அத்தியாயம் 6:
பிழையான விசுவாசம்.
(False Faith)
கிறிஸ்தவ வாழ்க்கையில் முக்கியதொரு கோட்பாடு: விசுவாசம்.
விசுவாசம் குறித்த சில முக்கிய வேத வசனங்கள்:
- தேவனுடைய இரக்கத்தால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். அந்தக் கிருபையை நீங்கள் உங்களது விசுவாசத்தினால் பெற்றீர்கள் (எபே. 2:8-9).
- நாம் எதை விசுவாசிக்கிறோமோ அதன்படி வாழ்கிறோம். நாம் பார்க்கிற பிரகாரமாக வாழ்வதில்லை (2 கொரி. 5:6).
- விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது சாத்தியமில்லை (எபி. 11:6).
- விசுவாசம் இல்லாமல் செய்யும் எச்செயலும் பாவமானதே (ரோமர்.14:23).
விசுவாசம் என்பது "சான்றுகள் இல்லாத சூழலிலும், அதை நம்புவது மாத்திரமல்ல; அதன் பின் விளைவுகள் எப்படியாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு கீழ்ப்படிவது" என்று ஒருவர் கூறியிருக்கிறார் (Faith is not believing in spite of evidence, but obeying in spite of consequence).
நீங்கள் எபிரெயர்11ம் அதிகாரத்தை வாசித்தால், கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து செயல்பட்ட விசுவாச வீரர்கள் பற்றிய குறிப்புகளைக் காணலாம். அவர்கள் தங்களது விசுவாசத்திற்காக எந்த விலையையும் கொடுக்க ஆயத்தமாக இருந்தவர்கள். அப்படிப்பட்ட ஆண்களும், பெண்களும் தான் அந்த பட்டியலில் இடம் பெற்றனர்.
விசுவாசம் என்பது ஒருவித அபத்தமான உணர்வை அடைய முயல்வது அல்ல; விசுவாசம் என்பது கர்த்தருடைய வார்த்தை உண்மையானது என்கிற நம்பிக்கை; அந்த வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தால் அது ஆசீர்வாதத்தை அளிக்கும் என்ற நம்பிக்கை.
இந்தப் பகுதியில், விசுவாசத்திற்கும், செயல்களுக்கும் இடையிலான உறவைப் பற்றி யாக்கோபு விளக்கி உள்ளார். இது ஒரு முக்கியமான விவாதம். ஏனென்றால், விசுவாசத்தை தவறாகப் புரிந்து கொண்டால், நம்முடைய நித்திய இரட்சிப்பை மூழ்கடித்து விடுவோம்.
- எந்த விசுவாசம் ஒரு மனிதரை உண்மையில் இரட்சிக்கிறது?
- இரட்சிக்கப்படுவதற்கு நல்ல செயல்களைச் செய்வது அவசியமா?
- ஒருவர் உண்மையான இரட்சிப்பின் விசுவாசத்தை கடைப்பிடிக்கிறாரா, இல்லையா என்பதை எப்படிச் சொல்ல முடியும்?
இந்தக் கேள்விகளுக்கு யாக்கோபு பதில் தந்துள்ளார். இந்தப் பகுதியில் மூன்று வகையான விசவாசத்தை நுட்பமாக விவரித்து, அவற்றில் ஒன்று மட்டுமே உண்மையான இரட்சிப்பின் விசுவாசம் என்று நமக்கு எடுத்துக் கூறி உள்ளார்.
உயிரற்ற விசுவாசம் - Dead Faith (2:14–17).
ஆதி திருச்சபையில் கூட இரட்சிக்கப்படாதவர்கள் இருந்தனர். அவர்கள் தங்களை இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் எனக் கூறிக் கொண்டாலும், அது உண்மை இல்லை.
எங்கே உண்மை இருக்கிறதோ, அங்கே போலியானவையும் இருப்பதைக் கண்டுபிடிப்பீர்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் இதைக் குறித்து எச்சரித்தார்,
“என்னைத் தம் கர்த்தர் என்று கூறும் எல்லோரும் பரலோகத்திற்குள் நுழைய முடியாது. பரலோகத்தில் உள்ள என் பிதா விரும்பும் செயல்களைச் செய்கிறவர்கள் மட்டுமே பரலோக ராஜ்யத்தில் நுழைய முடியும்” (மத். 7:21).
செத்த விசுவாசம் கொண்டவர்களிடம் செயல்களுக்குப் பதிலாக வெறும் பேச்சு மாத்திரமே உள்ளது. அவர்களுக்கு வேதத்திலிருந்து சரியான வசனத்தை மேற்கோள் காட்டி ஜெபிக்கத் தெரியும். அருமையாகச் சாட்சி சொல்வார்கள், ஆனால் அவர்களின் பேச்சுக்கு ஏற்றதாக வாழ்க்கை இருக்காது. அவர்கள் தாங்கள் பேசுவது போதுமானது, அதுவே செயல்களைச் செய்தது போல என்று நினைக்கிறார்கள். அது தவறு.
இதற்கு யாக்கோபு ஒரு எளிய உதாரணம் சொன்னார். ஒரு ஏழை விசுவாசி, சரியான உடையின்றி, உணவுக்கும் வழியில்லாமல் ஒரு திருச்சபைக்குள் வந்தார். செத்த விசுவாசம் கொண்ட நபர் வந்தவரைக் கவனித்தார். அவரது தேவைகளைப் பார்த்தார், ஆனால் அந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர் எதையும் செய்யவில்லை. அவர் செய்ததெல்லாம் ஒரு சில தெய்வ பக்தி மிகுந்த ஆறுதல் வார்த்தைகள் சொன்னது மட்டுமே!
“சமாதானத்தோடு போங்கள், தேவன் உன்னோடு இருக்கிறார். நான் உனக்கு நலம் வேண்டுகிறேன்; இருக்க வசதியான இடமும், சூடாக உண்ண நல்ல உணவும் உனக்குக் கிட்டும் என்று விசுவாசிக்கிறேன்" (யாக். 2:16).
ஆனால் உள்ளே வந்தவர், வந்தது போலவே பசியோடும், அரை நிர்வாணத்தோடும் திரும்பிச் சென்றார்!
இரட்சிக்கப்பட்டாலும் சரி, இரட்சிக்கப்படாவிட்டாலும் சரி, ஒவ்வொரு மனிதனின் அடிப்படைத் தேவை உணவும், உடையும்.
உணவு, உடை எவ்வளவு இன்றியமையாதது என விவரிக்கும் சில வேத வசனங்களைக் கவனியுங்கள்.
"உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்." (1 தீமோ. 6:8).
“உண்பதற்கு என்ன கிடைக்கும்? அல்லது குடிப்பதற்கு என்ன கிடைக்கும்? அல்லது உடுப்பதற்கு என்ன கிடைக்கும்? என்று கவலைகொள்ளாதீர்கள். தேவனை அறியாத மக்களே இவற்றைப் பெற முயற்சிக்கிறார்கள். நீங்களோ கவலைப்படாதீர்கள், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதா இவைகள் உங்களுக்குத் தேவை என்பதை அறிவார்" ( மத். 6:31–32).
பழைய ஏற்பாட்டின் பக்தர் யாக்கோபு இந்த அடிப்படைத் தேவைகளுக்காகக் கர்த்தரிடம் வேண்டினார்:
“தேவன் என்னோடு இருந்து, எங்கு போனாலும் என்னைத் தேவன் காப்பாற்று வாரானால், உண்ண உணவும் அணிய ஆடையும் தேவன் கொடுப்பாரானால், என் தந்தையின் இடத்துக்குச் சமாதானத்தோடு திரும்புவேனேயானால், தேவன் இதையெல்லாம் செய்வாரானால், கர்த்தர் என் தேவனாயிருப்பார் (ஆதி. 28:20-21).
அடிப்படைத் தேவையோடு உள்ள மக்கள் யாராக இருந்தாலும், ஒரு விசுவாசியாக, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து உதவ வேண்டிய நமது கடமை.
"எவர் ஒருவருக்கும் நன்மை செய்யும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம், அதைச் செய்ய வேண்டும். குறிப்பாகத் தேவனிடம் விசுவாசம் கொண்டுள்ள குடும்பங்களுக்கு நன்மை செய்யவேண்டும்" (கலா. 6:10).
"மிகச் சிறியவர்களான இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்" (மத். 25:40).
தேவைப்படும் ஒருவருக்கு உதவுவது அன்பின் வெளிப்பாடாகும்.
அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது (கலா. 5:6).
ஒரு விசுவாசி தேவைப்பட்ட பொருள்கள் எல்லாவற்றையும் வாங்குகிற அளவுக்குப் போதுமான செல்வந்தனாக இருக்கிறான். தேவையான பொருள்கள் வாங்க இயலாதவனுமாகிய ஏழை கிறிஸ்தவ சகோதரனை அவன் பார்க்கிறான். இப்போது செல்வந்தனாக உள்ள சகோதரன், அந்த ஏழை சகோதரனுக்கு உதவவில்லை என்றால், அந்த விசுவாசத்தால் பயன் என்ன? என அப்போஸ்தலன் யோவான் கேட்கிறார்.
உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர், சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் தேவ அன்பு எப்படி நிலைத்திருக்கும்?
பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். '' (1 யோவான் 3:17-18).
நல்ல சமாரியன் உவமையில் சொல்லப்பட்ட ஆசாரியர் மற்றும் லேவியர் இருவரும் சமயப் பயிற்சி பெற்றவர்கள், ஆனால் அவர்கள் இருவருமே, சாலையின் ஓரத்தில் மரணத்தில் சிக்கித் தவித்த மனிதனுக்கு உதவுவதற்கு முன்வரவில்லை (லூக்கா 10:25-37).
அவர்கள் தங்கள் மத நம்பிக்கைக்காகப் போராடுவார்கள், ஆனால் அவர்கள் இருவரில் ஒருவர் கூட, தங்களது அன்பான செயல்கள் வழியாக அதை வெளிப்படுத்த முன்வரவில்லை.
“அப்படிப்பட்ட விசுவாசம் அவனை இரட்சிக்குமா?” என்று யாக்கோபு கேட்டார் (2:14).
எப்படிப்பட்ட விசுவாசம்? செயல்களில் வெளிப்படாத விசுவாசம்.
அப்படியென்றால் அந்த கேள்விக்கான பதில் அப்படிப்பட்ட விசுவாசம் இரட்சிக்காது என்பதே!
விசுவாசம் என்பது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவை நல்ல செயல்கள் செய்தல் வழியாக வெளிப்பட வேண்டும். அப்படி இல்லாமல், வெறும் விசுவாச அறிக்கையைச் சொல்வது மாத்திரம் பயனற்றது. அப்படிப்பட்ட நம்பிக்கை செத்த விசுவாசம்.
"அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால், அது தன்னில் தானே செத்ததாயிருக்கும்" (யாக். 2:17).
மிகச் சிறந்த இறையியலாளர் ஜான் கால்வின் எழுதினார்;
"விசுவாசம் மட்டுமே நீதியாக எண்ணப்படுகிறது, ஆனால் நீதியாக எண்ணப்படும் விசுவாசம் ஒருபோதும் தனியாக இருக்க முடியாது (It is faith alone that justifies, but faith that justifies can never be alone.)"
யாக்கோபு 2:17ல் உள்ள 'தன்னில் தானே' என்ற வார்த்தைக்கு "தனக்குள்ளாக" என்று பொருள்.
உண்மையான விசுவாசம் ஒருபோதும் தனித்து இருக்க முடியாது: அது எப்போதும் பரிசுத்த வாழ்வைக் கொண்டுவருகிறது. அந்த வாழ்க்கை நல்ல செயல்களை உருவாக்குகிறது.
செத்த விசுவாசம் கொண்டவருக்கு அறிவுசார் அனுபவம் மட்டுமே உள்ளது. அவருக்கு அறிவுப்பூர்வமாக இரட்சிப்பின் கோட்பாடுகள் தெரியும், ஆனால் அவர் ஒருபோதும் தன்னை கர்த்தருக்கு சமர்ப்பிக்கவில்லை, இரட்சிப்புக்காக கிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுக்கவுமில்லை. அவருக்கு வேத வார்த்தைகள் நன்றாகத் தெரியும். ஆனால் தனது வார்த்தைகளைச் செயல்கள் வழியாகக் காண்பிக்க அவர் விரும்புவதில்லை.
கிறிஸ்துவின் மீதான விசுவாசம் ஜீவனைக் கொண்டு வருகிறது (யோவான் 3:16).
எங்கே ஜீவன் இருக்கிறதோ அங்கே வளர்ச்சியும், பலனும் இருக்க வேண்டும்.
இந்த பகுதியில் யாக்கோபு மூன்று முறை நம்மை எச்சரித்தார், "கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்தது" (யாக்கோபு 2:17, 20, 26).
வெறும் அறிவுசார்ந்த விசுவாசத்தைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
220 வோல்ட் மின்சாரக் கம்பியைத் தொட்டவர் எப்படி அதே நிலையில் இருக்க முடியாதோ அது போல எந்த ஒரு மனிதனும் கிறிஸ்துவை விசுவாசித்த பிறகு அதே பழைய மனிதனாக இருக்க முடியாது.
“குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்” (1 யோவான் 5:12).
செத்த விசுவாசம் இரட்சிப்பதில்லை. செத்த விசுவாசம் போலி நம்பிக்கை. அது அதில் சிக்கிய நபரை மயக்கி, நித்திய வாழ்வின் தவறான நம்பிக்கையில் நடத்துகிறது.
பேய்களின் விசுவாசம் - Demonic Faith (2:18–19)
விசுவாசத்தை விளக்குவதற்கு ''பேய்களின் விசுவாசத்தை'' உதாரணமாகப் பயன்படுத்தி அதன் மூலம் இந்த நிருபத்தை வாசிப்பவர்களை யாக்கோபு அதிர்ச்சியடையச் செய்தார்.
சமீபத்திய ஆண்டுகளில், தேவாலயம் அசுத்த ஆவிகளின் இருப்பையும், அதன் கோரச் செயல்பாட்டையும் மீண்டும் ஏற்றுக் கொண்டுள்ளது.
நம்முடைய கர்த்தர் பூமியில் ஊழியம் செய்து கொண்டிருந்தபோது, பல முறை அவர் பிசாசுகளைத் துரத்தினார். தனது சீடர்களுக்குப் பிசாசுகளைத் துரத்தும் வல்லமையைக் கொடுத்தார்.
பவுல் தனது ஊழியத்தில் தீய ஆவிகளின் சக்திகளைப் பல முறை எதிர்கொண்டார். பொல்லாத ஆவிக்குரிய சக்திகளைத் தோற்கடிக்க, கர்த்தரின் சர்வாயுதவருக்கத்தை எடுத்துப் போராடுங்கள் எனத் திருச்சபை விசுவாசிகளுக்கு அறிவுறுத்தினார் (எபே. 6:10-20).
ஆனால், பேய்களுக்கும் விசுவாசம் இருப்பது சபை மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது! அவைகள் தேவனை விசுவாசிக்கின்றன?
முதலாவது, அவைகள் கர்த்தர் இருப்பதை நம்புகின்றன; அவைகள் நாத்திகர்கள் அல்ல (Not Atheists). அவைகள் அஞ்ஞானிகளும் அல்ல (Not Agnostics). அவைகள் கிறிஸ்துவின் தெய்வீகத்தை விசுவாசித்தன. கிறிஸ்து பூமியில் ஊழியம் செய்த போது , தீய சக்திகளைச் சந்தித்த போதெல்லாம், அவைகள் அவருடைய குமாரத்துவத்திற்கு சாட்சி கொடுத்தன (மாற்கு 3:11-12). தண்டனைக்குரிய இடம் இருப்பதாக அவைகள் விசுவாசித்தன (லூக்கா 8:31). அவைகள் இயேசு கிறிஸ்துவை நீதிபதியாகவும் ஏற்றுக் கொண்டு அவருடைய வார்த்தையின் வல்லமைக்கு அடிபணிந்தன (மாற்கு 5:1-13).
“இஸ்ரவேலே, கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்!” (உபா. 6:4) எனும் தேவ வசனம், பக்தியுள்ள யூதரின் தினசரி விசுவாசத்தை உறுதிப் படுத்துவதாக இருந்தது.
ஆனால் யாக்கோபு செல்கிறார்: “கர்த்தர் ஒருவரே என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். அப்படிச் செய்கிறது நல்லது தான்! ஆனால் பிசாசுகளும் கூட அப்படியே விசுவாசித்து நடுங்குகின்றன!!!" (யாக். 2:19 ).
செத்த நம்பிக்கை கொண்ட மனிதன் அவனது புத்தியில் மட்டுமே தொடப்பட்டான், ஆனால் பேய்கள் தங்கள் உணர்ச்சிகளிலும் தொடப்பட்டு, விசுவாசித்து நடுங்கின.
ஆக நம்பி நடுங்குவது இரட்சிப்பின் அனுபவம் அல்ல. ஒரு நபர் தனது மனதில் அறிவொளி பெறலாம். அவரது இதயத்தில் கூட உணர்ச்சிகளிலும் கிளர்ந்தெழுந்த அனுபவம் அடையலாம். இருந்த போதிலும் அவர் இரட்சிப்பை அடையாமல் போகக் கூடும்.
உண்மையான இரட்சிப்பின் விசுவாசம் மேலும் சிலவற்றை உள்ளடக்கியது. அதை அனைவரும் பார்க்க முடியும். அங்கீகரிக்கப் படக்கூடிய ஒன்று.
அதுவே மாற்றம் அடைந்த வாழ்க்கை (A changed life).
"ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே" (யாக்கோபு 2:18).
கிரியைகள் இல்லாமல் ஒருவர் எப்படி தன் விசுவாசத்தைக் காட்ட முடியும்?
இறந்த போன ஒரு பாவி நல்ல செயல்களைச் செய்ய முடியுமா? இயலாது!
நீங்கள் கிறிஸ்துவை விசுவாசிப்பவர் எனில்,
"நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் செய்திருக்கிறார்." (எபே. 2:10).
ஒரு கிறிஸ்தவராக இருப்பது என்பது, கிறிஸ்துவை விசுவாசிப்பதும், அவருக்காக வாழ்வதும் அதில் அடங்கும்; நீங்கள் புதிய இரட்சிப்பின் வாழ்க்கையைப் பெறுகிறீர்கள், பின்னர் கனி தரும் புது வாழ்க்கையை வெளிப்படுத்துகிறீர்கள். மலடான விசுவாசம் இரட்சிக்காது. யாக்கோபு 2:20-ல் "செத்த" என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தையானது "மலடு அல்லது வெறுமையான" என்ற பொருளைக் கொண்டுள்ளது. வட்டி வராத பணம் போன்றது.
இரண்டு வகையான விசுவாசத்தை நமக்கு யாக்கோபு விளக்கினார்: ஒன்று செத்த விசுவாசம் (புத்தி மட்டுமே), மற்றது பேய்களின் விசுவாசம் (புத்தி மற்றும் உணர்ச்சிகள்). இத்தகைய விசுவாசம் ஒரு பாவியை இரட்சிக்க முடியாது.
ஆனால் ஒரே ஒரு விசுவாசம் தான் பாவிக்கு உண்மையான இரட்சிப்பை அருளக்கூடியது. அதை விவரிப்பதன் மூலம் இந்த பகுதியை அவர் நிறைவு செய்கிறார்: அது ஆற்றல் தரும் விசுவாசம்.
Translation from: "The Wiersbe Bible Commentary" by Warren W. Wiersbe.
படங்கள் இணையத்திலிருந்து நன்றியுடன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக