சனி, 24 ஜூன், 2023

யாக்கோபு 3: 1-8

அத்தியாயம்:7

உருவத்தில் மிகச் சிறியவர், ஆனால் 
பிரச்சனைகளை உருவாக்குவதில் மிகப் பெரியவர்.  
(The World's smallest but largest trouble maker).



முதிர்ச்சி நிறைந்த கிறிஸ்தவர் வெளிப்படுத்தும் இரு பண்புகளைக் குறித்து இது வரை தியானித்தோம்: முதலாம் அதிகாரத்தில், அவர்கள் சோதனையில் பொறுமையோடு செயல்படுவார்கள் எனவும், இரண்டாம் அதிகாரத்தில் அவர்கள் தேவனுடைய சத்தியத்திற்கு கீழ்ப்படிந்து அதை உறுதியாகப் பின்பற்றுவார்கள் என்றும் தியானித்தோம்.

இந்த மூன்றாம் அதிகாரத்தில், முதிர்ச்சி நிறைந்த விசுவாசியின் மூன்றாவது பண்பாக யாக்கோபு நமக்கு கற்றுத் தருவது: அவர்கள் நாவடக்கம் உள்ளவர்கள். 

எனது போதக நண்பர், தமது தேவாலய உறுப்பினர் ஒருவரைப் பற்றிக் கூறிய நிகழ்வு இது:

அந்தப் பெண்மணி தொலைப்பேசியிலே எப்போதும் பொழுதைக் கழிப்பவர். மோசமான வதந்திகளைப் பேசுவதில் விருப்பம் உடையவர். நாள் முழுவதும் தான் கேட்ட கிசுகிசு செய்திகளைப் பிறருடனும் கூடுதல் சுவாரஸ்யமாக மாற்றிப் பகிர்ந்து கொள்வது அவரது வாடிக்கை. 

ஒரு நாள் அந்த பெண், இவரிடம் வந்து, “ஐயா, நான் கிசுகிசு செய்திகளைப் பேசுவது பாவம் என்பதை ஆண்டவர் எனக்கு உணர்த்தி விட்டார். என் நாக்கு மற்றவர்களையும், என்னையும் கூட சிக்கலில் சிக்க வைக்கிறது'' என்றாள்.

அவள் உண்மையாக மனஸ்தாபப்பட்டு அதைச் சொல்லவில்லை. இது என் நண்பருக்கும் தெரியும். ஏனெனில் அவர் பல முறை இது போலச் சொல்லி உள்ளார். 

ஆகவே போதக நண்பர் கவனமாகக் கேட்டார், "சரி, இப்போது நீங்கள் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்?"

அவள் பயபக்தி நிறைந்த ஆர்வத்துடன், "நான் பலிபீடத்தின் மீது என் நாக்கை வைக்க விரும்புகிறேன்" எனப் பதிலளித்தாள்,. 

என் நண்பர் அமைதியாகப் பதில் சொன்னார், "அவ்வளவு பெரிய பலிபீடம் இங்கு இல்லையே"!! 

அவளை யோசிக்க விட்டுவிட்டார்.

இந்த நிருபத்தில் காணப்படும் விசுவாசிகளுக்கு நாவடக்கம் இல்லை. ஆகையால் சபைக்குள் கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டது. இதைக் குறித்துப் பல வசனங்கள் வழியாக யாக்கோபு எச்சரித்தார்; 

"கேட்பதற்குத் தீவிரமாகவும், பேசுகிறதற்குப் பொறுமையாகவும், கோபிக்கிறதற்குத் தாமதமாகவும்" (யாக். 1:19). 

ஒருவருக்கு நாவடக்கம் இல்லை என்றால், அந்த விசுவாசி உண்மையான தேவ பக்தி உடையவர் அல்ல (யாக்.1:26). 

நாம் ஏற்கனவே கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பை எதிர் கொண்டவர் போல் பேசவும், செயல்படவும் வேண்டும் (யாக். 2:12). 

யாக்கோபு 4:1, 11-12 போன்ற பகுதிகளை வாசிக்கும்போது, ​​இந்தச் சபையில் சில தேவையற்ற, ஆனால் வதந்தி பேசுபவர்கள் விரும்பிய சுவாரஸ்யமான கூட்டங்கள் நடந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது!

கர்த்தர் நமக்குக் கொடுத்த வரங்களில் மிகச் சிறந்தது பேச்சு; வல்லமை மிக்க பேச்சு. இந்த நாவினால், ஒரு மனிதர் கர்த்தரைத் துதிக்கவும், ஜெபிக்கவும், அவரது வார்த்தையைப் பிரசங்கிக்கவும், தேவனை ஆராதிக்கவும், வழி தவறிச் சென்றவர்களை கிறிஸ்துவை நோக்கி வழி நடத்தவும் முடியும். என்ன ஒரு பாக்கியம்! 

ஆனால் இதே நாவால், பொய்களைப் பேசி ஒருவர் நற்பெயரைக் களங்கப் படுத்தவும், நேசிப்பவர்களது இருதயத்தை உடைக்கக்கூடிய வார்த்தைகளைப் பேசவும் முடியும். 

பேச்சுத் திறன் மற்றவர்களைக் கவர்ந்து ஈர்க்கும் ஆற்றல் படைத்தது. அது மிகப் பெரிய பணிகளைச் செய்து முடிக்கும். ஆனாலும் நாம் இந்த திறனை மிக அலட்சியமாகக் கருதி அசட்டை செய்கிறோம்.

ஆகவே கட்டுப்பாடான பேச்சின் முக்கியத்துவத்தையும், கட்டுப்பாடற்ற வார்த்தைகள் ஏற்படுத்தும் பெரும் விளைவுகளை, உணர்ந்து கொள்வதற்காக, யாக்கோபு நாக்கை ஆறு உதாரணக் காட்சி சித்திரங்களாக வரைந்து காண்பித்தார்: கடிவாளம், சுக்கான், நெருப்பு, விஷ ஜந்து, நீரூற்று மற்றும் அத்தி மரம். 

இந்த ஆறு வகை காட்சி சித்திரங்களிலிருந்து, மூன்று வகையான பொருள் பொதிந்த நாவின் வல்லமை மிக்க பண்புகளை யாக்கோபு கற்றுத் தந்தார். நாம் நாவின் இந்த மூன்று வல்லமை மிக்க பண்புகளைக் கவனமாக மனதில் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இயக்கும் சக்தி - Power to Directகடிவாளம் மற்றும் சுக்கான் (3:1–4)

"என் சகோதரர்களே, அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து , உங்களில் அநேகர் போதகர்களாகச் செயல்படக்கூடாது" (யாக். 3:1). 

இந்த சபையில் உள்ள பலர் போதகராகவும், போதிக்க வேண்டும் எனவும் விரும்பினர். யாக்கோபு அவர்களை எச்சரிக்க வேண்டியிருந்தது: 

அவர்கள் போதக ஊழியத்தின் அதிகாரம் (Authority) மற்றும் கௌரவத்தால் (Prestige) ஈர்க்கப்பட்டார்கள். ஆனால் அதே சமயம், நிறைவேற்ற வேண்டிய மிகப் பெரிய கடமை (Responsibility) மற்றும் பொறுப்புணர்வை (Accountability) மறந்து விட்டார்கள்! வேதம் சொல்கிறது: தேவ வார்த்தையைக் போதிப்பவர்கள் கடுமையான தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டும். 

ஆகவே போதகர்கள் வேதத்தின் உண்மையை வெளிப்படுத்தக் கவனமாக தங்கள் நாவன்மையைப் பயன்படுத்த வேண்டும். நாவினால் பாவங்களைச் செய்வது எளிது. அத்துடன் மிக முக்கியமானது; போதனை செய்பவர்கள் தாங்கள் கற்பிப்பதைக் கடைப்பிடிக்க வேண்டும், இல்லையெனில் அவர்களின் போதனை போலித்தனம். அது மாய்மாலம்.

ஒரு போதகர் ஆயத்தமில்லாமல் தேவ செய்தியை அளிப்பது, மற்றும் அவரது தரமற்ற ஆவிக்குரிய வாழ்க்கை; இவை சபைகளில் ஏற்படுத்தும் அழிவைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால் போதகர்கள் மட்டுமே சபலங்களால் தூண்டப்பட்டு பாவம் செய்யவில்லை; "நாம் அனைவரும் பல வழிகளில் தடுமாறுகிறோம்" (யாக். 3:2).  இதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒப்பக் கொள்ள வேண்டும்.

பாவப் பட்டியலில், நாவால் செய்யும் பாவம் முதன்மையாக உள்ளது. ஒரு மனிதருக்கு நாவை அடக்கும் திறன் இருந்தால், அவர் தனது முழு உடலையும் கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு அது சாட்சி. அது அவர் ஒரு முதிர்ச்சி அடைந்த மனிதர் என்பதை நிரூபிக்கிறது.

நாவால் செய்யும் பாவங்களை "முழு உடலும்" பாவம் செய்வதாக யாக்கோபு தவறாகச் சொல்கிறாரா? 

இல்லை, ஏனென்றால்  பொதுவாக வார்த்தைகள் செயல்களுக்கு வழிவகுக்கும். இரண்டாம் உலகப் போரின் போது ''LOOSE LIPS SINK SHIPS!'' என்ற பதாகைகளைப் பார்த்துப் பழகிவிட்டோம்! ஆனால் கட்டுப்பாடற்ற உதடுகள் வாழ்க்கையைச் சிதைத்து அழிக்கின்றன. ஒரு நபர் அவசரப்பட்டுப் பேசும் தேவையற்ற வார்த்தை ஒரு சண்டையில் கொண்டு போய் அவரை சேர்க்கிறது. அந்த நாவடக்கமற்ற பேச்சால் அவரது உடலின் ஒவ்வொரு பகுதிகளும் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிப் போராட வேண்டி உள்ளது.

இந்தக் கருத்தை விளக்க யாக்கோபு, இரு பொருட்களை உதாரணங்களாகத் தெரிவு செய்து கற்பிக்கிறார்; அவை கடிவாளம் மற்றும் சுக்கான். இவை இரண்டும் உருவத்தில் சிறியதாக இருந்தாலும், நாவைப் போலவே அதிக சக்தி உடையவை. சிறிய  கடிவாளம் பெரிய குதிரையைக் கட்டுப்படுத்தி சவாரி செய்ய உதவுகிறது. சிறிய சுக்கான் பெரிய கப்பலை இயக்க மாலுமிக்கு உதவுகிறது. நாக்கு உடலில் ஒரு சிறிய உறுப்பாக இருந்தாலும், பெரிய காரியங்களைச் செய்யும் வல்லமை கொண்டது.

கடிவாளம் மற்றும் சுக்கான் இரண்டும் அதை ''எதிர்க்கும் சக்திகளை (controversial forces)'' கடக்க வேண்டும். கடிவாளம் குதிரையின் காட்டுத் தன்மையைக் கடக்க வேண்டும். சுக்கான் காற்றையும், கடும் நீரோட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும். அதனால், கப்பல் அதன் போக்கில் செல்லாமல் தடுக்கப் படும். அது போல மனித நாவும் எதிர்த்துப் போராடும் சக்திகளை வெல்ல வேண்டும். 

நாவின் மூலமாகப் பாவம் செய்யத் தூண்டும் பழைய பாவ இயல்பு நம்மிடம் உள்ளது. இது தேவையற்ற விஷயங்களைப் பேச நம்மைத் தூண்டுகிறது. வெளி உலக சூழ்நிலைகளும் நம்மை நிதானம் தவறிப் பேசத் தூண்டுகின்றன. உள்ளுக்குள் இருக்கும் பாவ சுபாவமும், வெளியில் உள்ள சூழ்நிலை அழுத்தங்களும் நாவை கட்டுப்படுத்த முயல்கின்றன.

இதன் பொருள் கடிவாளம் மற்றும் சுக்கான் இரண்டும் வலுவான கையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஒரு நிபுணத்துவம் வாய்ந்த குதிரைவீரன் தனது குதிரையின் வலிமைமிக்க சக்தியைக் கட்டுக்குள் வைத்திருக்கிறான், ஒரு அனுபவம் வாய்ந்த மாலுமி தைரியமாகப் புயலில் கப்பலைச் செலுத்துகிறார்.

அது போல நமது  நாவை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கும் போது, ​​நாம் தவறான விஷயங்களைப் பேசி விடுவோமோ எனப் பயப்பட வேண்டியதில்லை - அல்லது சரியானதைத் தவறாகச் சொல்லி விடுவோம் என்று கூட!  

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது” என்று சாலொமோன் எச்சரித்தார் (நீதி. 18:21). 

ஆகவே தாவீது இவ்விதமாக ஜெபித்ததில் ஆச்சரியமில்லை.

''கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.” (சங். 141:3). சரியாக பேசுவதற்கு இதயம் திறவுகோல் என்பதை தாவீது அறிந்திருந்தார். 

"இருதயத்தின் நிறைவிலிருந்து வாய் பேசுகிறது" என்றார் நமது ஆண்டவர் (மத். 12:34).  ஆக இயேசு கிறிஸ்து நம் இதயத்தின் ஆண்டவராக இருந்தால், ​​அவரே நம் உதடுகளுக்கும் ஆண்டவர்.

கடிவாளம் மற்றும் சுக்கான்; குதிரையும், கப்பலும் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியைக் கொண்டுள்ளன. கட்டுப்பாடற்ற குதிரை அல்லது கப்பல் ஏற்படுத்தும் விபத்து மற்றவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. அவை பாதசாரிகள் அல்லது பயணிகளுக்குக் காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும். அது போல நாம் கட்டுப்பாடின்றி பேசும் வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. 

ஒரு நீதிபதி, "குற்றவாளி!" அல்லது "குற்றவாளி இல்லை!" என அளிக்கும் தீர்ப்பின் வார்த்தைகள், ஒரு கைதி, அவரது குடும்பத்தினர், அவரது நண்பர்களின் எதிர்காலத்தை முடிவு செய்கிறது. 

அமெரிக்காவின் ஜனாதிபதி சில வார்த்தைகள் பேசுகிறார், சில காகிதங்களில் கையெழுத்திடுகிறார், தேசம் போரில் ஈடுபட்டு உள்ளது. 

பெற்றோரின் உதடுகளிலிருந்து பிறக்கும், ''ஆம் அல்லது இல்லை'' என்பது கூட குழந்தைகளது வாழ்க்கையின் திசையைப் பெரிதும் பாதிக்கலாம்.

நீங்கள் பேசும் அல்லது பேசாத வார்த்தைகளால் கொடுக்கும் வழிகாட்டுதலை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். இயேசு கிணற்றடியில் ஒரு பெண்ணிடம் பேசினார், அவளது வாழ்க்கையும், அவளுடைய அண்டை வீட்டாரின் வாழ்க்கையும் ஒரு அற்புதமான மாற்றத்தை அனுபவித்தது (யோவான் 4). பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு பிரசங்கித்தார்.மூவாயிரம் ஆத்துமாக்கள் கிறிஸ்துவின் விசுவாசத்தின் மூலம் இரட்சிக்கப் பட்டனர் (அப் 2).

ஏப்ரல் 21, 1855 அன்று, எட்வர்ட் கிம்பால் ஒரு பாஸ்டன் ஷூ கடைக்குள் சென்று இளம் ட்வைட் எல் மூடியை கிறிஸ்துவிடம் அழைத்துச் சென்றார். முடிவு: வரலாற்றின் மிகப் பெரிய சுவிசேஷகர்களில் ஒருவர் உருவானார். அவருடைய ஊழியம் இன்றும் தொடர்கிறது. மற்றவர்களைச் சரியான பாதைகளுக்கு வழிநடத்தும் சக்தி நாவுக்கு உண்டு.

நீதிமொழிகள் புத்தகத்தை அடிக்கடி படிப்பது, குறிப்பாக எப்படிப் பேச வேண்டும், எப்படிப் பேசக் கூடாது என்பதைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளது. அதைக் கூர்ந்து வாசிப்பது நம் அனைவருக்கும் நல்லது. 

"மென்மையான பதில் கோபத்தைத் தணிக்கும்: கடும் சொற்கள் கோபத்தைத் தூண்டும்" (நீதி. 15:1). 

"பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவை" (நீதி. 12:22). 

"அதிகமாகப் பேசுகிற ஒருவன் துன்பத்திற்கு ஆளாகிறான். ஞானம் உள்ளவன் அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்கிறான்." (நீதி. 10:19). 

ஆம், நாவும் கடிவாளம் மற்றும் சுக்கான் போன்றது: அதற்கு இயக்கும் ஆற்றல் உள்ளது. நம் நாவை கட்டுப்பாடுடன் பயன்படுத்தி மக்களைச் சரியான வழியில் வழிநடத்துவது எவ்வளவு முக்கியம்!

அழிக்கும் சக்தி - Power to Destroy: தீ மற்றும் விஷம் (3:5–8)

நான் லண்டனில் உள்ள சேரிங் கிராஸ் சாலையில் உள்ள பயன்படுத்தப்பட்ட பழைய புத்தகங்களை விற்கும் கடைகளுக்குச் சென்ற போது, அங்கு நான் எதிர்பார்த்த அளவிற்குக் கடைகள் இல்லை என நண்பர் ஒருவரிடம் பகிர்ந்தேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது என அவர் பதிலளித்தார். இரண்டாம் உலகப் போரின்போது ஒரு இரவில், அந்தப் பகுதி தீக் குண்டுகளால் தாக்கப்பட்டன. அந்த தீயில் குறைந்தது ஒரு மில்லியன் புத்தகங்கள் அழிக்கப்பட்டன!

மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு நண்பர் கலிபோர்னியாவில் உள்ள அழகான காடுகளுக்கு என்னையும், என் மனைவியையும் அழைத்துச் சென்றார். அங்கு நாங்கள் எரிந்து, தீய்ந்து போன ஒரு கோரமாகப் பகுதிக்கு வந்தோம். இயற்கையின் முகத்தில் வடுக்கள் மட்டுமல்ல, பல மில்லியன் டாலர் மதிப்புள்ள மரங்களும் அழிக்கப்பட்டன. "யாரோ சிகரெட்டைப் பற்ற வைத்தார்கள்," என நண்பர் கருத்துத் தெரிவிக்கையில், அந்த கருமையான பூமியைக் கடந்தோம்.

ஒரு சிறிய தீப்பொறியுடன் நெருப்பு தொடங்கலாம், ஆனால் அது ஒரு நகரத்தையே அழிக்கும். அக்டோபர் 8, 1871 அன்று இரவு 8:30 மணிக்கு சிகாகோவில் உள்ள ஓ'லியரி கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது; மேலும் அந்த தீ பரவியதால், 1,00,000க்கும் அதிகமான மக்கள் வீடற்றவர்களானார்கள், 17,500 கட்டிடங்கள் அழிக்கப்பட்டன, 300 பேர் இறந்தனர். இதைச் சீரமைக்க $400 மில்லியன் செலவாகும்.

நம் வார்த்தைகளும் தீயை மூட்டலாம். 

"நெருப்புக்கு விறகு இல்லாவிட்டால் அது அணைந்துபோகும். இதுபோலவே கோள்  சொல்லுகிறவன் இல்லாவிட்டால் சண்டைகளும் முடிந்துபோகும். கரி நெருப்பை எரிய வைக்கிறது. விறகும் நெருப்பை எரிய வைக்கிறது. இது போலவே வம்பை விரும்புகிறவர்கள் வாதங்களை விடாமல் வைத்துள்ளனர்” (நீதி. 26:20-21). 

சில தேவாலயங்களில், தங்கள் நாவைக் கட்டுப்படுத்த முடியாத சபை உறுப்பினர்கள் அல்லது பொறுப்பாளர்கள் உள்ளனர். அதன் விளைவு சபை அழிவு. அத்தகைய நபர்கள் வெளியே செல்லட்டும். பதவியிலிருந்து மாற்றப்படட்டும். ஒரு அழகான நல்லிணக்கம் மற்றும் அன்பின் ஆவி சபைகளில்  பெருகட்டும்.

நெருப்பைப் போல, நாவும் “உஷ்ணப்படுத்த” முடியும். தாவிது எழுதினார்,

''நான் சொன்னேன்: “நான் என் வழிகளைக் கவனித்து, என் நாவைப் பாவத்துக்கு விலக்கிக் காத்துக்கொள்வேன். கொடியவர்கள் எனக்குமுன் இருக்கும்வரை, நான் என் வாயைக் கடிவாளத்தால் பாதுகாப்பேன்.” 

நான் பேசாமல் ஊமையாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் இருந்தேன். ஆனால் என் வேதனை அதிகரித்தது; 

என் உள்ளம் எனக்குள்ளே அனல் கொண்டது; நான் தியானிக்கையில், அது நெருப்பாய்ப் பற்றிக்கொண்டது; அப்பொழுது என் நாவினால் இதைப் பேசினேன்:” (சங். 39:1, 3). 

இந்த அனுபவம் உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டது உண்டா? நிச்சயமாக இருக்கும். சிவந்த முகம் மற்றும் பற்றி எரியும் இதயம். அப்போது கடுமையான வார்த்தைகளைப் பேசுவதற்குத் தூண்டப்படலாம். ஒரு வேளை பேசி விட்டால் பின்னர் கடுமையாக வருத்தப்படுவோம். ஆகவே தான், தனக்கு ஏற்பட்ட கடுமையான கோபத்தைக் கட்டுப்படுத்த, கர்த்தரின் உதவிக்காகத் தாவிது  மன்றாடினார்.

சாலொமோன் இவ்விதமாக எழுதியதில் ஆச்சரியமில்லை,

அறிவுள்ளவர்கள் வார்த்தைகளை அடக்குகிறார்கள்; புரிந்துகொள்ளுதல் உள்ளவர்கள் சாந்தமாயிருக்கிறார்கள்.” (நீதி. 17:27). 

"பொறுமையுள்ளவன் மிகவும் புத்திசாலி. விரைவில் கோபப்படுபவன் முட்டாள் என்பதைக் காட்டிக்கொள்கிறான்." (நீதி. 14:29).

நெருப்பு சிறியதாகத் தொடங்கி வளர்வது மட்டுமல்ல, கடும் வெப்பத்தை உருவாக்குகிறது; அந்த இடத்தை கோரப்படுத்துகிறது. எனது நண்பர் ஒருவர் அவரது வீட்டின் அடித்தளத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டார். புகை மற்றும் தீ சேதம் வீட்டின் மாடியையும் சேதப்படுத்தியது. அந்த வீட்டைச் சீரமைக்கும் போது குடும்பம் வெளியேற வேண்டியிருந்தது. அது போல நாம் கக்கும் வார்த்தைகள் ஒரு வீட்டை, ஒரு தேவாலயத்தை, ஒரு ஞாயிறு பள்ளி வகுப்பை, தீட்டு படுத்தும். அந்த அசுத்தத்தைக் கழுவக்கூடிய ஒரே விஷயம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம். 

நெருப்பு எரிப்பது மட்டுமல்ல; தீக்காயங்களையும் ஏற்படுத்துகிறது. நமது வார்த்தைகளும் பிறரை எரித்துக் காயப்படுத்தலாம். நம்முடைய ஆண்டவர் பூமியில் ஊழியம் செய்த போது, அவர் தாங்க வேண்டிய துக்கங்களில் ஒன்று, அவருடைய எதிரிகள் அவரைப் பற்றி பேசிய விதம். 

அவர் பாவியான மக்களுடன் உணவு உண்பதற்கான அழைப்பை மனதார ஏற்றுக்கொண்டதால், அவர்கள் அவரை "பெருந்தீனி பிடித்தவர் மற்றும் மதுபான பிரியன்" (மத். 11:19) என்று அழைத்தனர். 

அவர் அற்புதங்களைச் செய்தபோது, ​​சாத்தானுடைய வல்லமையால் செய்வதாகச் சொன்னார்கள். அவரை சிலுவையில் அறைந்த போதும் எதிரிகள் விடவில்லை. அவருடைய முகத்திற்கு நேராகக் கொடிய நிந்தையான பேச்சுக்களைப் பேசினார்கள்.

நெருப்பு பரவுகிறது. நீங்கள் எவ்வளவு எரிபொருளைக் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு வேகமாகவும், தூரமாகவும் நெருப்பு பரவும். நாக்கும் போகிற போக்கில் எரித்துச் செல்கிறது, "அவரது வாழ்க்கையின் முழு ஆயுள் கால சக்கரத்தையும் அழித்து விடுகிறது"(யாக். 3:6). வாழ்வின் நிகழ்வுகள் ஒரு சக்கரத்தைப் போல ஆரங்களால் இணைக்கப்பட்டுள்ளன, எனவே ஒரு செயல் மற்ற நிகழ்வுகளைப் பாதிக்காமல் இருக்க முடியாது என்றார் யாக்கோபு


ஒரு நபரின் முழு வாழ்க்கையையும் நாக்கால் கறைப்படுத்தலாம், காயப்படுத்தலாம், அழிக்கலாம். நாவால் செய்த பாவங்களைக் காலம் சரி செய்யாது. நாம் பேசிய பாவங்களைத் தவறு என ஒப்புக் கொள்ளலாம், ஆனால் நெருப்பு தொடர்ந்து பரவுகிறது. அது பரவும்போது, ​​நெருப்பு அழிக்கிறது, நாம் பேசும் வார்த்தைகள் அழிக்கும் ஆற்றல் பெற்றவை. 

ஹிட்லரின் Mein Kampf என்ற புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் இரண்டாம் உலகப் போரில் 125 உயிர்கள் பலியாகின. நம்முடைய சொந்த வார்த்தைகள் போர்களையோ அல்லது சிதைந்த நகரங்களையோ ஏற்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் அவை இதயங்களை உடைத்து நற்பெயரைக் கெடுக்கும். அவர்கள் ஆத்துமாக்களைக் கிறிஸ்து இல்லாமல் நித்தியத்திற்கு அனுப்புவதன் மூலம் அவர்களை அழிக்க முடியும், நமது உரையாடல் "எப்பொழுதும் கனிவானதாயும் ஞானமுள்ளதாயும் இருக்கட்டும்" (கொலோ. 4:6).  

நாக்கு நெருப்பு போன்றது மட்டுமல்ல, ஆபத்தான விலங்கும் கூட. அது அமைதியற்றது. ஆள முடியாது (அடங்காதது). அது தன் இரையைத் தேடி, பின்னர் பாய்ந்து கொல்லும். நானும் என் மனைவியும் ஒருமுறை சஃபாரி பூங்கா உள்ளாக வாகனத்தை ஓட்டிச் சென்றோம். விலங்குகள் அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் நடமாடுவதைப் பார்த்து ரசித்தோம். ஆனால் பூங்கா முழுவதும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருந்தன: உங்கள் காரை விட்டு வெளியேறாதீர்கள்! உங்கள் ஜன்னல்களைத் திறக்காதீர்கள்! அந்த "அமைதியான விலங்குகள்" பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை. கொல்லவும் கூடும்.

சில விலங்குகளின் விஷம் போல சில நாக்குகள் விஷத்தைக் கக்குகின்றன.  

விஷம் ஏமாற்றும். அது ரகசியமாகவும் மெதுவாகவும் பரவிச் செயல்படுகிறது. பின்னர் கொல்லும். 

ஒருவருக்குத் தீங்கிழைக்க விரும்பும் நபர் தனது உரையாடலில் சிறிது சிறிதாக விஷத்தைச் செலுத்துகிறார், அது எப்படியும் பரவி இறுதியில் அவர்  காயப்படுத்த விரும்பிய நபரைச் சென்று சேர்ந்து விடும் என்று நம்புகிறார்.

ஒரு போதகராக, இத்தகைய விஷ நாக்குகள் தனிநபர்கள், குடும்பங்கள், போதனை வகுப்புகள், ஏன் முழு தேவாலயத்திற்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்துவதை நான் கண்டிருக்கிறேன். உங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனையில் பசியுள்ள சிங்கங்களையோ அல்லது கோபமான பாம்புகளையோ விடுவிப்பீர்களா? நிச்சயமாக இல்லை! ஆனால் கட்டுக்கடங்காத நாக்குகள் அதே விளைவுகளைச் சபைகளில், குடும்பங்களில் நிறைவேற்றுகின்றன.

ஆனாலும், யாக்கோபு விலங்குகளைப் பழக்கி அதை அடக்க ஆள முடியும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறார். அது போல நெருப்பையும் அடக்க முடியும். நீங்கள் ஒரு மிருகத்தை அடக்கினால், அழிவை ஏற்படுத்துபவருக்குப் பதிலாக ஒரு உதவியாளர் கிடைப்பார். நீங்கள் நெருப்பைக் கட்டுப்படுத்தும் போது, ​​​​சக்தியை உருவாக்குகிறீர்கள். 

நாவை மனிதனால் அடக்க முடியாது, ஆனால் கர்த்தரால் அதை அடக்க முடியும். உங்கள் நாக்கு "நரக அக்கினியால் மூட்டப்பட வேண்டியதில்லை" (யாக். 3:6). பெந்தெகொஸ்தே நாளில் அப்போஸ்தலர் மீது ஊற்றப்பட்டதை போல, பரலோகத்திலிருந்து மூட்டப்படலாம்! கர்த்தர் நெருப்பை ஏற்றி அதைக் கட்டுப்படுத்தினால், நாக்கு வழி தவறியவர்களை வழி நடத்துவதற்கும், திருச் சபையைக் கட்டியெழுப்புவதற்கும் ஒரு வலிமையான கருவியாக மாறும். 

மிக முக்கியமான விஷயம்; நிச்சயமாக, அது இதயம்.

ஏனென்றால் "இருதயத்தின் நிறைவால் வாய் பேசுகிறது" (மத். 12:34). 

இதயத்தில் வெறுப்பு நிறைந்திருந்தால், சாத்தான் நெருப்பை மூட்டுவான். இதயம் அன்பினால் நிறைந்திருந்தால் கர்த்தர் தீபத்தை ஏற்றுவார்.


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

வெள்ளி, 16 ஜூன், 2023

யாக்கோபு 2: 20–26

 அத்தியாயம் 6 தொடர்ச்சி:

ஆற்றல் உடைய  விசுவாசம்.

Dynamic Faith. 


ஆற்றலுடைய விசுவாசம்: உண்மையானது. வல்லமை  உடையது. வாழ்வை மாற்றும். 

இந்த தியானப் பகுதியில், ஆற்றல் தரும் உண்மையான இரட்சிப்பின் விசுவாசத்தை யாக்கோபு விவரித்தார். 

ஆற்றலுடைய விசுவாசம், ''கர்த்தருடைய வார்த்தையை'' அடிப்படையாகக் கொண்டு அதன் மேல் கட்டப்பட்டது. நமது ஆவிக்குரிய மறுபிறப்பை ''கர்த்தருடைய வார்த்தையின்'' வழியாகப் பெறுகிறோம் (யாக். 1:18). நாம் ''கர்த்தருடைய வார்த்தையை'' விசுவாசிக்கிறோம், அது நம்மை இரட்சிக்கிறது (யாக். 1:21). 

"எனவே, விசுவாசம் கேட்பதினாலே வரும், தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே விசுவாசம் வரும்" (ரோமர் 10:17). 

ஆற்றலுடைய இரட்சிப்பின் விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டுகளாக  ஆபிரகாமையும், ராகாபையும் யாக்கோபு பயன்படுத்தினார். ஏனெனில் இவர்கள் இருவரும் தேவ செய்தியைக் கேட்டனர். கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டனர். 

நமக்கு முன்பாக எதை விசுவாசித்துத் தொழுது கொள்கிறோமோ, அதைப் பொறுத்தே நமது வாழ்வும் சிறந்ததாக அமையும். ஒரு காட்டில் வசிக்கும் மனிதர் கல்லுக்கு முன்னால் வணங்குகிறார். அது தனக்கு உதவி செய்யும் என்று நம்புகிறார், ஆனால் அவர் எந்தவித வளர்ச்சியையும் அடையவில்லை. ஆக ஒரு நபர் எவ்வளவு நம்பிக்கையோடு ஜெபித்தாலும், அவர் சரியான இலக்கை நோக்கி ஜெபிக்காவிட்டால், அது எதையும் சாதிக்காது. 

பல நேர்மையான மனிதர்கள், "நான் நம்புகிறேன்" எனச் சாட்சியமாகக் கூறுகின்றனர், ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால், "நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்கள்? எதை நம்புகிறீர்கள்?" 

சில வகை நம்பிக்கை கோட்பாட்டை விசுவாசிப்பதினால் நாம் இரட்சிக்கப்படவில்லை; கிறிஸ்துவின் வார்த்தை வெளிப்படுத்திய சத்தியத்தை விசுவாசத்துடன் ஏற்றுக் கொண்டதால் இரட்சிக்கப்படுகிறோம். 

ஆற்றலுடைய விசுவாசம் கர்த்தருடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டது, அது மனிதனின் முழு ஆளுமையையும் உள்ளடக்கியது. செத்த விசுவாசம் புத்தியை (Intellectual) மட்டுமே தொடுகிறது; பேய்களின் விசுவாசம் புத்தி மற்றும் உணர்ச்சிகள் (Mind & Emotions) இரண்டையும் தொடுகிறது; ஆனால் 

ஆற்றலுடைய விசுவாசத்தில் மனதின் சித்தமும் (Will) பங்கு பெறுகிறது. இந்த விசுவாசத்தில் மனிதனின் முழு ஆளுமையையும்  இணைந்து செயல்படுகிறது. 

புத்திக்குச் சத்தியம் புரியும்; இதயம் சத்தியத்தை விரும்புகிறது; மனதின் சித்தம் சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அதைச் செயல்படுத்துகிறது. எபிரெயர் 11ம் அதிகாரத்தில் பட்டியலிடப்பட்ட விசுவாசமுள்ள ஆண்களும், பெண்களும் அவ்விதமாகச் செயலில் ஈடுபட்டவர்கள்: கர்த்தர் அவர்களோடு பேசினார், அவர்கள் முழுமனதுடன் கீழ்ப்படிந்தார்கள். 

மீண்டும் நினைவு கூறவும்; 

''விசுவாசம் என்பது ஆதாரம் இருப்பதால் நம்புவது மாத்திரம் அல்ல; விளைவு எப்படியாக இருந்தபோதிலும் அதற்குக் கீழ்ப்படிவது''!!

ஆற்றலுடைய விசுவாசம் என்பது அறிவுசார் சிந்தனை அல்லது உணர்ச்சிக் கொதிப்பு மட்டும் அல்ல; மனதின் சித்தம் ஏற்றுக் கொண்டு செயல்படத் தூண்டுகிறது. அது தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழும்படி வழி நடத்துகிறது. 

இந்த கீழ்ப்படிதல் ஒரே ஒரு முறை மட்டும் நிகழும் தனித்த செயல் அல்ல; வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நிகழ்கிறது. செயல்படத் தூண்டுகிறது.

புதிய ஏற்பாட்டில் பல்வேறு வகையான கிரியைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. "நியாயப் பிரமாணத்தின் கிரியைகள்" (கலா. 2:16). இது ஒரு பாவி மோசே அறிவித்த நியாயப் பிரமாண சட்டத்திற்குக் கீழ்ப்படிவதன் மூலம் தேவனைப் பிரியப்படுத்த  முயற்சி செய்வதை  குறிக்கிறது. ஆனால் ஒரு பாவி நியாயப் பிரமாணத்தின் செயல்களால் இரட்சிக்கப்படுவது சாத்தியமற்றது. இது உண்மை.

"மாம்சத்தின் கிரியைகள்" (கலா. 5:19). இது இரட்சிக்கப்படாத மக்கள் இயற்கையான சுபாவத்தின் படி சிற்றின்ப விஷயங்களை விரும்பி செய்வதைக் குறிக்கிறது. 

"துர் கிரியைகள்" (கொலோ. 1:21), மற்றும் "செத்த கிரியைகள்" (எபி. 9:14) ஆகிய குறிப்புகளும் வேதத்தில் உள்ளன. ஆனால் ஆற்றலுடைய விசுவாசம் எங்கு இருக்கிறதோ - அங்கு இரட்சிப்பின் விசுவாசமும் இருக்கும், அந்த இடத்தில் நீங்கள் எப்போதும் நல்ல செயல்கள் செய்யப்படுவதைக் காண்பீர்கள்.

வேதாகமத்தில் நன்கு அறியப்பட்ட இரண்டு நபர்களின் வாழ்க்கை மூலமாக, தனது ஆற்றல் தரும் விசுவாச கோட்பாட்டை யாக்கோபு விளக்கினார்: ஆபிரகாம், ராஹாப். 

இவர்கள் போல இரு துருவ எல்லையில் வாழும் நபர்களை உங்களால் வேதத்தில் கண்டுபிடிக்க முடியாது! 

ஆபிரகாம் யூதர்; ராஹாப் புறஜாதி இனத்தைச் சேர்ந்தவர். ஆபிரகாம் தெய்வீக மனிதன்; ராஹாப் வேசி, பாவத்தில் வாழ்ந்த பெண். ஆபிரகாம் தேவனின் சினேகிதர்; ராஹாப் கர்த்தரின் எதிரிகள் கூட்டத்தைச் சேர்ந்தவர். 

இவர்கள் இருவருக்கும் பொதுவானது என்ன? 

இருவரும் ஆற்றலுடைய இரட்சிப்பின் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்து செயல்பட்டவர்கள்!

ஆபிரகாமின் ஆற்றல் மிகு விசுவாசத்தின் உண்மைகளை அறிந்து கொள்ள நீங்கள் ஆதியாகமம் 15 மற்றும் 22ம் அதிகாரங்களை வாசிக்க வேண்டும். ஆபிரகாமைக் கானானுக்கு அழைத்துச் செல்லவும், இஸ்ரேல் என்ற பெரிய தேசத்தை உருவாக்கவும், கல்தேயர்களின் ஊர் என்னும் பட்டினத்திலிருந்து கர்த்தர் அவரை அழைத்தார். இஸ்ரேல் மூலமாக உலகிற்கு  இரட்சகரைக் கொண்டு வருவது தேவ சித்தம். 

ஆபிரகாமின் இரட்சிப்பின் அனுபவம், ஆதியாகமம் 15ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரவில், தேவன் ஆபிரகாமுக்கு நட்சத்திரங்களைக் காண்பித்து "உன் சந்ததி [சந்ததிகள்] இவ்வண்ணமாய் இருக்கும்!" என்று வாக்குறுதி அளித்தார். ஆபிரகாம் அதற்கு எவ்வாறு பதிலளித்தார்? "அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் [கர்த்தர்] அவனுக்கு நீதியாக எண்ணினார் (Counted)" (ஆதி. 15:5-6). 

''எண்ணினார் (Counted)'' என்ற வார்த்தை சட்டம் அல்லது நிதி பரிவர்த்தனை சார்ந்த சொல்லாகும்; அதன் பொருள் "ஒருவருடைய கணக்கில் வரவு வைப்பது". ஒரு பாவியாக, ஆபிரகாமின் ஆவிக்குரிய வங்கி புத்தகத்தில் எதுவுமில்லை. அவர் திவாலானவர்!, ஆனால் அவர் கர்த்தரை விசுவாசித்தார். ஆகையால், தேவன் அவரது கணக்கில் ''நீதிமான்'' என வரவாக வைத்தார். ''நீதிமான்'' என அழைக்கப்படுவதற்காக ஆபிரகாம் உழைக்கவில்லை; அதைக் கர்த்தரிடமிருந்து அவர் பரிசாகப் பெற்றார். அவரது விசுவாசத்தினால் நீதிமான் என்று அறிவிக்கப்பட்டார். அவர் விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது (ரோமர் 4-ஐ வாசியுங்கள்). 

நியாயப்படுத்துதல் (Justification) என்பது திருமறையில் உள்ள ஒரு முக்கியமான கோட்பாடு. நியாயப்படுத்துதல் என்பது கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒரு பாவியை, நீதிமான் என்று கர்த்தர் அறிவிக்கும் செயல். இது கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய தேவ சித்தத்தின் அடிப்படையில் அருளப்படுகிறது. இது ஒரு வழிமுறை (Process) அல்ல; ஒரு செயல் (an act). இது ஒரு பாவி செய்த செயலின் விளைவு அல்ல; அவர் கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது கர்த்தர் செய்கிறார். இது ஒரே ஒரு முறை நடக்கும் நிகழ்வு. எப்போதும் மாறாதது. 

நல்லது. ஒரு பாவிக்கும் தேவனுக்கும் இடையே, தனிப்பட்ட முறையில் இந்தப் பரிவர்த்தனை நிகழ்ந்தது. அவர் விசுவாசத்தால் நீதிமானாக்கப்பட்டார், ஆனால் இது உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் நீதிமான் என உங்களால் எப்படிச் சொல்ல முடியும்?

இந்த முக்கியமான கேள்விக்கு ஆபிரகாமின் வாழ்க்கை பதிலளிக்கிறது: நியாயப்படுத்தப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வெளிப்படுகிறது. அவர்கள் தேவனின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிகிறார்கள். அவர்களது விசுவாசம் செயல்களால் வெளிப்படுகிறது.

ஆபிரகாமின் வாழ்க்கையில் நடந்த மற்றொரு நிகழ்வையும் பயன்படுத்தி யாக்கோபு இந்த கோட்பாட்டை விளக்கினார். அது ஆபிரகாம் மனமாற்றம் அடைந்து, பல ஆண்டுகள் கடந்த பின்னர் நடந்த நிகழ்வு. ஈசாக்கை பலிபீடத்தின் மீது காணிக்கையாக அர்ப்பணிக்கும் நிகழ்வு (ஆதி. 22). கர்த்தரின் இந்த கடினமான கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததால் ஆபிரகாம் இரட்சிக்கப்படவில்லை. அவர் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டவர் என்பதை அந்த கீழ்ப்படிதல் நிரூபித்தது. 

"அவரது விசுவாசமும் செயல்களும் இணைந்து முயற்சி செய்து, செயல்களினாலே விசுவாசம் முழுமையாக நிறைவு பெற்றதென்று புலப்படுகிறது அல்லவா?" (யாக். 2:22 ). 

விசுவாசத்திற்கும் செயல்களுக்கும் இடையே மிகச் சரியான தொடர்பு உள்ளது. 

"ஆபிரகாம் விசுவாசம் மற்றும் கிரியைகளால் இரட்சிக்கப்படவில்லை, மாறாகக் கிரியை செய்யும் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டார்" என்று ஒருவர் வெளிப்படுத்தினார். 

ஆபிரகாம் எப்படி "கிரியைகளால் நீதிமானாக்கப்பட்டார்" (யாக். 2:21) அவர் ஏற்கனவே "விசுவாசத்தால் நீதிமானாக்கப்பட்டார்" அதை நிரூபிக்கும் வண்ணமாக அதைச் செயல்களில் நிறைவேற்றினார் (ரோம். 4 ஐப் பார்க்கவும்).

விசுவாசத்தினாலே, அவர் தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்பட்டார். அவருடைய நீதி தேவனால் அறிவிக்கப்பட்டது (declared); கிரியைகளினால் மனிதர்களுக்கு முன்பாக நீதிமானாக்கப்பட்டார். அவருடைய நீதி  நிரூபிக்கப்பட்டது (demonstrated). 

ஆபிரகாம் தனது மகனைப் பலிபீடத்தின் மீது வைத்ததை எந்த மனிதர்களும் பார்க்கவில்லை. அது உண்மைதான், ஆனால் ஆதியாகமம் 22 இல் உள்ள ஊக்கமூட்டும் பதிவு, அந்த நிகழ்வைப் பார்க்கவும், ஆபிரகாமின் செயல்களால் அவரது விசுவாசம் நிரூபிக்கப்படுவதைக் காணவும் உதவுகிறது.

நான் முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல், டி.எல். மூடி அடிக்கடி சொன்னது, "ஒவ்வொரு திருமறையும் காலணி தோலில் கட்டப்பட வேண்டும்." அவர் வெற்றிகரமான காலணி விற்பனையாளராக இருந்ததால் அப்படிச் சொல்லவில்லை; ஒரு அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவராக இருந்ததால் அவ்வாறு கூறினார். ஆற்றல் தரும் விசுவாசம் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது; அன்றாட வாழ்க்கையிலும், செய்யும் செயல்களிலும் தன்னை நிரூபிக்கிறது. 

ஆனாலும், பவுல் தீத்துவுக்கு எழுதிய நிருபத்தில் சொல்லப்பட்டவை இன்றும் பொருந்துகிறது. நம் மத்தியில் அப்படிப்பட்ட தேவாலய உறுப்பினர்கள் இப்போதும் இருக்கிறார்கள்

"அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கை பண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்" (தீத்து 1:16). 

பவுல் மேலும் எழுதினார், 

"இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக் குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவை நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவை." (தீத்து 3:8). 

யாக்கோபு எடுத்துக் காட்டும் இரண்டாவது உதாரணம் ராஹாப். யோசுவா 2 மற்றும் 6ம் அதிகாரத்தில் அவரது பின்னணி காணப்படுகிறது. 

இஸ்ரேலர், தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தைச் சுதந்தரிப்பதற்காக, எரிகோ நகரத்தைக் கைப்பற்றும் சூழல். யோசுவா வேவு காரர்களை ஊருக்குள் அனுப்பி தேசத்தின் நிலையைப் பார்த்து வரும்படி சொன்னார். அவர்கள் அங்கு ராஹாப் என்ற வேசியைச் சந்தித்தார்கள். ராஹாப் அவர்களைப் பாதுகாத்தார். கர்த்தருடைய வார்த்தை சொல்லியதை நம்பினார். கர்த்தர் செய்யப் போகிறதையும் விசுவாசித்தார். ​​​​அவர்கள் நகரம் கைப்பற்றப்படும் சமயத்தில், அவரையும், அவரது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என வாக்குறுதியைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். அவர்களும் உறுதியளித்துப் புறப்பட்டுச் சென்றனர். அப்படியே செய்தார்கள். 

இது ஒரு பரபரப்பான சம்பவம். ஆனால் ஆற்றல் தரும் விசுவாசத்தை விளக்குவதற்கான திருமறையின் சிறந்த உதாரணங்களில் இதுவும் ஒன்று (எபி. 11:31 ஐப் பார்க்கவும்). 

ராஹாப் தேவ வார்த்தையைக் கேட்டார். தன் நகரம் அழிக்கப்படும் என்பதை அறிந்தார். இந்த உண்மை அவரையும் அவருடைய சக குடிமக்களையும் பாதித்தது. அதனால் அவர்களின் இதயம் அவர்களுக்குள் தளர்ந்து உருகியது (யோசு. 2:11). முதலாவது ராஹாப் தன் அறிவாலும், உணர்ச்சிகளாலும் அந்த சூழலுக்குப் பதிலளித்தார். அத்துடன் நின்றுவிடவில்லை. தன் மனதின் விருப்பத்துடனும் பதிலளித்தார். அவர் தொடர்ந்து செயல் பட்டார். யூத உளவாளிகளைப் பாதுகாக்க தன் உயிரையும் பணயம் வைக்கத் துணிந்தார். அந்த விடுவிக்கும் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு, பயப்படாமல் துணிந்து தன் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டார். 

யோசுவா 2-ல் “வேசி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேய வார்த்தைக்கு “ஒரு தங்கும் விடுதியை நடத்துபவர்” என்ற பரந்த அர்த்தமும் உள்ளது. ராஹாப் ஒரு தங்கும் விருந்தினர் விடுதியை நடத்தினார். ஆகவே ஒற்றர்கள் அங்குச் செல்வது சாதாரணமானது. ஆனால், யாக்கோபு 2:25 இல் குறிப்பிடும் "வேசி" என்ற கிரேக்க வார்த்தைக்கு நிச்சயமாக ஒழுக்கக்கேடான நபர் என்று பொருள். எபிரேயர் 11:31ல் உள்ள அர்த்தமும் இதுதான். ஆனாலும் அவள் இஸ்ரவேலரை மணந்து நமது ஆண்டவரின் மூதாதையரானதை மத்தேயு 1:5 குறிப்பிடுகிறது. எத்தனை பெரிய கிருபை! 

நற்செய்தியை அறிவித்து ஆத்தும அறுவடை செய்ததாகத் திருமறை சுட்டுக் காட்டும் முதல் நபர் ராஹாப். யோவான் 4 இல் உள்ள "சமாரிய ஸ்தீரி" உடன் நீங்கள் அவளை ஒப்பிடாமல் இருக்க முடியாது. 

ராஹாப் செத்த நம்பிக்கையை, அதாவது வெறும் அறிவுசார் அனுபவத்தை மட்டும் பெற்றிருக்க முடியும். அல்லது அவருக்குப் பேய்களின் நம்பிக்கையைப் போல அறிவுடன், உணர்வு சார் கிளர்ச்சியோடு முடிவடைந்திருக்கலாம், ஆனால் அவர் மனம் தெளிவடைந்து. தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தது. ஆற்றலுடைய விசுவாசத்தைப் பயன்படுத்தினார். அவருடைய அறிவு உண்மையை அறிந்தது. இதயம் சத்தியத்தால் தூண்டப்பட்டது. மன சித்தின்படி செயல்பட்டார். தன் விசுவாசத்தை தன் செயல்களால் நிரூபித்தார். 

ராஹாப்பிற்கு கிடைத்தது ஒரு சிறிய தகவல் மட்டுமே, ஆனால் அவருடைய விசுவாசம் உண்மையில் எவ்வளவு மகத்துவமானது. இன்று நாம் தேவனுடைய வார்த்தை மற்றும் அவருடைய குமாரன் மூலமாகத் தேவனின் முழு வெளிப்பாட்டையும் பெற்றுள்ளோம். நாம் கல்வாரியின் மறுபுறத்தில் வாழ்கிறோம். நமக்கு வார்த்தைகளைக் கற்பிக்கவும், உணர்த்தவும் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். 

"எவருக்கு அதிகமாகக் கொடுக்கப்படுகிறதோ, அவனிடம் அதிகம் கேட்கப்படும்" (லூக்கா 12:48). 

ராஹாபின் நம்பிக்கை இன்று பாவிகளின் அவநம்பிக்கைக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டாகும். 

முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் சத்தியத்தைப் பின்பற்றி வாழ்கிறார் என்பதை யாக்கோபு 2ம் அதிகாரம் வலியுறுத்துகிறது. 

அவர் பழங்காலக் கோட்பாடுகளை வெறும் சடங்காக மட்டும் பிடித்துக் கொண்டிருக்கவில்லை; அதைத் தனது அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துகிறார். அவரது நம்பிக்கை அறிவுஜீவிகளின் செத்த நம்பிக்கையோ அல்லது வீழ்ந்த போன அசுத்த ஆவிகளின் பேய் நம்பிக்கையோ அல்ல. ஆபிரகாம் போன்ற ஆண்களும், ராஹாப் போன்ற பெண்களும் கொண்ட ஆற்றலுடைய நம்பிக்கை. அது ஒரு வாழ்க்கையை மாற்றி அமைத்து, கர்த்தருக்காகப் பணிபுரியச் செய்கிறது. 

கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் தனது சொந்த இருதயத்தையும், வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்த்து, உண்மையான இரட்சிப்பின் நம்பிக்கை, மற்றும் ஆற்றலுடைய விசுவாசம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம். 

நீங்கள் விசுவாசமுள்ளவர்களோ வென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறிகிறீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.” (2 கொரி. 13:5அ). 

சாத்தான் பெரிய ஏமாற்றுக்காரன்; அவனது சாதனங்களில் ஒன்று போலி சாயல் (Imitation). போலி நம்பிக்கையை உண்மையான நம்பிக்கை என்று ஒருவரை நம்ப வைக்க முடிந்தால், அந்த நபரைச் சாத்தான் தனது அதிகாரத்தில் வைத்திருப்பான்.

நம் இதயங்களை ஆராய்ந்து பார்க்க உதவியாக, நம்மை நாமே கேட்டுக் கொள்ளக்கூடிய சில கேள்விகள்:

1. நான் ஒரு பாவி என்பதை உணர்ந்து, அதை இறைவனிடமும், எனது ஆன்மாவிலும் நேர்மையுடன் நான் ஒப்புக்கொண்ட காலம் என் வாழ்விலிருந்தது உண்டா?

2. வரவிருக்கும் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, என் இதயம் என்னைத் தூண்டிய காலம் என் வாழ்விலிருந்தது உண்டா?நான் செய்த பாவங்களைக் குறித்து எப்போதாவது தீவிரமாகப் பயந்திருக்கிறேனா?

3. கிறிஸ்து என் பாவங்களுக்காக மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்ற நற்செய்தியை நான் உண்மையிலேயே புரிந்து கொண்டேனா? எனது நற்செயல்கள் மூலமாக என்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து அதை ஒப்புக் கொண்டது உண்டா?

4. நான் என் பாவங்களுக்காக மனதார துக்கப்பட்டு, மனந்திரும்பி அவற்றிலிருந்து விலகி வாழ்கிறேனா? அல்லது பாவம் தரும் சுகத்தை விரும்பி அதை யாரும் பார்க்காத வண்ணம் ரகசியமாக அனுபவிக்க விரும்புகிறேனா?

5. என் இரட்சிப்புக்காக நான் கிறிஸ்தை, கிறிஸ்துவை மட்டுமே நம்பியிருக்கிறேனா? தேவ வார்த்தையின் மூலம் அவரோடு வாழும் உறவில் மகிழ்ந்து ஆவியில் களி கூர்ந்து அனுபவிக்கிறேனா?

6. ஆண்டவரை ஏற்றுக் கொண்ட பின்னர் என் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? நான் தொடர்ந்து நல்ல செயல்கள் செய்கிறேனா, அல்லது எப்போதாவது ஒரு முறை மட்டும் நல்ல செயல்களைச் செய்யும் அளவு பலம் அற்றவனாக இருக்கிறேனா?

நான் ஆவிக்குரிய காரியங்களில் வளர முற்படுகிறேனா? நான் இயேசுவோடு இருக்கிறேன் என்று மற்றவர்கள் என்னைக் குறித்துச் சொல்ல முடியுமா?

7. கிறிஸ்துவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு விருப்பம் உள்ளதா? அல்லது அவரைப் பற்றி சொல்ல வெட்கப்படுகிறேனா?

8. நான் சபை ஐக்கியத்தை அனுபவிக்கிறேனா? ஆராதனை எனக்கு இன்பமாக உள்ளதா?

9. கர்த்தரின் வருகைக்கு நான் ஆயத்தமா? அல்லது அவர் எனக்காக வரும்போது வெட்கப்படுவேனா? 

நிச்சயமாக, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் தனிப்பட்ட முறையில் ஒரே விதமான அனுபவம் இருப்பதில்லை. பரிசுத்தப்படுத்துதலின் அளவுகளும் ஆளாளுக்கு தக்க மாறுபடுகிறது. 

ஆனாலும், கொடுக்கப்பட்ட கேள்விப் பட்டியல், ஒரு நபருக்குக் கர்த்தருக்கு முன்பாக, அவரது உண்மையான நிலைப்பாட்டைத் தீர்மானிக்க பெரும்பாலும் உதவுகிறது.

தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்" (சங்.139:23-24).


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

சனி, 10 ஜூன், 2023

யாக்கோபு 2: 14 - 19

 அத்தியாயம் 6:

பிழையான விசுவாசம். 

(False Faith)


கிறிஸ்தவ வாழ்க்கையில் முக்கியதொரு கோட்பாடு: விசுவாசம். 

விசுவாசம் குறித்த சில முக்கிய வேத வசனங்கள்:

  • தேவனுடைய இரக்கத்தால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். அந்தக் கிருபையை நீங்கள் உங்களது விசுவாசத்தினால் பெற்றீர்கள் (எபே. 2:8-9).
  • நாம் எதை விசுவாசிக்கிறோமோ அதன்படி வாழ்கிறோம். நாம் பார்க்கிற பிரகாரமாக வாழ்வதில்லை (2 கொரி. 5:6). 
  • விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது சாத்தியமில்லை (எபி. 11:6).
  • விசுவாசம் இல்லாமல் செய்யும் எச்செயலும் பாவமானதே (ரோமர்.14:23). 

விசுவாசம் என்பது "சான்றுகள் இல்லாத சூழலிலும், அதை நம்புவது மாத்திரமல்ல; அதன் பின் விளைவுகள் எப்படியாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு கீழ்ப்படிவது" என்று ஒருவர் கூறியிருக்கிறார் (Faith is not believing in spite of evidence, but obeying in spite of consequence). 

நீங்கள் எபிரெயர்11ம் அதிகாரத்தை வாசித்தால், ​​கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து செயல்பட்ட விசுவாச வீரர்கள் பற்றிய குறிப்புகளைக் காணலாம். அவர்கள் தங்களது விசுவாசத்திற்காக எந்த விலையையும் கொடுக்க ஆயத்தமாக இருந்தவர்கள். அப்படிப்பட்ட ஆண்களும், பெண்களும் தான் அந்த பட்டியலில் இடம் பெற்றனர்.

விசுவாசம் என்பது ஒருவித அபத்தமான உணர்வை அடைய முயல்வது அல்ல; விசுவாசம் என்பது கர்த்தருடைய வார்த்தை உண்மையானது என்கிற நம்பிக்கை; அந்த வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தால் அது ஆசீர்வாதத்தை அளிக்கும் என்ற நம்பிக்கை. 

இந்தப் பகுதியில்,  விசுவாசத்திற்கும், செயல்களுக்கும் இடையிலான உறவைப் பற்றி யாக்கோபு விளக்கி உள்ளார். இது ஒரு முக்கியமான விவாதம். ஏனென்றால், விசுவாசத்தை தவறாகப் புரிந்து கொண்டால், நம்முடைய நித்திய இரட்சிப்பை மூழ்கடித்து விடுவோம். 

  • எந்த விசுவாசம் ஒரு மனிதரை உண்மையில் இரட்சிக்கிறது? 
  • இரட்சிக்கப்படுவதற்கு நல்ல செயல்களைச் செய்வது அவசியமா? 
  • ஒருவர் உண்மையான இரட்சிப்பின் விசுவாசத்தை கடைப்பிடிக்கிறாரா, இல்லையா என்பதை எப்படிச் சொல்ல முடியும்? 

இந்தக் கேள்விகளுக்கு யாக்கோபு பதில் தந்துள்ளார். இந்தப் பகுதியில் மூன்று வகையான விசவாசத்தை நுட்பமாக விவரித்து, அவற்றில் ஒன்று மட்டுமே உண்மையான இரட்சிப்பின் விசுவாசம் என்று நமக்கு எடுத்துக் கூறி உள்ளார்.

உயிரற்ற விசுவாசம் - Dead Faith (2:14–17).

ஆதி திருச்சபையில் கூட இரட்சிக்கப்படாதவர்கள் இருந்தனர். அவர்கள் தங்களை இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் எனக் கூறிக் கொண்டாலும், அது உண்மை இல்லை.

எங்கே உண்மை இருக்கிறதோ, அங்கே போலியானவையும் இருப்பதைக் கண்டுபிடிப்பீர்கள். 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இதைக் குறித்து எச்சரித்தார், 

“என்னைத் தம் கர்த்தர் என்று கூறும் எல்லோரும் பரலோகத்திற்குள் நுழைய முடியாது. பரலோகத்தில் உள்ள என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்கள் மட்டுமே பரலோக ராஜ்யத்தில் நுழைய முடியும்” (மத். 7:21). 

செத்த விசுவாசம் கொண்டவர்களிடம் செயல்களுக்குப் பதிலாக வெறும் பேச்சு மாத்திரமே உள்ளது. அவர்களுக்கு வேதத்திலிருந்து சரியான வசனத்தை மேற்கோள் காட்டி ஜெபிக்கத் தெரியும். அருமையாகச் சாட்சி சொல்வார்கள், ஆனால் அவர்களின் பேச்சுக்கு ஏற்றதாக வாழ்க்கை இருக்காது. அவர்கள் தாங்கள் பேசுவது போதுமானது, அதுவே செயல்களைச் செய்தது போல என்று நினைக்கிறார்கள். அது தவறு.

இதற்கு யாக்கோபு ஒரு எளிய உதாரணம் சொன்னார். ஒரு ஏழை விசுவாசி, சரியான உடையின்றி, உணவுக்கும் வழியில்லாமல் ஒரு திருச்சபைக்குள் வந்தார். செத்த விசுவாசம் கொண்ட நபர் வந்தவரைக் கவனித்தார். அவரது தேவைகளைப் பார்த்தார், ஆனால் அந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர் எதையும் செய்யவில்லை. அவர் செய்ததெல்லாம் ஒரு சில தெய்வ பக்தி மிகுந்த ஆறுதல் வார்த்தைகள் சொன்னது மட்டுமே! 

சமாதானத்தோடு போங்கள், தேவன் உன்னோடு இருக்கிறார். நான் உனக்கு நலம் வேண்டுகிறேன்; இருக்க வசதியான இடமும்,  சூடாக உண்ண நல்ல உணவும் உனக்குக் கிட்டும் என்று விசுவாசிக்கிறேன்" (யாக். 2:16). 

ஆனால் உள்ளே வந்தவர், வந்தது போலவே பசியோடும், அரை நிர்வாணத்தோடும் திரும்பிச் சென்றார்!

இரட்சிக்கப்பட்டாலும் சரி, இரட்சிக்கப்படாவிட்டாலும் சரி, ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவை உணவும், உடையும். 

உணவு, உடை எவ்வளவு இன்றியமையாதது என விவரிக்கும் சில வேத வசனங்களைக் கவனியுங்கள்.

"உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்." (1 தீமோ. 6:8). 

உண்பதற்கு என்ன கிடைக்கும்? அல்லது குடிப்பதற்கு என்ன கிடைக்கும்? அல்லது உடுப்பதற்கு என்ன கிடைக்கும்? என்று கவலைகொள்ளாதீர்கள். தேவனை அறியாத மக்களே இவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். நீங்களோ கவலைப்படாதீர்கள், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை அறிவார்" ( மத். 6:31–32). 

பழைய ஏற்பாட்டின் பக்தர் யாக்கோபு இந்த அடிப்படைத் தேவைகளுக்காகக் கர்த்தரிடம் வேண்டினார்: 

“தேவன் என்னோடு இருந்து, எங்கு போனாலும் என்னைத் தேவன் காப்பாற்று வாரானால், உண்ண உணவும் அணிய ஆடையும் தேவன் கொடுப்பாரானால், என் தந்தையின் இடத்துக்குச் சமாதானத்தோடு திரும்புவேனேயானால், தேவன் இதையெல்லாம் செய்வாரானால், கர்த்தர் என் தேவனாயிருப்பார் (ஆதி. 28:20-21). 

அடிப்படைத் தேவையோடு உள்ள மக்கள் யாராக இருந்தாலும், ஒரு விசுவாசியாக, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து உதவ வேண்டிய நமது கடமை. 

"எவர் ஒருவருக்கும் நன்மை செய்யும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம், அதைச் செய்ய வேண்டும். குறிப்பாகத் தேவனிடம் விசுவாசம் கொண்டுள்ள குடும்பங்களுக்கு நன்மை செய்யவேண்டும்" (கலா. 6:10). 

"மிகச் சிறியவர்களான இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்" (மத். 25:40).

தேவைப்படும் ஒருவருக்கு உதவுவது அன்பின் வெளிப்பாடாகும். 

அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது (கலா. 5:6). 

ஒரு விசுவாசி தேவைப்பட்ட பொருள்கள் எல்லாவற்றையும் வாங்குகிற அளவுக்குப் போதுமான செல்வந்தனாக இருக்கிறான். தேவையான பொருள்கள் வாங்க இயலாதவனுமாகிய ஏழை கிறிஸ்தவ சகோதரனை அவன் பார்க்கிறான். இப்போது செல்வந்தனாக உள்ள சகோதரன், அந்த ஏழை சகோதரனுக்கு உதவவில்லை என்றால், அந்த விசுவாசத்தால் பயன் என்ன? என அப்போஸ்தலன் யோவான் கேட்கிறார்.

உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர், சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் தேவ அன்பு எப்படி நிலைத்திருக்கும்?  

பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். '' (1 யோவான் 3:17-18).

நல்ல சமாரியன் உவமையில் சொல்லப்பட்ட ஆசாரியர் மற்றும் லேவியர் இருவரும் சமயப் பயிற்சி பெற்றவர்கள், ஆனால் அவர்கள் இருவருமே, சாலையின் ஓரத்தில் மரணத்தில் சிக்கித் தவித்த மனிதனுக்கு உதவுவதற்கு முன்வரவில்லை (லூக்கா 10:25-37). 

அவர்கள் தங்கள் மத நம்பிக்கைக்காகப் போராடுவார்கள், ஆனால் அவர்கள் இருவரில் ஒருவர் கூட, தங்களது அன்பான செயல்கள் வழியாக அதை வெளிப்படுத்த முன்வரவில்லை.

“அப்படிப்பட்ட விசுவாசம் அவனை இரட்சிக்குமா?” என்று யாக்கோபு கேட்டார் (2:14). 

எப்படிப்பட்ட விசுவாசம்?  செயல்களில் வெளிப்படாத விசுவாசம். 

அப்படியென்றால் அந்த கேள்விக்கான பதில் அப்படிப்பட்ட விசுவாசம் இரட்சிக்காது என்பதே! 

விசுவாசம் என்பது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவை நல்ல செயல்கள் செய்தல் வழியாக வெளிப்பட வேண்டும். அப்படி  இல்லாமல், வெறும் விசுவாச அறிக்கையைச் சொல்வது மாத்திரம் பயனற்றது. அப்படிப்பட்ட நம்பிக்கை செத்த விசுவாசம். 

"அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால், அது தன்னில் தானே செத்ததாயிருக்கும்" (யாக். 2:17). 

மிகச் சிறந்த இறையியலாளர் ஜான் கால்வின் எழுதினார்;

"விசுவாசம் மட்டுமே நீதியாக எண்ணப்படுகிறது, ஆனால் நீதியாக எண்ணப்படும் விசுவாசம் ஒருபோதும் தனியாக இருக்க முடியாது (It is faith alone that justifies, but faith that justifies can never be alone.)

யாக்கோபு 2:17ல் உள்ள 'தன்னில் தானே' என்ற வார்த்தைக்கு "தனக்குள்ளாக" என்று பொருள். 

உண்மையான விசுவாசம் ஒருபோதும் தனித்து இருக்க முடியாது: அது எப்போதும் பரிசுத்த வாழ்வைக் கொண்டுவருகிறது. அந்த வாழ்க்கை நல்ல செயல்களை உருவாக்குகிறது. 

செத்த விசுவாசம் கொண்டவருக்கு அறிவுசார் அனுபவம் மட்டுமே உள்ளது. அவருக்கு அறிவுப்பூர்வமாக இரட்சிப்பின் கோட்பாடுகள் தெரியும், ஆனால் அவர் ஒருபோதும் தன்னை கர்த்தருக்கு சமர்ப்பிக்கவில்லை, இரட்சிப்புக்காக கிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுக்கவுமில்லை. அவருக்கு வேத வார்த்தைகள் நன்றாகத் தெரியும். ஆனால்  தனது வார்த்தைகளைச் செயல்கள் வழியாகக் காண்பிக்க அவர் விரும்புவதில்லை. 

கிறிஸ்துவின் மீதான விசுவாசம் ஜீவனைக் கொண்டு வருகிறது (யோவான் 3:16). 

எங்கே ஜீவன் இருக்கிறதோ அங்கே வளர்ச்சியும், பலனும் இருக்க வேண்டும். 

இந்த பகுதியில் யாக்கோபு மூன்று முறை நம்மை எச்சரித்தார், "கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது" (யாக்கோபு 2:17, 20, 26). 

வெறும் அறிவுசார்ந்த விசுவாசத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். 

220 வோல்ட் மின்சாரக் கம்பியைத் தொட்டவர் எப்படி அதே நிலையில் இருக்க முடியாதோ அது போல எந்த ஒரு மனிதனும் கிறிஸ்துவை விசுவாசித்த பிறகு அதே பழைய மனிதனாக இருக்க முடியாது. 

குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்” (1 யோவான் 5:12). 

செத்த விசுவாசம் இரட்சிப்பதில்லை. செத்த விசுவாசம் போலி நம்பிக்கை. அது அதில் சிக்கிய நபரை மயக்கி, நித்திய வாழ்வின் தவறான நம்பிக்கையில்  நடத்துகிறது.

பேய்களின் விசுவாசம் - Demonic Faith (2:18–19)

விசுவாசத்தை விளக்குவதற்கு ''பேய்களின் விசுவாசத்தை'' உதாரணமாகப் பயன்படுத்தி அதன் மூலம் இந்த நிருபத்தை வாசிப்பவர்களை யாக்கோபு அதிர்ச்சியடையச் செய்தார்.

சமீபத்திய ஆண்டுகளில், தேவாலயம் அசுத்த ஆவிகளின் இருப்பையும், அதன் கோரச் செயல்பாட்டையும் மீண்டும் ஏற்றுக் கொண்டுள்ளது. 

நம்முடைய கர்த்தர் பூமியில் ஊழியம் செய்து கொண்டிருந்தபோது, ​​பல முறை அவர் பிசாசுகளைத் துரத்தினார். தனது சீடர்களுக்குப் பிசாசுகளைத் துரத்தும் வல்லமையைக் கொடுத்தார். 

பவுல் தனது ஊழியத்தில் தீய ஆவிகளின் சக்திகளைப் பல முறை எதிர்கொண்டார். பொல்லாத ஆவிக்குரிய சக்திகளைத் தோற்கடிக்க, கர்த்தரின் சர்வாயுதவருக்கத்தை எடுத்துப் போராடுங்கள் எனத் திருச்சபை விசுவாசிகளுக்கு அறிவுறுத்தினார் (எபே. 6:10-20). 

ஆனால், பேய்களுக்கும் விசுவாசம் இருப்பது சபை மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது! அவைகள் தேவனை விசுவாசிக்கின்றன? 

முதலாவது, அவைகள் கர்த்தர் இருப்பதை நம்புகின்றன; அவைகள் நாத்திகர்கள் அல்ல (Not Atheists). அவைகள் அஞ்ஞானிகளும் அல்ல (Not Agnostics). அவைகள் கிறிஸ்துவின் தெய்வீகத்தை விசுவாசித்தன. கிறிஸ்து பூமியில் ஊழியம் செய்த போது , தீய சக்திகளைச் சந்தித்த போதெல்லாம், அவைகள் அவருடைய குமாரத்துவத்திற்கு சாட்சி கொடுத்தன (மாற்கு 3:11-12). தண்டனைக்குரிய இடம் இருப்பதாக அவைகள் விசுவாசித்தன (லூக்கா 8:31). அவைகள் இயேசு கிறிஸ்துவை நீதிபதியாகவும் ஏற்றுக் கொண்டு அவருடைய வார்த்தையின் வல்லமைக்கு அடிபணிந்தன (மாற்கு 5:1-13).

“இஸ்ரவேலே, கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்!” (உபா. 6:4) எனும் தேவ வசனம், பக்தியுள்ள யூதரின் தினசரி விசுவாசத்தை உறுதிப் படுத்துவதாக இருந்தது. 

ஆனால் யாக்கோபு செல்கிறார்: “கர்த்தர் ஒருவரே என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அப்படிச் செய்கிறது நல்லது தான்! ஆனால் பிசாசுகளும் கூட அப்படியே விசுவாசித்து நடுங்குகின்றன!!!" (யாக். 2:19 ). 

செத்த நம்பிக்கை கொண்ட மனிதன் அவனது புத்தியில் மட்டுமே தொடப்பட்டான், ஆனால் பேய்கள் தங்கள் உணர்ச்சிகளிலும் தொடப்பட்டு, விசுவாசித்து நடுங்கின. 

ஆக நம்பி நடுங்குவது இரட்சிப்பின் அனுபவம் அல்ல. ஒரு நபர் தனது மனதில் அறிவொளி பெறலாம். அவரது இதயத்தில் கூட உணர்ச்சிகளிலும் கிளர்ந்தெழுந்த அனுபவம் அடையலாம். இருந்த  போதிலும் அவர் இரட்சிப்பை அடையாமல் போகக் கூடும். 

உண்மையான இரட்சிப்பின் விசுவாசம் மேலும் சிலவற்றை உள்ளடக்கியது. அதை அனைவரும் பார்க்க முடியும். அங்கீகரிக்கப் படக்கூடிய ஒன்று.

அதுவே மாற்றம் அடைந்த வாழ்க்கை (A changed life). 

"ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே" (யாக்கோபு 2:18). 

கிரியைகள் இல்லாமல் ஒருவர் எப்படி  தன் விசுவாசத்தைக் காட்ட முடியும்? 

இறந்த போன ஒரு பாவி நல்ல செயல்களைச் செய்ய முடியுமா? இயலாது! 

நீங்கள் கிறிஸ்துவை விசுவாசிப்பவர் எனில், 

"நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் செய்திருக்கிறார்." (எபே. 2:10). 

ஒரு கிறிஸ்தவராக இருப்பது என்பது, கிறிஸ்துவை விசுவாசிப்பதும்,  அவருக்காக வாழ்வதும் அதில் அடங்கும்; நீங்கள் புதிய இரட்சிப்பின் வாழ்க்கையைப் பெறுகிறீர்கள், பின்னர் கனி தரும் புது வாழ்க்கையை வெளிப்படுத்துகிறீர்கள். மலடான விசுவாசம் இரட்சிக்காது. யாக்கோபு 2:20-ல் "செத்த" என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தையானது "மலடு அல்லது வெறுமையான" என்ற பொருளைக் கொண்டுள்ளது. வட்டி வராத பணம் போன்றது. 

இரண்டு வகையான விசுவாசத்தை நமக்கு யாக்கோபு விளக்கினார்: ஒன்று செத்த விசுவாசம் (புத்தி மட்டுமே), மற்றது பேய்களின் விசுவாசம் (புத்தி மற்றும் உணர்ச்சிகள்). இத்தகைய விசுவாசம் ஒரு பாவியை இரட்சிக்க முடியாது. 

ஆனால்  ஒரே ஒரு விசுவாசம் தான் பாவிக்கு உண்மையான இரட்சிப்பை அருளக்கூடியது. அதை விவரிப்பதன் மூலம் இந்த பகுதியை அவர் நிறைவு செய்கிறார்: அது ஆற்றல் தரும் விசுவாசம்.


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

சனி, 3 ஜூன், 2023

யாக்கோபு 2: 1-13

அத்தியாயம் ஐந்து:   

பணக்காரன் - ஏழை. 

(Rich Man - Poor Man)



ஒரு முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர் சோதனையை எதிர் கொள்வதில் பொறுமையாக இருக்கிறார் (யாக்.1). அத்துடன் சத்தியத்தை பின் பற்றி வாழ வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். இதுவே யாக்கோபு  இரண்டாம் அதிகாரத்தின் மையக் கருத்து. 

முதிர்ச்சியடையாதவர்கள் தங்கள் நம்பிக்கைகளைப் பற்றி வீணாகப் பேசி அலப்புகிறார்கள். நிறைகுடம் தளும்பாது என்பது போல ஒரு முதிர்ந்த நபர் தனது விசுவாசத்தை வாழ்ந்து காட்டுகிறார். 

ஆகவே நாம் நினைவில் நிறுத்த வேண்டியது: தேவ வார்த்தையைக் கேட்பதும், அந்த வார்த்தையைக் குறித்துப் பேசுவதும், ஒருபோதும் வசனத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்வதற்கு மாற்றாக அமைந்து விட முடியாது (யாக். 1:22-25). 

ஒவ்வொரு விசுவாசிக்கும், அவரது நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு விசுவாச அறிக்கை அல்லது அதைப் பற்றிய ஒரு தனிப்பட்ட புரிதல் இருக்கிறது. பெரும்பாலான தேவாலயங்களின் ஆராதனை முறைமைகளில் இது போன்ற விசுவாச அறிக்கைகள்  இடம் பெற்றுள்ளன. அந்த விசுவாச பிரமாணத்தைத்  திருச்சபை உறுப்பினர்கள் கூட்டாக அறிக்கையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெரும்பாலும், கர்த்தருடைய திருவிருந்தை அனுசரிக்கும் போது இத்தகைய "விசுவாச பிரமாணங்கள்" சொல்லப்படுகின்றன. 

தேவாலய ஆராதனை முறைமைகள் மற்றும்  விசுவாச அறிக்கைகள் நல்லவை மற்றும் பயனுள்ளவை தான், ஆனால் வெறும் கிளிப்பிள்ளை போல அவற்றைச் சொல்வதால் மட்டுமே தேவ வார்த்தையை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதாக நினைக்கக் கூடாது. 

பல கிறிஸ்தவர்கள், தேவாலயத்தில் விசுவாச உடன்படிக்கையை அறிக்கை செய்து விட்டு, அதன் பின்னர் அவர்கள் தங்களது அன்றாட அலுவலக பணிகளில் ஈடுபடும்போது, அந்த உடன்படிக்கைக்கு முற்றிலும் முரணான வழிகளில் செயல்படுவதை, ஒரு போதகராக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். 

அப்படியெனில்; 

  • நாம் தேவனுடைய வார்த்தையை வாழ்க்கையில் உண்மையாகக் கடைப்பிடிக்கிறோமா? 
  • அதை எப்படிக் கண்டறிவது?  

இதற்கு யாக்கோபு உதவுகிறார். ஒரு எளிய பரிசோதனை செய்வதன் வழியாக இதை நாம் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார். அந்த பரிசோதனையைச் செய்து பார்க்கும் படியாக நம்மை அழைக்கிறார். 

ஒரு தேவாலய ஆராதனை நடைபெறுகிறது. அப்போது இரண்டு விசுவாசிகள் வருகின்றனர். ஒருவர் பணக்காரர் மற்றவர் ஏழை. இப்போது  திருச்சபையினர், அவர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைப் பார்க்கும்படியாக யாக்கோபு கூறுகிறார். 

நாம் மனிதர்களை நடத்தும் விதத்திலிருந்து, இறைவனைக் குறித்த நமது உண்மையான விசுவாசம் எத்தகையது என வெளிப்படுகிறது! (The way we behave toward people indicates what we really believe about God).

மனித உறவுகள், தெய்வீக கூட்டுறவு; இந்த இரண்டையும் பிரிக்க முடியாது. துணியவும் கூடாது. (We cannot - and dare not - separate human relationships from divine fellowship). 

"தேவனிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத தேவனிடத்தில் எப்படி அன்பு கூருவான்?" (1 யோவான் 4:20). 

இந்த தியானப் பகுதியில், நாம் மற்றவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதின் வெளிச்சத்தில், கிறிஸ்தவத்தின் நான்கு அடிப்படை கோட்பாடுகளைக் குறித்து யாக்கோபு விளக்குகிறார்.

1. கிறிஸ்துவின் தெய்வீகம் - The Deity of Christ (2:1–4)

"அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, நம் மகிமை மிக்க கர்த்தராகிய இயேசுவில் நீங்கள் விசுவாசிகளாயிருக்கும்போது, பாரபட்சமாக இருக்காதீர்கள்." (யாக். 2:1, Easy to read  version). 

அன்றைய யூத மக்கள் அங்கீகாரத்திற்கும், மரியாதைக்கும் மிகுதியாக ஆசைப்பட்டனர். ஒருவரோடு ஒருவர் புகழ்ச்சிக்காகப் போட்டியிட்டனர். இந்தப் பிரச்சனையைப் பற்றி லூக்கா 14:7-14 இல் உள்ள பகுதியில் நம் ஆண்டவர், உவமைகளுடன் விளக்குகிறார். மத்தேயு 23 இலும், இத்தகைய புகழ்ச்சியை விரும்பும் மாயக்காரராகிய பரிசேயர்களை அவர் கடுமையாகக் கண்டனம் செய்வதை வாசிக்கலாம்.

இன்றைய திருச்சபையிலும் இத்தகைய பிரச்சனை இருக்கிறது. அரசியல், தொழில், சமூகம் மட்டுமின்றி, தேவாலயத்திலும் கூட அதிகார உச்சியில் ஏறி அமர வேண்டும் என விரும்புபவர்கள் நம் மத்தியில் உள்ளனர். ஏறக்குறைய ஒவ்வொரு தேவாலயத்திலும் ஒரு செல்வாக்கு மிக்க குழு உள்ளது. புதிதாக இணையும் கிறிஸ்தவர், அந்த குழுவிற்குள்ளே நுழைவது மிகக் கடினம். 

சில சபை உறுப்பினர்கள், தங்கள் முக்கியத்துவத்தைக் காண்பிக்க அவர்களது பதவி மற்றும் பொறுப்புகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிருபத்திலும் கூட அநேக விசுவாசிகள் போதக ஊழியத்தைச் செய்ய விரும்பி அதற்காக முயன்றனர் என யாக்கோபு குறிப்பிட்டு அதற்காக அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டியிருந்தது (யாக். 3:1). 

நாம் ஆண்டவரைப் பின்பற்ற அழைக்கப்பட்டிருக்கிறோம். நமது ஆண்டவர் வாழ்க்கையிலிருந்து சில நிகழ்வுகளைத் தியானிப்போம்

1.1. இயேசு முகதாட்சன்யம் அற்றவர் - Jesus did not respect persons

இயேசுவிடம் பாரபட்சம் கிடையாது. அவரது இந்த பண்பை அவருடைய எதிரிகள் கூட ஒப்புக்கொண்டனர்.

தங்கள் சீடரை ஏரோதியருடன் அனுப்பி, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் தேவனுடைய நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்." (மத். 22:16, பொது மொழிபெயர்ப்பு). 

நமது ஆண்டவர் ஒருவரது புறத் தோற்றத்தைப் பார்ப்பது இல்லை; அவரது இதயத்திலிருந்து புறப்படும் சிந்தனைகளைப் பார்க்கிறார். ஒருவரது செல்வம் அல்லது அவரது சமூக அந்தஸ்தால் அவர் ஈர்க்கப்படவில்லை. தனது தற்பெருமையைக் காண்பிப்பதற்காக, ஒரு பெரும் விருந்தைக் கொடுத்த பணக்கார பரிசேயனை விட, இரண்டு காசு கொடுத்த ஏழை விதவையே அவருடைய பார்வையில் பெரியவளாக இருந்தாள். 

அத்துடன், அவர் பாவிகளின் வாழ்வில் மறைந்திருக்கும் திறமையை, அவர்களது எதிர்காலத்தைக் கண்டார். வளைந்து நெளியும் பேதுருவில், ஒரு பாறையைக் கண்டார். வரி வசூலித்து கணக்கு எழுதுபவரான மத்தேயு, ஒரு நாள் உண்மையுள்ள சீடராக மாறி, நான்கு சுவிசேஷங்களில் ஒன்றை எழுதுவார் என்பதை அறிந்திருந்தார். சீகார் கிணற்றுக்கு அருகில், அந்தப் பாவியான பெண்ணுடன் இயேசு பேசுவதைக் கண்டு, அவரது சீடர்கள் வியப்படைந்தனர். ஆனால் இயேசுவோ, ஒரு பெரிய விளைச்சலை அறுவடை செய்வதற்கான கருவி, அவளிடம் மறைந்து இருப்பதைக் கண்டார். 

நாம் மக்களை, அவர்களின் கடந்த காலத்தை வைத்து மதிப்பிடுகிறோம், அவர்கள் எதிர்காலத்தில் எப்படி இருப்பார்கள் என்பதைப் பார்ப்பது இல்லை

தர்சு பட்டனத்தின் சவுல் மனம் மாறியபோது, ​​எருசலேம் தேவாலயம் அவரை ஏற்றுக்கொள்ளப் பயந்தது! சவுலின் மனமாற்றத்தில் நம்பிக்கை கொண்ட பர்னபாஸ் அவர்களது மன பய சுவர்களை இடிக்க வேண்டியதாயிற்று (அப். 9:26-28). 

நாம் ஒருவரது இதயத்தின் உள் மனப்பான்மை எவ்விதம் உள்ளது என்பதைக் காட்டிலும், அவரது வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டு, அவரை மதிப்பீடு செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. சில குறிப்பிட்ட நபர்களுடன் தேவாலயத்தில் அமர்ந்திருப்பது நமக்கு மகிழ்ச்சி தருவதில்லை, ஏனென்றால் அவர்கள் "நமக்குச் சமமானவர்கள் இல்லை". இயேசு பாவிகளின் நண்பராக இருந்தார், ஆனாலும் அவர் பாவங்களை ஏற்கவில்லை. பாவிகளுடன் பழகுவது சமரசம் செய்து கொள்வது அல்ல; ஆனால் கரிசனை. அதுவே ஆண்டவர் பாவிகளை நேசிக்கக் காரணமாக இருந்தது. அவர்கள் அவரை விசுவாசித்த போது, ​​இரட்சிப்பைப் பெற்றனர்.  

1.2. இயேசு இகழ்ந்து நிராகரிக்கப்பட்டார் -  Jesus was despised and rejected

ஏசாயா 53:1-3 இல் இந்த உண்மை தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்டது. சுய நீதி எனும் நோயால் பீடிக்கப்பட்ட தேசத்தில், அவர் ஒரு நிராகரிக்கப்பட்ட "ஏழை மனிதர்". 

நரிகள் மற்றும் பறவைகளுக்குக் கூட தங்கும் இடம் இருந்தது ஆனால், அவருக்கென ஒரு வீடு இல்லை. 

அவர் இகழ்வாக எண்ணப்பட்ட நாசரேத் எனும் நகரில் பிறந்து, வறுமையின் பிடியிலிருந்த வீட்டில் வளர்ந்தார். 

ஒருவேளை, அவர் பூமியில் ஊழியம் செய்து கொண்டிருக்கும் போது, நீங்களும் நானும் அவரைச் சந்தித்திருந்தால், நம்மைக் கவரும் வகையில் உடல் அமைப்பிலோ அல்லது பொருள் ரீதியாகவோ மதிப்புமிக்க ஒன்றையும், நாம் அவரிடம் பார்த்திருக்க மாட்டோம். 

இருப்பினும், அவர் தேவனின் மகிமை! பழைய ஏற்பாட்டில், தேவனது மகிமை முதலில் கூடாரத்திலும் (யாத். 40:34-38) பின்னர் தேவாலயத்திலும் (1 இராஜா. 8:10-11) தங்கியிருந்தது. 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்தபோது, ​​அந்த தேவனுடைய மகிமை அவரில் தங்கியிருந்தது (யோவான் 1:14). இன்று, அந்த தேவனுடைய மகிமை, ஒவ்வொரு விசுவாசிக்குள்ளாகவும் (1 கொரி. 6:19-20) திருச்சபையில் கூட்டாகவும் வெளிப்படுகிறது (எபே. 2:21-22). 

கிறிஸ்துவின் நாளிலிருந்த மத அறிஞர்கள், தங்களது மனித தராதரங்களின் படி அவரை நியாயந்தீர்த்தனர். அவரை நிராகரித்தனர். அவர் அற்பமாக எண்ணப்பட்ட நகரமான கலிலேயாவிலுள்ள நாசரேத்தில் இருந்து வந்தவர் என்றனர். அவர்கள் அங்கீகரித்த வேத பாடசாலைகளில் அவர் பயிலவில்லை. அவருக்கு அதிகாரத்திலிருந்த சமயத் தலைவர்களின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லை. அவரிடம் செல்வம் இல்லை. அவரைப் பின்பற்றியவர்கள் கல்வியறிவற்ற, சமூக மதிப்பற்ற  கும்பல். அதில் எளிய பொதுமக்களும் பாவிகளும் அடங்குவர். ஆனாலும் அவர் கர்த்தரின் மகிமையாக இருந்தார்! 

"வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பு அளிக்காதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்" (யோவான் 7:24 பொது மொழிபெயர்ப்பு) என்று இயேசு மதத் தலைவர்களை எச்சரித்ததில் ஆச்சரியமில்லை. 

ஆனாலும், வருத்தத்துடன் சொல்ல வேண்டியதாக உள்ளது, நாமும் கூட அதே தவற்றை அடிக்கடி செய்கிறோம். நமது தேவாலயங்களுக்குள் விசுவாசிகள் வரும்போது, ​​அவர்கள் இருதயத்தின் உள்ளாக இருப்பதைக் காட்டிலும், வெளிப்புறமாக இருப்பதையே பார்த்து, அவர்களை மதிப்பிட முனைகிறோம். 

ஆடை, தோலின் நிறம், அலங்காரம் மற்றும் பிற மேலோட்டமான விஷயங்கள் அவர்களின் வாழ்க்கையில் வெளிப்படும் ஆவியின் கனியை விட அதிக மதிப்பைக் கொண்டுள்ளன. நாம் பணக்காரர்களுக்குச் சேவை செய்கிறோம், ஏனென்றால் அவர்களிடமிருந்து ஏதாவது கிடைக்கும் என்று நம்புகிறோம். ஏழைகள் நம்மைச் சங்கடப்படுத்துவதால் அவர்களைத் தவிர்க்கிறோம். ஆனால் இயேசு இதைச் செய்யவில்லை. அவரால் அவ்விதமாக நடந்து கொள்வதை அங்கீகரிக்க முடியாது. 

நமது மனித உறவுகளில், கிறிஸ்துவின் இந்த தெய்வீகத் தன்மையை எவ்வாறு கடைப்பிடிப்பது? 

இது மிகவும் எளிமையானது: கிறிஸ்துவின் கண்களைக் கொண்டு  பாருங்கள். 

வருபவர் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், கிறிஸ்து அவரில் வாழ்வதால் நாம் அவரை ஏற்றுக்கொள்ளலாம். அவர் ஒரு கிறிஸ்தவராக இல்லாவிட்டால், கிறிஸ்து அவருக்காக மரித்ததால் நாம் அவரை நேசிக்கலாம். 

நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள உறவின் இணைப்பாகக் கிறிஸ்து இருக்கிறார். அது அன்பின் இணைப்பு. 

மற்றவர்களுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவிற்கு இயேசு கிறிஸ்துவே ஆதாரம். அவர் எப்படி ஒவ்வொரு உறவுகளுடன் பழகினாரோ அதுவே நமக்குச் சிறந்த வழிகாட்டுதல். அதைத் தவிர்த்து வேறு எந்த விதமான முறைமைகளும் உறவை மேம்படுத்தாது. 

கர்த்தர் தமது நாமத்திற்கு மகிமையைக் கொண்டுவர, எந்த ஒரு தகுதியுமற்ற நபரைக் கூட பயன்படுத்த முடியும். அவர் பேதுருவை, சகேயுவை, மாற்குவை பயன்படுத்தினார். நாம் நிராகரிக்கக்கூடிய அந்த ஏழையையும் அவரால் பயன்படுத்த முடியும். ஆகவே எவரையும் அற்பமாக எண்ணாதீர்.

2. தேவ கிருபை - The Grace of God (2:5–7)

இங்கு வலியுறுத்தப்படுவது கடவுளின் தெரிவு (God's Choosing). இது தேவனின் கிருபையோடு இணைந்தது. இரட்சிப்பு தகுதியின் அடிப்படையில் இருந்தால், அது தேவனின் அருளாக இருக்காது. கிருபையை, சம்பாதித்துப் பெற முடியாது. தகுதியற்றவர்களை அவர் தமது இறையாண்மையால் தேர்வு செய்து இரட்சிப்புக்கிறார் (எபே. 1:4-7; 2:8-10). 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய தேவ சித்தத்தின் அடிப்படையில் கர்த்தர் நம்மை முழுவதுமாக இரட்சிக்கிறார். நம்மிடம் உள்ள அல்லது நாம் வைத்திருக்கும் வேறு எதன் காரணமாகவும் அல்ல.

கர்த்தர் தேச வேறுபாடுகளை (National difference) புறக்கணிக்கிறார் (அப் 10:34). புற ஜாதியைச் சேர்ந்த கொர்னேலியுவின் வீட்டிற்கு பேதுரு சென்றார். அவர்களுக்கு சுவிஷேஷத்தைப் பிரசங்கித்தார். அவர்களுடன் கூட சாப்பிடுவதைப் பார்த்த யூத விசுவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். 

முதல் திருச்சபை மாமன்றத்தின் விவாதம், "ஒரு புறஜாதியைச் சேர்ந்தவர், கிறிஸ்தவராக மாற வேண்டுமெனில், முதலாவதாக அவர் யூதராக மாற வேண்டுமா?" (அப். 15). அதற்குபு பரிசுத்த ஆவியானவர் தந்த பதில், "தேவையில்லை!" 

தேவனின் பார்வையில், நியாயத்தீர்ப்பு (ரோமர். 2:6-16) அல்லது இரட்சிப்பு (ரோமர். 10:1-13) என்று வரும்போது, யூதருக்கும் புறஜாதிக்கும் எந்தவொரு வித்தியாசமும் கிடையாது.

கர்த்தர் சமூக வேறுபாடுகளையும் (social difference) புறக்கணிக்கிறார். எஜமானரும், அடிமைகளும் (எபே. 6:9) பணக்காரரும், ஏழைகளும் அவருக்கு ஒன்றே. சமமானவர்களே. 

கர்த்தரின் கிருபை பணக்காரனை ஏழையாக்குகிறது, ஏனென்றால், அவன் தனது செல்வத்தைச் சார்ந்திருக்காமல் வாழ்வதற்காக.

அதே கிருபை ஒரு ஏழையைச் செல்வந்தனாக மாற்றுகிறது ஏனென்றால், அவன் கிறிஸ்துவில் கிருபையின் ஐசுவரியத்தைச் சுதந்தரித்துக் கொள்கிறான். (யாக். 1:9-11ஐப் பார்க்கவும்.) 

“ஆண்டவர் ஏழையாக்குகிறார்; செல்வராக்குகின்றார்; தாழ்த்துகின்றார்; மேன்மைப்படுத்துகின்றார்; புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்; குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்; உயர் குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்!” (1 சாமு. 2:7-8).

மனிதக் கண்ணோட்டத்தில், இறைவன் பணக்காரர்களுக்குப் பதிலாக ஏழைகளைத் தேர்ந்தெடுக்கிறார். 

“எனவே, சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைப் பேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர் ஆனால், கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார்.” (1 கொரி. 1:26-27). 

இவ்வுலகின் ஏழைகள் விசுவாசத்தில் ஐசுவரிய வான்களாகிறார்கள்; ஆண்டவரின் பிள்ளைகளாக, அவர்கள் தேவ ராஜ்யத்தின் செல்வத்தைச் சுதந்தரித்துக் கொள்கின்றனர். 

இவ்வுலகில் ஏழையாகவும், மறுமையில் பணக்காரனாகவும், அல்லது இவ்வுலகில் பணக்காரனாகவும், மறுமையில் ஏழையாகவும் இருக்க முடியும் (1 தீமோ. 6:17-18). அல்லது, நீங்கள் இம்மையிலும் மறுமையிலும் ஏழையாக இருக்கலாம் அல்லது இம்மையிலும் மறுமையிலும் பணக்காரராக இருக்கலாம். இது அனைத்தும் கிறிஸ்துவுடன் இணைந்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அவர் உங்களுக்கு வழங்கிய பொருள் செல்வத்தை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. 

ஆண்டவர், “தம்மை நேசிப்பவர்களுக்கு” தேவ ராஜ்யத்தை வாக்களிக்கிறார் ​​(யாக். 2:5). இந்த உலகத்தையும் அதன் செல்வத்தையும் நேசிப்பவர்களுக்கு அல்ல.

யாக்கோபு ஒரு கடுமையாக எச்சரிக்கிறார்: "நீங்கள் ஏழையை இகழ்ந்து, இரட்சிக்கப்படாத பணக்காரர்களைப் போல நடந்துகொள்கிறீர்கள்'' (யாக். 2:6-7).

அந்த நாட்களில், பணக்காரர்கள் ஏழைகளைச் சுரண்டுவது, நீதிமன்ற தீர்ப்புகளில் செல்வாக்கு செலுத்துவது, தங்களைப் பணக்காரர்களாக ஆக்கிக் கொள்வது மிக எளிதாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, இன்றும் அதே பாவங்களைச் செய்கிறோம்; இத்தகைய பாவங்கள் கிறிஸ்துவின் பெயரையே தூஷிக்கின்றன. நம்முடைய ஆண்டவர் ஏழையாக இருந்தார். அவரும் அவருடைய நாளின் செல்வாக்கு மிக்க தலைவர்களால் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பலியானார். 

நாம் உண்மையிலேயே கர்த்தரின் கிருபையின் கோட்பாட்டை விசுவாசித்தால், தேவனது திட்டத்தின் அடிப்படையில் மக்களுடன் தொடர்பு கொள்ள அது நம்மைத் தூண்டுகிறது. மனித தகுதி அல்லது சமூக அந்தஸ்தின் அடிப்படையில் அல்ல. 

ஒரு "சிறந்த சபை" என்பது தேவ கிருபையை விடப் பெரிதாகக் கட்டப்பட்ட தேவாலயம் அல்ல. அவர் இறந்தபோது, ​​யூதர்களையும் புறஜாதிகளையும் பிரிக்கும் சுவரை இடித்தார் (எபே. 2:11-22). 

இயேசு தம் பிறப்பு மற்றும் வாழ்வின் வழியாக, பணக்காரர், ஏழை, இளைஞர்கள், பெரியவர்கள், படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் இடையே இருந்த சுவர்களை உடைத்தார். அந்தச் சுவர்களை நாம் மீண்டும் கட்டுவது தவறு; கர்த்தரின் கிருபையை நாம் நம்பினால் அவற்றை மீண்டும் உருவாக்கக் கூடாது.

3. தேவ வார்த்தை - The word of God (2:8-11)

சமீபத்திய ஆண்டுகளில், விசுவாசிகள் கர்த்தருடைய வார்த்தையின் உத்வேகம் மற்றும் அதிகாரத்தை எதிர்ப்பவர்கள் மீது போர்களை நடத்தி வருகின்றனர். நிச்சயமாக, கர்த்தருடைய வார்த்தையின் சத்தியத்தைப் பாதுகாப்பது ஒரு நல்ல விஷயம், ஆனால் நம்முடைய வாழ்க்கையும் ஊழியங்களுமே சிறந்த பாதுகாப்பு என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. டி.எல். மூடி, “ஒவ்வொரு வேதாகமமும் ஷூ லெதரில் கட்டப்பட வேண்டும்! (Every Bible should be bound in shoe leather)” என்று அடிக்கடி கூறினார். 

யாக்கோபு பழைய ஏற்பாட்டில் உள்ள தேவனது சட்டங்களில் ஒன்றான, "உன்னில் நீ அன்பு கூருவதுபோல் பிறனிலும் அன்பு கூருவாயாக"  என்பதைப் பயன்படுத்தி பட்சபாதம் செய்யக்கூடாது என எச்சரிக்கிறார் (லேவி. 19:18). 

நல்ல சமாரியன் உவமையில், நமது உதவி தேவைப்படுபவர்கள் நமக்குப் பிறன் என்று இயேசு சொன்னார் (லூக்கா 10:25-37). இவர் எந்த பிரிவைச் சார்ந்தவர் என்பது முக்கியம் அல்ல, ஆனால் சேவை செய்யும் வாய்ப்பு. 

நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி, “எனக்குப் பிறன் யார்?” என்பதல்ல ஆனால், "நான் யாருக்குப் பிறனாக இருக்க முடியும்?" 

"உன்னைப் போல் பிறனை நேசி" என்பது, ஏன் "ராஜரீக பிரமாணம்" என்று அழைக்கப்படுகிறது? 

முதலாவது, அது ராஜாவால் கொடுக்கப்பட்டது. பிதாவாகிய தேவன் அதை நியாயப்பிரமாணத்தில் கொடுத்தார். குமாரனாகிய தேவன் அதை தம் சீடர்களுக்கு மீண்டும் உறுதிப்படுத்தினார் (யோவான் 13:34). ஆவியானவர் நம் இதயங்களைத் தேவ அன்பால் நிரப்புகிறார், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் (ரோமர் 5:5). 

உண்மையான விசுவாசிகள் "ஒருவரையொருவர் நேசிக்கும்படி தேவனால் கற்பிக்கப்படுகிறார்கள்" (1 தெச. 4:9). 

இரண்டாவது காரணம்: "உன்னைப் போல் பிறனை நேசி" என்பது மற்ற எல்லா சட்டங்களையும் ஆளுகிறது. 

"அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது" (ரோமர் 13:10). 

ஒவ்வொரு குடிமகனும் தன் அண்டை வீட்டாரை உண்மையாக நேசித்தால், ஆயிரக்கணக்கான சிக்கலான சட்டங்கள் தேவைப்படாது.

ஆனால் இது "ராஜரீக பிரமாணமாக" இருப்பதற்கு முக்கியக் காரணம், அதைக் கடைப்பிடிப்பது உங்களை ராஜாவாக மாற்றும். வெறுப்பு ஒரு மனிதனை அடிமையாக்குகிறது, ஆனால் அன்பு நம்மை சுயநலத்திலிருந்து விடுவித்து ராஜாக்களைப் போல ஆட்சி செய்ய உதவுகிறது. கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவும், தேவன் நமக்குக் கட்டளையிட்டபடி மக்களை நடத்தவும் அன்பு நமக்கு உதவுகிறது. நாம் அவருடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறோம், பயத்தினால் அல்ல, அன்பினால். 

மனிதர்களை அளவுக்கு அதிகமாக நேசித்து மரியாதை காட்டுவது, கர்த்தருடைய எல்லா சட்டங்களையும் மீறுவதற்கு நேராக வழிநடத்தும். நீங்கள் ஒரு நபரின் சமூக அல்லது செல்வத்தை அதிகமாக மதிக்கிறீர்கள் என்றால், தேவ கட்டளைகளை  உடைப்பதற்கான வழிகளைக் காண்பீர்கள்.  

ஒருவர் மீதான அளவு கடந்த மரியாதை உருவ வழிபாட்டிற்குச் சமம். அவர்களைத் திருப்தி செய்ய உங்களைப் பொய் சொல்ல வைக்கும். பெற்றோரை மதிப்பு குறைவாக நடத்துவதற்கும் வழிவகுக்கும். மனிதர்களை மதித்து, தேவனுடைய வார்த்தையை நிராகரிப்பதன் அடிப்படையில் நாம் செயல்பட ஆரம்பித்தவுடன், நாம் சிக்கலை நோக்கிச் செல்கிறோம். 

மேலும் நாம் குற்றவாளியாகத் தேவ சட்டம் அனைத்தையும் மீற வேண்டியதில்லை. ஒரே ஒரு சட்டமியற்றுபவர் இருக்கிறார். அவரது சட்டங்கள் அனைத்தும் அவருடைய மனதிலிருந்தும் இதயத்திலிருந்தும் வந்தவை. நான் ஒரு சட்டத்தை மீறினால், மற்ற அனைத்து சட்டத்திற்கும் நான் கீழ்ப்படிய முடியாது;  ஏனெனில், நான் ஏற்கனவே தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்துவிட்டேன். 

கிறிஸ்தவ அன்பு என்பது, நான் ஒரு நபரை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும், அவருடன்  எல்லாவற்றிலும் உடன்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. அவருடைய நடவடிக்கைகள், பேச்சு அல்லது பழக்கவழக்கங்கள் எனக்குப் பிடிக்காமலிருந்தால் அவர் எனது நெருங்கிய நண்பராக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. 

கிறிஸ்தவ அன்பு என்பது கர்த்தர் என்னை நடத்திய விதத்தில், நான் மற்றவர்களை நடத்துவதாகும். இது எனது செந்த விருப்பத்தின் செயல். நான் வலிந்து உருவாக்க முயற்சிக்கும் உணர்ச்சி அல்ல. கர்த்தரை மகிமைப் படுத்துவதே எனது நோக்கம். இந்த வழிமுறையானது உள்ளே உள்ள ஆவியானவரின் சக்தியாகும் ("ஆவியின் கனி அன்பே"). நான் மற்றவரிடம் அன்பாகச் செயல்படும்போது, ​​நான் அவரிடம் மேலும் மேலும் ஈர்க்கப்பட்டதைக் காணலாம். அவரிடம் (கிறிஸ்து மூலம்) முன்பு எனக்கு மறைந்திருந்த நல்ல குணங்களைக் காணலாம். 

மேலும், கிறிஸ்தவ அன்பு ஒருவரோடு பழகிவிட்டு, எளிதாக அவரை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு விலகுவதில்லை. ஏழை சிறப்பான நிலையை அடைய உதவ வேண்டும்; கர்த்தர் கொடுத்த வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தப் பணக்காரரின் அன்பு உதவ வேண்டும். அன்பு எப்போதும் கட்டியெழுப்புகிறது (1 கொரி. 8:1); வெறுப்பு எப்போதும் உடைத்து விடும். 

நாம் எந்த அளவிற்கு வேதத்தைக் கடைப்பிடிக்கிறோமோ அந்த அளவிற்கே நமது விசுவாசமும் இருக்கும். “உன்னைப் போலவே பிறனை நேசி” என்கிற மிக அடிப்படையான தேவ கட்டளைக்கு நாம் கீழ்ப்படியத் தவறினால், வேத வார்த்தையின் மற்ற சிறிய உபதேசங்களுக்கும் செவி சாய்த்து எந்த நன்மையும் நாம் செய்ய மாட்டோம். சிறிய விஷயங்களில் கவனமாகவும், அடிப்படை உபதேசங்களில் கவனக்குறைவாகவும் இருப்பது பரிசேயர்களின் வெளிப்படையான தவறு (மத். 23:23). தாங்கள் பாதுகாப்பதாக நினைத்த தேவ சட்டத்தை அவர்களே உடைத்தார்கள்!

4. நியாயத் தீர்ப்பு - The Judgement (2:12-13)

ஒவ்வொரு மரபு சபையின் (orthodox churches) விசுவாச அறிக்கையும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மற்றும் இறுதி நியாயத் தீர்ப்பு பற்றிய அறிக்கையுடன் முடிவடைகிறது. அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இந்த விசுவாச அறிக்கையின் விவரங்களை ஒப்புக்கொள்வது இல்லை, ஆனால் அவற்றில் செல்லப்படும் வருங்கால நிகழ்வுகளை யாரும் மறுக்கவில்லை. இறுதித் தீர்ப்பின் முக்கியத்துவத்தையும் யாரும் மறுக்க மாட்டார்கள். 

ஆண்டவராகிய இயேசு (யோவான் 5:24), மற்றும் அப்போஸ்தலனாகிய பவுல் (ரோமர் 8:1) இவ்விருவரும், கிறிஸ்தவ விசுவாசிகள் தங்கள் பாவங்களுக்காக ஒருபோதும் நியாயந்தீர்க்கப்பட மாட்டார்கள், ஆனால் அவர்களுடைய செயல்கள் நியாயந்தீர்க்கப்பட்டு வெகுமதி அளிக்கப்படும் என்றனர் (ரோ. 14:10-13; 2 கொரி. 5:9–10). 

4.1. நம்முடைய வார்த்தைகள் நியாயம்  தீர்க்கப்படும் - Our words will be judged

யாக்கோபு 2:3-ல் இரண்டு விதமான விசுவாசிகளிடமும் பேசப்பட்ட வார்த்தைகளைக் கவனியுங்கள். நாம் பிறரிடம் என்ன சொல்கிறோம், அதை எப்படிப் பேசுகிறோம் என்பது கர்த்தருக்கு முன்பாக வரும். நாம் கவனக் குறைவாகப் பேசும் வார்த்தைகளும் நியாயந்தீர்க்கப்படும் (மத். 12:36). நிச்சயமாக, நாம் பேசும் வார்த்தைகள் இதயத்திலிருந்து வருகின்றன; எனவே கர்த்தர் வார்த்தைகளை நியாயந்தீர்க்கும்போது, ​​அவர் நமது இதயத்தை ஆராய்கிறார் (மத். 12:34-37). மலைப் பிரசங்கத்தில், நாம் பேசும் விதத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சில உபதேசங்களில் இயேசு வலியுறுத்தினார் (மத். 5:21–26, 33–37; 7:1–5, 21–23). 

4.2. நம்முடைய செயல்கள் நியாயம் தீர்க்கப்படும் - Our deeds will be judged

கூடுதல் நுண்ணறிவுக்கு கொலோசெயர் 3:22–25ஐப் படியுங்கள். நாம் செய்த பாவங்களை இனி நமக்கு எதிராகக் கர்த்தர் நினைவுகூரமாட்டார் என்பது உண்மைதான் (எரே. 31:34; எபி. 10:17), ஆனால் நாம் செய்த பாவங்கள் நம் குணத்தையும்,செயல்களையும் பாதிக்கிறது. நாம் கொஞ்சமாகப் பாவம் செய்து கொண்டே உண்மையாகச் சேவை செய்ய முடியாது. நம்முடைய பாவங்களை அவரிடம் ஒப்புக்கொள்ளும்போது கர்த்தர் நம்மை மன்னிப்பார், ஆனால் அவற்றின் விளைவுகளை அவரால் மாற்ற முடியாது. 

4.3. நமது மனப்பான்மை நியாயம் தீர்க்கப்படும் - Our attitudes will be judged (வ. 13).

யாக்கோபு இரண்டு அணுகுமுறைகளை வேறுபடுத்திக் காட்டினார்: ஒன்று மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுதல், மற்றது கருணை காட்ட மறுத்தல். 

நாம் மற்றவர்களிடம் கருணை காட்டினால், கர்த்தர் நம்மீது கருணை காட்ட முடியும். இருப்பினும், இந்த உண்மையை நாம் பொய்யாகத் திரிக்கக்கூடாது. இரக்கம் காட்டுவதன் மூலம் நாம் கருணை சம்பாதிக்கிறோம் என்று அர்த்தமல்ல, ஏனென்றால் கருணையைச் சம்பாதிக்க முடியாது. சம்பாதித்தால் அது கருணையல்ல! 

நாம் "பாவம் செய்பவரோடு மென்மையாக இருக்க வேண்டும்" என்றும் பிறரது பாவத்தை ஒரு போதும் நியாயந்தீர்க்கக்கூடாது என்றும் இது அர்த்தப் படுத்துவதில்லை. "நான் யாரையும் தண்டிக்கமாட்டேன், ஆகவே கர்த்தர் என்னைத் தண்டிக்க மாட்டார்" என்று ஒரு மனிதர் என்னிடம் கூறினார். அவர் எவ்வளவு தவறு செய்தார்! 

கருணை மற்றும் நீதி இரண்டும் தேவனிடமிருந்து வந்தவை, எனவே அவை போட்டியாளர்கள் அல்ல. மனந்திரும்புதலையும், விசுவாசத்தையும் எங்கே கண்டாலும், கர்த்தர் இரக்கம் காட்ட வல்லவர்; கலகத்தையும், அவநம்பிக்கையையும் கண்டால், அவர் நீதியை வழங்க வேண்டும். 

பாவியின் இதயம் தான் அவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சையைத் தீர்மானிக்கிறது. மத்தேயு 18:21-35ல் உள்ள நமது ஆண்டவரின் உவமை இந்த உண்மையை விளக்குகிறது. இந்த உவமை இரட்சிப்பை விளக்கவில்லை, ஆனால் சக மனிதர்களிடையே மன்னிப்பு மிக முக்கியம் என்பதைக் குறிக்கிறது. நாம் நம் சகோதரர்களை மன்னித்தால், கர்த்தரின் மன்னிப்பை நோக்கித் திறந்த இதயம் நமக்கு இருக்கும்.

நாம் "சுயாதீனப்பிரமாணத்தால்" நியாயந்தீர்க்கப்படுவோம். 

கர்த்தருடைய சட்டத்திற்கு யாக்கோபு ஏன் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்? 

ஒன்று, தேவனின் சட்டத்திற்கு நாம் கீழ்ப்படிந்தால், அது நம்மைப் பாவத்திலிருந்து விடுவித்து, சுதந்திரமாக நடக்க உதவுகிறது (சங். 119:45). மேலும், சட்டம் நம்மைச் சுதந்திரத்திற்குத் தயார்ப்படுத்துகிறது. 

வாழ்க்கையின் முடிவுகளையும், எதிர்பார்ப்புகளையும் கையாளும் அளவுக்கு ஒரு குழந்தைக்கு முதிர்ச்சி கிடையாது, ஆதலால், அவர்கள் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் பயிற்சி பெற வேண்டும். அந்த குழந்தைகள் உள்ளார்ந்த ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்வதற்காக, அவர்களுக்கு வெளிப்புற கட்டுப்பாடும், ஒழுக்கமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் ஒரு நாள் அந்த விதிகளிலிருந்து விடுவிக்கப்படுவர். 

சுதந்திரம் என்பது உரிமம் (License) அல்ல. உரிமம் (நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதைச் செய்வது) மிக மோசமான அடிமைத்தனம். சுதந்திரம் என்றால் நான் இயேசு கிறிஸ்துவில் நிலைத்திருந்து செய்யக் கூடிய எல்லாமும். உரிமம் என்பது அடைப்பு; விடுதலை என்பது நிறைவு. 

இறுதியாக, தேவ வார்த்தை "சுதந்திரத்தின் சட்டம் (law of liberty)" என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால் கர்த்தர் நம் இதயங்களைப் பார்க்கிறார். நாம் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தால், நாம், என்ன செய்திருப்போம் என்பதை அவர் அறிவார். பள்ளியில் விதிகள் இருப்பதால் மட்டுமே கீழ்ப்படியும் கிறிஸ்தவ மாணவர் உண்மையில் முதிர்ச்சியடையவில்லை. பள்ளியை விட்டு வெளியே வந்ததும் அவர் என்ன செய்வார்? 

கர்த்தருடைய வார்த்தை நம் இதயங்களை மாற்றி, தேவ சித்தத்தைச் செய்வதற்கான விருப்பத்தை நமக்குத் தருகிறது, இதனால் நாம் வெளிப்புறக் கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படியாமல் உள்ளான நிர்ப்பந்தத்திலிருந்து கீழ்ப்படிகிறோம். 

இந்த தியானப் பகுதியில் ஒரு தெளிவான செய்தி உள்ளது: 

நமது நம்பிக்கைகள் நமது நடத்தையைக் கட்டுப்படுத்த வேண்டும் (our beliefs should control our behaviors). 

இயேசு தேவனுடைய குமாரன் என்றும், கர்த்தர் கிருபையுள்ளவர் என்றும், அவருடைய வார்த்தை உண்மையானது என்றும், ஒரு நாள் அவர் நம்மை நியாயந்தீர்ப்பார் என்றும் நாம் உண்மையாக நம்பினால், நம்முடைய நடத்தை நம் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும். 

மரபுவழிக் கோட்பாடு இல்லாத திருச்சபை விசுவாசிகளைக் குறை சொல்வதற்கு முன்பாக, நாம் பாதுகாக்கும் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும். 

யோனாவுக்கு அற்புதமான இறையியல் அறிவு இருந்தது, ஆனால் அவர் மக்களை வெறுத்தார். தேவன் மீது கோபமாக இருந்தார் (யோனா 4). 

நம்முடைய விசுவாசத்தின் உண்மையின் சோதனைகளில் ஒன்று, நாம் மற்றவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதுதான். தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா?


Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.

படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.