அத்தியாயம் 6 தொடர்ச்சி:
ஆற்றல் உடைய விசுவாசம்.
Dynamic Faith.
ஆற்றலுடைய விசுவாசம்: உண்மையானது. வல்லமை உடையது. வாழ்வை மாற்றும்.
இந்த தியானப் பகுதியில், ஆற்றல் தரும் உண்மையான இரட்சிப்பின் விசுவாசத்தை யாக்கோபு விவரித்தார்.
ஆற்றலுடைய விசுவாசம், ''கர்த்தருடைய வார்த்தையை'' அடிப்படையாகக் கொண்டு அதன் மேல் கட்டப்பட்டது. நமது ஆவிக்குரிய மறுபிறப்பை ''கர்த்தருடைய வார்த்தையின்'' வழியாகப் பெறுகிறோம் (யாக். 1:18). நாம் ''கர்த்தருடைய வார்த்தையை'' விசுவாசிக்கிறோம், அது நம்மை இரட்சிக்கிறது (யாக். 1:21).
"எனவே, விசுவாசம் கேட்பதினாலே வரும், தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே விசுவாசம் வரும்" (ரோமர் 10:17).
ஆற்றலுடைய இரட்சிப்பின் விசுவாசத்திற்கு எடுத்துக்காட்டுகளாக ஆபிரகாமையும், ராகாபையும் யாக்கோபு பயன்படுத்தினார். ஏனெனில் இவர்கள் இருவரும் தேவ செய்தியைக் கேட்டனர். கர்த்தருடைய வார்த்தையைப் பெற்றுக் கொண்டனர்.
நமக்கு முன்பாக எதை விசுவாசித்துத் தொழுது கொள்கிறோமோ, அதைப் பொறுத்தே நமது வாழ்வும் சிறந்ததாக அமையும். ஒரு காட்டில் வசிக்கும் மனிதர் கல்லுக்கு முன்னால் வணங்குகிறார். அது தனக்கு உதவி செய்யும் என்று நம்புகிறார், ஆனால் அவர் எந்தவித வளர்ச்சியையும் அடையவில்லை. ஆக ஒரு நபர் எவ்வளவு நம்பிக்கையோடு ஜெபித்தாலும், அவர் சரியான இலக்கை நோக்கி ஜெபிக்காவிட்டால், அது எதையும் சாதிக்காது.
பல நேர்மையான மனிதர்கள், "நான் நம்புகிறேன்" எனச் சாட்சியமாகக் கூறுகின்றனர், ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால், "நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்கள்? எதை நம்புகிறீர்கள்?"
சில வகை நம்பிக்கை கோட்பாட்டை விசுவாசிப்பதினால் நாம் இரட்சிக்கப்படவில்லை; கிறிஸ்துவின் வார்த்தை வெளிப்படுத்திய சத்தியத்தை விசுவாசத்துடன் ஏற்றுக் கொண்டதால் இரட்சிக்கப்படுகிறோம்.
ஆற்றலுடைய விசுவாசம் கர்த்தருடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டது, அது மனிதனின் முழு ஆளுமையையும் உள்ளடக்கியது. செத்த விசுவாசம் புத்தியை (Intellectual) மட்டுமே தொடுகிறது; பேய்களின் விசுவாசம் புத்தி மற்றும் உணர்ச்சிகள் (Mind & Emotions) இரண்டையும் தொடுகிறது; ஆனால்
ஆற்றலுடைய விசுவாசத்தில் மனதின் சித்தமும் (Will) பங்கு பெறுகிறது. இந்த விசுவாசத்தில் மனிதனின் முழு ஆளுமையையும் இணைந்து செயல்படுகிறது.
புத்திக்குச் சத்தியம் புரியும்; இதயம் சத்தியத்தை விரும்புகிறது; மனதின் சித்தம் சத்தியத்தை ஏற்றுக் கொண்டு அதைச் செயல்படுத்துகிறது. எபிரெயர் 11ம் அதிகாரத்தில் பட்டியலிடப்பட்ட விசுவாசமுள்ள ஆண்களும், பெண்களும் அவ்விதமாகச் செயலில் ஈடுபட்டவர்கள்: கர்த்தர் அவர்களோடு பேசினார், அவர்கள் முழுமனதுடன் கீழ்ப்படிந்தார்கள்.
மீண்டும் நினைவு கூறவும்;
''விசுவாசம் என்பது ஆதாரம் இருப்பதால் நம்புவது மாத்திரம் அல்ல; விளைவு எப்படியாக இருந்தபோதிலும் அதற்குக் கீழ்ப்படிவது''!!
ஆற்றலுடைய விசுவாசம் என்பது அறிவுசார் சிந்தனை அல்லது உணர்ச்சிக் கொதிப்பு மட்டும் அல்ல; மனதின் சித்தம் ஏற்றுக் கொண்டு செயல்படத் தூண்டுகிறது. அது தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழும்படி வழி நடத்துகிறது.
இந்த கீழ்ப்படிதல் ஒரே ஒரு முறை மட்டும் நிகழும் தனித்த செயல் அல்ல; வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நிகழ்கிறது. செயல்படத் தூண்டுகிறது.
புதிய ஏற்பாட்டில் பல்வேறு வகையான கிரியைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. "நியாயப் பிரமாணத்தின் கிரியைகள்" (கலா. 2:16). இது ஒரு பாவி மோசே அறிவித்த நியாயப் பிரமாண சட்டத்திற்குக் கீழ்ப்படிவதன் மூலம் தேவனைப் பிரியப்படுத்த முயற்சி செய்வதை குறிக்கிறது. ஆனால் ஒரு பாவி நியாயப் பிரமாணத்தின் செயல்களால் இரட்சிக்கப்படுவது சாத்தியமற்றது. இது உண்மை.
"மாம்சத்தின் கிரியைகள்" (கலா. 5:19). இது இரட்சிக்கப்படாத மக்கள் இயற்கையான சுபாவத்தின் படி சிற்றின்ப விஷயங்களை விரும்பி செய்வதைக் குறிக்கிறது.
"துர் கிரியைகள்" (கொலோ. 1:21), மற்றும் "செத்த கிரியைகள்" (எபி. 9:14) ஆகிய குறிப்புகளும் வேதத்தில் உள்ளன. ஆனால் ஆற்றலுடைய விசுவாசம் எங்கு இருக்கிறதோ - அங்கு இரட்சிப்பின் விசுவாசமும் இருக்கும், அந்த இடத்தில் நீங்கள் எப்போதும் நல்ல செயல்கள் செய்யப்படுவதைக் காண்பீர்கள்.
வேதாகமத்தில் நன்கு அறியப்பட்ட இரண்டு நபர்களின் வாழ்க்கை மூலமாக, தனது ஆற்றல் தரும் விசுவாச கோட்பாட்டை யாக்கோபு விளக்கினார்: ஆபிரகாம், ராஹாப்.
இவர்கள் போல இரு துருவ எல்லையில் வாழும் நபர்களை உங்களால் வேதத்தில் கண்டுபிடிக்க முடியாது!
ஆபிரகாம் யூதர்; ராஹாப் புறஜாதி இனத்தைச் சேர்ந்தவர். ஆபிரகாம் தெய்வீக மனிதன்; ராஹாப் வேசி, பாவத்தில் வாழ்ந்த பெண். ஆபிரகாம் தேவனின் சினேகிதர்; ராஹாப் கர்த்தரின் எதிரிகள் கூட்டத்தைச் சேர்ந்தவர்.
இவர்கள் இருவருக்கும் பொதுவானது என்ன?
இருவரும் ஆற்றலுடைய இரட்சிப்பின் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்து செயல்பட்டவர்கள்!
ஆபிரகாமின் ஆற்றல் மிகு விசுவாசத்தின் உண்மைகளை அறிந்து கொள்ள நீங்கள் ஆதியாகமம் 15 மற்றும் 22ம் அதிகாரங்களை வாசிக்க வேண்டும். ஆபிரகாமைக் கானானுக்கு அழைத்துச் செல்லவும், இஸ்ரேல் என்ற பெரிய தேசத்தை உருவாக்கவும், கல்தேயர்களின் ஊர் என்னும் பட்டினத்திலிருந்து கர்த்தர் அவரை அழைத்தார். இஸ்ரேல் மூலமாக உலகிற்கு இரட்சகரைக் கொண்டு வருவது தேவ சித்தம்.
ஆபிரகாமின் இரட்சிப்பின் அனுபவம், ஆதியாகமம் 15ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரவில், தேவன் ஆபிரகாமுக்கு நட்சத்திரங்களைக் காண்பித்து "உன் சந்ததி [சந்ததிகள்] இவ்வண்ணமாய் இருக்கும்!" என்று வாக்குறுதி அளித்தார். ஆபிரகாம் அதற்கு எவ்வாறு பதிலளித்தார்? "அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் [கர்த்தர்] அவனுக்கு நீதியாக எண்ணினார் (Counted)" (ஆதி. 15:5-6).
''எண்ணினார் (Counted)'' என்ற வார்த்தை சட்டம் அல்லது நிதி பரிவர்த்தனை சார்ந்த சொல்லாகும்; அதன் பொருள் "ஒருவருடைய கணக்கில் வரவு வைப்பது". ஒரு பாவியாக, ஆபிரகாமின் ஆவிக்குரிய வங்கி புத்தகத்தில் எதுவுமில்லை. அவர் திவாலானவர்!, ஆனால் அவர் கர்த்தரை விசுவாசித்தார். ஆகையால், தேவன் அவரது கணக்கில் ''நீதிமான்'' என வரவாக வைத்தார். ''நீதிமான்'' என அழைக்கப்படுவதற்காக ஆபிரகாம் உழைக்கவில்லை; அதைக் கர்த்தரிடமிருந்து அவர் பரிசாகப் பெற்றார். அவரது விசுவாசத்தினால் நீதிமான் என்று அறிவிக்கப்பட்டார். அவர் விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது (ரோமர் 4-ஐ வாசியுங்கள்).
நியாயப்படுத்துதல் (Justification) என்பது திருமறையில் உள்ள ஒரு முக்கியமான கோட்பாடு. நியாயப்படுத்துதல் என்பது கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒரு பாவியை, நீதிமான் என்று கர்த்தர் அறிவிக்கும் செயல். இது கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய தேவ சித்தத்தின் அடிப்படையில் அருளப்படுகிறது. இது ஒரு வழிமுறை (Process) அல்ல; ஒரு செயல் (an act). இது ஒரு பாவி செய்த செயலின் விளைவு அல்ல; அவர் கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது கர்த்தர் செய்கிறார். இது ஒரே ஒரு முறை நடக்கும் நிகழ்வு. எப்போதும் மாறாதது.
நல்லது. ஒரு பாவிக்கும் தேவனுக்கும் இடையே, தனிப்பட்ட முறையில் இந்தப் பரிவர்த்தனை நிகழ்ந்தது. அவர் விசுவாசத்தால் நீதிமானாக்கப்பட்டார், ஆனால் இது உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர் நீதிமான் என உங்களால் எப்படிச் சொல்ல முடியும்?
இந்த முக்கியமான கேள்விக்கு ஆபிரகாமின் வாழ்க்கை பதிலளிக்கிறது: நியாயப்படுத்தப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வெளிப்படுகிறது. அவர்கள் தேவனின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிகிறார்கள். அவர்களது விசுவாசம் செயல்களால் வெளிப்படுகிறது.
ஆபிரகாமின் வாழ்க்கையில் நடந்த மற்றொரு நிகழ்வையும் பயன்படுத்தி யாக்கோபு இந்த கோட்பாட்டை விளக்கினார். அது ஆபிரகாம் மனமாற்றம் அடைந்து, பல ஆண்டுகள் கடந்த பின்னர் நடந்த நிகழ்வு. ஈசாக்கை பலிபீடத்தின் மீது காணிக்கையாக அர்ப்பணிக்கும் நிகழ்வு (ஆதி. 22). கர்த்தரின் இந்த கடினமான கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததால் ஆபிரகாம் இரட்சிக்கப்படவில்லை. அவர் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டவர் என்பதை அந்த கீழ்ப்படிதல் நிரூபித்தது.
"அவரது விசுவாசமும் செயல்களும் இணைந்து முயற்சி செய்து, செயல்களினாலே விசுவாசம் முழுமையாக நிறைவு பெற்றதென்று புலப்படுகிறது அல்லவா?" (யாக். 2:22 ).
விசுவாசத்திற்கும் செயல்களுக்கும் இடையே மிகச் சரியான தொடர்பு உள்ளது.
"ஆபிரகாம் விசுவாசம் மற்றும் கிரியைகளால் இரட்சிக்கப்படவில்லை, மாறாகக் கிரியை செய்யும் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டார்" என்று ஒருவர் வெளிப்படுத்தினார்.
ஆபிரகாம் எப்படி "கிரியைகளால் நீதிமானாக்கப்பட்டார்" (யாக். 2:21) அவர் ஏற்கனவே "விசுவாசத்தால் நீதிமானாக்கப்பட்டார்" அதை நிரூபிக்கும் வண்ணமாக அதைச் செயல்களில் நிறைவேற்றினார் (ரோம். 4 ஐப் பார்க்கவும்).
விசுவாசத்தினாலே, அவர் தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்பட்டார். அவருடைய நீதி தேவனால் அறிவிக்கப்பட்டது (declared); கிரியைகளினால் மனிதர்களுக்கு முன்பாக நீதிமானாக்கப்பட்டார். அவருடைய நீதி நிரூபிக்கப்பட்டது (demonstrated).
ஆபிரகாம் தனது மகனைப் பலிபீடத்தின் மீது வைத்ததை எந்த மனிதர்களும் பார்க்கவில்லை. அது உண்மைதான், ஆனால் ஆதியாகமம் 22 இல் உள்ள ஊக்கமூட்டும் பதிவு, அந்த நிகழ்வைப் பார்க்கவும், ஆபிரகாமின் செயல்களால் அவரது விசுவாசம் நிரூபிக்கப்படுவதைக் காணவும் உதவுகிறது.
நான் முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல், டி.எல். மூடி அடிக்கடி சொன்னது, "ஒவ்வொரு திருமறையும் காலணி தோலில் கட்டப்பட வேண்டும்." அவர் வெற்றிகரமான காலணி விற்பனையாளராக இருந்ததால் அப்படிச் சொல்லவில்லை; ஒரு அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவராக இருந்ததால் அவ்வாறு கூறினார். ஆற்றல் தரும் விசுவாசம் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது; அன்றாட வாழ்க்கையிலும், செய்யும் செயல்களிலும் தன்னை நிரூபிக்கிறது.
ஆனாலும், பவுல் தீத்துவுக்கு எழுதிய நிருபத்தில் சொல்லப்பட்டவை இன்றும் பொருந்துகிறது. நம் மத்தியில் அப்படிப்பட்ட தேவாலய உறுப்பினர்கள் இப்போதும் இருக்கிறார்கள்
"அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கை பண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்" (தீத்து 1:16).
பவுல் மேலும் எழுதினார்,
"இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக் குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவை நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவை." (தீத்து 3:8).
யாக்கோபு எடுத்துக் காட்டும் இரண்டாவது உதாரணம் ராஹாப். யோசுவா 2 மற்றும் 6ம் அதிகாரத்தில் அவரது பின்னணி காணப்படுகிறது.
இஸ்ரேலர், தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தைச் சுதந்தரிப்பதற்காக, எரிகோ நகரத்தைக் கைப்பற்றும் சூழல். யோசுவா வேவு காரர்களை ஊருக்குள் அனுப்பி தேசத்தின் நிலையைப் பார்த்து வரும்படி சொன்னார். அவர்கள் அங்கு ராஹாப் என்ற வேசியைச் சந்தித்தார்கள். ராஹாப் அவர்களைப் பாதுகாத்தார். கர்த்தருடைய வார்த்தை சொல்லியதை நம்பினார். கர்த்தர் செய்யப் போகிறதையும் விசுவாசித்தார். அவர்கள் நகரம் கைப்பற்றப்படும் சமயத்தில், அவரையும், அவரது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என வாக்குறுதியைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார். அவர்களும் உறுதியளித்துப் புறப்பட்டுச் சென்றனர். அப்படியே செய்தார்கள்.
இது ஒரு பரபரப்பான சம்பவம். ஆனால் ஆற்றல் தரும் விசுவாசத்தை விளக்குவதற்கான திருமறையின் சிறந்த உதாரணங்களில் இதுவும் ஒன்று (எபி. 11:31 ஐப் பார்க்கவும்).
ராஹாப் தேவ வார்த்தையைக் கேட்டார். தன் நகரம் அழிக்கப்படும் என்பதை அறிந்தார். இந்த உண்மை அவரையும் அவருடைய சக குடிமக்களையும் பாதித்தது. அதனால் அவர்களின் இதயம் அவர்களுக்குள் தளர்ந்து உருகியது (யோசு. 2:11). முதலாவது ராஹாப் தன் அறிவாலும், உணர்ச்சிகளாலும் அந்த சூழலுக்குப் பதிலளித்தார். அத்துடன் நின்றுவிடவில்லை. தன் மனதின் விருப்பத்துடனும் பதிலளித்தார். அவர் தொடர்ந்து செயல் பட்டார். யூத உளவாளிகளைப் பாதுகாக்க தன் உயிரையும் பணயம் வைக்கத் துணிந்தார். அந்த விடுவிக்கும் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு, பயப்படாமல் துணிந்து தன் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
யோசுவா 2-ல் “வேசி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேய வார்த்தைக்கு “ஒரு தங்கும் விடுதியை நடத்துபவர்” என்ற பரந்த அர்த்தமும் உள்ளது. ராஹாப் ஒரு தங்கும் விருந்தினர் விடுதியை நடத்தினார். ஆகவே ஒற்றர்கள் அங்குச் செல்வது சாதாரணமானது. ஆனால், யாக்கோபு 2:25 இல் குறிப்பிடும் "வேசி" என்ற கிரேக்க வார்த்தைக்கு நிச்சயமாக ஒழுக்கக்கேடான நபர் என்று பொருள். எபிரேயர் 11:31ல் உள்ள அர்த்தமும் இதுதான். ஆனாலும் அவள் இஸ்ரவேலரை மணந்து நமது ஆண்டவரின் மூதாதையரானதை மத்தேயு 1:5 குறிப்பிடுகிறது. எத்தனை பெரிய கிருபை!
நற்செய்தியை அறிவித்து ஆத்தும அறுவடை செய்ததாகத் திருமறை சுட்டுக் காட்டும் முதல் நபர் ராஹாப். யோவான் 4 இல் உள்ள "சமாரிய ஸ்தீரி" உடன் நீங்கள் அவளை ஒப்பிடாமல் இருக்க முடியாது.
ராஹாப் செத்த நம்பிக்கையை, அதாவது வெறும் அறிவுசார் அனுபவத்தை மட்டும் பெற்றிருக்க முடியும். அல்லது அவருக்குப் பேய்களின் நம்பிக்கையைப் போல அறிவுடன், உணர்வு சார் கிளர்ச்சியோடு முடிவடைந்திருக்கலாம், ஆனால் அவர் மனம் தெளிவடைந்து. தேவ சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தது. ஆற்றலுடைய விசுவாசத்தைப் பயன்படுத்தினார். அவருடைய அறிவு உண்மையை அறிந்தது. இதயம் சத்தியத்தால் தூண்டப்பட்டது. மன சித்தின்படி செயல்பட்டார். தன் விசுவாசத்தை தன் செயல்களால் நிரூபித்தார்.
ராஹாப்பிற்கு கிடைத்தது ஒரு சிறிய தகவல் மட்டுமே, ஆனால் அவருடைய விசுவாசம் உண்மையில் எவ்வளவு மகத்துவமானது. இன்று நாம் தேவனுடைய வார்த்தை மற்றும் அவருடைய குமாரன் மூலமாகத் தேவனின் முழு வெளிப்பாட்டையும் பெற்றுள்ளோம். நாம் கல்வாரியின் மறுபுறத்தில் வாழ்கிறோம். நமக்கு வார்த்தைகளைக் கற்பிக்கவும், உணர்த்தவும் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.
"எவருக்கு அதிகமாகக் கொடுக்கப்படுகிறதோ, அவனிடம் அதிகம் கேட்கப்படும்" (லூக்கா 12:48).
ராஹாபின் நம்பிக்கை இன்று பாவிகளின் அவநம்பிக்கைக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டாகும்.
முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் சத்தியத்தைப் பின்பற்றி வாழ்கிறார் என்பதை யாக்கோபு 2ம் அதிகாரம் வலியுறுத்துகிறது.
அவர் பழங்காலக் கோட்பாடுகளை வெறும் சடங்காக மட்டும் பிடித்துக் கொண்டிருக்கவில்லை; அதைத் தனது அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துகிறார். அவரது நம்பிக்கை அறிவுஜீவிகளின் செத்த நம்பிக்கையோ அல்லது வீழ்ந்த போன அசுத்த ஆவிகளின் பேய் நம்பிக்கையோ அல்ல. ஆபிரகாம் போன்ற ஆண்களும், ராஹாப் போன்ற பெண்களும் கொண்ட ஆற்றலுடைய நம்பிக்கை. அது ஒரு வாழ்க்கையை மாற்றி அமைத்து, கர்த்தருக்காகப் பணிபுரியச் செய்கிறது.
கிறிஸ்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் தனது சொந்த இருதயத்தையும், வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்த்து, உண்மையான இரட்சிப்பின் நம்பிக்கை, மற்றும் ஆற்றலுடைய விசுவாசம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்.
“நீங்கள் விசுவாசமுள்ளவர்களோ வென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறிகிறீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.” (2 கொரி. 13:5அ).
சாத்தான் பெரிய ஏமாற்றுக்காரன்; அவனது சாதனங்களில் ஒன்று போலி சாயல் (Imitation). போலி நம்பிக்கையை உண்மையான நம்பிக்கை என்று ஒருவரை நம்ப வைக்க முடிந்தால், அந்த நபரைச் சாத்தான் தனது அதிகாரத்தில் வைத்திருப்பான்.
நம் இதயங்களை ஆராய்ந்து பார்க்க உதவியாக, நம்மை நாமே கேட்டுக் கொள்ளக்கூடிய சில கேள்விகள்:
1. நான் ஒரு பாவி என்பதை உணர்ந்து, அதை இறைவனிடமும், எனது ஆன்மாவிலும் நேர்மையுடன் நான் ஒப்புக்கொண்ட காலம் என் வாழ்விலிருந்தது உண்டா?
2. வரவிருக்கும் கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, என் இதயம் என்னைத் தூண்டிய காலம் என் வாழ்விலிருந்தது உண்டா?நான் செய்த பாவங்களைக் குறித்து எப்போதாவது தீவிரமாகப் பயந்திருக்கிறேனா?
3. கிறிஸ்து என் பாவங்களுக்காக மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்தார் என்ற நற்செய்தியை நான் உண்மையிலேயே புரிந்து கொண்டேனா? எனது நற்செயல்கள் மூலமாக என்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பதைப் புரிந்து அதை ஒப்புக் கொண்டது உண்டா?
4. நான் என் பாவங்களுக்காக மனதார துக்கப்பட்டு, மனந்திரும்பி அவற்றிலிருந்து விலகி வாழ்கிறேனா? அல்லது பாவம் தரும் சுகத்தை விரும்பி அதை யாரும் பார்க்காத வண்ணம் ரகசியமாக அனுபவிக்க விரும்புகிறேனா?
5. என் இரட்சிப்புக்காக நான் கிறிஸ்தை, கிறிஸ்துவை மட்டுமே நம்பியிருக்கிறேனா? தேவ வார்த்தையின் மூலம் அவரோடு வாழும் உறவில் மகிழ்ந்து ஆவியில் களி கூர்ந்து அனுபவிக்கிறேனா?
6. ஆண்டவரை ஏற்றுக் கொண்ட பின்னர் என் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா? நான் தொடர்ந்து நல்ல செயல்கள் செய்கிறேனா, அல்லது எப்போதாவது ஒரு முறை மட்டும் நல்ல செயல்களைச் செய்யும் அளவு பலம் அற்றவனாக இருக்கிறேனா?
நான் ஆவிக்குரிய காரியங்களில் வளர முற்படுகிறேனா? நான் இயேசுவோடு இருக்கிறேன் என்று மற்றவர்கள் என்னைக் குறித்துச் சொல்ல முடியுமா?
7. கிறிஸ்துவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள எனக்கு விருப்பம் உள்ளதா? அல்லது அவரைப் பற்றி சொல்ல வெட்கப்படுகிறேனா?
8. நான் சபை ஐக்கியத்தை அனுபவிக்கிறேனா? ஆராதனை எனக்கு இன்பமாக உள்ளதா?
9. கர்த்தரின் வருகைக்கு நான் ஆயத்தமா? அல்லது அவர் எனக்காக வரும்போது வெட்கப்படுவேனா?
நிச்சயமாக, ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் தனிப்பட்ட முறையில் ஒரே விதமான அனுபவம் இருப்பதில்லை. பரிசுத்தப்படுத்துதலின் அளவுகளும் ஆளாளுக்கு தக்க மாறுபடுகிறது.
ஆனாலும், கொடுக்கப்பட்ட கேள்விப் பட்டியல், ஒரு நபருக்குக் கர்த்தருக்கு முன்பாக, அவரது உண்மையான நிலைப்பாட்டைத் தீர்மானிக்க பெரும்பாலும் உதவுகிறது.
“தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும், என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்" (சங்.139:23-24).
Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.
படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக