விடுதலை தருபவர்.
முதல் முறையாக ''சங்கீதம்'' என்கிற வார்த்தையை, இந்தப் பாடல் தலைப்பின் அடிக் குறிப்பில் காண முடிகிறது. இதற்கான எபிரேய வார்த்தை மிஸ்மோர் (Mizmor). அதன் பொருள் "தந்தியை மீட்டு'' (to pluck the Strings).
இது தாவீதால் எழுதப்பட்ட முதல் ஜெப சங்கீதம். சங்கீதம்-1 முதல் 41வது சங்கீதம் வரை பெரும்பாலும் தாவீதால் எழுதப்பட்டவை (சங். 1, 10 மற்றும் 33 ஐத் தவிர). இரண்டாம் சங்கீதம் தாவீதால் எழுதப்பட்டது என பேதுரு குறிப்பிடுகிறார் (அப். 4:25).
இந்த சங்கீதம் "தனிப்பட்ட புலம்பல் (Personal Lament)" எனும் பிரிவாக வகைப் படுத்தப்பட்டுள்ளது. பிற புலம்பல் சங்கீதங்கள் (சங். 3—7, 13, 17, 22, 25—28, 35, 38—40, 42—43, 51, 54—57, 59, 61, 63—64, 69-71, 86, 88, 102, 109, 120, 130, 140-143).
தனது குமாரன் அப்சலோம் அரியணையைக் கைப்பற்றிய போது, தாவீது எருசலேமிலிருந்து தப்பி ஓடிய பின்னணியில் இந்த சங்கீதம் எழுதப்பட்டது. ராஜாவும் அவனுடைய பணியாட்களும் யோர்தான் நதியைக் கடந்து மக்னாயீமில் முகாமிட்டிருந்தார்கள் (2 சாமு. 15-18/17:24). அந்த சமயத்தில் அவர் இந்த ஜெப பாடலை ஏறெடுத்தார்.
இது காலையில் பாடப்பட்ட ஜெப சங்கீதம் (வ. 5). இதே நிகழ்வுகளின் போது மாலையில் ஏறெடுக்கப்பட்டது தான் சங்கீதம்-4 (4:8). சங்கீதம்-5 (5:3, 8-10) மற்றும் பிற சங்கீதங்கள்: 42, 43, 61, 62, 63,143 ஆகியவையும் இதே கால கட்டத்தில் எழுதப்பட்டிருக்கலாம்.
தாவீது தனது தவறுகளை ஒப்புக்கொள்கிறார் (வ. 1–2):
பேதுரு கடலில் மூழ்கும் போது ''ஆண்டவரே' எனக் கூப்பிட்டதைப் போல (மத். 14:30) இந்த ஜெப சங்கீதமும் சட்டென "கர்த்தாவே" எனும் தாவீதின் கதறலுடன் தொடங்குகிறது. பாரம்பரிய வழிபாட்டு முறைகள் படி, ஆண்டவரது பல்வேறு நாமங்களைக் கூறித், துதித்து, போற்றிப் பாடி ஜெபிக்கும் சூழல் தற்போது தாவீதுக்கு இல்லை. அவரது சொந்த வாழ்க்கையும், ராஜ்யத்தின் எதிர்காலமும் கடும் நெருக்கடியில் கேள்விக் குறியாக இருந்தது. ஆனாலும் இது போன்ற ஆபத்துக் காலத்தில், கர்த்தர் தன்னை கை தூக்கிக் காப்பாற்றுவார் என்பதை தாவீது நன்கு அறிந்திருந்தார் (46:1).
அப்சலோம் ராஜ்யத்தைக் கைப்பற்றுவதற்கும், தனது ஆதரவைக் கட்டியெழுப்பவும் நீண்ட காலம் திட்டமிட்டு முயன்றார். அவர் மக்களிடம் இதமாகவும், மென்மையாகவும் பேசினார். அவர்களைப் பிரியப்படுத்தவும், இதயங்களைக் கவரவும் பொய்யாக நடித்தார் (2 சாமு. 15:1-6). அவரை ஆதரிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது (2 சாமு. 15:12-13; 16:7-8; 17:11; 18:7).
“உண்மை தனது காலணிகளை அணிவதற்கு முன்பாக, பொய் பாதி உலகைச் சுற்றி வந்து விடும்” என ஜேம்ஸ் கலாகன் (James Callaghan) சொல்கிறார். மனித மனதில் ஏதோ ஒன்று மறைந்து இருக்கிறது. அது பொய்களை விரும்பி உண்பதில் (கேட்பதில்) அதிக மகிழ்ச்சி அடைகிறது.
தாவீதின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது. அவரது சத்துருக்கள் அதிகரித்தது மட்டுமல்ல, "தாவீது ஆண்டவரால் கை விடப்பட்டார். அவன் எப்போது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்?" என அவருக்கு விரோதமாகப் பேசினர் (சங். 31:13; 38:19; 41:4-9; 55:18; 56:2; 69:4; 71:10-11).
எபிரேய மொழியில் உதவி எனக் குறிப்பிடுவதற்குப் பயன் படுத்தப்படும் வார்த்தை யெஷூவா (Yeshua). இந்த வார்த்தை வசனம் 7இல் "இரட்சியும்-Save" என்றும், வசனம் 8 இல் "இரட்சிப்பு-Salvation" என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதே பொருளில் தான் "இயேசு" மற்றும் "யோசுவா" என்ற பெயர்கள் சூட்டப்பட்டன (மத். 1:21). இந்தப் பெயர் 136 முறை சங்கீதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய அவமானமும், இழிவு நிறைந்த சூழலைக் கடவுள் ஏன் தாவீதின் வாழ்வில் அனுமதித்தார்? ஏனெனில் இந்த தண்டனை அவர் செய்த விபச்சாரம் மற்றும் கொலை பாவங்களின் காரணமாக அளிக்கப்பட்டது (2 சாமு. 12:1-12). தாவீது தனது பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புக் கொண்டபோது கடவுள் கிருபையாக அவரை மன்னித்தார் (2 சாமு. 12:13-14; சங். 32; 51). ஆனாலும் கர்த்தருடைய நீதி செம்மையானது. தாவீது தனது பாவங்களின் பின் விளைவுகளை அறுவடை செய்யத் தான் வேண்டும். தாவீது மிகுந்த குடும்ப வேதனைகளை அனுபவித்தார். பத்சேபா பெற்றெடுத்த பிள்ளை மரித்தது. மகள் தாமார் கற்பழிக்கப்பட்டாள். மகன்கள் அம்னோன், அப்சலோம் மற்றும் அதோனியா ஆகியோர் படுகொலை ஆனார்கள். தாங்க முடியாத வலி, சொல்ல இயலாத துயரம் (2 சாமு. 12-14).
"சேலா" எனும் சொல் முதல் முறையாக இந்த பகுதியில் அறிமுகமாகிறது (வ. 2, 4, 8). "சேலா" எனும் சொல் சங்கீத புத்தகங்களில் 71 முறையும், ஆபகூக் தீர்க்க தரிசன புத்தகத்தில் மூன்றாம் அதிகாரத்தில் வரும் பாடலில் (3: 3, 9, 13) மூன்று முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"கைகளை உயர்த்துவது (To Lift up)" அல்லது "அமைதியாக இருப்பது (To be Silent)" எனப் பொருள்படும் வார்த்தைகளிலிருந்து இது வந்ததாகக் கருதப்படுகிறது. எனினும் இதை இஸ்ரேலிய அறிஞர்கள் முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை.
ஒரு வேளை "கைகளை உயர்த்துவது'' எனும் குறிப்பாக இருந்தால், அது உரத்த குரலில் துதிப்பது அல்லது எக்காளங்களை உயர்த்தி இசைக் கருவிகளை ஊதுவதைக் குறிக்கக் கூடும். இது இறைவனை நோக்கி கைகளை உயர்த்தி ஜெபிப்பதற்கான சமிக்ஞையாக இருக்கலாம்.
"அமைதியாக இருப்பது'' என இருந்தால் அது ஒரு கணம் அமைதியாக இடை நிறுத்தம் (Pause) செய்தல் அல்லது தியானிப்பதைக் குறிக்கலாம்.
ஒரு பாடலின் சில குறிப்பிட்ட வரிகளைப் பாடும் போது அந்த வரிகளின் பொருளை ஆழமாக உணர்ந்து, அதன் தாக்கத்தில் துதிப்பது அல்லது அமைதி காப்பது எனும் குறிப்பை உணர்த்த "சேலா" பயன்படுத்தப்பட்டது எனப் புரிந்து கொள்ளலாம்.
தாவீது இறைவன் மீதுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறார் (வ. 3-4):
தாவீது எளிதில் வீழ்ந்து போகிறவர் அல்ல. சுற்றியிருந்த அச்சுறுத்தும் சூழ்நிலையிலும், பிரச்சனைகளை உதறித் தள்ளாமல், கலங்காமல் அவர் தனது கண்களை உயர்த்தி கர்த்தரை விசுவாசத்தோடு பார்த்தார்.
அவர் ஆபத்தில் இருப்பதை அறிந்திருந்தார். ஆனாலும் கர்த்தரே எப்போதும் அவருடைய கேடயமாக இருந்தார் (ஆதி. 15:1). இஸ்ரேலின் ராஜா "கேடகம்" என்று குறிப்பிடப்பட்டார் (சங். 84:9; 89:18). ஏனெனில் அவர் தேசத்தைப் பாதுகாத்தார். ஆனால் தாவீதோ கர்த்தரையே தன் கேடயமாகச் சார்ந்திருந்தார் (சங். 7:10; 18:2; 47:9; 59:11; 84:11; உபா. 33:29).
தாவீது தனது சொந்த பாவங்கள் மற்றும் மகனின் துரோகத்தின் காரணமாக அவமானத்தில் குன்றி இருந்தார். அப்சலோம் தன் தந்தையின் "மகிமையை" அவமானமாக மாற்றினான் (4:2). தற்போது கைவிடப்பட்ட சூழல். ஆனாலும் கர்த்தரே தாவீதின் மகிமைக்கு ஆதாரம். ஒரு நாள் அவர் அந்த மகிமையில் திரும்ப நிலை நிறுத்தப்படுவார்.
தேவன் தன் தலையை உயர்த்தி தன்னை மீண்டும் சிம்மாசனத்தில் திரும்பவுமாக அமர்த்துவார் என்பதை தாவீது அறிந்திருந்தார் (சங். 27:6; 2 சாமு. 15:30). அவருக்குத் தேவன் கொடுத்த வாக்குறுதியில், அருளப்பட்ட உடன்படிக்கையின் மீது விசுவாசம் இருந்தது (2 சாமு. 7). அத்துடன் கர்த்தர் தன்னை ஒரு போதும் கைவிடமாட்டார் என்பதை அவர் அறிந்திருந்தார்.
புனித சீயோன் மலை மீது இன்னும் ஆலயம் கட்டப்படவில்லை. ஆனால் அங்கே உடன்படிக்கை பெட்டி இருந்தது (2 சாமு. 15:25). அது கடவுளின் சிம்மாசனம் (80:1). தாவீது சிம்மாசனத்திலிருந்து தள்ளி வீழ்த்தப்பட்டு இருக்கலாம். ஆனாலும், இப்போதும் கர்த்தர் தாமே சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அவருடைய கட்டுப்பாட்டில் தான் எருசலேம் இருக்கிறது. மேலும் அப்சலோம் கர்த்தரால் அபிஷேகம் செய்யப்பட்ட ராஜாவைத் துணிகரமாகத் தாக்கிவிட்டார் (2:2). இது பாவச் செயல்.
கர்த்தர் கடந்த காலத்திலும் தன்னை கைவிட்டதில்லை, இப்போதும் கைவிடமாட்டார் என்பதை அறிந்த தாவீது, ஜெபத்தில் கர்த்தரிடம் அழுது விண்ணப்பித்தார். "இந்த ஏழை கூக்குரலிட்டான், கர்த்தர் அவனுக்குச் செவிசாய்த்தார், அவனுடைய எல்லா கஷ்டங்களிலிருந்தும் நீங்கலாக்கி அவனை இரட்சித்தார்" (சங். 34: 6).
தாவீது வெற்றியை எதிர்பார்க்கிறார் (வ. 5–8):
மறுநாள் காலையில் தாவீது கண் விழித்தார். அப்போது அவருக்கு எழுந்த முதல் எண்ணம் கர்த்தர் தன்னோடு இருக்கிறார். அவர் உடன் இருப்பதால் தான் தானும் தனது பணியாளர்களும் இரவில் பாதுகாக்கப்பட்டோம் என்பதை அறிந்திருந்தார்.
தாவீது கலக்கத்தின் மத்தியிலும் நன்கு உறங்கினார். இது இயேசு புயலின் மத்தியில் உறங்கியதையும் (மாற்கு 4:39), பேதுரு சிறையில் தூங்குவதையும் (அப். 12) நமக்கு நினைவூட்டுகிறது. அவரை நம்பி, அவருடைய சித்தத்தைச் செய்ய நாடினால், நாம் உறங்கும்போதும் கடவுள் நமக்காகச் செயல்படுகிறார் (121:3-4; 127:2).
தமக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் போர் அணிவகுத்து நின்றாலும், தான் பயப்படமாட்டேன் என்று தாவீது உறுதியளித்தார். ஏனெனில் கர்த்தர் அவருக்கு வெற்றியைத் தருவார் (உபா. 32:30).
ஒரு நாளின் காலை நேரம் தாவீதிற்கு மிக முக்கியமான பொழுது. நமக்கும் அப்படியே இருக்க வேண்டும். அவர் ஒவ்வோர் நாள் காலையிலும் இறைவனைச் சந்தித்து ஜெபித்தார். ஜெபிப்பதற்கும் (5:3), பாடுவதற்கும் (57:7–8; 59:16), கடவுளின் கருணையால் திருப்தி அடைவதற்கும் (90:14) அவருக்கு நேரம் இருந்தது.
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்தார் (ஆதி. 19:27; 21:14; 22:3). மோசே (யாத். 24:4; 34:4), யோசுவா (யோசு. 3:1; 6:12; 7:16; 8:10), சாமுவேல் (1 சாமு. 15:12), யோபு (யோபு 1:5), மற்றும் நம்முடைய ஆண்டவரும் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு, தேவ சமூகத்தில் தரித்திருந்தவர்கள் (மாற்கு 1:35).
“அவருடைய கோபம் ஒரு நிமிஷம் மட்டுமே, அவருடைய தயவோ நீடிய வாழ்வு. சாயங்காலத்தில் அழுகை தங்கலாம், ஆனால் காலையில் மகிழ்ச்சி வரும்” (30:5).
தேவன் தாவீதை இளைப்பாறச் செய்தது மட்டுமல்லாமல், அவரைக் காப்பாற்றினார். வசனம் 7ல் உள்ள "கர்த்தாவே எழுந்தருளும்" எனும் தாவீதின் ஜெபம் இஸ்ரேல் வனாந்தரத்திலிருந்த வருடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. வழி நடத்தும் மகிமையின் மேகம் நகரத் தொடங்கியதும், இஸ்ரவேலரின் முகாம் புறப்பட்டது. அப்போது "கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறிப்போகட்டும்; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போகட்டும்” என மோசே பாடினார் (எண். 10:35).
தாவீது உடன்படிக்கைப் பெட்டியை மீண்டும் எருசலேமுக்கு திரும்ப அனுப்பினார் (2 சாமு. 15:24-29). அவர்களோடு உடன்படிக்கைப் பெட்டி இருப்பதால் மட்டுமே கர்த்தரின் பிரசன்னமும் உடன் இருக்கும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்பது தாவீதுக்கு நன்கு தெரியும் (1 சாமு. 4).
இப்போது அவரால் ஆலயத்திற்கும் செல்ல முடியாது. ஆசாரியர்களின் ஊழியத்தில் பங்கு பெற இயலாது. ஆனாலும் அன்பும் கீழ்ப்படிதலும் உள்ள இதயத்தையே கர்த்தர் விரும்புகிறார் என்பதை அறியும் அளவுக்கு அவர் ஆவிக்குரியவராக இருந்தார். அவரோடு உடன்படிக்கைப் பெட்டி இல்லை, ஆனால் உடன்படிக்கைப் பெட்டியின் தேவன் இருந்தார்! அவரால் மிருக பலிகளையோ அல்லது தூபத்தையோ செலுத்த முடியவில்லை. ஆனால் கர்த்தரைத் துதிப்பதற்கு தமது கையை உயர்த்த முடியும் (141:2). தேவமகிமை அவருடன் இருந்தது (வச. 3). கர்த்தரின் ஆசீர்வாதமும் இருந்தது (வச. 8). சத்துருக்கள் பெருகினாலும் கவலையில்லை(வச. 1)! கர்த்தரும் எழும்பி வெற்றியைத் தருவார்!
சில மொழிபெயர்ப்புகள்(KJV, AB, NASB) 7ஆம் வசனத்தில் உள்ள வினைச் சொற்களைக் கடந்த காலத்தில் குறிப்பிடப் படுகின்றன (நீர் என் பகைஞர் எல்லோரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப் போட்டீர்). இது கடந்தகாலத்தில் கர்த்தர் அவருக்குக் கொடுத்த பல வெற்றிகளை அவர் திரும்பிப் பார்க்கிறார் என்பதைக் குறிக்கிறது.
NIV - மொழிபெயர்ப்பில் நீர் என் பகைஞர் எல்லோரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப் போட்டீரே? எனும் பொருளில் உள்ளது. இது கடந்த காலத்தில் என் உயிரைக் காப்பாற்றிய நீங்கள் இப்போது ஏன் என்னைக் கைவிடுகிறீர்கள்? எனும் எதிர்கால வெற்றிக்கான பிரார்த்தனையாகப் புரிந்து கொள்ளலாம். .
எப்படியிருந்தாலும், தனக்கு முன்பாகச் சென்று அப்சலோமின் படையைத் தோற்கடிக்கக் கர்த்தர் மீதே தாவீது தன் நம்பிக்கையை வைத்திருந்தார், அதைக் கர்த்தர் நிறைவேற்றினார்.
எதிரியின் கன்னத்தில் அடிப்பது, முகத்தில் அறைவது, ஓர் அவமானப்படுத்தும் செயலாகும். தாவீது கலகக்காரப் படையை விலங்குகளின் கூட்டமாகப் பார்த்தார். அவற்றின் பற்கள் உடைக்கப்பட வேண்டும் (சங். 7:2; 10:9; 17:12; 22:12-13, 16, 20-21; 35:17; 57:4; 58: 6, 8)
யோனா பெரிய மீனுக்குள்ளாக இருந்தபோது வசனம் 8 ஐ மேற்கோள் காட்டி ஜெபித்தார் (யோனா 2:9). அந்த இரட்சிப்பை அனுபவித்தார்.
அப்சலோமின் திட்டங்களை எதிர்ப்பதில் தாவீது புத்திசாலித்தனமான உத்தியைப் பயன்படுத்தினார், இருந்த போதிலும் அவர் வெற்றியின் மகிமையை ஏற்க மறுத்துவிட்டார். கர்த்தர் ஒருவரே மகிமைக்குப் பாத்திரர் என அறிக்கை செய்தார்.
அவர் தனது மக்களுக்கு எதிராகவும் வெறுப்புணர்வு கொள்ளவில்லை. மாறாக, அவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜெபித்தார். இது சிலுவையில் கர்த்தருடைய ஜெபத்தையும் (லூக்கா 23:34) ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படும்போது செய்த ஜெபத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது (அப். 7:60).
கர்த்தர் தாவீதை மீண்டும் அரியணையில் அமர்த்தினார். அவருக்குப் பின் சாலமோனை அரசராக நியமிக்கவும் தாவீதை ஆயத்தம் செய்தார். ஆலயம் கட்டுவதற்குத் தேவையான செல்வத்தையும் தாவீதுக்கு அருளினார். (1 நாளா. 22-29).







