வெள்ளி, 7 ஏப்ரல், 2023

யாக்கோபு 1: 4–12

அத்தியாயம் இரண்டு: யாக்கோபு முதல் அதிகாரம் தொடர்ச்சி- 1: 4-12 



சரணடைந்த மனம் - A Surrender Will (1:4, 9–11):

கர்த்தர் நம்மில் நற்பண்புகளை உருவாக்க வேண்டுமெனில், அதற்கு நாம் விருப்பத்துடன் ஒத்துழைக்க வேண்டும். அவர் வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிய மறுத்து எதிர்த்தால், அவர் நம்மை சிட்சித்து கீழ்ப்படிதலை கற்றுத் தருகிறார். நாம் கீழ்ப்படிந்து நடந்தால், நமக்கென்று அவர் வைத்திருக்கும் தமது திட்டத்தை, நம்முடைய வாழ்வில் நிறைவேற்றுகிறார். 

ஆண்டவர் தமது படைப்புகள் அனைத்தும் முழுமை பெற்றதாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். அவைகள் ஒருபோதும் அறைகுறையாக இருக்க விரும்புவதில்லை. அவைகள் அனைத்தும் தரமானதும், முழுமையானதாகவும் இருக்க விரும்புகிறார். இப் பிரபஞ்சத்தின்  துவக்கத்தில், தாம் படைத்த அனைத்தையும் கண்டு திருப்தியாகி, அவைகளைப் பார்த்து நல்லது எனச் சொன்னார். 

இரட்சிக்கப்பட்ட மனிதர்கள் முதிர்ச்சி நிறைந்தவர்களாக வாழ வேண்டும் என்பதே கர்த்தரின் எதிர்பார்ப்பு. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்; ஒரு குழந்தை வளர்ச்சியடையாது, எப்போதும் சிறு மழலையாகவே செயல் புரிந்தால், அது பெற்றவர்களுக்கு எவ்வளவு சோகத்தைத் தரும். 

ஆம், குழந்தைகள் வளர வேண்டும். அந்த வளர்ச்சியின் பாதையில் அவர்கள் தனித்து செயல் புரிய வேண்டும். அது கடினமான ஆபத்து நிறைந்த பயணம் தான். ஆனாலும் அவர்கள் அடையும் வெற்றியைக் காணும் போது அது பெற்றோருக்கு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகிறது. உண்மையில், குழந்தைகள் வளர்ந்து பொறுப்புடன் செயல்படுவதைப் பார்த்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

இருந்த போதிலும் பல கிறிஸ்தவர்கள் தங்களுக்கு நேரிடும் வாழ்க்கையின் சோதனைகளிலிருந்து விலகி ஓடி, தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இதன் விளைவாக அவர்கள் ஒருபோதும் வளர்ச்சி அடைவதில்லை. "சிறு பிள்ளைகள்" "இளைஞர்கள்" ஆக வளர வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். மேலும் "இளைஞர்கள்" "தந்தைகளாக" ஆக முதிர்ச்சி அடைய வேண்டும் எனவும் விரும்புகிறார் (1 யோவான் 2:12-14). 

ஒரு முழுமையான கிறிஸ்தவ வாழ்க்கையின் வளர்ச்சி படிநிலைகளில், திரியேக தேவன் நிறைவேற்றும் மூன்று பணிகளை பவுல் கோடிட்டுக் காட்டி உள்ளார் (எபே. 2:8-10). 

முதலில், கிறிஸ்து நமக்காகச் செய்யும் வேலை (Christ does for us-Salvation); அது இரட்சிப்பு. 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தம்மையே  சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்து இந்த பரிகாரத்தை நிறைவேற்றி முடித்தார். நாம் அவரை விசுவாசித்தால், அவர் நம்மைப் பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்கிறார். 

இரண்டாவதாக, ஆவியானவர் நமக்குள்ளாகச் செய்யும் வேலை (The Holy Spirit does in us-Sanctification); பரிசுத்தமாக்குதல். 

கர்த்தர் நம் மனதில் நற்குணங்களை உருவாக்குகிறார். அதனால் நாம் நற்செயல்கள் செய்ய உந்தப்படுகிறோம். தொடர்ந்து நற்செய்கைகள் செய்வதன் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிறிஸ்தின் சாயலுக்கு ஒப்பாக மாறுகிறோம். ஆம், நாம் அவருடைய கையினால் உருவாக்கப்படும் படைப்பாக வளர்கிறோம்.

"தம்மால் முன்பே தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்து வைத்தார்; அச்சகோதரர் சகோதரிகள் பலருள் தம் மகன் தலைப்பேறானவராய் இருக்க வேண்டுமென்றே இப்படிச் செய்தார்." (ரோமர் 8:29). 

மூன்றாவதாக, கர்த்தர் நம் மூலம் செய்வது (God does through us-Service); சேவை.

நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் நற்செயல்கள் செய்வதற்காகப் படைக்கப்பட்டு இருக்கிறோம். ஆனால் நாம் சேவை புரிவதற்கு முன்பாக, முதிர்ச்சி அடைய வேண்டும் எனக் கர்த்தர் விரும்புகிறார். அவர் நம் மூலமாக முழுமையாகச் செயல்படுவதற்கு, நம்மில் கிறிஸ்துவின் பண்புகள் உருவாக வேண்டும். 

ஆபிரகாமுக்கு வாக்களிக்கப்பட்ட மகனைக் கொடுப்பதற்கு முன், கர்த்தர் இருபத்தைந்து ஆண்டுகள் அவரை பல கடினமான பாதைகள் வழியாக நடத்தி உருவாக்கினார். யோசேப்பின் வாழ்க்கையில் கர்த்தர் பதின்மூன்று ஆண்டுகள் செயல்பட்டு அவரை உருவாக்கினார். யோசேப்பு எகிப்தின் சிம்மாசனத்தில் அமர்த்துவதற்கு முன்பாக பல்வேறு கடினமான சோதனைகளுக்கு அவரை உட்படுத்தினார். இஸ்ரவேலரை நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் வழி நடத்த ஏதுவாக, மோசேயை என்பது வருடங்கள் தயார் செய்தார். நம்முடைய கர்த்தரும், தம்முடைய சீடர்களுக்கு மூன்றரை ஆண்டுகள் பயிற்சி அளித்து அவர்களை அப்போஸ்தலர்களாக உருவாக்கினார். 

ஆனாலும், கர்த்தர் நம் சம்மதமின்றி நம்மில் செயல்பட விரும்புவதில்லை. அவர் ஒவ்வொரு மனிதருக்கும் அந்த தெரிந்தெடுக்கும் சுயாதீனத்தை (Freedom of Choice) அளித்துள்ளார். ஆகக் கர்த்தர் நம்மில் செயல்புரிய, நமக்கு முழுமையாகச் சரணடைவதற்கு விருப்பம் இருக்க வேண்டும். ஒரு முதிர்ச்சி அடைந்த நபர் கர்த்தரின் திருவுள விருப்பத்துக்கு எதிராக வாதிடுவதில்லை; மாறாக, அவர் அதை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்கிறார், மகிழ்ச்சியுடன் அர்ப்பணித்துக் கீழ்ப்படிகிறார். 

"மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு, வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவர்களாயிராமல் கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள். " (எபே. 6:6). 

சரணடைவதற்கு விருப்பங்கள் இல்லாமல், சோதனைகளை எதிர் கொள்ள முயன்றால், முதிர்ச்சி அடைந்த பெரியவர்களாக அல்ல, முதிர்ச்சியடையாத குழந்தைகளைப் போலவே நாம் முடிவடைவோம். 

யோனா தீர்க்கதரிசி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நினிவேயில் புறஜாதிகளுக்குப் பிரசங்கிக்கும்படி கர்த்தர் யோனாவுக்குக் கட்டளையிட்டார். யோனா அதற்குக் கீழ்ப்படிய மறுத்துவிட்டார். அவர் நினிவே செல்வதற்குப் பதிலாக தர்சுவை நோக்கி கப்பலில் பயணம் செய்தார். ஆனாலும், யோனா தீர்க்கதரிசியைத் தனது பணியை ஏற்றுக்கொண்டு செய்வதற்காகக் கர்த்தர் மீனின் வயிற்றில் வைத்து யோனாவிற்கு பாடம் கற்பித்தார். ஆனாலும், யோனா கர்த்தருக்கு இதயப்பூர்வமாகக் கீழ்ப்படியவில்லை. அவர் இந்த முதிர்ச்சியடையும் அனுபவத்தில் வளரவில்லை.

எவ்வாறு யோனாவைக் குறித்து இவ்விதமான முடிவுக்கு வர முடியும்? 

ஏனென்றால், யோனா தீர்க்க தரிசன புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில், அவர் ஒரு முதிர்ச்சியடையாத குழந்தையைப் போல எரிச்சல் அடைகிறார்! கர்த்தர் நினிவேவை அழிப்பார் என்ற நம்பிக்கையில் ஊருக்கு வெளியே அமர்ந்து  காத்திருக்கிறார். அவர் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை. அப்போது அவர் ஒரு குழந்தையைப் போலப் பொறுமையிழந்து, சூரியன், உஷ்ணமான காற்று, ஆமணக்கு செடி, பூச்சி, மற்றும் கர்த்தர் என அனைத்தின் மீதும் எரிச்சலுடன் குமுறிக் கொண்டிருக்கிறார். 

ஒரு குழந்தை முதிர்ச்சியை நோக்கி வளர ஏதுவாக, அதன் தாய் செய்யும் முதன் முதலான செயல், அதற்குப் பாலூட்டுவதை நிறுத்துவது ஆகும். அது ஒரு கடினமான கட்டம். 

தனது தாய் பாலூட்டுவதை நிறுத்தும் போது, ​​​​அக் குழந்தை தனது தாய் தன்னை இனி  நேசிக்கவில்லை எனவும், எல்லாமே அதற்கு எதிராக நடக்கிறது என்றும், அதன் பிஞ்சு மனதில் உறுதியாக நம்புகிறது. 

உண்மையில், பாலூட்டுதலை நிறுத்துதல் என்பது குழந்தை முதிர்ச்சி மற்றும்  தனது சுதந்திரத்தை நோக்கி நகரும் ஒரு வளர்ச்சி நிலையாகும். அது குழந்தைக்கு மிகத் தேவையானதும், நல்லதும் கூட! 

சில சமயங்களில் கர்த்தர், தம் குழந்தைகளை அவர்களின் குழந்தைத்தனமான பொம்மைகளைச் சேகரிக்க விரும்பும் முதிர்ச்சியற்ற மனப்பான்மையிலிருந்து விலக்கிடக் கடினமான பாதைகளில் நடத்துகிறார்.

தாவீது இந்த காட்சியைச் சங்கீதம் 131:2-ல் சித்திரிக்கிறார்: 

"தாயின் பால் மறந்த குழந்தையைப் போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணிணேன்; என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப் போல் இருக்கிறது" (சங். 131:2). 

குழந்தைத்தனமான காரியங்களிலிருந்து நம்மை விலக்கி வைக்கக் கடவுள் சோதனைகளைப் பயன்படுத்துகிறார். ஆனால் நாம் அப்போதும் அவரிடம் சரணடையவில்லை என்றால் தொடர்ந்து முதிர்ச்சியற்றவர்களாகவே இருந்து விடுவோம். 

யாக்கோபு இந்த கருத்தை விளக்க இரண்டு வெவ்வேறு வகையான கிறிஸ்தவர்களைச் சுட்டி காண்பிக்கிறார் (யாக்1:9-11): ஒருவர் ஏழை மற்றவர் பணக்காரர். 

இந்த இரு பிரிவு மக்களிடையே வெளிப்படையாக, பணம் மற்றும் சமூக அந்தஸ்து வித்தியாசம், உண்மையான பிரச்சனைகளாக இருந்தன (யாக் 2:1-7, 15-16; 4:1-3, 13-17; 5:1-8  பார்க்கவும்). ஆனால் கர்த்தரின் சோதனைகள் நாம் எந்த நிலையில் வாழ்ந்தாலும், சம நிலைப்படுத்தி முதிர்ச்சியோடு வாழ  உதவும் வழியைக் கற்றுத் தருகின்றன. 

ஒரு ஏழை தனக்குச் சோதனை வரும்போது, கர்த்தர் அதை அனுமதிக்கிறார் என ஏற்றுக் கொண்டு, அவருக்கு அருளப்படும் வழி நடத்துதல் மற்றும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் மகிழ்ச்சி அடைய வேண்டும். 

அது போல ஒரு ஐசுவரிய வானுக்குச் சோதனை வரும்போது, ​​தேவன் தாம் அதை அனுமதிக்கிறார் என ஏற்றுக் கொண்டு, கிறிஸ்தில் அவருக்கு அருளப்பட்ட ஐசுவரியங்கள் ஒருபோதும் வாடிப்போகவோ, மங்கவோ முடியாது என உணர்ந்து கர்த்தர் நடத்தும் வழிகளில் ஆறுதல் அடைய வேண்டும். 

வேறுவிதமான வார்த்தைகளில் கூறுவதென்றால், வாழ்க்கையின் சோதனைகள் மூலம் கர்த்தர் உங்களை அழைத்துச் செல்வது உங்கள் பொருள் வளங்களை நோக்கி அல்ல; அது உங்கள் ஆவிக்குரிய வளங்கள். 

இதுவரை யாக்கோபிடமிருந்து நாம் மூன்று பின்பற்ற வேண்டிய கட்டாய பாடங்களை கற்றுக் கொண்டோம்: 

1. சோதனைகளை நான் மகிழ்ச்சியான மன நிலையுடன் அணுக வேண்டும்.

2. சோதனைகள், நான் முதிர்ச்சியடைய அருளப்படுகிறது எனப் புரிந்து கொள்ளும் மனம் வேண்டும்.

3.  சோதனை காலங்களில் என்னில் நற்பண்புகள் உருவாகக் கர்த்தரிடம் நான் முழு விருப்பத்துடன் சரணடைய வேண்டும். 

அவர் நான்காவதாக ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார். நாம் ஞானத்திற்காக ஜெபிக்க வேண்டும். 

கேள்—ஒரு விசுவாசமுள்ள இதயம் (1:5–8):

இந்த நிருபத்தில் யாக்கோபு குறிப்பிடும் விசுவாசிகள் அவர்களுடைய ஜெப வாழ்க்கையில் சிக்கல்களைக் கொண்டிருந்தனர் (யாக்கோபு 4:1-3; 5:13-18). 

நம் வாழ்வில் சோதனைகள் தரும் துயரங்களை அனுபவிக்கும் சூழலில், கர்த்தரிடம் எதைக் கேட்டு ஜெபிக்க வேண்டும்? 

யாக்கோபு கற்றுத் தருகிறார்: கர்த்தரிடம் ஞானத்திற்காக வேண்டுதல் செய்யுங்கள். 

ஞானத்தைப் பற்றி யாக்கோபு நிருபத்தில் சொல்ல நிறைய இருக்கிறது (யாக்கோபு 1:5; 3:13-18). யூத மக்கள் ஞானத்தை விரும்பினர். நீதிமொழிகள் புத்தகம் அதற்குச் சாட்சியாக இருக்கிறது. 

அறிவு என்பது விஷயங்களைப் பிரித்துப் பார்க்கும் திறன் என்றும், ஞானம் என்பது அவற்றை ஒன்றிணைக்கும் திறன் என்றும் ஒருவர் கூறினார். அறிவை சரியாகப் பயன்படுத்துவது ஞானம். 

அவர் மானிடர்க்குக் கூறினார்; ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்; தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு. (யோபு 23:23)

நாம் அனைவரும் படித்த முட்டாள்களைக் குறித்து அறிவோம். அவர்கள் சிறந்த கல்விப் பட்டங்களைக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களால் வாழ்க்கையில் எளிமையான முடிவுகளை எடுக்க முடியாது. நான் ஒரு முறை ஒரு இறையியல் கல்லூரி வளாகத்தில் ஒரு திறமையான பேராசிரியரைச் சந்தித்தேன். அவர் இரண்டு தொப்பிகளை அணிந்திருந்தார்! 

சோதனைகளைச் சந்திக்கும்போது நமக்கு ஏன் ஞானம் தேவை? 

ஏன் பலம், அல்லது கிருபை, அல்லது விடுதலையைக் கேட்கக்கூடாது? 

ஞானம் நமக்கு இருந்தால் சோதனைகள், நாம் முதிர்ச்சியடையக் கர்த்தர் கொடுக்கும் வாய்ப்புகள் என உணருவோம். அந்த வாய்ப்புகளை வீணடிக்க மாட்டோம். இந்த காரணத்திற்காகத் தான் நமக்கு ஞானம் தேவைப்படுகிறது. 

சோதனை சூழ்நிலைகள், நமது நன்மைக்காகவும், கர்த்தரின் நாம மகிமைக்காகவும் நாம் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள, ஞானம் நமக்கு உதவுகிறது. 

என்னுடன் பணிபுரியும்  ஒரு திறமையான செயலர் தமது வாழ்வில் பெரும் சோதனைகளைச் சந்தித்துக் கொண்டிருந்தார். முதலில் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது கணவரும் பார்வை இழந்தார். பின்னர் அவரது கணவர் நோயின் தீவிரத்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் ஒருவேளை  இறந்துவிடக்கூடும் என நாங்கள் எதிர்பார்த்தோம்.  

அடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் அவரை தேவாலயத்தில் சந்தித்தேன். அப்போது அவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று உறுதியளித்தேன்.

"நீங்கள் கர்த்தரிடம் எனக்கு எதைத் தரும்படியாக ஜெபிக்கப் போகிறீர்கள்?" என அந்த பெண் கேட்டார். 

அவருடைய கேள்வி என்னைத் திடுக்கிட வைத்தது. "உங்களுக்கு உதவவும், உங்களைப் பலப்படுத்தவும் நான் ஆண்டவரிடம் ஜெபிக்கிறேன்" எனப் பதில் அளித்தேன்.

“அதற்கு மிக்க நன்றி. நான் அதைப் பாராட்டுகிறேன், ஆனால் இன்னும் ஒரு காரியத்திற்காக நீங்கள் எனக்காக ஜெபிக்க விரும்புகிறேன். 

இந்த சோதனையின் வழியாக நான் கடந்து செல்லும் இந்த வேளையில், கர்த்தர் எனக்கு கற்றுக் கொடுக்க விரும்பும் பாடங்களையெல்லாம் நான் வீணாக்கி விடாமல் இருக்கத் தேவையான ஞானம் எனக்குக்  கிடைக்கப் பிரார்த்தியுங்கள்!”

அந்த சகோதரிக்கு யாக்கோபு 1:5ன் அர்த்தம் என்னவென்று தெரியும். 

யாக்கோபு என்ன கேட்க வேண்டும் (ஞானம்) என விளக்கியது மட்டுமல்லாமல், அதை எப்படிக் கேட்க வேண்டும் என்பதையும் விவரித்தார். 

ஞானத்தை நாம் விசுவாசத்தோடு  கேட்க வேண்டும். நாம் பயப்பட வேண்டிய தேவையில்லை, ஏனென்றால் கர்த்தர் நமது ஜெபத்திற்குப் பதில் அளிக்க ஆயத்தமாக இருக்கிறார். இதற்காக அவர் நம்மை ஒருபோதும் கடிந்து கொள்ள மாட்டார்! 

''அவர் அதிக கிருபை அளிக்கிறார்" (யாக்கோபு 4:6). நாம் வேண்டிக் கொள்ளும்போது மேலும், மேலும், மேலும் அதிக ஞானத்தையும் தருகிறார். 

ஆனால் ஜெபத்திற்கு மிகப்பெரிய எதிரி அவிசுவாசமே.

யாக்கோபு, சந்தேகப்படும் ஒரு விசுவாசியைக் கடல் அலைகளுடன் ஒப்பிடுகிறார். ​​அவை ஒரு நொடி மேலேயும், அடுத்த வினாடி கீழுமாக எழும்பி விழுபவை. 

அலைகளை நம்ப முடியாது என்பதை ஹவாயில் விடுமுறையிலிருந்தபோது உணர்ந்தேன். கடலோரத்தில் ஒரு பாறையில் அமர்ந்து அலைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். பின்னர் சற்று ஓய்வாகத் திரும்பி அமர்ந்து அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும் சூரிய ஒளிக் கதிர்களை ரசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தீடிரென எனக்குப் பின்னால் ஒரு சத்தம் கேட்டது. யார் நெருங்குகிறார்கள் என்று திரும்பிப் பார்த்தேன். அடுத்த நொடி  ஒரு பெரிய அலை என்னை மூழ்கடித்து நனைத்துச் சென்றது! 

ஒரு போதும் அலைகளை பாராது  திரும்பி அமர்ந்து விடாதீர்கள் - அவை கீழே அமர்ந்தது போலக் காணப்படும், அடுத்த நொடியில் மேலே எழும்பிச் சீறி வரும்.

இதுவே "இரு மனதுள்ள மனிதனின்" அனுபவம். அவர் மனதில் ஒரு நொடி விசுவாசம் கூறுகிறது, "ஆம்!" என, ஆனால் அடுத்த நொடி "இல்லை!" எனும் அவநம்பிக்கை.

"ஆம்!" ஒரு நிமிடம், அடுத்து கணம் "இல்லை!" 

பேதுரு இயேசுவை நோக்கி கடல் மீது நடந்து செல்லும்போது, அவிசுவாசத்தால் அலைகளில் மூழ்கினார் . இயேசு அவரிடம், "அற்ப நம்பிக்கை கொண்டவனே, நீ ஏன் சந்தேகப்பட்டாய்?" என்று கேட்டார் (மத். 14:22-33). 

பேதுரு, அலைகளின் மீது நடக்கத் தொடங்கிய போது, ​​விசுவாசத்துடன் தனது கண்களை கிறிஸ்துவின் மீது வைத்திருந்தார். ஆனால் பெருங்காற்று மற்றும் அலைகளால் அவரது மனம் திசை திருப்பப்பட்டபோது, ​​​​அவர் விசுவாசத்துடன் நடப்பதை நிறுத்திவிட்டார். அடுத்த நொடி மூழ்கத் தொடங்கினார். அவரது இரு மன எண்ணங்களால் கிட்டத்தட்ட மூழ்கிவிட்டார்.

பல கிறிஸ்துவர் அலைகள் மீது அலைக்கழிக்கப்படும் மரத்தக்கைகளை போல இரு வித அனுபவங்களோடு வாழ்கின்றனர்: ஒரு நிமிடம் மேலே, அடுத்த நிமிடம் கீழே. 

இந்த வகையான முன்னும் பின்னுமாக வீசப்படும் வாழ்க்கை முறை முதிர்ச்சி இன்மைக்குச் சான்றாகும். பவுல் இது போன்றதொரு கருத்தை எபேசு சபை மக்களுக்குப் போதித்தார்: 

“ஆகவே, இனி நாம் குழந்தைகளைப்போல் இருக்கக் கூடாது. மனிதருடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் தவற்றுக்கு வழி நடத்தும் ஏமாற்று வழிகளையும் நம்பி, அவர்களுடைய போதனைகள் என்னும் காற்றால் அடித்துச்செல்லப்பட்டு அங்குமிங்கும் அலைக்கழிக்கப்படக்கூடாது." (எபேசியர்4:14).

விசுவாசமும், ஒன்றுபட்ட இருதயமும் நமக்கு இருந்தால், நாம் தைரியத்துடன் கேட்கலாம்; கர்த்தர் நமக்குத் தேவையான ஞானத்தைத் தருவார். 

நினைவில் கொள்ளுங்கள்: உறுதியற்ற தன்மையும் முதிர்ச்சியற்ற தன்மையும் ஒன்றாக இனைந்தேச் செல்கின்றன. 

யாக்கோபு இந்த பகுதியை ஒரு ஆசீர்வாதத்துடன் முடிக்கிறார்; "சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்" (யாக்.1:12). 

பாருங்கள்; அவர் மகிழ்ச்சியுடன் தொடங்கி (யாக்.1:3) ஆசீர்வாதத்துடன் முடிக்கிறார். 

ஒரு செயலைச் செய்யத் துவங்கும் முன்னர், நாம் எவ்வித மனப்பாங்குடன் அந்த செயலை செய்ய வேண்டும் என அணுகுகிறோமோ, அதுவே அந்த செயலின் முடிவைத் தீர்மானிக்கிறது. 

வேதம் சோதனைகளை மகிழ்ச்சியுடன் பொறுமையாகச் சகித்துக் கொள்பவர்களுக்கு ஒரு கிரீடத்தை உறுதியளிக்கிறது என்பது ஒரு பெரிய ஊக்கமாகும். பவுல் தனது நிருபங்களில் தடகள விளையாட்டுப் போட்டிகளின் உதாரணங்களை அடிக்கடி பயன்படுத்தினார். இங்கே யாக்கோபும் அவ்வாறே விளக்குகிறார். 

சோதனைகளைச் சகித்துக்கொள்வதால், ஒரு பாவி இரட்சிக்கப்படுகிறான் என்று அவர் சொல்லவில்லை. சோதனைகளைச் சகித்துக்கொள்வதன் மூலம் ஒரு விசுவாசிக்கு வெகுமதி கிடைக்கும் என்று அவர் கூறுகிறார்.

ஒரு விசுவாசிக்குச் சோதனைகளுக்குப் பின்னர் எவ்விதமான வெகுமதி அளிக்கப்படுகிறது? 

முதலாவதாக, கிறிஸ்துவின் நற்பண்புகள் அவரில் உருவாகி வளர்ச்சி அடைகின்றது. இதுவே எல்லாவற்றையும் விட முக்கியமானது. 

அடுத்ததாக, அவரது நற்குணங்கள் நிறைந்த வாழ்க்கை மூலம் கர்த்தருக்கு மகிமையைக் கொண்டு வருகிறார். 

இறுதியாக, ஆண்டவராகிய  இயேசு கிறிஸ்து திரும்பி வரும்போது அவர் ஜீவ கிரீடத்தை வெகுமதியாகப் பெறுகிறார். 

முதலில் சிலுவை, பின்னர் கிரீடம். முதலில் துன்பம், பிறகு மேன்மை. 

வாழ்விலிருந்து சோதனைகளை நீக்குவதன் மூலம் கர்த்தர் நமக்கு உதவுவதில்லை, ஆனால் துயரங்கள் வழியாக நம்மைச் சீர் செய்வதன் மூலம் உயர்வடையச் செய்கிறார். 

சாத்தான் நம்மை அழிக்கச் சோதனைகளைப் பயன்படுத்த விரும்புகிறான், ஆனால் தேவன் நம்மைக் கட்டியெழுப்ப  அவற்றைப் பயன்படுத்துகிறார். 

யாக் 1:12 இல், யாக்கோபு ஒரு மிக முக்கியமான வார்த்தையைப் பயன்படுத்தினார்: அன்பு. 

ஆண்டவரை ''நம்புகிறவர்களுக்கு” அல்லது “ கீழ்ப்படிகிறவர்களுக்கு” ​​கர்த்தர் வாக்களித்த ஜீவகிரீடம் அருளப்படும் என்று அவர் எழுதவில்லை. ஆனால் ''அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட'' எனக் குறிப்பிடுகிறார்.

யாக்போபு ஏன் அன்பைப் பயன்படுத்தினார்? ஏனென்றால், இந்தப் பகுதியில் நாம் கடைப்பிடிக்க வலியுறுத்தும் ஒவ்வொரு கட்டாய பாடங்களுக்குப் பின்புலமாக இருந்து நம்மைச் செயல்புரியத் தூண்டுவது ஆண்டவர் மீது நமக்கு இருக்கும் அன்பு. 

சோதனைகளை எதிர்கொள்ளும்போது நமக்கு ஏன் மகிழ்ச்சியான மனப்பான்மை இருக்கிறது? ஏனென்றால் நாம் ஆண்டவரை நேசிக்கிறோம், அவர் நம்மை நேசிக்கிறார், அவர் நமக்குத் தீங்கு செய்யமாட்டார். 

நமக்கு ஏன் புரிந்துகொள்ளும் மனம் இருக்கிறது? ஏனென்றால், அவர் நம்மை நேசிக்கிறார். சோதனைகளின் உண்மையான நோக்கத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார், அதற்குப் பதிலாக நாம் அவரை நேசிக்கிறோம். 

நமக்கு ஏன் ஆண்டவரிடம் சரணடைவதில் விருப்பம்? ஏனென்றால் நாம் அவரை நேசிக்கிறோம். அன்பு இருக்கும் இடத்தில் சரணாகதியும் கீழ்ப்படிதலும் இருக்கும். 

நமக்கு ஏன் விசுவாசமுள்ள இதயம் இருக்கிறது? ஏனென்றால், அன்பும் நம்பிக்கையும் ஒன்றாக இனைந்தே செல்கிறது.

நீங்கள் ஒருவரை நேசிக்கும்போது, ​​​​அவரை நம்புகிறீர்கள். நீங்கள் உறுதியாக நம்புபவர்களிடம் உதவி கேட்கத் தயங்க மாட்டீர்கள். 

யாக்கோபு நாம் பின்பற்றக் கொடுத்த கட்டாய பாடங்களுக்குப் பின்னால் இருந்து நம்மை இயக்கும் சக்தி ஆண்டவர் மீது நமக்கு இருக்கும் அன்பு. 

நாம் கர்த்தரை நேசித்தால், எண்ணுவது, அறிவது, விடுவது, கேட்பது போன்றவற்றைக் கேட்பதில் நமக்கு எப்போதும் பிரச்சனைகள் இருக்காது. 

இதில் மற்றொரு காரணியும் மறைந்துள்ளது: அன்பு நம்மை இறைவனுக்கு உண்மையாக வாழ வைக்கும். 

மனதில் இரட்டை எண்ணம் கொண்ட நபர் ஒரு துரோகம் செய்யும் கணவன் அல்லது மனைவி போன்றவர். அவர் இறைவனையும் உலகத்தையும் நேசிக்க விரும்புகிறார் (யாக். 1:8). உங்கள் மனதில் உண்மை இல்லையென்றால் விசுவாசத்தில் நிலைநிற்க முடியாது.

''இருமனமுள்ளவர்களே!" “பரிசுத்தமாக்குங்கள்” (யாக். 4:8)  என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “கற்பில் நிலைத்திருங்கள்” என்பதாகும். இரு மனமுள்ளவன் எனக் குறிப்பது ஒரு துரோக காதலனின் படம்.

ஆகவே யாக்கோபு அறிவுறுத்துகிறார், "உங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்துங்கள். 

பாலூட்டுவதை நிறுத்த விரும்பும் தாயின் மன நிலையை மீண்டும் தியானிக்கத் திரும்புவோம். 

தன் தாயை நேசிக்கும் குழந்தை, தன் தாய் தன்னை நேசிக்கிறாள் என்று உறுதியாக நம்பும் குழந்தை, தனக்கு அளிக்கப்படும் தாய்ப்பாலை அவள் நிறுத்தினாலும் அது தனது நன்மைக்கே என உண்மையாக விசுவாசித்து வளர ஆரம்பிக்கும். 

கர்த்தரை நேசிக்கும் ஒரு கிறிஸ்தவர், கர்த்தரும் அவரை நேசிக்கிறார் என்பதை அறிந்தவர். ஆண்டவர் சோதனைகளை அவர் வாழ்வில் அனுமதிக்கும் போது அவர் வீழ்ச்சியடைய மாட்டார். அவர் தேவனின் அன்பில் பாதுகாப்பாக இருக்கிறார். அவருக்கு இரு மனம் கிடையாது. அவர் இரு விதமான எண்ணங்கள் கொண்டவர் இல்லை. அவர் இறைவனையும் உலகத்தையும் நேசிக்க முயல்வதில்லை. 

லோத்து இருமனம் கொண்டவர்; சோதனைகள் வந்தபோது, ​​அவர் படுதோல்வி அடைந்தார். ஆபிரகாம் ஆண்டவரின் நண்பர்; அவர் தேவனை நேசித்தார் மற்றும் அவரை விசுவாசித்தார். சோதனைகள் வந்தபோது, ​​ஆபிரகாம் வெற்றிபெற்று விசுவாசத்தில் முதிர்ச்சியடைந்தார். 

ஆண்டவர் சோதனைகளை அனுப்புவதன் நோக்கம் ஒரு விசுவாசி முதிர்ச்சியடைய வேண்டும் என்பதே. 

"பொறுமை அதன் பரிபூரண வேலையாக இருக்கட்டும், கர்த்தர் வேறு எதையும் விரும்பவில்லை. அவைகள் பரிபூரணமாகவும், முழுமையடையவும் விரும்புகிறார்." 

சார்லஸ் பி. வில்லியம்ஸ் மொழிபெயர்ப்பு அதை வரைபடமாகச் சொல்கிறது: 

"சகிப்புத்தன்மை உங்களில் முழுமையாக உருவாகும் போது, அது நீங்கள் முற்றிலுமாக வளர்ச்சியடைவதற்கும், பரிபூரணமான முதிர்ச்சி நிலையை அடைவதற்கும் உங்களைத் தகுதிப்படுத்தும்." 

அந்த முதிர்ச்சி நிலையை அடைய நீங்கள் விரும்பினால், கிறிஸ்துவின் மீதுள்ள அன்புடன்; எண்ணுங்கள், அறிந்து கொள்ளுங்கள், சரணடையுங்கள், கேளுங்கள்.


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக