றியவர்களில் பலர் கேட்டனர்.
"நாம் ஏதாவது நல்லதைக் காண்போமா?!" (AB), அல்லது "இதிலிருந்து ஏதாவது நல்லது கிடைக்குமா?" அல்லது "இந்த அவலத்திலிருந்து எங்களை யார் மீட்டெடுக்க முடியும்?" என அவர்களால் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது. அவர்கள் எவ்வளவு அதிகமாகக் குறை கூறினார்களோ, அவ்வளவு அதிகமாக மற்றவர்களைச் சிரமப்படுத்தினர்.
யூத பதிப்பக சொசைட்டியின் பதிப்பில், "ஓ நல்ல நாட்கள்!" என வாசிக்கிறோம். அதன் பொருள் "எத்தனை அருமையான பழைய நாட்கள்"
"ஓ நல்ல நாட்கள்!" எனக் கடந்த காலத்தைச் சிலாகிப்பது, உண்மையில் ''மோசமான மறதி மற்றும் நல்ல கற்பனையின் கலவை''.
மக்கள் என்ன வகையான "நல்லதை" எதிர்பார்த்தனர்? எந்த விலை கொடுத்தாலும் பரவாயில்லை வசதியான வாழ்க்கை - சமாதானம், பாதுகாப்பு, ஒரு தெய்வீக ராஜா, வெற்றிகரமான புதிய ராஜா? இவை தானா?
ஆனால் எந்த வகையான நன்மை தங்களுக்குத் தேவை என்பதை தாவீது அறிந்திருந்தார். கர்த்தரின் மகிமையின் ஒளி அவர் மீதும் அவரது மக்கள் மீதும் பிரகாசிக்கப்பட வேண்டும். அந்த மகிமையான பிரசன்னத்தால் நிறைந்து, தேவன் மகிழ்ச்சியடையும் விதத்தில் நடந்து கொண்டால் போதும், மற்ற எல்லாவற்றையும் தேவன் பார்த்துக் கொள்வார்.
இது ஆசாரிய ஆசீர்வாதத்தைக் குறிக்கிறது (எண். 6:24-26 சங். 31:16, 44:3; 67:1; 80:3, 7, 19; 119:135). இந்த ஆசீர்வாதத்தை வழங்க தற்போது ஒரு ஆசாரியார் இங்கு இல்லை. ஆனால் கர்த்தர் தனது இதயத்தின் ஜெபத்திற்குப் பதிலளிப்பார் என்று தாவீது விசுவாசித்தார்.
இந்த இருள் நிறைந்த சூழலைத் தேவன் ஒளியாக மாற்றுவதைப் பார்க்க தாவீது விரும்பினார். அதைத்தான் அவர் செய்தார். ஆம், தாவீதின் இருள் வெளிச்சமாக மாறியது. அது மட்டுமல்ல, அவரது துக்கம் சந்தோஷமாக மாறியது (வ. 7).
இஸ்ரவேலர்கள் திருமண வைபவங்களிலும், அபரிமிதமான அறுவடைகளிலும் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவித்தனர் (ஏசா. 9:3; எரே. 48:33); ஆனால் தேவன் இப்போது தாவீதுக்குக் கொடுத்த சந்தோஷம் அந்தக் காலங்களின் மகிழ்ச்சியை விட அதிகமாக இருந்தது. (ரோம. 15:13; யோவான் 16:24.)
இறுதியாக, போரில் போராடி வெற்றி பெறுவதற்கு முன்பு கர்த்தர் தன் இருதயத்தில் வைத்த சமாதானத்திற்காக தாவீது கர்த்தரைப் புகழ்ந்தார் (வ. 8). முந்தைய நாள் இரவு கர்த்தர் அவருக்கு ஓய்வு கொடுத்தார் (3:5). இப்போதும் அவர் மீண்டும் ஓய்வெடுக்கிறார். ஏனெனில், கர்த்தர் தனது கேடயம் என்பதை அறிந்து கொண்டார் (3:3).
"அமைதி" (ஷாலோம்) என்பதற்கான எபிரேய வார்த்தையின் அர்த்தம், போராட்டம் மற்றும் குழப்பம் இல்லாத அமைதியான மனநிலை என்பதை விட அதிக பொருள் பொதிந்தது. இது நம்பிக்கை மற்றும் நிறைவான வாழ்க்கை பற்றிய வாக்குத்தத்தங்களை உள்ளடக்கியது. இதுவே வாழ்க்கைக்கு போதுமானது.
ஒருவேளை கர்த்தர் உபாகமம் 33:12ஐ தாவீதின் நினைவிற்குக் கொண்டு வந்திருக்கலாம்; “கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடு சுகமாய் தங்கியிருப்பான்; அவர் அவனை எந்நாளும் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார்''.
தாவீது என்ற பெயரின் அர்த்தம் “பிரியமானவர்” என்பதை நீங்கள் நினைவுகூரும் போது இந்த வாக்குறுதி இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக