அத்தியாயம் ஒன்பது:
போர்களை எப்படி முடிப்பது?
How to End Wars?
"விஸ்கர்ஸ் போர் (War of the Whiskers)" அல்லது "ஓகன் பக்கெட் போர் (War of the Oaken Bucket)" குறித்து எப்போதாவது கேள்விப்பட்டதுண்டா?" ஜென்கின்ஸ் போர் ('War of Jenkins' Ear) குறித்து? இவை தேசங்களுக்கு இடையே நடந்த உண்மையான போர்கள். பெரும்பாலான வரலாற்று புத்தகங்களில் அவற்றைக் குறித்துப் படிக்கலாம்.
உலக அமைதி அமைப்புகள், அணு குண்டுகளின் அச்சுறுத்தல்,ஒப்பந்தங்கள், இவை யாவும் இருந்த போதிலும், போர் என்பது வாழ்க்கையின் நிதர்சனம். இன்று நாடுகளுக்கு இடையே மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஏதாவது ஒரு வகையான போர் நிகழ்கிறது - வாகனத்திற்கு எரி வாயு நிரப்பும் நிலையத்தில் பணிபுரிபவர்களுடன் கூட!
இந்த தியானப் பகுதியில் போரின் முக்கியமான காரணம் எது எனும் கருப்பொருளைப் பற்றி யாக்கோபு விவாதித்தார். உலகில் மூன்று விதமான ஆவிக்குரிய போர்கள் நடக்கின்றன என்றும், இந்தப் போர்களை எதிர்த்து எப்படி வெற்றி பெறுவது என்றும் இந்தப் பகுதியில் விளக்கி உள்ளார்.
1. ஒருவருக்கு விரோதமாக மற்றவர் சண்டையிடுதல் - At War with Each Other (4:1a, 11–12):
"உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதனாலே வருகிறது?"
கிறிஸ்தவ விசுவாசிகள் மத்தியில் போர்கள்!
"இதோ, சகோதரர் ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லதும், எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதுமாய் இருக்கிறது!" (சங். 133:1).
நிச்சயமாக, சகோதர சகோதரிகள் அன்புடனும் நல்லிணக்கத்துடனும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும், ஆனால் பெரும்பாலும் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. லோத்து தனது மாமா ஆபிரகாமுடன் சண்டையிட்டார் (ஆதி. 13). அப்சலோம் தனது தந்தை தாவீதுக்கு எதிராக ஒரு போரை உருவாக்கினார் (2 சாமு. 13-18). ஆண்டவருடைய சீடர்கள் கூட ராஜ்யத்தில் யார் பெரியவர் என்று வாதிட்டு கர்த்தருக்குப் பிரச்சினைகளை உருவாக்கினர் (லூக்கா 9: 46-48).
சில ஆதி திருச்சபையின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்த்தால், சபை விசுவாசிகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததைக் காண முடிகிறது. கொரிந்து சபையின் விசுவாசிகள் சபைக் கூட்டங்களில் ஒருவரோடு ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தனர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர் (1கொரி. 6:1-8; 14:23-40). கலாத்திய சபை விசுவாசிகள் ஒருவரையொருவர் "கடித்து பட்சித்தனர்" (கலா. 5:15). எபேசு சபையில் ஆவிக்குரிய ஒற்றுமையை வளர்க்க பவுல் அறிவுறுத்த வேண்டியிருந்தது (எபே. 4:1-16). அவருக்குப் பிரியமான பிலிப்பு சபையிலும் கூட பிரச்சினைகள் இருந்தன: இரண்டு சகோதரிகள் ஒருவரோடு ஒருவர் இணைந்து செல்ல முடியவில்லை (பிலி. 4:1-3). பரிசுத்தமான விசுவாசிகளுக்கிடையே கூட பல்வேறு வகையான கருத்து வேறுபாடுகள் இருந்தது என யாக்கோபு குறிப்பிட்டார்.
வர்க்கப் போர்கள் - Class Wars (2:1–9).
இது கால காலமாக இவ்வுலகில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையில் நிகழும் நீண்ட நெடிய போர். பொதுவாகப் பணக்காரன் பிறர் கவனத்தை ஈர்க்கிறார், ஏழை புறக்கணிக்கப்படுகிறான். பணக்காரன் மதிக்கப்படுகிறார், ஏழை இழிவாக நடத்தப்படுகிறார். ஆனால், திருச்சபையும் கூட தனது மதிப்பீடுகளைக் குழப்பிக் கொண்டு, பணத்தை வைத்து ஒருவரை மதிப்பது, ஏழைகளைப் புறக்கணிப்பது அல்லது அவர்களை நிராகரிப்பது எவ்வளவு துயரமானது. ஒரு தேவாலயத்தில் ஐக்கியம் என்பது ஆடை மற்றும் பொருளாதார நிலை போன்ற வெளிப்புற விஷயங்களை வைத்துத் தீர்மானிக்கப்பட்டால், அந்த தேவாலயம் கர்த்தரின் விருப்பத்திற்குப் புறம்பாகச் செயல்படுகிறது.
பணியிட போர்கள் - Employment Wars (5:1–6).
ஏழையைக் கட்டுப்படுத்தவும், வருத்தப்படுத்தவும் பணக்காரர்களுக்கு அதிகாரம் உள்ளது. பல தொழிலாளர்களுக்கு அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கூலி உரிய நேரத்தில் தரப்படுவது இல்லை. அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நியாயமான கூலி கிடைப்பதில்லை. இன்றைக்கும் கூட பல தொழிலாளர் இயக்கங்கள், அரசாங்க சட்டங்கள் இருந்த போதிலும், ஒரு நல்ல வேலையைப் பெறுவது என்பது பலருக்கு மிகக் கடினமாக இருக்கிறது. அவர்கள் செய்யும் வேலைக்கு அளிக்கப்படும் வருமானம் குறைவாக உள்ளது.
திருச்சபை சண்டைகள் - Church Fights (1:19-20; 3:13-18).
சபையில் உள்ள பதவிகளை அடைவதற்காக விசுவாசிகள் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் போரில் ஈடுபட்டதையும், அவர்களில் பலர் போதகர்களாக, தலைவர்களாக இருக்க விரும்பியதையும் யாக்கோபு குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தேவ வார்த்தையை வாசித்தனர், கேட்டனர், இருந்த போதிலும் அதன் விளைவாக அவர்களது வாழ்வில் எந்தவொரு மாற்றம் அல்லது சீர்திருத்தம் நிகழவில்லை, மாறாக அவர்கள் ஒருவருக்கு எதிராக மற்றவர் சச்சரவு, வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். ஒவ்வொருவரும் தமது கருத்துக்கள் மட்டுமே சரியானவை என்று நினைத்தார்கள். அவர்களது வழிகள் மட்டுமே சரியான வழிகள் என வாதிட்டனர். அவர்களது ஆராதனை கூடுகையை ஆவிக்குரிய அர்ப்பணிப்பு அல்ல, சுயநல லட்சியங்களே ஆட்சி செய்தது.
தனிப்பட்ட போர்கள் - Personal Wars (4:11-12).
பரிசுத்த விசுவாசிகள், ஒருவருக்கு ஒருவர் விரோதமாகத் தீமைகளைப் பேசினர். ஒருவரையொருவர் நியாயந்தீர்த்தனர். இங்கே, மீண்டும், நாவு தவறாகப் பயன்படுத்தப் படுவதைக் காண்கிறோம். கிறிஸ்தவர்கள் அன்பினால் நிறைந்து உண்மையைப் பேச வேண்டும் (எபே. 4:15); போட்டி மற்றும் காழ்ப்புணர்ச்சி உணர்வில் பிறரைக் குறித்த தீய விமர்சனங்களைப் பேசக்கூடாது. ஒரு சகோதரன் அல்லது சகோதரியைப் பற்றிய உண்மையைப் பேசுவது தீங்கு விளைவிப்பதாக இருந்தால், அதை அன்போடு மறைத்து, அதைக் குறித்து மீண்டும் பேசக் கூடாது (1 பேதுரு 4:8). அவர் பாவம் அல்லது தவறு செய்திருந்தால், தனிப்பட்ட முறையில் அவரிடம் சென்று அவரை மீண்டும் சீர்திருத்த முயல வேண்டும் (மத். 18:15-19; கலா. 6:1-2).
சபை மக்கள் ஒரு வேளை பாவம் செய்திருந்தால் அவர்களைச் சீர்படுத்த முனைவது அல்லது மதிப்பிடு செய்வதை யாக்கோபு தடை செய்யவில்லை. கிறிஸ்தவர்களுக்கு ஆராய்ந்து பார்க்கும் அறவுணர்வு இருக்க வேண்டும் (பிலி. 1:9-10), ஆனால் கர்த்தரைப் போல் நியாயத்தீர்ப்பை அவர்கள் மீது வழங்கக்கூடாது. நாம் முதலில் நமது சொந்த வாழ்க்கையை ஆராய்ந்து மதிப்பிட வேண்டும், பின்னர் மற்றவர்களைச் சீர்படுத்துவதற்கு உதவ முயல வேண்டும் (மத். 7:1-5). ஒரு குற்ற வழக்கின் எல்லா உண்மைகளையும், ஒருபோதும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. அவர்களது இருதயத்தில் மறைந்து இருக்கும் நிச்சயமான நோக்கங்களை, நம்மால் அறிய முடியாது. ஆக ஒரு விசுவாசியைப் பற்றி தீமையாகப் பேசுவதும், நிச்சயமற்ற ஆதாரங்கள் மற்றும் இரக்கமற்ற நோக்கங்களின் அடிப்படையில் நியாயந்தீர்ப்பது தவறாகும். அது அவருக்கு எதிராகவும், கர்த்தருக்கு எதிராகவும் பாவம் செய்வதற்கு ஒப்பாகும். நாம் நீதிபதிகளாக இருக்க அழைக்கப்படவில்லை; கர்த்தர் மட்டுமே நீதிபதி. அவர் பொறுமை உடையவர். புரிந்து கொள்ளக் கூடியவராகவும் இருக்கிறார்; அவருடைய நியாயத் தீர்ப்புகள் நீதியும் பரிசுத்தமுமானவை; நாம் அவரிடமே விஷயத்தை விட்டு விடலாம்.
பரிசுத்த விசுவாசிகள் ஒருவருக்கொருவர் போரிடுவது துரதிருஷ்டவசமானது. தலைவருக்கு எதிராகத் தலைவர், தேவாலயத்திற்கு எதிராகத் தேவாலயம், கூட்டுறவுக்கு எதிராகக் கூட்டுறவு. ஆக இந்த உலகத்தின் மக்கள் கிறிஸ்தவ மதப் போர்களைப் பார்த்து, "இதோ, அவர்கள் ஒருவரையொருவர் எப்படி வெறுக்கிறார்கள்!" என விமர்சிக்கின்றனர். ஆகவே தான், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்விதமாக ஜெபித்ததில் ஆச்சரியமில்லை,
“அவர்கள் அனைவரும் ஒன்றாயிருக்கவும்; பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலும், நான் உம்மிலும் இருக்கிறது போல அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக் கொள்ளுகிறேன்” (யோவான் 17:21).
நாம் ஒருவருக்கு விரோதமாக மற்றவர் போரிடுவதற்கு என்ன காரணம்? நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; அதே இரட்சகரை நம்புகிறோம்; அதே பரிசுத்த ஆவியானவரால் வாழ்கிறோம் - பின்னர் எதற்காக ஒருவருக்கு விரோதமாக மற்றவர் இன்னும் சண்டையிடுகிறோம்?
இந்த கேள்விக்கான விடையை யாக்கோபு அடுத்ததாக விளக்குகிறார். அது நமக்குள்ளாக அனுதினம் நடந்து கொண்டிருக்கும் இரண்டாவது போர்!!
அக யுத்தம் - At War with Ourselves (4:1b–3):
“உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் ஏற்பட என்ன காரணம்? உங்கள் அவயங்களில் போர் செய்கிற இச்சைகளினால் உண்டானதல்லவா?" (யாக் 4:1). திருச்சபையில் சண்டைகள் உருவாகுவதற்கு, நம் உள்ளத்தில் நிகழும் போர்களும் காரணமாக இருக்கிறது! "உங்கள் இருதத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமை பாராட்டாதிருங்கள். சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய் சொல்லாதீர்கள். வைராக்கியமும் விரோதமும் இருக்கும் இடத்தில் கலகமும் எல்லா தீய செயல்களும் இருக்கும்" (யாக்கோபு 3:14, 16).
பாவத்தின் சாராம்சம் சுயநலம். ஏவாள் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை, ஏனென்றால் அவள் மரத்தின் கனியைச் சாப்பிட்டு தேவனைப் போல ஞானமடைய விரும்பினாள். ஆபிரகாம் தன் மனைவியைப் பற்றிப் பொய் சொன்னார், ஏனென்றால் அவர் சுயநலத்துடன் தன் உயிரைக் காப்பாற்ற விரும்பினார் (ஆதி. 12:10-20). எரிகோவின் இடிபாடுகளிலிருந்து சில தடைசெய்யப்பட்ட கொள்ளைகளைச் சுயநலத்துடன் எடுத்ததால், ஆகான் இஸ்ரேலுக்குத் தோல்வியை ஏற்படுத்தினான் (யோசு. 7). “அவனவன் தன் தன் வழியில் போனோம்” (ஏசா. 53:6).
பெரும்பாலும் நமது மதச் சண்டைகளை “ஆன்மிகம்” என்கிற போர்வையில் மறைக்கிறோம். நாம் மோசேயின் மனைவியைப் பற்றிக் குறை கூறி முறையிட்ட மிரியம் மற்றும் ஆரோனைப் போன்றவர்கள், ஆனால் அவர்கள் உண்மையில் மோசேயின் அதிகாரத்தைக் கண்டு பொறாமை கொண்டவர்கள் (எண். 12). அல்லது நாம் பரலோக ராஜ்யத்தில் சிறப்பான சிம்மாசனங்களைக் கேட்ட யாக்கோபு மற்றும் யோவானைப் பின்பற்றுகிறோம். ஆனால் நாம் உண்மையில் விரும்பியது இன்றைய அங்கீகாரம் (மாற்கு 10:35-45). இந்த இரண்டு சுயநல ஆசையின் நிகழ்வுகளால் ஏற்பட்ட விளைவு கர்த்தருடைய மக்களிடையே சிட்சை மற்றும் பிளவு. மிரியத்தின் பாவம் இஸ்ரேலின் முன்னேற்றத்தை ஒரு வாரம் முழுவதும் தடுத்து நிறுத்தியது!
சுயநல ஆசைகள் ஆபத்தானவை. அவை தவறான செயல்களுக்கு இட்டுச் செல்கின்றன ("நீங்கள் கொலை செய்கிறீர்கள், நீங்கள் சண்டையிடுகிறீர்கள், யுத்தம் செய்கிறீர்கள்," யாக் 4:2). இவை தவறான ஜெபத்திற்கும் இட்டுச் செல்கின்றன ("நீங்கள் ஜெபம் செய்தும் அதைப் பெறவில்லை, ஏனென்றால் நீங்கள் தவறான உள்நோக்கத்துடன் கேட்கிறீர்கள். உங்கள் தகாத இச்சைகளை நிறைவேற்ற விரும்பி விண்ணப்பம் செய்தீர்கள்” (யாக். 4:3). நம்முடைய ஜெப நோக்கம் தவறாக இருக்கும்போது, நமது முழு கிறிஸ்தவ வாழ்க்கையும் தவறாகும். ''ஜெபத்தின் நோக்கம் பரலோகத்தில் மனிதனின் சித்தத்தை நிறைவேற்றுவதல்ல, மாறாகப் பூமியில் கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றுவதே'' என அருமையாகச் சொல்லப்பட்டது.
"பிறர் பொருளை இச்சையுடன் விரும்பாது இருப்பாயாக" என்பது கர்த்தரின் பத்து கட்டளைகளில் கடைசியாக உள்ளது, ஆனால் அதை நாம் மீறும் போது, மற்ற ஒன்பது கட்டளைகளையும் அது உடைக்கச் செய்யும்! பிறரது பொருளை அடைய விரும்பும் பேராசை ஒரு நபருக்கு விரோதமாகப் பொய்களைச் சொல்லவும், கொலை செய்யவும், அவனது பெற்றோரை அவமதிக்கவும், விபச்சாரம் செய்யவும், மேலும் ஏதோ ஒரு விதத்தில் கர்த்தரின் தார்மீக சட்டங்கள் அனைத்தையும் மீறச் செய்யலாம். சுயநல வாழ்வு மற்றும் சுயநல பிரார்த்தனை எப்போதும் போருக்கு வழிவகுக்கும். மனதின் உள்ளே போர் நடந்தால், இறுதியில் அது வெளியே போராக வெடித்து வெளிப்படும்.
சுயநல ஆசைகளால் நிறைந்து, தங்களை இருதயத்துக்குள் சமாதானமின்றி சண்டையிடுபவர்கள் எப்போதும் மகிழ்ச்சி இல்லாதவர்கள். அவர்கள் ஒரு போதும் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்க மாட்டார்கள். அவர்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக, தங்களுக்குக் கிடைக்காத ஆசீர்வாதங்களைப் பற்றிக் குறை கூறுகிறார்கள். அவர்களால் மற்றவர்களுடன் நெருங்கிப் பழக முடியாது, ஏனென்றால் அவர்கள் எப்போதும் மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள். அவர்கள் தங்களது வாழ்க்கையை அழகானதாக்கும் அந்த "மாயமான இல்லாத ஒன்றை" எப்பொழுதும் தேடுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களது சொந்த இதயங்களில் பிரச்சனை இருக்கிறது.
சில சமயங்களில் நம்முடைய உண்மையான ஆசைகளை மறைப்பதற்கு ஜெபத்தை ஒரு ஆடையாகப் பயன்படுத்துகிறோம். "ஆனால் நான் அதற்காக ஊக்கமாக ஜெபித்தேன்!" இது ஒரு கிறிஸ்தவர் பயன்படுத்தக்கூடிய மிகப்பெரிய சாக்குகளில் ஒன்றாக இருக்கலாம். கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்ற ஜெபிப்பதற்குப் பதிலாக, அவர் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தருக்கே சொல்கிறோம். நாம் சொன்னதை அவர் செய்யவில்லை என்றால் கோபப்படுகிறோம். இறுதியில் கர்த்தர் மீதான இந்த கோபம் பரவுகிறது. அதனால் தேவ மக்கள் மீது கோபப்படுகிறோம். கர்த்தர் மீதான தங்கள் வெறுப்பைச் சபையின் சக உறுப்பினர்கள் மீது வெளிப்படுத்திய புனிதர்களால் ஒன்றுக்கு மேற்பட்ட சபைப் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் தங்கள் சொந்த இதயங்களை மட்டுமே பார்த்து, அங்கு நடக்கும் மன போராட்டங்களைப் பார்த்தால், பல ஆலயங்கள் அல்லது குடும்பப் பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
நாம் ஒற்றுமையாகச் செயல்படும்படி கர்த்தர் நம்மை உருவாக்கினார்; நம் மனம், உணர்ச்சிகள் மற்றும் உள சித்தம் இணைந்து செயல்பட வேண்டும். நாம் நமது உள் மனதுடன் போரிடுவதற்கான காரணத்தை யாக்கோபு கூறினார், அதன் விளைவாக, நாம் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் சண்டை இடுகிறோம்.
கர்த்தருடன் போர் - At War with God (4:4–10):
நமக்கு நிகழும் புறம் மற்றும் அகம் சார்ந்த ஒவ்வொரு போருக்கும் அடிப்படைக் காரணம், கர்த்தருக்கு எதிரான செயல்படும் நமது மனக் கிளர்ச்சியே. படைப்பின் தொடக்கக் காலத்தில், படைப்புகளுக்கிடையே சரியான இணக்கத்தை நீங்கள் காணலாம், ஆனால் பாவம் உலகில் வந்தது, அது மோதலுக்கு வழிவகுத்தது. பாவம் என்பது அக்கிரமம் (1 யோவான் 3:4), அக்கிரமம் என்பது கர்த்தருக்கு எதிரான கலகம்.
ஒரு விசுவாசி தேவனுக்கு எதிராக எப்படி போரை அறிவிக்கிறார்? அவர் ஆண்டவரது எதிரிகளுடன் நட்பாக இருப்பதன் மூலம்!!
யாக்கோபு மூன்று எதிரிகளை அடையாளம் கண்டு அதற்குப் பெயரிட்டார், நாம் ஆண்டவருடன் சமாதானமாக இருக்க விரும்பினால், அவைகளுடன் எந்த சூழலிலும் உறவு பாராட்டக்கூடாது.
உலகம் - The World (வச. 4).
"உலகம்" என யாக்கோபு குறிப்பிடுவது, கர்த்தருக்குப் பயந்து அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படியாத மனித சமுதாயத்தைக் குறிக்கிறது. இந்த சமுதாயத்தில் உள்ள பல அமைப்புகள் கிறிஸ்துவுக்கும், கர்த்தருக்கும் எதிரானது. ஆபிரகாம் கர்த்தரின் நண்பர் (யாக்கோபு 2:23); லோத்து உலகத்தின் நண்பனாக இருந்தார். இறுதியில் லோத்து ஒரு போரைச் சந்திக்க நேரிட்டது, ஆபிரகாம் அவரைக் காப்பாற்ற வேண்டியிருந்தது (ஆதி. 14).
இந்த வேத ஆய்வின் 4வது அத்தியாயத்தில் நான் சுட்டிக்காட்டியுள்ளபடி, ஒரு கிறிஸ்தவர் படிப்படியாக உலகத்துடன் உறவு கொள்கிறார். முதலாவதாக, "உலக சிநேகம்" ஏற்படுகிறது (யாக். 4:4). இது உலகத்தை "கண்டு கொள்வதால்" விளைகிறது (யாக். 1:27). அதனால் நம் வாழ்வின் செயல்களுக்கு உலகத்தின் அங்கீகாரத்தை எதிர் பார்க்கிறோம். உலக நட்பு உலகத்தில் உள்ளவற்றில் அன்பு கூற வழிவகுக்கிறது (1 யோவான் 2:15-17), மேலும் இது நாம் உலகத்துடன் ஒத்த வேஷம் போட்டு வாழும்படி வாழ்வை எளிதாக்குகிறது (ரோமர் 12:2). ஆக்கினை தரும் முடிவுகள் உலகத்தால் கண்டனம் செய்யப்படுகிறது (1 கொரி. 11:32), நம் ஆத்துமாக்களின் இரட்சிப்பு "அக்கினியில் அகப்பட்டுத் தப்பியது" போல இருக்கும் (1 கொரி. 3:11-15).
உலகத்துடனான நட்பு விபச்சாரத்துடன் ஒப்பிடப்படுகிறது. விசுவாசி "கிறிஸ்துவை மணந்தவர்" (ரோமர் 7:4). அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும். இந்த நிருபத்தை வாசிக்கும் யூத கிறிஸ்தவருக்கு “ஆவிக்குரிய விபச்சாரம்” என்கிற காட்சிக்குத் தெளிவான பொருள் புரியும். ஏனெனில் யூதாவின் பாவங்களைக் கண்டித்து உணர்த்த எசேக்கியேல், எரேமியா மற்றும் ஓசியா போன்ற தீர்க்கதரிசிகள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினர் (எரே. 3:1-5; எசேக். 23; ஓசியா. 1-2). பிற தேசங்களின் பாவ வழிகளைப் பின்பற்றி, அவர்களது தெய்வங்களை வணங்குவதன் மூலம், யூதா தேசம் தன் தேவனுக்கு விரோதமாக விபச்சாரம் செய்தது.
உலகம் கர்த்தரின் எதிரி. உலகத்தின் நண்பனாக இருக்க விரும்புகிறவர் தேவனின் நண்பராக இருக்க முடியாது. அவர் மாம்ச இச்சைகளை நிறைவேற்றுவதற்காக வாழ்ந்தால் அவரும் ஆண்டவருடன் இணைந்து இருக்க முடியாது, ஏனெனில் இது இரண்டாவது எதிரி என யாக்கோபு கூறினார்.
மாம்ச இயல்பு - The Flesh (வ. 1, 5).
"மாம்சம்" என்பது ஆதாமிடமிருந்து பெற்ற பழைய இயல்பு (ஜென்ம சுபாவம்), அந்த பாவ சுபாவம் நம்மை ஆள்கிறது. மாம்சம் என்பது உடல் அல்ல. உடல் பாவம் அல்ல; உடல் நடுநிலையானது. பரிசுத்த ஆவியானவர் கர்த்தரை மகிமைப்படுத்தும் படி இந்த உடலைப் பயன்படுத்தலாம் அல்லது மாம்ச சுபாவத்திற்கு உடல் அடிபணிந்து பாவத்திற்குச் சேவை செய்ய உதவலாம். ஒரு பாவி கிறிஸ்தை ஏற்றுக் கொண்டு அவரது வார்த்தைக்கு அடிபணியும் போது, அவன் உள்ளுக்குள் ஒரு புதிய சுபாவ இயல்பைப் பெறுகிறான், ஆனால் பழைய ஜென்ம இயல்பு நீக்கப்படவோ அல்லது சீர்திருத்தப்படவோ இல்லை. இந்த காரணத்தினால் எப்போதும் உள்ளே ஒரு சண்டை நிகழ்கிறது: "பாவ சுபாவம் ஆவிக்கு விரோதமானதை விரும்புகிறது. ஆவி பாவ சுபாவத்திற்கு முரணானதை விரும்புகிறது. அவைகள் ஒன்றுக்கு விரோதமாக மற்றது முரண்படுவதால், நீங்கள் விரும்பியதைச் செய்ய முடிவதில்லை” (கலா. 5:17). இதைத்தான் யாக்கோபு "உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகள்" (யாக். 4:1) என்று குறிப்பிட்டார்.
மாம்ச சுபாவ இச்சைகளை நிறைவேற்றுவதற்காக வாழ்வது என்பது நமக்குள் வாழும் தேவனது பரிசுத்த ஆவியை துக்கப்படுத்துவதாகும்.
"நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறாரென வேத வாக்கியம் வீணாகச் செல்லுகிறது என்று நினைக்கிறீர்களா?" (யாக். 4:5). உலகம் பிதாவாகிய கர்த்தருக்கு எதிரியாக இருப்பது போல, மாம்ச சுபாவம் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரி. ஒரு கணவனும் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் புனிதமான விட்டுக் கொடுக்க விரும்பாத பொறாமை அன்பைப் போல இருக்கிறது. நமக்கு உள்ளாக வாசம் செய்யும் ஆவியானவர் கர்த்தருடனான நமது உறவை விட்டுக் கொடுக்க விரும்பாத பொறாமையுடன் பாதுகாக்கிறது. கர்த்தரின் அன்பிற்கு எதிராக நாம் பாவம் செய்யும்போது ஆவியானவர் துக்கப்படுகிறார்.
பழைய மாம்ச சுபாவத்தைப் பிரியப்படுத்த வாழ்வது என்பது கர்த்தருக்கு எதிராகப் போரை அறிவிப்பதாகும். "மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை" (ரோமர். 8:7). மாம்ச சுபாவம் மனதைக் கட்டுப்படுத்த அனுமதிப்பது என்பது கர்த்தருடனான ஐக்கியத்தின் ஆசீர்வாதத்தை இழப்பதாகும். ஆபிரகாமுக்கு ஆவிக்குரிய சிந்தை இருந்தது; அவர் தேவனுடன் நடந்து சமாதானத்தை அனுபவித்தார். லோத்துக்கு மாம்ச சிந்தை இருந்தது; அவர் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் போரை அனுபவித்தார். "மாம்ச சிந்தை மரணம்; ஆவிக்குரிய சிந்தை ஜீவனும் சமாதானமும் ஆகும்" (ரோமர்.8:6).
பிசாசு - The Devil (வச. 6–7).
உலகம் தந்தையுடன் முரண்படுகிறது; மாம்ச சுபாவம் பரிசுத்த ஆவிக்கு எதிராகப் போராடுகிறது; பிசாசு தேவனுடைய குமாரனை எதிர்க்கிறான். பெருமை என்பது சாத்தானின் பெரும் பாவம். அது பரிசுத்த விசுவாசிகளுக்கும், நமது இரட்சகருக்கும் எதிரான அவனது போரில் மிக முக்கிய ஆயுதங்களில் ஒன்றாகும். நாம் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்; நாம் பெருமைப்பட வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். "நீங்கள் தேவனைப் போல் இருப்பீர்கள்" என்று சாத்தான் ஏவாளுக்கு வாக்குறுதி அளித்தான், அவள் அவனை நம்பினாள். ஒரு புதிய விசுவாசி ஆவிக்குரிய தலைமைத்துவத்தின் இடங்களில் வைக்கப்படக்கூடாது, "அவன் இறுமாப்படைந்து பிசாசின் நிந்தனைக்கு ஆளாகாதபடிக்கு" (1 தீமோ. 3:6).
நாம் அவருடைய கிருபையைச் சார்ந்திருக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார் ("ஆனால் அவர் அதிக கிருபையைத் தருகிறார்"), பிசாசு நாம் நம்மைச் சார்ந்து செயல் பட வேண்டும் என்று விரும்புகிறான். "உங்களை நீங்களே உயர்த்திக் கொள்" என போதிக்கும் ஆன்மீக நிறுவனங்களின் குரு சாத்தான். விசுவாசிகளது சுய மேன்மையை (Ego) ஊதிப் பெருக்கி, அவனவன் தன் தன் சொந்த வழியில் நடக்க ஊக்குவிப்பதில் சாத்தான் மகிழ்ச்சி அடைகிறார். சாத்தானின் திட்டங்களைப் பற்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எச்சரித்த போதிலும், பேதுரு சாத்தானின் கண்ணியில் விழுந்து, தன் வாளை உருவி, தேவனுடைய சித்தத்தை தன் சொந்த வழியில் நிறைவேற்ற முயன்றான். சாத்தான் விஷயங்களைக் குழப்புவதில் விற்பன்னர்!
இன்று நமது தேவாலயங்களில் உள்ள பிரச்சனைகளில் ஒன்று, அதிகமான பிரபல ஊழியர்கள் இல்லை. சபைகளில் கர்த்தரின் மகிமைக்கு மிகக் குறைந்த இடமே மிச்சமிருக்கும் அளவுக்குக் கிறிஸ்தவ ஊழியர்கள் உயர்த்தப்படுகிறார்கள். மனிதன் தன்னைப் பற்றி பெருமை கொள்ள எதுவும் இல்லை. நம்மில் எந்த நன்மையும் இல்லை (ரோமர். 7:18), ஆனால் நாம் கிறிஸ்தை நம்பும் போது, அவர் நமக்குள் அந்த "நல்ல சுபாவத்தை" வைக்கிறார், அது நம்மை அவருடைய பிள்ளைகளாக ஆக்குகிறது (2 தீமோ. 1:6, 14).
இங்கே, கர்த்தரிடமிருந்து நம்மைத் திசை திருப்பி பிரிக்க விரும்பும் மூன்று எதிரிகள் உள்ளனர்: உலகம், மாம்சம் மற்றும் பிசாசு. நம்முடைய பழைய பாவ வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப் பட்டாலும் இந்த எதிரிகள் இன்னும் மீதமாக எஞ்சி இருக்கிறார்கள் (எபே. 2:1-3). கிறிஸ்து அவர்களிடமிருந்து நம்மை விடுவித்தார், ஆனால் அவர்கள் இன்னும் நம்முடன் போராடித் தாக்குகிறார்கள். அவர்களை நாம் எவ்வாறு மேற்கொண்டு வெற்றி பெற முடியும்? நாம் எப்படி ஆண்டவரின் நண்பர்களாகவும், உலகம், மாம்ச சுபாவம், பிசாசு இவற்றின் எதிரிகளாகவும் இருக்க முடியும்? போருக்குப் பதிலாக அமைதியை அனுபவிக்க விரும்பினால் நாம் பின்பற்ற வேண்டிய மூன்று அறிவுரைகளை யாக்கோபு வழங்கினார்.
தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள் - Submit to God (வச. 7).
இந்த வார்த்தை ஒரு இராணுவச் சொல்லாகும், இதன் பொருள் "உங்கள் சரியான தரவரிசையில் நில்லுங்கள்." ஒரு சிறு பூச்சி தளபதியைப் போலச் செயல்படும்போது, சிக்கல் இருக்கப் போகிறது! நிபந்தனையற்ற சரணாகதி ஒன்றே முழுமையான வெற்றியை அளிக்கும். வாழ்க்கையின் ஏதேனும் ஒரு பகுதியில், கர்த்தருக்குப் பிரியம் இல்லாததை செய்ய நாம் ஆசைப்பட்டால், நமது வாழ்வில் எப்போதும் சண்டைகள் இருக்கும். அர்ப்பணிப்பு இல்லாத கிறிஸ்தவர்கள் ஏன் தங்களுடன் அல்லது மற்றவர்களுடன் இணைந்து வாழ முடியாது என்பதை இது விளக்குகிறது.
எபேசியர் 4:27-ல் பவுல் எச்சரித்தார், “பிசாசுக்கு இடங்கொடாமல் இருங்கள். தேவனுக்கு எதிராகப் சாத்தான் போரிட வேண்டும் என்றால் அவன் காலூன்ற நம் வாழ்வின் ஒரு ஓரத்திலாவது அவனுக்கு ஒரு இடம் தேவை. நாம் அந்த சிறிய இடத்தை அவனுக்குக் கொடுக்கிறோம். பிசாசை எதிர்ப்பதற்கான ஒரே வழி கர்த்தருக்கு அடிபணிவதாகும்.
தாவீது ராஜா பத்சேபாவுடன் விபச்சாரம் செய்து, அவளுடைய கணவனைக் கொன்ற பிறகு, கிட்டத்தட்ட ஒரு வருட காலம் தனது பாவங்களை மறைத்தார். அவருக்கும் கர்த்தருக்கும் இடையே போர் நடந்தது. ஒரு நாள் தாவீது அதை அறிக்கை செய்தார் (சங். 32, 51ஐ வாசித்துப் பாருங்கள்). கர்த்தருடன் போரிடத் தாவிது செலுத்திய அதிக விலையைக் கண்டறியவும். கடைசியாகத் தேவனுக்கு அடிபணிந்தபோது, தாவீது சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவித்தார். இதையும் அவர் சங்கீதம் 32 மற்றும் 51ல் பதிவு செய்தார். சமர்ப்பணம் என்பது விருப்பத்தின் செயல்; அது, "என்னுடைய சித்தம் அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது" என்று கூறுகிறது.
தேவனிடத்தில் சேருங்கள் - Draw near to God (வச. 8).
இதை எப்படிச் செய்வது? நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவருடைய சுத்திகரிப்புக்காகக் கேட்பதன் மூலம். “பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்தப்படுத்துங்கள்; இருமனம் கொண்டவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். “பரிசுத்தப்படுத்து” என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “கற்புடன் இருத்தல்” என்பதாகும். இது யாக்கோபு 4:4 இல் உள்ள "ஆவிக்குரிய விபச்சாரம்" என்ற சிந்தனைக்கு இணையாக உள்ளது.
டாக்டர். ஏ. டபிள்யூ. டோசர் தனது புத்தகம் ஒன்றில், "நெருக்கத்தில் பிரதிபலித்தல் (Nearness is likeness)" என்ற தலைப்பில் ஒரு ஆழமான கட்டுரையை எழுதியுள்ளார். நாம் எவ்வளவு அதிகமாகக் கர்த்தரைப் போல் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு நாம் கர்த்தருக்கு நெருக்கமாக வாழ்கிறோம். நான் என் வாசிப்பு அறையில் மடியில் என் சியாமி பூனையுடன் அமர்ந்த் இருக்கலாம், என் மனைவி சமையலறையில் இருபது அடி தூரத்தில் தள்ளி இருக்கலாம், ஆனால் பூனை என்னைப் போலல்லாததால் பூனையை விட நான் என் மனைவிக்கு நெருக்கமாக இருக்கிறேன். எனக்கும் பூனைக்கும் பொதுவானது மிகவும் குறைவு.
கர்த்தர் கிருபையுடன் நம்மை நெருங்குகிறார் ஆனால், நாம் பாவத்தைக் கையாளும் போது அது அவரை நம்மை விட்டு விலக்கி தூரத்தில் வைத்திருக்கும். அவர் நம்மை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை; அவர் நம் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இரு மனம் கொண்ட கிறிஸ்தவர் ஒருபோதும் கர்த்தரிடம் நெருங்க முடியாது. மீண்டும், ஆபிரகாமும் லோத்தும் நினைவுக்கு வருகிறார்கள். ஆபிரகாம் கர்த்தரிடம் "நெருங்கி வந்து" சோதோமைப் பற்றிப் பேசினார் (ஆதி. 18:23), லோத்து கர்த்தரிடமிருந்து விலகி சோதோமிற்குள் சென்று அவரது ஆசீர்வாதத்தை இழந்தான்.
கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப்படுங்கள் - Humble yourselves before God (வ. 9-10).
வெளிப் பார்வைக்கு அடிபணிவது போலக் காணப்பட்டு, ஆனால் உள் மனதில் தாழ்மை இல்லாமல் இருப்பது சாத்தியம். கர்த்தர் பெருமையின் பாவத்தை வெறுக்கிறார் (நீதி. 6:16-17). ஒரு பெருமையுள்ள விசுவாசி தன்னை தாழ்த்தும் வரை அவரை கர்த்தர் தண்டிப்பார். பாவத்தைப் பற்றி மிக இலகுவாகக் கருதும், ஏன் சிரித்துக் கடந்து செல்லக்கூடிய போக்கு நம்மிடம் உள்ளது (“உங்கள் சந்தோஷம் சஞ்சலமாக மாறட்டும்”). பாவம்கொடூரமானது. உண்மையான மனத் தாழ்மையின் ஒரு அடையாளம், அந்த பாவத்தின் கொடூரத்தை எதிர் கொள்வதும், நம்முடைய கீழ்ப்படியாத தன்மையைக் கையாள்வதும் ஆகும்.
"தேவனே நருங்குண்டதும், உடைந்து நொறுங்கியதுமான இருதயத்தை, நீர் புறக்கணித்து வெறுக்கமாட்டீர்" (சங். 51:17).
சில சமயங்களில், ஒரு விசுவாசி, “ஆ கர்த்தாவே, என்னைத் தாழ்த்தும்!” என்று ஜெபிப்பதைக் கேட்கிறோம். இப்படி பிரார்த்தனை செய்வது மிக ஆபத்தானது. அதற்குப் பதிலாக, நாம் கர்த்தருக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தி, பாவங்களை அறிக்கையிட்டு, அவற்றை நினைத்து அழுது, அவைகளை விட்டு விலகுவது மிகவும் நல்லது. "ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நான் நோக்கிப் பார்ப்பேன்" (ஏசா. 66:2). “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, மனவருத்தத்துடன் உள்ள நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” (சங். 34:18).
நாம் இந்த மூன்று அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்தால், கர்த்தர் நம்மை நெருங்கிச் சுத்தப்படுத்திவார். மன்னிப்பார். போர்கள் நிறுத்தப்படும்! நாம் கர்த்தருடன் போரில் ஈடுபட மாட்டோம், எனவே நம்முடனும் போரில் ஈடுபட மாட்டோம். இதன் பொருள் நாம் மற்றவர்களுடன் போரில் ஈடுபட மாட்டோம்.
“நீதியின் கிரியை சமாதானமும்; நீதியின் விளைவு என்றென்றும் உறுதியும், அமைதியும், சுகமுமாக இருக்கும்” (ஏசா. 32:17).
உங்கள் வாழ்க்கையின் நிர்வாகத்தை அவர் தோள்களில் வைத்து விடுங்கள். அவர் உங்கள் வாழ்க்கையின் சமாதான இளவரசராக ஆகட்டும் (ஏசா. 9:6).
Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.
படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக