அத்தியாயம் பத்து.
முன்னோக்கித் திட்டமிடுங்கள்.
(Plan Ahead)
கர்த்தருக்கு எதிராகப் போர் புரிவதைப் பற்றிப் பேசத் துவங்கி, தேவனது சித்தத்துக்குக் கீழ்ப்படிவதன் அவசியதைக் வலியுறுத்தி இந்த நான்காம் அத்தியாயத்தை யாக்கோபு நிறைவு செய்தார். இந்த இரண்டு கருப்பொருள்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை.
ஒரு விசுவாசி தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படியாமல், அதற்கு எதிராகப் போர் புரியும் போது, அவர் சமாதானத்தை உருவாக்குபவராக இல்லாமல், பிரச்சனை செய்யும் மனிதராக மாறுகிறார்.
லோத்து சோதோமுக்கு இடம் பெயர்ந்ததால் தன் குடும்பத்திற்குள் பிரச்சனையை ஏற்படுத்தினார். தாவீது விபச்சார பாவம் செய்து தன் குடும்பத்துக்கும், தேசத்துக்கும் தொல்லை கொடுத்தார். கர்த்தரது சித்தத்திற்கு யோனா கீழ்ப்படியவில்லை. அதனால் கடல் கடும் கொந்தளிப்படைந்தது. அதில் சிக்கிய புறஜாதியைச் சேர்ந்த கப்பல் மாலுமிகளுக்குக் கடலே கல்லறையாக மாறும் சூழல் உருவானது.
இதில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு நிகழ்வையும் ஆராய்ந்து பார்த்தால், அவர்களது மனப்பாங்கு (Attitude), விருப்பம் (desire), செயல்பட்ட விதம் (Action), ஆகியவை கர்த்தரின் விருப்பத்திற்கு எதிராகப் போர் புரியும் வகையிலிருந்தது.
ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் கர்த்தர் ஒரு சிறந்த திட்டத்தை வைத்துள்ளார். இது வெளிப்படையான உண்மை. அவர் ஞானத்தின் தேவன். ஆகவே நம் வாழ்வில் எது நடக்க வேண்டும், அவை எப்படி நடக்க வேண்டும், அது எப்போது நிகழ வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் அன்பின் தெய்வம், எனவே தனது குழந்தைகளுக்கு எது மிகச் சிறந்ததோ அதையே தருபவர். கர்த்தரின் விருப்பம் என்பது அவரது அன்பின் கருணைக்குச் சான்று, ஆனால் பல கிறிஸ்தவர்கள் அப்படி நினைப்பதில்லை. அவரது விருப்பப்படி செய்வதை ஒரு கசப்பான மருந்தாகப் பார்க்கிறார்கள்.
ஒரு வாலிபர் மாநாட்டில் இளைஞரொருவர் சற்று குழப்பம் நிறைந்தவராய் என்னிடம் வந்து,
"நான் என் உயிரையும் கர்த்தருக்காகக் கொடுப்பேன், ஆனாலும் எனக்குப் பயமாக இருக்கிறது" என்றார்.
"நீங்கள் எதற்காகப் பயப்படுகிறீர்கள்?".
"கர்த்தர், ஆபத்து நிறைந்த ஒன்றைச் செய்யச் சொல்வாரோ என நான் பயப்படுகிறேன்!"
எனது பதில்: கர்த்தருடைய சித்தத்தைச் செய்வதால் வாழ்க்கையில் ஆபத்து என ஒன்று நிச்சயமாக ஏற்படாது, ஆனால் அவரது விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்டால், உறுதியாக அது ஆபத்தானது. எந்த இடத்தில் கர்த்தர் உங்களை வைத்திருக்க விரும்புகிறாரோ, அதுவே இந்த உலகில் உங்களுக்கான மிகச் சிறந்த பாதுகாப்பான இடம்.
சில வருடங்களுக்கு முன்பு, என்னுடைய சொந்த ஊழிய பாதையில் ஒரு கடினமான நேரத்தை நான் கடந்து சென்று கொண்டிருந்தேன். அது ஒரு விடுமுறைக் காலம். இது கர்த்தருடைய சித்தம் தானா? என என்னை நானே கேள்விக்குள்ளாக்கிய சூழல் நிலவியது. நான் சங்கீதப் புத்தகத்தைத் தியானித்துக் கொண்டிருந்தேன். ஆண்டவர் எனக்கு சில உறுதியையும், ஊக்கத்தையும், தரும்படியாக ஜெபித்துக் கொண்டு இருந்தேன். அப்போது அந்த விண்ணப்பத்திற்குச் சங்கீதம் 33:11 பதிலாக இருந்தது:
“கர்த்தருடைய ஆலோசனை நித்திய காலமாகவும், அவருடைய இருதயத்தின் எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலை நிற்கும்’’.
''கர்த்தரது சித்தம் அவரது இருதயத்திலிருந்து புறப்பட்டு வருகிறது, அவருடைய விருப்பம் அவரது அன்பின் வெளிப்பாடு. ஆகையால் அவரது சித்தத்தைச் செய்வதற்கு நான் பயப்பட வேண்டியது இல்லை!" என எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
கர்த்தரின் விருப்பத்தை நேசித்து அதன்படி வாழ்வது, எத்தனை பெரிய ஆசீர்வாதம் என்பதைப் புரிந்து கொண்டது, என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்த திருமறைப் பகுதியில், கர்த்தரின் விருப்பத்தைச் செய்வதில் ஒரு விசுவாசி வெளிப்படுத்தும் மூன்று விதமான அணுகுமுறைகளை யாக்கோபு சுட்டிக்காட்டினார். அவற்றில் ஒன்று மட்டுமே சரியானது. அது ஒவ்வொரு கிறிஸ்தவனும் தனக்குள்ளாக வளர்த்துப் பின்பற்ற வேண்டிய ஒன்று.
1. கர்த்தரின் விருப்பத்தை அலட்சியம் செய்தல் - Ignoring God’s will (4:13–14, 16)
தமது சபையில் உள்ள பணக்கார வணிகர்களுக்காக இந்த பகுதியை யாக்கோபு எழுதியிருக்கலாம். அவர்கள் தங்களது வணிக ஒப்பந்தங்களைப் பற்றி விவாதித்து, எதிர்கால திட்டங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசியிருக்கக் கூடும். அவர்கள் கர்த்தரின் சித்தத்தை நாடியதாகவோ அல்லது சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்காக ஜெபித்ததாகவோ எந்த வித குறிப்புகளும் இல்லை. அவர்கள் தங்களது சொந்த வழி முறைகளைப் பின்பற்றி அதன் வழியாக, தாங்கள் திட்டமிட்ட இலக்கை எத்தனை முறை அடைந்தோம் எனக் கணக்கிட்டு, தங்கள் வாழ்க்கையின் வெற்றியை அளவிட்டார்கள்.
இதன் அடிப்படையில் யாக்கோபு நான்கு வாதங்களை முன்வைத்தார். அது கர்த்தரின் விருப்பத்தை அலட்சியம் செய்வதால் வரும் முட்டாள்தனத்தை உணர்ந்து கொள்ள உதவுகிறது.
வாழ்க்கை சிக்கலானது – The complexity of life (வ. 13).
வாழ்க்கைக்குள் அடங்கி இருக்கும் அனைத்து சம்பவங்களையும் சிந்தித்துப் பாருங்கள்: இன்று - நாளை (Today-Tomorrow), வாங்குவது – விற்பது (Buying-Selling), லாபம் பெறுவது - அதை இழப்பது (Getting gain-Loss), இங்குச் செல்வது - அங்குச் செல்வது (Going here- Going There) எனும் நிகழ்வுகளால் ஆனது..
அது உறவுகள் மற்றும் ஊர்கள் (Relationships & Places), செயல்பாடுகள் மற்றும் குறிக்கோள்கள் (Activities & Goals), நாட்கள் மற்றும் வருடங்களால் (Days & years) நிறைந்தது.
நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளிலும் பல முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். இவற்றுள் கர்த்தரின் சித்தத்தைச் செய்வதைத் தவிர, மற்ற முடிவுகள் அனைத்தும் ஒரு புதிர். அந்த முடிவுகள் வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரியாது.
உண்மையில் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடைய சித்தத்தைச் செய்ய முற்படும்போது, உங்களது வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக மாறத் தொடங்குகிறது.
உங்களைச் சுற்றியுள்ள இந்த நிதர்சன உலகம் கூட புதிய அர்த்தத்தைப் பெறுகிறது. உங்கள் வாழ்க்கையில் எளிமை (simplicity), இசைவுத்தன்மை (harmony) உருவாகி, அது தன்னடக்கத்தையும் (poise), நம்பிக்கையையும் (confidence), உருவாக்குகிறது. நீங்கள் இனி புதிரான, அச்சுறுத்தும் பிரபஞ்சத்தில் வாழவில்லை. "இது என் தந்தையின் உலகம்!" என்று நீங்கள் பாடி மகிழலாம்.
வாழ்க்கை நிச்சயமற்றது – The uncertainty of life (வ. 14a).
இந்தக் கூற்று நீதிமொழிகள் 27:1-ஐ அடிப்படையாகக் கொண்டதுL
“நாளைய தினத்தைக் குறித்து பெருமை பாராட்டாதே; ஒரு நாள் என்ன கொண்டு வரும் என்று உனக்குத் தெரியாது."
இந்த சபையின் தொழிலதிபர்கள் ஒரு முழு வருடத்திற்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தார்கள், ஆனால் தங்களது அடுத்த நாளில் என்ன நிகழும் என்பதைக் கூட முழுமையாக அவர்களால் அறிந்து கொள்ள முடியாது! அவர்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் பேசினார்கள் என்பதைப் பாருங்கள்: “நாங்கள் செல்வோம். ஒரு வருடம் தங்குவோம். வாங்கி விற்று லாபம் ஈட்டுவோம்”. அவர்களின் இந்த மனப்பாங்கு (attitude) லூக்கா 12:16-21 இல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறிய உவமையில் உள்ள செல்வந்தனை நமக்கு நினைவூட்டுகிறது. அந்த மனிதனுக்கு மகத்தான விளைச்சல் கிடைத்தது; அவரது களஞ்சியங்கள் மிகவும் சிறியதாக இருந்தன; ஆகவே அவர் பெரிய களஞ்சியங்களை உருவாக்க முடிவு செய்தார். அதுவே தனது எதிர்காலத்திற்கு அதிக பாதுகாப்பு என நினைத்தார். பின்பு அவர் தனது ஆத்துமாவிடம், ‘ஆன்மாவே, நீ பல வருடங்களாக நிறையப் பொருட்களைச் சேமித்து வைத்திருக்கிறாய்; இளைப்பாறி, புசித்து, குடித்து, களி கூறு” எனச் சொன்னார் (லூக்கா 12:19).
இந்த மனிதனின் பெருமைக்குக் கர்த்தரின் பதில் என்ன? "மதிகேடனே, இந்த இரவில் உன் ஆத்துமா உன்னிடமிருந்து எடுக்கப்பட்டால்" (லூக்கா 12:20).
வாழ்க்கை கர்த்தருக்கு நிச்சயமற்றது அல்ல, ஆனால் அது நமக்கு நிச்சயமற்றது.
நாம் அவருடைய சித்தத்தின்படி வாழும்போது தான் நாளைய தினத்தைக் குறித்து நம்பிக்கையுடன் இருக்க முடியும், ஏனென்றால் அவர் நம்மை வழி நடத்துகிறார் என்பதை அறிவோம்.
வாழ்க்கை குறுகியது – The brevity of life (v. 14b).
வேதத்தில் மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொல்லப்படும் கருப்பொருள்களில் இதுவும் ஒன்று. இது மிக முக்கியமானது.
நமக்கு வாழ்க்கை நீண்டதாகத் தோன்றுகிறது, அதை ஆண்டுகளில் அளவிடுகிறோம், ஆனால் நித்தியத்துடன் ஒப்பிடுகையில், வாழ்க்கை ஒரு புகை.
யாக்கோபு, இந்த உதாரண விளக்கக் காட்சியை யோபின் புத்தகத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்தினார். வாழ்க்கை மிகக் குறுகியது என்பதை விளக்க யோபுவின் புத்தகத்தில் பல உருவகங்கள் சித்தரித்திருப்பதை நம்மால் காண முடியும்.
- "என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவை விட வேகமானவை" (யோபு 7:6).
- "மேகம் பறந்து போகிறது போல" (யோபு 7:9).
- "பூமியில் நமது நாட்கள் ஒரு நிழல்" (யோபு 8:9).
- "இப்போது என் நாட்கள் அஞ்சற்கார் ஓட்டத்திலும் வேகமானவை" (யோபு 9:25), இது செய்திகளை அரசனிடம் அறிவிக்க விரைந்து ஓடிய அரச சேவகர்களைக் குறிக்கிறது.
- "வேகமாய் ஓடும் கப்பல்களைப் போலவும், இரையின் மேல் பாய்கிற கழுகைப் போலவும் கடந்து செல்கிறது" (யோபு 9:26).
- "பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு; வருத்தமோ மிகுதி. மலர்போல் பூத்து அவர்கள் உலர்ந்து போகின்றனர்; நிழல்போல் ஓடி அவர்கள் நிலையற்றுப் போகின்றனர். (யோபு 14:1-2).
நாம் ஒவ்வொரு பிறந்தநாளையும் ஆண்டுகளை அளவாக வைத்து அதைக் கணக்கிடுகிறோம், ஆனால் நம் நாட்களை எண்ணும் படியாகக் கர்த்தர் சொல்கிறார் (சங். 90:12).
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நாளின், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே நம்மால் நிச்சயத்துடன் செயல் புரிய முடியும். அந்த நாட்களும் மிக விரைவாக விரைந்து செல்கின்றன.
ஆக நம் வாழ்க்கை காலம் மிகக் குறுகியதாக இருப்பதால், வாழ்க்கையை வெறும் பொழுது போக்காகச் செலவு செய்யக்கூடாது. இந்த உண்மை புரிந்தால், குறுகிய வாழ்க்கையை நாம் நிச்சயமாக வீணடிக்க விரும்ப மாட்டோம். ஆகவே நமது நேரங்களை நித்தியமான விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டும்.
கர்த்தர் தம்முடைய சித்தத்தை அவருடைய வார்த்தையின் வழியாக வெளிப்படுத்துகிறார். ஆனாலும் பெரும்பாலான மக்கள் திருமறையின் போதனைகளை அலட்சியம் செய்கிறார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நம்மை வழி நடத்தக்கூடிய கட்டளைகள் (precepts), கொள்கைகள் (principles) மற்றும் வாக்குறுதிகளை (Promises) திருமறை வழியாகக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அந்த தேவனுடைய வார்த்தையை உணர்ந்து அதற்குக் கீழ்ப்படிவதே வெற்றிக்கான உறுதியான வழி (யோசு. 1:8; சங். 1:3).
மனித இயலாமை – The frailty of man (வச. 16).
"இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மை பாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மை பாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது".
மனிதன் பெருமையுடன் பேசுவது அவனது பலவீனத்தை மட்டுமே மறைக்கிறது. "மனிதன் முன்மொழிகிறான் ஆனால் கர்த்தர் அதை நிராகரிக்கிறார்" என்று தாமஸ் எ கெம்பிஸ் எழுதினார். இதை சாலொமோன் தான் முதலில் கூறினார்: "சீட்டு மடியில் போடப்படும்; காரிய சித்தியோ கர்த்தரால் வரும்" (நீதி. 16:33).
மனிதனால் எதிர்கால நிகழ்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது. அவனுக்கு எதிர் காலத்தைப் பார்க்கும் ஞானமோ, அல்லது அதைக் கட்டுப்படுத்தும் சக்தியோ கிடையாது. அவன் பெருமை பேசுவது பாவம்; அது அவனை இறைவனாக்குகிறது. கர்த்தரின் விருப்பத்தைச் செய்யாமல், அதை மக்கள் புறக்கணிப்பது எவ்வளவு முட்டாள்தனம். இது ஒரு வழிகாட்டும் வரைபடம் இல்லாமல் இருண்ட காடுகளின் வழியாகச் செல்வதற்கு ஒப்பானது. அல்லது திசைகாட்டி இல்லாமல் கொந்தளிப்பான கடல் வழியாகக் கப்பலைச் செலுத்துவது போன்றது.
நாங்கள் கென்டக்கியில் உள்ள மம்மத் குகைக்குச் சென்றபோது, சுரங்கப்பாதைகள் எங்களுக்குப் பிரமை ஏற்படுத்தியது. அப்போது விளக்குகள் அணைக்கப்பட்டது. அடர்ந்த இருள் எங்களைச் சூழ்ந்தது. அது "பிரசங்க பீட பாறை (Pulpit Rock)" என்கிற இடம். அப்போது சுற்றுப்பயணத்தின் வழிகாட்டி ஓர் ஐந்து வார்த்தை பிரசங்கம் செய்தார்: "உங்கள் வழி காட்டுனருக்கு நெருக்கமாக இருங்கள் (stay close to your guide)." அது உண்மையில் நல்ல ஆலோசனை!
2. கர்த்தரின் விருப்பத்தை மீறுதல் – Disobeying God’s Will (4:17)
இந்த சபையின் மக்கள் கர்த்தரின் விருப்பத்தை அறிந்திருக்கிறார்கள், ஆனால் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் மனது இல்லை. இந்த மனப்பாங்கு கர்த்தரின் விருப்பத்தை அலட்சியப் படுத்துவதை விட அதிக பெருமையை வெளிப்படுத்துகிறது; ஏனெனில் அவர்கள் மனதில் கர்த்தரிடம் கூறுவது,
‘’நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீர் எதிர்பார்ப்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் இதைக் குறித்து உம்மை விட எங்களுக்கு அதிகம் தெரியும்!”
"அவர்கள், நீதியின் வழியை அறிந்த பின்பும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்தக் கட்டளையை விட்டு விலகுவதை விட, அதை அவர்கள் அறியாமல் இருந்திருந்தால், அது அவர்களுக்கு நலமாயிருக்கும்" (2 பேதுரு 2:21).
கர்த்தரின் சித்தத்தை அறிந்தவர்கள் ஏன் வேண்டுமென்றே அதற்குக் கீழ்ப்படிவதில்லை? ஏற்கனவே ஒரு காரணத்தை நான் பரிந்துரைத்துள்ளேன்: அது பெருமை. "தான் தான் தனது வாழ்க்கையின் எஜமானன், தனது ஆன்மாவின் தலைவன்" என்று மனிதன் பெருமை பேச விரும்புகிறான். தன்னால் எதையும் செய்ய முடியும் என்று எண்ணும் அளவுக்கு அவன் பல அற்புதங்களைச் செய்துவிட்டான்.
மற்றொரு காரணம், கர்த்தரது சித்தத்தின் தன்மையை (Nature of God’s will) பற்றிய அவனது அறியாமை. கர்த்தரின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம் என்பது போல் அவன் செயல்படுகிறான்.
உண்மையில், கர்த்தரின் சித்தத்தைச் செய்வது என்பது ஒரு தெரிவு அல்ல; அது கடமை (Not an option; it is an obligation). நாம் "விருப்பப்பட்டால் அதைக் கடைப் பிடிக்கவோ அல்லது விட்டுவிடவோ" முடியாது.
அவர் படைப்பாளர், நாம் படைப்புகள். நாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அவர் இரட்சகர். நாம் அவருடைய பிள்ளைகள். அவர் ஆண்டவர். நாம் அவரது வேலையாட்கள். ஆகவே அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். கர்த்தரின் விருப்பத்தை இலேசாக எடுத்துக் கொள்வது என்பது நம் வாழ்வில் அவரது தண்டனையை அழைப்பதாகும்.
கர்த்தரின் விருப்பத்தின்படி வாழ்வது துன்பத்திற்கான ஒரு சூத்திரம் எனும் தவறான எண்ணம் பலருக்கு உள்ளது, ஆனால் உண்மை இதற்கு நேர் மாறானது! இறைவனின் விருப்பத்தை மீறுவதே துன்பத்திற்கு வழிவகுக்கும். திருமறையும், பல மனிதர்களின் அனுபவங்களும் இந்த உண்மைக்குச் சாட்சி. கீழ்ப்படியாத ஒரு கிறிஸ்தவர் இந்த வாழ்க்கையின் கஷ்டத்திலிருந்து தப்பிப்பது போல் தோன்றினாலும், அவர் கர்த்தரை எதிர்கொள்ளும்போது என்ன பதில் சொல்வார்?
““எந்த வேலைக்காரன் தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்து, தன்னை ஆயத்தப்படுத்தாமலும், அவருடைய சித்தத்தின் படியும் செய்யாமலும் இருக்கிறானோ, அவன் பல அடிகளால் அடிக்கப்படுவான். ஆனால், அறியாமல், அடிகளுக்குப் பாத்திரமானவற்றைச் செய்தவன், சில அடிகளால் அடிக்கப்படுவான்" (லூக்கா 12:47-48).
தேவ சித்தத்தை நன்கு அறிந்தும், வேண்டுமென்றே அதற்குக் கீழ்ப்படியாத கிறிஸ்தவர்களுக்கு என்ன நடக்கும்?
அவர்கள் தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் வரை தங்கள் அன்பான பிதாவால் தண்டிக்கப்படுகிறார்கள் (எபி. 12:5-11). விசுவாசி என்று கூறப்படும் ஒருவர் தவறு செய்தும் தண்டிக்கப்படாவிட்டால், அவர் உண்மையில் மீண்டும் பிறக்கவில்லை, மாறாகப் போலியானவர் என்பதற்கு அதுவே சான்றாகும்.
ஒரு விசுவாசி தவறு செய்யும் போது அவர் தண்டிக்கப்பட்டால், கர்த்தர் அவர் மீது அன்பாக இருக்கிறார் என்பதற்கு அதுவே ஆதாரமாகும். கர்த்தர் அவரை வெறுக்கிறார் என நாம் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பூமிக்குரிய தகப்பர்களாகிய நாம் நம் பிள்ளைகள், உயர்ந்த நிலை அடைய, மதிப்பு மிக்கதொரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகக் கண்டித்து நாம் சொல்லும் படி கீழ்ப்படிந்து நடக்கக் கட்டளையிடுகிறோம். அது போல, நம்முடைய பரலோகத் தகப்பனும் நம்மை நேசிப்பதால், தவறு செய்தால் தண்டித்து நம்மை வழி நடத்துகிறார்.
கர்த்தரின் சிட்சை எனும் வாழ்க்கை பாடம் கடினமாக இருந்தாலும், நாம் அவருடைய பிள்ளைகள் என்கிற அந்த உண்மை ஆறுதலைத் தருகிறது.
கர்த்தரின் சித்தத்தைச் செய்யாமல் அவரது வார்த்தையை மீறுவதால் பரலோக வெகுமதிகளை இழக்கும் அபாயமும் உள்ளது. 1 கொரிந்தியர் 9:24-27ல், பவுல் விசுவாசியைக் கிரேக்கப் பந்தயங்களில் ஓடுபவர்களுடன் ஒப்பிட்டார். அவர்கள் கிரீடத்தைப் பெறுவதற்கு, விளையாட்டின் விதி முறைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். எதாவது ஒரு போட்டியாளர் விதிகளை மீறியதாகக் கண்டு பிடிக்கப்பட்டால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார். 1 கொரிந்தியர் 9:27 இல் பவுல் பயன்படுத்தும் ‘’ஆகாதவனாய் போகாதபடி (castaway)’’ என்ற வார்த்தை இரட்சிப்பை இழந்து போவீர்கள் எனக் கூறவில்லை, மாறாக வெகுமதியை இழந்து போவீர்கள் (Disqualified) என எச்சரிக்கிறது. உங்கள் "தகுதியை இழப்பீர்கள்" என்பது ஒரு நல்ல மொழிபெயர்ப்பாக இருக்கும்.
இன்று தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படியாமல் வாழ்வது நமக்கு ஒரு பெரிய குற்றமாகத் தோன்றவில்லை, ஆனால் கர்த்தர் திரும்பி வந்து நம்முடைய செயல்களை நியாயம் தீர்க்கும் போது அது எவ்வளவு பெரிய இழப்பு எனப் புரியும் (கொலோ. 3:22-25).
3. கர்த்தருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிதல் – Obeying God’s Will (4:15)
"ஆண்டவருக்குச் சித்தமானால்" என்பது ஒரு உண்மையான விசுவாசியின் உதடுகளிலிருந்து வெளிப்படும் வெறும் சடங்கான வெற்றுப் பேச்சல்ல: அது அவரது இதயத்தின் மாறாமல் இருக்கும் நிலையான மனப்பான்மை ஆகும்.
"என்னை அனுப்பியவரின் சித்தத்தின்படி செய்து, அவருடைய பணியை முடிப்பதே எனது உணவு" என்றார் இயேசு (யோவான் 4:34).
பவுல் தனது கடிதங்களில், எதிர் கால திட்டங்களைத் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது பெரும்பாலும் ‘’கர்த்தருக்குச் சித்தமானால்’’ எனக் குறிப்பிட்டார் (ரோ. 1:12; 15:30; 1 கொரி. 4:19; 16:7).
கர்த்தரின் விருப்பத்தின் படி செய்வதை, ஒரு சங்கிலியால் கட்டப்பட்ட சிறைக்கைதி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு செய்வதைப் போலக் கருதி பவுல் செய்யவில்லை; மாறாக, அது அடைக்கப்பட்ட கதவுகளைத் திறந்து அவரை விடுவித்த ஒரு திறவுகோலாகக் கருதினார்.
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒரு ஒழுங்கு விதியின்படி இயங்குகின்றன. நாம் இந்த சட்டங்களுடன் ஒத்துழைத்து, அவற்றைக் கடைப்பிடித்தால், பிரபஞ்சம் நம்முடன் இணைந்து செயல்படுகிறது. நாம் இந்த சட்டங்களை எதிர்த்துப் போராடி, அவற்றை மீறி செயல் பட்டால், பிரபஞ்சம் நமக்கு எதிராக வேலை செய்யும். உதாரணமாக, சில இயற்பியல் சட்டங்கள் விமானம் பறப்பதை நிர்வகிக்கின்றன. ஒரு விமானத்தை வடிவமைக்கும் போது அந்த விதிகளைக் கடைப்பிடித்து விமானத்தைப் பொறியாளர் உருவாக்குகிறார். அதை ஓட்டுவதில் இருக்கும் நியமங்களை விமானி கடைப்பிடிக்கிறார். அதனால் அந்த விமானத்தின் பெரிய இயந்திரம் சரியாகச் செயல்படுவதைக் கண்டு இருவரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் அவர்கள் அந்த விமானத்தை நிர்வகிக்கும் அடிப்படை சட்டங்களை மீறினால், விளைவு விபத்து. உயிர் மற்றும் பண இழப்பு ஆகும்.
நம் வாழ்வுக்கான கர்த்தரின் விருப்பம் என்பதை, பிரபஞ்சம் இயங்குவதற்கு அவர் உருவாக்கிய சட்டங்களுடன் ஒப்பிடலாம், அந்தச் சட்டங்கள் பொதுவானவை, ஆனால் இதில் விதிவிலக்கும் உண்டு: நம் வாழ்விற்காகத் திட்டமிட்டுள்ள அவரது விருப்பம் நமக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான இரண்டு வாழ்க்கை திட்டமிடப்படவில்லை.
ஆனால், எல்லா கிறிஸ்தவர்களுக்கும் உண்மையாகக் கடைப்பிடிக்க வேண்டிய சில பொதுவான பண்புகள் உள்ளன.
- நம்மை அவருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பது கர்த்தரின் விருப்பம் (2கொரி. 8:5).
- நாம் பாலியல் அசுத்தங்களுக்கு விலகி வாழ வேண்டும் என்பது கர்த்தரின் விருப்பம் (1தெச. 4:3).
- எல்லா விசுவாசிகளும் கர்த்தருக்குள் சந்தோஷப்பட, ஜெபிக்க, நன்றி சொல்ல வேண்டும் (1தெச. 5:16-18).
திருமறையில் உள்ள ஒவ்வொரு கட்டளையும், விசுவாசிகள் கீழ்ப்படிந்து பின்பற்றுவதற்காகக் கொடுக்கப்பட்ட கர்த்தரின் சித்தத்தின் ஒரு பகுதியாகும், அவை கண்டிப்பாகக் கடைப் பிடிக்கப்பட வேண்டும்.
ஆனால் கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் ஒரே விதமாக வேலை செய்வதற்கு அழைப்பதில்லை, அல்லது அதே வரங்களையும் ஊழியத்தையும் பயன் படுத்துவதில்லை. கர்த்தரின் சித்தம் நம் ஒவ்வொருவருக்கும் "பிரத்தியேகமானது"!
கர்த்தரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு நாம் சரியான மனப்பான்மையைக் கொண்டிருப்பது முக்கியம். சிலர் கர்த்தரின் சித்தத்தைச் செய்வது என்பதைக் கடினமான குளிர்ந்த இயந்திரத்தை இயக்குவதற்கு ஒப்பாக நினைக்கிறார்கள். கர்த்தர் இயக்கத்தைத் தொடங்குகிறார், ஆனால் அதைச் சீராகச் செயல்பட வைப்பது நம் கையில் உள்ளது. நாம் ஏதாவது ஒரு காரியத்தில் அவருக்குக் கீழ்ப்படியாமல் போனால், இயந்திரம் செயலிழந்துவிடும், அதனால் வாழ்நாள் முழுவதும் கர்த்தரின் விருப்பத்திற்குப் புறம்பாகச் செயல்படுவோம். கர்த்தரின் விருப்பம் குளிர்ந்த கடினமான இயந்திரம் அல்ல, ஆனால் அதே சமயம் அது தானியங்கி விற்பனை இயந்திரத்திலிருந்து குளிர்பானத்தைப் பெறுவது போன்று எளிமையான வழியில் தீர்மானிப்பதும் அல்ல.
கர்த்தரின் சித்தத்தைச் செய்வது என்பது ஆண்டவருக்கும், விசுவாசிக்கும் இடையே உள்ள ஒரு உயிர்ப்பான உறவு.
விசுவாசி ஆண்டவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாத போது இந்த உறவு முறிக்கப்படுவதில்லை, ஏனென்றால் தந்தை தனது குழந்தையை இன்னும் நேசிக்கிறார். அவர் கடினமாக சிட்சிக்க வேண்டியிருந்தாலும் கூட விட்டு விலகாமல் உடன் இருக்கிறார். கர்த்தரின் விருப்பம் செய்வதை ஒரு குளிர்ந்த இயந்திரத்துடனான உறவாகப் பார்ப்பதற்குப் பதிலாக, அதை ஒரு பாதுகாப்புடன் வளரும் உயிருள்ள உடலாகப் பார்க்க விரும்புகிறேன்.
என் உடலில் உள்ள ஒரு உறுப்பில் ஏதேனும் பாதிப்பு இருந்தாலும் கூட, நான் உடனே இறந்து விட மாட்டேன். அந்த பாதிக்கப்பட்ட உறுப்பு மீண்டும் சரியாக வேலை செய்யும் வரை உடலின் மற்ற பாகங்கள் அதை ஈடுசெய்கிறது. வலி உள்ளது; பலவீனமும் உள்ளது; ஆனால் அதற்காக மரணம் நேரிட வேண்டும் எனும் அவசியம் இல்லை.
நீங்களும் நானும் கர்த்தரின் விருப்பத்தைச் செய்வதிலிருந்து விலகுவது எல்லாவற்றிற்குமான தீர்வாகாது. நாம் கஷ்டப்படுகிறோம். அது உண்மை. ஆனால் உடலின் ஒரு பகுதியின் செயலிழப்பை மற்ற உறுப்புகள் ஈடுசெய்வது போல, கர்த்தர் நம்மைத் தம் விருப்பத்திற்குத் திரும்பக் கொண்டுவர நம் மீது ஆளுகை செய்து நம்மைச் சரிசெய்கிறார். இது ஆபிரகாம், யோனா போன்ற தேவ மனிதர்கள் வாழ்வில் தெளிவாக விளக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்.
கர்த்தரின் சித்தத்தைச் செய்வதற்குக் கீழ்ப்படிந்து, அதன் படி வாழும் விசுவாசியின் உறவு தொடர்ந்து வளரும் ஒரு அனுபவம். முதலில், நாம் அவருடைய சித்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் (அப் 22:14). அவரது விருப்பத்தைக் கண்டுபிடிப்பது கடினம் அல்ல. நாம் கீழ்ப்படியத் தயாராக இருந்தால், அதை அவர் வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறார் (யோவான் 7:17).
"கீழ்ப்படிதல் என்பது ஆவிக்குரிய அறிவின் ஓர் அவயம் (obedience is the organ of spiritual knowledge)" என்று கூறப்படுகிறது. இது உண்மைதான். வெற்று ஆர்வம் உள்ளவர்கள் அல்லது அலட்சியமாகக் கவனக்குறைவுடன் இருப்பவர்களுக்கு, கர்த்தர் தமது சித்தத்தை வெளிப்படுத்தாமல், மனப்பூர்வமாக அவரது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியத் தயாராக இருப்பவர்களுக்கே அதை வெளிப்படுத்துகிறார்.
ஆனால் நாம் கர்த்தருடைய சித்தத்தில் சிலவற்றை அறிந்து கொள்வதோடு நின்று விடக்கூடாது. "அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலும், சகல ஞானத்தினாலும், ஆவிக்குரிய அறிவினாலும் நிரப்பப்பட வேண்டும்" என்று அவர் விரும்புகிறார் (கொலோ. 1:9).
சில குறிப்பிட்ட விஷயங்களில் தேவ சித்தத்தைத் தெரிந்து கொள்ள விரும்புவதும் சில விஷயங்களில் அவருடைய சித்தத்தைப் புறக்கணிப்பதும் தவறு. நம் வாழ்வில் உள்ள ஒவ்வொரு பகுதிகளும் கர்த்தருக்கு முக்கியமானது. நம் வாழ்வின் அனைத்துப் பகுதிகளுக்கும் அவரிடம் ஒரு திட்டம் உள்ளது.
தேவ சித்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் (எபே. 5:17). இங்குதான் ஆவிக்குரிய ஞானம் தேவைப் படுகிறது. ஒரு குழந்தைக்குத் தனது தந்தையின் விருப்பம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும், ஆனால் அதை ஏன் விரும்புகிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கக் கூடும். குழந்தைக்கு "என்ன" எதிர்பார்க்கிறார் எனத் தெரியும் ஆனால் "எதற்காக" எதிர்பார்க்கிறார் எனத் தெரியாது. ஆனால் இயேசு கிறிஸ்துவின் "சினேகிதர்கள்" என்ற முறையில், கர்த்தர் எதற்காக அப்படிச் செய்கிறார் என்பதை அறியும் பாக்கியம் நமக்கு இருக்கிறது (யோவான் 15:15).
"அவர் மோசேக்குத் தம்முடைய வழிகளையும், இஸ்ரேல் புத்திரருக்குத் தமது கிரியைகளையும் அறிவித்தார்" (சங். 103:7).
கர்த்தர் என்ன செய்கிறார் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்திருந்தார்கள், ஆனால் அவர் அதை ஏன் செய்கிறார் என்பதை மோசே மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது. நாம் தேவனுடைய சித்தத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் (ரோமர் 12:2). அந்த கிரேக்க வினைச்சொல்லின் அர்த்தம் "அனுபவத்தால் நிரூபிப்பது". கர்த்தருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்வதன் மூலம் அதை அனுமானிக்கக் கற்றுக்கொள்கிறோம்.
கர்த்தருக்கு நாம் எவ்வளவு அதிகமாகக் கீழ்ப்படிகிறோமோ, அவ்வளவு எளிதாக எதற்காக அதைச் செய்ய விரும்புகிறார் என்பதையும் கண்டுபிடிக்க முடியும். இது நீச்சல் கற்றுக் கொள்வது அல்லது இசைக்கருவியை வாசிப்பது போன்றது. இறுதியில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை "உணர்வுப்பூர்வமாக அனுபவிப்பீர்கள்".
அது உங்கள் வாழ்வின் இரண்டாவது இயல்பாகி விடுகிறது.
“எனது வாழ்க்கைக்கான கர்த்தரின் விருப்பத்தை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது?” என்று தொடர்ந்து கேட்கும் மக்கள், தாங்கள் ஒருபோதும் கர்த்தருடைய சித்தத்தைச் செய்ய முயற்சி செய்யவில்லை என்று அனைவருக்கும் அறிவிக்கின்றனர்.
நீங்கள் உங்களுக்குத் தெரிந்த கர்த்தரின் விருப்பத்தைச் செய்யத் தொடங்குங்கள், அதை நிறைவேற்றும் போது, நீங்கள் அடுத்துச் செல்ல வேண்டிய பாதைக்கான வழியை அவர் காண்பிப்பார். கர்த்தரின் விருப்பம் என்ன என்பதை நீங்கள் கற்று, அதை அனுபவத்தின் மூலம் நிரூபிக்கிறீர்கள். இதனால் வெற்றி தோல்வி இரண்டையும் கற்றுக் கொள்கிறோம். "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்" (மத். 11:29). கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தவை, அதைப் பின்பற்றி நடப்பது, இந்த இரண்டையும் இணைத்து ஒன்றாக நடக்க நுகம் நம்மை அறிவுறுத்துகிறது.
இறுதியாக, தேவ சித்தத்தை இதயத்திலிருந்து மனப்பூர்வமாக நாம் செய்ய வேண்டும் (எபே. 6:6).
யோனா கர்த்தரின் சித்தத்தை அறிந்தார் (ஒரு அடித்த பிறகு), கர்த்தரின் விருப்பத்தைச் செய்தார், ஆனால் அதை அவர் தனது இதயத்திலிருந்து செய்யவில்லை. கோபமான தீர்க்கதரிசி உண்மையாகக் கர்த்தரை நேசிக்கவில்லை, நினிவே மக்களை நேசிக்கவில்லை என்பதை யோனா 4 சுட்டிக்காட்டுகிறது. அவர் இன்னொரு முறை அடிபடாமல் இருக்கக் கர்த்தரின் சித்தத்தைச் செய்தார்!
கொடுப்பதைப் பற்றி பவுல் சொன்னது தேவ சித்தத்தைச் செய்வதற்கும் பொருந்தும்: "கட்டாயத்தினாலும், ஆதாயத்திற்காகவும் அல்ல, மகிழ்ச்சியுடன் கொடுப்பவரையே தேவன் விரும்புகிறார்" (2 கொரி. 9:7). Grudgingly என்றால் "தயக்கத்துடன், வலியுடன்" என்று பொருள். கர்த்தருடைய சித்தத்தைச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. வேறு வழியில்லாமல் என்பதைக் குறிப்பது தான் "கட்டாயத்தினாலும்" என்ற வார்த்தை. இந்த மக்கள் கீழ்ப்படிகிறார்கள் ஏனெனில் அவர்களுக்கு வேறு வழியில்லை. அதைச் செய்ய வேண்டும், அவர்கள் விரும்புவதால் அல்ல. அவர்களின் இதயம் அதில் இல்லை.
மகிழ்ச்சியான வாழ்க்கையின்
ரகசியம் கடமையில் மகிழ்ச்சி அடைவதே. கடமை மகிழ்ச்சியாக மாறினால், சுமைகள் ஆசீர்வாதங்களாக மாறும்.
"நான் பரதேசியாய்த் தங்கும் விட்டிலே உமது நியமங்கள் எனக்கு
கீதங்களாயின" (சங். 119:54).
நாம் கர்த்தரை நேசிக்கும்போது, அவருடைய சட்டங்கள் எனக்குப் பாடல்களாக மாறும். நாம் அவருக்குச் சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
நாம் கர்த்தருக்கு மனமுவந்து சேவை செய்யாமல், வேண்டா வெறுப்பாகச் செய்தால், அவருடைய வேலையை நிறைவேற்றலாம், ஆனால் ஆசீர்வாதத்தை இழக்க நேரிடும். அது கூலிக்காக மாரடித்தது போல இருக்கும். அது ஊழியம் அல்ல, ஆனால் நாம் கர்த்தருடைய சித்தத்தை இதயத்திலிருந்து மனப்பூர்வமாகச் செய்யும்போது, அது எவ்வளவு கடினமான பணியாக இருந்தாலும், நாம் மகிழ்ந்து மன நிறைவுடன் இருக்கிறோம்.
கர்த்தருடைய சித்தத்தை அறிந்து கொள்வதில் அல்லது அதை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்தால், அது இறைவனுடனான நமது உறவை நிரந்தரமாகப் பாதிக்கும் என்று ஒருபோதும் நினைக்கக்கூடாது. நாம் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு அவருடைய மன்னிப்பைப் பெறலாம் (1 யோவான் 1:9). தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால், கர்த்தரை நேசிக்கும் இதயம், அவருடைய சித்தத்தைச் செய்வது, அவருடைய பெயரை மகிமைப்படுத்த உண்மையாக விரும்புவது.
கர்த்தரின் விருப்பத்தைச் செய்வதால் என்ன பலன்கள் கிடைக்கும்?
- நீங்கள் இயேசு கிறிஸ்துவுடன் ஆழமான கூட்டுறவை அனுபவிக்கிறீர்கள் (மாற்கு 3:35).
- கர்த்தரின் சத்தியத்தை அறிந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கிடைக்கும் (யோவான் 7:17).
- உங்கள் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்கும் (1 யோவான் 5:14-15).
- தேவன் விரும்புவதைச் செய்யும் மனிதனோ என்றென்றும் வாழ்கிறான் (1 யோவான் 2:15-17).
- நிச்சயமாக, இயேசு கிறிஸ்துவின் வருகையில் வெகுமதியை எதிர்பார்க்கலாம் (மத். 25:34).
கர்த்தரின் சித்தத்தைச் செய்வதில், இந்த மூன்று மனப்பான்மைகளில்
எது உங்களிடம் உள்ளது?
- உங்கள் தினசரி திட்டங்களையும், முடிவுகளையும் எடுக்கும்போது கர்த்தரின் விருப்பத்தை முற்றிலும் புறக்கணிக்கிறீர்களா?அல்லது
- நீங்கள் கர்த்தரின் சித்தத்தை அறிந்திருந்தும், அதற்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்களா?
இந்த இரண்டு அணுகுமுறையும் தவறானது. இதைக் கடைப் பிடிப்பவரின்
வாழ்க்கையில் துக்கத்தையும் அழிவையும் மட்டுமே அது கொண்டு வரும்.
ஆனால் கர்த்தருடைய சித்தத்தை அறிந்து, அதை நேசித்து, கீழ்ப்படிகிற கிறிஸ்தவர்கள்
கர்த்தரின் ஆசீர்வாதத்தை அனுபவிப்பார். அவரது வாழ்க்கை எளிதாக இருக்காது, ஆனால் அது புனிதமாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்.
அவருடைய உணவே தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதாக இருக்கும்
(யோவான் 4:34); அது அவர் உள்ளத்தின் பிரியமானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும் (சங்.
40:8).
Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.
படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.


