பவுல் - எருசலேம் சபைத் தலைவர்கள் சந்திப்பு.
அப் 21:18-26
பவுல் எருசலேம் சபை மக்கள் இடையிலான முதலாவது சந்திப்பு ஒருவருக்கொருவர் நலம் விசாரிக்கும் வகையிலிருந்தது. மறுநாளில் பவுல் ஆண்டவராகிய இயேசுவின் சகோதரர் யாக்கோபு தலைமையில் நிகழ்ந்த கூட்டத்தில் பங்கு பெற்றார். ஆண்டவர் கிருபையால் ஊழியத்தில் நடைபெற்ற பணிகள் ஒவ்வொன்றாக விவரித்துச் சொன்னார் (1 கொரி 15:10).
புறவின மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய பவுலிற்கு எருசலேம் சபை முன்னதாகவே அங்கீகாரம் அளித்திருந்தது (கலா 2:7-10).
ஆகவே எருசலேம் சபைத் தலைவர்கள் பவுல் மூலமாக உருவாக்கப்பட்ட புதிய சபைகளைக் குறித்துக் கேள்விப்பட்டவுடன் மகிழ்ந்து கர்த்தரை மகிமைப் படுத்தினார்கள்.
எனினும் பல ஆயிரம் யூத விசுவாசிகள் எருசலேம் சபையிலிருந்தனர். அவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றினாலும் நியாயப்பிரமானத்தை வைராக்கியமாகக் கடைப்பிடித்தனர். அவர்களுக்கு பவுல் மேல் கடும் கோபம் இருந்தது.
ஏனெனில் பவுல் மோசேயின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை என எங்கும் போதிப்பதாகக் கேள்விப்பட்டிருந்தனர்.
எருசலேம் திருச்சபைத் தலைவர்களுக்கும் பவுல் மீது யூதர்களுக்கு உள்ள கோபம் தெரியும்.
உண்மையில் பவுல் அளித்த செய்தி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. பவுல் ஒரு போதும் யூத விசுவாசிகளிடம் மோசேயின் கட்டளைகளைக் கடைப் பிடிக்க வேண்டாம் என போதிக்கவில்லை.
மாறாக எபேசுவில் வசித்த யூதர்கள் நிமித்தம் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்தார் (அப் 16:1-3). இரண்டாவது மிஷனரிப் பயணம் முடிந்த பின்னர் தமது பிரார்த்தனையை நிறைவேற்றும்படி தலை முடியைச் சவரம் செய்து கொண்டார் (அப் 18:18).
ஆனால் அதே சமயம் பவுல் இரட்சிப்பிற்கு நிபந்தனையாக யூத சமய சடங்குகள் புறவின மக்கள் மேல் திணிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார்.
இரட்சிப்பு கிருபையால் அருளப்படுவது என்பது பவுலின் அடிப்படை போதனை (எபே 2;8).
சடங்குகளை ஆசரித்தல், குறிப்பிட்ட உணவு பழக்கத்தைக் கடைப்பிடித்தல், குறிப்பிட்ட நாளை விசேசமாக அனுசரித்தல் என யூத சமய பாரம்பரியத்தை இரட்சிப்பிற்கு நிபந்தனையாக. விதிக்கப்படுவதை எதிர்த்தார்.
ஆனால் ஒருவர் அவற்றை விருப்பத்தோடு கடைப்பிடித்தால் குற்றம் சாட்டுவதோ அல்லது குறை கூறுவதோ கூடாது எனப் போதித்தார்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் விரும்பும் வகையில் இறைவனை வணங்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். ஒருவர் மற்றவரை இப்படித்தான் வழிபட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக்கூடாது (ரோமர் 14:1-8) என்பது பவுலின் உபதேசம்.
இதனால் யூத சமய தீவிரப் பற்றாளர்கள் பவுலை அழித்துவிடக் காத்திருந்தனர். யூத கிறித்துவர்களின் எதிர்ப்பை எருசலேம் சபைத் தலைவர்களும் சம்பாதித்துக்கொள்ள விரும்பவில்லை. அதே சமயம் பவுலை யூதர்களும் ஏற்றுக்கொள்ளுவதற்கு என்ன செய்வது என ஆலோசனை செய்தனர்.
பவுலும் யூத சமய ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பவர் எனக் காண்பிக்க முடிவு செய்தனர். இதனால் தீவிர யூத சமய பற்றாளர்கள் கோபம் குறையும், அமைதி பிறக்கும் என நம்பினர்.
ஆகவே அவர்கள் பவுலை, பிரார்த்தனை செய்து கொண்ட நான்கு பேருக்கான சமயச் சடங்குகளுக்கான செலவை ஏற்றுக் கொள்ளும். அப்போது உம்மைப் பற்றிக் கேள்விப்பட்டவை தவறான செய்திகள், நீரும் நியாயப்பிரமானத்தை கடைப் பிடிப்பவர் என எல்லோருக்கும் தெரிய வரும் என ஆலோசனை அளித்தனர்.
பவுல் அவர்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். அப்படியே அவர்கள் ஒவ்வொருவருடைய பலி செலுத்தும் செலவை பவுல் செலுத்தி வந்தார். ஏழு நாட்கள் கடந்தது.
அவர்கள் திட்டமிட்டபடி காரியங்கள் அமைதியாகச் செல்வது போலத் தோன்றியது. ஆனால் முடிவில் அவர்கள் எண்ணியபடி நடக்கவில்லை. அவர்கள் எதிர்பார்த்த அமைதிக்குப் பதிலாக ஓர் பெரிய கலவரம் வெடித்தது. பவுல் சிறை பிடிக்கப் பட்டார்.
Message taken from : "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.
படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக