அத்தியாயம்:7 தொடர்ச்சி
மகிழ்ச்சி தரும் சக்தி.
(Power to Delight)
நீரூற்று மற்றும் மரம் (3:9–12):
நீரூற்று; நிச்சயமாக இன்றியமையாதது. நீரூற்றுகள் மனிதர்கள் உயிர் வாழத் தேவையான குளிர்ந்த நீரை வழங்குகிறது. ஓர் வளர்ச்சியடையாத நாட்டில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு, அவர்கள் அருகாமையில் ஒரு நன்னீர் நீரூற்று அவர்களுக்கு மிகப் பெரிய வரம்.
தண்ணீர் மனிதனின் தாகத்தை மட்டும் தீர்ப்பதில்லை, அது சமைப்பதற்கு, துணிகளைத் துவைப்பதற்கு, விவசாயம் செய்வதற்கு, வாழ்க்கைக்குத் தேவையான பல அத்தியாவசியமான பணிகளுக்கும் தேவைப்படுகிறது.
நீரூற்றை ஞானம் நிறைந்து பேசப்படும் வார்த்தைகளுக்கு ஒப்பாக வேதம் குறிப்பிடுகிறது. உதாரணமாக சில வசனங்கள்;
"மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான கடல் போல இருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும்." (நீதி. 18:4).
"நீதிமான்களின் வாய் வாழ்வின் நீரூற்று, ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும்" (நீதி. 10:11).
"ஞானமுள்ளவர்களின் போதனை வாழ்வின் நீரூற்று; அது மனிதரை மரணக் கண்ணிகளிலிருந்து காப்பாற்றுகிறது" (நீதி. 13:14).
நாம் பேசும் வார்த்தைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என, இந்த வசனங்கள் வலியுறுத்தி அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
நீர் உயிரைக் காப்பாற்றுகிறது: உயிர் வாழ்வதற்கு நீர் உதவுவது போல, நாம் பேசும் நல் வார்த்தைகளும் கேட்பவர்களது வாழ்வைக் காப்பாற்றுகிறது. இருப்பினும், நீரைக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது மரணத்தையும் அழிவையும் கூடக் கொண்டு வருகிறது. 1889 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற ஜான்ஸ்டவுன், பென்சில்வேனியா வெள்ளம் 2,200 உயிர்களைப் பறித்தது மற்றும் $10 மில்லியன் சொத்துக்களை அழித்தது.
"மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் உள்ளன" (நீதி. 18:21).
நீர் புத்துணர்ச்சி அளிக்கிறது: நாம் குனிந்து நீரூற்றினுடைய குளிர்ந்த நீரைப் பருகும்போது, அழிவை ஏற்படுத்தும் வெள்ளத்தைப் பற்றி நினைப்பது இல்லை. தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் புத்துணர்ச்சி என்கிற விலை மதிப்பற்ற மகிழ்ச்சியான அனுபவத்தை மட்டுமே அப்போது நினைக்கிறோம். நீர் புத்துணர்ச்சி அளிக்கிறது. அது ஔஷதம். நாம் தண்ணீர் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியாது.
"ஒருவன் சிந்திக்காமல் பேசினால் அவ்வார்த்தைகள் வாளைப்போன்று மற்றவர்களைத் துன்புறுத்தும். ஆனால் ஞானமுள்ளவனோ தான் சொல்பவற்றில் எச்சரிக்கையாக இருப்பான். அவனது வார்த்தைகள் குணப்படுத்தும்" (நீதி. 12:18).
பவுல், ரோமில் உள்ள பரிசுத்தவான்களைச் சந்திக்கும் போது தான் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என ஜெபித்தார் (ரோமர் 15:31-32). அவர்களால் அங்கீகரிக்கப்பட போது புத்துணர்வு அடைந்தார். தனக்கு ஆறுதலும், புத்துணர்வும், அளித்த உடன் ஊழியர்களது பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார் (1 கொரி. 16:18; பிலேம். 7, 20).
நீர் சுத்தப்படுத்துகிறது: ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலத்திற்கும், பலி பீடத்திற்கும் இடையில் ஒரு பெரிய நீர்த் தொட்டி வைக்கப்பட்டு இருந்ததைப் பழைய ஏற்பாட்டில் வாசிக்கலாம். இது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பாக, தங்களது கைகளையும் கால்களையும் சுத்தப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது.
கர்த்தருடைய வார்த்தை என்னும் நீரால் நமது ஆவிக்குரிய வாழ்க்கை சுத்தமாகிறது (யோவான் 15:3; எபே. 5:26-27). நாம் மற்றவர்களிடம் பேசுகிற நல் வார்த்தைகளும் அது போல அவர்களைத் தூய்மைப்படுத்தவும், புனிதப்படுத்தவும் உதவும். எசேக்கியேல் 47-ல் விவரிக்கப்பட்டுள்ள நதியைப் போல நம் வார்த்தைகள் இருக்க வேண்டும். அந்த நதி பாய்ந்து சென்ற இடமெங்கும் சஞ்சரித்த அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் கொடுத்தது (எசே 47;9).
நாவு கனி தரும் மரத்தைப் போல இருந்தால் அது மகிழ்ச்சியை அளிக்கிறது. நிலங்கள், மரங்கள் பொருளாதாரத்திற்கு இன்றியமையாதவையாகத் திருமறையில் சுட்டிக் காட்டப்படுகிறது. மரங்கள் மண்ணை செழுமைப்படுத்த உதவுகின்றன; அவை சாலையை அலங்கரித்து நிழலையும் வழங்குகின்றன; அவைகள் கனிகள் தந்து நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அது போல நாம் பேசும் கனிவான வார்த்தைகள், சோர்வுற்ற மனிதருக்குப் புகலிடமாக, இளைப்பாறுதலை அளிக்கிறது. பசியுள்ள ஆன்மாவுக்கு அது உணவாக இருக்கிறது.
"நீதிமான்களின் உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்" (நீதி. 10:21).
ஆண்டவராகிய இயேசு சொன்னார், "ஒரு மனிதனுக்கு அவனது சரீரம் மட்டுமே வாழ்வு அளிப்பது இல்லை. அவனது ஆவியே ஜீவனைத் தருகிறது. நான் உங்களுக்குச் சொன்ன வசனங்கள் யாவும் ஆவியே. இவையே ஜீவனைத் தருவன." (யோவான் 6:63).
நாம் தேவ வார்த்தையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்களுக்கு உணவளித்து, அவர்கள் வாழ்க்கை பாதையில் தொடர்ந்து பயணிக்க அவர்களை ஊக்குவிக்கிறோம்.
ஒரு மரத்தின் மிக முக்கியமான விஷயம் அதன் வேர் அமைப்பு. வேர்கள் ஆழமாக மண்ணில் இறங்கி வேரூன்றவில்லை என்றால், அம்மரம் ஆரோக்கியமாக வளராது. கர்த்தருடைய வார்த்தைகளில் நாம் ஆழமாக வேரூன்றியிருந்தால், நாம் பேசும் வார்த்தைகள், அவருடனான நமது ஐக்கியத்தின் பலனால் கிருபை பொருந்தியதாகவும், சாரம் நிறைந்ததாகவும் இருக்கும். முதலாம் சங்கீதத்தில் குறிப்பிடப்பட்ட அந்த “ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனை” போல நாமும் இருப்போம். ஏற்ற காலத்தில் பலன் தருவோம். நம்முடைய கர்த்தர் சரியான நேரத்தில், சரியான வார்த்தைகளைச் சொல்ல முடிந்ததற்கு ஒரு காரணம், அவர் எப்போதும் தம் பிதாவோடு உரையாடினார். ஒவ்வொரு நாளும் பரலோகத்திலிருந்து கேட்ட வார்த்தைகளைப் பேசினார். அவருடைய சாட்சியைக் கேளுங்கள்:
“இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும் படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக் கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்.” (ஏசா. 50: 4)
"காலையில், வெகுநேரம் முன்பாக எழுந்து, புறப்பட்டுப்போய், ஒரு தனியான இடத்திற்குப் புறப்பட்டு, அங்கே அவர் ஜெபம் செய்தார்" (மாற்கு 1:35).
உங்களுக்கும், எனக்கும் மகிழ்ச்சி தரும் இனிமையான வார்த்தைகளைப் பேச வேண்டும் எனும் விருப்பம் இருந்தால், ஒவ்வொரு நாளும் கர்த்தர் சமூகத்தில் அவரைச் சந்தித்து அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நமது "ஆவிக்குரிய வேர்கள்" கர்த்தருடைய வார்த்தையில் ஆழமாகப் பதிய வேண்டும். நாம் ஜெபித்து, தியானித்து, தேவனுடைய அன்பினாலும் சத்தியத்தினாலும் நம் இருதயங்கள் நிரப்பப்படப் பரிசுத்த ஆவியானவரிடம் ஒப்புக் கொடுக்க வேண்டும்.
ஆனால் யாக்கோபு ஒரு எச்சரிக்கையையும் தருகிறார்: ஒரே நீரூற்றிலிருந்து இரண்டு வகையான சுவையுள்ள தண்ணீர் இருக்க முடியாது. ஒரு மரம் இரண்டு வகையான சுவை தரும் பழங்களைத் தர முடியாது.
நீரூற்று எப்பொழுதும் இனிமையான சுவை மிகுந்த நீராக ஓட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அத்தி மரம் சுவை மிக்க அத்திப் பழங்களையும், ஒலிவ மரம் சுவை மிக்க ஒலிவ பழங்களையும் தர வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். ஒவ்வொரு மரத்தின் இயல்பான தன்மைக்கு ஏற்ப அதன் கனிகளது சுவை இருக்கிறது. ஆனால் நமது நாக்கு சீரற்றதாக மாறி மாறி பேசினால், அது நம் இதயத்தில் (சிந்தனையில்) ஏதோ ஓர் தீவிரமான கோளாறு உள்ளதை வெளிப்படுத்துகிறது.
ஒரு கிறிஸ்தவர் தான் எதிர்பார்த்த விதத்தில் வேலை முடிவடையாத கோபத்தில், தனது பங்குதாரரிடம், நீங்கள் சொன்ன வாக்குறுதியின் படி நடந்து கொள்ளவில்லை என்று குறை கூறினார். அவரது நண்பரோ, தான் அவ்விதம் எந்தவிதமான வாக்குறுதியும் கொடுக்கவில்லை என அதை மறுத்தார். ஆனால் இவரோ, இல்லை, இல்லை, நீங்கள் அப்படி தான் சொன்னீர்கள், அது தான் உண்மை எனச் சொல்லிச் சாதித்தார். சிறிது நேரம் கழித்து அவர் வெட்கத்துடன் திரும்பி, “நான் ஏன் அப்படிப் பேசினேன் என்று எனக்கேத் தெரியவில்லை. என்னுடைய மனதில் உண்மையில் அவ்விதமான எண்ணம் இல்லை" என்றார்.
அதற்கு அந்த பங்குதாரர் புத்திசாலித்தனமாகப் பதிலளித்தார்;
"அது உங்களுக்குள் இருந்திருக்க வேண்டும் இல்லையென்றால், அது உங்களிடமிருந்து வந்திருக்க முடியாது."
பேதுரு கிறிஸ்துவுடனான உறவை விட்டு வெளியேறியபோது, ஆண்டவரைச் சபித்து அவரைத் தெரியாது எனச் சொல்லி சத்தியம் செய்தார். பின்னர் அவர் வெளியே சென்று அதற்காக மிகவும் மனம் கசந்து அழுது தனது பாவங்களை ஒப்புக்கொண்டார்.
பிதாவாகிய தேவனை ஆராதித்து விட்டு, அவரது சாயலில் படைக்கப்பட்ட மனிதர்களைச் சபிக்கும் நாவுக்கு ஆவிக்குரிய மருத்துவம் மிகவும் தேவை! தேவ ஆராதனையின் போது அழகாகப் பாடல்களைப் பாடிவிட்டு, பின்னர் ஆராதனை முடிந்ததும், குடும்பமாக வாகனத்தில் ஏறி, வீடு வரை சண்டையிட்டுச் செல்வது இன்று எவ்வளவு எளிதாக இருக்கிறது!" என் சகோதரர்களே, இவை அப்படி இருக்கக்கூடாது."
இங்கு பிரச்சனை, நிச்சயமாக, நாக்கு அல்ல; அது இதயம்.
நம் இதயங்களில் "கசப்பான பொறாமையும், சண்டையும்" இருப்பது எளிது (யாக்கோபு 3:14).
“ஆனால் வாயிலிருந்து புறப்படுகிறவை இதயத்திலிருந்து புறப்படுகின்றன; அவை மனிதனைத் தீட்டுப்படுத்துகிறது” (மத். 15:18).
ஆகவே தான் சாலமன் சொல்கிறார்:
"உன் இருதயத்தை எல்லா விடாமுயற்சியோடும் காத்துக்கொள், அதிலிருந்து ஜீவனுள்ளவைகள் புறப்படும்" (நீதி. 4:23).
நாம் கர்த்தருடைய வார்த்தையால் நமது இதயங்களை நிரப்பி, பரிசுத்த ஆவிக்கு அடிபணியும்போது, அவர் நம்மைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார், மேலும் நாம் புத்துணர்ச்சியூட்டும் நீரூற்றுகளாகவும் மரங்களாகவும் இருப்போம்.
இந்தப் பகுதியைத் தியானித்து முடிக்கும்போது, "உங்கள் வாழ்க்கையை மாற்றி வளமாக்கக்கூடிய "பத்து வார்த்தைகளை" பயன்படுத்தத் தொடங்குமாறு பரிந்துரைக்கிறேன். நீங்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினால், உங்கள் இதயத்திலிருந்து நீங்கள் சொல்வதை உண்மையாக உணர்ந்து பேசினால், கர்த்தர் உங்களை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகவும், ஊக்கம் தரும் வழி காட்டியாகவும் பயன்படுத்திவதை நீங்கள் காண்பீர்கள்.
அவை பத்து வார்த்தைகள் மட்டுமே, ஆனால் அவைகள் ஆற்றலுடன் உதவி செய்யும்.
"தயவுசெய்து & நன்றி (Please & Thank you)" இந்த வார்த்தைகளைப் பயன் படுத்தும் போது, நீங்கள் மற்றவர்களை மனிதர்களைப் போல மதித்து நடத்துகிறீர்கள், அவர்களைப் பொருட்களாக எண்ணுவதில்லை. நீங்கள் நன்றியை, பாராட்டுக்களை வெளிப்படுத்துகிறீர்கள்.
"என்னை மன்னிக்கவும் (I'm sorry)." இந்த இரண்டு வார்த்தைகள், உறவுகளுக்குத் தடையாக இருக்கும் பனிச் சுவர்களை உடைத்து, பாலத்தை எழுப்பி, உறவுகளை இணைக்கும் வழியைக் கொண்டுள்ளன.
"நான் உன்னை நேசிக்கிறேன் (I love you)." இந்த வாக்கியத்தை "காதல் உணர்வை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக" பலர் புரிந்து கொள்கிறார்கள், ஆனால் அவைகளது உண்மையான அர்த்தம் அதை விட மிக ஆழமானது. கிறிஸ்தவர்களாகிய நாம் சக விசுவாசிகளை நேசிக்க வேண்டும், நம் எதிரிகளையும் கூட நேசிக்க வேண்டும். "நான் உன்னை நேசிக்கிறேன்" என்பது மிகப்பெரிய சக்தியை வெளிப்படுத்தும் வார்த்தை.
"நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் (I'm praying for you)." உங்கள் உதவி தேவைப் படுபவர்களுடன் நீங்கள் உடன் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வார்த்தைகள் இவை.
நீங்கள் தேவையில் உள்ள மக்களுக்காகக் கர்த்தரிடம் பேசும்போது, கர்த்தர் அருளிய வார்த்தைகளை அவர்களிடம் பேசலாம். தேவையில் உள்ள மக்களுக்காக நாம் செய்யும் தனிப்பட்ட பிரார்த்தனை, நமது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களின் தேவைகளை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது. நாம் மற்றவர்களை விட அதிக ஆவிக்குரியவர்களாக இருந்தாலும், "நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்" என்று தற்பெருமையுடன் அதை ஒருபோதும் கூறுவதில்லை. அவர்களை ஊக்கமளிக்கும் விதத்தில் இதைச் சொல்கிறோம். நாங்கள் போதுமான அக்கறை காட்டுகிறோம் என மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். இது கிருபையின் சிம்மாசனத்திற்கு முன்பாக, நாம் அவர்களைச் சந்திப்போம் எனும் விசுவாசத்தின் வெளிப்பாடு.
உலகிலேயே மிகச்சிறிய ஆனால் பெரிய தொல்லை தருவது நாக்குதான். ஆனால் அது ஒரு பிரச்சனையாக இருக்க வேண்டியதில்லை! கர்த்தர் நம் நாவைப் பயன்படுத்தினால், நம்மைச் சுற்றி இருப்பவர்கள் சரியான வாழ்க்கை பாதையில் செல்வதற்கு வழி நடத்துவோம். அவர்களது சோதனை காலங்களில், மகிழ்வித்து, உற்சாகமூட்டி ஊக்கப்படுத்துவோம். நாக்கு ஒரு சிறிய உறுப்பு, ஆனால் அது பெரும் வல்லமை கொண்டது.
ஒவ்வொரு நாளும் உங்கள் நாவையும், இதயத்தையும் கர்த்தரிடம் அர்ப்பணியுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகள் கேட்பவர்களுக்கு, ஆசீர்வாதமாக இருக்கட்டும். உங்களைப் பயன்படுத்தும்படி கர்த்தரிடம் வேண்டுங்கள்.
Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.
படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக