அத்தியாயம் 4 தொடர்ச்சி:
மறுசீரமைப்பு - மறுரூபமாகுதல்.
( Restoration -Transformation).
தேவ வார்த்தை என்கிற கண்ணாடி வழியாக நம்மை ஆராய்ந்து பார்க்கும் போது, அது நமது மனம், சிந்தனைகள், ஆசை இவற்றைத் துல்லியமாகக் காணவும்; அதிலிருந்து, நம் தவறுகளை உணர்ந்து கொள்ளவும் உதவுகிறது. இது திருமறையை வாசிப்பதால் கிடைக்கும் முதல் பயன்.
திருமறை எனும் கண்ணாடி வழியாக நம்மைப் பார்ப்பதால் கிடைக்கும் இரண்டாவது பயன்: நாம் உணர்ந்த தவறுகளைச் சரி செய்து கொள்ளவும், நம்மை மீண்டும் மறுசீரமைத்துக் கட்டவும் வேதம் உதவுகிறது.
b. மறுசீரமைப்பு - Restoration (யாத். 38:8).
He made the basin of bronze and its stand of bronze, from the mirrors of the ministering women who ministered in the entrance of the tent of meeting (Ex 38:8).
ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாகக் கூடின பெண்கள் கண்ணாடியாகப் பயன்படுத்தின வெண்கலத்தாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான். (யாத்: 38:8)
பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபடுவதும், ஆசரிப்பு வாசலில் அமர்ந்திருப்பதும் உண்டு. அவர்கள் வெண்கலத்தினால் செய்யப்பட்ட பளபளப்பான கண்ணாடியை வைத்திருந்தனர். மோசே பரிசுத்த வாசஸ்தலத்தைக் கட்டியபோது, அவர்கள் அந்த வெண்கலத்தைத் தர்ப்பணம் செய்தனர். அதைப் பயன்படுத்தி, மோசே அவற்றிலிருந்து ஒரு பெரிய நீர்த் தொட்டியைச் செய்தார் (யாத்: 38:8).
இந்த பெரிதான நீர்த் தொட்டி ஆசரிப்புக் கூடாரத்திற்கும் (பரிசுத்த ஸ்தலம்), பலிபீடத்திற்கும் மத்தியில் வைக்கப்பட்டிருந்தது. அந்தத் தொட்டியில் தண்ணீர் நிரப்பப் பட்டிருந்தது. ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்குள் ஊழியம் செய்வதற்காகப் பிரவேசிப்பதற்கு முன்பு, அவர்கள் சாகாதபடிக்கு அந்த தண்ணீரினால் தங்களைச் சுத்தம் செய்து கொண்டனர் (யாத். 30:17-21).
கர்த்தருடைய வார்த்தையின் வல்லமை நம்மைச் சுத்திகரிக்கும் எனும் உபதேசத்திற்கு, நீரால் சுத்திகரித்துக் கொள்ளும் சடங்கு ஒரு முன்னோடியான காட்சி சித்திரம்.
உதாரணமாக சில வசனங்கள்:
"நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே இப்பொழுது நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள்" (யோவான் 15:3).
திருச்சபை திரு வசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் பரிசுத்தப் படுத்தப்படுகிறது (எபே. 5:26).
ஒரு பாவி கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, அவர் தேவனுடைய ஆவியினால் கழுவப்பட்டு பரிசுத்தம் செய்யப்படுகிறான் (1 கொரி. 6:9-11; தீத்து 3:4-6).
ஆனாலும், ஒரு விசுவாசி இவ்வுலகில் நடப்பதால், அவரது கைகளும் கால்களும் மீண்டும் அசுத்தமாகின்றன. ஆகவே அவருக்கு அனுதினமும் சுத்திகரிப்பு தேவைப்படுகிறது (யோவான் 13:1-11).
தேவ வார்த்தை என்னும் கண்ணாடி நம்மைப் பரிசோதித்து, நம்முடைய பாவங்களைச் சுட்டிக் காண்பிப்பது மட்டுமல்லாமல், அது நம்மைச் சுத்தப்படுத்தி மறுசீரமைக்கவும் உதவுகிறது. இது தேவ வாக்குறுதி. (1யோவான் 1:9).
தேவ வார்த்தையைத் தியானிக்கும்போது, அது இதயத்தையும், மனதையும் சூழும் அசுத்தத்தைச் சுத்தப்படுத்தி, நம் ஆவியின் கசடுகளை நீக்குகிறது. கிறிஸ்துவின் மாசற்ற இரத்தம் நம் பாவ குற்றவுணர்வைக் கழுவிச் சுத்திகரிக்கிறது என்றால், தேவ வார்த்தை என்னும் தண்ணீர் நம் அனுதின அசுத்த கறைகளைக் கழுவி சுத்தம் செய்ய உதவுகிறது.
இந்த உண்மையைப் புரிந்து கொள்ள, தாவீது-நாத்தான் தீர்க்கதரிசி, இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் உதவுகிறது (2-சாமுவேல் 12).
நாத்தான் தீர்க்கதரிசி ஆட்டுக்குட்டி திருடப்பட்ட கதையைப் பற்றி தாவீதிடம் சொன்னார். அவர் விவரித்த அந்தப் பாவத்தைக் கேட்டவுடன் தாவீது கடும் கோபமடைந்தார். ஆனால், "நீதான் அந்த மனிதன்" என்று தீர்க்கதரிசி கூறியதும், தாவீது தன்னைப் பார்ப்பதற்காகத் தேவ வார்த்தை என்னும் கண்ணாடியை எடுத்தார்.
அதன் விளைவு பாவ அறிக்கை மற்றும் மனந்திரும்புதல்: "நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தேன்!"
தேவ வார்த்தை என்னும் கண்ணாடி அதன் ஆய்வு வேலையைச் செய்தது. ஆனால் நாத்தான் அத்துடன் நிற்கவில்லை. மீண்டும் நிலை நிறுத்தும் தேவ வார்த்தையைப் (Word of restoration) பயன்படுத்தி தாவீதை திரும்பக் கட்டினார்.
“நீ சாகாதபடிக்கு கர்த்தர் உன் பாவம் நீங்கச் செய்தார்” (2 சாமு. 12:13).
தேவ வார்த்தையிலிருந்து மன்னிப்பு மற்றும் சுத்திகரிப்புக்கான வேதத்தின் வாக்குறுதி வெளிப்பட்டது. தாவீது அந்த வார்த்தை என்னும் வெண்கல தொட்டியின் அருகில் வந்தார். தமது கை, கால்களின் கறைகளைக் கழுவி சுத்தம் செய்தார்.
தேவ வார்த்தை என்னும் கண்ணாடி வழியாக நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்பது; கறைகளைக் கழுவி மறுசீரமைப்பது என்பதுடன் நிறுத்திக் கொண்டால், கர்த்தருடைய வார்த்தை என்னும் கண்ணாடி ஊழியத்தின் முழு பலனையும் இழக்க நேரிடும்.
தேவ வார்த்தை என்னும் கண்ணாடி வழியாக நம்மை ஆராய்ந்து பார்ப்பதால், மூன்றாவதாக ஒரு பயனும் உள்ளது.
c. புத்துயிர்ப்பு - Transformation (2 கொரி. 3:18).
நாமெல்லாம் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம் (2 கொரி. 3:18).
கர்த்தர் நம்மை மீட்டெடுத்த பிறகு, அவரது கிருபையால் நாம் விசுவாசத்தில் வளர வேண்டும் என விரும்புகிறார். அத்துடன், நாம் மீண்டும் பாவத்தில் விழுந்து விடாதபடிக்கு, நம்மைப் பலப்படுத்த விரும்புகிறார்.
பல கிறிஸ்தவர்கள், தங்கள் பாவங்களை அறிக்கை செய்கிறார்கள். மன்னிப்பைக் கோருகிறார்கள். ஆனால் சுயத்தையும், பாவத்தையும் வென்று ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதில் ஆர்வமாக இருப்பதில்லை.
இரண்டு கொரிந்தியர் 3ம் அதிகாரத்தில், பழைய உடன்படிக்கையின் நியாய பிரமாணத்திற்கும், புதிய உடன்படிக்கையின் கிருபையின் ஊழியத்திற்கும் இடையே உள்ள முரண்பாடுகளைப் பற்றிய விவாதத்தை வாசிக்கலாம்.
நியாயப் பிரமாணம் வெளிப்புறமானது. அது கற்பலகைகளில் எழுதப்பட்டுள்ளது; ஆனால் இரட்சிப்பு என்பது தேவனுடைய வார்த்தை. அது இதயத்தில் எழுதப்பட்டுள்ளது.
பழைய உடன்படிக்கை ஊழியம் கண்டனம் செய்து அழித்தது; ஆனால் புதிய உடன்படிக்கை ஊழியம் மன்னிப்பையும் வாழ்வையும் தருகிறது.
நியாயப் பிரமாணத்தின் மகிமை படிப்படியாக மறைந்தது, ஆனால் கர்த்தரின் கிருபை மகிமையின்மேல் மகிமையடைந்து பிரகாசிக்கிறது.
நியாயப் பிரமாணம் தற்காலிகமானது, ஆனால் கிருபையின் புதிய உடன்படிக்கை நித்தியமானது.
பவுல் இந்த உண்மையை, மோசே அணிந்த முக்காட்டைப் பற்றிய உவமை வழியாக விளக்குகிறார். மோசே தேவனைச் சந்தித்துவிட்டு மலையிலிருந்து இறங்கியபோது, அவரது முகம் பிரகாசித்தது (யாத். 34:29-35). ஆகவே அவரைப் பார்க்க ஆரோனும், இஸ்ரவேல் புத்திரரும் பயந்தார்கள். எனவே அவர் அந்த மகிமையை மறைக்க முக்காட்டைப் போட்டார். அவர் தேவனோடு மீண்டும் பேசும் படிக்கு உள்ளே திரும்பியதும், அந்த முக்காட்டைக் கழற்றினார்.
இயேசு மரித்த போது, தேவாலயத்திலிருந்த திரை மேலிருந்து கீழாகக் கிழிந்தது. அப்போது மனிதர்களுக்கும், தேவனுக்கும் இடையே இருந்த திரை நீக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் தேவ மகிமையை மறைக்கும்படியாக ஒரு முக்காட்டை அணிந்திருந்தார். ஆனால் ஒரு புதிய ஏற்பாட்டு விசுவாசியின் முகத்திரை விலக்கப் பட்டிருக்கிறது. அவர் முகத்தின் மகிமை மேலும் மேலும் பிரகாசம் அடைகிறது!
2 கொரிந்தியர் 3:18ஐ நீங்கள் இவ்வாறு விளக்கலாம்: “ஒரு தேவனுடைய பிள்ளை தேவ வார்த்தையை [கண்ணாடியை] பார்க்கும்போது, அவர் தேவனுடைய குமாரனைக் காண்கிறார். அவர் தேவனுடைய ஆவியால் மறுரூபமடைந்து, தேவ மகிமையை வெளிப்படுத்துகிறார்.
கிரேக்க மொழியில் ''மாற்றப்பட்டது (Changed)'என்ற வார்த்தையானது, தமிழில் மறுரூபம் (Transformation) என உருவகமாக உள்ளது - இது உள்ளுக்குள் நிகழ்ந்ததால் ஏற்பட்ட வெளிப்புற மாற்றம் (A change on the outside that comes from the inside).
ஒரு அசிங்கமான தோற்றமுடைய புழு எவ்விதம் ஒரு அழகான பட்டாம் பூச்சியாக உருமாறுகிறதோ, அவ்விதமாகவே ஒரு விசுவாசி தேவ வார்த்தையைத் தியானிப்பதிலும், கிறிஸ்துவைப் பார்ப்பதிலும் தனது நேரத்தைச் செலவிடும்போது உருமாற்றம் அடைகிறார்: உள்ளே இருக்கும் தேவ மகிமை வெளியில் வெளிப்படுகிறது.
இந்த வார்த்தைதான் மத்தேயு 17:2ல் "மறுரூபமானார்" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அந்த மலையில் கிறிஸ்துவின் முகம் சூரியனைப் போலப் பிரகாசித்தது. அது வெளியிலிருந்து வந்த ஒளியின் பிரதிபலிப்பு இல்லை; அது அவர் உள்ளிருந்து வெளியே பிரகாசித்தது.
ரோமர் 12:2லும் இதே வார்த்தையை நீங்கள் காணலாம்: "உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்."
நாம் தேவ வார்த்தையைத் தியானிக்கும்போது, ஆவியானவர் மனதைப் புதுப்பித்து, தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறார்.
நாம் ஒரே இரவில் முதிர்ந்த ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாக மாறுவதில்லை. இது ஒரு தொடர் செயல்முறை. தேவ வார்த்தை என்னும் கண்ணாடி வழியாக அனுதினம் நாம் நம்மைப் பார்க்கும் போது நமக்குள் பரிசுத்த ஆவியானவர் செய்யும் மகத்தான பணி இது.
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், நாம் எதையும் முக்காட்டைப் போட்டு மறைக்கவில்லை. முக்காட்டைக் கழற்றுகிறோம்!
"தேவனே, என்னை ஆராய்ந்து, என் உள்ளத்தை அறிந்துகொள்ளும்: என்னைச் சோதித்து, என் எண்ணங்களை அறிந்துகொள்ளும்: என்னிடத்தில் பொல்லாத வழி உண்டோ என்று பார்த்து, நித்திய வழியில் என்னை நடத்தும்" (சங். 139:23-24).
"நம்மிடம் பாவம் இல்லை என்று சொன்னால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம், சத்தியம் நம்மில் இல்லை" (1 யோவான் 1:8).
தேவ வார்த்தையை நமது இதயத்தில் ஏற்றுக் கொள்வது முதல் பொறுப்பு.
தேவ வார்த்தையை வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டும்; இல்லையேல் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம் இது இரண்டாவது கடமை.
இப்போது நமக்கும் தேவவார்த்தைக்கும் இடையில் உள்ள மூன்றாவது பொறுப்பைத் தியானிக்கலாம்.
III. வார்த்தையைப் பகிரவும் - Share the Word (1:26–27)
"தேவ பக்தி/சமயம்" என்று மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தையின் அர்த்தம், "வெளிப்புறமாகச் சடங்குகள் செய்வது மற்றும் ஆசாரிய சேவை" எனலாம்.
முழு புதிய ஏற்பாட்டிலும் இந்த வார்த்தை ஐந்து முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது (யாக். 1:26-27; அப். 26:5; மற்றும் கொலோ. 2:19, ல் ஆராதனை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது).
எது உண்மையான தேவ பக்தி?
மாசில்லாத தூய பக்தி என்பது, விழாக்களைக் கொண்டாடுவது, ஆலயம் தவறாமல் செல்வது, விசேஷ தினங்களை ஆசரிப்பது மட்டும் அல்ல.
தூய பக்தி என்பது தேவ வார்த்தையைக் கடைப்பிடிப்பது, அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்வது, தன்னலமற்ற சேவை, நமது பேச்சு, உலகத்தின் ஆசைகளிலிருந்து விலகிக் கறைபடாமல் வாழ்வது என இவற்றின் வழியாக வெளிப்படுகிறது என்கிறார் யாக்கோபு.
நாவடக்கம் - Speech (வச. 26).
இந்த நிருபத்தில் ஒரு முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர் நாவடக்கத்துடன் பேச வேண்டியது மிக முக்கியம் என்பதை வலியுறுத்திப் பல குறிப்புகள் உள்ளன. ஆகவே அந்த திருச்சபை மக்களிடம் நாக்கு ஒரு கடுமையான பிரச்சனையாக இருந்தது எனப் புரிந்து கொள்ள முடிகிறது (யாக். 1:19; 2:12; 3:1-3, 14-18; 4:11-12 ). ஒருவரது பேச்சு அவரது இதயத்தை வெளிப்படுத்தும் (மத். 12:34-35); இதயம் சரியாக இருந்தால் பேச்சும் சரியாக இருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட நாக்கு என்றால் கட்டுப்படுத்தப்பட்ட உடல் என்று பொருள் (யாக். 3:1).
சேவை - Service (வச. 27).
நாம் தேவ வார்த்தை என்னும் கண்ணாடியில் நம்மையும் கிறிஸ்துவையும் பார்த்த பிறகு, மற்றவர்களையும் அவர்களின் தேவைகளையும் பார்க்க வேண்டும்.
ஏசாயா முதலில் கர்த்தரையும், பிறகு தன்னையும், பிறகு தான் ஊழியம் செய்யப் போகும் மக்களையும் பார்த்தார் (ஏசா. 6:1-8). வெறும் பேச்சு தேவ அன்பின் செயல்களுக்கு மாற்றாக அமைவதில்லை (யாக். 2:14-18; 1 யோவான் 3:11-18).
நாம் சேவை செய்ய வேண்டும் எனக் கர்த்தர் விரும்புகிறார். நமக்குப் பதிலாக வேறு ஒருவர் ஊழியம் செய்யும் படியாக, நாம் பணம் கொடுப்பதைக் கர்த்தர் விரும்பவில்லை!
உலகத்திலிருந்து விலகி வாழ்தல் - Separation from the world (வச. 27 ஆ).
இங்கு "உலகம்" என யாக்கோபு குறிப்பிடுவது "இறையச்சம் இல்லாத சமூகம் (Society without God's fear)".
சாத்தான் இந்த உலகத்தின் அதிபதி (யோவான் 14:30), இரட்சிக்கப்படாதவர்கள் இந்த உலகத்தின் பிள்ளைகள் (லூக்கா 16:8).
நாம் தேவனுடைய பிள்ளைகளாகப் பௌதிக ரீதியில், இந்த உலகில் வாழ்கிறோம், ஆனால் ஆவிக்குரிய வகையில் நாம் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல (யோவான் 17:11-16).
மற்றவர்களை கிறிஸ்துவிடம் வழிநடத்துவதற்காக, இந்த உலகிற்கு அனுப்பப்பட்டுள்ளோம் (யோவான் 17:18). இந்த உலகத்திலிருந்து நாம் பிரிந்திருப்பதைத் தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே மற்றவர்களுக்குச் சேவை செய்ய முடியும்.
உலகம் உத்தம கிறிஸ்தவனை "கண்டுபிடித்து" அவரைத் தீட்டுப்படுத்த விரும்புகிறது. முதலில் அது, "உலக சிநேகமாக" (யாக். 4:4) தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து உலகத்திலுள்ளவைகளில் அன்பு கூருவதற்கு வழிவகுக்கும் (1 யோவான் 2:15-17). நாம் கவனமாக இல்லாவிட்டால், இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷம் போடுவோம் (ரோ.12:1-2). அதன் விளைவு உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவோம் (1 கொரி. 11:32).
இது நாம் நம் இரட்சிப்பை இழக்கிறோம் என்பது மட்டுமல்ல, ஆனால் நாம் எதற்காக வாழ்ந்தோமோ அவை அனைத்தையும் இழக்கிறோம்.
லோத்து இந்தக் கோட்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு. அவர் முதலில் சோதோமை நோக்கிக் கூடாரம் போட்டார். பிறகு சோதோமுக்குள் சென்றார். வெகு காலத்திற்கு முன்பாகவே, சோதோம் அவருக்குள்ளும் நுழைந்து விட்டது. அவர் தன் சொந்த குடும்பத்திலும் கூட சாட்சியை இழந்தார். சோதோமின் மீது நியாயத் தீர்ப்பு வந்தபோது, லோத்து எல்லாவற்றையும் இழந்தார்.
இதற்கு மாறாக, கர்த்தரின் சினேகிதரான ஆபிரகாம் இவ்வுலகிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு ஒரு விசுவாசியாக வாழ்ந்தார். அதன் விளைவு உலகத்தை நேசித்த லோத்தை விட ஆபிரகாம் அதிகமான மக்களுக்குச் சேவை செய்தார். ஒரு கிறிஸ்தவர், இந்த உலகத்திற்குச் சேவை செய்ய உலகத்தோடு ஒத்து வாழ வேண்டிய அவசியமில்லை. இயேசு பாவிகள் மற்றும் வரி வசூலிப்பவர்கள் நண்பராக இருந்தபோதிலும் "குற்றமற்றவராக'' இருந்தார் (1 பேதுரு 1:19),.
ஆக, இந்த உலகத்தின் தேவைகளுக்குச் சேவை செய்வதற்கான சிறந்த வழி, இவ்வுலகின் அசுத்தத்தினால் கறைபடாமல் விலகி வாழ்ந்து தூய்மையாக இருக்க வேண்டும்.
Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.
படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக