திங்கள், 27 மார்ச், 2023

யாக்கோபு 1: 2-4

அத்தியாயம் இரண்டு: யாக்கோபு 1: 2-4

சோதனைகளைச் சாதனைகளாக மாற்று.



“வாழ்க்கை உங்களுக்கு எலுமிச்சையைத் தந்தால், எலுமிச்சை சாற்றை உருவாக்குங்கள்!” (When life hands you lemons, make lemonade) என்று எழுதப்பட்ட வாசகத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். 

அந்த வாசகத்தைப் பயிற்சி செய்வதை விட, அதைப் பார்த்துப் புன்னகைப்பது எளிதானது. ஆனால் அது சொல்லும் அடிப்படைத் தத்துவம் உண்மை. 

உண்மையில், இது வேதத்தின் கோட்பாடு. வேதாகமம் முழுவதும் தோல்வியை வெற்றியாகவும், சோதனையைச் சாதனையாகவும் மாற்றிய பலரது வாழ்க்கை சரித்திரத்தை வாசிக்கலாம். அவர்கள் சோதனை சூழலில் சிக்கி விழுந்து பலியாவதற்குப் பதிலாக, அதை விசுவாசத்துடன் எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்று சாதனையாளர்களாக மாறினர். இன்று நாமும் அதே வித வெற்றி அனுபவத்தைப் பெறலாம் என்று யாக்கோபு சொல்கிறார். 

வெளியிலிருந்து வரும் சோதனைகள் (யாக். 1:1-12), அல்லது உள் மனதின் இச்சைகளினால் எழும்பும் சோதனைகள்(யாக்கோபு 1:13-27); சோதனைகள் எந்த வடிவிலிருந்தாலும், கிறிஸ்துவ விசுவாசத்தில் நிலைத்திருப்பதன் மூலம் நாம் வெற்றியை அனுபவிக்க முடியும். இந்த வெற்றியின் விளைவு ஆன்மீக முதிர்ச்சி. 

நாம் சோதனைகளை வெற்றியாக மாற்ற வேண்டுமெனில், நான்கு கட்டாய விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என யாக்கோபு அறிவுறுத்துகிறார்: 

1. சந்தோஷமாக எண்ணுங்கள் - Count (யாக்.1:2), 

2. பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து - Know (யாக். 1:2), 

3.நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி - Let (யாக். 1:4),

4. கேட்கக்கடவன் - Ask  (யாக். 1: 5). 

அல்லது, இதை வேறு விதமாக விளக்கிச் சொல்வதானால், சோதனைகளில் வெற்றி பெறுவதற்குக் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு அத்தியாவசிய மன நிலைகள் தேவையாக உள்ளன: 

1. மகிழ்ச்சியான மனப்பான்மை - A Joyful Attitude, 

2. புரிந்துகொள்ளும் மனம் - An Understanding Mind, 

3. விருப்பத்துடன் சரணடைதல் - A Surrender Will, 

4. நம்ப விரும்பும் இதயம் - A Heart that wants to Believe.

1. மகிழ்ச்சியான மனப்பான்மை- (A Joyful Attitude-1:2):

உங்கள் மனம் ஒரு காரியத்தை ஆராய்ந்து, அதில் எதை மதிப்பு மிக்கதாக ஏற்றுக் கொள்ளுகிறதோ, அந்த மனப்பாங்கே அந்தச் செயலை எவ்விதம் அணுகுவது என்பதையும் முடிவு செய்கிறது. 

உதாரணமாக, உங்களது மகளின் பொதுத் தேர்வும், மிக நெருங்கிய உறவினரது திருமணமும் ஒரே தேதியில்  வந்தால் அந்த காரியத்தை எவ்விதம் அணுகுவீர்கள்? எதை மதிப்புமிக்க தாக கருதுகிறீர்களோ, அதற்கே முன்னுரிமை தருவீர்கள் அல்லவா! 

உங்கள் முடிவு தெளிவாக இருந்தால், உங்கள் மனமும் மகிழ்வுடன் இருக்கும்.

இரண்டாம் வசனத்தைக் கவனியுங்கள்; 

"நீங்கள் பலவகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது"  என உள்ளது. 

இங்கு ''சோதனைகளில் உள்ளாகினால்'' என இல்லை. அதன் பொருள், விசுவாச வாழ்வில், சோதனைகள் நிச்சயம் வரும். அதைச் சந்திக்க ஆயத்தமாக இருக்க வேண்டும்.

ஒரு விசுவாசி, தனது கிறிஸ்தவ வாழ்க்கை துயரங்களற்று, எப்போதும் மிக இனிமையாகவே இருக்கும் என்று  எதிர்பார்த்தால், அவர் நிஜ வாழ்க்கையில் மிகப் பெரும் அதிர்ச்சியை உண்மையில் சந்திப்பார். 

ஆகையால் தான் கிறிஸ்து தம் சீடர்களை இவ்விதமாக எச்சரித்தார்,

"உலகில் உங்களுக்குத் துன்பங்கள் உண்டு" (யோவான் 16:33). 

பவுலும் அவ்விதமாகவே, புதிதாகச் சபையில் இணைந்த விசுவாசிகளின் உள்ளத்தை உறுதிப்படுத்தி,

"நாம் பல வேதனைகள் வழியாகவே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்"  என்று  கூறினார் (அப். 14:22). 

நாம் கர்த்தருடைய"அடைக்கலம்" பெற்ற மக்கள் மட்டுமல்ல, அவரால் "சிதறடிக்கப்பட்ட'' மக்களும் ஆவோம். எப்போதும் நாம் நினைத்த வண்ணமாகவே எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகையால் சோதனைகளை எதிர் கொள்ள, அதை வெற்றிகரமாக மேற்கொள்ள நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். 

உலகில் உள்ள அனைவருக்கும் சில சோதனைகள் பொதுவானவை: நோய், விபத்துகள், ஏமாற்றங்கள், உயிரிழப்புகள்.., அவை . 

நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதால், வேறு பிற சோதனைகளையும் எதிர் கொள்ள நேரிடும். 

சாத்தான் நம்முடன் சண்டையிடுகிறான். உலகம் நம்மை எதிர்க்கிறது.  கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு விசுவாச போராட்டம்

பேதுரு தனது முதல் நிருபத்தில் இதை வலியுறுத்தினார்:   

''அன்புக்குரியவர்களே, துன்பத் தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது, ஏதோ எதிர்பாரதது நேர்ந்துவிட்டதென வியக்காதீர்கள்" (1 பேதுரு 4:12). 

"சோதிக்கப்படும்போது" என்ற சொற்றொடர், முட்டாள்தனமாகச் செயல்படுவதால் ஏற்படும் விபத்தைக் குறிக்கவில்லை. அதை "சந்திப்பீர்கள், ஆகவே எதிர் கொள்ளத் தயாராகுவீர்" எனும் எச்சரிக்கை வாசகமாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கிறிஸ்தவர் நிச்சயமாகத் தனது கவனக் குறைவால் சோதனைகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது. 

"Divers" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம் "பல்வேறு வித வண்ணமயமான" எனப் பொருள்படும். பேதுரு அதே வார்த்தையை 1 பேதுரு 1:6-ல் பயன்படுத்தினார் - 

"இப்போது சிறிது காலம் நீங்கள் பலவகைச் சோதனைகளால் துயருற வேண்டி இருப்பினும்" 

வாழ்க்கையில் நேரிடும் சோதனைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை அல்ல; அவை நெசவாளர் அழகிய விரிப்பைச் செய்வதற்குப் பயன்படுத்தும் பல வகையான வண்ண நூல்களைப் போன்று பல வடிவங்களில் வரும். 

கர்த்தர் வாழ்க்கையில் பல விதமான வண்ணங்களைக் கலந்து, அழகிய அனுபவங்களை உருவாக்குகிறார். அதன் இறுதி வடிவம் அவரது மகிமைக்கு ஒரு அழகான விஷயம்.

நானும் என் மனைவியும் ஒருமுறை உலகப் புகழ் பெற்ற நெசவாளர் ஒருவரைச் சந்தித்தோம். அங்கு ஆண்களும், பெண்களும் தறியில் வேலை செய்வதைப் பார்த்தோம். நெய்யப்பட்ட விரிப்புகளின் அடிப்பகுதி அழகாக இல்லை என்பதை நான் கவனித்தேன். அதன் வடிவங்கள் தெளிவற்று இருந்தன. நூலின் முனைகள் தளர்வாகத் தொங்கின. 

அப்போது எங்கள் வழிகாட்டி, "தவறான பக்கத்தைப் பார்த்து தொழிலாளியின் வேலையை அல்லது துணியின் வடிவ நேர்த்தியை மதிப்பிடாதீர்கள்" என்று கூறினார். 

அதே போல, வாழ்க்கையின் தவறான பக்கத்தையே நாம் பார்க்கிறோம்; முடிக்கப்பட்ட வடிவத்தை இறைவன் மட்டுமே பார்க்கிறார். இன்று நாம் பார்ப்பதிலிருந்து, அவருடைய திட்டங்களை மதிப்பிட வேண்டாம். அவரது பணி இன்னும் முடியவில்லை!

வசனம் 3ல், நாம் தியானிக்கும் முக்கிய சொல் எண்ணுங்கள் (Count). இது ஒரு நிதி பரிவர்த்தனைச் சொல். இதன் பொருள் "மதிப்பிடு". பிலிப்பியர் 3ம் அதிகாரத்தில் பவுல் இச் சொல்லைப் பலமுறை பயன்படுத்தினார். 

பவுல் ஒரு கிறிஸ்தவராக மாறிய போது, ​​அவர் தனது வாழ்க்கையை மறு மதிப்பீடு செய்து, புதிய இலக்குகளையும் முன்னுரிமைகளையும் அமைத்தார். கிறிஸ்துடனான அவரது அனுபவத்தின் வெளிச்சத்தில், அவர் முன்பு முக்கியமாகக் கருதிய விஷயங்கள் எல்லாம் "குப்பையாக" மாறியது. 

இதன் பொருள், வாழ்க்கையில் சோதனைகளை எதிர்கொள்ளும்போது, ​​கர்த்தர் நமக்காக என்ன செய்கிறார் என்பதன் வெளிச்சத்தில் சோதனைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். அப்போது அதன் மதிப்பை உணர்வோம். 

ஒரு அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவர் சோதனைகளின் மத்தியில் எவ்வாறு  மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது என்பதை இது விளக்குகிறது: அவர் மிகவும் மதிப்புமிக்க விஷயங்களுக்காக வாழ்கிறார். 

நம்முடைய கர்த்தரும், சிலுவையின் பாடுகளை முழு மனதுடன் ஏற்க முடிந்தது, ஏனெனில் 

"அவர் தமக்கு முன்பாக வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை நினைக்காமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபக்கத்தில் வீற்றிருக்கிறார்." (எபி. 12:2). 

அவருடைய அந்த மகிமையை ஒரு நாள் சபையோடு பகிர்ந்து கொள்வார்.

நாம் எதை மதிப்புமிக்கது என முடிவு செய்கிறோமோ, அவைகளே நமது மதிப்பீடுகளைத் தீர்மானிக்கின்றன (Lives for the things that matter most. Our values determine our evaluations)

நற்பண்புகள் அடைவதை விட, சுகமான வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், சோதனைகள் நம்மை வருத்தப்படுத்தும். 

ஆன்மீக வளர்ச்சியை விடப்  பொருள் மற்றும் உலக மதிப்புகளை நாம் பெரிதாக நினைத்தால், சோதனைகளை மகிழ்ச்சியாக இருக்காது.

நிகழ்காலத்தின் மகிழ்ச்சி மட்டுமே போதும், எதிர்காலத்தைக் குறித்த கவலை இல்லை என வாழ்ந்தால், சோதனைகள் நமக்கு இனிப்பாக அல்ல, கசப்பானதாக இருக்கும். 

பக்தன் யோபுவுக்கு இதைக் குறித்த சரியான கண்ணோட்டம் இருந்தது, 

"ஆயினும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைப் புடமிட்டால், நான் பொன்போல் துலங்கிடுவேன்" (யோபு 23:10).

எனவே, சோதனைகள் வரும்போது, ​​உடனடியாக இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். மகிழ்ச்சியான மனப்பான்மையைக் கடைப்பிடியுங்கள். கவலையற்று இருப்பது போல் பாசாங்கு செய்ய வேண்டாம். சுய மனோவசியத்தில் (Hypnosis) அதை மேற்கொள்ள முயற்சி செய்ய வேண்டாம்.

அந்த சோதனைகளை விசுவாச கண்களால் வெறுமனே உற்றுப் பாருங்கள். ஒரு காரியத்தை நீங்கள் பார்க்கும் மனப்பாங்கு, அதன் முடிவைத் தீர்மானிக்கிறது. ஒரு செயலை மகிழ்ச்சியுடன் முடிக்க, மகிழ்ச்சியுடன் தொடங்குங்கள். 

இவை படிப்பதற்கு நன்றாக உள்ளது, "ஆனால், நடைமுறை வாழ்வில், சோதனைகளுக்கு மத்தியில் எப்படி மகிழ்ச்சியோடு இருப்பது?" என்று  கேட்கலாம். அதற்குத் தேவைப்படும் மனநிலை குறித்து இரண்டாவது பகுதி விளக்குகிறது.

2. புரிந்துகொள்ளும் மனம்-(An Understanding Mind-1:3):

சோதனைகளை எளிதாக எதிர்கொள்வது எப்படி? 

அவை தரும் அனுபவங்களிலிருந்து எவ்விதம் பயனடைவது ? 

இது போன்ற கேள்விகளுக்கான பதில் எத்தனை கிறிஸ்தவர்களுக்குத் தெரியும்?

முதலில் சோதனைகள் குறித்த சில அடிப்படை உண்மைகளை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

a. நம்பிக்கை எப்போதும் சோதிக்கப்படுகிறது (Faith is always tested). 

கடவுள் ஆபிரகாமை விசுவாசத்தால் வாழ அழைத்தார். ஆபிரகாம் கீழ்ப்படிந்து பின்பற்றினார். ​​ஆனாலும் கர்த்தர் ஆபிரகாமைச் சோதித்தார். ஏனெனில், அவரது விசுவாசத்தை வலிமைப்படுத்துவதற்காகச் சோதித்தார்.

ஆபிரகாம் வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு போராட்டத்தையும்  தியானித்துப் பாருங்கள். அவர் ஒவ்வொரு சோதனையைக் கடக்கும் போதும் ஒரு ஆசீர்வாத வாக்குத்தத்தை சுதந்தரித்துக் கொள்வதைக் காணமுடியும்.

விசுவாச கீழ்படிதல்: ஆதி 12:4-6, ஆசீர்வாதம் 12:7

விசிவாச கீழ்படிதல்: ஆதி 13:5-12, ஆசீர்வாதம் 13:13-17

விசுவாச கீழ்படிதல்: ஆதி 14:21-24, ஆசீர்வாதம் 15:1-6

விசுவாச கீழ்படிதல்: ஆதி 17:1-19, ஆசீர்வாதம் 21:1-8

விசுவாச கீழ்படிதல்: ஆதி 22:1-10, ஆசீர்வாதம் 21:11-18

நம்மிடம் உள்ள சிறந்த பண்புகளை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக, நம் வாழ்வில் கர்த்தர் சோதனையை அனுமதிக்கிறார். 

நம்மிடம் உள்ள மோசமான தன்மைகளை வெளிப்படுத்தச் சாத்தான் நம்மைப் பாவ இச்சையால் தூண்டுகிறான். 

ஆக நாம் மீண்டும் பிறந்திருக்கிறோமா? என்பதை விசுவாசத்தின் பரீட்சைகள் நிரூபிக்கிறது. 

b. சோதனை நம்மை மேம்படுத்த அருளப்படுகிறது. நம்மை வீழ்த்துவதற்கு அல்ல (Testing works for us, not against us). 

முயற்சி என்ற வார்த்தையை "அங்கீகரித்தல்" என்றும் மொழிபெயர்க்கலாம். அதை நன்றாகப் புரிந்துகொள்ள பேதுரு மீண்டும், நமக்கு உதவுகிறார்:  

"அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள்" (1 பேதுரு 1:7). 

ஒரு தங்க ஆய்வாளர் சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட தாது மாதிரியைப் பரிசோதகர் ஆய்வகத்திற்குக் கொண்டு வந்து பரிசோதிக்கிறார். அந்த மாதிரி தூண்டின் மதிப்பு சொற்பமாகவே இருக்கும். ஆனால் அதற்கு ஒப்புதல் அளித்தவுடன், அந்த தாது சுரங்கத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கை—பல மில்லியன் பண மதிப்புடையதாக அந்த சுரங்கத்தை மாற்றுகிறது! அந்த ஒரு சான்றிதழ், அவர் ஒரு தங்கச் சுரங்கத்தின் அதிபதி என உறுதியளிக்கிறது. 

நமது விசுவாசமும் கர்த்தரால் அங்கீகாரமாக்கப்படும் போது அது மிக விலையேறப்பற்றது. ஏனென்றால் அந்த அங்கீகாரம்  நம்முடைய விசுவாசம் உண்மையானது என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆகச் சோதனைகள் விசுவாசிக்கு உதவி செய்கின்றன. அவை அவருக்கு எதிராக அல்ல. 

பவுல் கூறுவது;

"மேலும், கர்த்தரிடம் அன்பு கூர்பவர்களுக்கு, அதாவது அவரது திட்டத்திற்கேற்ப அழைக்கப்பட்டவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியானவர் அனைத்தையும் நடத்துகிறார்" (ரோமர். 8:28). 

மேலும், 

"நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை. அவை சிறிது காலம்தான் நீடிக்கும். ஆனால் அவை ஈடு இணையற்ற மாட்சியை விளைவிக்கின்றன. அம்மாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும்.” (2 கொரி. 4:17). 

c. சரியாகப் பயன்படுத்தப்படும் சோதனைகள் முதிர்ச்சியடைய நமக்கு உதவுகின்றன (Trails rightly used help us to mature). 

சோதனைகளை அனுமதிப்பதன் மூலமாக, கர்த்தர் நம் வாழ்வில் எதை உருவாக்க விரும்புகிறார்? 

பொறுமை, சகிப்புத்தன்மை, கடினமான சூழலை எதிர்த்துத் தொடர்ந்து முன்னேறிச் செல்லும் திறன். (Patience, Endurance & Persistence).

“அது மட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் பொறுமையோடு மன உறுதியும், மன உறுதியால்  பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று அறிந்து, துன்பங்களிலும் மேன்மை பாராட்டுகிறோம்” (ரோமர். 5:3-4). 

பொறுமை என்பது எதிர் வினையாற்றப் பயந்து, சூழ்நிலைகளை அப்படியே ஏற்றுக்கொள்வது அல்ல, மாறாகத் துன்பம் மற்றும் சிரமங்களைத் தைரியமாக விடாமுயற்சியுடன் எதிர்கொள்ளும் மன உறுதியைக் குறிக்கிறது.

முதிர்ச்சியடையாதவர்கள் எப்போதும் பொறுமையற்றவர்கள்; முதிர்ந்த மக்கள் பொறுமையாகவும், விடாமுயற்சியுடனும் இருப்பார்கள். 

பொதுவாக நம்பிக்கையும் பொறுமையும் ஒன்றாக இருப்பது போல் பொறுமையின்மையும், அவநம்பிக்கையும் இனைந்தேச் செல்கின்றன. 

பொறுமை மற்றும் விசுவாசம் குறித்து வேதம் தெளிவாக எடுத்துரைக்கிறது.

 "இவ்வாறு நீங்கள், தளர்ச்சிக்கு இடம் கொடாது, விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் வாக்குத்தத்தங்களை உரிமைப்பேறாகப் பெற்றவர்களைப் போல வாழுங்கள்" (எபி. 6:12). 

"நீங்கள் தேவனுடைய திருவுளத்தை நிறைவேற்றிய பின், வாக்குத்தத்தத்தைப் பெறுவதற்கு, உங்களுக்குப் பொறுமை தேவை" (எபி. 10:36).

"விசுவாசிக்கிறவன் பதற்றமடைய மாட்டான்" (ஏசா. 28:16).

நாம் பொறுமையுடன் செயல்புரியக் கர்த்தர் விரும்புகிறார், ஏனென்றால் அதுவே மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும் பெறுவதற்குரிய முக்கிய திறவுகோலாக இருக்கிறது. 

ஒரு சிறு குழந்தை பொறுமையைக் கற்கவில்லை என்றால், அதனால் வேறு எதையும் அதிகம் கற்க முடியாது. ஒரு விசுவாசி கர்த்தருக்காகக் காத்திருக்கக் கற்றுக்கொண்டால், தேவன் அவனது வாழ்வில் பெரிய காரியங்களைச் செய்ய முடியும். 

ஆபிரகாம், கர்த்தரின் நேரத்துக்குக் காத்திராமல், அவசரமாக முடிவெடுத்து  ஆகாரை மணந்து, தன் வீட்டிற்குள் மிகுந்த துக்கத்தைக் கொண்டுவந்தார் (ஆதி. 16). மோசே, கர்த்தரைச் சார்ந்திராமல், தம்முடைய சுய வலிமையால் ஒரு மனிதனைக் கொன்றார். அதனால் அவர் பொறுமையைக் கற்றுக்கொள்ள நாற்பது ஆண்டுகள் ஆடுகளுடன் செலவிட வேண்டியிருந்தது (யாத். 2:11). பேதுரு, தனது பொறுமையின்மையில் கிட்டத்தட்ட ஒரு மனிதனைக் கொலை செய்யவும் துணிந்தார் (யோவான் 18:10-11).

நம் வாழ்வில் பொறுமை மற்றும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள ஒரே வழி, கர்த்தர் அனுமதிக்கும் சோதனைகள் ஏற்றுக் கொள்வது தான். 

வேத புத்தகத்தைப் படிப்பது, வேத பாடத்தை ஆராய்ந்து கற்பது, ஒரு பிரசங்கத்தைக் கேட்பது அல்லது பிரார்த்தனை செய்வது.., இவை போன்ற செயல்கள் மூலம் மட்டுமே பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையை அடைய முடியாது.  இவற்றோடு நாம் வாழ்க்கையின் சிரமங்களைக் கடந்து செல்ல வேண்டும். கர்த்தரை நம்பி, அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும். இதன் விளைவாக நம்மில் பொறுமை மற்றும் நற்பண்புகள் உருவாகும். 

இதைப் புரிந்து கொண்டால், நாம் சோதனைகளை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள முடியும். சோதனைகள் நமக்குள்ளும், நமக்கும் என்ன செய்யும் என்பதை நாம் அறிந்து இருந்தால், அதன் இறுதி முடிவு கர்த்தருக்கு மகிமையைக் கொண்டுவரும். திருமறையைத் தியானிப்பது, பொறுமையில் வளர உதவுகிறது எனும் உண்மையை இந்த வேதபகுதி விளக்குகிறது (ரோமர் 15:4). 

ஆபிரகாம், யோசேப்பு, மோசே, தாவீது மற்றும் நம் ஆண்டவர் வாழ்வில் நிகழ்ந்த சோதனைகளைப் பற்றி நாம் வாசிக்கும்போது, ​​சோதனைகளில் கர்த்தருக்கு ஒரு நோக்கம் இருப்பதை நாம் உணர்கிறோம். நாம் அவரை விசுவாசிக்கும் போது கர்த்தருடைய நோக்கங்கள் நம் வாழ்வில் நிறைவேறும். 

கர்த்தருடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளும் மனதுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஒரு புத்தியற்ற விசுவாசியைச் சாத்தானால் தோற்கடிக்க முடியும், ஆனால் திருமறையைத் தியானித்து கர்த்தரின் நோக்கங்களைப் புரிந்து கொள்ளும் விசுவாசியை அவனால் ஒருபோதும் வெல்ல முடியாது.


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

சனி, 25 மார்ச், 2023

நூல் அறிமுகம்

அப்போஸ்தலர் யாக்கோபு எழுதிய பொதுவான நிருபம்-

நூல் அறிமுகம்:


வேதாகமத்திலிருந்து ஒரு புத்தகத்தை முதன்முறையாக கற்றுக் கொள்ளத் துவங்குவது என்பது, அறிமுகமற்ற ஒரு புதிய இடத்திற்குப் பயணம் செல்லத் தயாராவதைப் போன்றது; 

''நீங்கள் எங்குச் செல்ல விரும்புகிறீர்கள், எதற்காகச் செல்கிறீர்கள், எதைப் பார்க்க வேண்டும், எவற்றை அறிய வேண்டும் என விரும்புகிறீர்கள்'' போன்றவற்றைத் தெளிவாகத் திட்டமிடுதல் அவசியம். 

முதன் முறையாக பிரிட்டனுக்குப் பயணம் செல்வதற்கு நாங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, ​​பயணப் புத்தகங்களைப் படிக்கவும், வரைபடங்களை ஆராய்ந்து பார்க்கவும், பல மணி நேரங்கள் செலவிட்டோம். அங்குச் சென்ற போது, ''எதற்காக இந்தப் பயணம்?, எதைத் தேடுகிறோம்?, அதை எப்படிக் கண்டுபிடிப்பது?'' போன்ற கேள்விகளுக்கான பதில் எங்களுக்குத் தெரியும். ஆகையால் அந்தப் பயணத்தை மிகவும் இரசித்தோம். 

அது போலவே, ஒரு நூலை ஆய்வு செய்து கற்றுக் கொள்ளத் தொடங்குவதற்கு முன்பாக, சில கேள்விகள் எழுப்பி கற்கத் துவங்குவது மிகச் சிறந்த வழியாகும். ஆகவே யாக்கோபின் நிருபத்தினை ஆய்ந்து கற்றுக் கொள்வதற்கு ஏதுவாக, இந்த நான்கு முக்கியமான கேள்விகளுக்கான பதிலை அறிந்து கொள்வது அதற்கு மிக உதவியாக இருக்கும். 

I. யார் இந்த யாக்கோபு ?

இந்த நூலின் ஆசிரியர் எனத் தன்னை குறிப்பிடும் யாக்கோபு என்பவர் யார்? 

முதல் வசனத்தில் ''தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துக்கும் பணியாளனாகிய யாக்கோபு" என இவர் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் (யாக்கோபு 1:1a). ''யாக்கோபு'' இஸ்ரேலில் ஒரு பிரபலமான பெயர். பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள "யாக்கோவ்" என்பதன் ஒரு வடிவம். புதிய ஏற்பாட்டு வரலாற்றிலும் இதே பெயரைப் பலர் கொண்டிருந்தனர்.

a. யாக்கோபு-செபதேயுவின் மகன்:

முதலாவது நாம் பார்க்க இருக்கும் யாக்கோபு ஒரு மீனவர் (மத். 4:17- 22). இவரை ஆண்டவர் சீடராகத் தெரிவு செய்து, தன்னோடு ஊழியம் செய்யும்படியாக அழைத்தார். ஆண்டவரது அழைப்பை எற்று, கிறிஸ்தின் முதன்மையான சீடராக பின் தொடர்ந்தார். இவரை ''செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபு'' என வேதம் குறிப்பிடுகிறது. யோவான் இவரது சகோதரர். இவ்விருவரும் தீவிர மன எழுச்சியுடன், ஆவேசமாகப் பேசுவதன் காரணமாக "இடி முழக்கத்தின் மக்கள்" என்று கிறிஸ்தால் பிரியத்துடன் அழைக்கப் பட்டார்கள் (மாற்கு 3:17; லூக்கா 9:51-56). 

இந்த யாக்கோபுவே, கிறிஸ்துக்காக இரத்த சாட்சியாக உயிரைக் கொடுத்த முதல் பிரதான சீடராவார். இவர் ஏரோதுவால் கி.பி 44இல் கொல்லப்பட்டார் (அப். 12:1-2). ஆகவே இந்த நிருபத்தை இவர் எழுதியிருக்க வாய்ப்பு இல்லை.

b. யாக்கோபு-அல்பேயுவின் மகன்:

இரண்டாவதாக நாம் பார்ப்பது "அல்பேயுவின் குமாரன்" என அழைக்கப்பட்ட யாக்கோபு. இவரும் ஆண்டவரது சீடர்களில் ஒருவர் ஆவார் (மத். 10:3; அப்.1:13). இவரைப் பற்றி மிகக் குறைவாகவே வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மத்தேயுவையும் (லேவி) "அல்பேயுவின் குமாரன்" என்கிற அடையாளத்துடன்  வேதம் குறிப்பிடுவதால், இவர்கள் இருவரும் சகோதரர்களாக இருந்திருக்கக் கூடும் என சில வேத அறிஞர்கள் ஊகிக்கிறார்கள் (மாற்கு 2:14). எனினும் நாம் படிக்கப் போகும் இந்நிருபத்தை, இவர் எழுதியதற்கு ஆதாரமாக எந்தக் குறிப்பும் இல்லை. 

c. யாக்கோபு-யூதாவின் சகோதரர்:

மூன்றாவதாக நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படும் யாக்கோபு, ஆண்டவரது மற்றொரு சீடராகிய யூதாவின் சகோதரர் ஆவார். 

ஆண்டவரது சீடர்களில் இருவர் யூதா என்ற பெயருடன் இருந்தனர். அவர்களில் ஒருவர் யூதாஸ் ஸ்காரியோத் எனவும், மற்றவர் "யாக்கோபின் சகோதரனாகிய யூதா'' எனவும் அழைக்கப்பட்டனர் (லூக்கா 6:16). 

இந்த யூதா, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு என மற்ற நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படுகிறார் (மத். 10:3/மாற். 3:18). யூதாவின் சகோதரராகிய இந்த யாக்கோபைக் குறித்தும் வேதத்தில் அதிகமான குறிப்புகள் இல்லை. 

d. யாக்கோபு-நம்முடைய கர்த்தரின் சகோதரன்:

இவரே இந்த நிருபத்தை எழுதிய ஆசிரியராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவர் தன்னை ''ஆண்டவரின் சகோதரர்'' என அறிமுகம் செய்து கொள்ளும் வழியை விரும்பவில்லை. மாறாக "தேவனுக்கும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு" எனத் தன்னை தாழ்மையுடன் அறிமுகம் செய்து கொள்கிறார். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்க்கு சகோதர சகோதரிகள் இருந்ததாக வேதம் கூறுகிறது (மத்.13:55-56, மாற்கு 6:3). அவர்களில் ஒருவரது பெயர் யாக்கோபு. ஆண்டவர் ஊழியம் செய்த காலத்தில் அவரது சகோதரர்கள் அவரை விசுவாசிக்கவில்லை (யோவான் 7:1-5; மாற்கு 3:31-35). ஆனாலும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்னர், அவரது தாயார் மற்றும் சகோதரர்கள் சீடர்களுடன் இனைந்து மேல் வீட்டு அறையில் ஜெபித்தார்கள் (அப் 1:14). 

அப்படியென்றால், எந்த நிகழ்வு அவர்களை அவநம்பிக்கையிலிருந்து விசுவாசத்திற்கு மாற்றியது?

இதற்கான குறிப்பை 1-கொரிந்தியர் 15:7இல் பவுல் குறிப்பிடுகிறார். ஆம், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு யாக்கோபுக்குக் காட்சி தந்தார். இந்த தரிசனம் யாக்கோபை மாற்றியது எனப் புரிந்து கொள்ள முடியும். அவர் இந்த தரிசனத்தை மற்ற சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்டார். இயேசு கிறிஸ்தே உண்மையான இரட்சகர் என்று ஏற்றுக் கொண்டார். 

பின்னர் யாக்கோபு எருசலேம் தேவாலயத்தின் முதன்மையான தலைவராக உயர்ந்தார். பவுல் அவரை "திருச்சபையின் தூண்" என அழைத்தார் (கலா. 2:9). அப்போஸ்தலர் 15ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள தேவாலய சிறப்பு கூடுகையில், இவர் தலைமையேற்று, அதை நெறிப்படுத்தினார். 

பேதுரு சிறையிலிருந்து விடுதலையானபோது, ​​அதை யாக்கோபுக்கு அறிவிக்கும்படி சிறப்புச் செய்தியாளரை அனுப்பினார் (அப். 12:17); பவுல் எருசலேமுக்குச் சென்றபோது, ​​யாக்கோபுக்கு வாழ்த்துக்களையும், புறஜாதி யாரிடமிருந்து சிறப்பு “அன்பு காணிக்கையையும்” கொண்டு வந்தார் (அப். 21:18-19).

யாக்கோபு மரணம் அடைந்த விதத்தைக் குறித்த எந்தவித குறிப்பும் வேதாகமத்தில் இல்லை. ஆனால் கி.பி 62 இல் அவர் இரத்தசாட்சியாக மரித்தார் என்று பாரம்பரியம் கூறுகிறது. கிறிஸ்தைக் குறித்து யாக்கோபு வல்லமையாகச் சாட்சி கொடுத்தார். அதை எருசலேமிலிருந்த சமயத் தலைவர்கள் மிகவும் வெறுத்தார்கள். ஆகவே அவர்கள் எருசலேம் தேவாலயத்திலிருந்து அவரை கீழே தள்ளிவிட்டு, பின்னர் அடித்துக் கொன்றதாக நம்பப்படுகிறது. 

அவரது இரட்சகர் தம்மைச் சிலுவையில் அறைந்து கொலை செய்தவர்களுக்கு ஜெபித்ததைப் போன்றே, இவரும் "அப்பா, பிதாவே, அவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று, அவர்களுக்கே தெரியாது" எனக் கூறி  ஜெபித்ததாகக் கூறப்படுகிறது.

யாக்கோபு எப்படிப்பட்ட மனிதர்? அவர் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே எருசலேம் தேவாலயத்தின் தலைமை பொறுப்பை அடைந்தார். ஆகவே நிச்சயமாக அவர் ஒரு ஆழ்ந்த ஆவிக்குரிய மனிதராக இருந்திருக்க வேண்டும். அவருடைய முக்கியத்துவம் அப்போஸ்தலர் 15ம் அதிகாரத்தில் காணப்படுகிறது. அந்த சிறப்பு கூடுகைக்குத் தலைமை வகித்தார். அனைத்து பிரிவினரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த அனுமதித்தார். பின்னர் வேதத்தின் வார்த்தைகள் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்ததன் மூலம் சபையில் அமைதியைக் கொண்டு வந்தார். அவர் ஒரு திருமணமானவர் என்று பவுல் குறிப்பிடுகிறார் (1கொரி. 9:5). 

யாக்கோபு, ஒரு ஜெப வீரர். இந்த நிருபத்தில் பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை விளக்குவதில் அது வெளிப்படுகிறது. அவர் மிகவும் பிரார்த்தனை செய்தார் என்றும், அதனால் அவரது முழங்கால்கள், வயதான ஒட்டகத்தைப் போலக் கடினமாகத் தேய்ந்து இருந்ததாகவும் பாரம்பரியம் சொல்கிறது.

யாக்கோபு யூத பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்டவர். மோசேயின் நியாய பிரமாணத்தின் சட்ட விதிகள் குறித்த அவரது அறிவு, இந்த நிருபத்தில் தனித்துத் தெரிகிறது. அவர் பவுலிடம் எருசலேம் தேவாலயத்தில் உள்ள கிறிஸ்தவ நியாயப் பிரமாண வாதிகளைச் சமாதானப்படுத்த உதவுமாறு கேட்டுக் கொண்டார்(அப். 21:18-25). 

யாக்கோபின் நிருபத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டளை சொற்கள் உள்ளன. யாக்கோபு அவற்றைக் கடைப்பிடிக்குமாறு பரிந்துரைக்கவில்லை, மாறாக  கீழ்ப்படியுமாறு கட்டளையிட்டார்! 

இந்த நிருபத்தில், அவர் பழைய ஏற்பாட்டை ஐந்து முறை மட்டுமே மேற்கோள் காட்டினார். ஆனால் பழைய ஏற்பாட்டின் போதனைகளிலிருந்து பல குறிப்புகள் இந்த நூலில் உள்ளது. 

யாக்கோபு அவிசுவாசியாக இருந்த காலத்திலும் கூட, ​​ஆண்டவர் கற்பித்த உபதேசங்களைக் கவனத்துடன் கேட்டு மனதில் பதித்து வைத்து இருக்க வேண்டும்; ஏனெனில், அவருடைய இந்த நிருபத்தில், நமது ஆண்டவரின் மலைப்பிரசங்கத்திற்கு இசைய ஏராளமான குறிப்புகள் உள்ளன. இந்த பத்திகளை ஒப்பிடு வாசித்துப் பாருங்கள்:

யாக்கோபு 1:2—மத்தேயு 5:10–12

யாக்கோபு 1:4—மத்தேயு 5:48

யாக்கோபு 1:5—மத்தேயு 7:7–12

யாக்கோபு 1:22—மத்தேயு 7:21–27

யாக்கோபு 2:11—மத்தேயு 5:27

யாக்கோபு 4:3—மத்தேயு 6:5

யாக்கோபு 4:4—மத்தேயு 7:24

யாக்கோபு 4:11-12—மத்தேயு 7:1-5

யாக்கோபு 5:1–3—மத்தேயு 6:19–21

எருசலேம் தேவாலயத்திலிருந்து ஆதி கிறிஸ்தவர்களை, மிகவும் கடினமான ஒரு கால கட்டத்தில் யாக்கோபு  வழி நடத்தினார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது ஒரு மாற்றத்தின் காலமாக இருந்தது. அத்தகைய நேரங்கள் எப்போதும் கடினமும் வருத்தமும் தருபவை. எருசலேமிலிருந்த யூத கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டுச் சட்டத்தை இன்னும் கடைப்பிடித்தனர். ஆலயமும் அதன் சடங்குகளும் இன்னும் முழு செயல்பாட்டிலிருந்தன (அப். 21:20). 

மேலும் கிருபையின் செய்தியைக் குறித்த வெளிச்சமானது இன்னமும் முழுமையாக வெளிப்படவில்லை. ஒரு வேளை ரோமர், கலாத்தியர் மற்றும் எபிரேயர் நிருபங்களைப் படித்த நாம், இந்த ஆரம்பக்கால விசுவாசிகளை, சடங்காச்சார கிறிஸ்தவர்கள் என எளிதாக நியாயந்தீர்க்க வாய்ப்புள்ளது. ஆனால் நாம் அவ்வாறு செய்யக்கூடாது. அவர்கள் இரட்சிக்கப்பட்ட மக்கள். ஆனால் இன்னும் அவர்கள் நியாயப் பிரமாண சட்டத்தின் நிழலிலிருந்தனர். யாக்கோபு அவர்களைக் கர்த்தரது கிருபையின் பிரகாசமான வெளிச்சத்திற்கு நேராக வழி நடத்தினார். 

அத்துடன் ஆன்மீக அனுபவம் மற்றும் அறிவு அளவுகளில் பவுலுக்கும் எருசலேம் தேவாலயத்தை வழி நடத்தியவர்களுக்கும் வேறுபாடுகள் இருந்த போதிலும், அவர்களுக்கிடையில் போட்டியோ, கருத்து முரண்பாடோ இல்லை (கலா. 2:1-10).

II. யாருக்கு யாக்கோபு எழுதினார்?

“ சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரத்தாருக்கும் வாழ்த்துக்கள்” என முதல் வசனம் குறிப்பிடுகிறது (யாக்கோபு 1:1).  "பன்னிரண்டு கோத்திரங்கள்" என்ற சொல், பல தேசங்களில் வாழ்ந்த இஸ்ரேலின் மக்களைக் குறிக்கிறது (அப் 26:7). 

ஆகவே யாக்கோபு இதைப் பாலஸ்தீனத்திற்கு வெளியே வாழும் யூத கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். பல யூதர்கள் தங்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு வெளியே வாழ்ந்தது, தேசத்தின் ஆன்மீக வீழ்ச்சிக்குச் சான்றாகும். கர்த்தர் அவர்களைச் சிதறடிக்க வேண்டியிருந்தது (உபா. 4:25-27). பெந்தெகொஸ்தே நாளில், பேதுரு அந்த திரளான யூத சபையில் பிரசங்கித்த போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் பேசினார் (அப். 2:9-11).

யாக்கோபு தனது கடிதத்தைக் கிறிஸ்தவ யூதர்களுக்கு அனுப்பினார். குறைந்தபட்சம் பத்தொன்பது முறை அவர்களை "சகோதரர்கள்" என்று அழைத்தார். இது "மாம்சத்தில் உள்ள சகோதரர்கள்" (சக யூதர்கள்) மட்டுமல்ல, "கர்த்தருக்குள் சகோதரர்கள்" என்பதையும் குறிக்கிறது. 

யாக்கோபு மறு பிறப்பு (யாக்.1:18) உபதேசத்தில் மிகவும் தெளிவாக இருந்தார். சபை ஐக்கியத்தில் இல்லாத பொல்லாத மனிதர்களையும் யாக்கோபு  குறிப்பிடுகிறார் (உதாரணம்: பணக்காரர்கள் யாக்.5:1-6).

யாக்கோபு 1:1 இல் ''சிதறியிருக்கிற'' எனும் வார்த்தை ஒரு சுவாரஸ்யமான சொல்லாகும். பாலஸ்தீனத்திற்கு வெளியே வாழும் யூதர்களை அடையாளம் காண "சிதறல்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இதன் கிரேக்க வார்த்தையானது "விதைகளைச் சிதறடித்தல்" என்ற கருத்தைக் கொண்டுள்ளது. யூத விசுவாசிகள் துன்புறுத்தலின் முதல் அலையில் சிதறடிக்கப்பட்டபோது (அப். 8:1-4), அது உண்மையில் பல இடங்களில் வசனங்களை விதைத்தது; அந்த விதையின் பெரும்பகுதி பலனைத் தந்தது (அப். 11:19-21).

ரோமானியர் பேரரசு முழுவதும் சிதறிக் கிடந்த கிறிஸ்தவ யூதர்களுக்குத் தேவைகளும், பிரச்சனைகளும் ஏராளமாக இருந்தது. அவர்கள் யூதர்களாக இருப்பதால் புறஜாதிகளால் நிராகரிக்கப்பட்டார்கள். கிறிஸ்தவர்களாக இருந்ததால், சொந்த இனமக்களுடைய நிராகரிக்கப்பையும் எதிர் கொண்டார்கள். இந்த நிருபம், விசுவாசிகளில் பெரும்பாலோர் ஏழைகள் என்றும், அவர்களில் சிலர் பணக்காரர்களால் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

III. யாக்கோபு  ஏன் எழுதினார்?

வேதத்தில் ஒவ்வொரு நூலிற்கும், அதற்கான சொந்த சிறப்பு மையக் கருத்து, பயன் மற்றும் நோக்கம் (இலக்கு) உள்ளது (Theme, Purpose, Objective & Goal)

பவுல் ரோமர் புத்தகத்தை ஏன் எழுதினார்? அது ரோமானிய யூத கிறிஸ்தவர்களுக்குக் கிருபையின் சத்தியத்தை அறிமுகம் செய்யவும், அத்துடன் தனது வருகைக்கு அவர்களை ஆயத்தப்படுத்தவும் எழுதினார். 

கொரிந்துவில் உள்ள சபையில் காணப்பட்ட சில பிரச்சனைகளைச் சரி செய்வதற்காக முதலாம் கொரிந்து நிருபம் எழுதப்பட்டது. 

இரட்சிக்கப்பட வேண்டும் எனில் விருத்த சேதனம் செய்வது கட்டாயம், போன்ற தவறான சடங்காச்சார போதனைகளுக்கு எதிராக அந்த சபை மக்களை எச்சரிப்பதற்காக, கலாத்தியர் நிருபம் எழுதப்பட்டது.

அப்படியென்றால் யாக்கோபு நிருபம் எதற்காக எழுதப்பட்டது?

இந்த புத்தகத்தை நீங்கள் வாசிக்கும்போது, ​​​​அதில் யூத கிறிஸ்தவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், சபை ஐக்கியத்திலும் பல சிக்கல்களை எதிர் கொண்டதைக் காண முடியும். 

முதலாவது அவர்கள் கடினமான விசுவாச பரீட்சைகளை (Test & Trails) கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதேவேளை இச்சை நிறைந்த பாவ சோதனைகளையும் (Temptations) எதிர்கொண்டனர். 

இரண்டாவதாகச் சபையின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று சாட்சியில்லாத வாழ்க்கை. பலர் தாங்கள் விசுவாசிகள் என அறிக்கை செய்தனர். ஆனால் தாங்கள் கூறுவது போல வாழத் தவறினர். விசுவாசிகளில் ஏழை பணக்காரர்கள் வேறுபாடு காணப்பட்டது. செல்வந்தர்கள் ஏழைகளைக் கொள்ளையடித்தனர். 

மூன்றாவதாக, அவர்கள் தேவாலயத்தில் உள்ள பொறுப்புகளுக்கு, குறிப்பாகப் போதக ஊழியங்களுக்குப் போட்டியிட்டனர். நாவடக்கம் இல்லாதது ஓர் கடுமையான பிரச்சனையாக இருந்தது. 

நான்காவதாக,சபையில் சண்டைகள் மற்றும் பிளவுகளை உருவாக்கும் அளவிற்கு கூட பேசினார்கள். ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர். சபையில் ஐக்கியம் இல்லை.

இறுதியாக, உலக பொருட்கள் மீதான பற்று என்பது மற்றொரு பெரும் பிரச்சனையாக இருந்தது. சபை மக்களில் சிலர் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் இருந்தார்கள். அதனால் உடல்ரீதியாக நோய் வாய்ப்பட்டு இருந்தனர். சிலர் கர்த்தரையும் சபையையும் விட்டும் விலகிச் சென்றனர்.

இந்தப் பிரச்சினைகளின் பட்டியலை நாம் மதிப்பாய்வு செய்து பார்க்கும் போது, ​​சராசரி உள்ளூர் சபையைச் சூழ்ந்திருக்கும் இன்றைய பிரச்சினைகளிலிருந்து, இவை மிகவும் வேறுபட்டதாக உங்களுக்குத் தோன்றுகிறதா? 

இன்றைக்கும் கூட, ஒரு காரணத்திற்காக அல்லது இன்னொரு காரணத்திற்காகத் துன்பப்படுபவர்கள், நம் தேவாலயங்களில் இருக்கிறார்கள் அல்லவா?

பேசுவது ஒன்று, செய்வது ஒன்றாக இருக்கும் விசுவாசிகள், இன்றும் நமது சபையில் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள் இல்லையா? 

உலகப்பிரகாரமான மதிப்பை நாடி வாழ முற்பட முயலும் மக்கள், சபைக்கு இன்றைக்கும் ஒரு தீவிரமான பிரச்சனை தானே? 

நாவை அடக்க முடியாத கிறிஸ்தவர்கள், இப்போதும் சபையில் இருப்பதைப் பார்க்கிறோம் இல்லையா? 

இன்றைக்கும் சபையில் காணப்படும், அதேவிதமான சிக்கல்களைத் தான் யாக்கோபு நிருபமும் கையாள்கிறது. ஆனால் இந்த நிருபம் சபையின் பலவிதமான பிரச்சனைகளைப் பற்றி மாத்திரம் விவாதிக்கவில்லை. இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் பொதுவான ஒரு மூல காரணத்தைப் பற்றி விளக்குகிறது. அது ''ஆன்மீக முதிர்ச்சியின்மை'' (Spiritual Immaturity)

இந்த அடிப்படைக் கருப்பொருளைப் பற்றிய குறிப்பை 'பூரண'' என்ற வார்த்தை நமக்குத் தருகிறது. யாக்கோபு  ''பூரண'' என்ற வார்த்தையை இந்த நூலில் பலமுறை பயன்படுத்துகின்றார். இது "முதிர்ந்த, அல்லது முழுமையான (Complete)" என்று பொருள்படும் ஒரு வார்த்தை (யாக். 1:4, 17, 25; 2:22; 3:2 ).

ஆதிக் கிறிஸ்தவ சபை விசுவாசிகள், முதிர்ச்சியாகச் செயலாற்ற வேண்டிய தேவை இருந்தது.  ஆகவே கிறிஸ்தவ வாழ்க்கையில் முதிர்ச்சி அடைய, விசுவாசிகள் கடைப்பிடிக்கத் தேவையான அவசியமான குணங்களைப் பற்றி இந்த நிருபம் போதிக்கிறது. 

"ஒரு பரிபூரண மனிதன்" (யாக். 3:2) என யாக்கோபு குறிப்பிடுவது, ஒரு  பாவமற்ற மனிதனை (Not a Sinless) குறிக்கவில்லை. மாறாக முதிர்ச்சியுள்ள, சமநிலையில் வளர்ந்த ஒரு மனிதனைக் குறிக்கிறது (Matured & Balanced).

இன்றைக்கும் சபையின் மிகப்பெரிய தேவைகளில் ஒன்று ஆன்மீக முதிர்ச்சியாகும். பல சபைகள் பெரியவர்களுக்கான பட்டறைகளுக்குப் பதிலாகக் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கங்களாக இருக்கின்றன. அங்கத்தினர்கள் தங்களுக்குத் தேவையான திடமான ஆவிக்குரிய உணவை உண்ணும் அளவுக்கு முதிர்ச்சியடையாததால், அவர்களுக்குப் பால் ஊட்டப்பட வேண்டியதாக இருக்கிறது (எபி. 5:11-14). 

இந்த நிருபத்தில் சொல்லப்பட்ட சிக்கல்களைக் கவனமாகப் பாருங்கள். அவை ஒவ்வொன்றும் சிறு குழந்தைகளின் சிறப்பியல்பான குணங்கள் என்பதை நீங்கள் காணலாம்:

சிரமங்களில் பொறுமையின்மை—1:1–4

பேசினாலும் உண்மையாக வாழவில்லை - 2:14.

நாவின் கட்டுப்பாடு இல்லை - 3:1.

சண்டை மற்றும் ஆசை - 4:1.

"பொம்மைகளை" சேகரிக்கும் ஆசை (பொருள் மீதான பற்று) - 5:1.

எனது கால் நூற்றாண்டுக்கும் மேலான ஊழிய அனுபவத்திற்குப் பிறகு, ஆன்மீக முதிர்ச்சியின்மையே, நமது சபைகளில் முதன்மையான பிரச்சனை என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

ஆண்டவர் தனது ஊழியத்தைத் தொடர மன முதிர்ச்சி நிறைந்த ஆண்களையும், பெண்களையும் தேடுகிறார். ஆனால் அவர் காணக்கூடியதெல்லாம் ஒருவரோடொருவர் கூட பழக முடியாத சிறு குழந்தைகளாகும்.

இந்த நிருபத்தின் ஐந்து அதிகாரங்கள் முதிர்ச்சி அடைந்த கிறிஸ்தவர் உறுதியாக பின்பற்ற வேண்டிய ஐந்து பண்புகளைப் பரிந்துரைக்கின்றன. 

1. சோதனையில் பொறுமை (Patient in Testing).

    a. விசுவாச பரீட்சை (Test/Trails on Outside-1:1-12).

    b. பாவ சோதனை (Temptations on the Inside-1:13-27).

2. சத்தியத்தை கைக்கொள்ளுதல் (Practice the Truth).

    a. விசுவாசம் மற்றும் அன்பு (Faith & Love-2:1-13).

    b. விசுவாசம் மற்றும் நற்செயல் (Faith & Work).

3. நாவடக்கம் (Power over Tongue).

    a. உபதேசம் (Exhortation-3:1-2).

    b. விளக்க காட்சிகள் (Illustrations-3:3-12).

    c. பயன்பாடுகள் (Applications-3:13-18).

4. சமாதான காரணர் (Peace Maker).

    a. மூன்று போர்கள் (Three Wars-4:1-3).

    b. மூன்று எதிரிகள் (Three Enemies-4:4-7).

    c. மூன்று அறிவுரைகள் (Three Admonitions-4:8-17).

5. சிக்கல்களில் பிரார்த்தனை (Prayerful in Troubles).

    a. பொருளாதார சிக்கல் (Economic Troubles-5:1-9).

    b. உடல் சார்ந்த சிக்கல் (Physical Troubles-5:10-16).

    c. தேசிய பிரச்சனைகள் (National Troubles-5:17-18).

    d. சபை சார்ந்த பிரச்சனைகள் (Church Troubles-5:19-20).

இது, இந்த நூலைக் கற்றுக் கொள்வதற்கு உதவும் ஒரு அணுகுமுறை மட்டுமே. இதைப் போன்று வேறு விதமான வழிகளிலும் படிக்க இயலும். 

இந்த நிருபத்தின் ஒவ்வொரு அத்தியாயங்கள் ஆராயப்படும்போதும், ​​ஆன்மீக முதிர்ச்சியையும், அதை எவ்விதம் அடையலாம் என்பதும் வலியுறுத்தப்படும்.

யாக்கோபின் நிருபம் தர்க்கரீதியாக எபிரேயர் நிருபத்தைப் பின்பற்றுகிறது, ஏனெனில் எபிரேய நிருபத்தின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்று ''ஆன்மீக பரிபூரணம்'' (Spiritual Perfection). பரிபூரணம் (Perfection) என்ற வார்த்தை எபிரேய நிருபத்தில் குறைந்தது பதினான்கு முறை காணப்படுகிறது. 

முக்கிய வசனம் எபிரேயர் 6:1-2—“பூரணராகும்படி கடந்து போவோமாக” அதாவது “ஆன்மீக பரிபூரணம்”. எபிரேய நிருபத்தை எழுதியவர் கிறிஸ்தில் இருக்க வேண்டிய பரிபூரண இரட்சிப்பை விளக்கினார். 

இந்த முழுமையான இரட்சிப்பைக் கட்டியெழுப்பவும், ஆவிக்குரிய முதிர்ச்சியை அடையவும் யாக்கோபு சபை மக்களுக்கு அறிவுறுத்தினார். கிறிஸ்தின் பரிபூரண கிருபை இல்லாமல் விசுவாசிகள் முழுமையடைய முடியாது.

IV. இந்த நூலைக் கற்றுக் கொள்வதிலிருந்து நாம் எவ்வாறு அதிகப் பலன்களைப் பெறுவது?

இந்த நூலின் மையக் கருத்து ''ஆன்மீக முதிர்ச்சி'' (Spiritual Maturity) என்பதால், கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் இப்போது எந்த நிலையில் இருக்கிறோம்? எனும் கேள்வியுடன் தொடங்க வேண்டும். 

அதாவது, நம் சிந்தனை மற்றும் இருதயத்தின் மனோபாவங்களை (Mind & Heart Attitudes) தற்பரிசோதனை செய்வதிலிருந்து தொடங்க வேண்டும். 

அதற்குக் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய ஐந்து இன்றியமையாத தேவை  உள்ளது (Five Essentials)

1. மறு பிறப்பின் அனுபவம் (Born Again):

முதல் தேவை, நாம் மீண்டும் பிறந்த அனுபவம். ஆன்மீகப் பிறப்பு இல்லாமல் ஆன்மீக முதிர்ச்சி இருக்க முடியாது. இந்த நிருபத்தில் யாக்கோபு புதிய பிறப்பைக் குறித்துக் குறிப்பிடுகிறார்: "அவர் சித்தங்கொண்டு நம்மைச்  சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்" (யாக். 1:18). 

இதற்கு இணையான மற்றுமொரு தேவ வசனம்; “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.” (1-பேதுரு 1:23).

ஒரு குழந்தை பிறப்பதற்குத் தாயும், தந்தையும் இன்றியமையாததாக இருப்பது போலவே, ஒரு ஆன்மீகக் குழந்தை பிறப்பிற்கும் பெற்றோர்கள் உண்டு: அது கர்த்தரின் வார்த்தை மற்றும் தூய ஆவியானவர் (Word of God & Spirit of God). கர்த்தருடைய வார்த்தை  (Word of God ) அழிவில்லா வித்து என வேதம் குறிப்பிடும் இரண்டு வசனங்களை நாம் ஏற்கனவே வாசித்தோம். 

யோவான் 3:5-6 இல் உள்ள வசனங்கள், தேவனுடைய ஆவியைக் குறிப்பிடுகிறது (Spirit of God). (இங்கே "ஜலத்தினாலும்" என்பது உடல் பிறப்பைக் குறிக்கிறது என்பது எனது நம்பிக்கை. அனைத்து குழந்தைகளும் "ஜலத்தினால் பிறந்தவை." 'யோவான் 3:4 ன் அடிப்படையில், நிக்கோதேமு  மறு பிறப்பை, உடல் பிறப்பின் அடிப்படையில் நினைத்தார்.)

அப்படியானால், எப்படி ஒரு நபர் "மறுபடி பிறந்தார்" என அறிந்து கொள்ள முடியும்? 

தேவனுடைய ஆவியானவர், இயேசு கிறிஸ்தை விசுவாசிக்கும் ஒரு பாவியின் இருதயத்தில், கர்த்தரின் வார்த்தையை (அழிவில்லா வித்து) விதைப்பதன் வழியாக, அவனுக்குள் (அவளுக்குள்), ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்குகிறார். இந்த மறு பிறப்பு ஒரு அதிசயம். 

ஆவியானவர், ஒருவர் செய்த பாவத்தை உணர்த்துவதற்குத் தேவ வார்த்தையைப் பயன்படுத்துகிறார். பின்னர் இரட்சகரை வெளிப்படுத்துகிறார். நாம் விசுவாசத்தினால் இரட்சிக்கப்படுகிறோம் (எபே. 2:8-9).விசுவாசம் தேவனுடைய வார்த்தையிலிருந்து வருகிறது (ரோ. 10:17).

2. தற்பரிசோதனை (Honestly Examine Ourselves).

மறுபிறப்பை அடைந்தவன் தனது செயல்களின் நோக்கங்களை நேர்மையாக ஆராய வேண்டும். யாக்கோபு எழுதியவற்றிலிருந்து அதிகமானவற்றை கற்றுக் கொள்வதற்கு இன்றியமையாத இரண்டாவது அவசியம்: வேத வார்த்தையின் வெளிச்சத்தில் நம் வாழ்க்கையை நேர்மையாக ஆராய வேண்டும். 

யாக்கோபு வேதத்தை ஒரு கண்ணாடியுடன் ஒப்பிடுகிறார் (யாக் 1:22). நாம் தேவ வார்த்தையைப் படிக்கும்போது, ​​நமது உள்ளத்தை ஒரு தெய்வீகக் கண்ணாடியின் வழியாகப் பார்க்கிறோம். நாம் உண்மையில் எவ்விதம் இருக்கிறோமோ அவ்விதமாகவே அதில் வெளிப்படுகிறது. முதன்முறையாகக் கண்ணாடியைப் பார்த்த பழமையான ஆதி மனிதர்களது கதைகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அவன் தான் பார்த்த தனது உருவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து கண்ணாடியை உடைத்தான்! பல கிறிஸ்தவர்களும் அதே தவற்றைச் செய்கிறார்கள்: அவர்கள் தங்களைத் தாங்களே நியாயந்தீர்க்க வேண்டியிருக்கும் போது, ​​போதகர் அல்லது வேதத்தை விமர்சிக்கிறார்கள். 

ஆனால் யாக்கோபு நம்மை எச்சரிக்கிறார். நாம் பார்ப்பதில் நேர்மையாக இருக்க வேண்டும். வெறுமனே கண்ணாடியில் உருவத்தைப் பார்த்துவிட்டு விலகிச் செல்லக்கூடாது. தேவனுடைய வார்த்தை கண்ணாடி மட்டுமல்ல, அது ஒரு X-ray அல்லது Scanner போன்றது. கர்த்தருடைய வார்த்தை உயிருள்ளது. ஆற்றல் வாய்ந்தது. எந்த கூர்மையான ஆயுதத்தை விட நுட்பமானது. அது ஆன்மாவையும், ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; உடல் மச்சையையும், எலும்பையும் அவ்வாறே பிரித்து ஊடுருவுகிறது. உள்ளத்தின் நோக்கங்களையும் சீர் தூக்கிப் பார்க்கிறது. ஆண்டவரது பார்வைக்கு மறைவாய் ஒன்றும் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும் (எபி. 4.12)

3. கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிதல் (Obey to God's Words).

தற்பரிசோதனை நம்மை மூன்றாவது இன்றியமையாததற்கு நேராக வழி நடத்துகிறது: தேவ வார்த்தை, நமக்குக் கற்பிப்பதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்காக என்ன விலை கொடுத்தாலும் சரி. 

"இறை வார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாகவும், இருக்க வேண்டும்" (யாக். 1:22). 

திருமறை ஆய்வு வகுப்பில் கலந்து கொள்வதும், பாடத்தைப் பகிர்ந்து கொள்வதும், அதைப் பற்றி விவாதிப்பதும் எளிதானது. ஆனால் அன்றாட உலக வாழ்க்கையில், நாம் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்தி வாழ்வது மிகக் கடினமான சவால். ஆசீர்வாதம் நிறைந்த வாழ்க்கை, தேவ வார்த்தையைப் படிப்பதில் வருவதில்லை, மாறாக அந்த வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அதைக் கடைப் பிடிப்பதில் வருகிறது. நாம் கீழ்ப்படியத் தயாராக இல்லாவிட்டால், கர்த்தர் நமக்குக் கற்பிக்கக் கடமைப்பட்டவர் அல்ல (யோவான் 7:17).

4. கடினமான விசுவாச சோதனைகளை எதிர் கொள்ளுதல் (Extra Trails & Tests on Faith).

நான்காவது இன்றியமையாதது, சில கூடுதல் சோதனைகள் மற்றும் விசுவாச பரீட்சைகளை எதிர் கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும். ஆன்மீக வளர்ச்சியில் நாம் தீவிரமாக இருக்கும் போதெல்லாம், எதிரியும் நம்மை வீழ்த்துவதில் ஆதிக தீவிரம் காட்டுகிறான். 

அதற்கு உங்களுக்கு இன்னும் பொறுமை அதிகம் தேவை என்று உணரலாம். மேலும் சோதனைகளுக்குத் தயாராக இருங்கள், ஏனெனில் "துன்பங்களைத் தாங்கிக் கொள்வது பொறுமையைக் கொடுக்கும்" (ரோமர். 5:3). வேதாகம கற்றலின், உண்மையான தேர்வுகள் வகுப்பறையில் வைத்து நடப்பவை அல்ல, அவை வாழ்க்கைப் பள்ளியில் வருகின்றன.

பொறுமையில் வளர்வதற்கு ஆசைப்பட்ட ஒரு மனிதரைக் குறித்து சமீபத்தில் படித்தேன். அவர் தனது வாழ்க்கையில் சிறிய காரியங்களிலும் பொறுமையற்று நிதானம் இழப்பவராக இருந்தார். அந்த முதிர்ச்சி அடையாத தனது குணத்தை அறிந்திருந்தார். அவர் பொறுமையில் வளர விரும்பினார். “ஆண்டவரே, பொறுமையில் வளர எனக்கு உதவுங்கள். என் வாழ்க்கையின் இந்தப் பகுதியில் அதிக சுயக்கட்டுப்பாடு இருக்க வேண்டும்'' என மனப்பூர்வமாக ஜெபித்தார். 

அன்றைய நாள் காலை வேலைக்குப் புறப்பட்டு சென்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர் செல்ல வேண்டிய ரயிலைத் தவறவிட்டார். அடுத்த ஐம்பது நிமிடங்கள் சமூகத்தின் பல அவலநிலைகளைப் பற்றிக்  குறை கூறி சக பயணிகளிடம் புகார் செய்தார். அடுத்த ரயில் வந்தது. அப்போது தான் கடந்த ஐம்பது நிமிடங்களாக எவ்வளவு முட்டாள்தனமாகப் பேசினோம் என்பதை உணர்ந்தார். "இறைவன், நான் பொறுமையில் வளர கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கொடுத்தார், ஆனால் நான் செய்ததெல்லாம், குறைகள் பேசி எனது  பொறுமையின்மையை வெளிப்படுத்தியதுதான்!" என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.

இந்த வேத ஆய்வில் தொடர்வது தேவையற்றது என்று நீங்கள் முடிவு செய்யும் நேரம் வரலாம். சாத்தான் சோம்பல் உணர்வுகளைத் தூண்டி, இவையெல்லாம் வீணான வேலை. வேதத்தைப் படித்து ஒன்றும் ஆவப் போவதில்லை எனச் சோர்வுற வைக்கக்கூடும். 

வேதத்தை கற்றுக் கொள்வதைத் தொடராதே! என நீங்கள் பின்வாங்க வேண்டிய அளவுக்கு விஷயங்களை உங்களுக்குக் கடினமாக்கலாம். அந்த சோர்வின் நேரம் வரும்போது, உண்மையில், ​​நீங்கள் சொந்த வாழ்க்கையில் ஒரு புதிய மற்றும் அற்புதமான ஆசீர்வாதத்தின் விளிம்பில் இருப்பீர்கள். இதுவே முதிர்ச்சியின் புதிய படியாகும். சாத்தான் சோர்வை அளித்தாலும், பரலோகத்தில் உள்ள உங்கள் தந்தை தனது சர்வ வல்லமையுள்ள கையை உங்கள் மீது வைத்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்!

முதிர்ச்சி அடைவது என்பது எப்போதும் எளிதானது அல்ல. உடல் அளவில் முதிர்ச்சி அடைவதும்  கூட எளிதான அல்லது ஒரு இனிமையான அனுபவமாக இருப்பது இல்லை. சிறுவயதிலிருந்து இளமைப் பருவத்துக்கு மாறுவதும் கடினமான ஆற்றை நீந்திக் கடப்பது போலத் தான். அதைக் கடந்து செல்லும் இளைஞருக்குப் பல விரக்திகள் மற்றும் தோல்விகளை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளன. ஆனால் அவர் அதில் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தால் (வளர்ந்து), இறுதியில் அவர் முதிர்ச்சியடைந்த ஒரு அற்புதமான வாழ்க்கையில் நுழைகிறார். 

உடல் வளர்ச்சியைப் போலக் கிறிஸ்தவ வளர்ச்சியும் தானாகவே நிகழ்வது இல்லை. கிறிஸ்தவ முதிர்ச்சி என்பது நாம் தொடர்ந்து உழைக்க வேண்டிய ஒன்று. எனவே இடையில் விட்டுவிடாதீர்கள்! பிறப்பில் துன்பம் உண்டு, முதிர்ச்சியடைவதிலும் துன்பங்கள் உள்ளது (கலா. 4:19).

5. ஆவிக்குரிய வளர்ச்சியை வேதத்துடன் ஒப்பிட்டு மதிப்பிடுதல் (Evaluate Your Growth by comparing with Word of God).

இறுதியாக, நமது ஆன்மீக வளர்ச்சியைக் கடவுளுடைய வார்த்தையால் நாம் அளவிட வேண்டும். மற்ற கிறிஸ்தவர்களது வாழ்க்கையுடன் ஒப்பிட்டு நம்மை அளவிடாமல், தேவனுடைய வார்த்தை மற்றும் தேவனுடைய குமாரன் வாழ்வுடன் ஒப்பிட்டுப் பார்த்து நிதானிக்க வேண்டும் (எபே. 4:13).

யாக்கோபு புத்தகத்தின் அடிப்படையில் ஒரு சில கேள்விகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அவை உங்களது தனிப்பட்ட மதிப்பீட்டிற்கு உதவக்கூடும். இந்தப் புத்தகத்தைத் தியானிக்கும் எந்த நேரத்திலும் அந்த கேள்விகளைக் கேட்டு அதற்கு விடையை நேர்மையுடன் கண்டு பிடிக்கத் தயங்க வேண்டாம், ஏனென்றால் அத்தகைய விடைகளை உங்கள் ஆன்மீக ஆரோக்கியத்திற்கு நல்லது.

வயது கூடுவதால் முதிர்ச்சி வளராது. வயதுக்கும் முதிர்ச்சிக்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு கிறிஸ்தவர் பத்து அல்லது இருபது வருடங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பதால் அவர் கர்த்தரில் முதிர்ச்சியடைந்தவர் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. 

முதிர்ச்சி அடைந்த கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியானவர்கள். அவர்கள் பிறருக்குப் பயன் தருபவர்கள். மற்றவர்களை ஊக்குவிப்பவர்கள். தாங்கள் வாழும் பகுதியில், சபையில் பிறரை முன்னேற்றம் அடைவதற்கு உதவுபவர்கள்.

நாம் யாக்கோபை இனைந்து படிக்கும்போது, ​​கர்த்தரின் உதவியோடு ஒன்றாகக் கற்றுக்கொண்டு இனைந்து முதிர்ச்சியில் வளர்வோம்.

These are few questions to assist us to examine our hearts to see how much mature we really are.

1. Am I becoming more and more patient in the testing's of life?

2. Do I play with temptation or resist it from the start?

3. Do I find joy in obeying the Word of God, or do I merely study it and learn it?

4. Are there any prejudices that shackle me?

5. Am I able to control my tongue?

6. Am I peacemaker rather than a troublemaker? Do people come to me for spiritual wisdom?

7. Am I a friend of God or friend of the world?

8. Do I make a plans without considering the will of God?

9. Am I selfish when it comes to money? Am I unfaithful in the paying of my bills?

10. Do I naturally depend on prayer when I find myself in some kind of trouble?

11. Am I the kind of person others seek for prayer support?

12. What is my attitude toward the wandering brother? Do I criticize and gossip or do I seek to restore him in love?

Don't just grow old - grow up!

நாம் உண்மையில் எவ்வளவு முதிர்ச்சியடைந்துள்ளோம் என்பதைப் பார்க்க நம் இதயத்தின் விருப்பங்களை/சிந்தனைகளை ஆராய உதவும் சில கேள்விகள் இவை.

1. வாழ்க்கையின் சோதனைகளில் நான் மிகவும் கூடுதல் பொறுமையுடன் இருக்கிறேனா?

2. நான் பாவ தூண்டுதல் வரும் போது, அதற்கு இணங்கி சொகுசு உணர்வுகளை இச்சித்து அதனுடன் விளையாடுகிறேனா, அல்லது ஆரம்பத்திலிருந்தே அதன் விளைவுகளுக்கு அஞ்சி, அதை எதிர்த்து, அந்த இடத்தை விட்டு விலகி ஓடுகிறேனா?

3. கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேனா, அல்லது அதை வெறுமனே படித்துக் கற்றுக்கொள்ள விரும்புகிறேனா?

4. என்னைக் கட்டிப்போடும், முன் முடிவான தப்பெண்ணங்கள் ஏதேனும் எனது சிந்தையில் நம்பிக்கையாகப் பதிவாகி உள்ளதா?

5. நான் என் பேச்சைக் கட்டுப்படுத்த முடியுமா?

6. நான் பிரச்சனை செய்பவனாக இல்லாமல் சமாதானம் உருவாக்குபவனாக இருக்கிறேனா? ஆன்மீக ஞானத்தை விரும்பி கேட்பதற்காக மக்கள் என்னிடம் வருகிறார்களா?

7. நான் தேவனின் நண்பனா அல்லது உலகத்தின் நண்பனா?

8. நான் இறைவனது விருப்பத்தைக் கருத்தில் கொள்ளாமல் ஒரு திட்டத்தைச் செய்கிறேனா?

9. பண விஷயத்தில் நான் சுயநலவாதியா? நான் செலுத்த வேண்டிய பண பற்றுக்களை ஒழுங்காகத் திரும்பச் செலுத்துகிறேனா?

10. நான் ஒருவித பிரச்சனையில் சிக்கும்போது, இயல்பாகவே ஜெபிக்கும் பழக்கத்தைச் சார்ந்திருக்கிறேனா?

11. மற்றவர்கள் என்னிடம் ஜெபித்துக் கொள்ளுங்கள் எனக் கேட்பதுண்டா?

12. வாழ்வில் எவ்வித பிடிப்பும் இன்றி அலைந்து திரியும் சகோதரனிடம், என் அணுகுமுறை என்ன? நான் அவனை விமர்சித்து கிசுகிசுக்கிறேனா அல்லது  அன்பில் மீட்டெடுக்க முற்படுகிறேனா?

வெறும் வயது கூடுவதால் பயனில்லை - முதிர்ச்சியில் வளருவோம்!


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

ஞாயிறு, 19 மார்ச், 2023

சங்கீதம் 6

 



இது தாவீதால் எழுதப்பட்ட ஒரு சங்கீதம். இது எப்போது எழுதப்பட்டது எனும் குறிப்பு இல்லை. இது அப்சலோமின் கிளர்ச்சியின் போது ஒரு வேளை இயற்றப்பட்டிருக்கலாம். இந்த சங்கீதம் எழுதப்பட்ட காலத்தில், தாவீது வயது முதிர்ந்தவராகவும், நோய்வாய்ப்பட்டவராகவும், ராஜ்யத்தின் அனைத்து சிக்கலான பொறுப்புகளையும் நேரிடையாக கையாள முடியாத கடினமான சூழலிலிருந்தார் எனத் தெரிகிறது. 

அந்த காலங்களில் ''அப்சலோமின் சாதுரியமான பேச்சுக்கள்'' இஸ்ரவேலர்களின் இதயங்களைக் கவரும் வகையிலிருந்தது. ஒரு ஆட்சித் தலைவராக, தாவிது தோல்வியடைந்த சூழல் நிலவியது (2 சாமு. 15:1-6). ஆகவே இந்த சங்கீதம் தாவீதுடைய ஆட்சியின் இறுதிக் காலத்தின் போது எழுதப்பட்டிருக்கக் கூடும். அப்போது அவர் எதிரிகளால் சூழப்பட்டிருந்தார். அத்துடன் நோய்வாய்ப்பட்டு சுகவீனத்துடனும் இருந்தார்.

"என் எலும்புகள் நடுங்குகிறது. என் ஆத்துமா வியாகுலப்படுகிறது," எனும் வசனத்தை வாசிக்கும் போது, அவரது வேதனை நிறைந்த சூழல் வெளிப்படுகிறது. அவர் கர்த்தரின் கருணைக்காகக் கதறுகிறார். உறுதியாக மரணத்தை எதிர்கொள்ளப் போகிறோம் எனும் மனநிலையிலிருந்தார். இந்த சங்கீதத்தில் 'மரணம்', 'பாதாளம்' எனும் வார்த்தைகளை தாவீது உருவகங்களாகப் பயன்படுத்தப்படவில்லை (வ. 5). அவரது உண்மையான சொந்த அனுபவத்தையே சொல்கிறார். 

நெகினோத் என்றால் "கம்பிகள் கொண்ட இசைக் கருவிகள்" ஆகும். ஷெமினித் என்றால் "எட்டாவது" என்றும் பொருள்படும். இது இசைக்கப்படும் கருவியின் கம்பிகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாக இருக்கலாம். சங்கீதம் 12ன் தலைப்பிலும் ''ஷெமினித்தென்னும் எண்ணகரம்'' எனும் குறிப்பைக் காணலாம். இது ஒரு வழக்கமான மெல்லிசையின் குறிப்பாகவோ, அல்லது ஆண்களின் தாழ்ந்த குரலிசை (Lower Octave) ஆகவும் இருக்கக் கூடும் (1 நாளா. 15:21).

இந்த சங்கீதம் ஆண்டவரிடம் பாவ அறிக்கை செய்து, ஒப்புரவாகும் ''தபசு கால சங்கீதம் (Penitential Psalms)" என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விதம் ஏழு சங்கீதங்கள் உள்ளது (சங். 6, 32, 38, 51, 102, 130, 143). 

இவற்றின் மையக் கருத்து; ''ஆண்டவர், தமது பிள்ளைகள் வாழ்க்கை ஒழுங்கு படுத்தப்பட விரும்புகிறார்''. அதன் பொருட்டு, அவர்கள் சில துயரமான சூழல்களைக் கடந்து செல்லவும், வேதனைகளை அனுபவிக்குப்படியாகவும்  அனுமதி அளிக்கிறார். இந்த சங்கீதங்களைத் தியானிப்பதன் வழியாக, நம் பாவங்களை அறிக்கையிட்டு, இறைவனிடம் நெருங்கிச் சேர இயலும். 

கடினமான சூழலிலிருந்து விடுபட்டு, அமைதியை நோக்கி, விசுவாசத்துடன், முன்னேறும் கடினமான படி நிலைகளை, தமது சொந்த அனுபவத்திலிருந்து இந்த சங்கீதத்தில் தாவீது வெளிப்படுத்துகிறார்.

சிட்சை (வ. 1–3):

தாவீது ''கர்த்தாவே'' (யெகோவா), எனும் ஆண்டவரது உடன்படிக்கையின் பெயரை, எட்டு முறை சொல்லி அழைக்கிறார்.

இதன் முதல் வசனத்தை, தாவீது சங். 38:1ல் மீண்டும் நினைவு கூறுவதைக் காணலாம். எரேமியாவும் இதே விதமாக, ''கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்'' என ஜெபிப்பதை வாசிக்கலாம் (எரே. 10:24 ). 

சிட்சை என்பது, ஒரு நீதிபதி கோபத்தால் நிறைந்து வழங்கும் தண்டனை போன்றது கிடையாது, மாறாக, அது அன்பு நிறைந்த ஒரு தகப்பன், தனது பிள்ளைகள், ஒழுக்கத்துடன் வாழவும், அவர்கள் முதிர்ச்சியடைவதற்கு  உதவும் படியாகவும், அளிக்கும்  சிறந்ததொரு பயிற்சி (வெளி. 3:19). பொதுவாகப் பெற்றோர்கள் தங்களது கீழ்ப்படியாத பிள்ளைகளைத் தண்டிக்கின்றனர். பிறகு அவர்களை எச்சரித்து வழி நடத்துகின்றனர். கர்த்தரும் தமது பிள்ளைகள் வழி தவறி நடக்கும் போது இடைப்படுகிறார். அவர்கள் வாழ்வில், துயரமான சூழலை அனுமதிக்கிறார். அதன் வழியாக அவர்களைக் கண்டித்து உணர்த்தி சீர் செய்கிறார் (எபி. 12:5-6; நீதி. 3:11-12). சில சமயங்களில், நாம் எதிர் கொள்ள இருக்கும் கடினமான சூழல்களுக்கு தயார்ப்படுத்தவும், கர்த்தர் நம்மைப் பயிற்றுவிக்கிறார். இது ஒரு விளையாட்டு வீரரைப் பந்தயத்தில் வெற்றி பெறத் தகுதி அளிக்கும் பயிற்சி போன்றது.

தாவீது, கர்த்தர் தன் மீது கோபமாக இருப்பதாக நினைத்தார். ஆனால் அது உண்மையாக இருக்க வேண்டிய தேவையில்லை. உண்மையில் அவர் எதிரிகள் (வச. 7, 10), மற்றும் தீயவர்களால் (வச. 8) சூழப்பட்டிருந்தார். அவரது உடல் நோயுற்று பலவீனமாக இருந்தது. ஆன்மாவில் கலங்கித் தவித்தார். இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளும்போது, ​​கர்த்தர் தன்னை கைவிட்டதாக அவர்  உணர்ந்த காரணத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும். கர்த்தர் தனது முதுகை  இலக்காக வைத்து அம்பை எய்தது போல எண்ணினார்.

"பெலனற்று, வியாகுலம், கலங்கிய" என்று பொருள்படும் "Bahal" எனும் எபிரேய வார்த்தையை தாவீது மூன்று முறை பயன்படுத்தினார் (வ. 2, 3, 10). இது King James version-ல்  "Vex" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில், ''Vex'' என்கிற வார்த்தை இன்று இருப்பதை விட மிகவும் ஆழமான பொருள் நிறைந்ததாக இருந்தது. பழைய ஏற்பாட்டினை  கிரேக்க மொழியில் மொழிபெயர்த்தவர்கள் ''Taraso'' எனும் கிரேக்க வார்த்தையை இதற்குப் பயன்படுத்தினர். இது யோவான் 12:27 இல் "இப்போது என் ஆத்துமா கலங்குகிறது" என எழுதப்பட்டுள்ளது. இதே வார்த்தை ''மரணத்துக்கேதுவான துக்கம்'', எனவும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது (மத். 26:38; மாற். 14:34). 

இது ஒருவர் தனது தகுதிக்கும் மிஞ்சி அனுபவித்துக் கொண்டிருக்கும் வலியை உணர்த்தும் சொல். ஆனாலும், அந்த வேதனையைத் தாங்குவதற்குத் தேவையான பலத்திற்காக, இரக்கம் மிகுந்த கர்த்தரை நோக்கி  மன்றாடினார் (சங். 103:13-14). கர்த்தர் தமக்கு விரைவாக உதவும்படி வேண்டினார். அதற்கு அவர் மிகவும் தகுதியானவர்.

“எது வரைக்கும் ஆண்டவரே?” என்கிற வேதனை மிகுந்த கேள்வி சங்கீதத்தில் 16 முறை திரும்பத் திரும்பக் கேட்கப்படுகிறது (6:3; 13:1-2; 35:17; 62:3; 74:9-10; 79:5; 80:4; 82:2; 89:46; 90:13; 94:3). இந்த கேள்விக்கான பதில், "நான் கற்றுக் கொடுக்க விரும்பும் பாடத்தை நீங்கள் கற்றுக் கொள்ளும் வரை'' எனலாம். ''நான் உங்களை ஒழுங்கு படுத்துவேன்; அது நீங்கள் செய்ய வேண்டிய வேலைக்கு, உங்களைத் தகுதிப்படுத்தும்'' எனக் கர்த்தர் சொல்கிறார்.

கர்த்தர் நம்மை ஒழுங்கு படுத்தும் போது; ​​நாம் அதை வெறுக்க முடியும், எதிர்க்கலாம், அவர் சமூகத்தை விட்டு விலகி ஓடலாம், அல்லது அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியலாம். கர்த்தர் விரும்புவது முழுமையான சமர்ப்பணத்தையே.

பாதாளத்தின் பயனற்ற தன்மை (வ. 4–5):

கர்த்தர் தமது முகத்தைத் திருப்பி, தன்னைக் கைவிட்டது போலத் தாவீது  உணர்ந்தார். ஆகவே அவர் ஆண்டவரை நோக்கி, ''திரும்பும் கர்த்தாவே'' என  ஜெபித்தார் (வ. 4). 

அவர் தேவனது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார். ஒவ்வொரு யூதரும், கர்த்தர் "இரக்கமுள்ளவர், கிருபையுள்ளவர்" என்பதை அறிந்திருந்தார்கள் (யாத். 34:6-7). ஆகவே தனக்கு இரங்கி, மரணத்திலிருந்து தன்னை  காப்பாற்றும்படியாக  ஜெபித்தார். 

மேலும் தாவீது, தன்னை மரணமடைய ஒப்புக் கொடுப்பதன் மூலம் என்ன லாபம்? என கர்த்தரை வினவினார் (சங். 30:8; 88:10-12.) எசேக்கியா ராஜாவும், மரணத்திலிருந்து விடுதலைக்காக ஜெபித்தபோது, இதேவிதமான அணுகுமுறையைப் பயன்படுத்தினார் (ஏசா. 38:18-19). 

5வது வசனத்தில் சொல்லப்படும் ''பாதாளம்'' என்பது, "கல்லறை'' அல்லது ''இறந்தவர்கள் வசிக்கும் இடம்" இதைக் குறிப்பிடுகிறது. இங்கு பிந்தைய பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றிய தெளிவான வெளிப்பாடு பழைய ஏற்பாட்டுக் காலங்களில், மக்களுக்கு உறுதியாக வெளிப்படுத்தப் படவில்லை (2 தீமோ. 1:10). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட  உயிர்த்தெழுதலின் உபதேசம் அப்போது தீர்க்கமாக இல்லை. இருப்பினும் மரணத்திற்குப் பின்னர், தம் மக்களுக்காக, கர்த்தர் ஆயத்தம் செய்து வைத்திருக்கிறதைக் குறித்து சில மங்கலான வெளிப்பாடுகள் வேதத்தில் உள்ளன (சங். 16:9-11; 17:15; 49:14-15). மரித்த ஒரு மனிதனால், ஆண்டவரைப் போற்றவோ அல்லது அவருக்குச் சேவை செய்யவோ முடியாது என்பதே அப்போதைய வெளிப்பாடு. ஆகவே தாவீது தனது ஆவி பாதாளத்தில், இறைவனுக்காக என்ன செய்ய முடியும்? என்று கேட்டார். கர்த்தர் அவரை விடுவித்து வாழ வைப்பதே நன்மையானது. தாவிது செய்ய வேண்டிய பணிகள் பல இன்னமும் உள்ளது.

விரக்தி (வ. 5–7):

நாம் ஒரு காலை சங்கீதத்திலிருந்து (3:5), மாலை சங்கீதத்திற்கும் (4:8), பின்னர் மீண்டும் ஒரு காலை சங்கீதத்திற்கும் (5:3) சென்று வந்தோம். இப்போது மறுபடியுமாக, மற்றொரு மாலை சங்கீதம் (6:6). 

ஆனால் முந்தைய சங்கீதங்களில், கர்த்தர் தாவீதுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுத்தார். மன அமைதியும் இருந்தது. ஆனால் இங்கே, ராஜா பயத்தினாலும், வலியினாலும் தூங்காமல் கண்ணீருடன் இருப்பதைக் காண்கிறோம்.  அவர் பெருமூச்சுடன் முனகுவதும், தவிப்பதும், ஏக்கத்துடன் களைத்துப்போய் அழுது கொண்டே படுக்கையில் வெகுநேரம் கழிப்பதுமாக இருக்கிறார். "நான் என் படுக்கையில் தலையணையைக் கண்ணீரால் நனைக்கிறேன்" (வ. 6, சங். 38:9-10). 

நோயிலிருந்து குணமடையத் தூக்கம் மிக முக்கியமானது (யோவான் 11:11-12). ஆனாலும் தாவீதிற்கு துன்பத்தால் தூக்கம் போனது. தூக்கமின்மை அவரது உடல் நிலைமையை மேலும் மோசமாக்கியது. தாவீதின் பலவீனமான உடல் நிலை, அவரது கண்களின் குழி விழுந்த தன்மையால் வெளிப்பட்டது (வ. 7; 1 சாமு. 14:27, 29). நம் கண்களைப் பார்த்து, நம் உடலின் ஆரோக்கிய நிலையைப் பற்றி மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியும் என்பது ஆச்சரியமானது.

ஒரு தெய்வீக ஆன்மீகத் தலைவர் இப்படிக் கூறினார்; "கிறிஸ்தவர்கள் தாங்கள் அனுபவிக்கும் வலி, வேதனை மற்றும் நோய், அவர்களைக் கர்த்தரிடம் நெருக்கமாகக் கொண்டு வந்ததாகச் சொல்கின்றனர். ஆனால் என் விஷயத்தில் அது எப்போதும் நடக்காது." இந்த வார்த்தை என்னை ஊக்கப்படுத்தியது! 

என்னுடைய சொந்த அனுபவம் மற்றும் சபை ஊழியப் பணியிலிருந்தும், நோய், வேதனை, வலி இவை ஒன்று நம்மைக் கர்த்தரிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும், அதே சமயம் அவரை விட்டு விலகிப் போகவும் வைக்கும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். கர்த்தரிடம் வைக்கும் விசுவாசம் தான் இதைத் தீர்மானிக்கிறது. 

நாம் தேவனிடத்திற்கு மனம் திரும்பி, அவரை நோக்கி ஜெபித்து, அவருடைய வாக்குத்தத்தங்களை நினைவு கூர்ந்து, அவரை விசுவாசித்தால், அப்போது அவருடைய கிருபை நம்முடைய தேவைகளுக்குப் போதுமானதாக இருப்பதைக் காண்போம் (2 கொரி. 12:9). கர்த்தர் நாம் கேட்பதை, நாம் விரும்பும் போது செய்யாமல் இருக்கலாம். ஆனால், அவர் நமக்கு எது தேவையோ அதைச் செய்து, நாம்  அவருடைய நாமத்தை மகிமைப்படுத்த உதவுவார். 

நாம் கேட்க வேண்டிய கேள்வி எல்லாம், "ஆண்டவரே, நான் எப்போது இந்த துயர சூழலிருந்து வெளியேறுவேன்?" என்பதல்ல, "ஆண்டவரே, இந்த சூழலிருந்து நான் எதைக் கற்றுக் கொள்ள முடியும்?" என்பதே.

விடுதலை தரும் மகிழ்ச்சி (வ. 8–10):

இந்த இறுதிப் பகுதியில், திடீரென துன்பத்திலிருந்து மகிழ்ச்சிக்கு ஒரு ஆச்சரியமான மாற்றம் நிகழ்கிறது. மற்ற சங்கீதங்களிலும் இது போல் ஒரு திடீர் மாற்றம் காணப்படுகிறது (22:22; 56:10; 69:30). தாவீது ஜெபித்த சில காலத்திற்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டதா அல்லது உடனடியாக ஏற்பட்டதா என்பது முக்கியமல்ல. ஆனால் அவர் தனது உடலில் குணமடைந்தார். அவரது இதயத்திலும் மனதிலும் அமைதியையும் உணர்ந்தார். இது மிக முக்கியம். 

ஒருவேளை எதிரிகள் பின்வாங்கி இருக்கலாம், அல்லது முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டனர் எனும் செய்தி அவருக்குக் கிடைத்திருக்கலாம். மிக முக்கியமானது, 'கர்த்தர் தனது அழுகையின் சத்தத்தைக் கேட்டார்'' என்பதை தாவீது அறிந்திருந்தார். அவரது சூழ்நிலைகள் உடனடியாக மாறாமல் இருக்கலாம், ஆனால் தனது இதயத்தில் கடவுளின் பிரசன்னத்தை  உணர்ந்தார். கர்த்தர் அவருடைய அழுகையையும் வேண்டுதல்களையும் கேட்டு, அவரது ஜெபத்தை ஏற்றுக்கொண்டார். 

தாவீது, இந்த அனுபவத்தைக் கர்த்தரை மகிமைப்படுத்தப் பயன்படுத்தினார். இந்த விடுதலையின் செய்தியைத் தனது எதிரிகளுக்குச் சாட்சியாக அறிவித்தார். அது அவர்களுக்கு எப்படித் தெரிவிக்கப்பட்டது என்பது தெரியாது; ஆனால் நடந்த காரியங்களுக்காகக் கர்த்தரைக் கனப்படுத்த அவர் விரைந்தார். 

வசனங்கள் 8-10 இல் உள்ள வார்த்தைகள் ஒரு மறைபொருளாக இருக்கலாம். இது அவரது எதிரிகளுக்குச் சொல்லப்பட்டது. அங்கு அவர்கள் இல்லை. ஆனால் இந்த வசனங்களைக் கேட்கும் அல்லது படிக்கும் மக்களுக்கு, அது அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். 

தாவீது வெட்கம் அடைவார் என அவரது எதிரிகள் கூறினர். ஆனால் அவர்களின் கணிப்பு தோல்வியடைந்தது. இறுதியில் அவர்களே வெட்கமடைந்தனர். தோற்கடிக்கப்பட்டனர். 

"அக்கிரமச் செய்கை காரர்களே, என்னை விட்டு அகன்று போங்கள்" என்ற தாவீதின் வார்த்தையை. ஆண்டவராகிய  கிறிஸ்தும் குறிப்பிட்டார். (மத்தேயு 7:23; லூக்கா 13:27). இதுவே தீயவர்களுக்குச் சொல்லப்படும் இறுதித் தீர்ப்பாகத் தோன்றுகிறது.

Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,