சனி, 19 ஆகஸ்ட், 2023

யாக்கோபு 5: 7-12

 அத்தியாயம் பன்னிரண்டு 

பொறுமையின் சக்தி.

(The Power of Patience).


"நீடிய பொறுமையுடன் இருங்கள்" என்று யாக்கோபு எழுதிய போது, துன்பத்தில் வேதனைப்படும் விசுவாசிகள் குறித்த ஆழ்ந்த கவலை அவர் மனதிலிருந்தது. இந்த கடிதத்தின் தொடக்கத்தில் இதுவே அவருடைய அறிவுரை (யாக் 1:1-5). கடிதம் நிறைவு பெறும் போதும் இதுவே அவரது அறிவுரை. 

இந்த உலகில் நிகழும் எல்லா தவறுகளையும் கர்த்தர் சரி செய்யப் போவதில்லை.  ஆக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வருவார் எனக் காத்திருக்கும் விசுவாசிகளான நாம், இத்தகைய கடினமான சூழல்களை எதிர்பார்த்து பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும். 

இந்த தியானப் பகுதியில் கர்த்தருடைய வருகையை மூன்று முறை யாக்கோபு நமக்கு நினைவூட்டினார் (யாக் 5:7-9). இது கிறிஸ்தவர்கள் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியம் (தீத்து 2:13). இந்த வாழ்க்கையில் எல்லாம் எளிதாகவும் வசதியாகவும் இருக்கும் என நாம் எதிர்பார்க்கக்கூடாது. "உலகில் உங்களுக்கு உபத்திரவம் இருக்கும்" (யோவான் 16:33). ''அதிக உபத்திரவத்தின் வழியாய் நாம் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்'' என பவுல் விசுவாசிகளிடம் நினைவுபடுத்தினார் (அப். 14:22). இயேசு திரும்பி வரும்வரை நாம் கஷ்டங்களையும் மனவேதனைகளையும் பொறுமையுடன் சகிக்க வேண்டும். 

யாக்கோபு பொறுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்து விளக்குவதற்கு இரண்டு வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தினார். யாக். 5:7-8, 10 வசனங்களில் அவர் நீடிய பொறுமை என எழுதினார். அதன் பொருள் காலம் கருதாது (long-tempered) காத்திருக்கும் மனப்பான்மை. 

யாக். 5:11 வசனத்தில் சகிப்புத்தன்மை (endurance) மற்றும் பொறுமை (Patience). என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதன் பொருள், "பொறுத்துக் கொள்ளுதல்" மற்றும் மன அழுத்தம் மிகுந்த சூழ்நிலையிலும் சகிப்புத்தன்மையுடன் இருப்பதைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

பொறுமை என்றால் "நீங்கள் ஓடிப்போக வேண்டும் என விரும்பும் இடத்தில் அமைதியாகக் காத்திருப்பது". 

பல கிரேக்க அறிஞர்கள் ''நீடிய பொறுமை" என்பது பெரும் துயரத்தை அனுபவித்த விசுவாசிகளை, இன்னும் சற்று பொறுமையோடு காத்திருக்க அழைக்கிறது என்றும், "சகிப்புத்தன்மை" என்பது அப்போது நிலவிய சூழ்நிலைகள், கடினமான நிலைமைகளில் தேவைப்படும் பொறுமையைக் குறிக்கிறது என்றும் நினைக்கிறார்கள்.

ஆனால், கர்த்தர் திரும்பி வருவதற்காகக் காத்திருக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம் பதில் அளிக்க வேண்டிய முக்கியமான கேள்வி எதுவென்றால், 

இத்தகைய பொறுமை நிறைந்த சகிப்புத்தன்மையுடன் எப்படி வாழ்வது? 

இந்த அவசியமான கேள்விக்கு, நாம் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையுடன் வாழ ஊக்கமளிக்கும் மூன்று உதாரணங்களை யாக்கோபு பதிலாகக் கொடுத்தார்.

விவசாயி - The Farmer (5:7–9):

ஒரு மனிதனுக்குப் பொறுமை இல்லை என்றால், அவர் விவசாயியாகாமல் இருப்பது நல்லது. ஒரே இரவில் எந்தப் பயிரும் விளைந்து விடாது (ஒருவேளை களைகளைத் தவிர). வானிலையின் மீது எந்த விவசாயிக்கும் கட்டுப்பாடு இல்லை. அதிக மழை பெய்தால் பயிர் அழுகலாம். அதிக வெயிலால் கருகிவிடலாம். உறைபனி பயிரை அழித்துவிடும். ஒரு  விவசாயி நல்ல வானிலையே எதிர்பார்த்து , நீடிய பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்! அவர் விதை விதைத்து அதன் விளைச்சலுக்காகப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். பயிர்கள் வளர காலம் தேவை. 

நமக்கு இலையுதிர் மாதங்களில் யூத விவசாயிகள் உழுது விதைப்பார்கள். "ஆரம்ப மழை" மண்ணை மென்மையாக்கும். "பிந்தைய மழை" வசந்த காலத்தின் துவக்கத்தில் (நமது பிப்ரவரி-மார்ச்) வந்து அறுவடையை முதிர்ச்சியடைய உதவும். விவசாயி தான் விதைத்த விதை, கனிகளை உற்பத்தி செய்வதற்காகப் பல வாரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

அவர்  ஏன் விருப்பத்துடன் இவ்வளவு காலம்  காத்திருந்தார்? ஏனெனில் விளையும் கனிகள் "மதிப்புமிக்கது" (யாக் 5:7). அறுவடைக்குக் காத்திருப்பது மதிப்பு மிக்கது தான். "நாம் தளர்ந்து போகாதிருந்தால், ஏற்ற காலத்தில் அறுப்போம்" (கலா. 6:9). “ஏனெனில், பூமி தானாகவே பயிர்களை விளைவிக்கிறது; முதலில் துளிர், பின்னர் தண்டு, அதன் தலையில் முதிர்ந்த தானியம். பயிர் முதிர்ந்தவுடன், உடனடியாக அவர் அறுவடை செய்கிறார், ஏனென்றால் விளைந்து முதிர்ச்சி ஆகிவிட்டது" (மாற்கு 4:28-29).

ஒரு ஆன்மீக அறுவடையை எதிர்பார்க்கும் "ஆவிக்குரிய விவசாயியாக’’ கிறிஸ்தவரை யாக்கோபு சித்தரித்தார். 

"நீங்களும் நீடிய பொறுமையோடு இருந்து, உங்கள் இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்" (யாக். 5:8). 

நம் இதயம் நிலம். கர்த்தரின் வார்த்தை "விதை" (லூக்கா 8:11). மண்ணுக்குப் பல பருவங்கள் இருப்பது போல் ஆவிக்குரிய வாழ்வுக்கும் பல பருவங்கள் உண்டு. சில நேரங்களில், நம் இதயங்கள் குளிர்ச்சியாகவும், "குளிர் காலமாகவும்" மாறும். கர்த்தர் விதையை நடுவதற்கு முன் "அவற்றை உழுகிறார்" (எரே. 4:3). விதைக்கப்பட்ட விதைகளுக்கு அவர் தண்ணீர் தருகிறார். அவை வளர்வதற்குச் சூரிய ஒளியையும், மழையையும் அனுப்புகிறார். ஆகையால் நாம் அறுவடைக்காகப் பொறுமையாகக் காத்திருக்க இருக்க வேண்டும். 

வாழ்க்கை பயணம் கடினமாக இருக்கும்போது பொறுமையுடன் சகிப்பதற்கான ரகசியம் இதுதான்: கர்த்தர் வாழ்வின் கனிகளை நம்மில் விளையச் செய்கிறார். 

பயிர் செழித்து வளர்ந்து "ஆவியின் கனிகளாக" பலன் தர வேண்டும் என்று அவர் விரும்புகிறார் (கலா. 5:22-23). அதைச் செய்ய ஒரே வழி சோதனைகள் மற்றும் துயரங்களை நம் வாழ்வில் அனுமதிப்பதன் மூலம் மட்டுமே. துயரமான சூழலில், கர்த்தர் மீதான நம்பிக்கை, நம் விசுவாசம் இவற்றின் மீது பொறுமை இழந்து விடாமல், இறைவனுக்கு அடிபணிந்து கனிகள் வளர நாம் அனுமதிக்க வேண்டும். நாம் அறுவடைக்காகக் காத்திருக்கும் "ஆவிக்குரிய விவசாயிகள்".  

உங்கள் இதயம் உறுதியானால் மட்டுமே இந்த வகையான அறுவடையை நீங்கள் அனுபவிக்க முடியும் (யாக். 5:8). 

திருச்சபையின் ஆவிக்குரிய ஊழியத்தின் நோக்கங்களில் ஒன்று இதயத்தை உறுதிப்படுத்துவதாகும் (ரோ. 1:11). புதிதாக இணைந்த கிறிஸ்தவர்களை, அவர்களுடைய விசுவாசத்தில் நிலை நிறுத்துவதற்காக பவுல் தீமோத்தேயுவை தெசலோனிக்கேயாவுக்கு அனுப்பினார் (1 தெச. 3:1-3). அவர்கள் நிலைநிறுத்தப்படுவதற்காக பவுலும் அவர்களுக்காக ஜெபித்தார் (1 தெச. 3:10-13). 

இருதயம் ஸ்திரப்பட வேண்டுமானால், தேவனுடைய வார்த்தையின் தியானமும் ஜெபமும் மிக முக்கியம். நிலைபெறாத இதயம் கனி தராது. 

விவசாயி ஒரு வேலையும் செய்யாது சும்மா சுற்றி வருவதில்லை என்பதை நினைவில் வையுங்கள்: அறுவடையை எதிர்பார்த்தபடியே அவர் தொடர்ந்து வேலையில் இருக்கிறார். துன்பப்படும் இந்த விசுவாசிகளை, வெள்ளை அங்கிகளை உடுத்திக்கொண்டு, ஒரு மலையில் ஏறி, ஆண்டவராகிய  இயேசு திரும்பி வரும்வரை சும்மா காத்திருக்குமாறு யாக்கோபு சொல்லவில்லை. "உழைத்துக் காத்திருங்கள்" என்பது அவரது அறிவுரை. 

''அவன் எசமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுபவன் பாக்கியவான்" (லூக்கா 12:43). 

ஒரு சிறந்த விவசாயி தனது பக்கத்து வீட்டாருடன் சண்டையிடுவது இல்லை. சிறந்த விவசாயிகளின் வழக்கமான அடையாளங்களில் ஒன்று, அவர்கள் ஒருவருக்கொருவர் உதவ விருப்பமாக இருப்பர். பண்ணையில் வேலையில் தீவிரமாக உழைக்கும் எவருக்கும், தமது அண்டை வீட்டாருடன் தகராறு செய்ய நேரமும் சக்தியும் இருப்பது இல்லை. யாக்கோபு இதை மனதில் வைத்திருந்திருக்க வேண்டும், 

"சகோதரர்களே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படதாபடிக்கு  ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதீர்கள்" (யாக். 5:9). 

கர்த்தரிடம் பொறுமையில்லாது இருந்தால், அது பெரும்பாலும் சக விசுவாசிகளிடம் பொறுமையின்மைக்கு வழிவகுக்கிறது. இது நாம் தவிர்க்க வேண்டிய பாவமாகும். ஒருவர் மீது ஒருவர் கத்தியைப் பயன்படுத்தத் தொடங்கினால், அறுவடையைத் தவறவிடுவோம்!

 தீர்க்கதரிசி - The Prophets (5:10:

யாக்கோபு கூறிய இந்த உதாரணத்தை, பழைய ஏற்பாட்டை வாசித்து அறிந்த ஒரு யூத சபை எளிதாகப் புரிந்து கொள்ளும். இயேசு தனது மலைப் பிரசங்கத்தில், தீர்க்கதரிசிகளைத் துன்புறுத்தலுக்கு எதிராகச் செயல்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு உதாரணமாகச் சுட்டிக் காண்பித்தார் (மத். 5:10-12). 

தீர்க்கதரிசிகளின் முன் மாதிரியான வாழ்விலிருந்து என்ன விதமான ஊக்கத்தை நாம் பெறுகிறோம்? 

முதலில், அவர்கள் கர்த்தரின் சித்தத்தின்படி வாழ்ந்தார்கள், அதனால் அவர்கள் துன்பப்பட்டார்கள். அவர்கள் “கர்த்தருடைய நாமத்தில்” பிரசங்கித்தார்கள், ஆனாலும் துன்புறுத்தப்பட்டனர். ஒரு உண்மையுள்ள கிறிஸ்தவனிடம், அவனுடைய துன்பத்திற்குக் காரணமாக, பாவம் அல்லது துரோகத்தின் விளைவு என்று சாத்தான் சொல்கிறான். ஆனால் அவன் உண்மையாக வாழ்வதும்  கூட, துன்பத்திற்குக் காரணமாக இருக்கலாம்! "ஆமாம், கிறிஸ்து  இயேசுவுக்குள் தேவ பக்தியுடன் நடக்கிற யாவரும் துன்புறுத்தப்படுவார்கள்" (2 தீமோ. 3:12). 

கீழ்ப்படிந்தால் போதும், அதனால் வாழ்க்கை எளிதானதாகவும், இன்பமாகவும் இருக்கும் என்று நாம் ஒருபோதும் நினைக்கக்கூடாது. 

நமது ஆண்டவர் கீழ்ப்படிதலுடன் இருந்தார், அது ஒரு சிலுவைக்கு நேராக அவரை வழி நடத்தியது! ஆம் இரண்டாவதாக, கர்த்தருடைய நிமித்தம் நாம் துன்பங்களைச் சந்திக்கும்போது, கர்த்தர் நம்மைப் பார்த்துக் கொள்கிறார் என்பதை நினைவூட்டுவதன் மூலம் தீர்க்கதரிசிகள் நம்மை ஊக்குவிக்கிறார்கள். தேசத்தில் மூன்றரை வருடங்கள் வறட்சி ஏற்படும் என்று பொல்லாத ஆகாப் ராஜாவிடம் எலியா அறிவித்தார். அந்த வறட்சியில் எலியாவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஆனால் கர்த்தர் அவரை போஷித்து, பாகாலின் பொல்லாத ஆசாரியர்களுக்கு எதிராக ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்தார். 

"கர்த்தரின் கிருபை உங்களை வைத்திருக்க விரும்பாத இடத்திற்கு நேராக, தேவ சித்தம் ஒருபோதும் உங்களை வழி நடத்தாது" என்று கூறப்படுகிறது.

பல தீர்க்கதரிசிகள் நம்பிக்கையற்ற புற இன மக்களின் கைகளில் மட்டுமல்ல, விசுவாசிகள் என்று கூறுபடுபவர்களின் கைகளாலும் பெரும் சோதனைகளையும், துன்பங்களையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. 

எரேமியா ஒரு துரோகி என்று கைது செய்யப்பட்டு, ஒரு கைவிடப்பட்ட கிணற்றில் தூக்கி எறியப்பட்டார். அந்த சமயங்களில் எரேமியா மரிக்கப் போகிறார் என்று தோன்றியது. ஆனால் எருசலேமின் அந்த பயங்கரமான முற்றுகை முழுவதும் கர்த்தர் எரேமியாவுக்கு உணவளித்து அவரைப் பாதுகாத்தார். எசேக்கியேல் மற்றும் தானியல் இருவரும் தங்கள் கஷ்டங்களின் பங்கை அனுபவித்தனர், ஆனால் கர்த்தர் அவர்களை விடுவித்தார். மேலும் பலர் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் விசுவாசத்திற்காக இறந்தனர். ஆனாலும், அவருக்கு உண்மையாக இருப்பவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கும், அந்த விசேஷ வெகுமதியைப் அவர்கள் பெற்றார்கள். 

கர்த்தருடைய நாமத்தினாலே பேசுகிறவர்கள் ஏன் கடினமான சோதனைகளைச் சகிக்க வேண்டும்? 

அது அவர்களின் விசுவாச வாழ்க்கை, பிறருக்குச் சாட்சியாக  உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது. உண்மையுள்ள, தெய்வீக வாழ்க்கையின் தாக்கம் அதிக சக்தியைக் கொண்டுள்ளது. துன்பத்தின் போது நாம் பொறுமையாக இருப்பது நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது என்பதை நாம் நினைவு கூற வேண்டும். ஆனால் பல உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் எந்த அங்கீகாரமும் இன்றி துன்பப்பட்டு இறந்ததில்லையா? ஆம், ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து திரும்பி வரும்போது, இந்த "அறியப்படாத நாயகர்கள்" தங்கள் வெகுமதிகளைப் பெறுவார்கள். தீர்க்கதரிசிகள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டனர், ஆனால் இன்றும் அவர்களின் பெயர்கள் போற்றப்படுகின்றன. நம் ஆண்டவர் மீண்டும் வரும்போது, அவர் தம்முடைய வெகுமதியை அவர்களுக்குக் கொண்டு வருவார் (வெளி. 22:12).

யாக்கோபு பயன்படுத்திய இந்த தீர்க்கதரிசிகளின்  உதாரணம், இத்தகைய விசுவாச வீரர்களது வாழ்வை வாசித்து அவர்களோடு உறவாடுவதற்கான ஆவலை நம்மில் உருவாக்க வேண்டும். அதற்காக நாம் திருமறையைத் தியானிக்கவும், அதில்  அதிக நேரத்தைச் செலவு செய்வதற்கும் நம்மை ஊக்குவிக்க வேண்டும். 

"தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையிலும் ஆறுதலிலும் நமக்கு நம்பிக்கை உண்டாகும் படிக்கு, கடந்தகால சம்பவங்களெல்லாம் நமக்குப் போதனையாக எழுதப்பட்டிருக்கிறது” (ரோமர் 15:4).

நாம் திருமறையை எவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு வாழ்க்கையின் கடினமான அனுபவங்களில் கர்த்தர் நம்மை உற்சாகப்படுத்தி வழி நடத்துவார். 

முக்கியமான விஷயம் என்னவென்றால், விவசாயியைப் போலவே, நாமும் தொடர்ந்து வேலை செய்கிறோம். தீர்க்கதரிசிகளைப் போல, சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், வாழ்வில் சாட்சியாக இருக்கிறோம் (5:11–12).

யோபு - Job  (5: 11-12)

"உங்களுக்குத் தெரியும், இதோ விடாமுயற்சியுடன் பொறுமையாக இருப்பவர்களைப் பாக்கியவான்கள் என்று கருதுகிறோமே" (யாக். 5:11). 

ஆனால் உங்கள் வாழ்க்கையில் ஒரு சோதனை இல்லாவிட்டால், நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்க முடியாது. போர்கள் இல்லாமல் வெற்றிகள் இருக்க முடியாது; பள்ளத்தாக்குகள் இல்லாமல் சிகரங்கள் இருக்க முடியாது. உங்களுக்கு ஆசீர்வாதம் வேண்டுமென்றால், நீங்கள் பாரத்தைச் சுமந்துகொண்டு போரிடத் தயாராக இருக்க வேண்டும். 

ஒருமுறை ஒரு இளம் கிறிஸ்தவர் ஜெபிப்பதை நான் கேட்டேன், ''ஆண்டவரே, தயவுசெய்து உமது வார்த்தையின் ஆழமான சத்தியங்களை எனக்குக் கற்றுக் கொடுங்கள்! அங்குள்ள அற்புதமான விஷயங்களைக் கேட்கவும் பார்க்கவும் நான் பரலோகத்திற்கு உயர்த்தப்பட விரும்புகிறேன்!'' 

இது ஒரு உண்மையான பிரார்த்தனை, ஆனால் அந்த இளைஞன் தான் ஜெபிப்பதன் அர்த்தத்தை உணர்ந்தாரா எனத் தெரியவில்லை. பவுல் மூன்றாம் வானத்திற்குச் சென்று, வார்த்தைகளுக்கு மிகவும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொண்டார், இதன் விளைவாக, பவுல் தன்னைத் தாழ்மையாக வைத்திருக்கத் தேவன் அவர் சரீரத்தில் ஒரு முள்ளைக் கொடுக்க வேண்டியிருந்தது (2 கொரி. 12:1-10).

கர்த்தர் அருளும் வரங்களைத் தன்னடக்கமும், பொறுப்புகளுடனும், ஆசீர்வாதங்களைக் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்வதன் வழியாகவும் சமநிலைப்படுத்த வேண்டும், இல்லையெனில் நீங்களும் நானும் கெட்டுப்போன, செல்லம் நிறைந்த குழந்தைகளாகி விடுவோம். 

"ஆசீர்வாதம்" எப்போது அருளப்படும்? அக்கினி சூளையின் மத்தியில்!!! 

அந்த மூன்று எபிரேய வாலிபர்களைப் போலவே சோதனைகளின் நடுவிலும் நாம் கர்த்தரின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம் (தானி.3). ஆனால் நாம் சோதனைகளைச் சகித்த பிறகு ஒரு ஆசீர்வாதம் அருளப்படும் என்பதை யாக்கோபு கற்பித்தார். அதற்கு உதாரணம் யோபு. 

யோபு ஒரு நீண்ட பெரிய தத்துவப் பாடல்கள் நிறைந்த புத்தகம். அதன் அத்தியாயங்கள் மேற்கத்திய மனதுக்கு, நீண்டதும், கடினமான உள்ளார்ந்த  பேச்சுகளால் நிறைந்ததாகத் தோன்றும். முதல் மூன்று அத்தியாயங்களில், யோபின் கடும் துயரம் தரும் சம்பவங்கள் உள்ளது: அவர் தனது செல்வத்தையும், குடும்பத்தையும், மற்றும்  ஆரோக்கியத்தையும் இழக்கிறார் (அவரது மனைவியைத் தவிர, அவரும் அவரை தற்கொலை செய்து கொள்ளச் சொன்னார்). 

யோபு 4ம் அதிகாரம் முதல் 31 ம் அதிகாரம் வரை உள்ள நெடிய பகுதி, யோபு தனது மூன்று நண்பர்களுடன் விவாதம் செய்வதும், அவர்களின் பொய்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விவாதங்களுமாக உள்ளது. 

யோபு 38 முதல் 42வரை உள்ள அதிகாரங்கள், யோபின் விடுதலையை விவரிக்கிறது: முதலில் கர்த்தர் யோபைத் தாழ்த்துகிறார், பின்னர் அவர் யோபைக் கனப்படுத்துகிறார். அவருக்கு முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகக் கொடுக்கிறார். 

நீங்கள் யோபுவின் அனுபவத்தை வாசிக்கும்போது, கர்த்தருக்கும் சாத்தானுக்கும் இடையில் நடந்த எதையும் யோபு அறிந்திருக்கவில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம். 

யோபுவின் நண்பர்கள் அவரைப் பாவி, மாய்மாலக்காரன் என்று குற்றம் சாட்டினார்கள். "உமது வாழ்க்கையில் ஏதோ ஒரு பயங்கரமான பாவத்தைச் செய்திருக்க வேண்டும், இல்லையென்றால்,  இப்படிப்பட்ட துன்பத்தை உமது வாழ்வில் ஒருபோதும் கர்த்தர் அனுமதித்திருக்க மாட்டார்" என்பதே அவர்களது வாதம். ஆனாலும், யோபு அவர்களுடன் உடன்படவில்லை. அவரது முழு உரையாடலின் போதும் தனது உண்மையான விசுவாசத்தைப் பாதுகாத்தார். யோபுவின் நண்பர்கள் தவறு செய்தார்கள்: எனினும் கர்த்தருக்கு எதிராக யோபு பேசவில்லை (யோபு 2:3). இறுதியில், யோபைப் பற்றிப் பொய் குற்றம் சொன்னதற்காகக் கர்த்தர் யோபுவின் நண்பர்களைக் கண்டித்தார் (யோபு 42:7).

யோபுவை விட கடும் துன்பத்தை அனுபவித்த வேறு ஒரு  உதாரணத்தைத் திருமறையில் நீங்கள் கண்டுபிடிப்பது கடினம். அவர் தோல்வி அடைந்தார். சூழ்நிலைகள் அவருக்கு எதிராக இருந்தன. அவரது செல்வம், ஆரோக்கியம், தனது அன்பான குழந்தைகள் என அனைத்தையும் இழந்தார். "கர்த்தரைச் சபித்து மடிந்து போ"என அவரது மனைவியும் அவருக்கு எதிராக இருந்தாள் (யோபு 2:9) . அவருடைய நண்பர்கள் அவருக்கு எதிராக இருந்தனர். அவர்கள் அவரை ஒரு நய வஞ்சகர், கர்த்தரின் தண்டனைக்குத் தகுதியானவர் என்று குற்றம் சாட்டினார்கள். கர்த்தர் அவருக்கு எதிராக இருப்பது போல் தோன்றியது! யோபு தன் கேள்விகளுக்குப் பதில் கேட்டு அழுதபோது, பரலோகத்திலிருந்து பதில் வரவில்லை. 

ஆனாலும், யோபு சகித்துக் கொண்டார். யோபு கர்த்தரிடம் பொறுமையிழந்து தன் விசுவாசத்தை விட்டுவிடுவார் என்று சாத்தான் முன்னறிவித்தான், ஆனால் அது நடக்கவில்லை. யோபு கர்த்தரின் விருப்பத்தைக் குறித்து கேள்வி எழுப்பினார் என்பது உண்மைதான், ஆனால் ஒருபோதும் யோபு தேவன் மீது வைத்திருந்த தனது நம்பிக்கையைக் கைவிடவில்லை. 

"அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆயினும், என் வழிகளை அவருக்கு முன்பாக வாதிடுவேன்” (யோபு 13:15). 

கர்த்தரின் செய்கைகள் பரிபூரணமானவை என்பதில் யோபு மிகவும் உறுதியாக இருந்ததால், அவர் என்ன செய்கிறார் என்று அவருக்குப் புரியவில்லை என்றாலும், அவருடன் வாதிடுவதில் விடாப்பிடியாக இருந்தார். அதுதான் சகிப்புத்தன்மை. 

இஸ்ரவேலர்கள் அவருடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தால் அவர்களை ஆசீர்வதிப்பார் என்று கர்த்தர் உடன்படிக்கை செய்தார் (உபா. 11). 

நீங்கள் செல்வந்தராகவும், வசதியாகவும் வாழ்ந்தால், கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர், ஆனால் நீங்கள் துன்பமாகவும், ஏழையாகவும் வேதனைப் பட்டால் கர்த்தரால் சபிக்கப்பட்டவர் என்கிற எண்ணத்திற்கு இது வழிவகுத்தது. இது தவறானது, வருந்தத்தக்கது. இன்றைக்கும் பலரிடம் அதே தவறான எண்ணம் இருக்கிறது. அதனால்தான் ஐசுவரிய வான் பரலோகத்தில் பிரவேசிப்பது கடினம் என்று இயேசு கூறியபோது, அவரது சீடர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

"அப்படியானால் யார் இரட்சிக்கப்பட முடியும்?" என்று கேட்டார்கள் (மத். 19:23-26). 

ஒருவர் செல்வம் உடையவர் என்றால் அவர்  கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதற்கு அடையாளமாக கருதினர். அவர்களால் இரட்சிக்கப் பட முடியவில்லை என்றால், வேறு யாராலும் இரட்சிக்கப்பட முடியாது! என நம்பினார்கள்.

ஆனால், யோபுவின் புத்தகம் இந்த யோசனையை மறுக்கிறது, ஏனென்றால் யோபு ஒரு நீதியுள்ள மனிதனாக இருந்த போதிலும், அவர் துன்பப்பட்டார் அவரில் எந்தத் தீமையையும் கர்த்தர் காணவில்லை. சாத்தானாலும் எந்த குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. யோபின் நண்பர்களாலும் தாங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. 

பாவத்திற்குத் தண்டனை தருவது என்பதை விட, ஒரு பாவிக்குத் துயரத்தைத் தரும் அனுபவத்தை அனுமதிப்பதில் கர்த்தர் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிருக்கிறார் என்று யோபுவின் புத்தகம் நமக்குக் கற்பிக்கிறது.

யோபுவின் அனுபவம், கர்த்தரின் பரிபூரண குமாரனாகிய இயேசு இவ்வலகில் அவதரிக்க வழி வகுத்தது. அவர் தனது சொந்த பாவங்களுக்காக அல்ல, மாறாக உலகின் பாவங்களுக்காகத் துயரம் அனுபவித்தார்.

யோபின் விஷயத்தில், ''கர்த்தருடைய முடிவான நோக்கம்'' என்ன? 

கர்த்தர் தம்மை இரக்கமும், கனிவான கருணையும் நிறைந்தவராக  வெளிப்படுத்தினார். யோபுவின் அனுபவ பாடத்தில் பிற முடிவுகளும் இருந்தன. கர்த்தர் தனது பரிசுத்தவான்களின் துன்பங்களை ஒரு போதும் வீணாக்குவதில்லை. யோபு கர்த்தரை ஒரு புதிய ஞானம் நிறைந்த வழியில் சந்தித்தார். இறுதியாக, யோபு கர்த்தரிடமிருந்து இரட்டிப்பான ஆசீர்வாதங்களைப் பெற்றார்(யோபு 42:1-6). 

“ஆனால் கர்த்தர் மிகவும் இரக்கமுள்ளவராக இருந்தால், அவர் ஏன் யோபுவை எல்லா துன்பங்களிலிருந்தும் பாதுகாக்கவில்லை?” என்று ஒருவர் வாதிடலாம். ஆம், நிச்சயமாக நமது வரையறுக்கப்பட்ட மனங்களால், கர்த்தரின் செயல்பாட்டை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத பல புதிர்கள் உள்ளன.  ஆனால் உறுதியாகத் தெரியும்: கர்த்தர் மகிமைப்படுத்தப்பட்டார். யோபு இந்த கடினமான அனுபவத்தின் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டார்.

உங்களால் வலியைத் தாங்குவதற்கு முடியவில்லை என்றால், நீங்கள் சகிப்புத் தன்மையைக் கற்றுக்கொள்ள முடியாது. 

இன்று நமக்கு யோபின் கதை என்ன அர்த்தம்? 

வாழ்க்கையின் சில சோதனைகள் சாத்தானின் தூண்டுதலால் ஏற்படுகின்றன என்று புரிந்து கொள்கிறோம். கர்த்தர் தனது பிள்ளைகளைச் சோதிக்கச் சாத்தானை அனுமதிக்கிறார், ஆனால் அவர் எப்போதும் எதிரி சோதிக்கும் சக்தியின் அளவைக் கட்டுப்படுத்துகிறார் (யோபு 1:12; 2:6). 

நீங்கள் நெருப்பைப் போலக் கொதிக்கும் சூழவில் இருக்கும்போது, கர்த்தர் தனது கருணையுள்ள கையை தெர்மோஸ்டாட்டில் வைத்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள்! 

"ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்த பின், நான் பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10).

நாம் கர்த்தர் நடத்தும் வழிகளில் பொறுமையிழந்து, விசுவாசத்தை மறுதலிக்க வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான், ஏனென்றால் பொறுமையற்ற கிறிஸ்தவன் பிசாசின் கைகளில் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். 

யாக்கோபு முதல் அதிகாரத்தின் திருமறை ஆய்விலிருந்து, மோசேயின் பொறுமையின்மை, வாக்களிக்கப்பட்ட புனித தேசத்தில் அவர் நுழைய இயலாத வண்ணம் அவரது வாய்ப்பை தட்டிப் பறித்தது என்பதை நீங்கள் நினைவுபடுத்துவீர்கள்; ஆபிரகாமின் பொறுமையின்மை யூதர்களின் எதிரியான இஸ்மவேல் பிறக்க வழிவகுத்தது; பேதுருவின் பொறுமையின்மை அவரை ஒரு கொலைகாரனாக மாற தூண்டியது. சாத்தான் நம்மைத் தாக்கும்போது, நாம் பொறுமையிழந்து கர்த்தருக்கு முன்னால் ஓடுவதும், அதன் விளைவாகக் கர்த்தரின் ஆசீர்வாதத்தை இழப்பதும் எளிது. 

இதற்குப் பதில் என்ன? "என் கிருபை உனக்குப் போதுமானது" (2 கொரி. 12:7-9)! சரீரத்தில் பவுலின் முள் ஒரு "சாத்தானின் தூதுவர்". பவுல் அதை எதிர்த்துப் போராடியிருக்கலாம், அதன் கீழ் விட்டுக் கொடுத்திருக்கலாம் அல்லது முள் இருப்பதை மறுக்க முயன்றிருக்கலாம்; ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. மாறாக, அவர் தனக்குத் தேவையான கிருபைக்காகக் கர்த்தரை நம்பினார். அவர் சாத்தானின் ஆயுதத்தைத் தனது சொந்த ஆவிக்குரிய வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் ஒரு கருவியாக மாற்றினார். 

நீங்கள் வெப்பம் மிகுந்த சூளையில் இருப்பதாக உணர்ந்தால், உடனே கிருபையின் சிம்மாசனத்திற்கு நேராகச் சென்று, அந்த வேதனையைத் தாங்க வேண்டிய அனைத்து கிருபையையும் கர்த்தரிடமிருந்து பெறுங்கள் (எபி. 4:14-16). இந்த துன்பங்கள் அனைத்திலும் கர்த்தருக்கு ஒரு கிருபையான நோக்கம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர் தமக்குச் சித்தமான காலத்தில் அவரது நாம  மகிமைக்காக அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்பதை நினைவூட்டுங்கள். நீங்கள் விதியின் தாடையில் சிக்கிய இயந்திரம் அல்ல. கர்த்தரின் அன்பான குழந்தை, அவரது ஒரு அற்புதமான திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பாக்கியம் பெற்றவர். இயந்திரத்திற்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது! 

யாக்கோபு 5:12-ல் உள்ள அறிவுரை இந்த தியானப் பகுதிக்குப் பொருத்தம் அற்றதாகத் தெரிகிறது, ஏனெனில் துன்பத்தில் வேதனை அனுபவிப்பதற்கும், ''சத்தியம் செய்வதற்கும்' என்ன சம்பந்தம்? 

நீங்கள் எப்போதாவது கஷ்டப்பட்டிருந்தால், இதற்கான பதில் உங்களுக்குத் தெரியும்: நீங்கள் கடினமான சிரமங்களைச் சந்திக்கும் போது, நீங்கள் சொல்லாத விஷயங்களைப் பேசியதாகப் பிறர் உங்களைக் குறித்துச் சொல்வது எளிது. மேலும் கர்த்தரிடம் பேரம் பேசுவதும் எளிது. ஒரு உதாரணத்திற்கு யோபுவின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தைத் தியானிப்போம். யோபு கூறினார், 

''நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன், நிர்வாணியாய் அங்குத் திரும்புவேன்: கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவும் இல்லை,  தேவனைப் பற்றிக் குறை சொல்லவும் இல்லை" (யோபு 1:21-22). 

யோபு தான் பிறந்த நாளை சபித்தார் (யோபு 3:1), ஆனால் அவர் ஒருபோதும் கர்த்தரைச் சபிக்கவில்லை அல்லது முட்டாள்தனமான சத்தியத்துடன் பேசவில்லை. கர்த்தரிடம் பேரம் பேசவும் முயலவில்லை. 

நம்முடைய கர்த்தர் மலைப் பிரசங்கத்தில் போதித்த போதனையை யாக்கோபு இங்கு நமக்கு நினைவூட்டுகிறார் (மத். 5:34-37) . யூதர்கள் தங்கள் பேச்சை உறுதிப்படுத்த பல்வேறு சத்தியங்களைச் செய்வதில் சாமர்த்தியம் மிக்கவர்கள். இருப்பினும், அவர்கள் கர்த்தர் நாமம்  நிந்திக்கப்படாதபடிக்கு, தங்கள் சத்தியங்களில் கர்த்தரின் பெயரைப் பயன்படுத்தாமல் கவனமாக இருந்தனர். எனவே, அவர்கள் வானத்தின் மீதும், பூமியின் மீதும், அல்லது எருசலேம் மீதும், அல்லது தங்கள் தலைகள் மீதும் சத்தியம் செய்வார்கள்! ஆனால் அப்படிப்பட்ட சத்தியங்களில் கர்த்தரைத் தவிர்ப்பது சாத்தியமில்லை என்று இயேசு கற்பித்தார். பரலோகம் அவருடைய சிம்மாசனம், பூமி அவருடைய பாதப்படி, எருசலேம் “மகா ராஜாவின் நகரம்”. உங்கள் தலையில் சத்தியம் செய்வதைப் பொறுத்தவரை, அது என்ன பயன்? "ஒரு முடியைக் கறுப்பாக்கவோ வெள்ளையாக்கவோ முடியாது" (மத். 5:36).

ஒருவர்  உண்மையான கிறிஸ்தவ நற்குணம் உடையவர் என்பதைக் காண்பிக்க சில வார்த்தைகள் போதுமானது என்பது ஒரு அடிப்படைக் கோட்பாடு. 

நம்மை நம்ப வைக்கப் பல வார்த்தைகளை (சத்தியங்கள் உட்பட) பயன்படுத்தும் நபர் தனது குணத்தில் ஏதோ தவறு இருப்பதை மறைக்க, இந்த சத்தியங்களைப் பயன்படுத்தி தனது பலவீனத்தை மறைத்து நம்மை நம்ப வைக்க முயல்கிறார். 

நீங்கள் ஒரு உண்மையான கிறிஸ்தவராக, நேர்மையுடன் இருந்தால், நீங்கள் சொல்ல வேண்டியது எல்லாம் ஆம் அல்லது இல்லை, மக்கள் உங்களை நம்புவார்கள். இதைவிட மேலானது தீமையிடமிருந்து வரும் என்று இயேசு நம்மை எச்சரித்தார். 

துன்பத்தின் முக்கிய  நோக்கங்களில் ஒன்று விசுவாசியிடம் நற்குணத்தை உருவாக்குவது. ஆம் நிச்சயமாக.

யோபு துயர நெருப்பின் வழியாகச் சென்ற சிறந்த மனிதராக இருந்தார். (யாக்கோபு இந்த செயல்முறையை நமக்கு  யாக்கோபு 1:2-12 பகுதியில் விளக்கினார்,) 

வார்த்தைகள் நற்குணத்தின் அடையாளம் என்றால், சத்தியம் செய்வது, இன்னும் நம் வாழ்வில் மாற வேண்டிய பகுதிகள் இருப்பதைக் குறிக்கிறது. பேதுரு பணிப்பெண்ணிடம் சத்தியமாகத் தெரியாது எனக் கூறி முற்றத்தில் சபித்த போது (மத். 26:71), அவருடைய குணம் இன்னும் மாற வேண்டிய தேவை இருக்கிறது என்பதற்கு அது ஆதாரமாக உள்ளது. 

இந்த பகுதியை நீங்கள் மதிப்பாய்வு செய்யும்போது, அதன் நடைமுறைத் தன்மையை நீங்கள் காணலாம். துன்ப காலங்களில் பொறுமையோடு விசுவாசத்தைக் காத்துக் கொள்ளும்படியாக நம்மை யாக்கோபு ஊக்குவிக்க விரும்பினார். 

ஒரு விவசாயியைப் போலவே, ஆன்மீக அறுவடைக்காக, கர்த்தரை மகிமைப்படுத்தும் கனிகளைக் கொடுக்க காத்திருக்கிறோம். 

தீர்க்கதரிசிகளைப் போலவே, நாமும் கர்த்தரின் உண்மையைப் பகிர்ந்து கொள்ள, சாட்சி நிறைந்த வாழ்க்கை வாழும் வாய்ப்புகளைத் தேடுகிறோம். 

யோபுவைப் போலவே, கர்த்தர் தம்முடைய அன்பான நோக்கத்தை நம்மில் நிறைவேற்றுவதற்காகக் காத்திருக்கிறோம், அவர் ஒருபோதும் தம் பிள்ளைகளைத் தேவையில்லாமல் துன்பப்படுத்த மாட்டார் என்பதை அறிந்திருக்கிறோம். யோபுவைப் போலவே, நாமும் இறைவனைப் பற்றிய தெளிவான பார்வையைப் பெறுவோம். துன்பத்தின் சூளையிலிருந்ததால் அவரை நன்றாக அறிந்து கொள்வோம். 

"பொறுமையாயிருங்கள், கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது!"


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.


சனி, 12 ஆகஸ்ட், 2023

யாக்கோபு 5: 1-6

அத்தியாயம் பதினொன்று (யாக். 5: 1-6)

பணம் பேசுகிறது Money Talks.


அவர் பிரச்சனைகளில் ஜெபிக்கிறார் (5:1–9):

பணம் பேசினால், அது என்னோடு எப்போதும் சொல்வது எல்லாம், “போய் வருகிறேன் (Goodbye)” என்றார் ஒரு பிரபல நகைச்சுவை நடிகர்.

ஆனால், யாக்கோபு குறிப்பிடும் இந்த விசுவாசிகளிடத்தில், பணம் அவ்விதமாக ''போய் வருகிறேன்'' எனச் சொல்லவில்லை. இந்த மனிதர்கள் மிகப் பெரிய செல்வந்தர்கள், ஆனால் அந்த செல்வத்தைப் பாவம் செய்து சம்பாதித்தனர். அதைச் சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினர். அத்துடன் தங்களது செயல்கள் மூலமாக ஏழைகளைத் துன்புறுத்தினர்.   

யாக்கோபு 5ம் அதிகாரத்தின் மையக் கருப்பொருள்களில் ஒன்று "பாதிக்கப்பட்டவர்கள்". உரிய ஊதியம் பெறாமல் பாதிக்கப்பட்ட ஏழை மக்களையும் (யாக். 5:4), உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களையும் (யாக். 5:13-16), ஆவிக்குரிய வகையில் பின் மாற்றம் அடைந்து பாதிக்கப்பட்டவர்களையும் (யாக். 5:19-20) இந்த பகுதியில் சந்திக்கிறோம்.

அடுத்ததாக இந்த அதிகாரத்தின் மற்றும் ஒரு பேசுபொருள் "ஜெபம்." ஏழை கூலியாட்கள் தேவனை நோக்கிக் கூப்பிடுகிறார்கள் (யாக். 5:4). நோயுற்றவர்களும், துன்பப்படுபவர்களும் ஜெபிக்க வேண்டும் (யாக். 5:13-16). ஜெபத்தில் நம்பிக்கை கொண்டவருக்கு எலியாவை உதாரணமாக யாக்கோபு சுட்டிக் காட்டினார் (யாக். 5:17-18).  

இந்த இரண்டு கருப்பொருள்களையும் இணைத்துத் தியானிக்கும்போது, ஒரு​​முதிர்ச்சி நிறைந்த கிறிஸ்தவரின் ஐந்தாவது பண்பை நீங்கள் அடைகிறீர்கள்: அவர் பிரச்சனைகளின் மத்தியிலும் ஜெபிக்கிறவர். 

ஒரு முதிர்ச்சி அடைந்த விசுவாசி, பிரச்சனைகள் வரும்போது விட்டுக் கொடுக்காமல், கர்த்தரின் பாதத்தில் அமர்ந்து, ஜெபத்துடன், அவரது தெய்வீக கிருபையை நாடுகிறார். முதிர்ச்சி அடையாத நபர், தனது சொந்த அனுபவம் மற்றும் திறமையை நம்புகிறார்,  இல்லையெனில் மற்றவர்களிடம் உதவிக்காக ஓடுகிறார். 

பெரும்பாலான சமயங்களில் மற்றவர்களின் கைகள் வழியாகத் தான் நமது தேவைகளைக் கர்த்தர் பூர்த்தி செய்கிறார் என்பது உண்மைதான் என்றாலும், இத்தகைய உதவிகள் ஜெபத்தின் விளைவாகத் தான் இருக்க வேண்டும்.  

இந்தப் பகுதியில் செல்வந்தராக இருப்பது பாவம் என்று யாக்கோபு சொல்லவில்லை. ஆபிரகாமும் ஒரு மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார். ஆனாலும், அவர் தேவனுடன் நடந்து, உலகம் முழுமைக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்படியாக கர்த்தரால் பெரிதும் பயன்படுத்தப்பட்டார். ஆக இங்குப் பணக்காரர்களின் சுயநல மோகத்தைக் குறித்து யாக்கோபு பாரம் கொண்டிருந்தார். ஆகையால் அவர்கள் "அலறி அழுது புலம்புமாறு" அறிவுரை வழங்கினார். அந்த அறிவுரைக்கு ஆதாரமாக மூன்று காரணங்களைக் கூறினார்.  

அவர்கள் செல்வத்தைப் பெற்ற விதம்: The way they got their wealth (5:4, 6)

செல்வம் சேர்ப்பது தவறு எனத் திருமறை தடை செய்யவில்லை. மோசேயின் சட்டத்தில், செல்வத்தை அடைவதற்கும், அதைப் பாதுகாப்பதற்கும் குறிப்பிட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. யூதர்கள் கானானில் வசித்த போது, தங்களுக்கென சொந்தமாக நிலங்களை, உடைமைகளை வைத்திருந்தார்கள். அதில் வேலை செய்து, அதன் விளைச்சலால் அவர்கள் பயனடைந்தார்கள். ஆண்டவரும் தமது பல உவமைகளில், ஒருவருக்கு உள்ள சொத்து மற்றும் அதனால் கிடைக்கும் ஆதாயத்திற்கான மரியாதையைச் சுட்டிக் காட்டினார். நிருபங்களிலும் தனி நபர் சொத்து சேர்ப்பதற்கு எதிராகவோ அல்லது இலாபம் அடைவது தவறு எனச் சுட்டிக் காட்டும் கட்டளைகள் எதுவும் இல்லை.

ஆனால் சட்டவிரோதமான வழிகளில் செல்வம் சம்பாதிப்பதையும், அதைத் தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதையும் திருமறை கண்டனம் செய்கிறது

ஏழைகளைக் கொள்ளையடித்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட செல்வத்தை, சுயநல ஆடம்பரத்திற்காகப் பயன்படுத்திய மேல்மட்ட பணக்கார வர்க்கத்தினர்க்கு எதிரான நியாய தீர்ப்பின் செய்தியை ஆமோஸ் தீர்க்கதரிசி முழங்கினார். ஏசாயாவும், எரேமியாவும் பணக்காரர்களின் சுயநலத்தை அம்பலப்படுத்தி நியாயத்தீர்ப்பு வரப்போகிறது என்று எச்சரித்தார்கள். இதே உணர்வில் தான் யாக்கோபும் எழுதினார். இந்த பகுதியில் பணக்காரர்கள் தங்களது செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தார்கள் என்பதற்கு அவர் இரண்டு எடுத்துக் காட்டுகளைக் கொடுத்தார்.

ஊதியத்தைக் கொடுக்காமல் நிறுத்தி வைத்தல் : Holding Back wages (வச. 4).

தினசரி ஊதியம் எனும் அடிப்படையில் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனாலும், அவர்களது முதலாளிகளுடன் எந்தவித சட்ட ஒப்பந்தங்களும் அவர்களுக்கு இல்லை. மத்தேயு 20:1-16 இல் உள்ள வேலையாட்களின் உவமை அன்றைய ஒப்பந்த அமைப்பைப் பற்றிய சில நடைமுறைகள் குறிப்பைத் தருகிறது. ஆனால், உழைக்கும் மனிதனை ஒடுக்கும் முதலாளியிடமிருந்து பாதுகாப்பதற்காக, கர்த்தர் அவர்களுக்கு நியாயப்பிரமாண சட்டத்தின் வழியாக சில திட்டவட்டமான வழிமுறைகளை வழங்கினார்.  

''உன் சகோதரர் அல்லது, உன் தேசத்தில் இருக்கிற உனது ஊரில் வசிக்கிற அந்நியரில் ஒருவனாக இருந்தாலும் சரி, அந்த ஏழையும் எளியவனுமான கூலி வேலைக்காரனை நீ ஒடுக்காதே. அவன் வேலை செய்த நாளின் சூரியன் மறையும் முன்னே அவனுடைய கூலியைக் கொடுத்து விடு; அவன் ஏழையாய் இருக்கிறான். அவன் சம்பளத்தின் மேல் ஆவலாய் இருக்கிறான். நீ அதைக் கொடுக்காவிட்டால் அவன் உனக்கு விரோதமாகக் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவான். அது உனக்குப் பாவமாகிவிடும்'' (உபா. 24:14-15).

''உன் அயல் வீட்டில் வசிப்பவரை ஒடுக்காதே, அவனைக் கொள்ளையடிக்காதே. கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம் மட்டும் உன்னிடத்தில் இருக்கக்கூடாது'' (லேவி. 19:13).

''அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினால் தன் மேல் அறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலி கொடாது, அவனை சும்மா வேலை கொள்ளுகிறவனுக்கு ஐயோ'' (எரே 22:13).

இந்த பணக்காரர்கள் வேலையாட்களை வேலைக்கு அமர்த்திக் குறிப்பிட்ட தொகையைச் சம்பளமாகக் கொடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், அவர்கள் தங்கள் வேலையை முடித்து விட்ட பின்னரும், அவர்களுக்கு  ஊதியம் வழங்கப்படவில்லை. இங்குப் பயன்படுத்திய கிரேக்கச் சொல்லின்படி "பிடிக்கப்பட்டு" என்ற வினைச்சொல்லின் காலம், ஒருபோதும் அந்த கூலி வேலையாட்களுக்குச் சம்பளம் தரப்படாது என்பதைக் குறிக்கிறது. 

''களவு செய்யாதிருப்பாயாக" என்பது இன்றைக்கும் தேவசட்டம். அது தேவன் செயல்படுத்தும் நியாயப்பிரமாணம். கிறிஸ்தவர்களாகிய நாம், செலுத்த வேண்டிய கடன்கள், வரிகளைத் திரும்பச் செலுத்துவதில் உண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இரட்சிக்கப்படாத உலக மனிதர்களிடம் கடன் பெற்று, அதைத் திரும்பச் செலுத்தாது ஏமாற்றும் கிறிஸ்தவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, ஒரு போதகராக நான் வெட்கப்படுகிறேன். 

ஒருமுறை நான் மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது எனது மருத்துவ நண்பரைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது. 

"பணிகள் எப்படி நடக்கிறன?" 

அவர் பதிலளித்தார், "ஓ, எல்லாம் சிறப்பாகச் செல்கிறது என்று நினைக்கிறேன்." 

அவரை ஊக்கப்படுத்தும் விதமாக "நான் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்," என்றேன்.

அவர் மறுமொழியாக, "அதற்காக நான் நன்றி சொல்கிறேன், ஆனால் என்னிடம் கடன் வாங்கி இருக்கும் எல்லா மக்களுக்காகவும் ஜெபம் செய்யுங்கள். அவர்கள் வாங்கிய கடன் பணத்தைத் திரும்பக் கொடுத்தால், அது எனக்கு மிக உதவியாக இருக்கும்!"

நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்துதல்Controlling the Courts (. 6a).

பொதுவாகச் செல்வம் உள்ளவர்கள், தாங்கள் விரும்பியதைப் பெறும் அரசியல் அதிகாரத்தையும் பெற்றிருப்பார்கள். ஒரு காமிக் புத்தகத்தில் உள்ளதொரு கதாபாத்திரம் கேட்டது.

"தங்க விதி என்றால் என்ன?" (What is the Golden Rule?)

"தங்கம் உள்ளவர் விதிகளை உருவாக்குகிறார்!"  (Whoever has the Gold makes the rules).

யாக்கோபு சொன்னார், "செல்வந்தர்கள் அல்லவோ உங்களை ஒடுக்கி, நியாயாசனங்களுக்கு முன்பாக இழுத்தார்கள் அல்லவா?" (யாக்கோபு 2:6).

வாட்டர்கேட் (Water Gate) என்ற பெயரைச் சொன்னால், அழகான விடுதி யாருக்கும் நினைவுக்கு வராது. அமெரிக்க வரலாற்றின் ஒரு அசிங்கமான அத்தியாயத்தை அந்த வார்த்தை நமக்கு நினைவுபடுத்துகிறது. இது பொய்களை வெளியரங்கமாக்கி, அமெரிக்க ஜனாதிபதி பதவி விலகுவதற்கும் வழிவகுத்தது. அந்த காலத்தில் நீதிக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் சட்டங்கள் கையாளப் படுவதாக இரு தரப்பும் மாறி மாறி ஒருவர் மேல் மற்றவர் குற்றம் சாட்டினர்.

தேவன் இஸ்ரவேலை ஸ்தாபித்தபோது, ​​மக்களுக்கு ஒரு நீதிமன்ற அமைப்பைக் கொடுத்தார் (உபா. 17:8-13). பேராசை கொள்ளாதே என்று நீதிபதிகளை எச்சரித்தார் (யாத். 18:21). நியாயாதிபதிகள் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது (லேவி. 19:15). அவளுடைய தேசத்தில் எந்த நீதிபதியும் பொய்ச் சாட்சியத்தைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது (உபா. 19:16-21). லஞ்சம் வாங்குவது கர்த்தரால் கண்டனம் செய்யப்பட்டது (ஏசா. 33:15; மீகா. 3:11-12; 7:3). தீர்க்கதரிசியான ஆமோஸ் லஞ்சம் வாங்கிய நீதிபதிகளையும் "வழக்குகளில் நியாயம் புரட்டப்படுவதையும்" கண்டித்தார் (ஆமோஸ் 5:12, 15).

யாக்கோபின் நாட்களில் போதுமான பணம் இருந்தால், உங்களால் நீதிமன்றங்களை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். ஏழைத் தொழிலாளர்களிடம் வசதி இல்லை. அவர்களால் அதிக செலவு பிடிக்கும் வழக்குகளை நடத்த முடியவில்லை, எனவே ஒவ்வொரு முறையும் அவர்கள் அடிக்கப்பட்டனர். தொழிலாளர்களிடம் நியாயம் இருந்தது, ஆனால் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. மாறாக, அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அழிக்கப்பட்டனர். (யாக். 4:2 இல் "கொலை செய்தும்" என்பதைப் பணக்காரர்கள், ஏழை எளியவர்களை அவர்கள் இறந்து போகும் அளவுக்கு ஒடுக்க முடியும் என உருவக வழியில் புரிந்து கொள்ள வேண்டும்). ஏழையால் பணக்காரனை எதிர்க்க முடியவில்லை. அவனிடம் போரிட எந்த ஆயுதமும் இல்லை. அவரால் செய்ய முடிந்ததெல்லாம், நீதிக்காக இறைவனைக் கூப்பிடுவது மட்டும்தான்.

சட்டவிரோதமான வழிகளில் செல்வத்தைச் சேர்ப்பது, அதைப் பாதுகாப்பது தவறு எனத் திருமறை நம்மை எச்சரிக்கிறது. 

எல்லா செல்வங்களும் கர்த்தருடையவை (சங். 50:10); அவருடைய நாமம் மகிமை அடைய உதவும்படியாக, அந்த செல்வத்தின் பொறுப்பாளர்களாக இருக்க அவர் நம்மை அனுமதிக்கிறார்.

"வஞ்சனையால் சேர்த்த செல்வம் குறைகிறது, ஆனால் உழைப்பால் சேகரிக்கிறவன் அதைப் பெருக்குகிறான்" (நீதி. 13:11).

"சுறுசுறுப்பும் விடாமுயற்சி உடையவன் கையே செல்வத்தை உண்டாக்கும்" (நீதி. 10:4).

"செல்வந்தனாக வேண்டும் என பிரயாசப்படாதே" (நீதி. 23:4).

நாம் நம் வாழ்வில் கர்த்தருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அப்போது அவர்  நமக்குத் தேவையான அனைத்தையும் அளிப்பதற்கு எப்போதும் கவனமாக இருப்பார்  (மத். 6:33).

செல்வத்தைப் பயன்படுத்திய விதம்: The way the rich used their wealth (வ. 5:3-5)    ~

பாவமான வழியில் செல்வத்தைச் சேர்ப்பது மோசம், ஆனால் அந்தச் செல்வத்தை உல்லாசமான வழிகளில் வாழப் பயன்படுத்துவது அதை விட அதிக பாவம். 

செல்வத்தைக் குவித்தனர்: They Stored it up (வ. 3). 

சேமிப்பது நிச்சயமாகப் பாவம் கிடையாது. 

"ஏனெனில், பெற்றோருக்குப் பிள்ளைகள் அல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும்" (2 கொரி. 12:14).

"ஒருவன் தன் சொந்த மக்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரிக்காது போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருக்கிறான்" (1 தீமோ. 5:8).

"அப்படியானால், நீ என் பணத்தை வங்கியில் போட்டிருக்க வேண்டும்; அப்போது நான் வரும்போது எனது பணத்தை வட்டியுடன் திரும்பப் பெற்றிருப்பேனே" (மத். 25:27).

ஆனால், உங்களிடம் பணி புரியும் ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தைக் கொடாது, அந்த பணத்தைச் சேமித்து வைப்பது தவறு. இந்த செல்வந்தர்கள் தானியம், தங்கம் மற்றும் ஆடைகளைப் பதுக்கி வைத்திருந்தனர். இந்த உடைமைகள் தங்களிடம் இருந்ததால் தாங்கள் பணக்காரர்கள் என்று நினைத்தார்கள். தங்களுடைய செல்வத்தைக் கர்த்தரின் மகிமைக்காகப் பயன்படுத்துவதன் மூலம் பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேமித்து வைப்பதற்குப் பதிலாக, சுயநலத்துடன் தங்கள் பாதுகாப்பிற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் அதைப் பாதுகாத்தனர் (மத். 6:19.). யாக்கோபு இந்தக் கடிதத்தை எழுதிய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, எருசலேம் ரோம வீரர்களிடம் வீழ்ந்தது. இவர்கள் திரட்டிய அனைத்து செல்வங்களும் கைப்பற்றப்பட்டது.

உங்கள் பொக்கிஷங்களைப் பரலோகத்தில் சேர்த்து வையுங்கள்” என ஆண்டவராகிய இயேசு கூறியதன் அர்த்தம் என்ன? 

அந்த பணக்கார வாலிபனுக்கு அறிவுறுத்தியபடி நாம் "எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்" என்று அவர் கூறியதாகப் புரிந்து கொள்ள வேண்டுமா? நான் அப்படி நினைக்கவில்லை. அந்த வாலிபனுக்குச் செல்வத்தின் மீது அதீத இச்சையும், பற்றும் இருந்தது. அது அவனைத் தூண்டும் பாவமாக  இருந்ததால், அதை அவனுக்கு வெளிப்படுத்த விரும்பினார். 

பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்ப்பது என்பது நம்மிடம் உள்ள அனைத்தையும், கர்த்தரது செல்வங்களாகக் கருதி, அதன் பொறுப்பாளர்களாக அதைப் பயன்படுத்துவது ஆகும். நீங்களும் நானும் பல பொருட்களை வைத்திருக்கலாம், ஆனால் அவை நம்முடையவை அல்ல. எல்லாவற்றுக்கும் கர்த்தர் சொந்தக்காரர்,  நாம் அவருடைய ஊழியர்கள். நாம் வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் வெறும் பொருட்கள் மட்டுமே. கர்த்தரின் விருப்பத்தைச் செய்வதே பிரதானம். 

நாம் அவருடைய சித்தத்திற்கு அடிபணிந்து, அவர் நமக்குக் கொடுத்ததை அவரது சேவைக்குப் பயன்படுத்தும்போது, ​​ நம் செயல்கள் பொக்கிஷங்களாக மாறுகிறது. நாம் நித்தியத்தில் முதலீடு செய்கிறோம். நாம் பூமியில் செய்வது பரலோகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, கர்த்தர் அதைத் தனது ஞாபக புத்தகத்தில் குறித்து வைத்து பதில் அளிக்கிறார்.

ஆனால் இன்றோ, “தங்களது பொக்கிஷங்களைப் பரலோகத்தில் சேமித்து வைப்பதற்கு” பதிலாக, “கடைசி நாட்களுக்காகச் செல்வங்களைக் குவிப்பதை” பார்ப்பது எவ்வளவு சோகம். திருமறை சேமிப்பது அல்லது முதலீடு செய்வதை ஊக்கப்படுத்துகிறது; ஆனால் அது பதுக்கல்களைக் கண்டிக்கிறது.

பிறர் பயனடையாமல் தடுத்தனர்; they kept others from benefiting from it (வ. 4).

''அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டு’’ என்றால், அந்த பணக்காரர்கள் ஏழைகளைக் கொள்ளை அடித்தனர். தங்கள் சொந்த பணத்திலிருந்து ஊதியம் அளிக்க விரும்பவில்லை. தங்கள் வேலையாட்களுக்குக் கூலி கொடுக்காமல், அந்த சொற்ப சம்பளத்தையும் அவர்கள் பெற்று அனுபவிக்கவிடாமல் தடுத்தனர். ஒருவேளை அவர்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொடுக்க காத்திருந்திருக்கலாம்.

நாம் கர்த்தரது செல்வத்தின் பொறுப்பாளர்களாக இருப்பதால், நமது ஆண்டவர் விரும்பும் சில பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அவர் நமக்குக் கொடுப்பதை மற்றவர்களின் நன்மைக்காகவும், அவரது நாம மகிமைக்காகவும் பயன்படுத்த நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். 

"மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனாக இருப்பது அவசியம்" (1 கொரி. 4:2). 

போத்திபாரின் வீட்டில் யோசேப்பு உண்மையுள்ள ஊழியராக இருந்தார். போத்திபார் செழித்தோங்கினார். கர்த்தர் நமக்கு அளித்த செல்வத்தைப் பிறருக்கு உதவியாக இருக்கும் படியாக நாம் பயன்படுத்தப் பல வழிகள் உள்ளன.

ஆடம்பரமாக வாழ்ந்தனர்: They Lived in Luxury (வ. 5).

"நீங்கள் பூமியில் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்" (யாக் 5:5). ஆடம்பரம் வீணான குப்பை. குப்பை பாவம்.

எண்ணெய் வளம் நிறைந்த தேசத்தை ஆட்சி செய்த ஒரு மன்னரின் கேளிக்கையான வணிகம் பற்றி ஒரு பத்திரிக்கை விளம்பரத்தில் வாசித்தேன். அவர் தனது பத்தொன்பது மனைவிகளுக்காக, பத்தொன்பது காடிலாக்ஸ் (Cadillacs) காரை வாங்கினார். அந்த வாகனங்களை மேலும் சொகுசாக மேம்படுத்தக் கூடுதல் பணம் செலுத்தினார். அவர் மேலும் இரண்டு போர்ஷ்கள் (Porsches), ஆறு மெர்சிடிஸ் (Mercedes), $40,000 மதிப்பிலான வேகப் படகு மற்றும் அதை எடுத்துச் செல்வதற்காக ஒரு பெரிய வாகனத்தையும் வாங்கினார். அத்துடன் பதினாறு குளிர்சாதனப் பெட்டிகள், $47,000 மதிப்புள்ள பெண்களுக்கான அழகுப் பொருட்கள், இரண்டு புளோரிடா மாகான திராட்சைப்பழ மரங்கள், இரண்டு சாய்வு நாற்காலிகள் மற்றும் ஒரு துளை இயந்திரம் ஆகியவற்றையும் இந்த பட்டியலில் சேர்க்கவும். அவரது மொத்த செலவு $1.5 மில்லியன் ஆகும். அவை எல்லாவற்றையும் கொண்டு சேர்ப்பதற்கு மேலும் $194,500 செலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதைக் குறித்துப் பிறர் பேசுவதற்காக!

நமக்கு அருளப்பட்ட வாழ்வின் அருமையான வசதிகளுக்காக நாம் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பழைய கற்கால வாழ்க்கை முறைமைகளுக்குத் திரும்புவதற்கு நாம் நிச்சயமாக விரும்ப மாட்டோம். ஆனால், வாழ்க்கையில் நமது வருமானம் குறையும் ஓர் நாள் வரும் என்கிற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

"உனக்கு என்ன தேவை என்று என்னிடம் சொல், அது இல்லாமல் எப்படி வாழ்வது என்பதை நான் உனக்கு கற்றுத் தருகிறேன்." என்று தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் குவாக்கர் கூறினார்.

இயேசு சொன்னார், ''பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், பேராசையின் எல்லா வடிவங்களுக்கும் எதிராக எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவரிடம் எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும், அது அவருடைய ஜீவன் அல்ல" (லூக்கா 12:15 ).

யாக்கோபு குறிப்பிடும் இந்த பணக்காரர்கள், தங்கள் செல்வங்களைக் கொண்டு தங்களை தாங்களே போஷித்து, ஆனால் நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இங்கு யாக்கோபு பயன்படுத்திய கிரேக்க வார்த்தையானது கால்நடைகள் உணவுக்காகக் கொழுக்க வைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதைச் சித்தரிக்கிறது.

கர்த்தர் நமக்குக் கொடுத்ததை அனுபவிப்பதற்கும் (1 தீமோ. 6:17) மற்றவர்களுக்கு உரியதை எடுத்து ஊதாரித்தனமாகச் செலவு செய்து உல்லாசமாக வாழ்வதற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. நம்மிடம் உள்ளவை சட்டப்படியும், கர்த்தரின் விருப்பப்படியும் சம்பாதித்திருந்தாலும் கூட, அதைச் சுயநல வாழ்வுக்காக வீணாக்கக் கூடாது. இன்றும் இவ்வுலகில்  பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் அதிகம் உள்ளது.

ஆடம்பரம் நமது நற் பண்புகளை, நல்ல குணங்களை அழிக்கும். ஆடம்பரம் சுய மோகத்தின் ஒரு வடிவம். செல்வமும், நல்ல குணமும் சேர்ந்தால், பல நன்மைகளை உருவாக்க முடியும், ஆனால் சுயநலமும், செல்வமும் சேர்ந்தால், அதன் விளைவு பாவம். 

லூக்கா 16:19-31 இல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து விவரித்த அந்த செல்வந்தரான மனிதரைப் போலவே, யாக்கோபு குறிப்பிட்ட இந்த பணக்காரர்களும் தங்களது உலக வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டதாக எண்ணி மகிழ்ந்திருப்பார்கள்!

அவர்களுடைய செல்வங்கள் என்ன செய்யும்: what their riches will do (வ 5:1–4)

பணக்காரர்கள் தங்கள் செல்வத்தின் காரணமாக வசதியான வாழ்க்கையை அனுபவிப்பதாக நினைத்தார்கள், ஆனால் கர்த்தரோ அதை வேறுவிதமாக நினைத்தார். 

"உங்கள் மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்" (யாக். 5:1). 

செல்வத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து இங்கு யாக்கோபு விவரித்தார்.

செல்வங்கள் மறைந்துவிடும்: Riches will vanish (வ. 2-3).

தானியங்கள் அழுகி வீணாகும்; பொன்னும், வெள்ளியும் துருப்பிடிக்கும்; மற்றும் ஆடைகள் பொட்டரித்து போகும் (யாக் 5:2). இந்த உலகில் எந்தப் பொருளும் நிரந்தரமாக இருக்காது. மரணம் மற்றும் சிதைவின் விதைகள் அனைத்து படைப்புகளிலும் காணப்படுகின்றன. செல்வத்தில் பாதுகாப்பு இருப்பதாக நினைப்பது பெரும் தவறு.

பவுல் எழுதினார், "இந்த உலகத்தில் ஐசுவரியமுள்ளவர்கள் கர்வப்படாமலும்,  நிச்சயமற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்காமலும் இருக்கும்படி அறிவுறுத்து" (1 தீமோ. 6:17).

செல்வங்கள் நிச்சயமற்றவை. பண வர்த்தகம் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது, பங்குச் சந்தையும் ஏற்ற இறக்கமாக இருக்கிறது. உண்மையில் தங்கம், இரும்பைப் போலத் துருப்பிடிக்காது, ஆனால் சொல்ல வந்த கருத்து; தங்கம் அதன் மதிப்பை இழக்கிறது.

அத்துடன் வாழ்க்கை சுருக்கமானது, எந்தவொரு செல்வத்தையும்  நாம் மரிக்கும் போது உடன் எடுத்துச் செல்ல முடியாது என்கிற உண்மையையும் மறக்கக்கூடாது.

இந்த உலகப் பொருட்களுக்காக வாழ்வது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நீங்கள் பார்க்கலாம். தேவன் ஐசுவரிய வானிடம், “மதிகேடனே, இந்த இரவில் உன் ஆத்துமா உன்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டால்,  நீ சேகரித்தவை யாருடையவை ஆகும்?” என்றார். (லூக்கா 12:20).

உல்லாச வாழ்க்கை நற்பண்புகளை அழிக்கின்றன: Misused riches erode character (வச. 3).

"அவைகள் உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாகி, உங்கள் சதையை நெருப்பைப் போலத் தின்னும்" (யாக். 5:3). 

இது இப்போது செல்வந்தர்கள் அடையும் தீர்ப்பு: செல்வத்தின் விஷம் எனும் கொடும் தீமை அவர்களைத் தொற்றிக்கொண்டு, அவர்கள் உயிரை உண்கிறது.

பணம் பாவம் அல்ல; அது நடுநிலையானது. ஆனால் "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது" (1 தீமோ. 6:10). 

"இச்சியாதிருப்பாயாக" என்பது பத்துக் கட்டளைகளில் கடைசிக் கட்டளை, ஆனால் அது மிகவும் ஆபத்தானது.

ஒரு  மனிதனைப் பேராசை பிடித்தால், அது அவனை மற்ற ஒன்பது கட்டளைகளையும் உடைத்து விடச் செய்யும். 

ஆபிரகாம் மிகப் பெரிய செல்வந்தர், ஆனால் அவர் தனது விசுவாசத்தையும், நற்குணத்தையும் இறுதிவரை பேணினார். ஆனால், லோத்து பணக்காரர் ஆனபோது, ​​அது அவரது குணத்தை அழித்து, இறுதியில் அவரது குடும்பத்தையே அழித்தது. உங்கள் மனதைச் செல்வம் ஆட்சி செய்யாமல், அது உங்கள் கையில் இருப்பது நல்லது.

"செல்வம் பெருகினால், அவைகளில் மனதை வைக்காதே" (சங். 62:10).

"மிகுந்த செல்வத்தைவிட நற்பெயர் தெரிந்து கொள்ளப்படத்தக்கது; பொன், வெள்ளியைவிட  தயவே நலம்" (நீதி. 22:1)."

நியாயத்தீர்ப்பு  உறுதி: Judgement is a certainty (வ. 3, 5).

யாக்கோபு தற்போதைய தீர்ப்பை மட்டும் பார்க்கவில்லை, (அவர்களின் செல்வம் அழிந்து வருகிறது, அவர்களின் குணமும் அழிகிறது), அத்துடன், கர்த்தருக்கு முன்பாக அவர்களது எதிர்கால தீர்ப்பையும் பார்த்தார். இயேசு கிறிஸ்து நியாயாதிபதியாக இருப்பார் (யாக். 5:9), அவருடைய நியாயத்தீர்ப்பு நீதியாக இருக்கும். அந்த நியாயத்தீர்ப்பு நாளில் கர்த்தர் சாட்சிகளையும் அழைப்பார் என்பதைக் கவனியுங்கள். முதலாவதாக, பணக்காரர்களின் செல்வம் அவர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும் (யாக் 5:3). அவர்களுடைய அழுகிய தானியங்களும், துருப்பிடித்த தங்கமும் வெள்ளியும், அந்துப்பூச்சி உண்ட ஆடைகளும் அவர்களுடைய இதயத்தின் சுயநலத்திற்குச் சாட்சியாக இருக்கும். இங்கே ஒரு சிறிய நகைமுரண் உள்ளது: பணக்காரர்கள் அவர்களுக்கு உதவும் என நம்பி தங்கள் செல்வத்தைச் சேமித்தனர், ஆனால் அவர்களின் பதுக்கப்பட்ட செல்வம் அவர்களுக்கு எதிராக மட்டுமே சாட்சி அளிக்கும். அவர்கள் கொடுக்காமல் வைத்திருந்த கூலி நீதிமன்றத்திலும் அவர்களுக்கு எதிராகச் சாட்சி கொடுக்கும் (யாக். 5:4).

ஆம் பணம் பேசுகிறது! இந்த திருடப்பட்ட சம்பளங்கள் நீதிக்காகவும், தீர்ப்புக்காகவும் இறைவனிடம் முறையிடுகின்றன. ஆபேலின் இரத்தம் தரையிலிருந்து கூக்குரலிட்டதைக் கர்த்தர் கேட்டார் (ஆதி. 4:10). இந்த திருடப்பட்ட பணமும் கூக்குரலிடுவதைக் கேட்கிறார். வேலையாட்களும் அவர்களுக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள் (யாக். 5:4). இங்குச் சாட்சிகளுக்கோ, நீதிபதிக்கோ லஞ்சம் கொடுப்பதற்கு, பணக்காரர்களுக்கு வாய்ப்புகள் இருக்காது. 

தம்முடைய ஒடுக்கப்பட்ட மக்களின் கூக்குரலைக் கர்த்தர் கேட்கிறார். அவர் நீதியுடன் நியாயந்தீர்ப்பார். இந்தத் தீர்ப்பு ஒரு தீவிரமான விஷயம். தொலைந்து போனவர்கள் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தில் கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்பார்கள் (வெளி. 20:11-15). இரட்சிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்பார்கள் (ரோமர். 14:10-12; 2 கொரி. 5:9-10). தேவன் நம்முடைய பாவங்களை நியாயந்தீர்க்க மாட்டார், ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே சிலுவையில் நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் அவர் நம்முடைய செயல்களையும் நமது ஊழியத்தையும் நியாயந்தீர்ப்பார். நாம் அவருக்குச் சேவை செய்வதிலும் மகிமைப்படுத்துவதிலும் உண்மையுள்ளவர்களாக இருந்திருந்தால், நாம் ஒரு வெகுமதியைப் பெறுவோம்; நாம் துரோகம் செய்திருந்தால், நம்முடைய வெகுமதியை இழப்போம், ஆனால் நம் இரட்சிப்பை இழப்போம் (1 கொரி. 3:1-15).

ஒரு பொன்னான வாய்ப்பை இழத்தல்: The Loss of a precious opportunity (வ. 3).

"கடைசி நாட்கள்" என யாக்கோபு சொல்வது, கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது என்ற அவரது நம்பிக்கையைக் குறிக்கிறது (யாக். 5:8-9). நாம் "காலம் தரும் வாய்ப்பை நன்கு பயன்படுத்துக் கொள்ள வேண்டும்" (எபே. 5:16). இது பகல் காலம். நாம் வேலை செய்ய வேண்டும் (யோவான் 9:4). 

அந்த பதுக்கி வைத்த செல்வத்தைக் கொண்டு, அந்த சபையின் செல்வந்தர்கள் சாதித்திருக்கக்கூடிய நல்ல செயல்களை நினைத்துப் பாருங்கள். அங்கு உதவி தேவைப்பட்ட பல ஏழைகள் இருந்தனர். கூலி பெறுவதற்குத் தகுதியான தொழிலாளர்கள் இருந்தனர் (யாக். 2:1-6). இந்த நிருபம் எழுதப்பட்ட சில வருடங்களுக்குப் பிறகு யூத தேசம் தோற்கடிக்கப்பட்டுச் சிதறடிக்கப்பட்டது. எருசலேம் அழிக்கப்பட்டது.

பணத்தால் வாங்கக் கூடிய சிறந்த பொருட்களை வீட்டில் வைத்திருப்பது நல்லது தான், ஆனால் பணத்தால் வாங்க முடியாத சில பொருட்களும் உண்டு. $500,000 வீடு இருந்தும் நல்ல குடும்பம் இல்லை என்றால் என்ன பயன்? அல்லது உண்மையாக நேசிக்கும் ஒரு மனைவி இல்லையென்றால் மில்லியன் டாலர் வைர மோதிரத்தால் என்ன பிரயோஜனம்? 

யாக்கோபு செல்வங்களையோ பணக்காரர்களையோ கண்டிக்கவில்லை; செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை நல் வாழ்க்கை வாழும் விதமாகக் கட்டப்படுத்துவதற்குப் பயன்படுத்தாமல், அதைத் தவறான ஆயுதமாகப்  பயன்படுத்துவதைக்   கண்டித்தார்

இவ்வுலகில் ஏழையாக வாழ்ந்து, ஆனால் அடுத்த உலகத்தில் பணக்காரராக இருக்க முடியும் (யாக். 2:5). இவ்வுலகில் ஐசுவரிய வான்களாகவும் அடுத்த வரும் உலகத்தில் ஏழையாகவும் இருக்க முடியும் (1 தீமோ. 6:17). 

இயேசுகிறிஸ்துவின் வருகை, சிலரை ஏழைகளாகவும், சிலரைச் செல்வந்தர்களாகவும் மாற்றும். அது அவர்களின் இதயங்களில் மறைந்து காணப்படும் ஆவிக்குரிய நிலையைப் பொறுத்து.

"உன் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உன் இருதயமும் இருக்கும்" (மத். 6:21). 

நாம் எதைப் பிடித்து வைத்துக் கொள்வோமோ, அதை இழக்கிறோம். எதைக்  கர்த்தருக்குக் கொடுக்கிறோமோ, அதைப் பெற்றுக் கொள்கிறோம், மேலும் அவர் அதைக் கூடுதலாக ஆசிர்வதித்துத் தருகிறார். 

நீண்ட நேரம் பிரசங்கம் செய்வதற்குப் பெயர் பெற்ற பிரபல பிரசங்கி ஒருவர், ஆண்டுதோறும் ஏழைகளுக்கு உதவி செய்யச் சேகரிக்கப்படும் “காணிக்கை உதவி சொற்பொழிவை” வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவர் அதிக நேரம் செய்தி அளித்தால், அவர்களால்  கொடுக்கக் கூடிய காணிக்கை அளவை குறைவாகக் கொடுப்பது எனச் சபையார் தீர்மானித்தனர். 

செய்தி அளித்தவர்  நீதிமொழிகள் 19:17-ல் இருந்து வாசித்தார்:

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்;  அவன்  கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.

அவரது பிரசங்கம் உண்மையில் மிகச் சுருக்கமாக இருந்தது: "நீங்கள் இந்த நிபந்தனை விதிமுறைகளை ஏற்றுக் கொண்டால், உங்கள் பணத்தைக் கீழே வைக்கவும்." 

 ஆம், பணம் பேசுகிறது. கடைசி தீர்ப்பில் அது உங்களுக்கு என்ன சொல்லும்?

Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

ஞாயிறு, 30 ஜூலை, 2023

யாக்கோபு 4: 13-17

 அத்தியாயம் பத்து.

முன்னோக்கித் திட்டமிடுங்கள்.

(Plan Ahead)



 

கர்த்தருக்கு எதிராகப் போர் புரிவதைப் பற்றிப் பேசத் துவங்கி, தேவனது சித்தத்துக்குக் கீழ்ப்படிவதன் அவசியதைக் வலியுறுத்தி இந்த நான்காம் அத்தியாயத்தை யாக்கோபு நிறைவு செய்தார். இந்த இரண்டு கருப்பொருள்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. 


ஒரு விசுவாசி தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படியாமல், அதற்கு எதிராகப் போர் புரியும் போது, அவர் சமாதானத்தை உருவாக்குபவராக இல்லாமல், பிரச்சனை செய்யும் மனிதராக மாறுகிறார்.  


லோத்து சோதோமுக்கு இடம் பெயர்ந்ததால் தன் குடும்பத்திற்குள் பிரச்சனையை ஏற்படுத்தினார். தாவீது விபச்சார பாவம் செய்து தன் குடும்பத்துக்கும், தேசத்துக்கும் தொல்லை கொடுத்தார். கர்த்தரது சித்தத்திற்கு யோனா கீழ்ப்படியவில்லை. அதனால் கடல் கடும் கொந்தளிப்படைந்தது. அதில் சிக்கிய புறஜாதியைச் சேர்ந்த கப்பல் மாலுமிகளுக்குக் கடலே கல்லறையாக மாறும் சூழல் உருவானது.

 

இதில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு நிகழ்வையும் ஆராய்ந்து பார்த்தால், அவர்களது மனப்பாங்கு (Attitude), விருப்பம் (desire), செயல்பட்ட விதம் (Action), ஆகியவை கர்த்தரின் விருப்பத்திற்கு எதிராகப் போர் புரியும் வகையிலிருந்தது.  

 

ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் கர்த்தர் ஒரு சிறந்த திட்டத்தை வைத்துள்ளார். இது வெளிப்படையான உண்மை. அவர் ஞானத்தின் தேவன். ஆகவே நம் வாழ்வில் எது நடக்க வேண்டும், அவை எப்படி நடக்க வேண்டும், அது எப்போது  நிகழ வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் அன்பின் தெய்வம்,  எனவே தனது குழந்தைகளுக்கு எது மிகச் சிறந்ததோ அதையே தருபவர். கர்த்தரின் விருப்பம் என்பது அவரது அன்பின் கருணைக்குச் சான்று, ஆனால் பல கிறிஸ்தவர்கள் அப்படி நினைப்பதில்லை. அவரது விருப்பப்படி செய்வதை ஒரு கசப்பான மருந்தாகப் பார்க்கிறார்கள்.

 

ஒரு வாலிபர் மாநாட்டில் இளைஞரொருவர் சற்று குழப்பம் நிறைந்தவராய் என்னிடம் வந்து,


"நான் என் உயிரையும் கர்த்தருக்காகக் கொடுப்பேன், ஆனாலும் எனக்குப் பயமாக இருக்கிறது" என்றார்.


"நீங்கள் எதற்காகப் பயப்படுகிறீர்கள்?".


"கர்த்தர், ஆபத்து நிறைந்த ஒன்றைச் செய்யச் சொல்வாரோ என நான் பயப்படுகிறேன்!"


எனது பதில்: கர்த்தருடைய சித்தத்தைச் செய்வதால் வாழ்க்கையில் ஆபத்து என ஒன்று நிச்சயமாக ஏற்படாது, ஆனால் அவரது விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்டால், உறுதியாக அது ஆபத்தானதுஎந்த இடத்தில் கர்த்தர் உங்களை வைத்திருக்க விரும்புகிறாரோ, அதுவே இந்த உலகில் உங்களுக்கான மிகச் சிறந்த பாதுகாப்பான இடம். 


சில வருடங்களுக்கு முன்பு, என்னுடைய சொந்த ஊழிய பாதையில் ஒரு கடினமான நேரத்தை நான் கடந்து சென்று கொண்டிருந்தேன். அது ஒரு விடுமுறைக் காலம். இது கர்த்தருடைய சித்தம் தானா? என என்னை நானே கேள்விக்குள்ளாக்கிய சூழல் நிலவியது. நான் சங்கீதப் புத்தகத்தைத் தியானித்துக் கொண்டிருந்தேன். ஆண்டவர் எனக்கு சில உறுதியையும், ஊக்கத்தையும், தரும்படியாக ஜெபித்துக் கொண்டு இருந்தேன். அப்போது ​​அந்த விண்ணப்பத்திற்குச் சங்கீதம் 33:11 பதிலாக இருந்தது:


கர்த்தருடைய ஆலோசனை நித்திய காலமாகவும், அவருடைய இருதயத்தின் எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலை நிற்கும்’’.


''கர்த்தரது சித்தம் அவரது இருதயத்திலிருந்து புறப்பட்டு வருகிறது, அவருடைய விருப்பம் அவரது அன்பின் வெளிப்பாடு. ஆகையால் அவரது சித்தத்தைச் செய்வதற்கு நான் பயப்பட வேண்டியது இல்லை!" என எனக்குள் சொல்லிக்கொண்டேன்.


கர்த்தரின் விருப்பத்தை நேசித்து அதன்படி வாழ்வது, எத்தனை பெரிய ஆசீர்வாதம் என்பதைப் புரிந்து கொண்டது, என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.


இந்த திருமறைப் பகுதியில், கர்த்தரின் விருப்பத்தைச் செய்வதில் ஒரு விசுவாசி வெளிப்படுத்தும் மூன்று விதமான அணுகுமுறைகளை யாக்கோபு சுட்டிக்காட்டினார். அவற்றில் ஒன்று மட்டுமே சரியானது. அது ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனக்குள்ளாக வளர்த்துப் பின்பற்ற வேண்டிய ஒன்று.

 

1. கர்த்தரின் விருப்பத்தை அலட்சியம் செய்தல் - Ignoring God’s will (4:13–14, 16)

 

தமது சபையில் உள்ள பணக்கார வணிகர்களுக்காக இந்த பகுதியை யாக்கோபு எழுதியிருக்கலாம். அவர்கள் தங்களது வணிக ஒப்பந்தங்களைப் பற்றி விவாதித்து, எதிர்கால திட்டங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசியிருக்கக் கூடும். அவர்கள் கர்த்தரின் சித்தத்தை நாடியதாகவோ அல்லது சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்காக ஜெபித்ததாகவோ எந்த வித குறிப்புகளும் இல்லை. அவர்கள் தங்களது சொந்த வழி முறைகளைப் பின்பற்றி அதன் வழியாக, தாங்கள் திட்டமிட்ட இலக்கை எத்தனை முறை அடைந்தோம் எனக் கணக்கிட்டு, தங்கள் வாழ்க்கையின் வெற்றியை அளவிட்டார்கள்.


இதன் அடிப்படையில் யாக்கோபு நான்கு வாதங்களை முன்வைத்தார். அது கர்த்தரின் விருப்பத்தை அலட்சியம் செய்வதால் வரும் முட்டாள்தனத்தை உணர்ந்து கொள்ள உதவுகிறது. 


வாழ்க்கை சிக்கலானது – The complexity of life (வ. 13).

 

வாழ்க்கைக்குள் அடங்கி இருக்கும் அனைத்து சம்பவங்களையும் சிந்தித்துப் பாருங்கள்: இன்று -  நாளை (Today-Tomorrow), வாங்குவது – விற்பது (Buying-Selling), லாபம் பெறுவது - அதை இழப்பது (Getting gain-Loss), இங்குச் செல்வது - அங்குச் செல்வது (Going here- Going There) எனும் நிகழ்வுகளால் ஆனது..


அது உறவுகள் மற்றும் ஊர்கள் (Relationships & Places), செயல்பாடுகள் மற்றும் குறிக்கோள்கள் (Activities  & Goals), நாட்கள் மற்றும் வருடங்களால் (Days & years) நிறைந்தது.


நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளிலும் பல முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். இவற்றுள் கர்த்தரின் சித்தத்தைச் செய்வதைத் தவிர, மற்ற முடிவுகள் அனைத்தும் ஒரு புதிர். அந்த முடிவுகள் வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரியாது.


உண்மையில் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய சித்தத்தைச் செய்ய முற்படும்போது, உங்களது ​​வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக மாறத் தொடங்குகிறது. 


உங்களைச் சுற்றியுள்ள இந்த நிதர்சன உலகம் கூட புதிய அர்த்தத்தைப் பெறுகிறது. உங்கள் வாழ்க்கையில் எளிமை (simplicity), இசைவுத்தன்மை  (harmony) உருவாகி, அது தன்னடக்கத்தையும் (poise), நம்பிக்கையையும் (confidence), உருவாக்குகிறது. நீங்கள் இனி புதிரான, அச்சுறுத்தும் பிரபஞ்சத்தில் வாழவில்லை. "இது என் தந்தையின் உலகம்!" என்று நீங்கள் பாடி மகிழலாம்.


வாழ்க்கை நிச்சயமற்றது – The uncertainty of life (வ. 14a).

 

இந்தக் கூற்று நீதிமொழிகள் 27:1-ஐ அடிப்படையாகக் கொண்டதுL


“நாளைய தினத்தைக் குறித்து பெருமை பாராட்டாதே; ஒரு நாள் என்ன கொண்டு வரும் என்று உனக்குத் தெரியாது."

 

இந்த சபையின் தொழிலதிபர்கள் ஒரு முழு வருடத்திற்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தார்கள், ஆனால் தங்களது அடுத்த நாளில் என்ன நிகழும் என்பதைக் கூட முழுமையாக அவர்களால் அறிந்து கொள்ள முடியாது! அவர்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் பேசினார்கள் என்பதைப் பாருங்கள்: “நாங்கள் செல்வோம். ஒரு வருடம் தங்குவோம். வாங்கி விற்று லாபம் ஈட்டுவோம்”. அவர்களின் இந்த மனப்பாங்கு (attitude) லூக்கா 12:16-21 இல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறிய உவமையில் உள்ள செல்வந்தனை நமக்கு நினைவூட்டுகிறது. அந்த மனிதனுக்கு மகத்தான விளைச்சல் கிடைத்தது; அவரது களஞ்சியங்கள் மிகவும் சிறியதாக இருந்தன; ஆகவே அவர் பெரிய களஞ்சியங்களை உருவாக்க முடிவு செய்தார். அதுவே தனது எதிர்காலத்திற்கு அதிக பாதுகாப்பு என நினைத்தார். பின்பு அவர் தனது ஆத்துமாவிடம், ‘ஆன்மாவே, நீ பல வருடங்களாக நிறையப் பொருட்களைச் சேமித்து வைத்திருக்கிறாய்; இளைப்பாறி, புசித்து, குடித்து, களி கூறு” எனச் சொன்னார் (லூக்கா 12:19).


இந்த மனிதனின் பெருமைக்குக் கர்த்தரின் பதில் என்ன? "மதிகேடனே, இந்த இரவில் உன் ஆத்துமா உன்னிடமிருந்து எடுக்கப்பட்டால்" (லூக்கா 12:20).


வாழ்க்கை கர்த்தருக்கு நிச்சயமற்றது அல்ல, ஆனால் அது நமக்கு நிச்சயமற்றது. 


நாம் அவருடைய சித்தத்தின்படி வாழும்போது தான் நாளைய தினத்தைக் குறித்து நம்பிக்கையுடன் இருக்க முடியும், ஏனென்றால் அவர் நம்மை வழி நடத்துகிறார் என்பதை அறிவோம்.


வாழ்க்கை குறுகியது – The brevity of life (v. 14b).

 

வேதத்தில் மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொல்லப்படும் கருப்பொருள்களில் இதுவும் ஒன்று. இது மிக முக்கியமானது. 


நமக்கு வாழ்க்கை நீண்டதாகத் தோன்றுகிறது, அதை ஆண்டுகளில் அளவிடுகிறோம், ஆனால் நித்தியத்துடன் ஒப்பிடுகையில், வாழ்க்கை ஒரு புகை. 


யாக்கோபு, இந்த உதாரண விளக்கக் காட்சியை யோபின் புத்தகத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்தினார். வாழ்க்கை மிகக் குறுகியது என்பதை விளக்க யோபுவின் புத்தகத்தில் பல உருவகங்கள் சித்தரித்திருப்பதை நம்மால் காண முடியும்.

  •  "என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவை விட வேகமானவை" (யோபு 7:6).
  •  "மேகம் பறந்து போகிறது போல" (யோபு 7:9).
  •  "பூமியில் நமது நாட்கள் ஒரு நிழல்" (யோபு 8:9).
  • "இப்போது என் நாட்கள் அஞ்சற்கார் ஓட்டத்திலும் வேகமானவை" (யோபு 9:25), இது செய்திகளை அரசனிடம் அறிவிக்க விரைந்து ஓடிய அரச சேவகர்களைக் குறிக்கிறது.
  • "வேகமாய் ஓடும் கப்பல்களைப் போலவும், இரையின் மேல் பாய்கிற கழுகைப் போலவும் கடந்து செல்கிறது" (யோபு 9:26).
  • "பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு; வருத்தமோ மிகுதி. மலர்போல் பூத்து அவர்கள் உலர்ந்து போகின்றனர்; நிழல்போல் ஓடி அவர்கள் நிலையற்றுப் போகின்றனர். (யோபு 14:1-2).

நாம் ஒவ்வொரு பிறந்தநாளையும் ஆண்டுகளை அளவாக வைத்து அதைக் கணக்கிடுகிறோம், ஆனால் நம் நாட்களை எண்ணும் படியாகக் கர்த்தர் சொல்கிறார் (சங். 90:12). 

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நாளின், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நம்மால் நிச்சயத்துடன் செயல் புரிய முடியும். அந்த நாட்களும் மிக விரைவாக விரைந்து செல்கின்றன.

ஆக நம் வாழ்க்கை காலம் மிகக் குறுகியதாக இருப்பதால், வாழ்க்கையை வெறும் பொழுது போக்காகச் செலவு செய்யக்கூடாது. இந்த உண்மை புரிந்தால், குறுகிய வாழ்க்கையை நாம் நிச்சயமாக வீணடிக்க விரும்ப மாட்டோம். ஆகவே நமது நேரங்களை நித்தியமான விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டும். 

கர்த்தர் தம்முடைய சித்தத்தை அவருடைய வார்த்தையின் வழியாக வெளிப்படுத்துகிறார். ஆனாலும் பெரும்பாலான மக்கள் திருமறையின் போதனைகளை அலட்சியம் செய்கிறார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நம்மை வழி நடத்தக்கூடிய கட்டளைகள் (precepts), கொள்கைகள் (principles) மற்றும் வாக்குறுதிகளை (Promises) திருமறை வழியாகக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அந்த தேவனுடைய வார்த்தையை உணர்ந்து அதற்குக் கீழ்ப்படிவதே வெற்றிக்கான உறுதியான வழி (யோசு. 1:8; சங். 1:3).

மனித இயலாமைThe frailty of man (வச. 16).

"இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மை பாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மை பாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது".


மனிதன் பெருமையுடன் பேசுவது அவனது பலவீனத்தை மட்டுமே மறைக்கிறது. "மனிதன் முன்மொழிகிறான் ஆனால் கர்த்தர் அதை நிராகரிக்கிறார்" என்று தாமஸ் எ கெம்பிஸ் எழுதினார். இதை சாலொமோன் தான் முதலில் கூறினார்: "சீட்டு மடியில் போடப்படும்; காரிய சித்தியோ கர்த்தரால் வரும்" (நீதி. 16:33).


மனிதனால் எதிர்கால நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது. அவனுக்கு எதிர் காலத்தைப் பார்க்கும் ஞானமோ, அல்லது அதைக் கட்டுப்படுத்தும் சக்தியோ கிடையாது. அவன் பெருமை பேசுவது பாவம்; அது அவனை இறைவனாக்குகிறது. கர்த்தரின் விருப்பத்தைச் செய்யாமல், அதை மக்கள் புறக்கணிப்பது எவ்வளவு முட்டாள்தனம். இது ஒரு வழிகாட்டும் வரைபடம் இல்லாமல் இருண்ட காடுகளின் வழியாகச் செல்வதற்கு ஒப்பானது. அல்லது திசைகாட்டி இல்லாமல் கொந்தளிப்பான கடல் வழியாகக் கப்பலைச் செலுத்துவது போன்றது.


நாங்கள் கென்டக்கியில் உள்ள மம்மத் குகைக்குச் சென்றபோது, ​​சுரங்கப்பாதைகள் எங்களுக்குப் பிரமை ஏற்படுத்தியது. அப்போது விளக்குகள் அணைக்கப்பட்டது. அடர்ந்த இருள் எங்களைச் சூழ்ந்தது. அது "பிரசங்க பீட பாறை (Pulpit Rock)" என்கிற இடம். அப்போது சுற்றுப்பயணத்தின் வழிகாட்டி ஓர் ஐந்து வார்த்தை பிரசங்கம் செய்தார்: "உங்கள் வழி காட்டுனருக்கு நெருக்கமாக இருங்கள் (stay close to your guide)." அது உண்மையில் நல்ல ஆலோசனை!

 

2. கர்த்தரின் விருப்பத்தை மீறுதல் – Disobeying God’s Will (4:17)

 

இந்த சபையின் மக்கள் கர்த்தரின் விருப்பத்தை அறிந்திருக்கிறார்கள், ஆனால் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் மனது இல்லை. இந்த மனப்பாங்கு கர்த்தரின் விருப்பத்தை அலட்சியப் படுத்துவதை விட அதிக பெருமையை வெளிப்படுத்துகிறது; ஏனெனில் அவர்கள் மனதில் கர்த்தரிடம் கூறுவது,


‘’நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீர் எதிர்பார்ப்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் இதைக் குறித்து உம்மை விட எங்களுக்கு அதிகம் தெரியும்!


"அவர்கள், நீதியின் வழியை அறிந்த பின்பும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்தக் கட்டளையை விட்டு விலகுவதை விட, அதை அவர்கள் அறியாமல் இருந்திருந்தால், அது அவர்களுக்கு நலமாயிருக்கும்" (2 பேதுரு 2:21).   


கர்த்தரின் சித்தத்தை அறிந்தவர்கள் ஏன் வேண்டுமென்றே அதற்குக் கீழ்ப்படிவதில்லை? ஏற்கனவே ஒரு காரணத்தை நான் பரிந்துரைத்துள்ளேன்: அது பெருமை. "தான் தான் தனது வாழ்க்கையின் எஜமானன், தனது ஆன்மாவின் தலைவன்" என்று மனிதன் பெருமை பேச விரும்புகிறான். தன்னால் எதையும் செய்ய முடியும் என்று எண்ணும் அளவுக்கு அவன் பல அற்புதங்களைச் செய்துவிட்டான்.


மற்றொரு காரணம், கர்த்தரது சித்தத்தின் தன்மையை (Nature of God’s will) பற்றிய அவனது அறியாமை. கர்த்தரின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம் என்பது போல் அவன் செயல்படுகிறான். 


உண்மையில், கர்த்தரின்  சித்தத்தைச் செய்வது என்பது ஒரு தெரிவு அல்ல; அது கடமை (Not an option; it is an obligation). நாம் "விருப்பப்பட்டால் அதைக் கடைப் பிடிக்கவோ அல்லது விட்டுவிடவோ" முடியாது.


அவர் படைப்பாளர், நாம் படைப்புகள்.  நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் இரட்சகர். நாம் அவருடைய பிள்ளைகள். அவர் ஆண்டவர். நாம் அவரது வேலையாட்கள். ஆகவே அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். கர்த்தரின் விருப்பத்தை இலேசாக எடுத்துக் கொள்வது என்பது நம் வாழ்வில் அவரது  தண்டனையை அழைப்பதாகும்.


கர்த்தரின் விருப்பத்தின்படி வாழ்வது துன்பத்திற்கான ஒரு சூத்திரம் எனும் தவறான எண்ணம் பலருக்கு உள்ளது, ஆனால் உண்மை இதற்கு நேர் மாறானது! இறைவனின் விருப்பத்தை மீறுவதே துன்பத்திற்கு வழிவகுக்கும். திருமறையும், பல மனிதர்களின் அனுபவங்களும் இந்த உண்மைக்குச் சாட்சி. கீழ்ப்படியாத ஒரு கிறிஸ்தவர் இந்த வாழ்க்கையின் கஷ்டத்திலிருந்து தப்பிப்பது போல் தோன்றினாலும், அவர் கர்த்தரை எதிர்கொள்ளும்போது என்ன பதில் சொல்வார்?


““எந்த வேலைக்காரன் தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்து, தன்னை ஆயத்தப்படுத்தாமலும், அவருடைய சித்தத்தின் படியும் செய்யாமலும் இருக்கிறானோ, அவன் பல அடிகளால் அடிக்கப்படுவான். ஆனால், அறியாமல், அடிகளுக்குப் பாத்திரமானவற்றைச் செய்தவன், சில அடிகளால் அடிக்கப்படுவான்" (லூக்கா 12:47-48).

 

தேவ சித்தத்தை நன்கு அறிந்தும், வேண்டுமென்றே அதற்குக் கீழ்ப்படியாத கிறிஸ்தவர்களுக்கு என்ன நடக்கும்? 


அவர்கள் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் வரை தங்கள் அன்பான பிதாவால் தண்டிக்கப்படுகிறார்கள் (எபி. 12:5-11). விசுவாசி என்று கூறப்படும் ஒருவர் தவறு செய்தும் தண்டிக்கப்படாவிட்டால், அவர் உண்மையில் மீண்டும் பிறக்கவில்லை, மாறாகப் போலியானவர் என்பதற்கு அதுவே சான்றாகும்.


ஒரு விசுவாசி தவறு செய்யும் போது அவர் தண்டிக்கப்பட்டால், கர்த்தர் அவர் மீது அன்பாக இருக்கிறார் என்பதற்கு அதுவே ஆதாரமாகும். கர்த்தர் அவரை வெறுக்கிறார் என நாம் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பூமிக்குரிய தகப்பர்களாகிய நாம் நம் பிள்ளைகள், உயர்ந்த நிலை அடைய, மதிப்பு மிக்கதொரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகக் கண்டித்து நாம் சொல்லும் படி கீழ்ப்படிந்து நடக்கக் கட்டளையிடுகிறோம். அது போல, நம்முடைய பரலோகத் தகப்பனும் நம்மை நேசிப்பதால், தவறு செய்தால் தண்டித்து நம்மை வழி நடத்துகிறார். 


கர்த்தரின் சிட்சை எனும் வாழ்க்கை பாடம் கடினமாக இருந்தாலும், நாம் அவருடைய பிள்ளைகள் என்கிற அந்த உண்மை ஆறுதலைத் தருகிறது.


கர்த்தரின் சித்தத்தைச் செய்யாமல் அவரது வார்த்தையை மீறுவதால் பரலோக வெகுமதிகளை இழக்கும் அபாயமும் உள்ளது. 1 கொரிந்தியர் 9:24-27ல், பவுல் விசுவாசியைக் கிரேக்கப் பந்தயங்களில் ஓடுபவர்களுடன் ஒப்பிட்டார். அவர்கள் கிரீடத்தைப் பெறுவதற்கு, விளையாட்டின் விதி முறைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். எதாவது ஒரு போட்டியாளர் விதிகளை மீறியதாகக் கண்டு பிடிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். 1 கொரிந்தியர் 9:27 இல் பவுல் பயன்படுத்தும் ‘’ஆகாதவனாய் போகாதபடி (castaway)’’ என்ற வார்த்தை இரட்சிப்பை இழந்து போவீர்கள் எனக் கூறவில்லை, மாறாக வெகுமதியை இழந்து போவீர்கள் (Disqualified) என எச்சரிக்கிறது. உங்கள் "தகுதியை இழப்பீர்கள்" என்பது ஒரு நல்ல மொழிபெயர்ப்பாக இருக்கும்.


இன்று தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியாமல் வாழ்வது நமக்கு ஒரு பெரிய குற்றமாகத் தோன்றவில்லை, ஆனால் கர்த்தர் திரும்பி வந்து நம்முடைய செயல்களை நியாயம் தீர்க்கும் போது அது எவ்வளவு பெரிய இழப்பு எனப் புரியும் (கொலோ. 3:22-25).

 

3. கர்த்தருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிதல் – Obeying God’s Will (4:15)

 

"ஆண்டவருக்குச் சித்தமானால்" என்பது ஒரு உண்மையான விசுவாசியின் உதடுகளிலிருந்து வெளிப்படும் வெறும் சடங்கான வெற்றுப் பேச்சல்ல: அது அவரது இதயத்தின் மாறாமல் இருக்கும் நிலையான மனப்பான்மை ஆகும்.


"என்னை அனுப்பியவரின் சித்தத்தின்படி செய்து, அவருடைய பணியை முடிப்பதே எனது உணவு" என்றார் இயேசு (யோவான் 4:34).


பவுல் தனது கடிதங்களில், எதிர் கால திட்டங்களைத் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது பெரும்பாலும் ‘’கர்த்தருக்குச் சித்தமானால்’’ எனக் குறிப்பிட்டார் (ரோ. 1:12; 15:30; 1 கொரி. 4:19; 16:7). 


கர்த்தரின் விருப்பத்தின் படி செய்வதை, ஒரு சங்கிலியால் கட்டப்பட்ட சிறைக்கைதி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு செய்வதைப் போலக் கருதி பவுல் செய்யவில்லை; மாறாக, அது அடைக்கப்பட்ட கதவுகளைத் திறந்து அவரை விடுவித்த ஒரு திறவுகோலாகக் கருதினார்.   


இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரு ஒழுங்கு விதியின்படி இயங்குகின்றன. நாம் இந்த சட்டங்களுடன் ஒத்துழைத்து, அவற்றைக் கடைப்பிடித்தால், பிரபஞ்சம் நம்முடன் இணைந்து செயல்படுகிறது. நாம் இந்த சட்டங்களை எதிர்த்துப் போராடி, அவற்றை மீறி செயல் பட்டால், பிரபஞ்சம் நமக்கு எதிராக வேலை செய்யும். உதாரணமாக, சில இயற்பியல் சட்டங்கள் விமானம் பறப்பதை நிர்வகிக்கின்றன. ஒரு விமானத்தை வடிவமைக்கும் போது அந்த விதிகளைக் கடைப்பிடித்து விமானத்தைப் பொறியாளர் உருவாக்குகிறார். அதை ஓட்டுவதில் இருக்கும் நியமங்களை விமானி கடைப்பிடிக்கிறார். அதனால் அந்த விமானத்தின் பெரிய இயந்திரம் சரியாகச் செயல்படுவதைக் கண்டு இருவரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் அவர்கள் அந்த விமானத்தை நிர்வகிக்கும் அடிப்படை சட்டங்களை மீறினால், விளைவு விபத்து. உயிர் மற்றும் பண இழப்பு ஆகும்.


நம் வாழ்வுக்கான கர்த்தரின் விருப்பம் என்பதை, பிரபஞ்சம் இயங்குவதற்கு அவர் உருவாக்கிய சட்டங்களுடன் ஒப்பிடலாம், அந்தச் சட்டங்கள் பொதுவானவை, ஆனால் இதில் விதிவிலக்கும் உண்டு: நம் வாழ்விற்காகத் திட்டமிட்டுள்ள அவரது விருப்பம் நமக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான இரண்டு வாழ்க்கை திட்டமிடப்படவில்லை.


ஆனால், எல்லா கிறிஸ்தவர்களுக்கும் உண்மையாகக் கடைப்பிடிக்க வேண்டிய சில பொதுவான பண்புகள் உள்ளன. 

  • நம்மை அவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பது கர்த்தரின் விருப்பம் (2கொரி. 8:5).
  • நாம் பாலியல் அசுத்தங்களுக்கு விலகி வாழ வேண்டும் என்பது கர்த்தரின் விருப்பம் (1தெச. 4:3).
  • எல்லா விசுவாசிகளும் கர்த்தருக்குள் சந்தோஷப்பட, ஜெபிக்க, நன்றி சொல்ல வேண்டும் (1தெச. 5:16-18).

திருமறையில் உள்ள ஒவ்வொரு கட்டளையும், விசுவாசிகள் கீழ்ப்படிந்து பின்பற்றுவதற்காகக் கொடுக்கப்பட்ட கர்த்தரின் சித்தத்தின் ஒரு பகுதியாகும், அவை கண்டிப்பாகக் கடைப் பிடிக்கப்பட வேண்டும். 


ஆனால் கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் ஒரே விதமாக வேலை செய்வதற்கு அழைப்பதில்லை, அல்லது அதே வரங்களையும் ஊழியத்தையும் பயன் படுத்துவதில்லை. கர்த்தரின் சித்தம் நம் ஒவ்வொருவருக்கும் "பிரத்தியேகமானது"!


கர்த்தரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு நாம் சரியான மனப்பான்மையைக் கொண்டிருப்பது முக்கியம். சிலர் கர்த்தரின் சித்தத்தைச் செய்வது என்பதைக் கடினமான குளிர்ந்த இயந்திரத்தை இயக்குவதற்கு ஒப்பாக நினைக்கிறார்கள். கர்த்தர் இயக்கத்தைத் தொடங்குகிறார், ஆனால் அதைச் சீராகச் செயல்பட வைப்பது நம் கையில் உள்ளது. நாம் ஏதாவது ஒரு காரியத்தில் அவருக்குக் கீழ்ப்படியாமல் போனால், இயந்திரம் செயலிழந்துவிடும், அதனால் வாழ்நாள் முழுவதும் கர்த்தரின் விருப்பத்திற்குப் புறம்பாகச் செயல்படுவோம். கர்த்தரின் விருப்பம் குளிர்ந்த கடினமான இயந்திரம் அல்ல, ஆனால் அதே சமயம் அது தானியங்கி விற்பனை இயந்திரத்திலிருந்து குளிர்பானத்தைப் பெறுவது போன்று எளிமையான வழியில் தீர்மானிப்பதும் அல்ல.


கர்த்தரின் சித்தத்தைச் செய்வது என்பது ஆண்டவருக்கும், விசுவாசிக்கும் இடையே உள்ள ஒரு உயிர்ப்பான உறவு


விசுவாசி ஆண்டவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாத போது இந்த உறவு முறிக்கப்படுவதில்லை, ஏனென்றால் தந்தை தனது குழந்தையை இன்னும் நேசிக்கிறார். அவர் கடினமாக சிட்சிக்க வேண்டியிருந்தாலும் கூட விட்டு விலகாமல் உடன்  இருக்கிறார். கர்த்தரின் விருப்பம் செய்வதை ஒரு குளிர்ந்த இயந்திரத்துடனான உறவாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அதை ஒரு பாதுகாப்புடன் வளரும் உயிருள்ள உடலாகப் பார்க்க விரும்புகிறேன். 


என் உடலில் உள்ள ஒரு உறுப்பில் ஏதேனும் பாதிப்பு இருந்தாலும் கூட, நான் உடனே இறந்து விட மாட்டேன். அந்த பாதிக்கப்பட்ட உறுப்பு மீண்டும் சரியாக வேலை செய்யும் வரை உடலின் மற்ற பாகங்கள் அதை ஈடுசெய்கிறது. வலி உள்ளது; பலவீனமும் உள்ளது; ஆனால் அதற்காக மரணம் நேரிட வேண்டும் எனும் அவசியம் இல்லை.


நீங்களும் நானும் கர்த்தரின் விருப்பத்தைச் செய்வதிலிருந்து விலகுவது எல்லாவற்றிற்குமான தீர்வாகாது. நாம் கஷ்டப்படுகிறோம். அது உண்மை. ஆனால் உடலின் ஒரு பகுதியின் செயலிழப்பை மற்ற உறுப்புகள் ஈடுசெய்வது போல, கர்த்தர் நம்மைத் தம் விருப்பத்திற்குத் திரும்பக் கொண்டுவர நம் மீது ஆளுகை செய்து நம்மைச் சரிசெய்கிறார். இது ஆபிரகாம், யோனா போன்ற தேவ மனிதர்கள் வாழ்வில் தெளிவாக விளக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்.


கர்த்தரின் சித்தத்தைச் செய்வதற்குக் கீழ்ப்படிந்து, அதன் படி வாழும் விசுவாசியின் உறவு தொடர்ந்து வளரும் ஒரு அனுபவம். முதலில், நாம் அவருடைய சித்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் (அப் 22:14). அவரது விருப்பத்தைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. நாம் கீழ்ப்படியத் தயாராக இருந்தால், அதை அவர் வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார் (யோவான் 7:17). 


"கீழ்ப்படிதல் என்பது ஆவிக்குரிய அறிவின் ஓர் அவயம் (obedience is the organ of spiritual knowledge)" என்று கூறப்படுகிறது. இது உண்மைதான். வெற்று ஆர்வம் உள்ளவர்கள் அல்லது அலட்சியமாகக் கவனக்குறைவுடன் இருப்பவர்களுக்கு, கர்த்தர் தமது சித்தத்தை வெளிப்படுத்தாமல், மனப்பூர்வமாக அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியத் தயாராக இருப்பவர்களுக்கே அதை வெளிப்படுத்துகிறார்.


ஆனால் நாம் கர்த்தருடைய சித்தத்தில் சிலவற்றை அறிந்து கொள்வதோடு நின்று விடக்கூடாது. "அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலும், சகல ஞானத்தினாலும், ஆவிக்குரிய அறிவினாலும் நிரப்பப்பட வேண்டும்" என்று அவர் விரும்புகிறார் (கொலோ. 1:9).


சில குறிப்பிட்ட விஷயங்களில் தேவ சித்தத்தைத் தெரிந்து கொள்ள விரும்புவதும் சில விஷயங்களில் அவருடைய சித்தத்தைப் புறக்கணிப்பதும் தவறு. நம் வாழ்வில் உள்ள ஒவ்வொரு பகுதிகளும் கர்த்தருக்கு முக்கியமானது. நம் வாழ்வின் அனைத்துப் பகுதிகளுக்கும் அவரிடம் ஒரு திட்டம் உள்ளது.


தேவ சித்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் (எபே. 5:17). இங்குதான் ஆவிக்குரிய ஞானம் தேவைப் படுகிறது. ஒரு குழந்தைக்குத் தனது தந்தையின் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும், ஆனால் அதை ஏன் விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கக் கூடும். குழந்தைக்கு "என்ன" எதிர்பார்க்கிறார் எனத் தெரியும் ஆனால் "எதற்காக" எதிர்பார்க்கிறார் எனத் தெரியாது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் "சினேகிதர்கள்" என்ற முறையில், கர்த்தர் எதற்காக அப்படிச் செய்கிறார் என்பதை அறியும் பாக்கியம் நமக்கு இருக்கிறது (யோவான் 15:15).


"அவர் மோசேக்குத் தம்முடைய வழிகளையும், இஸ்ரேல் புத்திரருக்குத் தமது கிரியைகளையும் அறிவித்தார்" (சங். 103:7).


கர்த்தர் என்ன செய்கிறார் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்திருந்தார்கள், ஆனால் அவர் அதை ஏன் செய்கிறார் என்பதை மோசே மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது. நாம் தேவனுடைய சித்தத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் (ரோமர் 12:2). அந்த கிரேக்க வினைச்சொல்லின் அர்த்தம் "அனுபவத்தால் நிரூபிப்பது". கர்த்தருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்வதன் மூலம் அதை அனுமானிக்கக் கற்றுக்கொள்கிறோம். 


கர்த்தருக்கு நாம் எவ்வளவு அதிகமாகக் கீழ்ப்படிகிறோமோ, அவ்வளவு எளிதாக எதற்காக அதைச் செய்ய விரும்புகிறார் என்பதையும் கண்டுபிடிக்க முடியும். இது நீச்சல் கற்றுக் கொள்வது அல்லது இசைக்கருவியை வாசிப்பது போன்றது. இறுதியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை "உணர்வுப்பூர்வமாக அனுபவிப்பீர்கள்". 


அது உங்கள் வாழ்வின் இரண்டாவது இயல்பாகி விடுகிறது.

 

“எனது வாழ்க்கைக்கான கர்த்தரின் விருப்பத்தை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது?” என்று தொடர்ந்து கேட்கும் மக்கள், தாங்கள் ஒருபோதும் கர்த்தருடைய சித்தத்தைச் செய்ய முயற்சி செய்யவில்லை என்று அனைவருக்கும் அறிவிக்கின்றனர். 


நீங்கள் உங்களுக்குத் தெரிந்த கர்த்தரின் விருப்பத்தைச் செய்யத் தொடங்குங்கள், அதை நிறைவேற்றும் போது, நீங்கள் அடுத்துச் செல்ல வேண்டிய பாதைக்கான வழியை அவர் காண்பிப்பார். கர்த்தரின் விருப்பம் என்ன என்பதை நீங்கள் கற்று, அதை அனுபவத்தின் மூலம் நிரூபிக்கிறீர்கள். இதனால் வெற்றி தோல்வி இரண்டையும் கற்றுக் கொள்கிறோம். "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்" (மத். 11:29). கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தவை, அதைப் பின்பற்றி நடப்பது, இந்த இரண்டையும் இணைத்து ஒன்றாக நடக்க நுகம் நம்மை அறிவுறுத்துகிறது.


இறுதியாக, தேவ சித்தத்தை இதயத்திலிருந்து மனப்பூர்வமாக நாம் செய்ய வேண்டும் (எபே. 6:6). 


யோனா கர்த்தரின் சித்தத்தை அறிந்தார் (ஒரு அடித்த பிறகு), கர்த்தரின் விருப்பத்தைச் செய்தார், ஆனால் அதை அவர் தனது இதயத்திலிருந்து செய்யவில்லை. கோபமான தீர்க்கதரிசி உண்மையாகக் கர்த்தரை நேசிக்கவில்லை, நினிவே மக்களை நேசிக்கவில்லை என்பதை யோனா 4 சுட்டிக்காட்டுகிறது. அவர் இன்னொரு முறை அடிபடாமல் இருக்கக் கர்த்தரின் சித்தத்தைச் செய்தார்!  


கொடுப்பதைப் பற்றி பவுல் சொன்னது தேவ சித்தத்தைச் செய்வதற்கும் பொருந்தும்: "கட்டாயத்தினாலும்,  ஆதாயத்திற்காகவும் அல்ல, மகிழ்ச்சியுடன் கொடுப்பவரையே தேவன் விரும்புகிறார்" (2 கொரி. 9:7). Grudgingly என்றால் "தயக்கத்துடன், வலியுடன்" என்று பொருள். கர்த்தருடைய சித்தத்தைச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. வேறு வழியில்லாமல் என்பதைக் குறிப்பது தான் "கட்டாயத்தினாலும்" என்ற வார்த்தை. இந்த மக்கள் கீழ்ப்படிகிறார்கள் ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை. அதைச் செய்ய வேண்டும், அவர்கள் விரும்புவதால் அல்ல. அவர்களின் இதயம் அதில் இல்லை.

 

மகிழ்ச்சியான வாழ்க்கையின் ரகசியம் கடமையில் மகிழ்ச்சி அடைவதே. கடமை மகிழ்ச்சியாக மாறினால், சுமைகள் ஆசீர்வாதங்களாக மாறும்.

 

"நான் பரதேசியாய்த் தங்கும் விட்டிலே உமது நியமங்கள் எனக்கு கீதங்களாயின" (சங். 119:54).

 

நாம் கர்த்தரை நேசிக்கும்போது, ​​அவருடைய சட்டங்கள் எனக்குப் பாடல்களாக மாறும். நாம் அவருக்குச் சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். 


நாம் கர்த்தருக்கு மனமுவந்து சேவை செய்யாமல், வேண்டா வெறுப்பாகச் செய்தால், அவருடைய வேலையை நிறைவேற்றலாம், ஆனால் ஆசீர்வாதத்தை இழக்க நேரிடும். அது கூலிக்காக மாரடித்தது போல இருக்கும். அது ஊழியம் அல்ல, ஆனால் நாம் கர்த்தருடைய சித்தத்தை இதயத்திலிருந்து மனப்பூர்வமாகச் செய்யும்போது, ​​அது எவ்வளவு கடினமான பணியாக இருந்தாலும், நாம் மகிழ்ந்து மன நிறைவுடன் இருக்கிறோம்.


கர்த்தருடைய சித்தத்தை அறிந்து கொள்வதில் அல்லது அதை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தால், அது இறைவனுடனான நமது உறவை நிரந்தரமாகப் பாதிக்கும் என்று ஒருபோதும் நினைக்கக்கூடாது. நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவருடைய மன்னிப்பைப் பெறலாம் (1 யோவான் 1:9). தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால், கர்த்தரை நேசிக்கும் இதயம், அவருடைய சித்தத்தைச் செய்வது, அவருடைய பெயரை மகிமைப்படுத்த உண்மையாக விரும்புவது.


கர்த்தரின் விருப்பத்தைச் செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கும்?

  •  நீங்கள் இயேசு கிறிஸ்துவுடன் ஆழமான கூட்டுறவை அனுபவிக்கிறீர்கள் (மாற்கு 3:35).
  • கர்த்தரின் சத்தியத்தை அறிந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கிடைக்கும் (யோவான் 7:17).
  • உங்கள் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கும் (1 யோவான் 5:14-15).
  • தேவன் விரும்புவதைச் செய்யும் மனிதனோ என்றென்றும் வாழ்கிறான் (1 யோவான் 2:15-17).
  • நிச்சயமாக, இயேசு கிறிஸ்துவின் வருகையில் வெகுமதியை எதிர்பார்க்கலாம் (மத். 25:34).

கர்த்தரின் சித்தத்தைச் செய்வதில், இந்த மூன்று மனப்பான்மைகளில் எது உங்களிடம் உள்ளது?

  •  உங்கள் தினசரி திட்டங்களையும், முடிவுகளையும் எடுக்கும்போது கர்த்தரின் விருப்பத்தை முற்றிலும் புறக்கணிக்கிறீர்களா?அல்லது
  • நீங்கள் கர்த்தரின் சித்தத்தை அறிந்திருந்தும், அதற்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்களா?

இந்த இரண்டு அணுகுமுறையும் தவறானது. இதைக் கடைப் பிடிப்பவரின் வாழ்க்கையில் துக்கத்தையும் அழிவையும் மட்டுமே அது கொண்டு வரும்.

 

ஆனால் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து, அதை நேசித்து, கீழ்ப்படிகிற கிறிஸ்தவர்கள் கர்த்தரின் ஆசீர்வாதத்தை அனுபவிப்பார். அவரது வாழ்க்கை எளிதாக இருக்காது, ஆனால் அது புனிதமாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்.

 

அவருடைய உணவே தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதாக இருக்கும் (யோவான் 4:34); அது அவர் உள்ளத்தின் பிரியமானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும் (சங். 40:8).

 

 

Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.