அத்தியாயம்: 3
சபலங்களை எவ்வாறு கையாள்வது?
(How to Handle Temptations?) - (யாக் 1: 13-16).
ஒரு முதிர்ச்சியடைந்த நபர் சோதனைகளில் பொறுமையுடன் இருப்பார். சோதனைகள் வெளியிலிருந்து நம்மைத் தாக்கும் துயர அனுபவங்களாக இருக்கிறது. சில வேளைகளில் அவை மனதுக்குள் நிகழும் சபலங்களினாலும் ஏற்படுகிறது.
சோதனைகள் (Tests & Trails) மற்றும் மனதில் நிகழும் சபலங்கள் (Temptations) எவ்வாறு ஏற்படுகின்றன?
i. சோதனைகள் (Tests & Trails); இறைவனால் அனுமதிக்கப்பட்டதால் வருகிறது.
ii. சோதனைகள் (Temptations); மனதில் ஏற்படும் சபலங்களினாலும் வருகிறது. இவை சாத்தானால் தொடுக்கப்படும் தூண்டுதலால் நிகழலாம்.
iii. சில சோதனைகள் (Due to our own attitudes) ; நமது வீழ்ச்சியடைந்த மன இயல்பு ஊக்குவிக்கப்பட்டதால் வரக்கூடும்.
யாக். 1:13-18 வரை அடங்கிய இந்தப் பகுதியில், யாக்கோபு விளக்குவது சாத்தானால் தூண்டப்பட்ட மனதின் உள்ளே நிகழும் சபலங்களினால் ஏற்படும் சோதனைகள் (Temptations) ஆகும்.
ஏன் யாக்கோபு சோதனைகள் (Tests & Trails) மற்றும் சபலங்கள் (Temptations) என இவ்விரண்டையும், ஒன்றின் பின்பு ஒன்றாக வரிசைப் படுத்தி விளக்கி எழுதியுள்ளார்?
"சோதனைகள் மற்றும் மன சபலங்களுக்கு இடையே உள்ள தொடர்பு என்ன?"
இந்தக் கேள்விக்கான பதில் மிக எளிமையானது: நாம் கவனமாக விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால், வெளியிலிருந்து வரும் சோதனைகள் உள்ளுக்குள் நிகழும் மன சபலங்களாக மாறலாம்.
ஆகவே தான் யாக்கோபு எச்சரிக்கிறார், ''என் பிரியமான சகோதர சகோதரிகளே, மோசம் போகாதிருங்கள்.''
சோதனை வேளைகளில், நம்முடைய சூழ்நிலைகள் கடினமாக மாறும் போது நாம் என்ன செய்கிறோம்?
கர்த்தருக்கு விரோதமாக முறுமுறுப்பது, அவருடைய அன்பைக் கேள்விக்கு உள்ளாக்குவது, அவருடைய சித்தத்தை எதிர்ப்பது என நமது மன சலனங்கள் வெளிப்படுவதைக் காணலாம்.
இந்த கட்டத்தில் மனதில் விரக்தி ஏற்படுகிறது. அந்த சோர்வான சூழலிருந்து தப்பித்து ஓட விரும்புகிறோம்.அப்போது சாத்தான் ஒரு பொய்யான காரணத்தைச் சொல்லும்படி மனதைத் தூண்டி, அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறான். அந்த வாய்ப்பு தான் மனதில் ஏற்படும் சபலம். இது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
திருமறையில் இந்த உண்மைக்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆபிரகாம் கானானுக்கு வந்த போது அங்கே பஞ்சம் இருப்பதைக் கண்டார். அவரால் ஆடு மாடுகளைப் பராமரிக்க முடியவில்லை. உண்மையில் இது சோதனையான ஒரு தருணம். இது அவர் கர்த்தரை விசுவாசிப்பவர் என்பதை நிரூபிக்க ஒரு நல்வாய்ப்பாக இருந்தது; ஆனால் ஆபிரகாமோ, அந்த சோதனையால் சோர்வடைந்து, மன சலனப்பட்டு எகிப்துக்குப் போனார். பின்னர் ஆபிரகாமைக் கீழ்ப்படிதல் மற்றும் ஆசீர்வாதத்தின் பாதைக்குத் திரும்பக் கொண்டுவர, கர்த்தர் அவரைச் சிட்சிக்க வேண்டியிருந்தது.
இஸ்ரவேலர் வனாந்தரத்தில் அலைந்து கொண்டிருந்தபோது அவர்களுக்கு நேரிட்ட சோதனைகள், முறுமுறுக்கும் வெறுப்பு உணர்வுகளாக வெளிப்பட்டது. அவர்கள் கர்த்தருக்கு எதிராக கலகம் செய்தனர். அடிக்கடி தேவனைச் சோதித்தனர்.
அவர்கள் எகிப்திலிருந்து விடுதலையான உடன், குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தவித்தனர். மூன்று நாட்கள் நீரின்றி வனாந்தரத்தில் நடந்து சென்றனர். தண்ணீரைக் கண்டு பிடித்தபோது, அது மிகவும் கசப்பாக இருந்தது. அவர்களால் குடிக்க முடியவில்லை. அவர்கள் முறுமுறுத்து கர்த்தரைக் குறை சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்கள் தங்கள் சோதனையை உள் மனதில் ஏற்பட்ட சலனத்தினால் முறுமுறுப்பாக மாற்றித் தோல்வி அடைந்தனர்.
நமக்கு வெளியிலிருந்து வரும் சோதனைகள், மன சலனங்களாக / சபல உணர்வுகளாக மாறலாம். ஆனால், நாம் மனதில் ஏற்படும் சபல உணர்வுகளுக்கு அடிபணிந்து வீழ்வதைக் கர்த்தர் நிச்சயமாக விரும்பவில்லை. சலனங்கள் தரும் அனுபவங்கள் வழியாகப் படிப்பினை பெற்று, ஆவிக்குரிய முதிர்ச்சியை அடையும்படி, கர்த்தர் அவற்றை அனுமதிக்கிறார்.
நாம் கர்த்தரது அடைக்கலம் பெற்ற பிள்ளைகள் மாத்திரம் அல்ல; அவரால் சிதறடிக்கப்பட்ட மக்களும் கூட. எனவே தான் யோசேப்பைப் போல, இத்தகைய கடினமான சூழல்கள், சபலங்கள் தரும் அனுபவங்கள் இவற்றைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். அதுவே நாம் முதிர்ச்சியடைய உதவுகிறது.
மனம் எதிர் கொள்ளும் சபல உணர்வுகளை வெல்ல வேண்டுமெனில், மூன்று உண்மைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என யாக்கோபு இந்த பகுதியில் கற்றுத் தருகிறார். அவற்றுள் முதலாவது:
1. கர்த்தரின் நியாயத் தீர்ப்பைக் கவனியுங்கள் – Consider God’s Judgment (1:13-16):
ஒருவரை அச்சப் படுத்தி அதன் வழியாக கற்றுக் கொடுப்பது என்பது எதிர்மறை அணுகு முறையாக இருக்கலாம். ஆனால் இதுவும் தேவையான ஒன்றே, அத்துடன் மிக முக்கியமானதும் ஆகும்.
"ஒரு செயலை செய்யும் முன்பாக, எதிர்காலத்தில் அதன் விளைவு எப்படியாக முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்த்துச் செயல்படுங்கள்." என யாக்கோபு சொல்கிறார். பாவம் எங்கே முடிகிறது - மரணத்தில்!
மனதில் சபலங்கள் ஏற்படும் போது, இந்த சோதனைகள் தேவனிடமிருந்து வருகிறது என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில் தேவன் தீமையின் தூண்டுதலுக்கு எவரையும் உள்ளாக்குவதில்லை. எவரையும் தீய எண்ணங்களை உருவாக்கிச் சோதிப்பதுமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் உள்ளத்தில் எழும் சொந்தத் தீய விருப்பத்தினாலேயே சோதனைக்கு உள்ளாகின்றனர். தீய உணர்வுகள் மீது உள்ள ஆசை அவர்களைக் கவர்ந்து, மயக்கித் தன் வசப்படுத்துகிறது. யாக். 1:13.
ஆகையால், மனதில் எழும் சபல உணர்வுகளுக்காகக் கர்த்தரைக் குறை கூறாதீர்கள். அவர் எல்லாவிதமான சலனங்களையும் கடந்தவர். மிகப் பரிசுத்தமானவர். அவர் நம் மீது வைக்கும் அன்பின் மிகுதியால் இத்தகைய சோதனைகளை அனுமதிக்கிறார். கர்த்தர் ஆபிரகாமைச் சோதித்தது போல் நம்மையும் சோதிக்கிறார் (ஆதி. 22); ஆனால் அவர் ஒருபோதும் இழிவான சபலங்களினால் நம்மைச் சோதிப்பவர் இல்லை. நாம்தான் சோதனையின் சந்தர்ப்பங்களை, சபலங்களாக மாற்றுகிறோம்.
மனதில் ஏற்படும் சபல உணர்வுகளை எப்படிப் புரிந்து கொள்வது?
சபலம் என்பது, ஒரு நல்ல செயலை தவறான வழியில் நிறைவேற்ற முயல்வதாகும். வேத வார்த்தைகள் சொல்லும் வழிக்கு மாறான வழியில் நடக்க முயல்வது.
தேர்வில் உயர்ந்த மதிப்பெண்கள் பெற விரும்புவது தவறா? நிச்சயமாக இல்லை, ஆனால் பார்த்து எழுதியோ அல்லது ஆள் மாறாட்டம் செய்தோ நீங்கள் தேர்வரை ஏமாற்றி உயர்ந்த மதிப்பெண் பெற்றால், நீங்கள் பாவம் செய்தீர்கள்.
ஒரு நல்ல காரியத்தை (தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெறுவது), மோசமான வழியில் நிறைவேற்ற விரும்புவது (ஏமாற்றுவதற்கான தூண்டுதல் மூலமாக) தவறான வழியில் செல்வதாகும்.
சாப்பிடுவது தவறில்லை, ஆனால் அதற்காக உணவைத் திருடிச் சாப்பிட நினைத்தால், நீங்களே இழிவான மன சபலத்துக்கு உள்ளாகுகிறீர்கள்.
நாம் பாவத்தை ஒரு முறை நிகழும் செயலாக நினைக்கிறோம் (A single act). ஆனால் கர்த்தர் அதை ஒரு செயல்முறையாகப் பார்க்கிறார் (Process).
ஆதாம் ஒரு பாவச் செயலைச் செய்தார், ஆனால் அந்தச் செயல் முழு மனித இனத்தின் மீதும் பாவத்தையும், மரணத்தையும், நியாயத்தீர்ப்பையும் கொண்டு வந்தது.
பாவம் மூன்று விதமான செயல் நிலைகள் வழியாக வளர்ச்சியடைந்து இறுதியாக, ஆவிக்குரிய மரணத்தை ஏற்படுத்துகிறது என யாக்கோபு விவரிக்கிறார்.
A. தீய விருப்பம் (Desires of Evil ),
B. வஞ்சகம் (Deception),
C. கீழ்ப்படியாமை (Disobedience),
D. மரணம் (Death).
A. தீய நாட்டம், சுய இச்சை - Desires of Evil: (வச. 14).
அவனவன் தன் தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். யாக். 1:14
இச்சை என்கிற வார்த்தை எல்லாவிதமான ஆசைகளையும் குறிக்கிறது. அதை வெறும் பாலியல் உணர்வுகள் சார்ந்த விருப்பங்கள் என மட்டுப்படுத்திப் புரிந்து கொள்ளக் கூடாது.
நமது மனதில் எழும் ஆசை உணர்வுகள் இயல்பானவை. அது இறைவனால் நமக்கு அருளப்பட்டவை. அந்த விருப்பங்களில் பாவம் கிடையாது. இந்த ஆசை உணர்வுகள் இல்லாமல், நாம் செயல்பட முடியாது. பசி ஏற்படவில்லை என்றால் நாம் சாப்பிட மாட்டோம். தாகம் ஏற்படவில்லையெனில் தண்ணீரைக் குடிக்க மாட்டோம். உணவும், நீரும் இல்லை என்றால் அது இறப்பை வருவிக்கும். உழைத்த பின்னர் உடலில் களைப்பு ஏற்படவில்லை என்றால், நாம் ஒருபோதும் ஓய்வெடுக்காது உழைப்போம். இறுதியில் தளர்ச்சி அடைவோம். ஆண், பெண் உறவும் இயல்பான ஆசை தான்; அது இல்லையெனில் மனித இனம் தொடர முடியாது.
அப்படியெனில் இச்சை என்பது எது?
இயல்பாக எழும் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்கு, வேத வார்த்தைகளுக்கு விரோதமான வழிகளில் செய்து அடைய விரும்பும் போது தான் அது இச்சையாகிறது. நாமும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்.
சாப்பிடுவது இயல்பானது; ஆனால் பெருந்தீனி பாவம். தூக்கம் இயல்பானது; ஆனால் சோம்பல் பாவம். கணவன் மனைவி உறவு பரிசுத்தமானது. ஆனால் பலரோடு உறவு கொள்வது பாவம்.
''திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும்; காமுகரும் விபசாரத்தில் ஈடுபடுவோரும் தேவனின் தீர்ப்புக்கு ஆளாவர்” (எபி. 13:4).
சிலர் இந்த இயல்பான ஆசைகளை முற்றுமாக மறுப்பதன் மூலம் அல்லது அவற்றைத் தீவிரமாக அடக்க முற்படுவதன் மூலம் "ஆன்மீகவாதியாக" மாற முயற்சி செய்கிறார்கள். ஆனால் இது அவர்களை இயல்பான மனிதத் தன்மையற்றவர்களாக மாற்றுகிறது.
கொதிகலனில் உள்ள நீராவியின் சக்தி ஒரு இயந்திரத்தை இயக்க உதவுவது போலவே, இந்த அடிப்படை ஆசைகள் நமது வாழ்க்கையை இயக்குகிறது. நீராவி உற்பத்தி ஆகவில்லையெனில், உங்களுக்குச் சக்தி கிடைக்காது. அதே சமயம் நீராவியின் சக்தியை அதன் இஷ்டத்துக்குச் செயல்பட அனுமதித்தால், இயந்திரத்திற்கு அழிவு நேரிடும்.
வெற்றிக்கான ரகசியம் நிலையான மனதைத் தாக்கும் சபல உணர்வுகளைக் கண்காணிப்பதிலும், அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் உள்ளது.
தேவைகள் ஆசைகளாக இருந்தால், விருப்பங்கள் வேலைக்காரனாக இருக்கும். பேராசைகள் விருப்பமாகும் போது, அவை எஜமானர்களாக மாறிவிடுகின்றன.
ஆசைகள் நம்முடைய ஊழியர்களாக இருக்க வேண்டும். ஒரு போதும் நம்முடைய எஜமானர்களாக இருக்க அனுமதிக்கக் கூடாது. இதை நாம் இயேசு கிறிஸ்தின் வார்த்தைகளில் நிலைத்திருப்பதன் மூலம் செய்யலாம்.
B. வஞ்சகம் (Deception):
மனதைத் தடுமாறச்செய்யும் எந்தவொரு தீய சபல எண்ணங்களும், நமக்கு முதலில் சோதனையாகத் தோன்றாது; அவை எப்போதும் இயல்பாகக் காணப்படுவதை விட அதிக கவர்ச்சிகரமானதாகத் தோன்றும்.
யாக்கோபு வஞ்சகத்தை விளக்குவதற்கு உலக வழக்கிலிருந்து இரண்டு எடுத்துக் காட்டுகளைப் பயன்படுத்தினார். முதலாவது ''சிக்குண்டு'' என்பது மீன்களைப் பிடிக்கப் பயன்படுத்தப் படும் தூண்டில் பொறி; "ஒரு கொக்கியை உபயோகித்து இரையைத் தூண்டுவது" என்று பொருள்.
இரண்டாவதாக ''இழுக்கப்பட்டு'' என அவர் குறிப்பிடுவது மிருகங்கள் அல்லது பறவைகளைப் பிடிக்க விரிக்கப்படும் வலை. கிரேக்க மொழியில் வசீகரிப்பது அல்லது கவர்ந்து இழுப்பது என்பதாகும்.
வேட்டைக்காரர், மீன் பிடிப்பவர்கள், தங்கள் இரையைக் கவர்ந்து ஈர்க்கவும், அவற்றைப் பிடிக்கவும் வலையை, தூண்டிலைப் பயன்படுத்துகின்றனர். எந்தவொரு பறவையும் வேண்டுமென்றே வலையில் இறங்கப் போவதில்லை, அதுபோல எந்தவொரு மீனும் வெளியரங்கமாகத் தெரியும் கொக்கியைக் கடிக்காது. தானியங்கள் வலையை மறைக்கிறது. புழுக்கள் கொக்கியை மறைக்கிறது.
மனதில் எழும் சபலங்கள், நமது இயற்கையான ஆசைகளைத் தூண்டி, ஈர்த்து, மயக்கும் தூண்டில்கள் ஆகும். அந்த தூண்டிலின் ஈர்ப்புக்கு மயங்கி, அதன் ஆசைக்கு இணங்கினால், இறுதியில் துக்கத்தையும், தண்டனையையும் விளைவிக்கும் என்கிற உண்மையை அவைகள் மறைக்கிறது.
உணவு என்பது இயல்பான தேவை. தூண்டிலில் வைக்கப்படும் புழு, பரப்பி வைக்கப்படும் தானியங்கள், இவை தரும் சுவை எனும் சபல உணர்வால் கவர்ந்திழுக்கப்பட்டு மீன்களும், பறவைகளும் சிக்கி மடிகின்றன.
"யோர்தானின் நன்கு நீர் நிறைந்த சமவெளியை" பார்க்கவில்லை என்றால் லோத்து சோதோமை நோக்கி நகர்ந்திருக்க மாட்டார் (ஆதி. 13:10).
தாவீது, அடுத்தவரின் மனைவியை இச்சித்த போது; அவர் ஒரு துணிச்சலும் உண்மையும் நிறைந்த வீரனின் கொலை (உரியா) - குழந்தையின் பிறப்பு- மரணம் (பத்சேபாவின் மகன்) - தனது மகள் கற்பழிப்பு (தாமார்) - தமது மகன்கள் கொல்லப்படுதல் (அதோனியா, அப்சலோம்); போன்ற சோகமான விளைவுகளை அறிந்திருந்தால் அவர் ஒருபோதும் விபச்சாரம் செய்திருக்க மாட்டார்.
ஆனால், கவர்ச்சிகரமான தூண்டிலில் உள்ள இரை, விரிக்கப்பட்ட வலையின் மீதுள்ள தானியம் நம்மைப் பாவத்தின் விளைவுகளைப் பார்க்க விடாமல் தடுக்கிறது.
இதற்கு எவ்விதம் தப்பிப் பிழைப்பது?
நம் மனது வேதத்தின் வார்த்தைகளால் நிறைந்திருந்தால் தூண்டிலுக்கும், வலைக்கும் நீங்கலாகித் தப்பிக்க முடியும்.
ஆண்டவராகிய இயேசு சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, அவர் எப்போதும் வேதத்தின் வார்த்தையின் அடிப்படையில் சோதனையை ஜெயித்தார்.
அவர் சந்தித்த மூன்று சோதனைகளையும், "வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது" என்று பதிலளித்து வெற்றி பெற்றார்.
மனிதக் கண்ணோட்டத்தில், பசியைப் போக்கக் கற்களை அப்பங்களாக மாற்றுவது விவேகமான செயல்; ஆனால் ஆண்டவரின் பார்வையில் அவ்விதம் அல்ல.
ஆகையால் இயேசு கிறிஸ்து
"மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல; தேவனின் வாயிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தையாலும் பிழைப்பான் என வேதத்தில் எழுதியுள்ளதே'' என்றார். (மத் 4:4/உபா:8:3).
இப்போது சாத்தான் வேத வசனத்திலிருந்து ஆண்டவரைச் சோதித்தான்;
"நீர் தேவனுடைய குமாரன் என்றால் கீழே குதியும்; ஏனெனில் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று வேதத்தில் எழுதியுள்ளது" என அவரிடம் சொன்னான் (மத் 4:6/சங் 91:11-12).
இயேசு சாத்தானிடம்:
"உன் தேவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியுள்ளதே" எனப் பதிலளித்தார் (மத் 4:7/உபா 6:16).
மறுபடியும் சாத்தான் அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும், மகிமையையும் அவருக்குக் காண்பித்து அவரிடம்,
"நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்" என்றான் (மத் 4:8-9).
அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து,
"அகன்று போ, சாத்தானே, 'உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து வணங்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக' என்று வேதத்தில் எழுதியுள்ளது" என்றார் (மத் 4:10/உபா 6:13).
நீங்கள் வேதத்தை அறிந்தால், உங்களால் தூண்டிலைக் கண்டுபிடித்து அதைத் தீர்க்கமாகச் சமாளிக்க முடியும். இதுதான் ‘நாங்கள் தரிசித்து அல்ல, விசுவாசத்தால் நடக்கிறோம்’ என்பதாகும் .
C. கீழ்ப்படியாமை – Disobedience (வச. 15).
இப்போது நாம் உணர்ச்சிகள் (தீய நாட்டம்-Evil Desires) மற்றும் புத்தி (வஞ்சகம்-Deception) ஆகியவற்றைக் கடந்து, மிக முக்கியமான பாடமான, உள் மன விருப்பத்திற்குக் கீழ்ப்படிவதை (Will Determination) கற்றுக் கொள்வதை நோக்கி நகர்கிறோம்.
பாவத்திற்குச் சிக்குவதை, வலையை விரித்து வேட்டையாடப்படுதல் மற்றும் தூண்டில் மூலமாக மீனைப் பிடித்தல் என்கிற உதாரணங்கள் மூலம் விளக்கிய யாக்கோபு, இப்போது பாவத்துக்கு இணங்கும் அடுத்த நிலையை, ஒரு கர்ப்பம் தரிக்கும் செயலாக மாற்றி விவரிக்கிறார்.
பாவத்தின் உருவகமாகக் கர்ப்பமாகுதலை வேதம் அடிக்கடி சுட்டிக் காண்பிக்கிறது (யோபு 15:35; ஏசா. 33:11; 59:4, 13; யாக்கோபு 1:13-15). ஏனெனில் பாவம் உள சம்மதம் (Approval of the Will) இல்லாமல் நிகழ்வதில்லை.
தீய ஆசை தூண்டிலில் உள்ள புழுவை உண்பதற்கான ஒரு ஆர்வத்தை உருவாக்குகிறது. நம் உள சித்தம் அதை அங்கீகரிக்கிறது. அதைச் செயல்படுகிறது. அதன் விளைவாகப் பாவம் பிறக்கிறது. நாம் உணர்ந்தோமோ இல்லையோ, அதில் சிக்குண்டு மாட்டிக் கொள்கிறோம். குழந்தை பிறந்தது, அது முதிர்ச்சியடையும் வரை காத்திருங்கள்!
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது உணர்வுகள் அடிப்படையில் செயல் புரிவதல்ல அது நமது உள விருப்பத்தின் (Will Determination) தீர்மானத்தில் நிகழ்வது. “வேதத்தை வாசிக்க எனக்கு நேரமில்லை” அல்லது, "ஜெபக் கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு மனமில்லை." என விசுவாசிகள் சொல்வதை நான் அடிக்கடி கேட்கிறேன். உண்மையில் அதில் அவர்களுக்கு விருப்பமில்லை.
குழந்தைகள் உணர்ச்சிகளின் அடிப்படையில் செயல்படுகிறார்கள், ஆனால் முதிர்ச்சியடைந்தவர்கள் மன விருப்பத்தின் தீர்மானங்கள் எதைச் சரி என உணர்த்துகிறதோ அதன் அடிப்படையில் செயல்படுகிறார்கள்.
அவர்கள் மனதில் சரியானது என அறிந்ததால் அதைச் செய்கிறார்கள்; உணர்ச்சிகளைச் சார்ந்து அல்ல.
முதிர்ச்சியடையாத கிறிஸ்தவர்கள் ஏன் எளிதில் சோதனையில் விழுகிறார்கள் என்பதன் காரணத்தை இது விளக்குகிறது: அவர்கள் தங்கள் உணர்வுகள் அடிப்படையில் முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறார்கள்.
சபலங்களை எதிர் கொள்வதில் நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் உள விருப்பத்தை (Will Determination) கட்டுக்குள் வைத்துப் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமாகக் கர்த்தர் உங்கள் வாழ்க்கையைத் தீர்க்கமானதாகக் கட்டுப்படுத்துவார்.
"ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்." (பிலி. 2:13).
D. மரணம்-Death (வச. 15).
கீழ்ப்படியாமை வாழ்க்கையில் ஆசீர்வாதத்தை அல்ல; மரணத்தையே கொண்டு வருகிறது. பாவம் முதிர்ச்சியடையப் பல ஆண்டுகள் ஆகலாம், ஆனால் அது முதிர்ச்சியடையும் போது, அதன் விளைவு மரணம்.
பாவச் செயல்களைச் செய்தால், அதன் விளைவாக இறுதியில் ஏற்படவிருக்கும் அழிவை மனக் கண்களால் கண்டு கொள்ள முடிந்தால், மனதில் எழும் சபலங்களுக்கு நாம் அடிபணியாமல் இருக்க அது நம்மை ஊக்குவிக்கும். தேவனுடைய வார்த்தையை மட்டும் விசுவாசித்து வாழ்பவருக்கே இது சாத்தியம்.
"பொல்லாதவர் சாகிறது எனக்கு எவ்வளவேனும் விருப்பமோ? அவர்கள் தம் வழிகளினின்றும் திரும்பி வாழ வேண்டும் என்பதன்றோ என் பிரியம்? என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்" (எசே.18:23).
கர்த்தர் நம்மை நேசிப்பதால், இரட்சகரைக் கிருபையாகத் தந்து இந்த விலையேறப் பெற்ற மீட்பை ஈவாக நமக்கு அளித்துள்ளார்.
பாவம் வளர்ச்சியடைந்து மரணத்தை விளைவிக்கும் இந்த நான்கு படி நிலைகளும் முதலாவது நிகழ்ந்த ஆதாம், ஏவாள் பாவத்தில் மிகச் சரியாகச் சித்தரிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன (ஆதி. 3).
ஏவாளின் ஆர்வத்தைக் கூட்டி, அவளைக் கவர்ந்திழுக்க ‘தேவர்களைப் போல இருப்பீர்கள்’ எனும் தூண்டிலைச் சர்ப்பம் பயன்படுத்தியது:
"நீங்கள் அதை உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும்; நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்” (ஆதி. 3:5).
அறிவைப் பெறுவது தவறா? கனியை உண்பதில் என்ன தவறு? "மரத்தின் கனிகள் பார்வைக்கு நல்லது'' என்று ஏவாள் பார்த்தாள். அவளுடைய ஆசை தூண்டப்பட்டது (ஆதி. 3:6).
2 கொரிந்தியர் 11:3-ல் சர்ப்பம் ஏவாளை ஏமாற்றியதை பவுல் விவரித்தார்:
"ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தாலே ஏவாளை வஞ்சித்தது போல, நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டுக் கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும் தூய்மையையும் இழந்து விடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன்."
சாத்தான் தந்திரக்காரன் (Satan A Deceiver), அவன் எப்போதும் மனதை ஏமாற்ற முயல்கிறான்.
தடை செய்யப்பட்ட மரத்தின் கனி நல்லது, இனிமையானது, அதை உண்பது அவளுக்குப் புத்திசாலித்தனமாக இருக்கும் என்பவை, சாத்தான் ஏவாளுக்குப் பயன்படுத்திய தூண்டில். அவள் தூண்டிலைப் பார்த்தாள், ஆனால் கர்த்தருடைய எச்சரிக்கையை மறந்துவிட்டாள்:
"நீ அதை உண்ணும் நாளில் சாகவே சாவாய்" (ஆதி. 2:17).
ஏவாள் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் மரத்தின் பழங்களை எடுத்துச் சாப்பிட்டாள். பின்னர் அதை அவள் தன் கணவனிடம் பகிர்ந்து கொண்டாள். ஆதாமும் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. ஆதாம் நேரிடையாக வஞ்சிக்கப்படவில்லை, ஆனால் கண்களை விரித்து அதை இச்சித்து பாவம் செய்ததால், அவரது பாவமே மனித இனத்தைச் சோகத்தில் ஆழ்த்தியது (ரோ. 5:12-21; 1 தீமோ. 2:12-14).
ஆதாம் மற்றும் ஏவாளுக்கு உடனடியாக ஆவிக்குரிய மரணம் நேரிட்டது (தேவ பிரசன்னத்தை இழந்தனர்). இறுதியில் அது சரீர மரணத்தையும் ஏற்படுத்தியது.
ஆதாமின் காரணமாக எல்லா மனிதர்களும் மரணமடைகின்றனர் (1 கொரி. 15:21-22). இயேசு கிறிஸ்து இல்லாமல் மரிக்கும் நபர் நித்திய மரணத்தை அனுபவிப்பார் (வெளி. 20:11-15).
ஆகவே, நீங்கள் சபலத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையின் போதெல்லாம், உங்கள் கண்களைத் தூண்டிலிலிருந்து விலக்கி, பாவத்தின் இறுதி விளைவுகளைப் பார்க்கும் படி, உங்களது கண்கள் முன்னோக்கிப் பார்க்கட்டும்.
ஆண்டவரின் இறுதி தீர்ப்பு.
"பாவத்துக்குக் கிடைக்கும் கூலி மரணம்; மாறாக தேவன் கொடுக்கும் அருகொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு. (ரோமர் 6:23).

