எருசலேம் நோக்கி பவுலின் பயணம்.
Is it so bad, then, to be misunderstood? - Ralph Waldo Emerson.
தாங்கள் வாழ்ந்த காலத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்ட, தண்டிக்கப்பட்ட அறிஞர்கள் பட்டியல் நீளமானது. பித்தாகரஸ், சாக்ரடீஸ், லூத்தர், கலீலியோ, கோப்பர்நிக்கஸ், நீயுட்டன், என.., அந்த பட்டியல் நீளும்.
அப்படியே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். பவுல் வாழ்க்கையிலும் அவ்விதமாகவே நிகழ்ந்தது.
அப்போஸ்தல நடபடிகள் புத்தகம் 21:1 - 22:29 உள்ள பகுதியில் பவுல் அவரது நண்பர்களால், திருச்சபை தலைவர்களால், யூதர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதை விவரிக்கிறது.
1. பவுலின் திட்டத்தை, நோக்கத்தை அவரது நண்பர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர். (Paul's Friends Misunderstood His Plans - 21:1-17).
2.எருசலேம் திருச்சபை தலைவர்கள் அவரது செய்தியைத் தவறாகப் புரிந்து கொண்டனர். (The Jerusalem Church Misunderstood His Message - 21:18-26)
3. யூதர்கள் அவரது ஊழியத்தை தவறாகப் புரிந்து கொண்டனர். (The Jews Misunderstood His Ministry 21:27- 22:29)
1. பவுலின் நண்பர்கள் அவரது திட்டத்தைப் புரிந்து கொள்ளவில்லை.(Paul's Friends Misunderstood His Plans - 21: 1-17):
பயணம் (21:1-2):
பவுல் விரைவாக எருசலேம் திரும்ப விரும்பினார். பண்டிகைக்கு முன்பாக எருசலேமில் இருக்க விரும்பினார். தர்ம சகாய பணத்தை வறுமையில் வாடும் பரிசுத்தவான்களிடம் விரைந்து ஒப்படைக்க விரும்பினார்.
முதல் நாள் மிலேத்துவிலிருந்து கோஸ்தீவு (Miletus to Cos) பயணம். இரண்டாவது நாள் ரோது (Rhodes) தீவு. மூன்றாம் நாள் பத்தாரா (Petera). ஊள்ளூர் கப்பல் ஆதலால் ஒவ்வொரு துறைமுகத்திலும் சரக்குகளை ஏற்றி இறக்கி தாமதம் ஆனது. ஆகவே பவுல் நேரிடையாக நீண்ட தொலைவு செல்லும் பெனிக்கே (Phonenicia) தேசத்தின் கப்பலைக் கண்டு அந்த கப்பலில் தீரு நோக்கிப் பயணப்பட்டார். அது ஏறக்குறைய 650 Km நீண்ட பயணம்.
தீருவில் பவுல் - Paul in Tyre - பவுலின் மன பாரம் (21:3-6):
பவுல் முதல்முறையாக தீரு விசுவாசிகளைச் சந்திக்கிறார். இந்த சபை சிதறடிக்கப்பட்ட எருசலேம் விசுவாசிகளால் துவங்கப்பட்டதாக இருக்கலாம் (அப் 11:19). அது ஓர் சிறிய சபை. பவுலின் உடன் ஊழியர்கள் அந்த சபை மக்களை தேடிக் கண்டு பிடித்தனர். தீரு துறைமுகத்தில் கப்பலிலிருந்த சரக்குகளை ஏற்றி இறக்க ஏழு நாட்கள் ஆனது. ஆக அந்த ஏழு நாட்களும் பவுல் அவர்களோடு தங்கியிருந்தார். அவர்கள் பவுலை முதன் முதன் முதலாக பார்க்கின்றனர். ஆனாலும் நீண்ட காலம் அறிமுகமானவர் போல பவுலை நேசித்து அன்பு பாரட்டுகின்றனர்.
பவுலுக்கோ மனதில் சபையைக் குறித்து மிகுந்த கவலையும், பாரமும் இருந்தது. குறிப்பாக யூதர்கள் மற்றும் புற இனமக்கள் இடையே இருந்த பிளவு அவரை வருத்தியது. பவுல் ஊழியம் செய்த இடங்களிலெல்லாம் யூத சமய தீவிர பற்றாளர்கள் அவரை கடுமையாக எதிர்த்தனர். புதிய விசுவாசிகளை யூத சமய பாரம்பரியங்களைக் கைக்கொள்ளும்படி வற்புறுத்தினர் (அப் 15:1).
பவுல் இரு பிரிவு மக்கள் கூட்டமும் இணைந்து செயல்பட விரும்பினார். தமது மூன்றாவது மிஷனரிப் பயணத்தில் புறவின மக்களை எருசலேமில் வாழும் ஏழை சீடர்களுக்குப் பொருள் உதவி செய்யும்படி வேண்டிக் கொண்டார். புறவின மக்கள் யூத மக்களிடம் இருந்து ஞான நன்மைகள் பெற்றுக் கொண்டனர். எனவே கிறிஸ்தைப் பின்பற்றிய ஏழை யூத விசுவாசிகளின் பணத் தேவைகளைப் புற இன மக்கள் பொறுப்பேற்க வேண்டிய கடமை உள்ளது என பவுல் போதித்தார் (ரோம 15:25-27).
அதேநேரம் யூத சமயத்தில் வைராக்கியம் உடைய தீவரப் பற்றாளர்கள் பவுலை சிறை பிடித்துத் தண்டிக்க, காவலில் போடக் காத்திருந்தனர். ஆகவே தீருவில் இருந்த சீடர்கள் பவுலை எருசலேம் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர். ஆனால் பவுல் அதற்குச் சம்மதிக்கவில்லை.
தான் எருசலேம் செல்வது அபாயம் என பவுலுக்கு நன்கு தெரியும். ஆகவே யூத சமய தீவிர பற்றாளர்களிடமிருந்து பாதுகாக்கப்பட, தமது தர்ம சகாயம் எருசலேம் சபை தலைவர்களால் அங்கீகரிக்கப்பட ஜெபிக்கும்படி விசிவாசிகளை வேண்டுகிறார் (ரோமர் 15:31-32).
பவுலின் நோக்கம் எருசலேம் சபை தலைவர்களால் தமது தர்ம சகாய பணி அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் மூலம் யூத கிறிஸ்தவர்களும் புறவின கிறிஸ்தவர்களும் இணைந்து செயல்பட வழி பிறக்கும் என நம்பினார். அகவே பவுல் எருசலேம் விரைந்து செல்ல தீவிரம் காட்டினார்.
செசரியா (Caesarea) - மன்னிப்பின் மாண்பு (21:7-14):
பவுல் பிலிப்புவை செசரியாவில் வைத்துச் சந்திக்கிறார். இது ஓர் உணர்வுப்பூர்வமான சந்திப்பு. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு பவுல் கிறிஸ்தவ சீடர்களை துன்பப்படுத்தினார். விசுவாசிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தார். சபைகளை அழித்தார்(அப் 8:1-3).
பிலிப்புவின் நெருங்கிய நண்பர் ஸ்தேவான். அவர்கள் இருவரும் இணைந்து ஊழியம் செய்தனர் (அப் 6:1-6). ஸ்தேவான் கொலை செய்யப்படும்போது பவுலும் உடன் இருந்தார். பவுல் செய்த கொடுமைகளுக்குப் பயந்து பிலிப்பு எருசலேமை விட்டுத் தப்பி ஓடி சமாரியாவில் ஊழியம் செய்தார் (அப் 8:4-5).
பின்பு காசா வானந்திரத்தில் தேவ பணி செய்தார் (அப் 8:26). அங்கிருந்து புறப்பட்டு ஆசோ நகரத்தில் பணி செய்தார். அதைத் தொடர்ந்து செசரியாவில் சபையை நிறுவினார் (அப் 8:40).
இப்போது இருபது வருடங்களுக்குப் பிறகு பவுலை ஒரு அப்போஸ்தல ஊழியராக பிலிப்பு சந்திக்கிறார். பவுலை அன்போடு தமது வீட்டில் ஏற்றுக் கொள்கிறார். பிலிப்புவின் ஏற்றுக் கொள்ளும் அன்பு யோசேப்பை நமக்கு நினைவூட்டுகிறது (ஆதி 45;5-7). அன்பைக் குறித்து பவுல் உலகப் புகழ் பெற்ற வரிகளை கொரிந்தியருக்கு எழுதிய நிருபம் 13 ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். அவை பவுலின் சொந்த அனுபவத்திலிருந்து பிறந்த வார்த்தைகள். அன்பு சகலத்தையும் தாங்கும்.
பவுல் செசரியாவில் அகபுவை சந்திக்கிறார். அகபு ஒரு தீர்க்கதரிசி. பதினைந்து வருடங்கள் முன்பாகவே பவுலை அறிந்தவர். எருசலேமில் கொடிய பஞ்சம் வரப் போவதை முன் அறிவித்தவர். அந்தப்படியே எருசலேமில் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது எருசலேமில் இருக்கும் சகோதரரருக்கு பண உதவி செய்யும் படி பர்னபாவும் பவுலும் இணைந்து செயல் பட்டனர். பவுலின் மிஷனரிப் பயணத்திற்குத் தொடக்கமாக அது அமைந்தது (அப் 11:27-30).
இப்போது பவுல் எருசலேமில் அனுபவிக்கப் போகும் சிறை அனுபவங்களை அகபு தீர்க்க தரிசனமாக முன் அறிவிக்கிறார். இது பவுலின் இரண்டாவது வகை ஊழியத்திற்கு தொடக்கமாக அமையப் போகிறது. பவுல் எருசலேம் தேவாலயத்தில் சாட்சி கொடுக்கப் போகிறார். ஆலோசனை சங்கத்தில் சாட்சி கொடுக்கப் போகிறார். அரசர்கள் முன்பாக சாட்சி கொடுக்கப் போகிறார்.
பவுல் அனுபவிக்கப் போகும் துயரங்களை அறிந்த நண்பர்கள் அவரை எருசலேம் செல்ல வேண்டாம் என அழுது கெஞ்சிக் கேட்கின்றனர். ஆனால் பவல் அதை ஏற்க மறுத்தார். சிறையில் அடைக்கப்படுவது மட்டுமல்ல ஆண்டவருக்காக உயிரையும் இழக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.
புறவின மக்கள் சபை, அவர்களது எதிர்காலம் குறித்த பவுலின் பாரத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பவுல் பிடிவாதமாகத் தாமாகவே துயரத்தில் சிக்கிக் கொள்வதாக எண்ணினார்கள்.
ஆனால் பவுலின் மனம் புற இன விசுவாசிகளை எருசலேம் சபை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வாஞ்சித்தது. எதிர்காலத்தில் எருசலேம் சபை அவர்களை வழி நடத்த வேண்டும் என விரும்பினார்.
அதற்காகத் தாமே நேரில் சென்று எருசலேம் சபைத் தலைவர்களிடம் ஊழியத்தில் உருவான சபைகளைப் பற்றி, விசுவாசிகள் குறித்தும் விளக்க விரும்பினார். அதற்காக உயிரையும் கொடுக்க தயாராக இருந்தார். பவுல் எருசேலம் நோக்கிப் பயணப்பட்டார்.
Message taken from : "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.
படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக