சனி, 27 மே, 2023

யாக்கோபு 1: 25-27

 அத்தியாயம் 4 தொடர்ச்சி:

மறுசீரமைப்பு - மறுரூபமாகுதல்.

( Restoration -Transformation).

 - 

தேவ வார்த்தை என்கிற கண்ணாடி வழியாக நம்மை ஆராய்ந்து பார்க்கும் போது, அது நமது மனம், சிந்தனைகள், ஆசை இவற்றைத் துல்லியமாகக் காணவும்; அதிலிருந்து, நம் தவறுகளை உணர்ந்து கொள்ளவும் உதவுகிறது. இது திருமறையை வாசிப்பதால் கிடைக்கும் முதல் பயன். 

திருமறை எனும் கண்ணாடி வழியாக நம்மைப் பார்ப்பதால் கிடைக்கும் இரண்டாவது பயன்: நாம் உணர்ந்த தவறுகளைச் சரி செய்து கொள்ளவும், நம்மை மீண்டும் மறுசீரமைத்துக் கட்டவும் வேதம் உதவுகிறது.

b. மறுசீரமைப்பு - Restoration (யாத். 38:8). 

He made the basin of bronze and its stand of bronze, from the mirrors of the ministering women who ministered in the entrance of the tent of meeting (Ex 38:8).

ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாகக் கூடின பெண்கள் கண்ணாடியாகப் பயன்படுத்தின வெண்கலத்தாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான். (யாத்: 38:8)

பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடுவதும், ஆசரிப்பு வாசலில் அமர்ந்திருப்பதும் உண்டு. அவர்கள் வெண்கலத்தினால் செய்யப்பட்ட பளபளப்பான கண்ணாடியை வைத்திருந்தனர். மோசே பரிசுத்த வாசஸ்தலத்தைக் கட்டியபோது, அவர்கள் அந்த வெண்கலத்தைத் தர்ப்பணம் செய்தனர். அதைப் பயன்படுத்தி, மோசே அவற்றிலிருந்து ஒரு பெரிய நீர்த் தொட்டியைச் செய்தார் (யாத்: 38:8). 

இந்த பெரிதான நீர்த் தொட்டி ஆசரிப்புக் கூடாரத்திற்கும் (பரிசுத்த ஸ்தலம்), பலிபீடத்திற்கும் மத்தியில் வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தொட்டியில் தண்ணீர் நிரப்பப் பட்டிருந்தது. ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்குள் ஊழியம் செய்வதற்காகப் பிரவேசிப்பதற்கு முன்பு, அவர்கள் சாகாதபடிக்கு அந்த தண்ணீரினால் தங்களைச் சுத்தம் செய்து கொண்டனர் (யாத். 30:17-21). 

கர்த்தருடைய வார்த்தையின் வல்லமை நம்மைச் சுத்திகரிக்கும் எனும் உபதேசத்திற்கு, நீரால் சுத்திகரித்துக் கொள்ளும் சடங்கு ஒரு முன்னோடியான காட்சி சித்திரம். 

உதாரணமாக சில வசனங்கள்:

"நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே இப்பொழுது நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்" (யோவான் 15:3). 

திருச்சபை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் பரிசுத்தப் படுத்தப்படுகிறது (எபே. 5:26). 

ஒரு பாவி கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, அவர் தேவனுடைய ஆவியினால் கழுவப்பட்டு பரிசுத்தம் செய்யப்படுகிறான் (1 கொரி. 6:9-11; தீத்து 3:4-6). 

ஆனாலும், ஒரு விசுவாசி இவ்வுலகில் நடப்பதால், அவரது கைகளும் கால்களும் மீண்டும் அசுத்தமாகின்றன. ஆகவே அவருக்கு அனுதினமும் சுத்திகரிப்பு தேவைப்படுகிறது (யோவான் 13:1-11). 

தேவ வார்த்தை என்னும் கண்ணாடி நம்மைப் பரிசோதித்து, நம்முடைய பாவங்களைச் சுட்டிக் காண்பிப்பது மட்டுமல்லாமல், அது நம்மைச் சுத்தப்படுத்தி மறுசீரமைக்கவும் உதவுகிறது. இது தேவ வாக்குறுதி. (1யோவான் 1:9).

தேவ வார்த்தையைத் தியானிக்கும்போது, அது இதயத்தையும், மனதையும் சூழும் அசுத்தத்தைச் சுத்தப்படுத்தி, நம் ஆவியின் கசடுகளை நீக்குகிறது. கிறிஸ்துவின் மாசற்ற இரத்தம் நம் பாவ குற்றவுணர்வைக் கழுவிச் சுத்திகரிக்கிறது என்றால், தேவ வார்த்தை என்னும் தண்ணீர் நம் அனுதின அசுத்த கறைகளைக் கழுவி சுத்தம் செய்ய உதவுகிறது. 

இந்த உண்மையைப் புரிந்து கொள்ள, தாவீது-நாத்தான் தீர்க்கதரிசி, இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் உதவுகிறது (2-சாமுவேல் 12). 

நாத்தான் தீர்க்கதரிசி ஆட்டுக்குட்டி திருடப்பட்ட கதையைப் பற்றி தாவீதிடம் சொன்னார். அவர் விவரித்த அந்தப் பாவத்தைக் கேட்டவுடன் தாவீது கடும் கோபமடைந்தார். ஆனால், "நீதான் அந்த மனிதன்" என்று தீர்க்கதரிசி கூறியதும், தாவீது  தன்னைப் பார்ப்பதற்காகத் தேவ வார்த்தை என்னும் கண்ணாடியை எடுத்தார். 

அதன் விளைவு பாவ அறிக்கை மற்றும் மனந்திரும்புதல்: "நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்!" 

தேவ வார்த்தை என்னும் கண்ணாடி அதன் ஆய்வு வேலையைச் செய்தது. ஆனால் நாத்தான் அத்துடன் நிற்கவில்லை. மீண்டும் நிலை நிறுத்தும் தேவ வார்த்தையைப் (Word of restoration) பயன்படுத்தி தாவீதை திரும்பக் கட்டினார். 

“நீ சாகாதபடிக்கு கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்” (2 சாமு. 12:13). 

தேவ வார்த்தையிலிருந்து மன்னிப்பு மற்றும் சுத்திகரிப்புக்கான வேதத்தின் வாக்குறுதி வெளிப்பட்டது. தாவீது அந்த வார்த்தை என்னும் வெண்கல தொட்டியின் அருகில் வந்தார். தமது கை, கால்களின் கறைகளைக் கழுவி சுத்தம் செய்தார். 

தேவ வார்த்தை என்னும் கண்ணாடி வழியாக நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்பது; கறைகளைக் கழுவி மறுசீரமைப்பது என்பதுடன் நிறுத்திக் கொண்டால், கர்த்தருடைய வார்த்தை என்னும் கண்ணாடி ஊழியத்தின் முழு பலனையும் இழக்க நேரிடும். 

தேவ வார்த்தை என்னும் கண்ணாடி வழியாக நம்மை ஆராய்ந்து பார்ப்பதால், மூன்றாவதாக ஒரு பயனும் உள்ளது. 

c. புத்துயிர்ப்பு - Transformation (2 கொரி. 3:18). 

நாமெல்லாம் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம் (2 கொரி. 3:18).

கர்த்தர் நம்மை மீட்டெடுத்த பிறகு, அவரது கிருபையால் நாம் விசுவாசத்தில் வளர வேண்டும் என விரும்புகிறார். அத்துடன், நாம் மீண்டும் பாவத்தில் விழுந்து விடாதபடிக்கு, நம்மைப் பலப்படுத்த விரும்புகிறார். 

பல கிறிஸ்தவர்கள், தங்கள் பாவங்களை அறிக்கை செய்கிறார்கள். மன்னிப்பைக் கோருகிறார்கள். ஆனால் சுயத்தையும், பாவத்தையும் வென்று ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதில் ஆர்வமாக இருப்பதில்லை. 

இரண்டு கொரிந்தியர் 3ம் அதிகாரத்தில், பழைய உடன்படிக்கையின் நியாய பிரமாணத்திற்கும், புதிய உடன்படிக்கையின் கிருபையின் ஊழியத்திற்கும் இடையே உள்ள முரண்பாடுகளைப் பற்றிய விவாதத்தை வாசிக்கலாம். 

நியாயப் பிரமாணம் வெளிப்புறமானது. அது கற்பலகைகளில் எழுதப்பட்டுள்ளது; ஆனால் இரட்சிப்பு என்பது தேவனுடைய வார்த்தை. அது இதயத்தில் எழுதப்பட்டுள்ளது. 

பழைய உடன்படிக்கை ஊழியம் கண்டனம் செய்து அழித்தது; ஆனால் புதிய உடன்படிக்கை ஊழியம் மன்னிப்பையும் வாழ்வையும் தருகிறது. 

நியாயப் பிரமாணத்தின் மகிமை படிப்படியாக மறைந்தது, ஆனால் கர்த்தரின் கிருபை மகிமையின்மேல் மகிமையடைந்து  பிரகாசிக்கிறது. 

நியாயப் பிரமாணம் தற்காலிகமானது, ஆனால் கிருபையின் புதிய உடன்படிக்கை நித்தியமானது. 

பவுல் இந்த உண்மையை, மோசே அணிந்த முக்காட்டைப் பற்றிய  உவமை வழியாக விளக்குகிறார். மோசே தேவனைச் சந்தித்துவிட்டு மலையிலிருந்து இறங்கியபோது, அவரது முகம் பிரகாசித்தது (யாத். 34:29-35). ஆகவே அவரைப் பார்க்க ஆரோனும், இஸ்ரவேல் புத்திரரும் பயந்தார்கள். எனவே அவர் அந்த மகிமையை மறைக்க முக்காட்டைப் போட்டார். அவர் தேவனோடு மீண்டும் பேசும் படிக்கு உள்ளே திரும்பியதும், அந்த முக்காட்டைக் கழற்றினார். 

இயேசு மரித்த போது, தேவாலயத்திலிருந்த திரை மேலிருந்து கீழாகக் கிழிந்தது. அப்போது மனிதர்களுக்கும், தேவனுக்கும் இடையே இருந்த திரை நீக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் தேவ மகிமையை மறைக்கும்படியாக ஒரு முக்காட்டை அணிந்திருந்தார். ஆனால் ஒரு புதிய ஏற்பாட்டு விசுவாசியின் முகத்திரை விலக்கப் பட்டிருக்கிறது. அவர் முகத்தின் மகிமை மேலும் மேலும் பிரகாசம் அடைகிறது! 

2 கொரிந்தியர் 3:18ஐ நீங்கள் இவ்வாறு விளக்கலாம்: “ஒரு தேவனுடைய பிள்ளை தேவ வார்த்தையை [கண்ணாடியை] பார்க்கும்போது, அவர் தேவனுடைய குமாரனைக் காண்கிறார். அவர் தேவனுடைய ஆவியால் மறுரூபமடைந்து, தேவ மகிமையை வெளிப்படுத்துகிறார். 

கிரேக்க மொழியில் ''மாற்றப்பட்டது (Changed)'என்ற வார்த்தையானது, தமிழில் மறுரூபம் (Transformation) என உருவகமாக உள்ளது - இது உள்ளுக்குள் நிகழ்ந்ததால் ஏற்பட்ட வெளிப்புற மாற்றம் (A change on the outside that comes from the inside). 

ஒரு அசிங்கமான தோற்றமுடைய புழு எவ்விதம் ஒரு அழகான பட்டாம் பூச்சியாக உருமாறுகிறதோ, அவ்விதமாகவே ஒரு விசுவாசி தேவ வார்த்தையைத் தியானிப்பதிலும், கிறிஸ்துவைப் பார்ப்பதிலும் தனது நேரத்தைச் செலவிடும்போது உருமாற்றம் அடைகிறார்: உள்ளே இருக்கும் தேவ மகிமை வெளியில் வெளிப்படுகிறது.

இந்த வார்த்தைதான் மத்தேயு 17:2ல் "மறுரூபமானார்" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அந்த மலையில் கிறிஸ்துவின் முகம் சூரியனைப் போலப் பிரகாசித்தது. அது வெளியிலிருந்து வந்த ஒளியின் பிரதிபலிப்பு இல்லை; அது அவர் உள்ளிருந்து வெளியே பிரகாசித்தது. 

ரோமர் 12:2லும் இதே வார்த்தையை நீங்கள் காணலாம்: "உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." 

நாம் தேவ வார்த்தையைத் தியானிக்கும்போது, ஆவியானவர் மனதைப் புதுப்பித்து, தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறார். 

நாம் ஒரே இரவில் முதிர்ந்த ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாக மாறுவதில்லை. இது ஒரு தொடர் செயல்முறை. தேவ வார்த்தை என்னும் கண்ணாடி வழியாக அனுதினம் நாம் நம்மைப் பார்க்கும் போது நமக்குள் பரிசுத்த ஆவியானவர் செய்யும் மகத்தான பணி இது. 

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், நாம் எதையும் முக்காட்டைப் போட்டு மறைக்கவில்லை. முக்காட்டைக் கழற்றுகிறோம்! 

"தேவனே, என்னை ஆராய்ந்து, என் உள்ளத்தை அறிந்துகொள்ளும்: என்னைச் சோதித்து, என் எண்ணங்களை அறிந்துகொள்ளும்: என்னிடத்தில் பொல்லாத வழி உண்டோ என்று பார்த்து, நித்திய வழியில் என்னை நடத்தும்" (சங். 139:23-24). 

"நம்மிடம் பாவம் இல்லை என்று சொன்னால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம், சத்தியம் நம்மில் இல்லை" (1 யோவான் 1:8). 

தேவ வார்த்தையை நமது இதயத்தில் ஏற்றுக் கொள்வது முதல் பொறுப்பு. 

தேவ வார்த்தையை வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டும்; இல்லையேல் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் இது இரண்டாவது கடமை. 

இப்போது நமக்கும் தேவவார்த்தைக்கும் இடையில் உள்ள மூன்றாவது பொறுப்பைத் தியானிக்கலாம்.

III. வார்த்தையைப் பகிரவும் - Share the Word (1:26–27)

"தேவ பக்தி/சமயம்" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தையின் அர்த்தம், "வெளிப்புறமாகச் சடங்குகள் செய்வது மற்றும் ஆசாரிய சேவை" எனலாம். 

முழு புதிய ஏற்பாட்டிலும் இந்த வார்த்தை ஐந்து முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது (யாக். 1:26-27; அப். 26:5; மற்றும் கொலோ. 2:19, ல் ஆராதனை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது). 

எது உண்மையான தேவ பக்தி?

மாசில்லாத தூய பக்தி என்பது, விழாக்களைக் கொண்டாடுவது, ஆலயம் தவறாமல் செல்வது, விசேஷ தினங்களை ஆசரிப்பது மட்டும் அல்ல.

தூய பக்தி என்பது தேவ வார்த்தையைக் கடைப்பிடிப்பது, அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்வது, தன்னலமற்ற சேவை, நமது பேச்சு, உலகத்தின் ஆசைகளிலிருந்து விலகிக் கறைபடாமல் வாழ்வது என இவற்றின் வழியாக வெளிப்படுகிறது என்கிறார் யாக்கோபு.

நாவடக்கம் - Speech (வச. 26).

இந்த நிருபத்தில் ஒரு முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர் நாவடக்கத்துடன் பேச வேண்டியது மிக முக்கியம் என்பதை வலியுறுத்திப் பல குறிப்புகள் உள்ளன. ஆகவே அந்த திருச்சபை மக்களிடம் நாக்கு ஒரு கடுமையான பிரச்சனையாக இருந்தது எனப் புரிந்து கொள்ள முடிகிறது (யாக். 1:19; 2:12; 3:1-3, 14-18; 4:11-12 ). ஒருவரது பேச்சு அவரது இதயத்தை வெளிப்படுத்தும் (மத். 12:34-35); இதயம் சரியாக இருந்தால் பேச்சும் சரியாக இருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட நாக்கு என்றால் கட்டுப்படுத்தப்பட்ட உடல் என்று பொருள் (யாக். 3:1).

சேவை - Service (வச. 27).

நாம் தேவ வார்த்தை என்னும் கண்ணாடியில் நம்மையும் கிறிஸ்துவையும் பார்த்த பிறகு, மற்றவர்களையும் அவர்களின் தேவைகளையும் பார்க்க வேண்டும். 

ஏசாயா முதலில் கர்த்தரையும், பிறகு தன்னையும், பிறகு தான் ஊழியம் செய்யப் போகும் மக்களையும் பார்த்தார் (ஏசா. 6:1-8). வெறும் பேச்சு தேவ அன்பின் செயல்களுக்கு மாற்றாக அமைவதில்லை (யாக். 2:14-18; 1 யோவான் 3:11-18). 

நாம் சேவை செய்ய வேண்டும் எனக் கர்த்தர் விரும்புகிறார். நமக்குப் பதிலாக வேறு ஒருவர் ஊழியம் செய்யும் படியாக, நாம் பணம் கொடுப்பதைக் கர்த்தர் விரும்பவில்லை!

உலகத்திலிருந்து விலகி வாழ்தல் - Separation from the world (வச. 27 ஆ).

இங்கு "உலகம்" என யாக்கோபு குறிப்பிடுவது "இறையச்சம் இல்லாத சமூகம் (Society without God's fear)". 

சாத்தான் இந்த உலகத்தின் அதிபதி (யோவான் 14:30), இரட்சிக்கப்படாதவர்கள் இந்த உலகத்தின் பிள்ளைகள் (லூக்கா 16:8). 

நாம்  தேவனுடைய பிள்ளைகளாகப் பௌதிக ரீதியில், இந்த உலகில் வாழ்கிறோம், ஆனால் ஆவிக்குரிய வகையில் நாம் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல (யோவான் 17:11-16). 

மற்றவர்களை கிறிஸ்துவிடம் வழிநடத்துவதற்காக, இந்த உலகிற்கு அனுப்பப்பட்டுள்ளோம் (யோவான் 17:18). இந்த உலகத்திலிருந்து நாம் பிரிந்திருப்பதைத் தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே மற்றவர்களுக்குச் சேவை செய்ய முடியும். 

உலகம் உத்தம கிறிஸ்தவனை "கண்டுபிடித்து" அவரைத் தீட்டுப்படுத்த விரும்புகிறது. முதலில் அது, "உலக சிநேகமாக" (யாக். 4:4) தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து உலகத்திலுள்ளவைகளில் அன்பு கூருவதற்கு வழிவகுக்கும் (1 யோவான் 2:15-17). நாம் கவனமாக இல்லாவிட்டால், இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் போடுவோம் (ரோ.12:1-2). அதன் விளைவு உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவோம் (1 கொரி. 11:32). 

இது நாம் நம் இரட்சிப்பை இழக்கிறோம் என்பது மட்டுமல்ல, ஆனால் நாம் எதற்காக வாழ்ந்தோமோ அவை அனைத்தையும் இழக்கிறோம். 

லோத்து இந்தக் கோட்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு. அவர் முதலில் சோதோமை நோக்கிக் கூடாரம் போட்டார். பிறகு சோதோமுக்குள் சென்றார். வெகு காலத்திற்கு முன்பாகவே, சோதோம் அவருக்குள்ளும் நுழைந்து விட்டது. அவர் தன் சொந்த குடும்பத்திலும் கூட சாட்சியை இழந்தார். சோதோமின் மீது நியாயத் தீர்ப்பு வந்தபோது, லோத்து எல்லாவற்றையும் இழந்தார். 

இதற்கு மாறாக, கர்த்தரின் சினேகிதரான ஆபிரகாம் இவ்வுலகிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு ஒரு விசுவாசியாக வாழ்ந்தார். அதன் விளைவு உலகத்தை நேசித்த லோத்தை விட ஆபிரகாம் அதிகமான மக்களுக்குச் சேவை செய்தார். ஒரு கிறிஸ்தவர், இந்த உலகத்திற்குச் சேவை செய்ய உலகத்தோடு ஒத்து வாழ வேண்டிய அவசியமில்லை. இயேசு பாவிகள் மற்றும் வரி வசூலிப்பவர்கள் நண்பராக இருந்தபோதிலும் "குற்றமற்றவராக'' இருந்தார் (1 பேதுரு 1:19),. 

ஆக, இந்த உலகத்தின் தேவைகளுக்குச் சேவை செய்வதற்கான சிறந்த வழி, இவ்வுலகின் அசுத்தத்தினால் கறைபடாமல் விலகி வாழ்ந்து தூய்மையாக இருக்க வேண்டும்.


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

சனி, 20 மே, 2023

யாக்கோபு 1: 19-24

அத்தியாயம்: 4  தொடர்ச்சி

ஏமாற்றாதே! ஏமாறாதே!!.


ஒரு விசுவாசி எவ்விதம் சோதனைகளை எதிர் கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து யாக்கோபு முதலாம் அதிகாரம் கற்றுத் தருகின்றது.

ஒரு விசுவாசியைப் பலப்படுத்தி, அவரை மேன்மைப் படுத்துவதற்காக ஆண்டவர் சோதனைகளை (Tests & Trails) அனுமதிக்கிறார் (யாக். 1:1-12).

ஒரு விசுவாசியின் ஆவிக்குரிய மேன்மையை அழிப்பதற்காக, அவரை பாவம் (Temptations) செய்யும்படி தூண்டி, அதன் வழியாகச் சாத்தான் அவரை சிறுமைப் படுத்துகிறான் (யாக். 1:1-12). அவன் இதை வஞ்சனையாகச் செய்கிறான்.

மூன்றாவதாக, ஒருவர் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு (Self-Deception), அதனால் அடையும் ஆவிக்குரிய வீழ்ச்சி. இந்த சுய வஞ்சகத்தைக் குறித்து யாக்கோபு இந்தப் பகுதியில் விவரித்துக் கூறுகிறார் (யாக். 1:19-27). 

இந்த பகுதியில் உள்ள இரண்டு வசனங்களில் குறிப்பிடப்படும் வார்த்தையைக் கவனியுங்கள்.

"அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்கு" (யாக். 1:22); 

"தன் இருதயத்தை வஞ்சித்து" (யாக். 1:26). 

தன்னை தானே வஞ்சித்து கொள்ளுதல் (Self-Deception)

பல கிறிஸ்தவர்கள் தங்களை ஆவிக்குரிய விசுவாசிகள் என எண்ணிக் கொள்கின்றனர், ஆனால் நிதர்சனத்தில் அவர்கள் வேதத்தின் வார்த்தைகளை உண்மையாகப் பின்பற்றி நடப்பதில்லை. இதுவே சுய வஞ்சகம். தன்னை தானே ஏமாற்றிக் கொள்வது. இது மிக மிக ஆபத்தான விஷயம். 

அந்நாளில் பலர் என்னை நோக்கி: ''கர்த்தாவே! கர்த்தாவே! உமது பெயராலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது பெயரால் பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது பெயராலே பல அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?'' என்பார்கள். 

அப்பொழுது, ''நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை: அக்கிரமத்தைச் செய்கிறவர்களே, என்னைவிட்டு அகன்று போங்கள்'' என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத். 7:22-23). 

கிறிஸ்துவின் பண்புகளை தங்கள் வாழ்க்கையில் பின்பற்றாத போதும், தங்களை மிகச் சிறந்த ஆவிக்குரியவர்கள் எனப் பலர் கற்பனையாக எண்ணிக் கொள்கின்றனர். இது தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்வது. முதிர்ச்சி அடையாதவர்கள் தான், "தன்னிடம் ஒன்றும் இல்லாத போதும், நான் செல்வந்தனாகவும், பொருளால் பெருகியவனாகவும் இருக்கிறேன்" என்பார்கள் (வெளி. 3:17). 

ஒரு நபர் தன்னைத் தானே நேர்மையாக ஆராய்ந்து, தனது குறைகளை உணர்ந்து, அந்த தவறுகளை ஒப்புக்கொள்வதும், தனது தேவைகளை அறிக்கையிடுவதும் முதிர்ச்சியின் அடையாளமாகும். 

நிதர்சனத்தில், வேத வார்த்தையை ஆராய்ந்து கற்று, அதிலிருந்து தேவனுக்குப்  பிரியமானவற்றை அறிந்து, அதன்படி வாழ முற்படுவதால் ஏற்படும் தேவ உறவே உண்மையான ஆவிக்குரிய வாழ்வாகும். 

வேதம் சொல்லுகிறது: கர்த்தருடைய வார்த்தை சத்தியம் (யோவான் 17:17).  

நாம் தேவனது சத்தியத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு அதில் நிலைத்து இருந்தால், ஒரு போதும் நேர்மை இல்லாதவர்களாக இருக்க முடியாது. பாசாங்குத்தனத்துடன் நடிக்கவும் முடியாது. 

நம்மை நாமே வஞ்சித்து, ஆவிக்குரிய வாழ்வில் வீழ்ச்சி அடையக் கூடாது என்றால், தேவ வார்த்தைக்கும், நமக்கும் இடையே உள்ள உறவு வலிமையாக இருக்க வேண்டும். அதற்கு நாம் நிறைவேற்ற வேண்டிய மூன்று கடமைகள் இருப்பதாக யாக்கோபு கூறுகிறார். 

இந்தப் பொறுப்புகளை நாம் நேர்மையாக நிறைவேற்றினால், தேவனுடனும், மனிதர்களுடனும் சிறந்ததொரு ஆவிக்குரிய வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள முடியும்.

I. தேவ வார்த்தையை ஏற்றுக்கொள்ளுங்கள் - Receive the Word (1:19–21).

தேவனுடைய வார்த்தை நமது "உள்ளதில் நாட்டப்பட்டது" (யாக்கோபு 1:21) என்று யாக்கோபு குறிப்பிடுகிறார். அதாவது, தேவ வார்த்தை நம் இருதயத்தில் விதைக்கப்படுகிறது என்று பொருள். 

இந்த கருத்தை ஆண்டவர் அருளிய விதைப்பவரின் உவமையின் தொடர்ச்சியாகக் கருதலாம். ஆண்டவர் தேவ வார்த்தையை விதையாகவும், மனிதனின் இருதயத்தை நிலத்திற்கும் ஒப்பிட்டார் (மத். 13:1-9, 18-23).

இயேசு அந்த உவமையில், நான்கு வகையான மனித இதயங்களை, நான்கு விதமான நில அமைப்புடன் ஒப்பிட்டு விவரித்தார்: 

கடின இதயம் (Hard heart): வீதியில் விழுந்த விதைகள்; இது தேவ வார்த்தையின் பொருளைப் புரிந்து கொள்ளாத அல்லது உணர்ந்து கொள்ள இயலாத இதயம், அதனால் விதை முளைக்கவே இல்லை. பறவைகள் விதைகளைக் கொத்தித் தின்றன.

மேம்போக்கான இதயம் (Shallow heart): கற்பாறையில் விழுந்த விதைகள்; இது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட இதயம், ஆனால் போதுமான நெகிழ்வுத் தன்மை இல்லாத காரணத்தால் வேர்கள் வேரூன்றி வளர வழியின்றி அழிந்தது.

நெருக்கப்பட்ட இதயம் (Crowded heart): முட்புதர்களில் விழுந்த விதைகள்; இது உண்மையான மனந்திரும்புதல் இல்லாததைக் குறிக்கிறது. பாவம் தருகின்ற அற்ப சுகத்தை விரும்பி, அதை அனுபவிக்க இவர்களது மனம் விழைகிறது. அதனால் அவர்கள் வாழ்க்கை பலனற்றதாக முடிகிறது.

பலனளிக்கும் இதயம் (The fruitful heart): நல்ல நிலத்தில் விழுந்த விதைகள்; இது தேவ வார்த்தையை மனதில் ஏற்றுக் கொண்டு, அது ஆழமாக வேர் எடுக்க அனுமதித்து, மிகுதியான பழங்களை அளிக்கிறது. 

அப்படியென்றால், ஒருவர் இரட்சிக்கப்பட்டவர் என்பதற்கான அடையாளம் எது? 

அவரது கனி தரும் வாழ்வு மூலமாக!!!. 

இது அவரது புதிய மாறுதல் அடைந்த வாழ்க்கையில் வெளிப்படுகிறது. 

அவரது கிறிஸ்தவ பண்புகள் மற்றும் நடத்தையில் பார்க்க முடிகிறது. 

அவர்கள் ஆண்டவருக்கு மகிமையாக ஊழியம் செய்வார்கள். 

அவர்களின் கனி தரும் வாழ்க்கை வழியாக அநேக ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்காக ஆதாயப் படுத்துவார்கள் (ரோ. 1:16). 

அவர்கள் பரிசுத்த வாழ்வில் வளர்ச்சியடைவர் (ரோ. 6:22). 

அவர்கள் தங்களது பொருள், உடைமைகளைப் பகிர்ந்து கொள்ளுவர் (ரோ. 15:28). 

நற்செயல்கள் (கொலோ. 1:10), தேவனைப் போற்றுதல் (எபி. 13:15) எனப் பல வகைகளில் அவர்களது ஆவிக்குரிய நற்குணங்கள் வெளிப்படும் (கலா. 5:22-23).

மதச் சடங்குகளை உருவாக்கி அதன் வழியாகவும் சேவைகள் செய்யப்படலாம், ஆனால் அது ஒரு கடமையாக இருக்கிறது. அவற்றில் உயிர்ப்பு இல்லை. அவை தேவனுக்கு மகிமையாக அதிக கனி தரும் மரங்களை உருவாக்குவதில்லை. 

ஆனால், ஒரு உண்மையான விசுவாசி தனக்குள் அதிக கனிகளைத் தரும் மரங்களுக்கான விதைகளைக் கொண்டுள்ளார். அதனால் அவர் தொடர்ந்து பழங்கள், அதிக பழங்கள், அதிக பழங்கள் என அறுவடை தந்து வளர்ந்து பெருகி தேவனுக்கு மகிமையைக் கொண்டு வருகின்றார் (யோவான் 15:1-5). 

ஆகவே, தேவனுடைய வார்த்தைக்கும், நமக்கும் இடையே உள்ள உறவு சரியான முறையில் அமையாத வரை, தேவ நாமத்திற்கு மகிமை தரும் ஒரு வாழ்க்கையை வாழ நம்மால் இயலாது. 

"நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள்" (மாற்கு 4:24) என்று மட்டுமல்ல, "நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்தும் கவனியுங்கள்" (லூக்கா 8:18) என்றார் இயேசு. 

ஆனால் இன்று துரதிருஷ்டவசமாகப் பல விசுவாசிகள் "கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்து கொள்ள இயலாத" பரிதாபமான நிலையில் உள்ளனர் (மத்.13:13). அவர்கள் வேதாகம வகுப்புகள் மற்றும் தேவாலய ஆராதனைகளில் தவறாமல் கலந்து கொள்கிறார்கள், ஆனால் ஒருபோதும் ஆவிக்குரிய வளர்ச்சி அடைவதில்லை. 

இது யார் தவறு? போதகரின் தவறா? அல்லது தேவ செய்தி அளிப்பவர்களது தவறா? ஒருவேளை அது கேட்பவரின் தவறாகவும் கூட இருக்கலாம். 

பல விசுவாசிகளது ஆவிக்குரிய வாழ்க்கையின் சிதைவின் காரணமாக, அவர்கள் "கேள்வியில் மந்தமுள்ளவர்களாக" இருப்பதாலும் இது சாத்தியமாகும் (எபி. 5:11). 

தேவ வார்த்தைக்கும்  நமக்கும் இடையே உள்ள உறவு வலிமையாக இருப்பதற்கு, நாம் தேவனது வார்த்தையைக் கேட்கும், பேசும், பதிலளிக்கும் விதத்தைக் குறித்து யாக்கோபு மூன்று அறிவுரைகளை கற்றுத் தருகிறார். அதற்கு  நாம் கீழ்ப்படிய வேண்டும்.

a. கேட்பதற்குத் தீவிரம் - Swift to hear (வ. 19).

"கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன்" (மத். 13:9).

"ஆதலால், விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்" (ரோமர் 10:17). 

ஒரு வேலைக்காரன் தன் எஜமானின் குரலைக் கேட்பதற்கும், ஒரு தாய் தன் குழந்தையின் மெல்லிய அழுகை சப்தத்தைக் கேட்பதற்கும் எப்படிக் கூர்ந்து கேட்கக் கவனமாக இருப்பார்களோ, அதுபோல ஒரு விசுவாசியும் தேவனது வார்த்தைச் சொல்வதைக் கேட்க விழிப்புடன் இருக்க வேண்டும். துரிதமாகச் செயல்படவும் ஆயத்தமாக இருக்க வேண்டும் 

இந்த உண்மைக்கு தாவீது ராஜாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம்  அழகிய உதாரணமாக உள்ளது (2 சாமு 23:14-17). அது பெலிஸ்தியர்கள் பெத்லகேமைக் கைப்பற்றி இருந்த சமயம். அப்போது தாவீது மறைந்து வாழ்ந்தார். அச்சமயம் பெத்லகேமில் உள்ள கிணற்றிலிருந்த குளிர்ந்த நீரைக் குடிக்க அவர் மனம் ஏங்கியது. அது அவர் தனது சிறுவயது மற்றும் இளமைப் பருவத்தில் அடிக்கடி சென்று பருகிய நீர். 

அவர் தனது சேவகர்களுக்கு நேரிடையாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை; "என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வருகிறவன் யார்?" என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்'' (2 சாமு 23:15). 

ஆனால் அவருடைய வலிமை மிக்க போர் வீரர்களில் மூன்று பேர் தங்கள் ராஜா தண்ணீருக்காகப் பெருமூச்சு விடுவதைக் கேட்டனர். உடனே அவர்கள் அந்த தண்ணீரைப் பத்திரமாகக் கொண்டு வர தங்கள் உயிரையும் பணயம் வைத்தனர். அவர்கள் "கேட்பதில் தீவிரமானவர்கள்."

வேதத்தை வாசிக்கும் போது ஆண்டவரின் பெருமூச்சைக் கேட்டதுண்டா?

b. பதில் அளிப்பதில் பொறுமை - Slow to speak (வ.19).

ஆவிக்குரிய வாழ்வின் மகுடம் பொறுமை. 

நமக்கு இரண்டு காதுகள், ஒரு வாய் உள்ளது. இது நாம் பேசுவதை விட அதிகமாகக் கேட்க வேண்டும் என்பதை நினைவூட்ட வேண்டும். பல முறை நாம் தேவ வார்த்தையுடன் வாதிடுகிறோம். அது பிறர் கேட்கும் படியாக இல்லாவிட்டாலும் கூட, குறைந்தபட்சம் நம் இதயங்களிலும் மனதிலும் ஒலிக்கிறது. 

"தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்" (நீதி. 10:19). 

"அறிவுடையவன் தன் வார்த்தைகளை அடக்குகிறான்" (நீதி. 17:27). 

லூக்கா 10:29ல் உள்ள நியாய சாஸ்திரி பொறுமையிழந்து, “எனக்குப் பிறன் யார்?” என்று இயேசுவிடம் வாதிட்டார். 

ஆதி திருச்சபை ஆராதனைகள் கூட ஒழுங்கற்றவையாக இருந்ததாக வேதம் குறிப்பிடுகிறது. சபையினர் அடிக்கடி போதகர்களுடன் சண்டை போட்டார்கள். சகோதரர்களிடையே சண்டைகளும், கலகங்களும் கூட இருந்தன (யாக்கோபு 4:1).

தேவ வார்த்தை நம்மோடு பேசுவதைப் பொறுமையோடு கேட்க வேண்டும்.

c. கோபத்திற்கு விலகி - Slow to wrath (வ. 19).

வேத வார்த்தை உங்கள் பாவத்தைச் சுட்டிக் காண்பித்தால் அதற்காகத் தேவ வார்த்தையின் மீது கோபம் கொள்ளாதீர்கள்.

"நீடிய சாந்தமுள்ளவன் மாகா புத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப் பண்ணுகிறான்" (நீதி. 14:29). 

தீர்க்கதரிசி நாத்தன், தாவீது ராஜாவிடம் “ஆட்டுக்குட்டி திருடப்பட்ட கதையை” பற்றிச் சொன்னபோது, ​​ராஜா வெகுவாக கோபமடைந்தார். ஆனால் "நீ தான் அந்த மனிதன்" என்று நாத்தன் சுட்டிக் காட்டிய போது, தாவீது உடனே "நான் பாவம் செய்தேன்" என்று கோபத்திற்கு விலகி தனது பாவத்தை அறிக்கையிட்டார் (2 சாமு. 12). 

கெத்சமேனே தோட்டத்தில், பேதுரு கேட்க மெதுவாகவும், பேசுவதற்கு விரைவாகவும், கோபத்திற்கு விரைந்தவராகவும் இருந்தார், விளைவு அவர் கிட்டத்தட்ட ஒரு மனிதனை வாளால் கொல்வதற்கும் முற்பட்டார். 

பல திருச்சபையில் நிகழும் சண்டைகள் அவசர கோபம் மற்றும் பொறுப்பற்ற வார்த்தைகளின் விளைவாகும். அதே சமயம் பாவத்தின் மீது கோபம் கொள்ள முடியாதவனுக்கு அதை எதிர்த்துப் போராடும் சக்தி இல்லை. ஆனாலும் வேதம் கற்றுத் தரும் உயர்ந்த பாடம்;

''நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்.'' (எபே. 4:26).

நாம் கர்த்தரில் அன்பு கூர்ந்தால், தீமையை வெறுக்க வேண்டும் (சங். 97:10). 

ஆனால் ''மனுஷனுடைய கோபம் தேவ நீதியை நடப்பிக்க மாட்டாதே'' (யாக்.1:20). 

நாம் கிறிஸ்துவுக்குள்ளாக முதிர்ச்சி அடைவதற்கு, பொறுமையுடன் செயல் புரிய வேண்டும் எனக் கர்த்தர் விரும்புகிறார். ஆனால் கோபம் அதற்கு நேர் எதிரானது (யாக்கோபு 1:3-4).

ஒருமுறை சுவரில் எழுதப்பட்ட வாசகத்தை நான் வாசித்தேன், "கோபம் என்பது மிகவும் மதிப்புமிக்க விஷயம், அதை இழப்பது அவமானம்!" 

ஆம், நிதானம்தான் நமக்கு எஃகுக்கு ஒப்பான வலிமையைக் கொடுத்து உதவுகிறது. 

கர்த்தருடைய வார்த்தையின் மீது நாம் கோபப்படுவதைக் கண்டித்து யாக்கோபு நம்மை எச்சரிக்கிறார். ஏனென்றால் வேத வார்த்தைகள் நம் பாவங்களை நமக்கு வெளிப்படுத்துகிறது. கண்ணாடியில் தனது உருவம் பிடிக்காததால், அந்தக் கண்ணாடியை உடைத்த மனிதனைப் போல, பல விசுவாசிகள் தேவ வார்த்தைக்கு எதிராகப் பேசி அதை அசட்டை செய்கிறார்கள், ஏனென்றால் அது அவர்களைப் பற்றியும், அவர்களது பாவத்தைப் பற்றியும் உண்மையை நேர்மையுடன் சொல்கிறது.

ஆயத்தமான இதயம் - A prepared heart (வச. 21)

யாக்கோபு மனித இதயத்தை ஒரு தோட்டமாகப் பார்த்தார்; ஒரு தோட்டத்தைக் கவனிக்காது அப்படியே விட்டுவிட்டால், அந்த மண்ணில் களைகளை மட்டுமே விளையும். 

“களைகளைப் பிடுங்கி”, “தேவ வார்த்தைகள் விதைக்கப்படுவதற்கு ஏதுவாக” நிலத்தைத் தயார் செய்யும்படி யாக்கோபு நம்மைத் தூண்டுகிறார்.

அலட்சியம் மிகுந்த மனதில் கட்டுப்படுத்த முடியாத அளவு களைகள் விளைந்து காணப்படும். ஆயத்தமில்லாத இருதயத்தில் தேவ வார்த்தையை விதைக்க முயல்வது முட்டாள்தனம். 

தேவனுடைய வார்த்தைக்காக நம் இதய தோட்டத்தின் நிலத்தை எவ்வாறு தயார் செய்வது? 

முதலில், நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, கர்த்தர் நம்மை மன்னிக்கும்படி கேட்பதன் மூலம் (1 யோவான் 1:9). 

பின்னர், தேவனது அன்பையும், கிருபையையும் தியானித்து, நம் இதயங்களில் உள்ள கடினத்தன்மையை "உடைத்து உழும்படியாக" அவரிடம் வேண்டிக் கேட்பதன் மூலம்: 

"நீங்கள் முட்களுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்" (எரே. 4:3). 

இறுதியாக, நாம் "சாந்தமாய் ஏற்றுக் கொள்ளும்" மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் (யாக். 1:21). 

சாந்தம் என்பது யாக்கோபு 1:19-20 இல் உள்ள "கோபத்திற்கு" எதிரானது. நீங்கள் சாந்தத்துடன் தேவ வார்த்தையைப் ஏற்றுக் கொள்ளும் போது, அதைப் பெற்றுக் கொள்கிறீர்கள். ஆகவே தேவ வார்த்தையோடு விவாதம் செய்யாதீர்கள். அதைக் கர்த்தரின் வார்த்தையாக மதியுங்கள். உங்கள் சிந்தனைக்குப் பிடித்த வகையில் அதைத் திருப்ப முயலாதீர்கள்.

தேவ வார்த்தையை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். பல்வேறு "ஆவிக்குரிய கருத்துக்களை" வாதிட விரும்பும் கிறிஸ்தவர்கள் தங்களை முட்டாளாக்கிக் கொள்கின்றனர். அவர்களின் "கொள்கை விவாதங்கள்" ஆவிக்குரிய வளர்ச்சியை ஊக்குவிப்பதாக நினைக்கலாம். ஆனால் உண்மையில் அவர்களால் களைகளை மட்டுமே வளர்க்க முடியும்.

II. தேவ வார்த்தையைக் கடைப் பிடியுங்கள் - Practice the Word (1:22-25) 

இரண்டாவதாகத் தேவ வார்த்தைக்கும், நமக்கும் இடையே உள்ள உறவு பலப்படுவதற்கு, வார்த்தையைக் கேட்பது மட்டும் போதாது; அதை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். 

ஒரு நல்ல ஆவிக்குரிய செய்தியைக் கேட்பது, வேதாகம வகுப்புகளில் கலந்து கொள்வது, தங்களை ஆவிக்குரியவர்களாக வளரச் செய்து, தேவனின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தரும் என்கிற தவறான எண்ணம் பலருக்கு உள்ளது. 

வசனத்தைக் கேட்பதினால் அல்ல, அதைக் கடைப்பிடிப்பதுவே ஆசீர்வாதத்தைத் தரும். 

பல கிறிஸ்தவர்கள் தங்கள் வேதாகமத்தில் பல வசனங்களை அடிக்கோடிட்டுக் குறிக்கிறார்கள், ஆனால் அவர்களின் மனங்களில் அவற்றை ஆழமாகக் குறித்துக் கொள்வதில்லை! 

நீங்கள் வார்த்தையைக் கேட்பதுவே போதுமானது என்று நினைத்தால், நீங்கள் உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். 

முந்தைய பகுதியில் யாக்கோபு வார்த்தையை விதைக்கு ஒப்பிட்டார், ஆனால் இந்த பகுதியில் அதை ஒரு கண்ணாடியுடன் ஒப்பிடுகிறார். 

திருமறையில் கர்த்தருடைய வார்த்தையைக் கண்ணாடி என்பதற்கு ஒப்பாகக் கூறும் மேலும் வேறு இரண்டு வேத பகுதிகள் உள்ளன; நீங்கள் அந்த மூன்றையும் ஒன்றாக இணைத்துத் தியானிக்கும் போது, ​​தேவ வார்த்தை என்னும் கண்ணாடியின் வழியாக நம்மைப் பார்த்தால், அதன் மூன்று விதமான ஊழியங்களைப் பார்க்க முடியும். அதனால் மூன்று விதமான பயன்களையும் பெற முடியும்.

a. ஆய்வு செய் - Examination (வச. 23-25).

கண்ணாடியை வைத்திருப்பதற்கான முக்கிய நோக்கம்,  அது உங்களை நீங்களே ஆராய்ந்து பார்க்க உதவுகிறது. அதனால் நீங்கள் உங்களை முடிந்தவரைச் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ள முடியும். 

தேவனுடைய வார்த்தை என்னும் கண்ணாடியில் நாம் நம்மை ஆராய்ந்து  பார்க்கும்போது, ​​நம் மனம், சிந்தனை ஆகியவை உண்மையில் எவ்விதமாக இருக்கிறதோ, அதைப் பார்க்க முடியும். 

ஆனாலும், ஒரு விசுவாசி வேத வார்த்தை என்னும் கண்ணாடி வழியாகத் தன்னை பார்க்கும்போது, அவர் செய்யும் பல தவறுகளை யாக்கோபு சுட்டிக் காட்டுகிறார். 

முதலில், அவர்கள் கடமைக்காகப் பார்க்கிறார்கள்!

பலர் வேத வார்த்தையைப் படிக்கும்போது அதன் வழியாக தங்களைக் கவனமாகப் பார்ப்பதில்லை. பல உண்மையுள்ள விசுவாசிகளும் கூட ஒவ்வொரு நாளும் வேதாகமத்திலிருந்து ஒரு அத்தியாயத்தைக் கடமையாகப் படிக்கிறார்கள். அது ஒரு ஒழுங்கான சமயப் பயிற்சி மட்டுமே. அதிலிருந்து அவர்கள் தனிப்பட்ட முறையில் எந்த பயனையும் அடைவதில்லை. 

அன்றாட வேத வாசிப்பு இல்லை என்றால் அவர்களது மனசாட்சி அவர்களைத் தொந்தரவு செய்யும். அதற்காகவே படிக்கிறார்கள். 

உண்மையில் அவர்களின் மனசாட்சி, அவர்கள் வேத வார்த்தைகளைக் கவனக்குறைவுடன் படிப்பதற்காக அல்லவா அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டும்?

திருமறையை மேலோட்டமாக வாசிப்பது நமது ஆழ்ந்த தேவைகளை வெளிப்படுத்தாது. இது ஒரு புகைப்படத்திற்கும், உண்மையை அப்பட்டமாக  வெளிப்படுத்தும் எக்ஸ்ரேக்கும் இடையே உள்ள வித்தியாசம். 

இரண்டாவது தவறு, பார்த்ததை உடனடியாக மறந்து விடுகிறார்கள்!

ஒருவர் தனது மனதை, அதன் சிந்தனை ஓட்டங்களை ஆழமாகத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால் மட்டுமே, அதன் தன்மையை உணர முடியும், அது மனதில் மறக்க முடியாத அனுபவமாகப் பதியும்! 

திருச்சபையில் நடக்கும் பல ஆவிக்குரிய கூட்டங்களில், மக்களின் தீவிரமான அர்ப்பணிப்புகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் சில காலம் கடந்த பின்பு அந்த விசுவாசத்தில் சிலர் மட்டுமே தொடர்ந்து நடக்கின்றனர். 

ஆனால், ஜான் வெஸ்லி ஒரு பிரசங்க கூட்டத்தைப் பற்றி எழுதினார்: “எனக்கு முன் ஒருவன் மரித்தவனைப் போல விழுந்தான், இப்போது அடுத்த வினாடியில் மற்றொருவன், தொடர்ந்து மூன்றாவது. அடுத்த அரை மணி நேரத்தில் மேலும் ஐந்து பேர் கீழே வீழ்ந்தனர். அவர்களில் பெரும்பாலோர் வன்முறையால் பாதிக்கப்பட்ட வேதனையிலிருந்தனர்" (ஜூன் 22, 1739 க்கான வெஸ்லியின் ஜர்னல்). 

இந்த மக்களை சில உளவியல் ரீதியான காரணங்களால் தான்  விழுந்தனர் என நீங்கள் தீர்மானிப்பதற்கு முன்பாக, திருமறையில் காணப்படும் தேவ மனிதர்கள் தேவ சமூகத்தில் தங்கள் சொந்த மனங்களின் உண்மையான நிலையைக் கண்டவுடன் எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதை வாசித்துப் பாருங்கள். 

ஏசாயா தீர்க்கன் கதறி அழுது, “ஐயோ! நான் அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்” என்றார் (ஏசா. 6:5)! 

பேதுரு, "ஆண்டவரே, என்னைவிட்டு அகன்று போம்,  நான் பாவியான மனிதன்"  என்று அழுதான் (லூக்கா 5:8)! 

யோபு அவருடைய நாளில் பூமியில் மிகவும் நீதியுள்ள மனிதர், ஆனால் அவர்  "நான் என்னை அருவெறுத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்" என அறிக்கை  செய்தார் (யோபு 42:6).

தவறு எண் மூன்று: அவர்கள் கேட்ட வார்த்தைக்குக் கீழ்ப்படியவும், அதைக் கடைப்பிடிக்கவும் தவறுகிறார்கள். 

வசனத்தைக் காதல் கேட்டதும், அதைக் கடைப் பிடித்தது போலப் பலர் கற்பனையாக  நினைக்கிறார்கள். அது அசட்டுத்தனம். கிறிஸ்தவர்களாகிய நாம், செயல் படுவதற்குப் பதிலாக வேதத்தை வாசிப்பது அல்லது வேதத்தைப் பற்றிப் பேசுவதில் திருப்தி அடைகிறோம். 

சுவிசேஷம் அறிவித்தல், திருச்சபை வளர்ச்சி போன்ற தலைப்புகளில் முடிவில்லா குழுக் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்துகிறோம். அதனால் நாம் முன்னேற்றம் அடைந்து விட்டதாக நினைக்கிறோம். மாநாடுகள் மற்றும் செயல் கூட்டங்களில் நிச்சயமாக எந்த தவறும் இல்லை என்றாலும், அவை நடைமுறையில் செயல்படுத்தப் படாவிட்டால், அது பயனற்றது. அது பாவம். 

வேதம் என்னும் கண்ணாடியை நாம் பயன் தரும் வகையில் பயன்படுத்த வேண்டுமானால், அதைக் கவனமாகவும், தீவிர நோக்கத்துடனும் பார்க்க வேண்டும் (யாக். 1:25). 

அவசரமாகப் பார்த்துச் செல்வது பயனற்றது. தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நாம் நம்முடைய சொந்த இருதயங்களையும், வாழ்க்கையையும் ஆராய வேண்டும். 

இதற்கு நேரம், கவனம் மற்றும் நேர்மையான பக்தி தேவை. ஒவ்வொரு நாளும் தேவனுடன் வெறும் ஐந்து நிமிடங்களில் ஆழ்ந்த ஆவிக்குரிய ஆய்வை செய்து  நிறைவேற்ற முடியாது

பல ஆண்டுகளாக என்னைக் கவனித்துக்கொண்ட மருத்துவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் உண்மையில் அதிர்ஷ்டசாலி. 

அவர்கள் ஒவ்வொருவரிடமும் நான் பாராட்டிய இரண்டு நல்ல குணங்கள் உள்ளன: அவர்கள் என்னுடன் போதுமான நேரத்தைச் செலவழித்து இருக்கிறார்கள்.  அவர்கள் அவசரப்படாமல், எப்போதும் என்னிடம் உண்மையைச் சொன்னார்கள். 

பரம மருத்துவரான இயேசு (மத். 9:12) நம்மைப் பரிசோதிக்கும் போது, அவர் தம்முடைய வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அந்த வேலையைச் சிறப்பாகச் செய்ய அவருடன் நாம் போதிய நேரம் செலவிட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

ஒருவேளை நாம் தேவ வார்த்தையை ஆழ்ந்து பார்ப்பதற்குப் பதிலாக அவசர கதியில் பார்ப்பதற்கு, ஒரு காரணம் என்னவென்றால், நாம் நம்மைப் பற்றிய உண்மையைப் பார்க்கப் பயப்படுகிறோம். 

வேதம் நம்மோடு பேசிய உடன், நாம் என்ன செய்ய வேண்டும்? கர்த்தர் என்ன சொல்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் சொல்வதைச் செய்ய வேண்டும். தேவ ஆசீர்வாதம் என்பது வார்த்தைகளை வாசிப்பதில் அல்ல, அதைச் செய்வதில் வருகிறது. "இப்படிப்பட்ட மனிதன் தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்" (யாக். 1:25). 

யாக்கோபு நிருபத்தில் வலியுறுத்தப்படும் கருத்து, விசுவாசத்தைச் செயல்கள் மூலம் நடைமுறை வாழ்வில் செய்து காண்பிக்க வேண்டும். நாம் தேவ வார்த்தையைப் படித்த பிறகு அதன்படி வாழ வேண்டும் (யாக்.1:25; அப். 1:14; 2:42, 46; 13:43; 14:22; 26:22 ). 

யாக்கோபு ஏன் தேவனுடைய வார்த்தையை "சுயாதீனப் பூரணப் பிரமாணம்" (யாக்கோபு 1:25) என்று அழைத்தார்? ஏனென்றால், அது முழுமையானது. நாம் அதற்குக் கீழ்ப்படிந்தால், அது நம்மைப் பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிறது.  

''நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே (சுதந்திரமாக) நடப்பேன்" (சங். 119:45). 

"பாவம் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமை" (யோவான் 8:34). 

“நீங்கள் என் உபதேசத்தில்  நிலைத்திருந்தால், மெய்யாகவே என் சீடராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" (யோவான் 8:31-32).

நம் மனம், சிந்தனைகளைத் தேவ வார்த்தை என்னும் கண்ணாடியில் ஆழ்ந்து பார்த்து, நம்மை நாமே உணர்ந்து சீர் செய்து கொள்வது முதல் பயன். தேவ வார்த்தை எனும் கண்ணாடியின் இரண்டாவது பயனும் இருக்கிறது. அது..,


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

சனி, 6 மே, 2023

யாக்கோபு 1: 17-18

அத்தியாயம் 3 தொடர்ச்சி.



2. கர்த்தர் நல்லவர். -  Consider God's Goodness (1:17):

சாத்தான் தந்திரக்காரன். கர்த்தர் நம்மைக் கட்டுப்படுத்தி அடிமை போல வைத்திருக்கிறார், அவரது வார்த்தையைப் பின்பற்றி வாழ்ந்தால் உலக இன்பங்களை அனுபவிக்க முடியாது, அவர் நம்மை ஆழ்ந்து நேசிக்கவில்லை, அவருக்கு நம்மீது உண்மையான அக்கறை கிடையாது என நம் மனதை ஏமாற்றி, நம்மை நம்ப வைப்பது அவனது சூழ்ச்சியான தந்திரங்களில் ஒன்றாகும்.

இதே விதமாகவே சாத்தான் ஏவாளைத் தேவ அன்பைச் சந்தேகிக்கும்படி வஞ்சகமாகத் தூண்டினான். கர்த்தர், அவர்களை உண்மையாக நேசிக்கவில்லை. அவர்கள் தேவர்களைப் போல மாறுவதை விரும்பவில்லை. ஆகவே தான் அந்த கனியை உண்பதற்குத் தடை செய்தார் என வலை விரித்தான். 

வாசித்துப் பாருங்கள்;    

சர்ப்பம் ஏவாளிடம், "தடை செய்யப்பட்ட அந்த மரத்தின் பழத்தைச் சாப்பிட்டால், நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் தேவர்களைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது தேவனுக்குத் தெரியும்;" என்றது (ஆதி 3: 4-5).

சாத்தான் இயேசுவைச் சோதித்த போதும், தேவ அன்பைச் சந்தேகிக்கவே அவரை ​​வஞ்சகமாகத் தூண்டினான். அவரது பசியைச் சார்ந்து முதல் கேள்வியை எழுப்பினான். "உமது பிதா உம்மை உண்மையாக நேசித்தால், நீர் ஏன் பசியுடன் தவிக்க வேண்டும்?

"நீர் தேவனுடைய குமாரன் என்றால், இந்தக் கற்கள் அப்பங்களாகும்படி சொல்லும்''.

இரண்டாவதாக

"உமது பிதா உம்மை உண்மையாக நேசித்தால், நீர் இந்த தேவாலயத்தின் உப்பரிகையிலிருந்து தாழக்குதியும். அப்போது அவர் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார். அவர்கள் உமது கால் கல்லில் மோதாதபடி தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்''.

இதிலிருந்து நம் ஆழ் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியதொரு சத்தியம் 'கர்த்தர் நல்லவர்’, அவர் எப்போதும் எனக்கு நன்மையையே தருபவர். 

இந்த நம்பிக்கை, நாம் சோதனையில் வீழ்ந்து விடாதபடி நம்மை எச்சரித்துப் பாதுகாக்கும் ஒரு தடுப்புச் சுவராக இருக்கிறது. தேவன் நல்லவர் என்பதால், நம் தேவைகளை நிறைவேற்ற வேறு எந்த ஒரு நபரும் (சாத்தான் உட்பட) நமக்குத் தேவையில்லை. 

தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாக வாழ்ந்து ஆசீர்வாதமாக இருப்பதைவிட, அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடப்பது கடினமாக  இருந்தாலும், அதுவே நல்லது. 

நமக்கு நன்மையையே தரும் கர்த்தரை, நாம் சந்தேகிக்கத் தொடங்கும் போது  சாத்தானின் கவர்ச்சிகளால் ஈர்க்கப்படுவோம். நமக்குள் மறைந்து இருக்கும் இழிவான இச்சைகளால் தூண்டப்பட்டு, அவன் விரிக்கும் வலையில் சிக்கிக் கொள்வோம். 

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இஸ்ரவேலர், கானான் தேசத்தைச் சுதந்தரித்து,  அதன் ஆசீர்வாதங்களை அனுபவிக்கத் துவங்குவதற்கு முன்பாக, கர்த்தர் அவர்களுக்குச் செய்த நன்மைகளை மறந்துவிடக்கூடாது என்று சொல்லி மோசே அவர்களை எச்சரித்தார்.

மேலும், ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு எனும் உன் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புகச் செய்யும்போதும், நீ கட்டி எழுப்பாத, பரந்த வசதியான நகர்களையும், நீ நிரப்பாத எல்லாச் செல்வங்களால் நிறைந்த வீடுகளையும், நீ வெட்டாத பாறைக் கிணறுகளையும், நீ நடாத திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவத் தோப்புகளையும் அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டு நிறைவு கொள்ளும் போதும், நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து உன்னை வெளியே அழைத்து வந்த கர்த்தரை மறந்து விடாதபடி கவனமாய் இரு. உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து நட! அவருக்குப் பணிந்து ஆராதனை செய்து, அவர் பெயராலே ஆணையிடு! உங்களைச் சுற்றிலுமுள்ள மக்களின் தெய்வங்களாகிய வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில், உங்களிடையே உள்ள உங்கள் தேவனாகிய கர்த்தர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத ஆண்டவர். இல்லையெனில், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சினம் உங்கள் மேல் மூண்டு, உலகினின்றே உங்களை அழித்து விடலாம். (உபா. 6:10-15).

இன்றும் இந்த எச்சரிக்கை நமக்குத் தேவையாக இருக்கிறது.

இந்த முதல் அதிகாரம் 17வது வசனத்தின் வழியாக, நாம் சபலத்தில் வீழ்ந்து போகாதபடிக்கு, கர்த்தரின் ''நான்கு குணாதிசயங்களை'' நாம் எப்போதும் மறவாமல் நினைவு கூற வேண்டும் என யாக்கோபு கற்றுத் தருகிறார்.

நல்ல கொடைகள் அனைத்தும்,  நிறைவான வரமெல்லாம்,  ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்து கீழே இறங்கி வருகின்றது. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல (யாக் 1:17).

All good giving and every perfect gifts are from above, coming down from the father of lights, with whom there is no alteration or shadow caused by change. (James 1:17)

2.1. கர்த்தர் நல்லவர் - (God is good and he gives only good gifts):

கர்த்தர் நல்லவர். இவ்வுலகில் உள்ள அனைத்து நன்மைகளும் அவரிடமிருந்தே நமக்கு வருகிறது. நாம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்குக் கர்த்தர் தடை செய்கிறார் என்றால், அது நமக்கு நன்மையானது இல்லை எனப் பொருள். ஒரு வேளை தேவனிடமிருந்து அருளப்பட்ட ஒன்றில், நாம் உடனடியாக நன்மை ஒன்றைக் காணாவிட்டாலும், அது நல்லது தான். பவுலின் உடலில் உள்ள முள் கர்த்தரால் தான் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அது ஒரு வித்தியாசமான கிருபை; ஆயினும் அது அவருக்குப் பெரும் ஆசீர்வாதமாகத் தான் அமைந்தது (2 கொரி. 12:1-10).

2.2. கர்த்தர் அருளுபவை நிறைவானது - (The way God gives is perfect):

கர்த்தர் அருளுபவை முழுமையானதாக இருக்கிறது. "நிறைவான வரமெல்லாம்" என்பதை ''ஒவ்வொரு வரமும் நிறைவானது" எனவும் மொழி பெயர்க்கலாம். 

ஒரு மனிதர் நமக்கு அன்பில்லாமல் வெறும் சடங்காக அன்பளிப்பை வழங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரு பரிசு நமக்குக் கொடுக்கப்படும் விதத்தில் தான் அதன் உண்மையான மதிப்பு கூடவும், குறையவும் வாய்ப்பு உள்ளது. 

ஆனால் கர்த்தர் நமக்கு ஒரு ஆசீர்வாதத்தை அளிக்கும் போது, அதை அவர் அன்பாகவும், கிருபையுடனும் மட்டுமல்ல, நிறைவாக அருளுகிறார். அவர் கொடுப்பது, கொடுக்கும் விதம் இவ்விரண்டும் சிறந்ததாக இருக்கிறது.

2.3. கர்த்தர் அருள்பவை முடிவற்றது - (He gives Constantly):

கர்த்தரின் கிருபை காலை தோறும் புதிதாக இருக்கிறது. அவைகள் முடிவற்றவை. "நிறைவான வரம் எல்லாம் ஜோதிகளின் பிதாவிடமிருந்து கீழே இறங்கி வருகின்றது"  என்பது நிகழ்கால தொடர் வாக்கியம்.

"அது தொடர்ந்து கீழே இறங்கி வந்து கொண்டே இருக்கிறது" எனவும் மொழி பெயர்க்கலாம். இறைவன் எப்போதாவது கொடுப்பதில்லை; அவர் எப்பொழுதும் தொடர்ந்து அருளுகிறார். 

சில சமயங்களில் அவருடைய கிருபைகளை நாம் காணாத போதும், அவர் அவற்றை அனுப்புகிறார் என விசுவாசிக்க வேண்டும். இது எப்படி சாத்தியம்? ஏனென்றால் அவர் நமக்கு எப்போதும் நன்மையானதைத் தொடர்ந்து தருவேன் என வாக்கு தந்திருக்கிறார். நாம் அவருடைய வார்த்தையை நம்புகிறோம்.

2.4. கர்த்தர் மாறாதவர் - (God does  not Change):

கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். ஒளியின் தந்தையிடத்தில் நிழல்கள் இல்லை. அவர் பரிசுத்தமானவர், ஆகையால் அவரால் ஒருபோதும் மோசமான இயல்பு உடையவராகச் செயல்பட முடியாது; அவர் ஏற்கனவே பரிபூரணமாக இருப்பதால் இன்னும் சிறப்பானவராகவும் மாற வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

பூமியில் சூரியனது பிரகாசத்தின் அளவு காலை, மதியம், மாலை, இரவு எனப் பல வகைகளில் மாறுபட்டு வீசுகிறது. அதற்குக் காரணம் பூமி சுழல்வது தான். ஆனால் சூரியனோ எப்போதும் மாறாமல் ஒருவிதமாகப் பிரகாசிக்கிறது. ஒரு வேளை நமக்கும் இறைவனுக்கும் இடையே சில சந்தர்ப்பங்களில் நிழல்கள் குறுக்கிட்டால், புரிந்து கொள்ளுங்கள்; அவர் அவற்றை ஏற்படுத்தவில்லை. 

துயரங்கள் அல்லது சோதனைகள் நேரிடும் போது, நாம் ஒருபோதும் அவரது அன்பைக் குறித்து கேள்வி கேட்கவோ அல்லது அவர் அருளும் நன்மையைக் குறித்துச் சந்தேகிக்கவோ கூடாது என்பதே இதன் பொருள்.

ஒரு வேளை தாவீது ராஜா கர்த்தருடைய நன்மையை நினைவு கூர்ந்திருந்தால், அவர் பத்சேபாவை அழைத்து, அந்தப் பயங்கரமான பாவத்தைச் செய்திருக்க மாட்டார். ஆகையால் தான் நாத்தன் தீர்க்கதரிசி ராஜாவிடம் இவ்விதம் சொன்னார்.

“இஸ்ரேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து, நான் உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரேல் வம்சத்தையும் யூதா வம்சத்தையும் கையளித்தேன்; இது மிகக் குறைவாக இருந்திருந்தால், நான் இன்னும் உனக்கு வேண்டியதைக் கொடுத்திருப்பேன்” (2 சாமு. 12:7-8).

இந்த வசனத்தில் ''கொடுத்து/தந்து/கையளித்து'' எனும் வார்த்தையைத் தேவன்  திரும்பத் திரும்பக் கூறுவதைக் கவனியுங்கள். கர்த்தர் நல்லவராக இருந்தார், ஆனால் தாவீது தன்னிலை இழந்து, கர்த்தர் அருளிய நன்மைகளை மறந்ததால் சாத்தானின் தூண்டிலில் சிக்கினார்.

சபலங்களில் வீழ்ந்து விடாமல் நம்மைப் பாதுகாக்கும் முதல் எச்சரிக்கும் தடுப்புச் சுவர் எதிர்மறையானது: அது கர்த்தரின் நியாயத் தீர்ப்பைக் குறித்த பயம்.

இரண்டாவது எச்சரிப்பின் தடுப்புச் சுவர் நேர்மறையானது: அது கர்த்தர் அருளும் நன்மையை மறக்காது, நாம் நன்றியுடன் அதை நினைவு கூர்ந்து வாழ்வது.  

கர்த்தருக்குப் பயப்படுதல் எதிர்மறையாக இருந்தாலும், அது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை தான்,  ஆனாலும் தேவன் மீதுள்ள அன்பு, நன்றியுணர்வு அதைச் சமநிலைப்படுத்த வேண்டும்.

அவர் நம்மை சிட்சித்து தண்டிக்கக்கூடும் எனப் பயந்து அவருக்குக் கீழ்ப்படியலாம், அல்லது அவர் நம் மீது நீடிய பொறுமையுடன் கிருபையாக இரங்கி, நம் வாழ்வை நன்மையால் நிரப்புவதால் அவரை நேசித்து அவருக்குக் கீழ்ப்படியலாம்.

இந்த நேர்மறையான அணுகுமுறையே யோசேப்பு தனது எஜமானரின் மனைவியால் சோதிக்கப்பட்டபோது பாவம் செய்யாமல் இருக்க உதவியது.

“இதோ, என் எஜமானர் வீட்டில் எதற்கும் கவலைப்படுவதில்லை, தனக்குச் சொந்தமான அனைத்தையும் என் பொறுப்பில் வைத்திருக்கிறார். இந்த வீட்டில் என்னை விடப் பெரியவர் யாரும் இல்லை, அவர் உங்களைத் தவிர வேறு எதையும் என்னிடம் தடுக்கவில்லை, ஏனென்றால் நீங்கள் அவருடைய மனைவி. அப்படியானால் நான் எப்படி இவ்வளவு பெரிய தீமையைச் செய்து, கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்ய முடியும்? (ஆதி. 39:8-9).

தனது வாழ்வின் ஆசீர்வாதங்கள் அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்தவை என்பதை யோசேப்பு அறிந்திருந்தார். அவைகள் அனைத்தையும் கர்த்தர், தன் எசமானுடைய கைகளின் வழியாக அருளுகிறார் எனும் நன்றி நிறைந்த இதயம் அவர் சபலத்தில் வீழ்ந்து பாவம் செய்யாதபடி தடுத்து நிறுத்தியது.

சாத்தான் கொடுக்கும் சில்லறை சுகங்களை விடக் கர்த்தரின் கிருபைகள் எப்போதும் சிறந்தவை. சாத்தான் ஒருபோதும் எந்தவொரு நல்ல ஆசீர்வாதத்தையும் கொடுப்பதில்லை. அவன் கொடுக்கும் சில்லறை சுகங்களுக்கு நீங்கள் ஆசைப்பட்டால், உண்மையில் அவற்றிற்காக அதிக விலையை அவனுக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்.

"கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தருகிறது; அவர் அதில் எந்த துக்கத்தையும் சேர்க்கவில்லை" (நீதி. 10:22).

ஆகான் தேவனின் எச்சரிக்கையையும் கர்த்தரின் நன்மையையும் மறந்து, தடைசெய்யப்பட்ட செல்வத்தைக் கண்டு, ஆசைப்பட்டு, அதைப் பெற்றான். அவன் பணக்காரர் ஆனான், ஆனால் அதைத் தொடர்ந்து வந்த துக்கம் அவனுடைய செல்வத்தை வறுமையாக மாற்றியது (யோசு. 7).

அடுத்த முறை நீங்கள் சபல உணர்வுகளால் சோதிக்கப்படும்போது, ​​உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் உங்களுக்கு அருளிய நன்மைகளைத் தியானியுங்கள். இந்த பாவத்தைச் செய்து அந்த நல்ல தேவனை நான் துக்கப்படுத்த மாட்டேன் என்பது மனதின் ஆழமான தீர்மானமாக இருக்கட்டும். 

உங்களுக்கு ஏதாவது ஒரு தேவை என்று நினைத்தால், கர்த்தர் அதை வழங்குவதற்காகக் காத்திருங்கள். பிசாசின் தூண்டிலோடு ஒருபோதும் விளையாட வேண்டாம்.

சோதனைக்கான ஒரு நோக்கம் பொறுமையைக் கற்பிப்பதாகும். தாவீது சவுலைக் கொன்று தான் ராஜாவாக விரைந்து முடிசூட்டுவதற்கு இரண்டு முறை சோதிக்கப்பட்டார், ஆனால் அவர் அந்த சபலங்களை எதிர்த்து கர்த்தரின் நேரத்திற்காகக் காத்திருந்தார். தாவீது அப்போது முதிர்ச்சியுடன் செயல்பட்டார்.

3. கர்த்தரின் தெய்வீக இயல்பை கருத்தில் கொள்ளுங்கள் - Consider God's Divine Nature (1:18):

முதலாவது "எதிர்காலத்தை எண்ணிப் பாருங்கள். கர்த்தரின் நியாயத் தீர்ப்புக்குப் பயந்து, பாவத்திற்கு விலகி, எச்சரிக்கையாக இருங்கள்." எனக் கூறினார்.

இரண்டாவதாக, "உங்களைச் சுற்றி நிகழ்வதைக் கவனித்துப் பாருங்கள். கர்த்தர் உங்களுக்கு அருளிய ஏராளமான நன்மைகளைத் தியானித்து, அதன் நிமித்தமாவது பாவத்திற்கு விலகி வாழுங்கள்" என்றார். 

மூன்றாவதாகக் கூறுகிறார், "உங்கள் உள்ளான மனதைக் கவனித்துப் பாருங்கள்’’.  

நீங்கள் யார்? 

நீங்கள் உன்னதத்திலிருந்து அருளப்பட்ட மறுபிறப்பின் அனுபவத்தை அடைந்த கர்த்தரின் தெய்வீகத் தன்மையை உடையவர்கள்.

இச்சையானது பாவத்திற்கும் மரணத்திற்கும் நம்மை அழைத்துச் செல்லும் என்பதை, கர்ப்பமடைதலுக்கு ஒப்பான காட்சியாக யாக்கோபு சித்தரித்தார் (யாக். 1:15).

இப்போதும் அவர் அதேவிதமான உருவகத்தை இங்கும் பயன்படுத்துகிறார்.  ''சத்திய வசனத்தினாலே உங்களை ஜெநிப்பித்தார்'' என்பதில் தேவ வார்த்தையை, ஒரு உயிரைப் பிறப்பிக்கும் விதையாக உருவகப் படுத்தி விளக்குகிறார்.

அப்போஸ்தலர் யோவானும் இதே விதமானதொரு அணுகுமுறையைத் தான் 1-யோவான் 3:9 இல் பயன்படுத்துகிறார்.

''தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான், ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்த படியினால் பாவம் செய்யமாட்டான்’’.

இங்கு "அவருடைய வித்து" என யோவான் குறிப்பிடுவது ஒரு விசுவாசிக்குள் இருக்கும்  கர்த்தருடைய தெய்வீக இயல்புகளைக் குறிக்கிறது.

மறுபிறப்பின் அனுபவம் இல்லாமல் பாவத்தை ஜெயிக்க முடியாது. ஆகவே  மறுபிறப்பைக் குறித்து வேதம் வெளிப்படுத்தும் நான்கு முக்கியமான சிறப்பு இயல்புகளைத் தியானிப்பது மிக முக்கியம்.  

3.1. மறுபிறப்பு: தெய்வீக அருள் - It is divine:

மறுபிறப்பு உன்னதத்திலிருந்து அருளப்படும் ஈவு (யோவான்3:17). நிக்கோதேமு மறுபிறப்பு என்பதை, ஒருவர் முதிர் வயதில் தனது தாயின் கர்ப்பப் பைக்குள் மீண்டும் எப்படி நுழைய முடியும் எனத் தவறாகச் சிந்தித்தார். அவர் உண்மையில் மறுபிறப்பைத் தவறாகப் புரிந்து கொண்டார். 

தெய்வீக மறு பிறப்பு என்பது சரீர முயற்சியால் உருவாகுவது இல்லை. அது  எந்த பெற்றோருக்கு, எந்த தேசத்தில் பிறக்க வேண்டும் என்பதை எப்படி நாம்  முடிவு செய்ய முடியாதோ அது போல, நமது ஆவிக்குரிய பிறப்பையும் நம்முடைய இஷ்டம் போல உருவாக்கிக் கொள்ள முடியாது. அது கர்த்தரின் தீர்மானம்.  

நாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் அந்த தருணத்தில் தெய்வீக அற்புதமாக நிகழ்கிறது. 

3.2. மறுபிறப்பு: கருணை - It is gracious:

மறுபிறப்பைச் சம்பாதித்துப் பெற முடியாது. நாம் அதற்குத் தகுதியானவர்களும் கிடையாது. 

கர்த்தர் தமது சொந்த கிருபை மற்றும் விருப்பத்தின் காரணமாக ஒருவருக்கு இந்த ஆவிக்குரிய புதிய பிறப்பைக் கொடுக்கிறார்.

"அவர்கள் இரத்தத்திலாவது [மனித வம்ச தொடர்ச்சி - human descent], மாம்ச சித்ததினாலவது [சரீர முயற்சி - Flesh efforts], புருஷனுடைய சித்ததினாலவது [மனித முயற்சி human efforts ] பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்" (யோவான் 1:13).

ஒருவரும் உறவு, செல்வம், சுய தீர்மானங்கள், சாதி, மதம் காரணமாக மறுபிறப்பைப் பெற முடியாது. மறுபிறப்பு முழுமையாகக் கர்த்தரின் கருணையால் நிகழ்வது.

3.3. மறுபிறப்பு: கர்த்தருடைய வார்த்தையால் பிறப்பது - It is through God's word:

மனிதப் பிறப்பிற்கு ஓர் தாயும், தந்தையும் தேவைப்படுவது போல, ஆவிக்குரிய பிறப்பிற்கும் தாயும், தந்தையும் இருக்கிறார்கள். அது கர்த்தரின் வார்த்தை மற்றும் பரிசுத்த ஆவியானவர்.

“மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்; ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” (யோவான் 3:6).

"அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே" (1 பேதுரு 1:23).

புதிய பிறப்பின் அதிசயம் நமக்குள் நிகழப் பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் வார்த்தையைப் பயன்படுத்துகிறார். 

தேவனுடைய வார்த்தை "உயிருள்ளது. அது சக்தி வாய்ந்தது" (எபி. 4:12). தேவ வார்த்தையானது, கிறிஸ்துவை நம்பும் பாவியின் இதயத்தில் ஒரு புதிய ஜீவனை உருவாக்க முடியும். அந்த புதிய ஜீவன் கர்த்தருக்குப் பிரியமான பரிசுத்த வாழ்க்கை வாழும் சக்தி வாய்ந்தது. 

ஆக மறு பிறப்பு எனும் புதிய வாழ்க்கை, பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசியின் இதயத்தில் கர்த்தரின் வார்த்தையைப் பதிப்பதன் வழியாக உருவாக்குகிறார். 

3.4. மறுபிறப்பு: படைப்புகளில் ஆகச் சிறந்தது - It is the  finest birth possible:

நாம் "அவருடைய சிருஷ்டிகளின் முதற்பலன்கள்" என்று யாக்கோபு யூத விசுவாசிகளுக்கு எழுதினார். முதற் பலன்கள் என்ற வார்த்தை யூதர்களுக்கு மிக அர்த்தமுள்ளது. 

பழைய ஏற்பாட்டு யூதர்கள் தங்களுடைய விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலை வெளிப்படையாகக் காண்பிக்கும் விதமாகத் தேவனுக்கு முதற்பலனைக் கொண்டு வந்தனர். அது நன்றியின் வெளிப்பாடு.

"உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம் பண்ணு" (நீதி. 3:9).

கர்த்தர் இந்த பிரபஞ்சத்தில் படைத்திருக்கும் அனைத்து உயிரினங்களிலும், உண்மையான சாட்சியுடன் வாழும் கிறிஸ்தவர்களே மிக உயர்ந்த படைப்பு, அதுவே மிகச் சிறந்தது! ஏனெனில், அவர்கள் இறைவனின் பண்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த காரணத்தினிமித்தமே, ஒரு உண்மை கிறிஸ்தவன் சாத்தானின் தூண்டிலில் விழுவது அல்லது பாவமான காரியங்களை விரும்புவது தேவ நாமத்திற்கும், அவரது கண்ணியத்திற்குக் குறைவானது என்பதை உணர வேண்டும். 

உயர்ந்த பிறப்பு என்பது உயர்ந்த பண்புகள் நிறைந்த வாழ்க்கை வாழ்வதன் மூலமாக வெளிப்படுத்த வேண்டும். நமக்கு ஒரு புதிய மறுபிறப்பை அருளுவதன் மூலம், கர்த்தர் பழைய பிறப்பு குறைவானது எனவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிராகரிக்கிறார்.

திருமறை முழுவதும், தேவன் முதல் குழந்தையை நிராகரித்து, இரண்டாவது குழந்தையை ஏற்றுக் கொள்வதைக் காணலாம். 

அவர் ஆபேலை ஏற்றுக் கொண்டார், காயீனை அல்ல; ஈசாக்கை அங்கீகரித்தார், இஸ்மவேலை அல்ல; யாக்கோபை தெரிந்து கொண்டார்,  ஏசாவை அல்ல. அவர் உங்கள் முதல் பிறப்பை நிராகரிக்கிறார். உங்களுக்கு மறுபிறப்பு தேவை என்று அவர் அறிவுறுத்துகிறார்.

இந்த புதிய மறுபிறப்பின் அனுபவம்தான் சோதனையை வெல்ல நமக்கு  உதவுகிறது. ஆதாமிடமிருந்து நமது பழைய சுபாவத்தை (மாம்சீக சுபாவம்) பெற்றோம். அவர் தோல்வியடைந்தார். ஆனால் நாம் புதிய இயல்புக்கு அடிபணிந்தால், வெற்றி பெறுவோம், ஏனெனில் இந்த புதிய இயல்பு கிறிஸ்துவிடமிருந்து வருகிறது. அவர் வெற்றியாளர்.

இந்த கருத்தை ஒரு ஞாயிறு பள்ளிக் குழந்தை எளிய வார்த்தைகளில்  விளக்கியது:

“இரண்டு மனிதர்கள் என் இதயத்தில் வாழ்கிறார்கள்: ஒருவர் வயதான ஆதாம். மற்றவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. சோதனை என் இதயக் கதவைத் தட்டும் போது, ​​அதற்குப் பதில் சொல்ல யாராவது ஒருவரை அனுப்ப வேண்டும். நான் ஆதாமைப் பதில் சொல்ல அனுமதித்தால், பாவம் செய்வேன். ஆகவே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை பதில் சொல்ல அனுப்புகிறேன். அவர் எப்போதும் வெற்றி பெறுவார்!”

நிச்சயமாக, இந்த புதிய இயல்பு உங்களுக்குள் வல்லமையாகச் செயல்பட வேண்டுமெனில் தினமும் கர்த்தருடைய வார்த்தையால் உங்கள் ஆன்மாவிற்கு உணவளிக்கப்பட வேண்டும். அது சபலத்தைத் தூண்டுகின்ற மாம்சீக உணர்வுகளை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான வலிமையை உங்களுக்குத் தரும். 

உங்களுக்கு ஆவிக்குரிய மறுபிறப்பைக் கொடுக்க தேவனுடைய வார்த்தையைப் பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தியது போல, உங்களுக்கு ஆவிக்குரிய பலத்தைத் தருவதற்கும் அதே தேவ வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.  

"மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" (மத். 4:4).

நாம் பாவத்தில் வீழ்வதற்குப் பல சாக்குப்போக்குகளைக் காரணமாகச் சொன்னாலும், உண்மையில் அதில் வீழ்வதற்கு நம்மைத் தவிர வேறு யாரும் காரணம் இல்லை.

நம்முடைய சொந்த ஆசைகளே, நம்மைச் சபலத்திற்கும், பாவத்திற்கும் அழைத்துச் செல்கின்றன. இது கர்த்தரின் குற்றம் இல்லை.

ஆனாலும் பாவத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, தேவன் இந்த மூன்று எச்சரிக்கும் தடுப்புச் சுவர்களை அமைத்துள்ளார். நாம் தடுப்புச் சுவர்களைக் கவனித்து எச்சரிக்கையாகப் பாவத்திற்கும், சபலங்களுக்கும் விலகி வாழ்ந்தால், ஜீவ கிரீடத்தை (Crown) வெல்வோம் (யாக்கோபு 1:12). தடுப்புச் சுவர்களை உடைத்துச் சென்றால், சவப்பெட்டியை (Coffin) காண்போம் (யாக்கோபு 1:15).

மரணமா (Coffin)? ஜீவ கிரீடமா (Crown)?

அது எதுவாக இருக்கும்? Which will it be?


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.