அத்தியாயம் பதினொன்று (யாக். 5: 1-6)
பணம் பேசுகிறது – Money Talks.
அவர் பிரச்சனைகளில் ஜெபிக்கிறார் (5:1–9):
பணம் பேசினால், அது என்னோடு எப்போதும் சொல்வது எல்லாம், “போய் வருகிறேன் (Goodbye)” என்றார் ஒரு பிரபல நகைச்சுவை நடிகர்.
ஆனால், யாக்கோபு குறிப்பிடும் இந்த விசுவாசிகளிடத்தில், பணம் அவ்விதமாக ''போய் வருகிறேன்'' எனச் சொல்லவில்லை. இந்த மனிதர்கள் மிகப் பெரிய செல்வந்தர்கள், ஆனால் அந்த செல்வத்தைப் பாவம் செய்து சம்பாதித்தனர். அதைச் சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தினர். அத்துடன் தங்களது செயல்கள் மூலமாக ஏழைகளைத் துன்புறுத்தினர்.
யாக்கோபு 5ம் அதிகாரத்தின் மையக் கருப்பொருள்களில் ஒன்று "பாதிக்கப்பட்டவர்கள்". உரிய ஊதியம் பெறாமல் பாதிக்கப்பட்ட ஏழை மக்களையும் (யாக். 5:4), உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களையும் (யாக். 5:13-16), ஆவிக்குரிய வகையில் பின் மாற்றம் அடைந்து பாதிக்கப்பட்டவர்களையும் (யாக். 5:19-20) இந்த பகுதியில் சந்திக்கிறோம்.
அடுத்ததாக இந்த அதிகாரத்தின் மற்றும் ஒரு பேசுபொருள் "ஜெபம்." ஏழை கூலியாட்கள் தேவனை நோக்கிக் கூப்பிடுகிறார்கள் (யாக். 5:4). நோயுற்றவர்களும், துன்பப்படுபவர்களும் ஜெபிக்க வேண்டும் (யாக். 5:13-16). ஜெபத்தில் நம்பிக்கை கொண்டவருக்கு எலியாவை உதாரணமாக யாக்கோபு சுட்டிக் காட்டினார் (யாக். 5:17-18).
இந்த இரண்டு கருப்பொருள்களையும் இணைத்துத் தியானிக்கும்போது, ஒருமுதிர்ச்சி நிறைந்த கிறிஸ்தவரின் ஐந்தாவது பண்பை நீங்கள் அடைகிறீர்கள்: அவர் பிரச்சனைகளின் மத்தியிலும் ஜெபிக்கிறவர்.
ஒரு முதிர்ச்சி அடைந்த விசுவாசி, பிரச்சனைகள் வரும்போது விட்டுக் கொடுக்காமல், கர்த்தரின் பாதத்தில் அமர்ந்து, ஜெபத்துடன், அவரது தெய்வீக கிருபையை நாடுகிறார். முதிர்ச்சி அடையாத நபர், தனது சொந்த அனுபவம் மற்றும் திறமையை நம்புகிறார், இல்லையெனில் மற்றவர்களிடம் உதவிக்காக ஓடுகிறார்.
பெரும்பாலான சமயங்களில் மற்றவர்களின் கைகள் வழியாகத் தான் நமது தேவைகளைக் கர்த்தர் பூர்த்தி செய்கிறார் என்பது உண்மைதான் என்றாலும், இத்தகைய உதவிகள் ஜெபத்தின் விளைவாகத் தான் இருக்க வேண்டும்.
இந்தப் பகுதியில் செல்வந்தராக இருப்பது பாவம் என்று யாக்கோபு சொல்லவில்லை. ஆபிரகாமும் ஒரு மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார். ஆனாலும், அவர் தேவனுடன் நடந்து, உலகம் முழுமைக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்படியாக கர்த்தரால் பெரிதும் பயன்படுத்தப்பட்டார். ஆக இங்குப் பணக்காரர்களின் சுயநல மோகத்தைக் குறித்து யாக்கோபு பாரம் கொண்டிருந்தார். ஆகையால் அவர்கள் "அலறி அழுது புலம்புமாறு" அறிவுரை வழங்கினார். அந்த அறிவுரைக்கு ஆதாரமாக மூன்று காரணங்களைக் கூறினார்.
அவர்கள் செல்வத்தைப் பெற்ற விதம்: The way they got their wealth (5:4, 6)
செல்வம் சேர்ப்பது தவறு எனத் திருமறை தடை செய்யவில்லை. மோசேயின் சட்டத்தில், செல்வத்தை அடைவதற்கும், அதைப் பாதுகாப்பதற்கும் குறிப்பிட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. யூதர்கள் கானானில் வசித்த போது, தங்களுக்கென சொந்தமாக நிலங்களை, உடைமைகளை வைத்திருந்தார்கள். அதில் வேலை செய்து, அதன் விளைச்சலால் அவர்கள் பயனடைந்தார்கள். ஆண்டவரும் தமது பல உவமைகளில், ஒருவருக்கு உள்ள சொத்து மற்றும் அதனால் கிடைக்கும் ஆதாயத்திற்கான மரியாதையைச் சுட்டிக் காட்டினார். நிருபங்களிலும் தனி நபர் சொத்து சேர்ப்பதற்கு எதிராகவோ அல்லது இலாபம் அடைவது தவறு எனச் சுட்டிக் காட்டும் கட்டளைகள் எதுவும் இல்லை.
ஆனால் சட்டவிரோதமான வழிகளில் செல்வம் சம்பாதிப்பதையும், அதைத் தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதையும் திருமறை கண்டனம் செய்கிறது.
ஏழைகளைக் கொள்ளையடித்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட செல்வத்தை, சுயநல ஆடம்பரத்திற்காகப் பயன்படுத்திய மேல்மட்ட பணக்கார வர்க்கத்தினர்க்கு எதிரான நியாய தீர்ப்பின் செய்தியை ஆமோஸ் தீர்க்கதரிசி முழங்கினார். ஏசாயாவும், எரேமியாவும் பணக்காரர்களின் சுயநலத்தை அம்பலப்படுத்தி நியாயத்தீர்ப்பு வரப்போகிறது என்று எச்சரித்தார்கள். இதே உணர்வில் தான் யாக்கோபும் எழுதினார். இந்த பகுதியில் பணக்காரர்கள் தங்களது செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தார்கள் என்பதற்கு அவர் இரண்டு எடுத்துக் காட்டுகளைக் கொடுத்தார்.
ஊதியத்தைக் கொடுக்காமல் நிறுத்தி
வைத்தல் : Holding Back wages (வச.
4).
தினசரி ஊதியம் எனும் அடிப்படையில் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனாலும், அவர்களது முதலாளிகளுடன் எந்தவித சட்ட ஒப்பந்தங்களும் அவர்களுக்கு இல்லை. மத்தேயு 20:1-16 இல் உள்ள வேலையாட்களின் உவமை அன்றைய ஒப்பந்த அமைப்பைப் பற்றிய சில நடைமுறைகள் குறிப்பைத் தருகிறது. ஆனால், உழைக்கும் மனிதனை ஒடுக்கும் முதலாளியிடமிருந்து பாதுகாப்பதற்காக, கர்த்தர் அவர்களுக்கு நியாயப்பிரமாண சட்டத்தின் வழியாக சில திட்டவட்டமான வழிமுறைகளை வழங்கினார்.
''உன் சகோதரர் அல்லது, உன் தேசத்தில் இருக்கிற உனது ஊரில் வசிக்கிற அந்நியரில் ஒருவனாக இருந்தாலும் சரி, அந்த ஏழையும் எளியவனுமான கூலி வேலைக்காரனை நீ ஒடுக்காதே. அவன் வேலை செய்த நாளின் சூரியன் மறையும் முன்னே அவனுடைய கூலியைக் கொடுத்து விடு; அவன் ஏழையாய் இருக்கிறான். அவன் சம்பளத்தின் மேல் ஆவலாய் இருக்கிறான். நீ அதைக் கொடுக்காவிட்டால் அவன் உனக்கு விரோதமாகக் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவான். அது உனக்குப் பாவமாகிவிடும்'' (உபா. 24:14-15).
''உன் அயல் வீட்டில் வசிப்பவரை ஒடுக்காதே, அவனைக் கொள்ளையடிக்காதே. கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம் மட்டும் உன்னிடத்தில் இருக்கக்கூடாது'' (லேவி. 19:13).
''அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினால் தன் மேல் அறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலி கொடாது, அவனை சும்மா வேலை கொள்ளுகிறவனுக்கு ஐயோ'' (எரே 22:13).
இந்த பணக்காரர்கள் வேலையாட்களை வேலைக்கு அமர்த்திக் குறிப்பிட்ட தொகையைச் சம்பளமாகக் கொடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், அவர்கள் தங்கள் வேலையை முடித்து விட்ட பின்னரும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இங்குப் பயன்படுத்திய கிரேக்கச் சொல்லின்படி "பிடிக்கப்பட்டு" என்ற வினைச்சொல்லின் காலம், ஒருபோதும் அந்த கூலி வேலையாட்களுக்குச் சம்பளம் தரப்படாது என்பதைக் குறிக்கிறது.
''களவு செய்யாதிருப்பாயாக" என்பது இன்றைக்கும் தேவசட்டம். அது தேவன் செயல்படுத்தும் நியாயப்பிரமாணம். கிறிஸ்தவர்களாகிய நாம், செலுத்த வேண்டிய கடன்கள், வரிகளைத் திரும்பச் செலுத்துவதில் உண்மை உள்ளவர்களாக இருக்க வேண்டும். இரட்சிக்கப்படாத உலக மனிதர்களிடம் கடன் பெற்று, அதைத் திரும்பச் செலுத்தாது ஏமாற்றும் கிறிஸ்தவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, ஒரு போதகராக நான் வெட்கப்படுகிறேன்.
ஒருமுறை நான் மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது எனது மருத்துவ நண்பரைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது.
"பணிகள் எப்படி நடக்கிறன?"
அவர் பதிலளித்தார், "ஓ, எல்லாம் சிறப்பாகச் செல்கிறது என்று நினைக்கிறேன்."
அவரை ஊக்கப்படுத்தும் விதமாக "நான் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்," என்றேன்.
அவர் மறுமொழியாக, "அதற்காக நான் நன்றி சொல்கிறேன், ஆனால் என்னிடம் கடன் வாங்கி இருக்கும் எல்லா மக்களுக்காகவும் ஜெபம் செய்யுங்கள். அவர்கள் வாங்கிய கடன் பணத்தைத் திரும்பக் கொடுத்தால், அது எனக்கு மிக உதவியாக இருக்கும்!"
நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்துதல்: Controlling the Courts (வ. 6a).
பொதுவாகச் செல்வம் உள்ளவர்கள், தாங்கள் விரும்பியதைப் பெறும் அரசியல் அதிகாரத்தையும் பெற்றிருப்பார்கள். ஒரு காமிக் புத்தகத்தில் உள்ளதொரு கதாபாத்திரம் கேட்டது.
"தங்க விதி என்றால் என்ன?" (What is the Golden Rule?)
"தங்கம் உள்ளவர் விதிகளை உருவாக்குகிறார்!" (Whoever has the Gold makes the rules).
யாக்கோபு சொன்னார், "செல்வந்தர்கள் அல்லவோ உங்களை ஒடுக்கி, நியாயாசனங்களுக்கு முன்பாக இழுத்தார்கள் அல்லவா?" (யாக்கோபு 2:6).
வாட்டர்கேட் (Water Gate) என்ற பெயரைச் சொன்னால், அழகான விடுதி யாருக்கும் நினைவுக்கு வராது. அமெரிக்க வரலாற்றின் ஒரு அசிங்கமான அத்தியாயத்தை அந்த வார்த்தை நமக்கு நினைவுபடுத்துகிறது. இது பொய்களை வெளியரங்கமாக்கி, அமெரிக்க ஜனாதிபதி பதவி விலகுவதற்கும் வழிவகுத்தது. அந்த காலத்தில் நீதிக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் சட்டங்கள் கையாளப் படுவதாக இரு தரப்பும் மாறி மாறி ஒருவர் மேல் மற்றவர் குற்றம் சாட்டினர்.
தேவன் இஸ்ரவேலை ஸ்தாபித்தபோது, மக்களுக்கு ஒரு நீதிமன்ற அமைப்பைக் கொடுத்தார் (உபா. 17:8-13). பேராசை கொள்ளாதே என்று நீதிபதிகளை எச்சரித்தார் (யாத். 18:21). நியாயாதிபதிகள் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது (லேவி. 19:15). அவளுடைய தேசத்தில் எந்த நீதிபதியும் பொய்ச் சாட்சியத்தைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது (உபா. 19:16-21). லஞ்சம் வாங்குவது கர்த்தரால் கண்டனம் செய்யப்பட்டது (ஏசா. 33:15; மீகா. 3:11-12; 7:3). தீர்க்கதரிசியான ஆமோஸ் லஞ்சம் வாங்கிய நீதிபதிகளையும் "வழக்குகளில் நியாயம் புரட்டப்படுவதையும்" கண்டித்தார் (ஆமோஸ் 5:12, 15).
யாக்கோபின் நாட்களில் போதுமான பணம் இருந்தால், உங்களால் நீதிமன்றங்களை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். ஏழைத் தொழிலாளர்களிடம் வசதி இல்லை. அவர்களால் அதிக செலவு பிடிக்கும் வழக்குகளை நடத்த முடியவில்லை, எனவே ஒவ்வொரு முறையும் அவர்கள் அடிக்கப்பட்டனர். தொழிலாளர்களிடம் நியாயம் இருந்தது, ஆனால் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. மாறாக, அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அழிக்கப்பட்டனர். (யாக். 4:2 இல் "கொலை செய்தும்" என்பதைப் பணக்காரர்கள், ஏழை எளியவர்களை அவர்கள் இறந்து போகும் அளவுக்கு ஒடுக்க முடியும் என உருவக வழியில் புரிந்து கொள்ள வேண்டும்). ஏழையால் பணக்காரனை எதிர்க்க முடியவில்லை. அவனிடம் போரிட எந்த ஆயுதமும் இல்லை. அவரால் செய்ய முடிந்ததெல்லாம், நீதிக்காக இறைவனைக் கூப்பிடுவது மட்டும்தான்.
சட்டவிரோதமான வழிகளில் செல்வத்தைச் சேர்ப்பது, அதைப் பாதுகாப்பது தவறு எனத் திருமறை நம்மை எச்சரிக்கிறது.
எல்லா செல்வங்களும் கர்த்தருடையவை (சங். 50:10); அவருடைய நாமம் மகிமை அடைய உதவும்படியாக, அந்த செல்வத்தின் பொறுப்பாளர்களாக இருக்க அவர் நம்மை அனுமதிக்கிறார்.
"வஞ்சனையால் சேர்த்த செல்வம் குறைகிறது, ஆனால் உழைப்பால் சேகரிக்கிறவன் அதைப் பெருக்குகிறான்" (நீதி. 13:11).
"சுறுசுறுப்பும் விடாமுயற்சி உடையவன் கையே செல்வத்தை உண்டாக்கும்" (நீதி. 10:4).
"செல்வந்தனாக வேண்டும் என பிரயாசப்படாதே" (நீதி. 23:4).
நாம் நம் வாழ்வில் கர்த்தருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். அப்போது அவர் நமக்குத் தேவையான அனைத்தையும் அளிப்பதற்கு எப்போதும் கவனமாக இருப்பார் (மத். 6:33).
செல்வத்தைப் பயன்படுத்திய விதம்: The way the rich used their wealth (வ. 5:3-5) ~
பாவமான வழியில் செல்வத்தைச் சேர்ப்பது மோசம், ஆனால் அந்தச் செல்வத்தை உல்லாசமான வழிகளில் வாழப் பயன்படுத்துவது அதை விட அதிக பாவம்.
செல்வத்தைக் குவித்தனர்: They Stored it up (வ. 3).
சேமிப்பது நிச்சயமாகப் பாவம் கிடையாது.
"ஏனெனில், பெற்றோருக்குப் பிள்ளைகள் அல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும்" (2 கொரி. 12:14).
"ஒருவன் தன் சொந்த மக்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரிக்காது போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருக்கிறான்" (1 தீமோ. 5:8).
"அப்படியானால், நீ என் பணத்தை வங்கியில் போட்டிருக்க வேண்டும்; அப்போது நான் வரும்போது எனது பணத்தை வட்டியுடன் திரும்பப் பெற்றிருப்பேனே" (மத். 25:27).
ஆனால், உங்களிடம் பணி புரியும் ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தைக் கொடாது, அந்த பணத்தைச் சேமித்து வைப்பது தவறு. இந்த செல்வந்தர்கள் தானியம், தங்கம் மற்றும் ஆடைகளைப் பதுக்கி வைத்திருந்தனர். இந்த உடைமைகள் தங்களிடம் இருந்ததால் தாங்கள் பணக்காரர்கள் என்று நினைத்தார்கள். தங்களுடைய செல்வத்தைக் கர்த்தரின் மகிமைக்காகப் பயன்படுத்துவதன் மூலம் பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேமித்து வைப்பதற்குப் பதிலாக, சுயநலத்துடன் தங்கள் பாதுகாப்பிற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் அதைப் பாதுகாத்தனர் (மத். 6:19.). யாக்கோபு இந்தக் கடிதத்தை எழுதிய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, எருசலேம் ரோம வீரர்களிடம் வீழ்ந்தது. இவர்கள் திரட்டிய அனைத்து செல்வங்களும் கைப்பற்றப்பட்டது.
“உங்கள் பொக்கிஷங்களைப் பரலோகத்தில் சேர்த்து வையுங்கள்” என ஆண்டவராகிய இயேசு கூறியதன் அர்த்தம் என்ன?
அந்த பணக்கார வாலிபனுக்கு அறிவுறுத்தியபடி நாம் "எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்" என்று அவர் கூறியதாகப் புரிந்து கொள்ள வேண்டுமா? நான் அப்படி நினைக்கவில்லை. அந்த வாலிபனுக்குச் செல்வத்தின் மீது அதீத இச்சையும், பற்றும் இருந்தது. அது அவனைத் தூண்டும் பாவமாக இருந்ததால், அதை அவனுக்கு வெளிப்படுத்த விரும்பினார்.
பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்ப்பது என்பது நம்மிடம் உள்ள அனைத்தையும், கர்த்தரது செல்வங்களாகக் கருதி, அதன் பொறுப்பாளர்களாக அதைப் பயன்படுத்துவது ஆகும். நீங்களும் நானும் பல பொருட்களை வைத்திருக்கலாம், ஆனால் அவை நம்முடையவை அல்ல. எல்லாவற்றுக்கும் கர்த்தர் சொந்தக்காரர், நாம் அவருடைய ஊழியர்கள். நாம் வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் வெறும் பொருட்கள் மட்டுமே. கர்த்தரின் விருப்பத்தைச் செய்வதே பிரதானம்.
நாம் அவருடைய சித்தத்திற்கு அடிபணிந்து, அவர் நமக்குக் கொடுத்ததை அவரது சேவைக்குப் பயன்படுத்தும்போது, நம் செயல்கள் பொக்கிஷங்களாக மாறுகிறது. நாம் நித்தியத்தில் முதலீடு செய்கிறோம். நாம் பூமியில் செய்வது பரலோகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, கர்த்தர் அதைத் தனது ஞாபக புத்தகத்தில் குறித்து வைத்து பதில் அளிக்கிறார்.
ஆனால் இன்றோ, “தங்களது பொக்கிஷங்களைப் பரலோகத்தில் சேமித்து வைப்பதற்கு” பதிலாக, “கடைசி நாட்களுக்காகச் செல்வங்களைக் குவிப்பதை” பார்ப்பது எவ்வளவு சோகம். திருமறை சேமிப்பது அல்லது முதலீடு செய்வதை ஊக்கப்படுத்துகிறது; ஆனால் அது பதுக்கல்களைக் கண்டிக்கிறது.
பிறர் பயனடையாமல் தடுத்தனர்; they kept others from benefiting from it (வ. 4).
''அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டு’’ என்றால், அந்த பணக்காரர்கள் ஏழைகளைக் கொள்ளை அடித்தனர். தங்கள் சொந்த பணத்திலிருந்து ஊதியம் அளிக்க விரும்பவில்லை. தங்கள் வேலையாட்களுக்குக் கூலி கொடுக்காமல், அந்த சொற்ப சம்பளத்தையும் அவர்கள் பெற்று அனுபவிக்கவிடாமல் தடுத்தனர். ஒருவேளை அவர்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொடுக்க காத்திருந்திருக்கலாம்.
நாம் கர்த்தரது செல்வத்தின் பொறுப்பாளர்களாக இருப்பதால், நமது ஆண்டவர் விரும்பும் சில பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அவர் நமக்குக் கொடுப்பதை மற்றவர்களின் நன்மைக்காகவும், அவரது நாம மகிமைக்காகவும் பயன்படுத்த நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
"மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனாக இருப்பது அவசியம்" (1 கொரி. 4:2).
போத்திபாரின் வீட்டில் யோசேப்பு உண்மையுள்ள ஊழியராக இருந்தார். போத்திபார் செழித்தோங்கினார். கர்த்தர் நமக்கு அளித்த செல்வத்தைப் பிறருக்கு உதவியாக இருக்கும் படியாக நாம் பயன்படுத்தப் பல வழிகள் உள்ளன.
ஆடம்பரமாக வாழ்ந்தனர்: They Lived in Luxury (வ. 5).
"நீங்கள் பூமியில் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்" (யாக் 5:5). ஆடம்பரம் வீணான குப்பை. குப்பை பாவம்.
எண்ணெய் வளம் நிறைந்த தேசத்தை ஆட்சி செய்த ஒரு மன்னரின் கேளிக்கையான வணிகம் பற்றி ஒரு பத்திரிக்கை விளம்பரத்தில் வாசித்தேன். அவர் தனது பத்தொன்பது மனைவிகளுக்காக, பத்தொன்பது காடிலாக்ஸ் (Cadillacs) காரை வாங்கினார். அந்த வாகனங்களை மேலும் சொகுசாக மேம்படுத்தக் கூடுதல் பணம் செலுத்தினார். அவர் மேலும் இரண்டு போர்ஷ்கள் (Porsches), ஆறு மெர்சிடிஸ் (Mercedes), $40,000 மதிப்பிலான வேகப் படகு மற்றும் அதை எடுத்துச் செல்வதற்காக ஒரு பெரிய வாகனத்தையும் வாங்கினார். அத்துடன் பதினாறு குளிர்சாதனப் பெட்டிகள், $47,000 மதிப்புள்ள பெண்களுக்கான அழகுப் பொருட்கள், இரண்டு புளோரிடா மாகான திராட்சைப்பழ மரங்கள், இரண்டு சாய்வு நாற்காலிகள் மற்றும் ஒரு துளை இயந்திரம் ஆகியவற்றையும் இந்த பட்டியலில் சேர்க்கவும். அவரது மொத்த செலவு $1.5 மில்லியன் ஆகும். அவை எல்லாவற்றையும் கொண்டு சேர்ப்பதற்கு மேலும் $194,500 செலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதைக் குறித்துப் பிறர் பேசுவதற்காக!
நமக்கு அருளப்பட்ட வாழ்வின் அருமையான வசதிகளுக்காக நாம் அனைவரும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பழைய கற்கால வாழ்க்கை முறைமைகளுக்குத் திரும்புவதற்கு நாம் நிச்சயமாக விரும்ப மாட்டோம். ஆனால், வாழ்க்கையில் நமது வருமானம் குறையும் ஓர் நாள் வரும் என்கிற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
"உனக்கு என்ன தேவை என்று என்னிடம் சொல், அது இல்லாமல் எப்படி வாழ்வது என்பதை நான் உனக்கு கற்றுத் தருகிறேன்." என்று தன் பக்கத்து வீட்டுக்காரரிடம் குவாக்கர் கூறினார்.
இயேசு சொன்னார், ''பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், பேராசையின் எல்லா வடிவங்களுக்கும் எதிராக எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், ஒருவரிடம் எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும், அது அவருடைய ஜீவன் அல்ல" (லூக்கா 12:15 ).
யாக்கோபு குறிப்பிடும் இந்த பணக்காரர்கள், தங்கள் செல்வங்களைக் கொண்டு தங்களை தாங்களே போஷித்து, ஆனால் நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இங்கு யாக்கோபு பயன்படுத்திய கிரேக்க வார்த்தையானது கால்நடைகள் உணவுக்காகக் கொழுக்க வைக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதைச் சித்தரிக்கிறது.
கர்த்தர் நமக்குக் கொடுத்ததை அனுபவிப்பதற்கும் (1 தீமோ. 6:17) மற்றவர்களுக்கு உரியதை எடுத்து ஊதாரித்தனமாகச் செலவு செய்து உல்லாசமாக வாழ்வதற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. நம்மிடம் உள்ளவை சட்டப்படியும், கர்த்தரின் விருப்பப்படியும் சம்பாதித்திருந்தாலும் கூட, அதைச் சுயநல வாழ்வுக்காக வீணாக்கக் கூடாது. இன்றும் இவ்வுலகில் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் அதிகம் உள்ளது.
ஆடம்பரம் நமது நற் பண்புகளை, நல்ல குணங்களை அழிக்கும். ஆடம்பரம் சுய மோகத்தின் ஒரு வடிவம். செல்வமும், நல்ல குணமும் சேர்ந்தால், பல நன்மைகளை உருவாக்க முடியும், ஆனால் சுயநலமும், செல்வமும் சேர்ந்தால், அதன் விளைவு பாவம்.
லூக்கா 16:19-31 இல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து விவரித்த அந்த செல்வந்தரான மனிதரைப் போலவே, யாக்கோபு குறிப்பிட்ட இந்த பணக்காரர்களும் தங்களது உலக வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டதாக எண்ணி மகிழ்ந்திருப்பார்கள்!
அவர்களுடைய
செல்வங்கள் என்ன செய்யும்: what their riches will do (வ 5:1–4)
பணக்காரர்கள் தங்கள் செல்வத்தின் காரணமாக வசதியான வாழ்க்கையை அனுபவிப்பதாக நினைத்தார்கள், ஆனால் கர்த்தரோ அதை வேறுவிதமாக நினைத்தார்.
"உங்கள் மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள்" (யாக். 5:1).
செல்வத்தைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைக் குறித்து இங்கு யாக்கோபு விவரித்தார்.
செல்வங்கள் மறைந்துவிடும்: Riches will vanish (வ. 2-3).
தானியங்கள் அழுகி வீணாகும்; பொன்னும், வெள்ளியும் துருப்பிடிக்கும்; மற்றும் ஆடைகள் பொட்டரித்து போகும் (யாக் 5:2). இந்த உலகில் எந்தப் பொருளும் நிரந்தரமாக இருக்காது. மரணம் மற்றும் சிதைவின் விதைகள் அனைத்து படைப்புகளிலும் காணப்படுகின்றன. செல்வத்தில் பாதுகாப்பு இருப்பதாக நினைப்பது பெரும் தவறு.
பவுல் எழுதினார், "இந்த உலகத்தில் ஐசுவரியமுள்ளவர்கள் கர்வப்படாமலும், நிச்சயமற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வைக்காமலும் இருக்கும்படி அறிவுறுத்து" (1 தீமோ. 6:17).
செல்வங்கள் நிச்சயமற்றவை. பண வர்த்தகம் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது, பங்குச் சந்தையும் ஏற்ற இறக்கமாக இருக்கிறது. உண்மையில் தங்கம், இரும்பைப் போலத் துருப்பிடிக்காது, ஆனால் சொல்ல வந்த கருத்து; தங்கம் அதன் மதிப்பை இழக்கிறது.
அத்துடன் வாழ்க்கை சுருக்கமானது, எந்தவொரு செல்வத்தையும் நாம் மரிக்கும் போது உடன் எடுத்துச் செல்ல முடியாது என்கிற உண்மையையும் மறக்கக்கூடாது.
இந்த உலகப் பொருட்களுக்காக வாழ்வது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நீங்கள் பார்க்கலாம். தேவன் ஐசுவரிய வானிடம், “மதிகேடனே, இந்த இரவில் உன் ஆத்துமா உன்னிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டால், நீ சேகரித்தவை யாருடையவை ஆகும்?” என்றார். (லூக்கா 12:20).
உல்லாச வாழ்க்கை நற்பண்புகளை அழிக்கின்றன: Misused riches erode character (வச. 3).
"அவைகள் உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாகி, உங்கள் சதையை நெருப்பைப் போலத் தின்னும்" (யாக். 5:3).
இது இப்போது செல்வந்தர்கள் அடையும் தீர்ப்பு: செல்வத்தின் விஷம் எனும் கொடும் தீமை அவர்களைத் தொற்றிக்கொண்டு, அவர்கள் உயிரை உண்கிறது.
பணம் பாவம் அல்ல; அது நடுநிலையானது. ஆனால் "பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது" (1 தீமோ. 6:10).
"இச்சியாதிருப்பாயாக" என்பது பத்துக் கட்டளைகளில் கடைசிக் கட்டளை, ஆனால் அது மிகவும் ஆபத்தானது.
ஒரு மனிதனைப் பேராசை பிடித்தால், அது அவனை மற்ற ஒன்பது கட்டளைகளையும் உடைத்து விடச் செய்யும்.
ஆபிரகாம் மிகப் பெரிய செல்வந்தர், ஆனால் அவர் தனது விசுவாசத்தையும், நற்குணத்தையும் இறுதிவரை பேணினார். ஆனால், லோத்து பணக்காரர் ஆனபோது, அது அவரது குணத்தை அழித்து, இறுதியில் அவரது குடும்பத்தையே அழித்தது. உங்கள் மனதைச் செல்வம் ஆட்சி செய்யாமல், அது உங்கள் கையில் இருப்பது நல்லது.
"செல்வம் பெருகினால், அவைகளில் மனதை வைக்காதே" (சங். 62:10).
"மிகுந்த செல்வத்தைவிட நற்பெயர் தெரிந்து கொள்ளப்படத்தக்கது; பொன், வெள்ளியைவிட தயவே நலம்" (நீதி. 22:1)."
நியாயத்தீர்ப்பு உறுதி: Judgement is a certainty (வ.
3,
5).
யாக்கோபு தற்போதைய தீர்ப்பை மட்டும் பார்க்கவில்லை, (அவர்களின் செல்வம் அழிந்து வருகிறது, அவர்களின் குணமும் அழிகிறது), அத்துடன், கர்த்தருக்கு முன்பாக அவர்களது எதிர்கால தீர்ப்பையும் பார்த்தார். இயேசு கிறிஸ்து நியாயாதிபதியாக இருப்பார் (யாக். 5:9), அவருடைய நியாயத்தீர்ப்பு நீதியாக இருக்கும். அந்த நியாயத்தீர்ப்பு நாளில் கர்த்தர் சாட்சிகளையும் அழைப்பார் என்பதைக் கவனியுங்கள். முதலாவதாக, பணக்காரர்களின் செல்வம் அவர்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும் (யாக் 5:3). அவர்களுடைய அழுகிய தானியங்களும், துருப்பிடித்த தங்கமும் வெள்ளியும், அந்துப்பூச்சி உண்ட ஆடைகளும் அவர்களுடைய இதயத்தின் சுயநலத்திற்குச் சாட்சியாக இருக்கும். இங்கே ஒரு சிறிய நகைமுரண் உள்ளது: பணக்காரர்கள் அவர்களுக்கு உதவும் என நம்பி தங்கள் செல்வத்தைச் சேமித்தனர், ஆனால் அவர்களின் பதுக்கப்பட்ட செல்வம் அவர்களுக்கு எதிராக மட்டுமே சாட்சி அளிக்கும். அவர்கள் கொடுக்காமல் வைத்திருந்த கூலி நீதிமன்றத்திலும் அவர்களுக்கு எதிராகச் சாட்சி கொடுக்கும் (யாக். 5:4).
ஆம் பணம் பேசுகிறது! இந்த திருடப்பட்ட சம்பளங்கள் நீதிக்காகவும், தீர்ப்புக்காகவும் இறைவனிடம் முறையிடுகின்றன. ஆபேலின் இரத்தம் தரையிலிருந்து கூக்குரலிட்டதைக் கர்த்தர் கேட்டார் (ஆதி. 4:10). இந்த திருடப்பட்ட பணமும் கூக்குரலிடுவதைக் கேட்கிறார். வேலையாட்களும் அவர்களுக்கு எதிராகச் சாட்சி கூறுவார்கள் (யாக். 5:4). இங்குச் சாட்சிகளுக்கோ, நீதிபதிக்கோ லஞ்சம் கொடுப்பதற்கு, பணக்காரர்களுக்கு வாய்ப்புகள் இருக்காது.
தம்முடைய ஒடுக்கப்பட்ட மக்களின் கூக்குரலைக் கர்த்தர் கேட்கிறார். அவர் நீதியுடன் நியாயந்தீர்ப்பார். இந்தத் தீர்ப்பு ஒரு தீவிரமான விஷயம். தொலைந்து போனவர்கள் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தில் கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்பார்கள் (வெளி. 20:11-15). இரட்சிக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்பார்கள் (ரோமர். 14:10-12; 2 கொரி. 5:9-10). தேவன் நம்முடைய பாவங்களை நியாயந்தீர்க்க மாட்டார், ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே சிலுவையில் நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால் அவர் நம்முடைய செயல்களையும் நமது ஊழியத்தையும் நியாயந்தீர்ப்பார். நாம் அவருக்குச் சேவை செய்வதிலும் மகிமைப்படுத்துவதிலும் உண்மையுள்ளவர்களாக இருந்திருந்தால், நாம் ஒரு வெகுமதியைப் பெறுவோம்; நாம் துரோகம் செய்திருந்தால், நம்முடைய வெகுமதியை இழப்போம், ஆனால் நம் இரட்சிப்பை இழப்போம் (1 கொரி. 3:1-15).
ஒரு பொன்னான வாய்ப்பை இழத்தல்: The Loss of a precious opportunity (வ. 3).
"கடைசி நாட்கள்" என யாக்கோபு சொல்வது, கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது என்ற அவரது நம்பிக்கையைக் குறிக்கிறது (யாக். 5:8-9). நாம் "காலம் தரும் வாய்ப்பை நன்கு பயன்படுத்துக் கொள்ள வேண்டும்" (எபே. 5:16). இது பகல் காலம். நாம் வேலை செய்ய வேண்டும் (யோவான் 9:4).
அந்த பதுக்கி வைத்த செல்வத்தைக் கொண்டு, அந்த சபையின் செல்வந்தர்கள் சாதித்திருக்கக்கூடிய நல்ல செயல்களை நினைத்துப் பாருங்கள். அங்கு உதவி தேவைப்பட்ட பல ஏழைகள் இருந்தனர். கூலி பெறுவதற்குத் தகுதியான தொழிலாளர்கள் இருந்தனர் (யாக். 2:1-6). இந்த நிருபம் எழுதப்பட்ட சில வருடங்களுக்குப் பிறகு யூத தேசம் தோற்கடிக்கப்பட்டுச் சிதறடிக்கப்பட்டது. எருசலேம் அழிக்கப்பட்டது.
பணத்தால் வாங்கக் கூடிய சிறந்த பொருட்களை வீட்டில் வைத்திருப்பது நல்லது தான், ஆனால் பணத்தால் வாங்க முடியாத சில பொருட்களும் உண்டு. $500,000 வீடு இருந்தும் நல்ல குடும்பம் இல்லை என்றால் என்ன பயன்? அல்லது உண்மையாக நேசிக்கும் ஒரு மனைவி இல்லையென்றால் மில்லியன் டாலர் வைர மோதிரத்தால் என்ன பிரயோஜனம்?
யாக்கோபு செல்வங்களையோ பணக்காரர்களையோ கண்டிக்கவில்லை; செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தை நல் வாழ்க்கை வாழும் விதமாகக் கட்டப்படுத்துவதற்குப் பயன்படுத்தாமல், அதைத் தவறான ஆயுதமாகப் பயன்படுத்துவதைக் கண்டித்தார்
இவ்வுலகில் ஏழையாக வாழ்ந்து, ஆனால் அடுத்த உலகத்தில் பணக்காரராக இருக்க முடியும் (யாக். 2:5). இவ்வுலகில் ஐசுவரிய வான்களாகவும் அடுத்த வரும் உலகத்தில் ஏழையாகவும் இருக்க முடியும் (1 தீமோ. 6:17).
இயேசுகிறிஸ்துவின் வருகை, சிலரை ஏழைகளாகவும், சிலரைச் செல்வந்தர்களாகவும் மாற்றும். அது அவர்களின் இதயங்களில் மறைந்து காணப்படும் ஆவிக்குரிய நிலையைப் பொறுத்து.
"உன் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உன் இருதயமும் இருக்கும்" (மத். 6:21).
நாம் எதைப் பிடித்து வைத்துக் கொள்வோமோ, அதை இழக்கிறோம். எதைக் கர்த்தருக்குக் கொடுக்கிறோமோ, அதைப் பெற்றுக் கொள்கிறோம், மேலும் அவர் அதைக் கூடுதலாக ஆசிர்வதித்துத் தருகிறார்.
நீண்ட நேரம் பிரசங்கம் செய்வதற்குப் பெயர் பெற்ற பிரபல பிரசங்கி ஒருவர், ஆண்டுதோறும் ஏழைகளுக்கு உதவி செய்யச் சேகரிக்கப்படும் “காணிக்கை உதவி சொற்பொழிவை” வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவர் அதிக நேரம் செய்தி அளித்தால், அவர்களால் கொடுக்கக் கூடிய காணிக்கை அளவை குறைவாகக் கொடுப்பது எனச் சபையார் தீர்மானித்தனர்.
செய்தி அளித்தவர் நீதிமொழிகள் 19:17-ல் இருந்து வாசித்தார்:
“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்."
அவரது பிரசங்கம் உண்மையில் மிகச் சுருக்கமாக இருந்தது: "நீங்கள் இந்த நிபந்தனை விதிமுறைகளை ஏற்றுக் கொண்டால், உங்கள் பணத்தைக் கீழே வைக்கவும்."
ஆம், பணம் பேசுகிறது. கடைசி தீர்ப்பில் அது உங்களுக்கு என்ன சொல்லும்?
Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.
படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக