புதன், 19 அக்டோபர், 2022

ஏன் வேதத்தை முறையாகக் கற்க வேண்டும்?

வேதத்தைக் கற்பது அவசியம்


1. பக்தி உணர்வில் நிலை பெற வேண்டும். (எபேசியர்: 3: 16-19). 

மனதில் பக்தி எனும் தீபம் சுடர்விட வேத வார்த்தைகள், இறை வேண்டல் எனும் எண்ணெய் தொடர்ந்து ஊற்றப்பட வேண்டும். வேதத்தை முறையாக கற்றுக் கொள்வதன் வழியாகச் சிந்திக்கும் திறன் வலிமை அடைகிறதுஇறை வேண்டுதல் செய்வதன் மூலம் சிந்தித்ததைச் செயல் படுத்தும் ஆற்றல்  கிடைக்கிறது. எனவே  இறை பக்தி மனதில் நிலை நிற்க வேதத்தை ஆவலுடன் முறையாக கற்றுக் கொள்ள வேண்டும்.  

2. மனம் தூய்மை அடைய வேண்டும். (ரோமர்:12: 1-2).

மனம் மாசற்றதாக உருமாற்றம் அடைய உழைப்பதே வாழ்வின் மிக மேன்மையான செயல்மனித உள்ளம் இயல்பாகவே பெருமை, பேராசை, பொறாமை, கோபம், பிறர் பொருளை விரும்புதல், பிறரை அடக்கி ஆள முற்படுதல்.., போன்ற பல தீய  உணர்ச்சிகளுக்கு அடிமையாக இருக்கிறது. இத்தகைய தீய உணர்வுகளின் கட்டுப்பாட்டிலிருந்து உள்ளம் விடுதலை அடைய வேண்டும். 

அன்பு, உண்மை, பொறுமை,சாந்தம், கருணை, இரக்கம், சகிப்புத்தன்மை,பணிவு, அடக்கம், பிறர் நலம் விரும்புதல், நல் நம்பிக்கை, சந்தோஷம், இச்சையடக்கம், மனநிறைவு.., போன்ற நல்ல உணர்வுகள் மனதை ஆளுகை செய்ய வேண்டும். 

வேத வசனங்கள் மனதில் தொடர்ந்து விதைக்கப்படும் போது தீய பண்புள் அகல்கிறது. நற்பண்புகள் பிறக்கின்றது. எனவே வேதத்தைத் தொடர்ந்து கற்க வேண்டும்.

3. இறை பிரசன்னத்தில் வாழ வேண்டும். (யாத்: 33:15).

அதிகாரம், பணம், பொருட்கள், உறவுகள் அளிக்கும் மகிழ்ச்சி நிரந்தரமல்ல. அவை இருக்கும் வரை மட்டுமே சந்தோஷம் தரும். ஆகவே இவற்றைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனும் கவலை மனதை விடாமல் அலைக்கழிக்கும். இழந்து விடுவோமோ என்கிற அச்சம் விடாமல் துரத்தும்.  

உண்மையான மகிழ்ச்சி என்பது வெளியில் தேடி, ஓடி அடைவதல்ல. அது உள்ளத்தில் உணர்வது. உள்ளம் இறை பிரசன்னத்தில் நிலைத்து நிற்பதே நிலையான இன்பம். அந்த மகிழ்ச்சி சூழ்நிலைகளால் மாறாது.  

இறைமை என்பது ஓர் அனுபவம். இறைபிரசன்னத்தில் வாழ்வதை விட மேலான ஆசீர்வாதம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.வேத வசனங்கள் கடவுளை வெளிப்படுத்துகிறது. அவை மன மகிழ்ச்சியைத் தருகிறது. கடவுளின் அன்பை உணர்ந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலைகள் மறையும். மனதின் பாரம் குறையும். நம்பிக்கை பெருகும்.

வேதத்தின் வார்த்தைகளைத் தொடர்ந்து தியானித்து வருவதன் மூலம் தேவ பிரசன்னம் எப்போதும் நம்முடன் இருக்கும். இந்த தெளிந்த புத்தியை அடைய வேதத்தை முறையாக் கற்பது அவசியம்.

4. பற்றுறுதி - வைராக்கியம் வளர வேண்டும். (எபிரேயர் 12:1). 

ஆழ்ந்த பக்தியில் நிலைத்திருப்பது எளிதானதல்ல. மனதைத் தூய்மையாகப் பாதுகாத்திட கடும் பிரயத்தனம் தேவைப்படுகிறது. எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் வாழ்வதற்கு முயற்சி தேவையில்லை. ஆனால் உயர்ந்த வாழ்க்கை வாழ கடும் உழைப்பு தேவை. அர்ப்பணிப்பு அவசியம். 

விளையாட்டு வீரர்களைக்  கவனித்துப் பாருங்கள். எவ்வளவு கவனமாகப்  பயிற்சி பெறுகின்றனர். நேர்த்தியான பயிற்சியாளர். உணவில் கட்டுப்பாடு. உடலைப் பராமரிப்பதில் கடும் உழைப்பு. துல்லியமான நேர நிர்வாகம். இலக்கு நோக்கி பயணம்.

இறை வாழ்க்கை வாழ இத்தகைய பயிற்சி தேவை. மனதில் வைராக்கியம் வேண்டும். பிடிவாதம் என்பது சுய ஆசையை நிறைவேற்ற விரும்புவது. வைராக்கியம் என்பது ஒரு உன்னத குறிக்கோளை அடைவதற்காக அர்ப்பணித்து வாழ்வது. மனதில் வைராக்கியம் இருந்தால் தோல்விகளால் துவண்டு விட மாட்டோம். மனம் சோர்வில்  மூழ்கி விடாது. வீழ்ந்தாலும் மீண்டும் எழும். வேத வசனங்களை இடைவிடாது கற்றுக் கொள்வதன் மூலம் மனதில் வைராக்கியம் உண்டாகும்.

5. உரையாடலில் தெளிவு இருக்க வேண்டும். (1 தீமோ: 6:3-5).

சமய உரையாடல்கள் அன்பை விதைக்க வேண்டும். நம்பிக்கையை உருவாக்க வேண்டும். பிறர் நலம் விழைய வேண்டும். வாழ்வை நேர்மையான முறையில் வாழ ஊக்கம் தர வேண்டும். 

நமது உரையாடல்கள் நம்மைச் சுற்றி வாழ்பவர்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சமயம் சார்ந்து பேசும் போது கவனமாகப் பேச வேண்டும். இறை உபதேசங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் சமய  உரையாடல்களில் ஈடுபடக் கூடாது. அவை ஒருபோதும் வெறுப்பு, துவேஷம் இவற்றைத் தூண்டக்கூடாது. பல அடிப்படை வாத சமய உரையாடல் கடும் அழிவை ஏற்படுத்தி இருக்கிறது. 

வேதத்தின் கருத்துக்கள் அறிவியல் போலத் தர்க்க ரீதியாக ஆய்வு செய்து எழுதப்பட்டது கிடையாது. அவை விசுவாசம், அனுபவம் சார்ந்து எழுதப்பட்டவை. அன்பு எனும் அஸ்திவாரம் மேல் கட்டப்பட்டது. அவை நீதி, நியாயம் என்கிற வெளிச்சத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அறம் அதன் மையம். இரக்கம், கருணை அதின் செயல் வடிவம்.

வேதத்தை முறையாகக் கற்று அதைக் கடைப்பிடித்து வாழ்பவர்களுக்கு மட்டுமே வேதத்தின் உண்மைப் பொருள் வெளிப்படும். அர்ப்பணிப்பு மிக்க வாழ்வு வாழ்ந்தவர்களால் எழுதப்பட்ட விளக்கங்கள் வேதத்தைப் புரிந்து கொள்ள உதவும். அத்துடன் தாழ்மை உணர்வுடன் வேதத்தைக் கற்றுக் கொள்வது மிக முக்கியமான ஒன்று.

6. வளர்ச்சி அடைய வேண்டும். (1 பேதுரு: 2-3). 

ஒவ்வொரு நாளும் நமக்கு அருளப்படும் ஓர் கொடை. மேலும் கற்பதற்கு ஓர் வாய்ப்பு. கற்பதன் வழியாக மனம் மேம்படுகிறது. மனவளம் அடைகிறது. தீய உணர்வுகள் அகல்கின்றன. நல் உணர்வுகள் பெருகுகிறது. மனதின் எண்ணங்கள் நேர்மறையாக உதிக்கின்றது. எனவே வாழ்வு வளர்ச்சி பெற வேதத்தை அனுதினமும் கற்க வேண்டும். தியானிக்க வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும்.


படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக